Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆஸ்திரேலிய காட்டுத்தீ சாவு எண்ணிக்கை உயர்வு!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்போர்னை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் காட்டுத்தீ பரவி கடும் நாசத்தை ஏர்படுத்தி வரும் செய்தியை முன்னர் பதிந்திருந்தோம். தற்போது இக்காட்டுத்தீ மேலும் பரவி 170 உயிர்களை இதுவரை பலி கொண்டுள்ளது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அரசு அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீயிலிருந்து தப்பிக்கக் கார்களில் ஏறிப் புறப்பட முயன்ற போது காரிலிருந்தவாறே எரிந்து தீயில் கருகிப் பலர் இறந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகக் கடுமையான இயற்கைப் பேரழிவாக இதைக் கருதுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

மாவோவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி.

பீகாரில் மாவோவாதிகளின் செல்வாக்கு அதிகமுள்ள பாட்னாவுக்கு அருகிலுள்ள பகுதியில் 100க்கு மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையம் மீது நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். பாட்னாவிலிருந்து 80 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதே பகுதியில் கடந்த வாரம் மாவோவாதிகளின் துப்பாக்கி சூடில் 15 போலீசார் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் எச்சரிக்கையால் பாரிஸ் விமான நிலையங்கள் அடைப்பு!

மணிக்கு 120 கிமீ வரை வேகத்தில் கடும் புயல் காற்று வீசக்கூடும் என்ற அச்சத்தால் பாரிஸ் நகர விமான நிலையங்கள் 12 மணிநேரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

இதற்கு முன் கடந்த ஜனவரி 14 அன்று கடும் புயல் வீசி 11 பேரைப் பலி கொண்டதுடன் பாரிஸ் நகரமெங்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

தற்பொழுது மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதால் ஐரோப்பாவின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான சார்லஸ் டி கால் விமான நிலையம் உள்பட பாரிசின் இன்னொரு விமான நிலையமான ஆர்லி விமான நிலையமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் நேரம் இரவு 8 மணிமுதல் 12 மணிநேர அளவிற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளின்டனின் அமைப்புக்கு அமர்சிங் அளித்த நன்கொடை குறித்து விசாரிக்க கோரி மனு

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கிளின்டனின் நல அமைப்புக்கு கருப்புப் பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலம் நன்கொடையாக அளித்தார் என்று தேர்தல் ஆணையத்திடம் இன்று புகார் அளிக்கப் பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் தன்னுடைய நிகர வருமானமாக 37 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ள அமர் சிங், கிளின்டனின் நல அமைப்புக்கு (10 மில்லியன் டாடலர்) 43 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள சதுர்வேதி, இவற்றை எங்கிருந்து அளித்தார்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இந்த தொகையை தன்னுடைய வருமான வரி கணக்கின் போது காட்டினாரா? இத்தகைய வெளிநாட்டு பரிவர்த்தனையின் போது பெற வேண்டிய ரிசர்வ் வங்கியின் அனுமதி எதனையும் அவர் பெற்றாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் புகாரை ஜனவரி 30ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சதுர்வேதி சமர்ப்பித்தார்.  இவர் ராஜ்ய சபா உறுப்பினராக இருப்பதால் ராஜ்ய சபா அலுவலரிடம்தான் இந்தப் புகாரை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதால் புகாரின் நகல்களை இன்று பத்திரிகையாளர்களிடம் அளித்தார்.

விசுவநாத் சதுர்வேதி என்பவர் இன்று அளித்த புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கூறி பொது நலவழக்கு தொடர்ந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் தீவிரவாதப் பிரச்சனையில் காமன்வெல்த் தலையிடாது!

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையில் காமன்வெல்த் அமைப்புத் தலையிடாது என்று கூறப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தானிடையே தீவிரவாதம் குறித்த பிரச்சனையில் காமன்வெல்த் தலையிடாது என்று அந்த அமைப்பின் செயலாளராக இருக்கும் இந்தியரான கமலேஷ் ஷர்மா கூறி உள்ளார்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு காமன்வெல்த் அமைப்பு தனியான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. அதனை உறுப்பு நாடுகள் பலவும் ஏற்றுக் கொண்டுள்ளன. தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தானும் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

கோத்ரா வழக்கு: 5 நாட்கள் சிறப்பு விசாரணைக்குழு கட்டுப்பாட்டில் டி.எஸ்.பி.

2002 ஆம் ஆண்டு கோத்ராவில் நடைபெற்ற கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட வல்சாத் காவல்துறை துணை கண்கானிப்பாளர் கே.ஜி. எர்தாவிடம் விசாரணை செய்வதற்காக 5 நாட்கள் சிறப்பு விசாரணைக் குழுவின் (SIT) கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிறப்பு விசாரணைக் குழு தாங்கள் இதுவரை திரட்டிய தகவல்களை மாநாகர நீதிபதி சி.பி. பட்டேலிடம் அளித்து எர்தாவை விசாரணைக்காக ஒப்படைக்கோரினர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த அனுமதியை அளித்துள்ளார்.

இந்த கலவரம் நடைபெறம்போது அவர் மெகாநிகர் பகுதியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் கடமையிலிருந்து தவறியதாகவும் ஆதாரங்களை அழித்ததாகவும் இவர் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

வன்முறை நாடுகள்: இலங்கைக்கு முதலிடம்

பொது மக்களுக்கு எதிராக அதிகமதிகம் வன்முறைகள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது

பெல்ஜியம் தலைநகர் ப்ரெசெல்ஸில் 'உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம்' அமைப்பு உள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை :


இலங்கையின் வடபகுதியில் அந்நாட்டுப் படையினர் மேற்கொண்டுள்ள ராணுவ தாக்குதலில் பல அப்பாவிப் பொதுமக்கள் தினமும் கொல்லப்படுவதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், ராணுவ தாக்குதல்கள் சேதம் விளைவித்து வருகின்றன.


விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல்களில் வெற்றியடைந்து வருவதாக இலங்கை அரசு கூறி வரும் போதிலும், ஏராளமான பொதுமக்கள் கடந்த ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலைமை அதைவிட மோசமடைந்துள்ளது.

உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் தாக்குதல்களில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக ஸ்ரீலங்காவின் வடபகுதி காணப்படுகிறது.அந்த வகையில் இப்பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.

இஸ்ரேல் படையினரின் தாக்குதலால் பாதிப்படைந்த பாலஸ்தீனத்தின் காஸா பகுதி, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புகள் தீவிரமடைந்துள்ள மெடகாஸ்கர், அரசு படைகளுக்கு எதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் ரோறக் போராளிகளின் போர்ப் பகுதி போன்றவையும் உலகில் வன்முறை அதிக நிகழும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது

பிப்.17-ல் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை

தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இம்மாதம் 17ம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

வரும் 17ம் தேதி தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்று காலை 9.30 மணிக்கு 2009 -2010ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்கிறார்.

அத்துடன் அன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். பின்னர், சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வு குழு கூடி கூட்டத் தொடரை எத்தனை நாளைக்கு நடத்துவது என்று முடிவெடுக்கப்படும்.

மறுநாள் நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெறும். 5 நாட்கள் இந்த விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

வங்கதேசத்தில் இராணுவ தளம் அமைக்கவில்லை : அமெரிக்கா

வங்கதேச கடல்பரப்பில் அமெரிக்க இராணுவ தளம் அமைக்கப்படவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

வங்கதேசத்தின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் அதன் கடல் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வங்கதேசத்திற்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாயின.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வெளியுறவுத் துணைச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் தமது இரண்டு நாள் வங்கதேச சுற்றுப் பயணத்தை முடிவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, வங்கதேசத்தின் கடலோரப் பாதுகாப்புப் பணியை இன்னும் சிறப்பாகச் செய்யலாம். வங்கதேசம் விரும்பினால் நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

அமெரிக்கா வங்கதேசத்தில் இராணுவ தளம் அமைக்கத் திட்டமிடுகிறது என்ற தகவலை அவர் மறுத்தார். வங்கதேசத்தில் நிரந்தரமாக இருக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா பல்வேறு நாடுகளில் பொதுப்பணித்துறை, காவல் துறை மற்றும் இராணுவம் போன்ற துறைகளில் அரசுகளுடனும் தனியார் ஏஜென்சிகளுடன் இணைந்து பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

வங்காள விரிகுடா கடல் எல்லையில் வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி இன்று வங்கதேசப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

