மோடிக்கு மாற்றமாக குஜராத் காவல்துறை இயக்குநர் கருத்து!
ஐ.பி.எல். போட்டிகளை தேர்தல் நேரத்தில் நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்ய இயலாது என்று கூறி மாற்றுத் தேதிகளில் நடத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்றும், இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடு பாதுகாப்பு தர முடியாதது வெட்கக்கேடு. காமன்வெல்த் போட்டிகளுக்கு மட்டும் பாதுகாப்பு தர முடியுமா? என்றும் நாட்டின் மானத்தை காப்பாற்ற குஜராத் அரசு ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு தர முடிவு செய்துள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் குஜராத் மாநில காவல்துறை இயக்குநர் இதற்கு மாற்றமாகக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் நர்கரி அமீன் என்பவருக்கு அம்மாநில காவல்துறை இயக்குநர் எழுதிய கடிதத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியிலிருந்து மே 3ஆம் தேதிவரை 20-20 போட்டிகளை நடத்த தகுந்த பாதுகாப்பு அளிக்க இயலாத நிலையில் குஜராத் அரசு இருப்தாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ள இந்தப் போட்டிகளை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு முன் அல்லது மே 10ஆம் தேதிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை நடத்த குஜராத் அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று மோடி கூறியிருந்ததற்கு மாற்றமாக காவல் துறை இயக்குநர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments