Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

லாஹூர் போலீஸ் மையம் மீதான தாக்குதலில் தாலிபான்

லாஹூரில் காவலர் பயிற்சி மையம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

6 தீவிரவாதிகளும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். 6 தீவிரவாதிகளில் 2 பேர் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்திகா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் லாகூர் காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்த தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த தாக்குதல் பின்னணியில் தாலிபான் இயக்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் லாகூரில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று தஹ்ரீக் -யே-தாலிபான் இயக்கத் தலைவர் பைத்துல்லா மக்சூத் பொறுப்பேற்றதுடன் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தாலிபான் இயக்கத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தாலிபான்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கசாபுக்கு அரசு வழக்குரைஞர் - ஏப்ரல் 6 முதல் விசாரணை துவக்கம்

Published on: திங்கள், 30 மார்ச், 2009 // , , , , , ,
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது கைது செய்யப் பட்ட பாகிஸ்தானைச் சார்ந்த அஜ்மல் அமீர் கசாபுக்கு நீதிமன்றம் அரசு வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது.

மகராஷ்டிரா சட்ட உதவிக் குழுவில் உள்ள வழக்குரைஞர் அஞ்சலி வக்மரேவை இந்த வழக்கின் போது கசாபின் சார்பில் வாதிட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகில்யானி நியமனம் செய்து இன்று அறிவித்தார்.

மேலும் லஷ்கரே தொய்பாவைச் சார்ந்த பஹீம் அன்சாரி மற்றும் சகாபுதீன் முகமது ஆகியோர் தங்களுடைய வழக்குரைஞர் குறித்து உடன் முடிவெடுக்குமாறும் நீதிபதி வலியுறுத்தினார்.

பாகிஸ்தானில் காவல் பயிற்சி மையம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!

இன்று காலை பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள காவல் பயிற்சி மையத்தின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில்ல 9 பேர் பலியானார்கள். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

850 பயிற்சி பெற்று வரும் இப்பள்ளியில் தாக்குதல் நடந்த போது சுமார் 400 பேர் இந்த மையத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 குண்டுகள் வெடித்ததாகவும், துப்பாக்கிச் சூடும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினரைப் போல் உடையணிந்து வந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய தீவிரவாதத் தாக்குதல் இந்நேரம் வரை தொடர்ந்து வருகிறது.

வீட்டுக் காவலில் நவாஸ் ஷரீப்!

Published on: ஞாயிறு, 15 மார்ச், 2009 // , , ,
பாகிஸ்தானின் எதிர்கட்சித் தலைவர் நவாஸ் இன்று வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். இது பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நவாஸ் ஷரீப், அவரது சகோதரர் சபாஷ் ஷரீப் மற்றும் தங்களது கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நசீர் அகமது புட்டா லாஹூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கெதிரான பேரணி இன்று நடப்பதாக இருந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் மீண்டும் இராணுவப் புரட்சிக்குத் திட்டம்?

Published on: திங்கள், 9 மார்ச், 2009 // , , , ,
பாகிஸ்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிப் அலி சர்தாரி மீது அந்நாட்டின் இராணுவத் தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கியானி கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டம் ஒழுங்கை மார்ச் 16க்குள் நிலைநாட்டும்படி அதிபருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. மார்ச் 16ல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆதரவாளர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றனர்.

கியானி அண்மையில் அமெரிக்கா சென்று வந்ததும், வந்தவுடன் மற்ற இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையும் அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்படும் என்ற ஐயத்தை மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முஷாரஃப் இந்தியா வருகை: சந்திக்க தலைவர்கள் மறுப்பு

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் திட்டமிட்டிருந்தபடி மன்மோகன்சிங், சோனியாகாந்தி, குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் ஆகியோரைச் சந்திக்க இயலவில்லை. சந்திப்பு குறித்த அவருடைய வேண்டுகோளை இம்மூன்று தலைவர்களும் நிராகரித்துள்ளனர்.

மேலும் டெல்லியில் நான்கு இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்த அவர் அனுமதி கோரியிருந்த போதும் இரண்டு இடங்களில் பேசுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் யாரும் அவரை வரவேற்கச் செல்லாமல் இணை செயலர் தகுதியில் உள்ள அதிகாரி ஒருவரே அவரை விமானநிலையத்தில் வரவேற்றார். இந்திய அரசின் முக்கிய விருந்தினராக அவர் நடத்தப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு!

Published on: செவ்வாய், 3 மார்ச், 2009 // , , , , , , , ,
பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

லாஹூரில் உள்ள கடாபி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அருகில் இது நடந்துள்ளது. இதில் 8 இலங்கை வீரர்கள் காயமுற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்கர்கரா உள்பட வீரர்கள் காயமுற்றதாக இலங்கை அணியின் மேலாளர் கூறியதாக இணைய தகவல்கள் கூறுகின்றன.

