Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

உ.பி. தேர்தல் கூட்டணி 11 ஆம் தேதி முடிவு: காங்கிரஸ்

Published on: வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 // , , , , ,
வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது சமாஜ்வாதி ஜனதாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பதை வரும் 11ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கூறினார்.

மாநிலத்தின் 80 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தெரிவு செய்து காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாகக் கூறிய அவர், கூட்டணி அமைப்பது உறுதியானால் குறைந்தது 30 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் கூறனார்.

பாபரீ மசூதி இடிக்கப்பட்டதற்கு தார்மீகப் பொறுப்பை கல்யாண் சிங் தாமாகவே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அவர் குறித்த கட்சியின் நிலையை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.பி.எல். ஏலம் : பிளின்டாப், பீட்டர்சன் முதலிடம்

இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்துக்கான வீரர்களுக்கு நடந்த ஏலத்தில் இங்கிலாந்தின் முன்னணி வீரர்களான ஆன்ட்ரூ பிளின்டாப் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் மிக அதிக விலை கொடுத்து வாங்கப் பட்டனர்.

கடந்த ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இதற்குத் தேவையான வீரர்களை ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற நடைமுறை உருவாக்கப் பட்டு கடந்த ஆண்டு முதல் பின்பற்றப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் டோனி அதிகபட்சமாக 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரை சென்னை சூப்பர் கிங் என்ற அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த ஆண்டுக்கான ஏலம் கோவா தலைநகர் பனாஜியில் இன்று நடைபெற்றது. இதில் பிளின்டாப் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் சுமார் 7 கோடியே 35 இலட்சம்) விலை போனார்கள். பீட்டர்சனை பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், பிளின்டாபை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விலைக்கு வாங்கி உள்ளன.

ஆஸ்திரேலிய பவுலர் ஷான் டெய்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.8 கோடி ரூபாய்க்கும், தென் ஆப்ரிக்காவின் பால் டுமினி மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.7 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து வீரர் பால் கோலிங்வுட் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ. 1.3 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.

வெஸ்ட் இண்டீசின் பிடல் எட்வர்ட்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ்), ஜெரோம் டெய்லர் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா (டெல்லி டேர்டெவில்ஸ்), ரவி போபரா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இலங்கையின் திலன் துஷாரா (சென்னை சூப்பர் கிங்ஸ்), வங்கதேசத்தின் அஷ்ரபுல் (மும்பை இந்தியன்ஸ்), மோர்டசா (கோல்கட்டா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்ட வீரர்களும் ஏலம் போனார்கள்.

50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது

50 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் உபயோகித்த 9 படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

நேற்று இந்த மீனவர்கள் பாகிஸ்தானின் கராச்சி கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இரண்டு தினங்களுக்கு முன் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பில் வந்து 20க்கும் அதிகமான பாகிஸ்தானிய மீனவர்களைக் கைது செய்து சென்றுவிட்டதாக பாகிஸ்தானிய மீனவர் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிய மீனவர்கள் அவ்வப்போது இவ்வாறு கைது செய்யப்படுவது கடந்த ஆண்டின் தொடக்கம் வரை நடந்து வந்தது. பின்னர் இருநாடுகளுக்கும் ஏற்பட்டிருந்த நல்லுறவைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டிருந்தன.

மியான்மரில் குடியரசுத்துணைத் தலைவர்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மியான்மரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் மியான்மரின் இராணுவத் தலைவர் தான் ஷியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

விவசாயம் மற்று இரயில்வே போக்குவரத்தில் மியான்மர் இந்தியாவின் உதவியைக் கோரியது. இந்திய இரயில் என்ஜின்களை வாங்குவதற்கு மியான்மர் ஆர்வம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அன்சாரி நேற்று ஜெனரல் மெளங் ஆயேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரி கூறினார்.

தா. பாண்டியன் கார் எரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சிலர் தீவைத்து எரித்துள்ளனர். அவரது கார் பெருமளவு சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் நடந்தபோது தா.பாண்டியன் தர்மபுரியில் இருந்தார். இலங்கை பிரச்சனையில் இந்திய அரசையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்தது மட்டுமின்றி இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக தா. பாண்டியன் கூறியிருந்தது நினைவு கூரத் தக்கது.

புலிகளின் கடற்படைத்தளம் கைப்பற்றப்பட்டது?

விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளத்தைக் கைப்பற்றி விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

சாலையில் நடைபெற்ற சன்டையில் 3 கமாண்டர்கள் உள்பட 15 புலிகள் கொல்லப் பட்டதாகவும் இராணுவம் அறிவித்தது. புலிகள் தரப்பில் இதுவரை உறுதிப் படுத்தப் படவில்லை. இந்த வழியாகவே புலிகளுக்கு ஆயுதங்கள் வந்தனவென்றும் இது இராணுவத்தின் பிடியில் சென்றது புலிகளுக்கு பேரிழப்பு என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் தகுதி புலிகளுக்கு இன்னமும் இருப்பதாக இராணுவ செய்தியாளர் கூறியுள்ளார்.

