Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

படகு கவிழ்ந்து 300 பேர் பலியானதாக சந்தேகம்!

Published on: செவ்வாய், 31 மார்ச், 2009 // , , , , , , ,
லிபியாவின் கடல்பகுதியில் படகு கவிழ்ந்து 300 க்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் மரணமடைந்ததாக சந்தேகம். ஐரோப்பாவில் குடியேற சிறிய படகுகளில் சட்டவிரோதமாக புறப்பட்ட ஆப்ரிக்க குழுக்களின் படகுகள், மோசமான காலநிலையில் தகர்ந்ததாக அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படகுகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்திருப்பர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 23 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் 6 இந்தியர்கள் பலி!

அமெரிக்காவில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் இந்தியர் ஒருவர். பொருளாதார மந்தநிலையினைத் தொடர்ந்து குடும்ப செலவுக்குப் போதிய வருமானமில்லாததால் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

கேரளாவிலுள்ள வயநாடு அய்யன்கொல்லியிலுள்ள செரியேரியைச் சேர்ந்தவர் அப்பு மாஸ்டர். இவரின் அஸோக். அப்பு மாஸ்டரின் மகளான அபயாவின் கணவர் தேவராஜன். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் சிலிக்கன்வேலி ஸாண்டாக்ளாராவில் பணிபுரிகின்றனர்.

சம்பவத்தினத்தன்று, குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தேவராஜன் குடும்பத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் அசோகன், மனைவி சுஜிதா, மக்களான அலகா, அகில், மேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். தேவ ராஜனின் மனைவி மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியப்பின் தேவராஜனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் பல உயிர்களையும் பலிவாங்குவது தொடர்கதையாகி வருகிறது.

சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை!

மக்களவை தேர்தலில் போட்டியிட சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், தன் மீதான தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி சமர்ப்பித்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தேர்தல் சட்டம் தடை விதிக்கிறது. இதனை மனதில் வைத்தே, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க சஞ்சய் தத் மனு அளித்திருந்தார்.

மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "இது தவறான முன்னுதாரணத்திற்கு அடிகோலி விடும்" என கூறியது.

முன்னதாக, சஞ்சய் தத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் தேர்தல் களம் கிரிமினல்களின் கூடாரமாகி விடும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.

தற்போதைய மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர்களில் சுமார் 57 பேர் கிரிமினல் குற்றபின்னணி கொண்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிக அதிகபட்சமாக 27 பேர் பாஜக சார்பாக களமிறங்குபவர்களாவர்.

பஞ்சாபில் சாலை விபத்து, 20 புனித யாத்திரிகர் மரணம்!

பஞ்சாப் மாநிலம், அனந்தபூருக்கு அருகில் புனித யாத்திரிகர்கள் பிரயாணம் செய்திருந்த ட்ரக் மறிந்து 20 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர். 65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள நைனா தேவி கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடி விட்டூ ஊர் திரும்பிக் கொண்டிருந்த யாத்திரிகளின் ட்ரக் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபிலுள்ள லூதியானாவிற்கு அருகில் மச்சிவாரா கிராமத்தில் உள்ளவர்கள் ஆவர்.

தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ் மக்கள்

தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ் மக்கள்


உடுமலை, மார்ச் 30: உடுமலை அருகே உள்ள தளிஞ்சி, தளிஞ்சி வயல் பகுதி மழைவாழ் மக்கள், தேர்தல் குறித்த விவரங்களே அறியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் எந்தத் தொகுதியை சேர்ந்தவர்கள், நடைபெற இருக்கும் தேர்தல் மத்திய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா அல்லது மாநில அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா என்ற விவரமே தெரியாமல் உள்ளனர்.

வேட்பாளர்கள், சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் இம்மக்களுக்கு விருப்பம் இல்லை.

"தேர்தல் நாளில் ஓட்டுப்போட யாராவது வந்து அழைத்தால் ஓட்டுப் போடுவோம்; அழைக்காவிட்டால் ஓட்டுப் போடமாட்டோம்.

யார் வெற்றி பெற்றால் என்ன பயன்' என்கின்றனர் இக்கிராம மக்கள்.

தாடியும் பர்தாவும் தாலிபானிசம் - உச்சநீதிமன்றம் அதிரடி!

தாடி வளர்த்துவதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டும் என கோரி மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு கான்வெண்டில் பயிலும் மாணவன் சமர்ப்பித்த வழக்கில், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிச மயமாக்குதலின் பாகம்" என கருத்து கூறிய உச்சநீதி மன்றம், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

மதசார்பற்ற நிலைபாட்டை விசாலமாக்கி இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது எனவும் நீதிமன்றம் கருத்து கூறியது. "நாளை ஒரு பெண் வந்து பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நமக்கு அனுமதிக்க முடியுமா?" என நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பினார்.

தான் ஒரு மதசார்பற்றவன் எனவும் இருப்பினும் மத நம்பிக்கைகளை அடிப்படை உரிமைகளிலிருந்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறினார்.

மத்தியபிரதேசத்திலுள்ள நிர்மலா கான்வெண்டில் மேல் நிலை பிரிவில் பயிலும் முஹம்மது ஸாலிம், "முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளி சட்டத்திட்டத்தினைக் கேள்விக்குட்படுத்தி சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாடி வளர்ப்பது தன்னுடைய மத உரிமை என்றும் மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக்கூடாது எனவும் எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கதல் செய்திருந்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30 ஆம் பிரிவு படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்குவதற்கு அனுமதியுள்ளது என நீதிமன்றம் விளக்கமளித்தது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸாலிம் பயில்வதற்கு வேறு பள்ளியினைத் தேர்வு செய்தூ கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்தவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும் போது, தன்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி அதிகாரிகளின் தெளிவான இரட்டை நிலைபாடு என ஸாலிம் வாதித்த போதிலும் நீதிமன்றம் ஸாலிமின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை

ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை!

திமுக கூட்டணி அறிவிப்பு தொகுதி பங்கீட்டுச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தவித தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திமுக மமக கூறிவந்தன. இந்நிலையில், ம ம க, 2 மக்களவை+1 மாநிலங்களவை என்று கோரிக்கை வைப்பதாகவும், திமுக 1 மக்களவைத் தொகுதிக்கே ஒத்துக்கொண்டுள்ளதால், கூட்டணி மாறுவது பற்றி ம ம க யோசித்து வருகிறது.

இதற்கிடையே,
மனித நேய மக்கள் கட்சியை தங்கள் கூட்டணியில் நீடிக்கவைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தின் சார்பில் அவரது பிரதிநிதிகள் ஜே.எம்.ஆருண் எம்.பி.யும், தொழிலதிபர் பிரசிடென்ட் அபு ஆகியோர் மமக கட்சி நிர்வாகிகளுடன் பேசி

திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடத்தில் இது பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்தும் மனித நேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மனித நேய மக்கள் கட்சி தனது நிலைகுறித்து இன்று இரவு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நால்வரைக் கொலை செய்த வழக்கில் 46 பேருக்கு வாழ் நாள் சிறை!

மேற்கு வங்கத்தில் நான்கு பேரை கொலை செய்த வழக்கில் 46 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


1987ஆம் ஆண்டு பீர்பூம் மாவட்டத்தில் லெனினிய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மூவர் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த 43 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீபக் சாஹா ராய் இந்த தீர்ப்பை அளித்தார்.

1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீர்பூம் மாவட்டத்தில் போல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முலுக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.

மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள் -

மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள்.


கோவையைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் சேர்ந்து 'ஆல்கஹால்' வாடைஇருப்பின் வாகனமே செயலிழந்துபோகும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் .


மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது வாகன ஓட்டுனருக்கு மட்டுமின்றி, எதிரே வரும் வாகனத்தில் அமர்ந்திருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. கோவை நகரில் விபத்தை தடுக்க, காவல்துறை வகுக்கும் வியூகங்கள் எல்லாம் தவிடு பொடியாகிப் போகின்றன. இச்சூழலில், கோவை வழியாம்பாளையத்திலுள்ள எஸ். என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி மாணவர் கீர்த்திவாசன், கோவை அவினாசி ரோட்டிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், ஹரி பிரசாத் ஆகியோர், மதுபானம் அருந்தி, வாகனம் ஓட்டுவதைத் தடுக்க, புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் அனைவரும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பிகரோ 880 ' என்ற நுண்ணுணர்வி (சென்ஸார்), மது நெடியை உணரக்கூடியது. இந்த சென்சாரைக் கொண்டு புதிய சர்க்யூட்டை மூன்று மாணவர்களும் உருவாக்கியுள்ளனர். இந்த சர்க்யூட் காரின் ஸ்டீயரிங்கில் பொருத்தப் படும். சென்ஸார் மட்டும் வெளியில் தெரியும். சாவியைப் போட்டு திருகும் போது இரு இக்னேஷியன்கள் இணைவதால், கார் ஸ்டார்ட் ஆகிறது. இந்த இக்னேஷியனுக்கு நடுவில், "ரிலே' பொருத்தப்படும்.


இது, சென்ஸாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நபர், மதுபானம் அருந்தி கார் சாவியை திருகி ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் போது, சென்ஸார், ஆல்ஹகால் நெடியை உணர்ந்து, ரிலேவை செயல்பட வைக்கும். இதையடுத்து கார் சாவியை எத்தனை முறை திருகினாலும், இக்னேஷியன்கள் இணையவே இணையாது. முற்றிலும் ஆல்ஹகால் நெடி இல்லாமலிருந்தால் மட்டுமே கார் ஸ்டார்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாணவர்களும் இரு ஆய்வுகளையும் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களில் நள்ளிரவு நடக்கும் விபத்துகளுக்கு மது அருந்தி வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்.

மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து, புதிய கார் தயாரிக்கும் போது பயன்படுத்தினால், நிச்சயம் மது அருந்தி கார் ஓட்டுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையக்கூடும்.

மாணவர் கீர்த்திவாசனின் நண்பர், சமீபத்தில் தனது காரில் பாலக்காடு நோக்கி சென்ற போது கார் விபத்துக்குள்ளானதில் பலியானார். எதிரே வந்த வாகனத்தின் விளக்கு வெளிச்சத்தில் தடுமாறியதால், கார் கட்டுப் பாடு இழந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து எதிரே வரும் வாகனத்தின் வெளிச்சத்துக்கு ஏற்ப, காரை ஓட்டும் வகையில் ஒளி விளக்கு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் எனக்கருதிய மூன்று மாணவர்களும், சென்சாரை பயன்படுத்தி "ஆட்டோ டிப்பர்' என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் கண்டுபிடித்த சர்க்யூட் போர்டை, ஒரு காரின் முகப்பு விளக்கு அருகே பொருத்திவிட் டால் போதும். எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கில் இருந்து வெளிவரும் ஒளி அதிகமாக உமிழப்பட்டு (ஹை பீம்), காரின் முகப்பு விளக்கில் படும் போது தானாகவே காரின் விளக் கில் இருந்து ஒளி உமிழ்வது குறைவாக்கப்படும் (லோ பீம்).