இது இலங்கை அணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என பாகிஸ்தானிய தொலைக்காட்சிகள் கூறுகின்றன. இரு வீரர்களுக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், ஒருவருக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், காவல்துறையின் வாகனத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு குழுக்களுக்கிடையே நடந்த மோதல்களில் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் போன்றதே இத்தாக்குதல் எனவும், அந்தப் பகுதியில் தற்போதும் 12 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் பாகிஸ்தானிய காவல்துறை கூறியுள்ளது.

இலங்கை வீரர்களை அந்தப் பகுதியிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சற்று முன் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வங்கதேசம்: இராணுவப்புரட்சிக்கு பாகிஸ்தான் தூண்டல்?

வங்காளதேசத்தில் அண்மையில் துணை இராணுவமான எல்லைப் பாதுகாப்பு படையினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டு ஏராளமான அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக்கொன்றனர். இதில் 200 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைந்து விட்டாலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டதுடன் புரட்சிகாரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். விசாரணையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு புரட்சி செய்து இருப்பதும் பின்னணியில் சலாலுதீன் செளத்ரி என்ற தொழில் அதிபர் இருந்ததும் தெரிய வந்துள்ளது. சலாலுதீன் செளத்ரி சிட்டாகாங் நகரை சேர்ந்த கப்பல் நிறுவன அதிபர்.

முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு நெருக்கமான இவருக்கு பாகிஸ்தான் உளவுப்படையான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆக, சலாலுதீன் சவுத்திரி பாகிஸ்தான் மற்றும் கலீதா ஜியாவின் தூண்டு தலால் இந்த சதி திட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக கூறப்படுகிறது

துணை இராணுவப்படை மூலம் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொன்று விட்டு ஆட்சியை கைப்பற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு தொடர்பாக முழுமையான விசாரணை நடந்து வருகிறது.

நவாஸ் ஷரீஃபுக்கு விதித்த தடை உறுதி!

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , , ,
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃபுக்கும் அவரது சகோதரர் ஷாபாசுக்க்கும் பாகிஸ்தான் அரசில் பங்கு வகிக்க நடத்தப்படும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட லாகூர் உயர் நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

நவாஸ் ஷரீஃபின் கட்சியான PML-N மேற்கு பஞ்சாபில் மிகவும் பலம் வாய்ந்ததாகும். நவாஸ் ஷரிஃபின் சகோதரர் ஷாபாஸ் தான் அங்கு முதல்வராக இருக்கிறார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஷாபாசும் பதவி விலக வேண்டி வரும்.

இந்தத் தீர்ப்பை மேல் முறையீடு செய்யவும் இயலாதவாறு மேலும் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் சதி என்று கருதுவதாக நவாஸ் ஷரீஃப் தரப்பினர் கூறியுள்ளனர்.

முந்தைய அதிபர் முஷரஃபை பதவி விலக நெருக்கடி கொடுக்க ஜர்தாரியுடன் ஒன்று சேர்ந்த நவாஸ் ஷரீஃப், முஷரஃப் பதவி விலகியவுடன் ஜர்தாரி அதிபராக உதவி செய்தார். பின்னர் அவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு இருவரும் எதிரெதிராகச் செயல்பட்டு வருகின்றனர். நவாஸ் ஷரீஃப் அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்ற முனைப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை மிரட்டி தடை உத்தரவு தீர்ப்பைத் திணித்துள்ளதாக நம்புவதற்குப் பெரிதும் இடம் இருப்பதாக நவாஸ் ஷரீஃபின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இராணுவப் பயிற்சி

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு அமெரிக்க இராணுவத்தார் பயிற்சி அளித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியை அமெரிக்காவே வெளியிட்டுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளை எப்படி ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராணுவம் பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
70 அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் போர் நிபுணர்கள் இந்தப் பயிற்சியை அளித்து வருவதாகவும் 8 மாதத்துக்கு மேலாக இந்தப் பயிற்சி நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.எந்த இடத்தில் பயிற்சி நடக்கிறது என்ற விபரங்களை வெளியிடவில்லை. இரகசிய இடத்தில் பயிற்சி நடக்கிறது.

ஒரு காலத்தில் தாலிபானுக்கும் அமெரிக்காவே பயிற்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் அணு ஆயுதம் ஐ.நா.வின் கட்டுபாட்டில் : பா.ஜ.க. கோரிக்கை

Published on: வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,
பாகிஸ்தானிய அரசு பல்வேறு வகைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் கேந்திரமாகவும் விளங்குகிறது. எனவே பாகிஸ்தானின் அனு ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை உடனே தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தாலிபான், அல்கைதா போன்ற தீவிரவாதிகளின் கைகளில் சென்றுவிட வாய்ப்பு இருப்பதால், பாகிஸ்தானின் அணு ஆயதங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுமைக்குமே அச்சுறுத்தல் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலத்தில் ஷரீயத் சட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பது தாலிபான்களிடம் அரசு சரணடைந்திருப்பதையே காட்டுகிறது என்று கூறிய அவர், பாகிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வாய்ப்புகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்கி 20 பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் பலியானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாலிபான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலமான ஆப்கானிஸ்தானை ஒட்டிய தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினருக்கு எடுத்துச் செல்லப்படும் உணவு மற்றும் ஆயுத விநியோக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதி மீது இன்று அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தங்களது ஆதரவாளர்கள் 25 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று தாலிபான் தரப்பு கூறியதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தப் பகுதி மீது அமெரிக்க 20க்கும் அதிமான வான் தாக்குதலை நடத்தி உள்ளது.