"போரை நிறுத்துங்கள்" - இந்திய அரசு கோரிக்கை

நேற்று காலை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்திய அரசு கவலை கொண்டிருக்கிறது. இலங்கை அரசு வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

இந்தியா தனது செல்வாக்கினால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்கும் படிச் செய்தும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இன்னும் கூட புலிகளிடமிருந்து பதில் இல்லை. இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்த வேண்டும்.
இரு தரப்பும் போரை நிறுத்தி விட்டுப் பேச முன்வர வேண்டும். இரு கைகளும் சேர்ந்தே ஓசை எழுப்ப முடியும். உயிர்கள் அநியாயமாக பறிபோவது மனதுக்கு வேதனையாக உள்ளது. எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இந்திய அரசு நிச்சயம் செய்யும்
என்று கூறியுள்ளார்.

"இலங்கை அரசு மீது வழக்கு" - தா. பாண்டியன்

பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசுக்கெதிராக இனப்படுகொலை வழக்கு தொடர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து அறிவித்துள்ளது.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு நேரில் சென்று பார்வையிடவும் அங்கு உடனடியாக போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

"இலங்கையில் போ‌ர் நிறுத்த‌ம் செ‌ய்த பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேச வேண்டும்" என்றார் அவர்.

"இலங்கைப் பிரச்சனையில் த‌மிழக அரசு இதுவரை எடு‌த்த முடிவுகள் எதுவும் பலனளிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தற்போது பதவி விலக மறுக்கின்றார். பன்னாட்டு நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரலாம் எ‌ன்று அறிவிக்கப்பட்டு‌ள்ளதா‌ல் மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் இலங்கைப் பிரச்சினை குறித்து அங்கு வழக்கு தொடரப்படும் ".

ஆயினும், 'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்கமாட்டோம். இலங்கை பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல". என்றார் தா.பா

'அழகு சாதன பொருட்கள்' - அரசின் பார்வையில்!

Published on: வியாழன், 5 பிப்ரவரி, 2009 // , , , ,
புகையிலை, பான்பராக் போன்ற போதை பொருள்களை பொது இடங்களில் உபயோகிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது தெரிந்ததே.

திரைப்படத்தில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்குமாறும் அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டிருந்தார். பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் அழகு சாதனங்களாக நடமாடும் வேதிப்பொருட்களை குறிவைத்துள்ளது.
இளம் வயதினரிடையே அழகு சாதன பொருட்கள் மீதும் மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான உள் நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களும் சந்தையில் களமிறங்கி உள்ள நிலையில் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவோருக்கு சுகாதார அமைச்சகம் 'செக்' வைத்திருக்கிறது. விளம்பரத்தில் சொல்லப்படுவது போல உண்மையிலேயே அழகு சாதனங்கள் அழகு கூட்டுகிறதா, உடல்நலத்துக்குக் கேடான வேதிப்பொருட்கள் கலக்காமல் இருக்கின்றனவா? என்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆய்வு செய்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பில் அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் சொல்லப்படுவதை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அறிவியல் ரீதியான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள், மதுவுக்கு எதிராகவும், அமைச்சர்அன்புமணியின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

கல்யாண் சிங் மன்னிப்பை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு

கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக உ.பி. முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதுமே அதற்கு பொறுப்பேற்று தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதாகவும் பாபர் மசூதி இடிப்புக்காக தற்போது மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொல்லியிருந்தார். முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பா.ஜ கவை வீழ்த்துவதற்காக முலாயம்சிங் யாதவுடன் அணி சேர்ந்து இருப்பதாகவும் கல்யாண்சிங் கூறியிருந்தார்.


முலாயம்சிங்குடன் கல்யாண்சிங் கூட்டு சேர்ந்ததை முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ள அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு கூறி இருந்தும், கல்யாண்சிங் மன்னிப்பை முஸ்லிம் தலைவர்கள் நிராகரித்து உள்ளனர்.

ஜாமியத்துல் உலமா அமைப்பு நிர்வாகி மவுலானா ஹமீது "கல்யாண்சிங்கின் இந்த மன்னிப்பு அரசியல் சந்தர்ப்ப விதம் ஆகும். இதை ஏற்க இயலாது" என்று கூறியுள்ளார். "இந்த குற்ற செயலுக்காக அவர் இறைவனிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் அவர்.

பாபர் மசூதி நடவடிக்கை குழு முன்னாள் உறுப்பினர் செய்யது சகாப்தீன் "முஸ்லிம்களைபற்றி தவறாக கணக்கு போட்டுள்ளனர்.இது ஒரு அரசியல் நாடகம்" என்று கூறியுள்ளார்.