எதிரே வரும் வாகனம் கடந்து சென்ற பின், தானாகவே ஹை பீம் முறைக்கு காரின் விளக்கு மாறிக் கொள்ளும். இப்புதிய தொழில்நுட்ப முறையை பல தொழில்நுட்ப கண்காட்சியில் இடம்பெறச் செய்து, மூன்று மாணவர்களும் பரிசுகள் பல பெற்றுள்ளனர்.

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடவில்லை" - கமல்

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிட்டுவிடவில்லை" என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் வந்த அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்

இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.

நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.

எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.

எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.

பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.

பயணிகள் மீதான சந்தேகத்தால் விமானம் தரையிறக்கம்.

இன்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கல்கத்தா நோக்கி ஏர் இந்தியா விமானம் 104 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த 3 பயணிகளின் நடவடிக்கையில் விமான பணிப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால்
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மீண்டும் விமானத்தைத் தரை இறக்க விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வானில் பறந்த விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய அந்த 3 நபர்களிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதும், இம்பால் புறப்பட்டு சென்றதும் தெரிய வந்தது. எனவே, அவர்களை தொடர்ந்து பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது

லாஹூர் போலீஸ் மையம் மீதான தாக்குதலில் தாலிபான்

லாஹூரில் காவலர் பயிற்சி மையம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

6 தீவிரவாதிகளும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். 6 தீவிரவாதிகளில் 2 பேர் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்திகா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் லாகூர் காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்த தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த தாக்குதல் பின்னணியில் தாலிபான் இயக்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் லாகூரில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று தஹ்ரீக் -யே-தாலிபான் இயக்கத் தலைவர் பைத்துல்லா மக்சூத் பொறுப்பேற்றதுடன் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தாலிபான் இயக்கத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தாலிபான்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

தீவிரவாதி கசாப்பின் வக்கீல் அஞ்சலி விலகல்!

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாட மராட்டிய மாநில இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து பெறப்பட்ட 17 வக்கீல்களின் பட்டியலில் இருந்து புனேயைச் சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் அஞ்சலி வாக்மாரே என்பவரையும், அவருக்கு உதவியாக ஜுனியர் வக்கீல் ஒருவரையும் நியமனம் செய்து, செசன்சு நீதிபதி தகில்யானி நேற்று உத்தரவிட்டிருந்தார்.

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் அஞ்சலி வாக்மாரே வீடு முன்பு சிவசேனா தொண்டர்கள் கோஷம் எழுப்பி, அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கசாப்பிற்க்காக வாதிடுவதிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் அஞ்சலி வாக்மாரே தெரிவித்துள்ளார்.

மேற்கு மும்பை தொகுதியில் நடிகை நக்மா போட்டி?

காங்கிரஸ் எம்.பி யும் நடிகருமான கோவிந்தா வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தன் விருப்பமின்மையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகை நக்மாவை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

நடிகர் கோவிந்தா, கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பிஜேபி யின் ராம் நாயக்கை 48,271 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் தேர்தலில் உட்கட்சி பிரச்னை காரணமாக தான் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் கோவிந்தா கடந்த வாரம் கூறியிருந்தார்.


இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே ஆண்டனி கட்சி மேலிடத்திடம் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அ.தி.மு.கவில் இருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.க. வில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தே.மு.தி.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார்.

ஊழல் குற்றம் சாட்டப்பட்வரை பா.ஜ.க.வில் சேர்ப்பதா?

உத்திரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த நீரா யாதவை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்துக் கொண்டதற்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களிடையே எதிர்ப்பு வலுப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவிலேயே ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவியை இழந்த ஒரே தலைமைச் செயலர் நீரா யாதவ் ஆவார். இத்தகைய ஊழல் மிகுந்த முன்னாள் அதிகாரியை ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களே வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜ்நாத் சிங் போட்டியிட இருக்கும் காஜியாபாத் தொகுதியில் தியாகி இனத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அந்த இனத்தைச் சார்ந்த இவரை கட்சியில் இணைத்துள்ளதாக மற்றொரு மாநில முன்னாள் தலைவர் கூறி இருக்கிறார்.

கசாபுக்கு அரசு வழக்குரைஞர் - ஏப்ரல் 6 முதல் விசாரணை துவக்கம்

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது கைது செய்யப் பட்ட பாகிஸ்தானைச் சார்ந்த அஜ்மல் அமீர் கசாபுக்கு நீதிமன்றம் அரசு வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது.

மகராஷ்டிரா சட்ட உதவிக் குழுவில் உள்ள வழக்குரைஞர் அஞ்சலி வக்மரேவை இந்த வழக்கின் போது கசாபின் சார்பில் வாதிட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகில்யானி நியமனம் செய்து இன்று அறிவித்தார்.

மேலும் லஷ்கரே தொய்பாவைச் சார்ந்த பஹீம் அன்சாரி மற்றும் சகாபுதீன் முகமது ஆகியோர் தங்களுடைய வழக்குரைஞர் குறித்து உடன் முடிவெடுக்குமாறும் நீதிபதி வலியுறுத்தினார்.

வருண் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்!

சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய வருண் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்ச முதல்வர் மாயாவதி முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தோம்.

அதன்படி நேற்றிரவு வருண் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

முன்னதாக போடப்பட்ட 3 வழக்குகளில் பிணை கோரியிருந்த அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வருண் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, பாரதிய ஜனதா தொண்டர்கள் காவல்துறையினருடன் மோதியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 65 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிகழ்வே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரை கைது செய்ய முதல்வர் மாயாவதியைத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது

மனித நேய மக்கள் கட்சி அதிமுக பக்கம்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தும், இதுவரை தமக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தையே இழுத்துக்கொண்டிருப்பதால் மனிதநேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்குத் தாவுவது பற்றி யோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுகவில் கோரியுள்ள படியே 2 மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவைத் தொகுதி என்ற கோரிக்கைக்கு இணங்கும் நிலையில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க மனிதநேய மக்கள் கட்சி முயற்சி செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ம ம க தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

அதிமுகவும் இக்கோரிக்கைக்கு இணங்கும் எனில், அக்கூட்டணி பலம் பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆயினும், திமுக கூட்டணியின் முஸ்லிம்லீக் போட்டியிடும் வேலூரில் முஸ்லிம்லீக்கை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட நேரலாம்.

நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் சமனில் முடிந்தது!

நேப்பியரில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 476 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 152 ரன்கள் முன்னிலை வகித்தது. நியூசிலாந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆடாமலேயே ஆட்டம் முடித்துக் கொள்ளப் பட்டது.

இன்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் லஷ்மன் ஆட்டமிழக்காமல் 124 ரன்களுடனும் யுவராஜ் சிங் 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தானில் காவல் பயிற்சி மையம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!

இன்று காலை பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள காவல் பயிற்சி மையத்தின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில்ல 9 பேர் பலியானார்கள். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

850 பயிற்சி பெற்று வரும் இப்பள்ளியில் தாக்குதல் நடந்த போது சுமார் 400 பேர் இந்த மையத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 குண்டுகள் வெடித்ததாகவும், துப்பாக்கிச் சூடும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினரைப் போல் உடையணிந்து வந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய தீவிரவாதத் தாக்குதல் இந்நேரம் வரை தொடர்ந்து வருகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் கொல்கத்தா-லண்டன் விமான சேவை நிறுத்தம்!

மார்ச் 30 ஆம் தேதி முதல் கொல்கத்தா-லண்டன் விமான சேவையை முற்றிலும் நிறுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

1932 ஆம் ஆண்டு முதல் தனது சேவையைத் துவக்கிய இந்நிறுவனம், இடையில் 1985-ல் தற்காலிகமாக நிறுத்தி பின்னர் 1993 முதல் சேவையை மறுபடியும் துவங்கியது.


வாரம் மூன்று முறை கொல்கத்தா-லண்டன் நேரடி விமான சேவை வழங்கி வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், லாபமின்மைக் காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.


பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தில்லி,மும்பை,சென்னை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து தனது நேரடி சேவையை வழங்கி வருகிறது.

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்

இலங்கையில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

சிட்னியில் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கன்பெர்ரா ஆகிய பகுதிகளிலிருந்து தமிழர்கள் 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சிட்னியின் மார்ட்டின் ப்ளேஸ் பகுதியில் புறப்பட்ட பேரணி டவுன் ஹால் வரை சென்றது.

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

மேம்படுத்தப் பட்ட பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று காலை 11.15 மணி அளவில் ஏவப்பட்ட ஏவுகணை 150 விநாடிகளில் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ உயர் அதிகாரிகளான லெஃப்டினன்ட் ஷேகான், லெஃப்டினன்ட் ராவ், மேஜர் திவாரி, பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை மற்றும் இராணுவ தளவாட ஆராய்ச்சிக் கழக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் இச்சோதனையின் போது அங்கிருந்தனர்.

இந்த சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஏற்கனவே இது இராணுவத்தின் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஒரிசாவில் குண்டு வெடித்து 4 பேர் பலி!

ஒரிசாவில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து 4 பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் காயமுற்றனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பெர்ஹாம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புருஷோத்தம்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் இன்று காலை 2 மணி அளவில் இந்த குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

திமுகவில் ஜெகத்ரட்சகன்!

ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

திமுக கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டதாகவும், அவரை கட்சியில் சேருமாறு திமுக தலைமை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரும், ஜனநாயக முன்னேற்றகழக நிர்வாகிகளும் இன்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.


திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், "இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் ஜனநாயக முன்னேற்ற கழக தலைமை நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளோம். ஜனநாயக முன்னேற்ற கழகம், வீரவன்னியர் பேரவை போன்றவை சமுதாய அமைப்புகளாக தொடர்ந்து செயல்படும்", என்று கூறினார்

வருண்காந்தி மீது தேசியபாதுகாப்புச்சட்டம் - மாயாவதி ஆலோசனை

தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கடும் வெறுப்பை உமிழ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிலிஃபிட் தொகுதி வேட்பாளர் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாயாவதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வருண்காந்தி தானே முன்வந்து பிலிஃபிட் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.ஆனால், காவல்துறை முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தது

வருண்காந்தி பிணையில் விடுதலையாக மனுதாக்கலும் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

வருண்காந்தி நேற்று நீதிமன்றம் வந்தபோது ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். . வருண்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் காவலர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் காவல்துறை தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.

வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி கடும்கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக அரசு சார்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாயாவதி கூறியுள்ளார்

கடலூரில் களம் காண்கிறார் திருமா?

மக்களவைத் தேர்தலில் தி மு க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிந்ததே! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால், எதிரணியான அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் நட்புக் கட்சியான பாமக வுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விபரம் அறிந்து, போட்டியைத் தவிர்க்க, திருமாவளவன் இப்போது கடலூர் தொகுதியைக் கேட்பதாகத் தெரிகிறது.

அதுபோல, மற்றொரு தொகுதியாக விழுப்புரத்தையும் கேட்டுள்ளாராம்.

மகளை வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக தந்தை கைது!

கொலாம்பியாவில் தன்னுடைய மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக எழுந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கொலாம்பியாவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ள இக்குற்றச் சாட்டிற்கு ஆளான 58 வயது மனிதர் தான் நீதிமன்றத்திற்கு வரும்போது காவல் துறை மற்று இராணுவ பாதுகாப்பு வேண்டும் என்று கோரியுள்ளார்.

தற்போது 30 வயதாகும் அந்தப் பெண் தான் 10 வயதை அடையும் முன்பிருந்தே தன்னுடைய தந்தை தன்னை வன்புணர்ந்து வந்ததாகக் குற்றம் சுமத்தினார்.

தாங்கள் ஒருவரையொருவர் விரும்புவதால் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண் தன்னுடைய சொந்த மகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப் பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.

தான் அவரை தந்தையைப் போன்றே மதிப்பதாகவும், அவர் தன்னுடைய தந்தைதான் எனவும் அந்தப் பெண் கூறினார். தன்னை தன்னுடைய தந்தை வன்புணர்ந்ததன் மூலம் 11 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் மூன்று குழந்தைகள் இறந்ததாகவும் அவர் கூறினார்.

மஹாதிர் மீண்டும் UMNO கட்சியில் சேருகிறார்

Published on: // ,
மலேசியாவின் முன்னாள் பிரதமர், டாக்டர் மஹாதீர் முஹம்மது மீண்டும் UMNO கட்சியில் சேருவதாக அறிவித்துள்ளார்.
நேற்று நடந்து முடிந்த அக்கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், விரைவில் கட்சியில் இனைவதாக உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலிக்கிடையே அறிவித்தார். கடந்த ஆண்டு, இப்போதைய பிரதமர், அப்துல்லாவின் செயல்கள் மற்றும் அரசின் கொள்கைகளால் அதிருப்தி அடைந்து இருந்த டாக்டர் மஹாதீர், UMNO கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அறிவித்து இருந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து, அரசினை வெளிப்படையாக விமரிசித்து அப்துல்லா அரசிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது குறிபிடத்தக்கது.

உ.பி., ஆசிரமத்தில் இளம்பெண் மர்மச்சாவு!


முன்னாள் எம்.பி யும் உ.பி மாநில அளவிலான ஒரு கட்சியின் தலைவருமான சட்சிதானந்த் ஹரி சாக்ஷி மஹராஜின் ஆசிரமத்தில் உள்ளூர் பள்ளி ஆசிரியை லட்சுமி (24) மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.


இறந்த அப்பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் காணப்படுகின்றன என்றும், அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஓடிப்போன ஆசிரமத்தின் பாதுகாவலரைத் தேடி வருவதாகவும் ஷியாம் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.


பாஜக விலிருந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய சச்சிதானந்த், சமாஜ்வாதி கட்சிக்குத் தாவி, பின்னர் கல்யான்சிங் துவக்கிய ராஷ்டிரிய கிராந்தி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைவராக உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக சட்சிதானந்த் கூறியிருந்தார். இவ்வேளையில் இந்த கொலை நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியுலிலாந்துக்கெதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி - தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

நியுசிலாந்தின் நேப்பியர் நகரில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சற்றுமுன் வரை, தனது இரண்டாவது இன்னனிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து இருந்தது. அதிரடி வீரர் சேவாக் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, காம்பீரும், டெண்டுல்கரும் நிதானமாக ஆடி வருகின்றனர். காம்பீர் 84 ரன்களும், டெண்டுல்கர் 37 ரன்களும் எடுத்து தொடர்நது விளையாடி வருகின்றனர். முன்னதாக டிராவிட் பொறுமையாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். காம்பீர் விரைவாக 2000 ரன்கள் எடுத்த மூன்றாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

தேர்தல் கமிஷன் விளம்பர மாடலாகும் கிரிக்கெட் வீரர் தோனி


'இளைஞர்கள் தங்களின் ஓட்டுரிமையை பதிவு செய்ய வேண்டும். ஓட்டளிப்பதை தவிர்க்கக் கூடாது' என, பிரசாரம் செய்வதற்காக பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை, தங்களின் விளம்பர மாடலாகப் பயன்படுத்த தேர்தல் கமிஷன் பரிசீலித்து வந்தது.


ஓட்டளிப்பதை தங்களின் உரிமை மற்றும் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இதை உணர வேண்டும்.


அவர்கள் தங்களின் ஓட்டுரிமையை பதிவு செய்யும்படி தூண்டுவதற்காக, அரசியல் பின்னணி இல்லாத பிரபல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை கொண்டு விளம்பரப் படம் தயாரித்து, அது பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.


இதற்கான விளம்பர மாடலாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனி உட்பட சிலரை தேர்வு செய்வது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலித்து வந்தது.


இன்றைய இளைஞர்களின் நட்சத்திர நாயகனாக விளங்கும் தோனியும் சம்மதம் தெரிவித்ததால், இவ்விளம்பரம் மக்கள் மத்தியில் பிரபலம் அடையும் என்று தேர்தல் கமிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


காங்கிரசுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரச்சாரம்

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

வரும் ஞாயிற்கு கிழமை முதல் அவர் உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அனு டான்டன் கூறினார்.

இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் பல்வேறு விழாக்களிலும் அவர் பங்கு கொள்வார் என்று கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார்கள் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத் தக்கது.

ஒபாமாவை சந்திக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக அளவில், வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தலைவர்களின் (G-20) மாநாடு லண்டன் நகரில் தொடங்குகிறது.

பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங் G-20 மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனையும் அவர் சந்திக்கிறார்.

இரு தலைவர்களையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 7 தொகுதிகள்!

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்தார். அவை:-

1. ஸ்ரீபெரும்புதூர்

2. அரக்கோணம்

3. திருவண்ணாமலை

4. கள்ளக்குறிச்சி

5. சிதம்பரம் (தனி)

6. தர்மபுரி

7. புதுச்சேரி.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த துபாய் மறுப்பு?

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பத்து நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் இந்தப் போட்டிகைள நடத்த தயாராக இல்லை என துபாய் விளையாட்டு நகர் அலுவல் ரீதியாக ஆசிய ஹாக்கி அமைப்புக்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

2010 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றாகக் கருதப்படும் இந்தப் போட்டிகளை மலேசியா நடத்த வேண்டும் என ஆசிய ஹாக்கி அமைப்பு கோரியுள்ளது.

அல்காயிதா அமைப்பை துடைத்தொழிப்போம் - ஒபாமா சூளுரை

அல்காயிதா அமைப்பு பாகிஸ்தானில் பாதுகாப்பான இடங்களில் இருந்துக் கொண்டு இன்னும் செயல்பட்டு வருவதாகவும், மேலும் புதிய தாக்குதல்களை நடத்த அது திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அல்காயிதா அமைப்பினர் செயல்படும் பாகிஸ்தானின் எல்லைப்புறப் பகுதிகள், 'அமெரிக்கர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான பிரதேசங்கள்' என்றும் அவர் வர்ணித்தார்.

செப்-11 தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி அமைத்திருந்த தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அங்கு போர் முடிவுக்கு வரவில்லை என்பதையும், கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.

அல்காயிதா பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதைப் பற்றி பல உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த பின்னரும் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் ஒபாமா எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக மேலும் 21,000 பேர் கொண்ட படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். இதோடு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 65,000 ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

4 வயது மாணவியைக் கொன்றதாக திருச்சியில் நர்சரி ஆசிரியை கைது!

திருச்சியில் நான்கு வயது மழலையர் பள்ளி மாணவியைக் கொன்றதாக, மழலையர் பள்ளி ஆசிரியையும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ரோகிணி என்ற இச்சிறுமி தவறு செய்ததாகவும், அவரைக் கண்டிக்க ஆசிரியை அடித்தபோது அது அச்சிறுமியின் நெற்றியில் பட்டு, சிறுமி இறந்ததாகவும் கூறப்படுகிறது. புதன்கிழைமை நடந்த இச்சம்பவத்தை அடுத்து சிறுமியைக் காணாத பெற்றோர் காவல் துறையில் புகார் அளிக்க, வியாழக் கிழமையன்று சிறுமியின் உடலை அருகிலிருந்த கிணற்றிலிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் சிறுமி கொலை செய்யப் பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியை ஜெயாராணி (25), பள்ளி உதவியாளர்கள் ஆரோக்கியராஜ் (27), சகாயராஜ் (26) ஆகியோர் வெள்ளிக் கிழமையன்று கைது செய்யப் பட்டனர்.

நாளை பிரமோஸ் ஏவுகணை சோதனை

இந்தியா மற்றும் ரஷியா இணைந்து தயாரித்த பிரமோஸ் ஏவுகணை சோதனை நாளை (ஞாயிற்றுக் கிழமை) ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் சோதித்துப் பார்க்கப்படுகிறது. அங்கிருந்து அஜாசர் என்ற இடத்தில் நிறுவப்படும் இலக்கை குறிவைத்து தாக்கும். சூப்பர்சானிக் குரூஸ் வகையைச் சார்ந்த இந்த ஏவுகணை தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்லது.

இதற்கு முன் பிரமோஸ் ஏவுகனை கடந்த ஜனவரி 20 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஒப்பந்தம் 2 நாட்களில் - ம.ம.க.

தொகுதி ஒதுக்கீடு குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். ம.ம.க தலைவர்கள் நேற்று தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முதல்வரைச் சந்தித்தோம். ஒரு தொகுதி கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முதல்வரிடம் கூறினோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக அவர் பதிலளித்தார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார்.

ஜவாஹிருல்லாவுடன், ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோரும் முதல்வர் கருணாநிதியை சந்திக்க உடன் சென்றிருந்தனர்.

இஸ்ரேலுடன் இந்தியா 1.4 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்

Published on: வெள்ளி, 27 மார்ச், 2009 // , , , , , , ,
இஸ்ரேலிடமிருந்து 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமான பாதுகாப்பு சாதனங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட்டது. வணிக நாளிதழான குளோப்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை முறையான தகவலைத் தரவில்லை.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் மீது தொடுக்கப்படும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணைகளை இஸ்ரேல் தயாரித்தளிக்கும். இத்தகைய ஏவுகணைகளை இந்தியா ஏற்கனவே சொந்தமாகவே தயாரித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (DRDO) அண்மையில் உயர்தர விமான ஏவுகணையை (AAD) சோதித்து வெற்றி கண்டது. இஸ்ரேலின் இராணுவ தளவாட விற்பனையில் இந்தியா தற்போது முதலிடம் வகிக்கிறது.

