சீக்கியர்களுக்கு எதிராக வருண் பேசியதாக பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!
பாரதீய ஜனதா கட்சியின் பிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண் சீக்கியர்களுக்கு எதிராகப் பேசியதாக பஞ்சாப் அரசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சியினரும், சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஆளும் அகாலி தள கட்சி இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தில் பிலிபிட் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சீக்கியர்களுக்கு எதிராகப் பேசிய வருணின் பேச்சுக்கள் அடங்கிய சிடிகளை பஞ்சாப் மாநிலம் முழுவதும் விநியோகிக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அகாலி தளம் கட்சிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
வருண் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர். அகாலி தளம் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது பிரகாஷ் சிங் பாதல் வருணுடன் கூட்டணி அமைத்துள்ளது போன்றதே. சீக்கியர் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வருணின் கீழ்த்தரமான விமர்சனங்களை பாதல் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை அவர் விளக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளவில்லை எனில், வருணின் இந்தப் பேச்சு குறித்து அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைக் கூற வேண்டும் என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
வருணின் இந்தப் பேச்சு குறித்து விவாதிக்க ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் குழு என்ற முக்கிய சீக்கிய அமைப்பு வியாழக் கிழமையன்று கூடுகிறது. தள் கல்சா போன்ற சீக்கி அமைப்புகள் வருணின் சீக்கிய எதிர்ப்பு குறித்து அகாலி தளம் மெளனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
0 comments