அலிகார் முஸ்லிம் பல்கலை கழக பேராசிரியர் மொகிபுல் ஹக் கூறுகையில், இந்துத்துவாவில் இருந்து மதசார்பற்ற அணிக்கு கல்யாண்சிங் வந்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்டதற்காக முஸ்லிம்கள் ஓட்டுகள் சமாஜ்வாடிகட்சி எந்த வகையிலும் உதவாது என்றார்.

கஸபிற்கு எதிராக டி.என்.ஏ ஆதாரம்.

மும்பை தீவிரவாதத் தாக்குதல்இல் கைது செய்யப்பட்ட அஜ்மல் ஆமிர் கஸப் மற்றும் தீவிரவாதிகள் இந்தியாவிற்குக் கடல் வழியாக வர உபயோகித்த குபேர் என்ற படகிலிருந்துக் கிடைத்த ஓவர்கோட்டிலிருந்துச் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ சாம்பிள்களுக்கிடையில் ஒற்றுமையுள்ளதாக மும்பை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா அறிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் குபேர் என்றப் படகில் தான் இந்தியா வந்தனர் என்பதற்கான ஆதாரமாகவும் இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கஸப் இறந்து விட்டதாக முன்பு பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், கையில் கட்டுகளுடன் கைவிலங்கு அணியப்பட்ட நிலையில் கஸப் இருக்கும் புதிய புகைப்படங்களைக் கடந்த தினங்களில் தொலைகாட்சிகள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோலோகாஸ்டை மறுத்த பிஷப் கருத்தை திரும்பப் பெற உத்தரவு


ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகள் நடக்கவே இல்லை என்று கூறிவந்த பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட்சன் என்ற பிஷப் உட்பட 4 பிஷப்கள் 1988ஆம் ஆண்டு கிருத்தவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். கடந்த மாத இறுதியில் இந்த நான்கு பிஷப்புகளையும் மீண்டும் கிருத்தவ திருச்சபையில் இணைத்து போப் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ரிச்சர்ட் ஹோலோகாஸ்ட் நடந்தது உண்மை என்பதை ஒப்புக்கொண்டு அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கத்தோலிக்க தலைமையகமான வாட்டிகன் நேற்று உத்தரவிட்டுள்ளது. நான்கு பிஷப்புகளும் ஹோலகாஸ்டை மறுப்பவர்கள் என்பது போப்புக்குத் தெரியாமல் இருந்தது என்று நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தப் பிரச்சனையை வாட்டிகன் தவறாக அனுகிவிட்டதாக மூத்த கர்டினல் கூறியதாக பி.பிசி. கூறுகிறது. நால்வரையம் மீண்டும் திருச்சபையுடன் இணைக்க போப் உத்தரவிட்டதும் பல்வேறு யூத அமைப்புகளும் போப்பின் செயலைக் கண்டித்திருந்தன.

ரன்வீர் சேனாவுக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டில் இரு பத்திரிகையளார்கள் கைது

Published on: புதன், 4 பிப்ரவரி, 2009 // , , , , ,
இந்து தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக இரு பத்திரிகையாளர்கள் உள்பட நால்வரை கைது செய்துள்ளதாக நேபாள காவல்துறை இன்று அறிவித்தது.

ரிஷி தமலா மற்றும் பிரேந்திர குமார் மகாட்டோ என்ற இந்த பத்திரிகையாளர்கள் ஆயுதம் ஏந்திய இந்து தீவிரவாத அமைப்பான ரன்வீர் சேனாவுக்கு உதவி செய்ததாக காவல்துறை கூறுகிறது. ரிஷி தமலா நேபாள நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். பிரேந்திர குமார் தனியார் வானொலி செய்தியாளர் ஆவார்.

கடந்த ஆண்டு காட்மண்டுவில் நடந்த மூன்று குண்டு வெடிப்புகளுக்கு ரன்வீர் சேனா பொறுப்பேற்றுக் கொண்டது. அதற்கு முன்வரை இத்தகைய அமைப்பு குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்த அமைப்பு கடந்த ஆண்டு திரிபுவன் பன்னாட்டு விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில், காட்மண்டு மால் என்ற வணிக வளாகம் முன் மற்றும் தர்பார் உயர்நிலைப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குமார் கூறினார்.

கைது செய்யப்பட்ட மற்ற இருவர் ரன்வீர் சேனாவின் உறுப்பினர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆறு வயது சிறுமியைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்கு.


உத்தரபிரதேசத்திலுள்ள இட்டாவ எனும் இடத்தில் திருடியதாக அழைத்து வரப்பட்ட ஆறு வயது தலித் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கிய இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சப் இன்ஸ்பெக்டர் சியாம்லால் யாதவ் பணி நீக்கம் செய்யபட்டார். மற்றொருவரான சந்திரபான் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிறுமியிடம் எஸ்.பி மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தையில் வைத்து தனது பையிலிருந்து 280 ரூபாயைத் திருடியதாக கோமள் என்ற சிறுமியை அஞ்சு கதாரிய என்ற பெண் ஜஸ்வந்த்பூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்த வேளையில், காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் சிறுமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு: கல்யாண்சிங் மன்னிப்பு கேட்டார்!

பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் வருத்தம் கொள்வதாகவும் செய்து போன தவறுக்காக மன்னிப்பு கோருவதாகவும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் கூறினார்.

பாஜகவிலிருந்து வெளியேறிய கல்யாண்சிங் கடந்தச் சில நாட்களுக்கு முன்னர் முலாயம் சிங்கின் கட்சியில் இணைந்திருந்தார். முலாயம் சிங்குடன் இணைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கல்யாண்சிங்கிடமிருந்து இவ்வறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"பாஜகவை அழிப்பதே இனி எனது இலட்சியம்" எனவும் கல்யாண்சிங் கூறினார். "பாபரி மஸ்ஜித் என்னுடைய ஆட்சி காலத்தில் தகர்க்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களை அகற்றி நிறுத்துவதற்கோ அவர்களை எதிரியாக கருதுவதற்கோ நான் தயாராகவில்லை" என அவர் மேலும் கூறினார். பாஜகவை விட்டு விலகியதை ஆதரித்து அநேக முஸ்லிம் நண்பர்கள் தனக்குக் கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.

முழு அடைப்பு : பஸ், ரெயில் இயக்கப்பட்டன; கடைகள் மூடப்பட்டன

இலங்கையில் போதை நிறுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. வணிகர் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும் மற்ற மாவட்டங்களில் பெருமளவும் கடைகள் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பின் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை. ஒருசில அரசு பஸ்கள் ஓடியன.  3 அரசு பஸ்கள் தாக்கப் பட்டன.

தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திருத்துறைப்பூண்டியில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் உள்பட 50 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் இரண்டு அரசு பஸ்கள் கல் வீசி சேதப் படுத்தப் பட்டன.

நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ராஜபக்சேவின் உருவபொம்மையையும், இலங்கை தேசியக் கொடியையும் தீயிட்டுக் கொளுத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப் பட்டனர்.

திருமங்கலத்திலும் ராஜபக்சேவின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப் பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. குறைவான என்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப் பட்டன.

கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும்


கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும் என்று கிர்கிஸ்தான் அதிபர் குர்மன்பக் பகியேவ் செவ்வாய் கிழழை அறிவித்தார்.

செவ்வாய் கிழமை பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் கைபர் வழியில் உள்ள பாலத்தை தாலிபான் ஆதரவாளர்கள் வெடிவைத்து தகர்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பை கிர்கிஸ்தான் அதிபர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அறிவித்திருப்பதால் ரஷ்யாவின் தூண்டுதலினாலேயே இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கிர்கிஸ்தான் ரஷ்யாவிடம் பெற்றிருந்த  180 மில்லியன் டாலர் கடன் தொகையை ரத்து செய்துவிட்டதாகவும், மேலும் 150 மில்லியன் டாலர் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்யா கிர்கிஸ்தானுக்கு கடனாக வழங்க சம்மதித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 30 ஆயிரம் படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஒபமாவிற்கு ரஷ்யா கொடுத்திருக்கும் முதல் நெருக்கடி என்று சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவ தளமான மனஸ் என்ற இந்த தளத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரான்சைச் சேர்ந்த சுமார் 1000 இராணுவத்தினர் பணியில் உள்ளனர்.

புலிகள் சரணடைய வேண்டும் என சர்வதேச குழு வலியுறுத்தல்!

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள வேளையில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் குழு புலிகளை சரணடையும்படி வலியுறுத்தியுள்ளது. இந்தக் குழுவில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

புலிகளுக்கு மிகக்குறைவான கால அவகாசமே இருக்கிறது என்பதால் இரு தரப்பிலும் ஏற்படும் வீணான உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்காக புலிகள் சரணடைவதே சிறந்தது என அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கை அரசாங்கத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை புலிகள் தரப்பு விரைவில் தொடங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இந்த அறிக்கைக்கு புலிகள் தரப்பிலிருந்து இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

அஹமதாபாத் தொடர்குண்டு வெடிப்பு: மேலும் 5 குற்றப் பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு 57 பேரை பலிவாங்கிய அஹமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 5 குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்தது.

சர்கேஜ், மணிநகர் (2 வழக்குகள்), கலுப்பூர், வாத்வா ஆகிய பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக குற்றப் பிரிவு காவல்துறை இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கடந்த ஆண்டு ஜூலை 26 அன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் 21 குண்டுகள் வெடித்தன. குற்றப் பிரிவு ஒவ்வொரு குண்டு வெடிப்பையும் தனி வழக்குகளாகப் பதிவு செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறினர்.