கடலோரப் பாதுகாப்பு தீவிரம்: ப.சிதம்பரம்

கடல் வழியாக தீவிரவாதிகள் நாட்டினுள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கடலோரப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் காவல்துறை, கப்பற்படை, கடலோர காவல்துறை மூன்றும் இணைந்த கமாண்டோ படை ஒன்று உருவாக்கப்படும் என்ற ப.சிதம்பரம், இப்பாதுகாப்பை பலப்படுத்த உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

ஆப்கனில் தமிழர் கொலைசெய்யப்பட்டார்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைமன். ஆப்கானிஸ்தானில் ஹெராட் என்னும் மாகாணத்தில் இராணுவ விமான தளம் ஒன்றில் இத்தாலிய இராணுவ வீரர்களுக்கான உணவுப்பொருள் விற்பனை அங்காடியில் வேலைபார்த்து வந்தார்.

பணியிலிருந்த போது அவரை தாலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால், தீவிரவாதிகள் அவரைக் கொன்று விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. செய்தியறிந்த சைமன் குடும்பத்தினர் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

பார்வையற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக தலைமை ச்செயலகம் முன்பு பார்வையற்ற இடைநிலை பயிற்சி ஆசிரியர்கள் 50 பேர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பயிற்சி முடித்து பல ஆண்டுகளாகியும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படாததை க் கண்டித்தும், நிரப்பப்படவுள்ள பணியிடங்களில் நியாயமான ஒதுக்கீடு வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

அனுமதிபெறாத ஆர்ப்பாட்டம் என்பதால் அவர்களை காவல்துறை கைது செய்தது.

பெரும் விமானவிபத்து தவிர்ப்பு

பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டதால் 150 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

மும்பையிலிருந்து டெல்லி செல்ல இருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC866 புறப்பட இருந்த ஓடுபாதையில், குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலுக்கான பாதுகாப்பு ஹெலிகாப்டர் ஒன்றும் இறங்க அனுமதிக்கப்பட்டதால் இந்த விபத்து நேரிட இருந்தது.
நல்லவேளையாக, விமானி ஹெலிகாப்டர் இறங்குவதை கவனித்துவிட்டதால், இந்த பெரும்விபத்து தவிர்க்கப்பட்டு 150 பயணிகள் உயிர்மீண்டனர்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதை முன்னிட்டு பிரதீபா பாட்டில் வருகைத் தருவதையொட்டி அவருக்கான பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் மூன்று மும்பைக்கு வரவழைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றே மேற்படி செய்தியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வால் மும்பை விமான நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது. ஒரே ஓடுபாதையில் இரு வானூர்திகளை அனுமதித்தது குறித்த விசாரணைக்கு முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

ஒருவரைப் போல் இன்னொருவர் - தண்டனையிலிருந்து தப்பிய இரட்டையர்!

மலேசியாவைச் சேர்ந்த இரட்டையர் ஒருவரைப் போலவே இன்னொருவர் இருந்ததால் மரண தண்டனையிலிருந்து தப்பினர்.

மலேசியாவைச் சேர்ந்த சதீஷ் ராஜ், சபரீஷ் ராஜ் என்ற இருவரும் இரட்டையர்கள். இருவரும் அச்சு அசலாக ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பர். 2003-ஆம் ஆண்டு இவர்களில் ஒருவர் 166 கிலோ கஞ்சாவையும் 2 கிலோ ஓப்பியம் போதைமருந்தையும் வைத்திருந்த போது பிடிபட்டார்.

இரட்டையரில் இன்னொருவரும் குற்றம் நிகழ்ந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டடதும், அரசு தரப்பு வழக்குரைஞர்கள் இரட்டையரில் எவர் குற்றம் செய்தவர் என நிரூபிக்க இயலவில்லை. மரபணு சோதனைகள் மூலமும் குற்றம் இழைத்தவர் இன்னார் தான் எனத் தெளிவாக நிரூபிக்க இயலவில்லை.

போதை மருந்துகள் கடத்தலுக்கு மலேசிய சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படும். இருப்பினும் சதீஷ், சபரீஷ் இரட்டையரில் குற்றம் இழைத்தவர் இன்னார் எனத் தெளிவாக நிரூபிக்கப்படாததால், அநியாயமாக ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதால் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பாதுகாப்பு பகுதியிலும் இலங்கை இராணுவம் தாக்குதல்


பாதுகாப்பு பகுதிகள் என வரையறை செய்யப் பட்ட சுதந்திரபுரம், இருட்டுமாடு, உடையார்காடு, தேவிபுரம் ஆகிய இடங்களிலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 120 பொதுமக்கள் இந்தப் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று 59 பொதுமக்களும், சனிக்கிழமை 62க்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி வெள்ளிக் கிழமையன்று புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 61பேர் கொல்லப் பட்டனர்.

