குஜராத் கலவர வழக்கு தொடர்பாக டி.எஸ்.பி கைது!
2002 ல் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் மாநில உயர் போலீஸ் அதிகாரியான டி.எஸ்.பி கெ.ஜி. எர்தாவை எஸ்.ஐ.டி கைது செய்தது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைபடி விசாரணையை ஏற்று நடத்திய எஸ்.ஐ.டி, நேற்று டி.எஸ்.பி எர்தாவைக் கைது செய்ததாக தெரிகிறது.
குஜராத் கலவரத்திற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இக்ஸான் ஜப்ரி உட்பட 35 பேரைக் கொலை செய்யப்பட்ட குல்பர்கா சொஸைட்டி கொலை வழக்கு தொடர்பாக எர்தா கைது செய்யப்பட்டுள்ளார். கலவர வேளையில் மெஹானி நகர் காவல்நிலையத்தில் எர்தா பணியாற்றியிருந்ததாக எஸ்.ஐ.டி தலைவரும் முன்னாள் சிபிஐ டைரக்டருமான ஆர்.கெ.ராகவன் தெரிவித்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பி எர்தாவே முன்னர் இதே குல்பர்கா வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்தார். இவ்வழக்கு தொடர்பாக இவரைச் சமீபத்தில் எஸ்.ஐ.டி விசாரணை நடத்தியிருந்தது. தற்பொழுது பணியிலிருக்கும் வல்ஸத் மாவட்டத்திலிருந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குல்பர்கா வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 2000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எஸ்.ஐ.டி தாக்கல் செய்துள்ளது. 21 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். மேலும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி துவங்கிய சங்கபரிவார அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 14 பேரைக் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். முன்னாள் முனிஸிப்பல் கவுன்ஸிலர் சுனிலால் பிரஜாபதி, தற்போதைய கவுன்ஸிலர் பிபின் பட்டேல் போன்றவர்களும் தலைமறைவானவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்களாவர். குற்றப்பத்திரிக்கையில் 567 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
0 comments