சர்கேஜ் குண்டு வெடிப்பில் 54 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 47 பேர் தலைமறைவாக உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மணி நகர் குண்டு வெடிப்பில் 44 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 48 பேர் தலைமறைவாக உள்ளனர். வாத்வா மற்றும் கலுப்பூர் குண்டு வெடிப்புகளில் 43 பேர் குற்றவாளிகள் எனவும் 45 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இக்குற்றப் பத்திரிகை ஒவ்வொன்றும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் சிமி அமைப்பினர்தான் தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கூறுகிறது.

அத்வானியின் நெருங்கிய உதவியாளருக்கு எதிராக கிரிமினல் வழக்கு!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் பொழுது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் அளித்ததாகக் கூறி பாஜக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் கோடி ரூபாய்களைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக பாஜகவின் பிரதமர் வேட்பாளரான அத்வானியின் மிக நெருங்கிய உதவியாளரான சுதீந்திரா குல்கர்ணிக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் படி டில்லி காவல்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி நடந்தது தொடர்பாக சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி பாராளுமன்ற சமிதியை நியமித்திருந்தார். இச்சமிதி வழங்கிய அறிக்கையினை டில்லி காவல்துறைக்கு வழங்கிய மத்திய அரசு, குல்கர்ணி உட்பட மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தர்விட்டது. மேலும், கடந்த கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாளில் பாஜக தலைமையகத்தில் இருந்து திருட்டுப் போன இரண்டு கோடி ரூபாய்க்கும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் கொண்டுவந்த பணத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பதைக் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பாஜக அலுவலகத்தில் பணம் திருட்டுப் போன அறையைப் பரிசோதிக்க அனுமதி தர வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் டில்லி காவல்துறை ஆணையர் அனுமதி கோரியுள்ளார். இத்திருட்டு சம்பவம் தொடர்பாக பாஜக காவல்துறையில் புகார் எதுவும் அளிக்காதது குறிப்பிடத் தக்கது.

பெங்களூரூவில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட தீவிரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்று கர்நாடக மாநிலத்தலைநகர் பெங்களூரூவில் அரண்மனை மைதானத்தில் நடந்தேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜமியியத் யே உலமாயே ஹிந்த் என்ற முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஹிந்து, இஸ்லாமிய அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

தீவிரவாதம் அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்க்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் மக்களிடம் பெறப்பட்டது.

ஜம்யியத்துல் உலமா யே ஹிந்த் தலைவர் சையத் முஹம்மத் உஸ்மான், பாராளுமன்ற உறுப்பினர் மெளலானா மஹ்மூது மதனி, ஆரிய சமாஜின் சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், ஹிந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ்பட் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சார்பற்று செயல்படுவதற்கும், அண்மைக்காலத்தில் புதிதாக அறிய வந்துள்ள தீவிரவாதங்களின் கைவரிசைகள் குறித்த நேர்மையான விசாரிப்புக்கும் இம்மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

இராக்: அமெரிக்க இராணுவம் திரும்பப் பெறப்படும்.

Published on: செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,
கடந்த 2003-ம் ஆண்டு இராக் மீது தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது முதல் அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இப்போது அந்த நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். அங்கு இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கர்கள் உட்பட பல நாட்டினரும் கோரி வந்தனர். இதற்கு முந்தைய ஜனாதிபதி புஷ் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா, மாதம் ஒன்று அல்லது இரண்டு படைப்பிரிவு என்ற அடிப்படையில் 16 மாதத்துக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க இராணுவத்தை திரும்பப் பெறுவோம் என்று உறுதி மொழி கொடுத்திருந்தார்.

என்.பி.சி. டி.வி சேனலுக்கு அளித்த சமீப பேட்டியில், ஒரு ஆண்டு காலத்துக்குள் பெரும் அளவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் ஈராக்கியர்கள் மீது மேலும் அதிகமான பொறுப்புகளை சுமத்தக்கூடிய நிலையில் தாங்கள் இருப்பதாகவும் ஒபாமா கூறி உள்ளார்.

அதே நேரம், ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்திற்கும் அதிகப்படுத்தப்படுத்தலாமா என்று ஒபாமா நிர்வாகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் வாஜபேயி.

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி இன்று இரவு அகில இந்திய விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் இதயக்கோளாறு காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு 10.00 மணிக்கு ஐசியூ என்று சொல்லப்படும் இண்டென்சிவ் கேர் யூனிட்டில் வாஜ்பாய் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக ஏஐஎம்எஸ் கண்காணிப்பாளர் மருத்துவர் D K ஷர்மா தெரிவித்துள்ளார்.

84 வயதாகும் வாஜ்பேயி உடன் அவருடைய பிரத்யேக மருத்துவர் ரந்தீப் குலேரியா மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டுள்ளார்.

பா ஜ க தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அரசியல் வானில்: மனிதநேய மக்கள் கட்சி பிப்.7ல் உதயம்.

