Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இலங்கையை ஐ.நா. சபை கண்கானிக்க வேண்டும் : மனித உரிமை அமைப்பு

Published on: வெள்ளி, 17 ஏப்ரல், 2009 // , , , , , , ,
இலங்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கண்கானிப்பில் கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

போர் நடக்கும் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலை மிகுந்த இழிநிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை இது விசயத்தில் அவசரமாக ஈடுபட வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்களின் அமைப்பு (UTHR) கோரி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் கொழும்பு மட்டுமின்றி, முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள போர் நிறுத்தப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பொதுமக்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் இருந்தால் அந்தப் பகுதி மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமையை கேள்விக்குட்படுத்தும் சக்தியைப் பெறுவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இலங்கையில் சிறைக் கைதிகள் ஆறுபேர் சுட்டுக் கொலை

Published on: புதன், 15 ஏப்ரல், 2009 // , , ,
இலங்கை சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆறு பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கொழும்பு அருகே உள்ள கலுதாரா சிறையிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிறைக்கம்பிகளை அறுத்து சிறையிலிருந்து தப்பிக்க 11 சிறைவாசிகள் முயன்றனர். சிறைக் காலவர்கள் அவர்களை நோக்கிச் சுட்டதில் 6 கைதிகள் கொல்லப் பட்டனர். மேலும் 4 பேர் காயமுற்றனர். ஒருவர் தனது இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார் என இலங்கை சிறைத்துறைத் தலைவர் கூறினார். தப்பிக்க முயன்ற ஒவ்வொருவர் மீதும் 4 அல்லது 5 கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வு குறித்து விசாரிக்க சிறப்பு புலணாய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு!

Published on: செவ்வாய், 3 மார்ச், 2009 // , , , , , , , ,
பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

லாஹூரில் உள்ள கடாபி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அருகில் இது நடந்துள்ளது. இதில் 8 இலங்கை வீரர்கள் காயமுற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்கர்கரா உள்பட வீரர்கள் காயமுற்றதாக இலங்கை அணியின் மேலாளர் கூறியதாக இணைய தகவல்கள் கூறுகின்றன.

இது இலங்கை அணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என பாகிஸ்தானிய தொலைக்காட்சிகள் கூறுகின்றன. இரு வீரர்களுக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், ஒருவருக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், காவல்துறையின் வாகனத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு குழுக்களுக்கிடையே நடந்த மோதல்களில் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் போன்றதே இத்தாக்குதல் எனவும், அந்தப் பகுதியில் தற்போதும் 12 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் பாகிஸ்தானிய காவல்துறை கூறியுள்ளது.

இலங்கை வீரர்களை அந்தப் பகுதியிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சற்று முன் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரெட் கிராஸ் அமைப்பைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் - இந்தியா.

யுத்தப்பகுதியினுள் அகப்பட்ட சாதாரண மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்க்க, ரெட் கிராஸ் போன்ற சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் எனவும் விடுதலை புலிகள் முன்வைத்த யுத்த நிறுத்த வாக்குறுதியை அங்கீகரிக்க இலங்கை அரசு தயாராக வேண்டும் எனவும் இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

கொல்கொத்தாவில், "தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பாதுகாப்பும் சமாதானமும்" என்ற செமினாரில் பேசும் பொழுது வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இக்கோரிக்கை விடுத்தார்.

யுத்தப்பகுதியினுள் அகப்பட்டுள்ள சாதாரண பொது மக்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்படுவதாகவும் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் மீது எவ்வித அனுதாபமும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அதே நேரம், விடுதலை புலிகளின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள கோரிய இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு புறக்கணித்ததாக செய்திகள் கூறுகின்றன. இது குறித்து இந்தியாவிலிருந்து அரசு சார்பாக எவ்வித கோரிக்கையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் புலிகள் ஆயுதத்தைக் கீழே வைத்தால் மட்டுமே பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற தங்களின் நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இலங்கை வெளியுறவு துறை செயலர் பலிதா கொஹானா கூறினார்.

'போர் நிறுத்தத்துக்குத் தயார்'- புலிகள் அறிவிப்பு

Published on: திங்கள், 23 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்போது நடந்துவரும் கடும் சண்டையால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவ்வறிவிப்பை புலிகளின் அரசியல் தொடர்பாளர் நடேசன் ஐநாவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயாராக இருந்தாலும் ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நிறுத்தத்தை இலங்கை இராணுவம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் புலிகள் ஆயுதங்களைக் கைவிடாமல் போர் நிறுத்தத்துக்கோ சமாதானப் பேச்சுகளுக்கோ இடமில்லை என்று இலங்கை இராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

மாபெரும் இன அழிப்பைச் செய்துவரும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் அமைதி காப்பது வியப்பளிப்பதாக நடேசன் கூறியுள்ள போதும், புலிகள் அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலேயே உயிரிழப்புகள் நேரிடுவதாக உதய நாணயக்காரா பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் வான் தாக்குதல்

Published on: சனி, 21 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
விடுதலைப்புலிகள் இரண்டு விமானங்கள் கொழும்பில் உள்ள அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 48 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள உள்நாட்டு வருவாய் அலுவலகம் மீது ஒரு விமானம் மோதியதாகவும் மற்றொரு விமானம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே சுட்டு வீழ்த்தப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவு 9.30 மணிக்கு நடத்தப்பட்ட இத்தாக்குதலையடுத்து கொழும்பு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விமான எதிர்ப்பு குண்டுகள் வீசப்பட்டன.

வன்னிப் பகுதியில் 108 பேர் படுகொலை

Published on: புதன், 18 பிப்ரவரி, 2009 // , , , , , , ,

வன்னி பகுதியில் இன்று அதிகாலை இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் 108க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய ஊர்களைக் கொண்ட பாதுகாப்புப் பகுதி என்று புதிதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடித்த இந்த தாக்குதலின்போது கொத்து குண்டுகள் உபயோகிக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை: கருணா இயக்கத்தில் பிளவு

Published on: செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 // , , , ,
இலங்கையில் விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சியின் பிள்ளையான் முதல் அமைச்சராக இருந்து ஆட்சி நடத்தி வருகிறார். கருணா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கருணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டு கட்சித்தலைமையிலிருந்து அறிவிக்கை அனுப்பிவைக்கப்பட்டதாம். கருணா விளக்கம் தராததால் அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த கருணா தனது ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதிபர் இராஜ பக்சேயின் சுதந்திரா கட்சியில் சேர இருப்பதாக கருணாவும் அவர்ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்

புலிகள் ஆயுதங்களைத் துறந்தால் பேச்சுவார்த்தைக்கு இந்தியா வலியுறுத்தும் - ப.சிதம்பரம்

Published on: திங்கள், 16 பிப்ரவரி, 2009 // , , , , , , , , ,
ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும், பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ஜெயவர்த்தனேயுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

அந்த ஒப்பந்தம் மட்டும் அமலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும், ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும், தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். 

ஆனால் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல், அதை விடுதலைப் புலிகள் காலில் போட்டு மிதித்ததே, இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். 

அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு. 

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. 

இந்தியாவில் நாகாலாந்து, அசாம், மணிப்பூர், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய குழுக்கள் போராடி வருகின்றன. இந்திய அரசால் அசாமில் ஆயுதம் ஏந்தி போராடும் "உல்பா' தீவிரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் நாம் பேச முடியும். 

இந்தியா மட்டுமல்ல; உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல; நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு. 

எனவே, ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. 

இலங்கையில் உடனடியாக அந்நாட்டு அரசு போரை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என விடுதலைப் புலிகளும் அறிவிக்க வேண்டும். 

அவ்வாறு புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடாத வரை போரை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது. 

இதுதான் இந்திய அரசின் கொள்கை. இந்திய அரசின் இந்தக் கொள்கை புரிந்ததால்தான் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இப்பிரச்னையில் இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. 

இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் விளக்க வேண்டும். இந்திய அரசின் இந்தக் கொள்கைக்குப் பின்னால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் திரண்டால், வெறும் 2 நாளில் இலங்கையில் போரை நிறுத்த நம்மால் முடியும். 

இலங்கையின் 40 லட்சம் தமிழர்களையும் மத்திய அரசின் இத்தகைய கொள்கையாலும், காங்கிரஸ் கட்சியாலும்தான் காப்பாற்ற முடியும். இதை தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலமெங்கும் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்

ஈழ அகதிகள் பேருந்து தாக்கப்பட்டது

Published on: சனி, 14 பிப்ரவரி, 2009 // , , , , ,
போர் நடக்கும் இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை அரசின் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயரும் போது புளியன்குளம் அருகில் பேருந்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமுற்றனர்.

விடுதலைப் புலிகள்தான் இந்த தாக்குதலைத் தொடுத்தனர் என்று இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயகரா தெரிவித்ததாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நடக்கும் பகுதிகளில் தனியார் பத்திரிகைகளுக்குத் தடைவிதித்திருப்பதால் இராணுவத்தின் இந்த அறிவிப்பை உறுதி செய்ய முடியவில்லை.

ஈழத்தில் காயமுற்ற தமிழர்கள் படகு மூலம் மீட்பு

Published on: புதன், 11 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
முல்லைத் தீவு பகுதியில் காயமுற்றுள்ள நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள் அந்தப் பகுதிகளில் போதுமானதாக இல்லாத நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நோயாளிகளைப் படகுகள் மூலம் திரிகோணமலையில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது. இதுவரை 240 பேர் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் இருக்கும் வசதிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக மருத்துவமனையைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப் படுகிறது. திங்கள் கிழமை புதுமாத்தளன் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பவுல் காஸ்டெல்லா கூறினார். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக இலங்கை இராணுவ செய்தியாளர் உதய நானயக்கரா கூறினார். 1000 பேர் கொண்ட குழு இப்படி வரும்போது புலிகள் அவர்களைத் தாக்கியதாகவும் அதில் 17 பேர் கொல்லப் பட்டதாகவும், 69 பேர் காயமுற்றிருந்தாகவும் கூறினார்.

ஆனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் பகுதி என்றறிவிக்கப் பட்ட பகுதிகள் மீதும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதால் தமிழர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்தாக அந்த தளம் கூறுகிறது.

புலிகள் 19 பேரைச் சுட்டுக் கொன்றனர்!

Published on: செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 // , , , , ,
பாதுகாப்பான இடம் நோக்கி நகரும் பொதுமக்களுக்கு எதிராக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 76 பேர் படுகாயமுற்றனர்.
புலிகளின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 25000 பேரை இராணுவம் வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்தும் கொடூர தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமுதாயத்தில் வலுத்து வரும் வேளையில், பாதுகாப்பான இடம் தேடி நகரும் தமிழர்களுக்கு எதிராக புலிகள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20/20 போராட்டம்!

இலங்கை சுற்றுபயணத்தில் உள்ள இந்திய அணி, இன்று பிரேமதாசா விளையாட்டு அரங்கில் இலங்கையுடன் 20௨0 ஆட்டம் ஆடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

172 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 16 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களில் தள்ளாடி கொண்டிருக்கின்றது.

தற்பொழுது யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் இருவரும் களத்தில் உள்ளனர்.

கைவசம் 3 விக்கட்டுகள் உள்ள நிலையில், இந்தியா வெற்றிபெற 4 ஓவர்களில் இன்னும் 40 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

இந்தியா-இலங்கை முதல் 20-20 போட்டி இன்று!

இந்திய-இலங்கை அணிகள் மோதும் முதல் 20-20 கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் இன்று இரவு ஏழுமணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.

நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய மகிழ்வில் இந்திய அணியும் கடந்த ஒருநாள் போட்டியில் வென்ற தெம்பில் இலங்கையும் களம் இறங்குகின்றன.

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஹிர்கான் இருஆட்டங்களுக்கு ஓய்வு எடுத்துவிட்டு இன்று அணிக்குத் திரும்புகிறார். ஒருநாள் போட்டி முடிந்ததும் சச்சின் நாடு திரும்பிவிட்டார். 20-20 போட்டியில் சிறப்பு பெற்ற சேவாக், தோனி, யுவராஜ், யூசுஃப் பதான், ரெய்னா ஆகியோர் இந்திய அணியை அலங்கரிக்க, இலங்கையிலோ நட்சத்திர ஆட்டக்காரர்களான சங்கக்காரா, கேப்டன் ஜெயவர்த்தனே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு சிறப்பு மட்டையாளரான ஜெயசூர்யா அணியில் உள்ளார்.

அதுபோல, பந்துவீச்சிலும் முரளிதரன், மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெறாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு பகுதியிலும் இலங்கை இராணுவம் தாக்குதல்

Published on: திங்கள், 9 பிப்ரவரி, 2009 // , , , , ,

பாதுகாப்பு பகுதிகள் என வரையறை செய்யப் பட்ட சுதந்திரபுரம், இருட்டுமாடு, உடையார்காடு, தேவிபுரம் ஆகிய இடங்களிலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 120 பொதுமக்கள் இந்தப் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று 59 பொதுமக்களும், சனிக்கிழமை 62க்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி வெள்ளிக் கிழமையன்று புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 61பேர் கொல்லப் பட்டனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை: மேலும் ஒருவர் தீக்குளிப்பு

Published on: ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,

இலங்கையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முயற்சி எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ராஜா என்பவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார். காவலர்கள் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.


சென்னையில் முத்துகுமார், பள்ளப் பட்டி அருகே ரவி, சீர்காழி ரவிச்சந்திரன் இவர்களைத் தொடர்ந்து மலேசியாவில் ராஜா என இதுவரை நான்கு பேர் தங்களைத் தாங்களே எரியூட்டிக் கொண்டு மடிந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, இலங்கைக்கு ஆறுதல் வெற்றிகள்

தோல்விகளைச் சந்தித்து வந்த ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இன்று ஆறுதல் வெற்றியடைந்துள்ளன.

சிட்னியில் நடைபெற்ற ஒருநாள்போட்டி ஒன்றில் ஆஸி. நியூசிலாந்தை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக நடந்த இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்து வென்று தொடரைக் கைப்பற்றியிருந்தது.

(சுருக்கமான ஸ்கோர்: ஆஸி: 301 ஓட்டங்கள்/50 சுற்றுகள். நியூஸி:269ஓட்டங்கள்/50சுற்றுகள்.)

கொழும்புவில் நடைபெற்ற ஆட்டமொன்றில் இலங்கை இந்தியாவை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிக்கண்டது. முன்னதாக நடந்த 4 ஆட்டங்களில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியிருந்தது.

தொடர்ந்து 9ஆட்டங்களில் வெற்றியைச் சுவைத்த இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

(சுருக்கமான ஸ்கோர்: இலங்கை:320ஓட்டங்கள்/50சுற்றுகள்
இந்தியா: 252ஓட்டங்கள்/50சுற்றுகள்.)

புலிகளின் கடற்படைத்தளம் கைப்பற்றப்பட்டது?

Published on: வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 // , , ,
விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளத்தைக் கைப்பற்றி விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

சாலையில் நடைபெற்ற சன்டையில் 3 கமாண்டர்கள் உள்பட 15 புலிகள் கொல்லப் பட்டதாகவும் இராணுவம் அறிவித்தது. புலிகள் தரப்பில் இதுவரை உறுதிப் படுத்தப் படவில்லை. இந்த வழியாகவே புலிகளுக்கு ஆயுதங்கள் வந்தனவென்றும் இது இராணுவத்தின் பிடியில் சென்றது புலிகளுக்கு பேரிழப்பு என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் தகுதி புலிகளுக்கு இன்னமும் இருப்பதாக இராணுவ செய்தியாளர் கூறியுள்ளார்.

"போரை நிறுத்துங்கள்" - இந்திய அரசு கோரிக்கை

நேற்று காலை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்திய அரசு கவலை கொண்டிருக்கிறது. இலங்கை அரசு வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

இந்தியா தனது செல்வாக்கினால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்கும் படிச் செய்தும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் கூட புலிகளிடமிருந்து பதில் இல்லை. இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்த வேண்டும்.
இரு தரப்பும் போரை நிறுத்தி விட்டுப் பேச முன்வர வேண்டும். இரு கைகளும் சேர்ந்தே ஓசை எழுப்ப முடியும். உயிர்கள் அநியாயமாக பறிபோவது மனதுக்கு வேதனையாக உள்ளது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இந்திய அரசு நிச்சயம் செய்யும்
என்று கூறியுள்ளார்.

முழு அடைப்பு : பஸ், ரெயில் இயக்கப்பட்டன; கடைகள் மூடப்பட்டன

Published on: புதன், 4 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
இலங்கையில் போதை நிறுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. வணிகர் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும் மற்ற மாவட்டங்களில் பெருமளவும் கடைகள் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பின் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை. ஒருசில அரசு பஸ்கள் ஓடியன.  3 அரசு பஸ்கள் தாக்கப் பட்டன.

தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திருத்துறைப்பூண்டியில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் உள்பட 50 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் இரண்டு அரசு பஸ்கள் கல் வீசி சேதப் படுத்தப் பட்டன.

நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ராஜபக்சேவின் உருவபொம்மையையும், இலங்கை தேசியக் கொடியையும் தீயிட்டுக் கொளுத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப் பட்டனர்.

திருமங்கலத்திலும் ராஜபக்சேவின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப் பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. குறைவான என்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப் பட்டன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!