அப்துல் கலாமுக்கு ஹோவர் விருது

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு 2008ஆம் ஆண்டுக்காக ஹோவர் விருது வழங்கப்படுகிறது. புகழ் பெற்ற இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் இவர் ஆவார்.

அமெரிக்க எஞ்சினியர்கள் அமைப்பு ஆண்டுதோறும், தன்னலமற்ற சேவை செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருதை வழங்கி வருகிறது.

கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது, மருத்துவர்களுக்கும் நுட்பவியலாளர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தியது, உயர்தர மருத்துவ வசதிகளை தொலைதூர மருத்துவத்தின் மூலம் கிராமங்களையும் எட்டச் செய்தது என்பன போன்ற சேவைகளைச் செய்ததற்காக அவரை இந்த அமைப்புப் பாராட்டியது.

குஜராத் அமைச்சர் பதவி விலகல் - கைது செய்யப் படக் கூடும்

குஜராத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த அமைச்சர் மாயா பென் கோட்னானி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியதாகவும் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இவர் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு அழைத்தது. இரண்டு முறை அனுப்பப் பட்ட அறிவிக்கைக்கு எவ்வித பதிலும் அளிக்காததைத் தொடர்ந்து, இவர் தலைமறைவாகிவிட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இவர் எந்நேரமும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.

தனக்கு முன்பிணை வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப் பட்டதை அடுத்து, இன்று அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். விரைவில் இவர் கைது செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தேமுதிகவுக்கு முரசு சின்னம்

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அக்கட்சி போட்டியிடாத இடங்களில் இச்சின்னத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தே.மு.தி.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கம்பம் ராமகிருஷ்ணன் இன்று திமுகவில் இணைகிறார்

மதிமுகவில் இருந்து விலகிய கம்பம் இராமகிருஷ்ணன் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார்.

மதிமுகவிலிருந்து அண்மையில் விலகிய கண்ணப்பனைத் தொடர்ந்து, இரமாகிருஷ்ணனும் கட்சியிலிருந்து விலகினார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இவர் ராஜிநாமா செய்தார். இன்று காலை அவர் தென்மண்டல திமுக அமைப்பாளர் மு.க. அழகரியைச் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.

அதிமுக வுடன் கூட்டணி அமைக்க பாமக பொதுக்குழுவில் ஆதரவு!

வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதனை முடிவு செய்வதற்காக பா.ம.க பொதுக்குழு கூடியது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது, அதில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்க 2453 பேரும் தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க 117 பேரும் வாக்களித்தனர். 10 பேர் நடுனிலை வகித்தனர். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு.

இப்பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவைத்தொடர்ந்து கூட்டணியை இறுதி செய்வதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பா.ம.க தலைவர்கள் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

உ.பி முராதாபாத்தில் போட்டியுடும் அசாருதீன்!

வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னால் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், உத்திரபிரதேசம் முராதாபாத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

கட்சியின் தலைவி சோனியா காந்தி மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் குறிப்பிடும் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அசார் தெரிவித்தார்.


தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தே.மு.தி.க., சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 9 பேர் கொண்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். அவை:

1.திருநெல்வேலி- மைக்கேல் ராயப்பன்

2. விருதுநகர்-மாஃபா பாண்டியராஜன்

3. கன்னியாகுமரி-ஆஸ்டின்

4. மதுரை-எம்.ஆர்.முத்துலட்சுமி

5. திண்டுக்கல்-முத்துவேல்ராஜ்

6. தேனி-எம்.சி.சந்தானம்

7. திருச்சி-விஜயகுமார்

8. சேலம்-மோகன்ராஜ்

9. நாமக்கல்-மகேஸ்வரன்

தன் மகளையே வன்புணர்ந்ததாக பா.ஜ.க. தலைவர் கைது!

பஞ்சாப் மாநிலம் அஜ்னலா நகர பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அஷோக் தனேஜா தன்னுடைய மகளை கடந்த 7 ஆண்டுகளாக வன்புணர்ந்து வந்தார் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் புதன் கிழமையன்று கைது செய்யப் பட்டார்.

24 வயதுடைய அவரது மகள் அஜ்னலா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். குற்றம் சுமத்திய அந்தப் பெண் தன்னுடைய தாயாருடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கைப் பதிவு செய்த காவல் துறையினர் தனேஜாவை கைது செய்தனர். அவர் தனக்குக் கடுமையாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தமிழகம்: நீதிபதி பெயர் கூறி செல்பேசிகள் திருட்டு

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள செல்பேசி விற்பனை கடையில் உதயகிரி என்ற 23 வயடு வாலிபர் விற்பனையாளராகப் பணிபுரிகிறார்.கடந்த 20ம் தேதி 12 மணிக்கு உதயகிரி கடையில் இருந்த போது, வாலிபர் ஒருவர் வந்தார். கடலூர் நீதிபதிக்கு மொபைல் போன் தேவைப்படுகிறது. கடையில் உள்ள ஐந்து மொபைல் போன்களை எடுத்து வந்தால் பார்த்து வாங்கிக் கொள்வார் எனக் கூறியுள்ளார்.

உதயகிரி கடையில் இருந்து 33 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து நோக்கியா மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு அந்த வாலிபருடன் ஆட்டோவில் சென்றார். ஜட்ஜ் பங்களா ரோட்டில் உள்ள நீதிபதி குடியிருப்புப் பகுதிக்குச் சென்று ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார்.மொபைல் போன்களைக் கொடுங்கள் நீதிபதியிடம் காண்பித்துவிட்டு எது தேவை எனக் கேட்டு வருவதாகக் கூறி அருகில் நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றார்.இதுகுறித்து உதயகிரி கொடுத்த புகாரின்படி, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தமிழகம்: திமுக-காங் கூட்டணி இற்றைப்படுத்தப்பட்டது?

பதினைந்தாம் மக்களவைக்கான எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும்,அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. தே.மு. தி.க.வும் தனித்துப் போட்டியிட இருப்பதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.


தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அதில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு பற்றிய விவரம் 2 நாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்து இருந்தார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்படுவது உறுதியாகி விட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

வடசென்னை, காஞ்சீபுரம் (தனி), தர்மபுரி, ஆரணி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமாரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்க பேசப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.

மீதம் உள்ள 24 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் ஒதுக்கி 21 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.

திருவள்ளூர் (தனி), தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப் புரம் (தனி), சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய 21 தொகுதிகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

விடுதலைச்சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம்லீக் கட்சிக்கு வேலூரும், மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.

நன்றி: மாலைமலர்.

தீயிட்டுக் கொளுத்தப்படும் 170 கோடி ரூபாய்

திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகள் வழியாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள், பழைய 5 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளும் சேகரிக்கப்பட்டன. இவை ரூ.170 கோடி அளவுக்குச் சேர்ந்தது. இந்தக் கிழிந்த நோட்டுகள் கட்டுக்கட்டாக சரக்குப்பெட்டகங்களில் ஏற்றப்பட்டு சரக்கு தொடர்வண்டிகள் மூலமாக சென்னை வந்தடைந்தன.

அதன்பின் அவை சுமையுந்துகளில் பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டபின், காவல்துறை பாதுகாப்புடன் தீயிட்டு எரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை வந்த ராகுல் பேட்டி.

இன்று விமானம் மூலம் சென்னை வந்தார் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி. அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் புதுவை வந்த அவரிடத்தில் நிருபர்கள் பேட்டி கண்டனர்:

வருண் காந்தியின் பேச்சு குறித்து ராகுல் கருத்து தெரிவித்த போது,

வருணுக்கு அவர் விரும்பியதைப் பேச உரிமை உண்டு என்றாலும் அடுத்தவர் மீது வெறுப்போ, கோபமோ கூடாது. அடுத்தவரை புண்படுத்தும் பேச்சு சரியல்ல. இது குறித்து பிரியங்கா விவரமாக கருத்து தெரிவித்துவிட்டார். நான் மேலும் பேச விரும்பவில்லை.

ஆனால் ஒன்று, வருணின் பேச்சு எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. பிரதமர் மன்மோகன் சி்ங் பாஜகவினர் கூறுவது போல பலவீமானவர் அல்ல. இந்த நாட்டுக்கு நிறைய நல்லது செய்த மனிதர். அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி. மிகச் சிறந்த ஜென்டில்மேன். அப்படிப்பட்ட நபர்களைப் பார்ப்பதே அரிது. அவரது நடவடிக்கைகளே அவரது தரத்துக்கு எடுத்துக்காட்டு.

அதே நேரத்தில் பெரியவர்கள் குறித்து நான் தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை. நான் ரொம்ப சிறியவன் என்றார்

பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சி தோல்வி!

பா.ம.க.வை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கச் செய்வதற்கான முயற்சி நடந்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் அகமது பட்டேல், அன்புமணியை சந்தித்து பேசினார். அப்போது பா.ம.க. கூட்டணியை விட்டு விலகக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

முக்கிய கட்சியுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் கூட்டணியில் பா.ம.க. நீடிக்க முடியாததற்கான காரணங்களை அவர்களிடம் அன்புமணி விளக்கியதாக சொல்லப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியின் இறுதி கட்ட முயற்சியும் வெற்றி பெறவில்லை.

சோனியா மற்றும் தலைவர்கள் கருத்து குறித்து அன்புமணி மற்றும் டாக்டர் ராமதாசிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது டாக்டர் ராமதாஸ் “கட்சி முடிவே முக்கியம்” என்று சொன்னதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் அமைச்சர்கள் அன்புமணி, வேலு ஆகியோர் ராஜினாமா பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!

இந்தியா கடற்படைக்குச் சொந்தமான சாப்பர் வகை ஹெலிகாப்டர் ஒன்று கோவா கடற்கரைப் பகுதியில் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த மூவர் எந்தப் பிரச்சனையுமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவா கடற்கரையிலிருந்து 22 மைல் தொலைவில் இன்று காலை 11 மணி அளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதிலிருந்த இராணுவத்தினர் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். அவர்களுக்குச் சிறிய அளவில் காயமேற்பட்டடதாகவும், அவர்கள் கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கியது கோவா!

ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கி கோவா மாநில சட்டமன்றத்தில் செவ்வாய் கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பானாஜியில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டை கோவாவில் தடை செய்திருந்தது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரெஜினால்டோ கொண்டு வந்த ஒரு நபர் தீர்மானத்தை அடுத்து மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜல்லிக் கட்டு சட்டபூர்வமாக்கப் பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்த ரெஜினால்டோ பாரம்பரியமான இந்த விளையாட்டு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார். விவாதத்தின் இடையில் குறுக்கிட்ட அவைத் தலைவர் பிரதாப் சிங் ரானே, ஜல்லிக் கட்டின் மூலம் மிருகங்கள் வதை செய்யப்படக் கூடும் என்று கூறினார். எதிர்கட்சித் தலைவர் மனோகர் பரிகார் மிருகங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மிருகங்களின் பாதுகாப்புகளைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்புடன் ஜல்லிக்கட்டை அனுமதித்து சட்டமியற்றப் பட்டது.

சீக்கியர்களுக்கு எதிராக வருண் பேசியதாக பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் பிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண் சீக்கியர்களுக்கு எதிராகப் பேசியதாக பஞ்சாப் அரசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சியினரும், சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஆளும் அகாலி தள கட்சி இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தில் பிலிபிட் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சீக்கியர்களுக்கு எதிராகப் பேசிய வருணின் பேச்சுக்கள் அடங்கிய சிடிகளை பஞ்சாப் மாநிலம் முழுவதும் விநியோகிக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அகாலி தளம் கட்சிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

வருண் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர். அகாலி தளம் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது பிரகாஷ் சிங் பாதல் வருணுடன் கூட்டணி அமைத்துள்ளது போன்றதே. சீக்கியர் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வருணின் கீழ்த்தரமான விமர்சனங்களை பாதல் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை அவர் விளக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளவில்லை எனில், வருணின் இந்தப் பேச்சு குறித்து அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைக் கூற வேண்டும் என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

வருணின் இந்தப் பேச்சு குறித்து விவாதிக்க ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் குழு என்ற முக்கிய சீக்கிய அமைப்பு வியாழக் கிழமையன்று கூடுகிறது. தள் கல்சா போன்ற சீக்கி அமைப்புகள் வருணின் சீக்கிய எதிர்ப்பு குறித்து அகாலி தளம் மெளனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அசாமில் பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்டார்

"அஜி" என்ற அசாமிய பத்திரிகையின் தலைமைய ஆசிரியரான அனில் மஜூம்தார் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய் கிழமை இரவு 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

அசாமியத் தலைநகர் கெளஹாத்தியில் ராஜ்கர் சாலையில் உள்ள அவரது வீட்டினருகே இளைஞர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி வீட்டின் வாயிற்கதவைத் திறக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத 7 பேர் அவரைத் தாக்கியதாகவும் பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கொல்கத்தாவை லண்டன் போல மாற்றுவோம்-மமதா

"தற்போது மக்களவை தேர்தல் தான் நடைபெறவுள்ளது,அடுத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் வெற்றிப்பெற்றால், மாநில வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, கொல்கத்தாவை லண்டன் போல மாற்றிக்காட்டுவோம்", என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர்," மேற்கு வங்கத்தில் வளர்ச்சி என்றால் என்ன என்பதை செயலில் காட்டுவோம்,மேற்கு வங்க கடலோரப் பகுதியான 'திகா' கோவா போல வளர்ச்சியடைய முடியாதா?,அத்தனை வளங்களும் இங்கு இருக்கும்போது ஏன் வளர்ச்சியடைய முடியாது?, எங்கள் ஆட்சியில் கொல்கத்தா நகரை நிச்சயமாக லண்டன் மாநகரைப் போல் மாற்றிக் காட்டுவோம்", என்றார்.

காங்கிரசுக்கு ஆதரவாக ஷாருக் கான் பிரச்சாரம் ?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக் கான் பிரச்சாரம் செய்வார் என்று காங்கிரஸ் கட்சி இன்று கூறியுள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் இன்று கான்பூரில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். ஷாருக் கான் மட்டுமின்றி, நடிகர் கோவிந்தா (இவர் ஏற்கனவே காங்கிரஸ் எம்.பி), நடிகைகள் நக்மா, பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் காங்கிரஸ் கட்சிக்காக பேரணிகள் மற்றும் பிரச்சாரங்களில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் ஷாருக்கான் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களா என்று கேட்டபோது, இதற்காக அவர்கள் நேரம் ஒதுக்குவார்கள் என்று பதிலளித்தார்.

10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கைப்பற்றி உள்ளது. அமிர்தசரஸ் நகரில் புனிதத் தளம் ஒன்றின் அருகே ஹீரா சிங் என்பவரிடம் 10 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப் பட்டது.

மத்தியப் புலனாய்வுத் துறையின் டில்லி பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ஹீரா சிங் இந்த ஹெராயினை அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு எடுத்துச் செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்த புலனாய்வு நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மத்திய புலனாய்வுத் துறையின் தகவல்படி போதைப் பொருள் கடத்தலில் பஞ்சாப் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

"பிரதமர் பதவிக்கு மன்மோகனே !"- சோனியா திட்டவட்டம்

பிரதமர் பதவிக்கு மன்மோகனே காங்கிரஸ் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலையில் மூன்றாவது அணியுடன் காங்கிரஸ் சேருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ராகுல்காந்தி கட்சிக்குத் தலைமை தாங்குவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த சோனியா "பொறுத்து பாருங்கள், தேவை ஏற்படும் சூழலில் அது பற்றி பேசலாம்" என்றார்.


இதற்கிடையில் வலிமையற்ற ஒரு பிரதமர் என்ற அத்வானியின் தாக்குதல் பேச்சுக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் " என் வலிமைகளை என் சாதனைகள் சொல்லும். ஆனால், அத்வானி அப்படி என்ன நாட்டுக்கு நல்லது செய்துள்ளார்?" என்று வினா எழுப்பினார். "பாபர்மசூதி இடிப்பதற்கு மும்முரம் காட்டி தேசத்துக்கு பாரிய கெடுதியை விளைத்ததைத் தவிர அத்வானி வேறு என்ன சாதித்துவிட்டார்" என்று கேட்டார் பிரதமர்.

கிலோ அரிசி/கோதுமை 3 ரூபாய் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மாதம் 25 கிலோ வரை கிலோ அரிசி ரூ. 3 என்ற விலையில் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் சோனியாயால் வெளியிடப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் பெற்றுக்கொண்டார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை கிலோ ரூ.3 விலையில் வழங்கப்படும்
.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பெறுவோருக்கு தினமும் ரூ.100 கூலி வழங்கப்படும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நலிவடைந்தோர் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

முன்னேற்றம் தொடரும் - உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் சிறப்பான இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த முன்னேற்றம் தொடரும்

மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்


இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அ தி மு க கூட்டணியில் பா.ம.க - இன்று முடிவு

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக வுடன் தேர்தல் கூட்டணி காண்பதாக தெரிய வந்துள்ளது.
ஏழு மக்களவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் என்ற பேரம் படிந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தங்கள் கூட்டணியில் பாமகவை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகின்றது. மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று காலை மருத்துவர் இராமதாஸைச் சந்தித்து கூட்டணி பற்றி பேசினார். அதன்பின் முதலமைச்சர் கருணாநிதியையும் சந்தித்த தங்கபாலு பாமக கூட்டணி பற்றி அவரிடம் எடுத்துரைத்துள்ளார்.

மத்திய அமைச்சரும், இராமதாஸ் மகனுமான அன்புமணி காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் விருப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் 26ந்தேதி கூடவிருக்கும் மாநில செயற்குழுவில் தங்கள் முடிவு திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்று பாமக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிமுக தருவதாகச் சொல்லியுள்ள 7 மக்களவை+1 மாநிலங்களவை தொகுதிகளை இராமதாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்படி அதிமுகவுடன் கூட்டணி உறுதியானால் "அன்புமணி, வேலு ஆகிய மத்திய அமைச்சர்கள் பதவி விலகிவிடுவார்கள் - நேச்சுரலி" என்றார் அவர்.

பெண் கலெக்டரைத் திட்டினாரா முலாயம் சிங்?

உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிப் பிரமுகர்கள் சிலர் வைத்திருந்த துப்பாக்கி உரிமங்களை மணிப்புரி மாவட்ட ஆட்சியர் மணிஸ்தி திலீப் விலக்கம் செய்திருந்தார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிகழ்வால் கோபம் கொண்ட கட்சித்தலைவர் முலாயம் சிங் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை பெண் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

"நீ ஒரு பெண், நான் எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டால் நீ பெண்ணாக இருக்கமாட்டாய். நீ மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியது வரும்" என்று ஆபாசம் கலந்த வார்த்தைகளை பயன்படுத்திப் பேசினார் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சு பற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து இதில் தேர்தல் விதி மீறல் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வருகிறது.

ஐ பி எல் போட்டிகளை நடத்த தெ. ஆப்ரிக்கா உறுதி

இந்தியாவில் நடக்க இருந்த ஐ பி எல் போட்டிகள், வேறு நாட்டில் நடத்த போவதாக பிசிசிஐ அறிவித்த பின், தங்கள் நாடுகளில் நடத்த, நீயா, நான என தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் போட்டி போட்டன. இப்பொழுது தென் ஆப்ரிக்காவில் தான் போட்டிகள் நடக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் பருவநிலையயை கருத்தில் கொண்டு பிசிசிஐ இம்முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஐ பி எல் போட்டிகளை நம்பி நுற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பல வகையில் தங்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்து இருந்தன. இவைகளின் நிலமைகள் எல்லாம் என்ன என்பது போக போகத்தான் தெரியும். ஏற்கனவே, உலக நிதி நெருக்கடியில் பல நிறுவனங்கள், ஆட் குறைப்பு செய்து வரும் நிலையில், ஐ பி எல் போட்டிகள் வேறு நாட்டில் நடக்கும் போது நிலைமை மேலும் மோசமாகலாம்.

நாயைச் சுட்டவரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசார்

ஸ்போகேன் -வாஷிங்டன். அதிவேகமாகக் கார் ஓட்டியவரை போலீசார் துரத்திச் சென்றதைக் கண்ட கார் ஓட்டுனர் காட்டுப் பகுதியில் காரைப் போட்டு விட்டுத் தப்பி ஓடினார். அவரைப் பின் தொடர்ந்து போலீஸ்காரரும் அவருடைய நாயும் சென்ற போது கார் ஒட்டுனர், ஜானி லாங்கஸ்ட் நாயைச் சுட்டுவிட்டார். அதைக் கண்ட போலீஸ்காரர் உடனடியாக கார் ஓட்டுனரை சுட்டதில் படுகாயாமடைந்த அவர் மருத்துவமனையில் மரனமடைந்தார்.

போலீஸ் நாய் தற்போது கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இரானுவ வீரர்களை மதவெறியூட்டினர்.


காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இராணுவ வீரர்களிடம் இது நமது மத சம்பந்தப்பட்ட போர் நமது மதம் அல்லாதவருக்கு எதிரான போர் என்பதை மனதில் நிறுத்தி மிக ஆக்ரோஷமாக போரிடும்படி வெளிப்படையாக ஒவொரு இராணுவ முகாமுக்கும் சென்று பிரச்சாரம் செய்தனர் என்று ஹாரட்ஸ் என்ற இஸ்ரேலிய இடது சாரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் போர் முடிந்து திரும்பிய வீரர்களுக்கான மறு சீரமைப்பு முகாம் ஒன்றில் நடந்த கலந்துரையாடலில் பேசிய வீரர்கள் " இது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட பூமி, இதை ஆக்ரமிக்கும் நமது வழியில் வந்து நிற்கும் யூதர் அல்லாத மற்ற மதத்து மக்களை கடுமையாக போரிட்டு அப்புறப்படுத்துவதில் எல்லா வழிகளையும் கையாள வேண்டும் என்றும் அப்பாவி பொதுமக்களைக் கண்ட இடத்தில் சுடும்படி தங்களுக்கு படைத்தளபதியே உத்தரவிட்டதாகவும்" கூறியது ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் குழுக்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெளியான சில ரகசிய தகவல்களை உறுதிப்படுத்திய இஸ்ரேலிய இராணுவ அகாடமியின் இயக்குநர் கூறுகையில், 22 நாட்களாக நடந்த இராணுவ நடவடிக்கை எங்களது மதக்கடமையை நிறைவேற்றியது போன்று மன அமைதியை நாங்கள் அனுபவிக்க முடிகிறது என்றார்.


அவிவ் என்ற பெயரிட்ட கிவாத் பிரிகேட்டில் படை உறுப்பினராக இருந்த ரம்ஸ் என்பவர் சொல்லும்போது "ஒவ்வொரு வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்று இருப்பவர்கள் யாவரையும் கொன்று குவிக்கும்படி அவரின் தளபதி உத்தரவு பிறப்பித்ததாகவும்" அதன் படி செயலபடுவதில் அனைத்து வீரர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.


இஸ்ரேலிய வீரர்களின் கொடூரங்கள் பற்றி வெளியான செய்திகள் குறித்து கருத்துக்கூறிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பராக் கூறுகையில் "இஸ்ரேலின் இராணுவம் உலகத்திலேயே மிகச்சிறந்த, ஒழுக்கம் மிக்க, மிக நேர்மையான இராணுவம் என்றும் அதற்கு இனையாக உலகத்தில் வேறு நேர்மை மிக்க இராணுவம் கிடையாது" என்றும் கூறினார். வேறு ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதுபற்றி விசாரிப்போம் என்றார்.

மோஷே எனும் வீரரின் கூற்றுப்படி நாங்கள் நடந்து கொள்ளும்முறை பற்றி எங்களிடம் கடுமையான முறையில் விசாரனை ஏதும் செய்யப்படுவதில்லை. இதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளப் போவதுமில்லை. போர்களில் இதெல்லாம் சாதாரணம் என்றார்.

மோடிக்கு மாற்றமாக குஜராத் காவல்துறை இயக்குநர் கருத்து!

ஐ.பி.எல். போட்டிகளை தேர்தல் நேரத்தில் நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்ய இயலாது என்று கூறி மாற்றுத் தேதிகளில் நடத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்றும், இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடு பாதுகாப்பு தர முடியாதது வெட்கக்கேடு. காமன்வெல்த் போட்டிகளுக்கு மட்டும் பாதுகாப்பு தர முடியுமா? என்றும் நாட்டின் மானத்தை காப்பாற்ற குஜராத் அரசு ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு தர முடிவு செய்துள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் குஜராத் மாநில காவல்துறை இயக்குநர் இதற்கு மாற்றமாகக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் நர்கரி அமீன் என்பவருக்கு அம்மாநில காவல்துறை இயக்குநர் எழுதிய கடிதத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியிலிருந்து மே 3ஆம் தேதிவரை 20-20 போட்டிகளை நடத்த தகுந்த பாதுகாப்பு அளிக்க இயலாத நிலையில் குஜராத் அரசு இருப்தாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ள இந்தப் போட்டிகளை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு முன் அல்லது மே 10ஆம் தேதிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளை நடத்த குஜராத் அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று மோடி கூறியிருந்ததற்கு மாற்றமாக காவல் துறை இயக்குநர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதய சூரியன் சின்னத்தை நீக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை நீக்க வேண்டும் என்று கோரிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமையன்று தள்ளுபடி செய்தது.

சூரியன் இந்துக்களின் கடவுள் என்றும் எனவே அது தேர்தல் சின்னமாக இருக்கக் கூடாது என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து இளைஞர் அமைப்பு என்ற இயக்கம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தி.மு.க.விற்கு உதய சூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்ததில் எந்தவித சட்ட முரணும் இல்லை என்று கூறி இந்த வழக்கை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.

ஏற்கனவே இத்தகைய மனு ஒன்று தேர்தல் ஆணையத்திடமும் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் அதனை நிராகரித்தது குறிப்பிடத் தக்கது.

வருண் தான் வேட்பாளர்-பா.ஜ.க. முரண்டு!

பிலிபித் தொகுதியில் வருண் தான் வேட்பாளர் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. டில்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற்றது.

வருண் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்னர் அவருக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்திருக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் பல்பிர் பூஞ் தெரிவித்துள்ளார்.

வருணை நேரில் சந்தித்த பல்பிர் பூஞ். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,வருண் தான் பிலிபித் தொகுதிதயில் பா.ஜ.க. வேட்பாளர். இது கட்சி மேலிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் கமிஷனுக்கு, கட்சிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்க உத்தரவிடும் உரிமை இல்லை கூறியுள்ளார்.

இராக்கில் குண்டு வெடித்து 25 பேர் பலி!

Published on: திங்கள், 23 மார்ச், 2009 // , , , , ,
வடக்கு இராக்கில் உள்ள தியாலா மாகாணத்தில் படை குண்டு வெடித்து 25 பேர் பலியானார்கள். 40க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

தியாலா மாகாணத்தில் உள்ள ஜலாவ்லா என்னும் இடத்தில் மரண வீட்டில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இது தற்கொலைக் குண்டு வெடிப்பாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. மேலும் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அங்கோலா-போப்., வரவேற்பு கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி!

கத்தோலிக்க மத குருவான போப்பாண்டவர் 16-வது பெனடிக்ட், ஆப்பிரிக்க நாடான அங்கோலாவுக்கு சென்றுள்ளார். அவரை வரவேற்க செயண்ட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவரைப் பார்ப்பதற்காக மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் போப்பாண்டவரை அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டனர். பலர் முண்டியடித்துச் சென்றதால் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கிய பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மிதித்தபடி மற்றவர்கள் சென்றனர். இந்த நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாததால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாலு,பாஸ்வானுக்கெதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை-காங்கிரஸ்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப்பொவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனில் சர்மா தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஐ.மு. கூட்டனி அரசை வெற்றிகரமாக செயல்படுத்த உதவியதற்க்கு நன்றிக்கடனாக, இந்த இரு தலைவர்களையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சுழல் பந்து வீச்சாளர் பில் ஹாரிஸ் அபாரமாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் எடுத்தார். முன்னதா ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 422 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதன் ஆல் ரவுண்டர் ஜான்ஸன் அசத்தலாக ஆடி 123 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

விஜய ராஜேந்தர் அதிமுகவிற்கு பிரச்சாரம்?

ஒவ்வொரு தேர்தலிலும் அந்தர் பல்டி அடித்துக் கொண்டிருக்கும் விஜய ராஜேந்தர் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம். தனக்கும், விஜய காந்திற்கும் ஆகாத நிலையில், ஒரு வேளை விஜய காந்த் திமுக கூட்டணியில் இணைந்தால், தனக்கு பெரும் சங்கடமாக இருக்கும் என்றும், இதற்கு அதிமுகவிற்கு ஆதரவு பிரச்சாரம் செய்வதே மேல் என்று நினைப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஜெ சம்மதிப்பார் என்றே தெரிகிறது.

திமுகவிற்கு ஆதரவாக S.Ve. சேகர் பிரச்சாரம்

அதிமுகவில் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள S.Ve. சேகர், திமுகவிற்கு ஆதரவாக வருகிற மககளவை தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அவர் விரைவில் அதிமுகவை விட்டு நீக்கப்படுவார் என அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில் அவர் தென் இந்திய பிராமணர் கூட்டனி என்ற அமைப்பை ஆரப்பித்து பிராமணர்களுக்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது நினைவிருக்கலாம்.

லட்ச ரூபாய் நானோ கார் இன்று முறைப்படி அறிமுகம்!

லட்ச ரூபாய் நானோ கார் இன்று முறைப்படி அறிமுகம் ஆகிறது.

மூன்று மாடல்களில் வெளியாகும் நானோ கார்களில், டீலர்களுக்கு சப்ளை செய்யப்படும் அடிப்படை மாடலின் விலை ரூ.1 லட்சம். கமிஷன் மற்றும் வரிகள் கூடுதலாக ரூ.20,000 வரை ஆகலாம்.

உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், நானோ காருக்கு வரவேற்பு உள்ளது. எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

நானோ வருகையைத் தொடர்ந்து அதற்குப் போட்டியாக பஜாஜ் நிறுவனம் 2011ல் தனது ரூ.1.25 லட்சம் காரை வெளியிட தயாராகி வருகிறது.

அமெரிக்காவில் விமான விபத்து 16 பேர் பலி!

அமெரிக்காவின் வடமாநிலமான மோன்டானாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 16 பயணிகள் கொல்லப் பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

பட்டே விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கும் போது அருகில் இருந்த கல்லறைத் தோட்டத்தில் விமானம் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆகாய சுற்றுலா சென்ற விமானமாக இது இருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

ஜப்பானில் கார்கோ விமானம் நொறுங்கி விழுந்தது

பெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கார்கோ விமானம் ஒன்று டோக்கியோ அருகே நொறுங்கி விழுந்தது. அதில் பயணித்த இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் குவாங்சோ விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நாரிடா விமான நிலையத்திற்கு இந்த விமானம் வந்து கொண்டிருந்த போது நாரிடாவில் வீசிய வேகமான காற்றால் இந்த விமானம் நொறுங்கி விழுந்து தீபிடித்ததாகவும், தீயை அணைக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவைச் சார்ந்த விமான ஓட்டியும், துணை ஓட்டியும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர். ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக உறுதி செய்யப் பட்டது.