தேர்தல் அரசியலில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தன் ஆதரவில் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை பிப்ரவரி 7ம் தேதி துவக்குகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.

இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,

தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட இருக்கிறது. துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமுமுக சமூக சேவை அமைப்பாக தொடர்ந்து செயல்படும்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.

ராமநாதபுரம், வேலூர், நெல்லை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவற்றில் எதாவது இரண்டு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்
என்றார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்.

இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன கிளை அலுவலகம் திருச்சி நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் செயற்பட்டு வருகிறது.

நேற்றுமாலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்ற 10க்கும் மேற்பட்ட ஆட்கள் இலங்கை அரசுக்கும், ராணுவத்திற்கும் எதிராக கோஷமிட்டபடி தாக்குதலில் இறங்கினர்.

அலுவலக கண்ணாடி கதவுகள், விளம்பர போர்டுகளை தாக்கி சேதப்படுத்தினர். கதவுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அலுவலகத்திற்குள் பணியில் இருந்த இரு ஊழியர்களும் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் சென்று விட்டனர்.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம்: நாளைய முழுஅடைப்புக்கு தடை இல்லை.

நாளை தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த முழுஅடைப்பு என்று கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் சரவணகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நாளை சில அரசியல் கட்சிகள் ஆதரவுடன் `முழுஅடைப்பு' நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை உச்சநீதிமன்றம் சட்ட விரோதம் என அறிவித்து பந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனதுமனுவில் கோரியிருந்தார்.

இன்று பிற்பகல் இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் வேலை நிறுத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.

நீதிபதிகள் அளித்த உத்தரவில், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்.அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை உள்ளதுஎன்று தெரிவித்துள்ளனர்.

இம்மனு மீதான அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடரை இந்தியா கைப்பற்றியது.

இலங்கையுடனான ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் அடங்கிய தொடரில், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது.

முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற உற்சாகத்தில் களம் இறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் கவுதம் கம்பீர் மற்றும் தெண்டுல்கர் இருவரின் முக்கிய விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்து சரிவைச் சந்தித்த போதிலும் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியா 364 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் இணைந்து 214 ரன்கள் குவித்தனர். வீரேந்திர சேவாக் 116 ரன்களும் யுவராஜ் சிங் 117 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணிக்கு எந்த ஒரு கட்டத்திலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை வழங்காமல் இந்தியா ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில் 147 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய ஏற்றுமதித் துறையில் 15 லட்சம் பேர் வேலை இழக்க நேரலாம்!

'இந்தியாவில் ஏற்றுமதி சார்ந்த துறைகளில் பணி புரிவோரில் சுமார் 15 லட்சம் வேலை இழக்க நேரலாம்' என மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குவதால் அந்நாடுகளிலிருந்து வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதித் துறை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த பிள்ளை, இதே நிலை தொடர்ந்தால் மார்ச் மாதத்திற்குள் மேலும் 5 லட்சம் ஊழியர்கள் வேலையை இழக்கக் கூடும் என்றும் கூறினார்.

ஜவுளி மற்றும் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப் படும் என்று அவற்றில் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலும் உருவாகலாம் என்று அவர் அப்பேட்டியில் தெரிவித்தார்.

மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல்


முல்லைத் தீவு அருகே உள்ள புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்றும் இதுவரை மருத்துவ மனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 12 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 30க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

சுமார் 2,50,000 தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக சேவை நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் அப்பகுதியில் 1,20,000 பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.

மக்கள் பாதுகாப்பான பகுதிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான பகுதி என்று எதுவும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தியாளர் கர்லா ஹத்தாத் தெரிவித்தார்.

சொந்த தயாரிப்பில் இரான் செயற்கை கோள் அனுப்பியது

இரான் முதன் முறையாக தன்னுடைய நாட்டில் தயாரான செயற்கைக் கோளை இன்று காலை விண்ணில் ஏவியது. ஒமிட் (நம்பிக்கை) என்று பெயரிடப் பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் சபீர் 2 என்ற உள்நாட்டில் தயாரான ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இரானில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.

2005ஆம் ஆண்டு இரானின் செயற்கைக் கோளை ரஷ்யா விண்ணில் ஏவியது. பின்னர் சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து 2008 ஆம் ஆண்டு செயற்கைக் கோளை ஏவியிருக்கிறது.

500 ரூபாய்க்கு மடிக்கணினி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மடிக்கணினி இன்று திருப்பதியில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதன் விலை 10 அமெரிக்க டாலர்கள் (சுமார் 500 ரூபாய்) என்று கூறப்படுகிறது.

கணினியைப் பயன்படுத்துவதில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் களைவதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றாய் இக்கணினி அமையும்.

