லாஹூர் போலீஸ் மையம் மீதான தாக்குதலில் தாலிபான்
லாஹூரில் காவலர் பயிற்சி மையம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
6 தீவிரவாதிகளும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். 6 தீவிரவாதிகளில் 2 பேர் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்திகா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் லாகூர் காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்த தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த தாக்குதல் பின்னணியில் தாலிபான் இயக்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் லாகூரில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று தஹ்ரீக் -யே-தாலிபான் இயக்கத் தலைவர் பைத்துல்லா மக்சூத் பொறுப்பேற்றதுடன் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தாலிபான் இயக்கத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தாலிபான்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
0 comments