கஸபிற்கு எதிராக பாகிஸ்தான் வழக்கு பதிவு செய்தது!

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையில் அகப்பட்ட முகம்மது அஜ்மல் அமிர் கஸபிற்கு எதிராக பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை தாக்குதல் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஏஜன்ஸி வழங்கிய அறிக்கையினை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜியோ நியூஸ் தொலைகாட்சி கூறியது.

இந்தியா - பாகிஸ்தான் தீவிரவாதப் பிரச்சனையில் காமன்வெல்த் தலையிடாது!

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையில் காமன்வெல்த் அமைப்புத் தலையிடாது என்று கூறப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தானிடையே தீவிரவாதம் குறித்த பிரச்சனையில் காமன்வெல்த் தலையிடாது என்று அந்த அமைப்பின் செயலாளராக இருக்கும் இந்தியரான கமலேஷ் ஷர்மா கூறி உள்ளார்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு காமன்வெல்த் அமைப்பு தனியான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. அதனை உறுப்பு நாடுகள் பலவும் ஏற்றுக் கொண்டுள்ளன. தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தானும் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானுடன் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் : பா.ஜ.க.

Published on: ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
பாகிஸ்தானுடன் உள்ள அனைத்துவகை உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தேசியய ஆலோசனைக் கூட்டம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் உயர்மட்டத் தலைவர் அருன் ஜெட்லி, கடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்றத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றும் அவர்கள் மீதான வழக்குகள் இந்தியாவில்தான் நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.

பாகிஸ்தானுடன் உள்ள வணிக, கலாச்சார, சுற்றுலா மற்றும் போக்குவரத்து உட்பட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை திரும்ப அழைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். பாகிஸ்தானுடன் காங்கிரஸ் மேற்கொள்ளும் மென்மையான போக்கை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

பாக். அணு விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா எதிர்ப்பு.

Published on: சனி, 7 பிப்ரவரி, 2009 // , , , , ,
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதர்கான் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

"இது துரதிருஷ்டவசமானது" என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, இந்நிகழ்வு கவலையளிப்பதாகவும், இதன் மூலம் வடகொரியா,ஈரான் ஆகியவற்றின் தொடர்புகள் வலுவடையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

பாக்: அப்துல்காதிர்கான் வீட்டுக்காவலிலிருந்து விடுவிப்பு

அணு ஆயுத இரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக பாகிஸ்தானிய அரசால் குற்றம் சுமத்தப்பட்டு 4 வருடமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த விஞ்ஞானி அப்துல் காதிர்கானை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அவர் சுதந்திரமான மனிதர் என்று கூறியுள்ள நீதிமன்றம், பாகிஸ்தானுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரவும், ஆராய்ச்சிக்கூடத்திற்குச் செல்லவும், நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கவும் தடையில்லை என்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசுக்கும் அணுவிஞ்ஞானி அப்துல்காதிர்கானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது

Published on: வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் உபயோகித்த 9 படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

நேற்று இந்த மீனவர்கள் பாகிஸ்தானின் கராச்சி கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இரண்டு தினங்களுக்கு முன் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பில் வந்து 20க்கும் அதிகமான பாகிஸ்தானிய மீனவர்களைக் கைது செய்து சென்றுவிட்டதாக பாகிஸ்தானிய மீனவர் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிய மீனவர்கள் அவ்வப்போது இவ்வாறு கைது செய்யப்படுவது கடந்த ஆண்டின் தொடக்கம் வரை நடந்து வந்தது. பின்னர் இருநாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த நல்லுறவைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டிருந்தன.

கஸபிற்கு எதிராக டி.என்.ஏ ஆதாரம்.

Published on: வியாழன், 5 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மும்பை தீவிரவாதத் தாக்குதல்இல் கைது செய்யப்பட்ட அஜ்மல் ஆமிர் கஸப் மற்றும் தீவிரவாதிகள் இந்தியாவிற்குக் கடல் வழியாக வர உபயோகித்த குபேர் என்ற படகிலிருந்துக் கிடைத்த ஓவர்கோட்டிலிருந்துச் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ சாம்பிள்களுக்கிடையில் ஒற்றுமையுள்ளதாக மும்பை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா அறிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் குபேர் என்றப் படகில் தான் இந்தியா வந்தனர் என்பதற்கான ஆதாரமாகவும் இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கஸப் இறந்து விட்டதாக முன்பு பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், கையில் கட்டுகளுடன் கைவிலங்கு அணியப்பட்ட நிலையில் கஸப் இருக்கும் புதிய புகைப்படங்களைக் கடந்த தினங்களில் தொலைகாட்சிகள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!