VIT (Vellore Institute of Technology), சென்னை ஐ.ஐ.டி. ஆகிய நிறுவனங்கள் இணைந்து இக்கணினியை வடிவமைத்துள்ளன. கணினியின் வடிவமைப்பு குறித்து விரிவான தகவல்கள் இல்லை எனினும் 2 ஜி.பி மெமோரி, வைஃபி, ஈதர்நெட் போன்ற வசதிகளுடன் இக்கணினி அமையும் என்று கூறப்படுகிறது.

எடியூரப்பா மனைவி மரணம் குறித்து மறு விசாரணை!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் மனைவி மைத்ரா தேவி கடந்த 2004-ம் ஆண்டு ஷிமோகா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் தண்ணீர் தொட்டி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி அப்போது காவல்துறையினர் விசாரணை செய்து வழக்கையும் மூடி விட்டனர்.

ஷிமோகாவைச் சேர்ந்த ஆர் சேஷாத்ரி என்ற வழக்குரைஞர், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மறு விசாரணை செய்யும்படி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்குரைஞர் சேஷாத்ரி, இந்த மரணம் ஒரு கொலை என்றும் உண்மைகள் மறைக்கப்பட்டு சாட்சியங்கள் திரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறார். எடியூரப்பா, அவரது மகள், இரண்டு மகன்கள், பணியாளர்கள் அனைவரும் காவல் துறையினருக்குத் தவறான தகவல்களைத் தந்து திசை திருப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கிறார்.

முதல்வர் எடியூரப்பா இது பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

குஜராத் அமைச்சர் தலைமறைவு?

குஜராத்தில் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவரும் மற்றும் ஒரு மருத்துவரும் தலைமறைவாக இருப்பதாக கோத்ரா கலவரம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலணாய்வுக் குழு அறிவித்துள்ளது.

மாயாபின் கோட்னானி என்ற அந்த அமைச்சர் குஜராத் மாநில பெண்கள் முன்னேற்றம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். ஜெய்தீப் பட்டேல் என்பவர் விசுவ இந்து பரிசத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த இருவருக்கும் சிறப்பு புலணாய்வுக் குழு விசாரணைக்கு வருமாறு அறிவிக்கை அனுப்பியது. அந்த அறிவிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் இருவரும் கைது செய்யப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மாயாபின்னுக்கு ஜனவரி 29 மற்றும் 31 ஆம் தேதி அறிவிக்கை அனுப்பினோம். அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே அவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கிறோம். அவர் கைது செய்யப்படக் கூடும் என்று சிறப்புப் புலணாய்வுக் குழு உறுப்பினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி விமானக் கடத்தல் முயற்சி!

சென்ற ஞாயிறு மாலை கோவாவிலிருந்து புதுடில்லி வந்துக் கொண்டிருந்த விமானத்தை ஒரு கும்பல் கடத்த முயல்வதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

5.29 மணியளவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டு ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. விமானத்தைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தி வைக்கப் பட்டனர். பிறகு பயணிகளை பத்திரமாக வெளியேற்ற முடிவு செய்யப் பட்டது. 8:30 மணியளவில் கமாண்டோக்களின் பாதுகாப்போடு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜிதேந்திரா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமீர், ஹர்ப்ரீத் என்ற மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப் பட்டனர்.

பிரிட்டனில் சீன அதிபர் மீது காலணி வீசப்பட்டது!

சீன அதிபர் வென் ஜியாபோவின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் ஒரு அங்கமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது பார்வையாளர்களுள் ஒருவர் அதிபரை நோக்கி தம் காலணியை கழற்றி வீசினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

சீன அதிபர் உலகமயமாதலில் சீனாவின் பங்கு பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தபோது இச்சமபவம் நிகழ்ந்தது. ஐரோப்பியரைப் போல தோற்றம் கொண்ட ஒரு நபர் எழுந்து, 'இந்தச் சர்வாதிகாரி சொல்லும் பொய்களை உங்களால் எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது? இதை நீங்கள் எதிர்த்துக் கேட்க வேண்டாமா?' என பார்வையாளர்களை நோக்கி கூச்சலிட்ட வண்ணம் தனது காலணியைக் கழற்றி அதிபரை நோக்கி வீசினார். அது குறி தவறி மேடையில் அதிபரின் ஒரு கஜ தூரத்தில் விழுந்தது.

கேம்பிரிட்ஜ் நகர காவல்துறையினர் 27 வயதான அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிறுநீரக தானம் உடல்நலத்தைப் பாதிக்காது.

சிறுநீரக தானம் உடல்நலனைப் பாதிக்காது என்று மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு சிறுநீரகத்தை தானமளித்தவர்களும் இரு சிறுநீரகம் உடைய மற்றவர்களைப் போலவே வாழ்வைத் தொடரலாம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சிறுநீரகக்கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் சிறுநீரகதானத்தின் காரணமாக அதிகப்படுவதில்லை என்றும், வயது, பாலினம், பரம்பரை உள்ளிட்ட நோய்வாய்க்காரணிகளில் சிறுநீரகத்தானம் செய்தவர், செய்யாதவர் என்ற பாகுபாடு பாரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகவலை பல்கலை.மருத்துவர் ஹசன் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார். "60 விழுக்காடு சிறுநீரக தானமளித்தவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய நிலைகள் சாதாரண பொதுமக்களின் நிலைகளை விடவும் தாழ்ந்துவிடவில்லை" மற்றவர்களைப் போன்ற இயல்பான வாழ்வை தானமளித்தவர்கள் தொடர்வதில் எந்தத் தடையுமில்லை" - என்கிறார் மருத்துவர் இப்ராஹிம்.

