சமாஜ்வாதி தலைவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து!
சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜா பையா என்றழைக்கப் படும் ராகுராஜ் பிரதாப் சிங் பயணம் செய்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று ஞாயிற்றுக் கிழமை இரவு விபத்துக்குள்ளானது. அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
அலகாபாத் அருகில் பிரதாப்கர் மாவட்டத்தில் ஹத்கவான் எனும் நகர் அருகே நெடுஞ்சாலையில் இந்த ஹெலிகாப்டர் விழுந்தது. அதில் பயணம் செய்த பிரதாப் சிங்கும் அவரது பயிற்சாளர் புட்டோவும் காயமுற்றனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். முன்னாள் அமைச்சாரன சிங்குக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது குடும்பத்தினரும் உதவியாளர்களும் இந்த ஹெலிகாப்டர் விபத்தை மறைப்பதாக் கூறப்படுகிறது. அவரது உதவியாளரை செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ஹெலிகாப்டர் விபத்து எதுவும் இல்லை எனவும், பிரதாப் சிங் அகமதாபாத் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாகக் கூறினார்.
ஆனால் காவல்துறை உயர் அதிகாரி இவர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்றதாகக் கூறினார். இந்த ஹெலிகாப்டர் ராஜா பையாவுக்குச் சொந்தமானதாக இருக்கக் கூடும் என்றும், ஹெலிகாப்டரை இயக்கத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என ஆய்வு நடப்பதாகவும், உரிய உரிமம் இல்லையெனில் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் உத்திரப் பிரதேச காவல் துறை இயக்குநர் பிரிஜ் லால் செய்தியாளர்களிடம் கூறினார்.
0 comments