காங்கிரஸ் 170 தொகுதிகளில் வெல்லும் - கருத்துக்கணிப்பு
பதினைந்தாவது மக்களவையைத் தீர்மானிக்க நடத்தப்படும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. அரசு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 170 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு அதிக இடங்கள் கிடைக்குமென்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவில் 17 இடங்களிலும், மே. வங்கத்தில் காங்கிரஸ் - திரிணாமூல் கூட்டணிக்கு 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே வேளையில் குஜராத், மராட்டியம், கர்நாடகாவில் காங்கிரசுக்கு குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 30 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சமாஜ்வாடி கட்சிக்கு குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் அதனுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. தற்போது காங்கிரசில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், மராட்டியத்திலும், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி உத்தரபிரதேசத்திலும் குறைந்த தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பும் உள்ளது.
பாரதிய ஜனதாவின் செல்வாக்கு நாளுக்குநாள் சரிந்து வருவதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதற்கு அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசல்களே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 comments