அல்காயிதா அமைப்பை துடைத்தொழிப்போம் - ஒபாமா சூளுரை
அல்காயிதா அமைப்பு பாகிஸ்தானில் பாதுகாப்பான இடங்களில் இருந்துக் கொண்டு இன்னும் செயல்பட்டு வருவதாகவும், மேலும் புதிய தாக்குதல்களை நடத்த அது திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அல்காயிதா அமைப்பினர் செயல்படும் பாகிஸ்தானின் எல்லைப்புறப் பகுதிகள், 'அமெரிக்கர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான பிரதேசங்கள்' என்றும் அவர் வர்ணித்தார்.
செப்-11 தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி அமைத்திருந்த தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அங்கு போர் முடிவுக்கு வரவில்லை என்பதையும், கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.
அல்காயிதா பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதைப் பற்றி பல உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த பின்னரும் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் ஒபாமா எச்சரித்தார்.
ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக மேலும் 21,000 பேர் கொண்ட படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். இதோடு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 65,000 ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
0 comments