கடல்நீரிலிருந்து குடிநீர் பெற உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

விஞ்ஞானிகள் அடங்கிய குழுவொன்றை ஏற்படுத்தி கடல்நீரை குடிநீராக மாற்றும் அதிக செலவற்ற தொழில்நுட்பத்தை கண்டறிய அரசு முயல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தண்ணீர் பிரசினை தீர்க்கப்படாவிட்டால் சமூகத்தில் அமைதியின்மை நிலவும் என்று கவலையும் தெரிவித்துள்ளது.

வழக்கு ஒன்றின் தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, அல்தாமஸ் கபீர் ஆகியோர் அடங்கிய குழு
"நாட்டில் தண்ணீர் பிரசினையை தீர்க்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது. சிறந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். நிர்வாகரீதியாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மாநில அரசுகள் செய்து தரவேண்டும். நாட்டின் குடிநீர் பிரசினையைத் தீர்க்க கடல்நீரை குடிநீராக மாற்றும் செலவற்ற தொழில்நுட்பத்தை கண்டறிய அவர்களை கேட்டுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்திய விஞ்ஞானிகள், வெளிநாட்டு நிபுணர்களின் உதவியையும் தேவைக்கேற்ப பெறலாம். தண்ணீர் பிரசினையால் மாநிலங்களுக்கிடையேயும் மோதல்கள் ஏற்படுவதால் ஒருநாள் கூட தாமதமின்றி அரசு இதில் முனைப்பு காட்ட வேண்டும்"
என்று கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுதீ!

மெர்போர்ன் நகருக்கு அருகில் கடும் சூட்டின் காரணமாகப் படர்ந்தக் காட்டுத்தீயில் சுமார் 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று மெல்போர்ன் நகரில் உச்சபட்சமாக 46.7 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. கடும் வெப்பத்தின் காரணமாக இரண்டாயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் கடும் நாசம் விளைந்துள்ளது. பல கிராமங்கள் முழுமையாக தீக்கு இரையாகியுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

வெப்பக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுவது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு சம்பமாகும். இவ்வாண்டு தாக்கிய மிக அதிகபட்ச வெப்பமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் கலவர வழக்கு தொடர்பாக டி.எஸ்.பி கைது!

2002 ல் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் மாநில உயர் போலீஸ் அதிகாரியான டி.எஸ்.பி கெ.ஜி. எர்தாவை எஸ்.ஐ.டி கைது செய்தது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைபடி விசாரணையை ஏற்று நடத்திய எஸ்.ஐ.டி, நேற்று டி.எஸ்.பி எர்தாவைக் கைது செய்ததாக தெரிகிறது.

குஜராத் கலவரத்திற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இக்ஸான் ஜப்ரி உட்பட 35 பேரைக் கொலை செய்யப்பட்ட குல்பர்கா சொஸைட்டி கொலை வழக்கு தொடர்பாக எர்தா கைது செய்யப்பட்டுள்ளார். கலவர வேளையில் மெஹானி நகர் காவல்நிலையத்தில் எர்தா பணியாற்றியிருந்ததாக எஸ்.ஐ.டி தலைவரும் முன்னாள் சிபிஐ டைரக்டருமான ஆர்.கெ.ராகவன் தெரிவித்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பி எர்தாவே முன்னர் இதே குல்பர்கா வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்தார். இவ்வழக்கு தொடர்பாக இவரைச் சமீபத்தில் எஸ்.ஐ.டி விசாரணை நடத்தியிருந்தது. தற்பொழுது பணியிலிருக்கும் வல்ஸத் மாவட்டத்திலிருந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குல்பர்கா வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 2000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எஸ்.ஐ.டி தாக்கல் செய்துள்ளது. 21 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். மேலும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி துவங்கிய சங்கபரிவார அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 14 பேரைக் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். முன்னாள் முனிஸிப்பல் கவுன்ஸிலர் சுனிலால் பிரஜாபதி, தற்போதைய கவுன்ஸிலர் பிபின் பட்டேல் போன்றவர்களும் தலைமறைவானவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்களாவர். குற்றப்பத்திரிக்கையில் 567 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!