வருண்காந்தி மீது தேசியபாதுகாப்புச்சட்டம் - மாயாவதி ஆலோசனை
தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கடும் வெறுப்பை உமிழ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிலிஃபிட் தொகுதி வேட்பாளர் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாயாவதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் வருண்காந்தி தானே முன்வந்து பிலிஃபிட் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.ஆனால், காவல்துறை முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தது
வருண்காந்தி பிணையில் விடுதலையாக மனுதாக்கலும் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
வருண்காந்தி நேற்று நீதிமன்றம் வந்தபோது ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். . வருண்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் காவலர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் காவல்துறை தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.
வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி கடும்கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக அரசு சார்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாயாவதி கூறியுள்ளார்
0 comments