வருண் குற்றவாளி : தேர்தல் ஆணையம்

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வருண் குற்றவாளி என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக் கிழமை இரவு அறிவித்தது. பாரதீய ஜனதா கட்சி வருணை தேர்தலில் நிறுத்தக் கூடாது என்றும் அது உத்தரவிட்டுள்ளது.

29 வயதான வருண் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து அது தொடர்பாக நேற்று 10 பக்க உத்தரவை வெளியிட்டது. வருணின் பேச்சு மிகவும் இழிவானது என்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக சன்டையை மூட்டிவிடும் ஆபத்தானது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத உணர்வைப் புண்படுத்தியவர் பொதுத்தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப் படாதவரை அவரை தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர் என அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டம் இடம் அளிக்கவில்லை எனவும், பாரதீய ஜனதா கட்சி வரும் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியி இவருக்கு இடம் அளிக்கக் கூடாது என தன்னுடைய எதிர்பார்ப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது

சமாஜ்வாதி தலைவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜா பையா என்றழைக்கப் படும் ராகுராஜ் பிரதாப் சிங் பயணம் செய்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று ஞாயிற்றுக் கிழமை இரவு விபத்துக்குள்ளானது. அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

அலகாபாத் அருகில் பிரதாப்கர் மாவட்டத்தில் ஹத்கவான் எனும் நகர் அருகே நெடுஞ்சாலையில் இந்த ஹெலிகாப்டர் விழுந்தது. அதில் பயணம் செய்த பிரதாப் சிங்கும் அவரது பயிற்சாளர் புட்டோவும் காயமுற்றனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். முன்னாள் அமைச்சாரன சிங்குக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது குடும்பத்தினரும் உதவியாளர்களும் இந்த ஹெலிகாப்டர் விபத்தை மறைப்பதாக் கூறப்படுகிறது. அவரது உதவியாளரை செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ஹெலிகாப்டர் விபத்து எதுவும் இல்லை எனவும், பிரதாப் சிங் அகமதாபாத் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாகக் கூறினார்.

ஆனால் காவல்துறை உயர் அதிகாரி இவர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்றதாகக் கூறினார். இந்த ஹெலிகாப்டர் ராஜா பையாவுக்குச் சொந்தமானதாக இருக்கக் கூடும் என்றும், ஹெலிகாப்டரை இயக்கத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என ஆய்வு நடப்பதாகவும், உரிய உரிமம் இல்லையெனில் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் உத்திரப் பிரதேச காவல் துறை இயக்குநர் பிரிஜ் லால் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாய்லாந்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு

Published on: ஞாயிறு, 22 மார்ச், 2009 // ,
ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளினால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்கிறது. முன்னாள் பிரதமர், தக்ஸின் சினவத்ரா, நாட்டை விட்டு வெளியேறினாலும், அவருடைய கட்சிக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் விமான நிலைய முற்றுகை என பல்வேறு போராட்டங்களை அரசுக்கெதிராக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான, பேங்காக், பயணிகளின் வருகை குறைவால், வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கிடையே, அந்நாட்டின் ராணுவம், தக்ஸின், வெளிநாட்டில் இருந்துக் கொண்டு குழப்பத்தை எற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

வெற்றியை நோக்கி தென். ஆப்ரிக்கா !

கேப் டவுன் நகரில் நடந்து வரும் மூன்றாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முன்னனி வீரர்களை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், அதன் கடைநிலை ஆட்டக்காரர்கள் தென் ஆப்ரிக்காவின் வெற்றியை தாமதப்படுத்தும் போக்கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
சற்று முன்வறை, ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் இருவர் கைது

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கிருஷ்ணகிரி காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல் துறையினர் கூறுகையில், கிருஷ்ணகிரி பெரியகல்லுபள்ளி வனப்பகுதி அருகே காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது வனப்பகுதிக்குள் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்த தேவராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி நரசிம்மாச்சாரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமிருந்தும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

93 திபெத்திய புத்த பிக்குகள் கைது!

திபெத்திய கிராமம் ஒன்றில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 93 திபபெத்திய புத்த பிக்குகளை சீன காவல்துறை கைது செய்துள்ளது.

கின்ஹாய் மாநிலத்தில் லக்யாப் என்ற நகரில் சனிக்கிழமையன்று நூற்றுக்கும் அதிகமானவர்கள் நகரின் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக சீன செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த தாக்குதலில் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் காயமுற்றதாக சீன அதிகாரிகள் கூறியதாக அந்த தகவல் மேலும் கூறுகிறது.

ஆறு பேர் கைது செய்யப் பட்டதாகவும், 89 பேர் தாங்களாகவே சரனடைந்ததாகவும், 95 பேரில் இருவரைத் தவிர மற்றவர்கள் புத்த பிக்குள் என்று சீன செய்தி நிறுவனம் கூறுகிறது.

கஷ்மீர் துப்பாக்கிச்சன்டையில் 10 பேர் பலி

கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் பிரிவினைக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சன்டையில் ஒரு மேஜர் உட்பட 4 இராணுவத்தினரும், 6 பிரிவினைவாதிகளும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புச் செய்தியாளர் இன்று தெரிவித்தார்.

குப்வாரா மாவட்டத்தின் ஹப்ரதா காடுகளில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலை ஒட்டி நேற்று இந்த தாக்குதலை இராணுவம் தொடுத்து வருகிறது.

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவிற்கு மாற்றம்

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடப்பது உறுதியாகிவிட்டது. இன்று BCCI யின் அவசரக் கூட்டம் மும்பையில் நடந்தது. மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் போட்டிகள் நடைபெறுவதாக இருந்ததையொட்டி, போட்டிகளை தள்ளி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் BCCI யை கேட்டுக் கொண்டது. முதலில் போட்டிகள் ஒத்திவைப்பதாக கூறி வந்த BCCI, வியாபாரம் மற்றும் ஸ்பான்ஸர்களின் வேண்டுகோளுக்கிணங்க வேறு நாடுகளில் நடத்த ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, இங்கிலாந்தும் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளதாக BCCI வட்டாரம் தெரிவிக்கின்றன.

பா.ம.க., தி.மு.க. அணிக்கு வரவேண்டும் - திருமாவளவன்

பாமக திமுக அணிக்கு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்கிற ஆவல் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்களுக்கிடையே மட்டுமின்றி பெரும்பான்மையான தொண்டர்களிடையேயும் மேலோங்கியுள்ளது.

மொழி மற்றும் இனப்பாதுகாப்பு களங்களில் இருகட்சிகளும் தோழமையோடு பணியாற்றி வருகிறது. இதனால் சமூக நல்லிணக்க சூழல் வளர்ந்துள்ளது. இச்சூழல் தொடர வேண்டுமென்பதை விடுதலை சிறுத்தைகள் மனமாற விரும்புகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறும் தி.மு.க. அணியில் பா.ம.க.வும் இடம்பெற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் விரும்புகிறது. தி.மு.க. அணியில் பா.ம.க.வும் இடம்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையோடும், தோழமையோடும் உளப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல : நக்வி

பாரதீய ஜனதா கட்சி கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல என்று அதன் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

கோயில், மசூதி, தேவாலயம், குருத்வாரா போன்றவற்றைக் கட்டுவதற்கு பாரதீய ஜனதா கட்சி கட்டுமான நிறுவனம் ஒன்றும் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அது, மதத்தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக் கொள்ளப்பட்டதாகவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலோதான் அமைய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக் கிழமையன்று கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். இவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தலைவர் ராஜ்நாத் சிங், ராமர் கோயில் கட்டுவது பா.ஜ.க.வின் முக்கிய குறிக்கோள் மற்றும் ஆசை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ், தேசியவாத காங். இடையே தொகுதி உடன்பாடு!

மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங். இடையே தொகுதி உடன்பாடு ஏற்ப்பட்டது.


காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.


கடந்த சில நாட்களாக இவ்விரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி இருந்த நிலையில் இந்த உடன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா அதிரடி ரன் குவிப்பு

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர்கள் அபாரமாக விளையாடி 651 ஓட்டங்கள் குவித்தனர். டீ வில்லர்ஸ் அதிரடியாக விளையாடி 164 குவித்தார், இதில் 12 பவுன்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். சற்று முன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட துவங்கிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 33 ஒட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

கச்ச தீவு புனித தலமாக இலங்கை அறிவிப்பு

Published on: // ,
சர்ச்சைக்க்குறிய கச்ச தீவு பகுதியை புனித தலமாக இலங்கை தனது நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியா மற்றும் இலங்கைக்கு பிரச்சினைக்குரிய இடமாக இருந்து வந்த அப்பகுதி, 1976 ஆம் ஆண்டு, செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டாலும், இந்திய மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய இலங்கை மீனவர்களிடையே ஏற்படும் மோதல்கள் மற்றும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலாலும் தமிழகத்தில் மீண்டும் இது ஒர் பிரச்சினையாகப்பட்டு பூதாகரமாக வெடித்து இருக்கும் நிலையில், இலங்கை அரசின் அறிவிப்பு, தமிழகத்தில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ச.ம.க. 15 தொகுதிகளில் போட்டி - சரத்குமார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "மக்களவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

எனவே, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம் 15 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். நான் எந்தத் தொகுதியில் போட்டுயிடுவேன் என்பது பற்றி அடுத்த வாரம் அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார்.

சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியராக பஃரீது ஜக்கரியா தேர்வு

Published on: // ,
CNN நிகழ்ச்சி அமைப்பாளர் பஃரீது ஜக்கரியா, அமெரிக்காவில் வசிக்கும் சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகாளாக, அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர், பல்வேறு துறைகளில் பணி புரிந்து சாதனை படைத்து வருபவர்களை கண்டறிந்து இவ்விருதுகளை வழங்கிவருகிறது. பஃரீது ஜக்கரியா CNN தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அபாரம் - 32 ஆண்டுகளுக்குப் பின் நியூ. முதல் டெஸ்ட் வெற்றி

இந்தியா, நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. டோனி தலைமயில் சமீபகாலமாக அட்டகாசமாக அசத்தி வரும் இந்தியா, 32 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வென்றுள்ளது.இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முன்னனி வீரர்கள் அனவரும் பெவிலியன் திரும்ப, அதிரடி ஆட்டக்காரர் மெக்கெல்லம் சிறப்பாக விளையாடி 84 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 6 விக்கெட் எடுத்து வெற்றிக்கு உதவினார். ஆட்டநாயகனாக சாதனை மன்னன் டென்டுல்கர் தெரிவு செய்யப்பட்டார்.

அமெரிக்க அதிபர் பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம்

Published on: // ,
தற்போதைய உலகலாவிய நிதி நெருக்கடியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சுமார் 248,000 அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். அதிபர் ஆவதற்கு முன் பங்கு சந்தையில் முதலீடு செய்து இருந்த ஒபாமா, தற்போதைய நிதி நெருக்கடியில் மேற்குறிப்பிட்ட தொகையை இழந்துவிட்டதாக அவர் சார்பில் சமர்பிக்கப்பட்ட அவரின் சொத்து விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருணைக் கைவிடும் பா.ஜ.க.!

சர்ச்சைக்குரிய விதத்தில் வருண் பேசியதற்கு பா.ஜ.க., எந்த விதத்திலும் பொறுப்பில்லை என அக்கட்சி தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளது.

உ.பி., மாநிலம் பிலிபித் தொகுதியில் பிரசாரத்தின் போது வருண்காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷன் பா.ஜ.க.,வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது .

இந்த நோட்டீஸ் குறித்து கருத்து ‌தெரிவித்துள்ள பா.ஜ.க., வருண் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பல்ல, தேர்தல் கமிஷன் வருண் பேச்சு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் . இதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அமைக்க வேண்டும் . இவ்வாறு பா.ஜ., கூறியுள்ளது . மேலும் இது தொடர்பாக பா.ஜ., வுக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

கஷ்மீரில் 3 இராணுவத்தினர் கொலைக் குற்றவாளியாக அறிவிப்பு!

ஜம்மு கஷ்மீரில் கடந்த மாதம் பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்ற குற்றச் சாட்டை விசாரிக்க அமைக்கப் பட்ட விசாரணை நீதி மன்றம் மூன்று இராணுவத்தினர் குற்றம் செய்தததாக அறிவித்தது. அவர்கள் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

ஸ்ரீநகரில் 15ஆம் கம்பெணியின் பிரிகேடியர் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

ஒரு துணை கமிஷனர் மற்றும் இரு இராணுவ வீரர்கள், தங்களுடைய ஆயுதங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீதிமன்ற விசாரணை விரைவில் துவங்கும். குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை இருக்கக் கூடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

இராணுவம் மனித உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இவர்களுக்கு வழங்கும் தண்டனை மூலம் அறியலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பிப்ரவரி 21ஆம் நாள் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை அடுத்து கஷ்மீர் முழுவதும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்ங்கள் நடத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.

சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டி!

ஐ.நா. துணைச் செயலாளராக பதவி வகித்த சசி தரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளார்.
சசி தரூர், ஐ.நா சபை பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


கேரளாவில் இருந்து போட்டியிடும் 16 வேட்பாளர்களையும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 8 வேட்பாளர்களையும், சட்டீஸ்கரில் இருந்து 2 வேட்பாளர்களையும், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒரு வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி இந்தப் பட்டியலில் அறிவித்துள்ளது.

கஷ்மீரில் மூன்று கொரில்லாக்கள் கொல்லப் பட்டனர்

கஷ்மீரில் தனி நாடு கேட்டுப் போராடும் இயக்கங்களைச் சேர்ந்த மூன்று கொரில்லாக்கள் இன்று கொல்லப் பட்டனர். கஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செளகிபல் அருகே உள்ள ரங்வர் என்னும் வனப் பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இவர்கள் கொல்லப் பட்டனர்.

இன்று நடந்த தேடுதலின்போது வனத்தைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் நடந்த துப்பாக்கிச் சன்டையில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரார் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பறக்கும் விமானத்தில் குழந்தையைப் பெற்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்ற பெண்.

நியூசிலாந்து (AFP) பறந்துகொண்டிருந்த விமானத்தின் கழிவறையில் குழந்தையைப் பெற்ற பெண் அங்கிருந்த குப்பை தொட்டியில் குழந்தையை போட்டு விட்டு சென்று விட்டார்.

போலீசாரும் பசுபிக் ப்ளூ விமான நிறுவன அதிகாரிகளும் தெரிவித்தாக நியூசிலாந்து தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி நேற்று ஒளிபரப்பானது.

விமானம் சுத்தம் செய்யும் பணியாளரால் விமானம் தரை இறங்கிய பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அக்குழந்தை கழிவறைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

150 பயணிகளுடன் சென்ற அவ்விமானத்தில் யாரும் குழந்தை பெற்றதாக யாதொரு சாத்தியக்கூறும் காணப்படவில்லை.

ஆனால் அப்பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விட்டதாக வந்து கேட்டபோது அப்பெண்ணின் பலவீனத்தாலும் ரத்தக் கறையுடன் காணப்பட்டதாலும் சந்தேகமுற்ற அதிகாரிகள் விசாரித்தபோது மேற்கண்ட விஷயம் தெரிய வந்தது.

தற்போது தாயும் குழந்தையும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகளை வன்புணர்ந்ததாக தலைமையாசிரியர் உள்பட மூவர் கைது!

ஷிம்லாவில் உள்ள காது கேளாதோர் மற்றும் ஊமைகளுக்கான பள்ளியில் 14 முதல் 16 வயதுடைய ஆறு மாணவிகளை கடந்த ஒரு ஆண்டு காலத்தில் வன்புணர்ந்ததாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பள்ளியின் தற்காலிக தலைமையாசிரியரான விஜய் மற்றும் ஆசிரியர்கள் தினேஷ் மற்றும் வினோத் ஆகியோதை வியாழக் கிழமையன்று கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்தனர். மேலும் அமர்ஜித் என்ற மற்றொரு குற்றவாளியையும் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பள்ளியின் விடுதியில் 22 பேர் படித்து வருவதாகவும், விடுதியில் சமையல் பணி செய்யும் பெண் இரவில் வீடு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக விடுதி கண்கானிப்பாளர் இல்லாத நிலையில் விடுதியில் தங்கியிருப்போர் மீது செக்ஸ் கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

4 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் இடை நீக்கம்!

கஷ்மீரில் போலி என்கவுண்டர் மூலம் தச்சர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் படையைச் சார்ந்த ஒரு துணை கமாண்டோ மற்றும் மூன்று காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புல்வாமா மாவட்டத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமையன்று 35 வயதுடைய குலாம் முகைதீன் என்பவரை அவரது வீட்டில் மத்திய ரிசர்வ் படையின் 181 படைப்பிரிவினர் சுட்டுக் கொன்றனர். கடந்த ஒரு மாதத்தில் பொதுமக்கள் படையினரால் கொல்லப்படுவது இது மூன்றாவது நிகழ்வாகும்.

பிகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

காங்கிரஸ் கட்சி, பிகாரில் 26 தொகுதிகளி்ல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சீட் மறுக்கப்பட்ட அவரது மச்சான் பப்பு யாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார். இதனால் லாலு-காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. பிகாரில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இதில் 25 தொகுதிகளில் லாலுவின் கட்சியும் 12 இடங்களில் மத்திய அமைச்சர் ராம் விவாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தியும் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு 3 இடங்களை மட்டும் இவர்கள் ஒதுக்கினர்.இதையடுத்து லாலுவுக்கு பதிலடி கொடுக்க அவரது கட்சியி்ன் அதிருப்தியாளர்களுக்கு காங்கிரஸ் வலைவீசி வருகிறது.

இதில் லாலு கட்சியின் எம்பியான கிரிதாரி யாதவ், ரமணி ராம் ஆகியோர் ஆர்ஜேயிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளனர். இதனால் லாலுவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகியுள்ளது.

வருணுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வருணுக்கு, பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.தேர்தல் பிரசாரத்தின் போது மதவாதத்தை பரப்பும் வகையில் வருண் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வரும் வரை அவரை காவல்துறையினர் கைது செய்வதற்கு தடைவிதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்ஜாமீன் கோரி வருண் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதி கேத்ரபால் இந்த உத்தரவை வழங்கினார். வருணுக்கு எதிரான புகார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகியிருப்பதால், டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க அதிகார எல்லை இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.

வருண் மீது தேர்தல் கமிசன் பிடி இறுகுகிறது!

தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகளையும் சட்டத்தையும் மீறி முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருணின் மீதான பிடியைத் தேர்தல் கமிசன் இறுக்குகிறது. தேர்தல் கமிசன் அனுப்பிய விளக்க நோட்டீஸிற்கு, தனது பேச்சைத் திரித்துள்ளனர் எனவும் தான் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை எனவும் வருண் விளக்கமளித்திருந்தார். ஊடகங்களில் வெளியான வருண் பேச்சு அடங்கிய வீடியோ டேப்பில் குளறுபடி நடந்துள்ளது என்று வருண் கூறுவாரேயானால் அதனை அவர் தான் நிரூபிக்க வேண்டும் என தேர்தல் கமிசன் கமிசனர் திரு. என். கோபாலசாமி கூறினார். மேலும், அதனை நிரூபிப்பதற்கு வருணுக்கு 24 மணி நேர கால அவகாசம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



தேர்தல் கமிசனின் உறுதியான இந்நிலைபாடு, வருணுக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் நடவடிக்கை வரும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா: பணவீக்கம் மிகவும் குறைந்தது.

இந்தியாவின் வணிகச் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு பணவீக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில் அது வெறும் 0.44 சதவீதம் என்று இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒரே வாரத்தில் 1.99 சதவீதம் குறைந்திருக்கிறது.

கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 7.78 சதவீதமாக இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பண வீக்கம் வெகுவாகக் குறைந்து விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது.

உணவுப்பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் சில உற்பத்தி பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதை அடுத்து ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி கருத்தளிக்கையில் விரைவில் பணவீக்கம் 0% என்ற நிலையை அடையும் என்கின்றனர்.

காங்கிரஸ் 170 தொகுதிகளில் வெல்லும் - கருத்துக்கணிப்பு

பதினைந்தாவது மக்களவையைத் தீர்மானிக்க நடத்தப்படும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. அரசு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 170 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு அதிக இடங்கள் கிடைக்குமென்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவில் 17 இடங்களிலும், மே. வங்கத்தில் காங்கிரஸ் - திரிணாமூல் கூட்டணிக்கு 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில் குஜராத், மராட்டியம், கர்நாடகாவில் காங்கிரசுக்கு குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 30 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சமாஜ்வாடி கட்சிக்கு குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் அதனுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. தற்போது காங்கிரசில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், மராட்டியத்திலும், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி உத்தரபிரதேசத்திலும் குறைந்த தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பும் உள்ளது.

பாரதிய ஜனதாவின் செல்வாக்கு நாளுக்குநாள் சரிந்து வருவதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதற்கு அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசல்களே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் சங்கிலித்தொடர் உணவகங்களின் உரிமையாளர் ராஜகோபால். அண்ணாச்சி என்று அழைக்கப்படுபவர். தன்னிடம் பணிபுரிந்த சென்னை வேளாச்சேரியை சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் மனைவி ஜீவஜோதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதற்காக வழக்கு விசாரணை நடந்து கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்மு‌றையீடு செய்திருந்தார். அந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் பானுமதி, மிஸ்ரா அடங்கிய குழுமம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!