தமிழகம்: திமுக-காங் கூட்டணி இற்றைப்படுத்தப்பட்டது?
பதினைந்தாம் மக்களவைக்கான எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும்,அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. தே.மு. தி.க.வும் தனித்துப் போட்டியிட இருப்பதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அதில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு பற்றிய விவரம் 2 நாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்து இருந்தார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்படுவது உறுதியாகி விட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
வடசென்னை, காஞ்சீபுரம் (தனி), தர்மபுரி, ஆரணி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமாரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்க பேசப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.
மீதம் உள்ள 24 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் ஒதுக்கி 21 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
திருவள்ளூர் (தனி), தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப் புரம் (தனி), சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய 21 தொகுதிகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
விடுதலைச்சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம்லீக் கட்சிக்கு வேலூரும், மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.
நன்றி: மாலைமலர்.
0 comments