நாளை கூடுகிறது தி மு க செயற்குழு.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளநிலையில் தி மு க செயற்குழு நாளை கூடுகிறது.

உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் நாளை கூடும் திமுக செயற்குழுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், நாளைய கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என தெரிகிறது.

நாளை இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என ஊடக உலகில் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்யாணத்தை நிறுத்திய கலெக்டர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது கடம்பர அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு 16 வயது. திப்பம்பட்டி அரசினர் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும், பேதாதம்பட்டியைச் சேர்ந்த துரைவளவன் என்பவருக்கும் நேற்று பேதாதம்பட்டி மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அமுதாவுக்கு தகவல் கிடைத்து. அரசின் சட்டவிதிகளுட்பட்டு மணப்பெண்ணின் வயது ஆகவில்லை என்ற குற்றச்சாட்டினை
யடுத்து மாவட்ட கலெக்டர் அமுதா, இளம் பெண் வெண்ணிலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த அரூர் டிஎஸ்பி மோகனுக்கு உத்தரவிட்டார்.

இதன் பேரில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரிடம் பேசிய போலீசார் வெண்ணிலாவின் பால்ய திருமணம் சட்ட விரோதமானது எனக் கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரை நிராகரிப்பு

குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை மத்திய அரசு இன்று நிராகரித்தது.

இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரைக் கடிதம் எழுதியிருந்தார். தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு மாதங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதே அளவு நாட்களும் மீதம் உள்ள நிலையில் கோபால்சாமியின் இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இப்பரிந்துரைக் கடிதத்தை அரசு இன்று நிராகரித்துள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக கருத்து கூறிய சட்ட அமைச்சர் பரத்வாஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பாக அரசின் கொள்கை இருப்பதாகவும், அந்த கொள்கை தொடரும் என்றும் கூறினார். இந்த சர்ச்சை துரதிருஷ்டவசமானது என்று கூறிய அவர் சாவ்லாவின் பணியை இது பாதிக்காது என்றும் கூறினார். கோபால் சாமி தேர்தல் ஆணையாளராகப் பணிபுரிய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர் போன்றல்ல என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையராக டி.என் சேஷன் இருந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து ஆணையம் சீரமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையராக ஒருவர் என்ற நிலை மாறி மூன்று தேர்தல் ஆணையர்களும் அவர்களில் ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையர் என்றும் மாற்றியமைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

பாண்டிச்சேரியிலும் கல்லூரிகள் மூடல்

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இந்திய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் நோக்கில் நேற்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகள் அனைத்தும் காலவரையறையின்றி மூட அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இன்று முதல் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை காலவரையறையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை புதுச்சேரி கல்லூரி கல்வி இயக்குநர் ஜெயந்த குமார் தெரிவித்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருப்போரையும் விடுதியை விட்டுப் போகச் சொல்லப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு?

Published on: ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009 // , , ,
கோவாவிலிருந்து டில்லியை நோக்கிப் புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தைச் சிலர் கடத்த முயல்கின்றனர் என்றச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து விமானி கட்டுப்பாட்டு அறைக்குக் கொடுத்தத் தகவலின் பேரில் உடனடியாக தரை இறக்கப்பட்டது.

விமானத்தைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கென்யா: எண்ணெய் லாரி வெடித்து 111 பேர் பலி!

கென்யாவில் கவிழ்ந்து விழுந்த எண்ணெய் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையோரமாக கவிழ்ந்து விழுந்துக் கிடந்த லாரியிலிருந்து வெளியே ஒழுகிக் கொண்டிருந்த எண்ணெயை அப்பகுதி மக்கள் போட்டியிட்டுச் சேகரித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக எண்ணெய் லாரி வெடித்துச் சிதறியதில் சுற்றி நின்றிருந்த மக்களில் சுமார் 111 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

தாலிபான் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை

அமெரிக்காவுக்கு சாதகமான ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானை உருவாக்க முடியாது என அமெரிக்காவின் முன்னணி உளவு மற்றும் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு அமைவது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆப்கானிஸ்தான் குறித்த ஒபாமாவின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

அமெரிக்க 5 இலட்சம் இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தாலும் அமெரிக்காவுக்கு சாதகமான ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானை உருவாக்க முடியாது என்றும் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதெனவும் அது கூறுகிறது.

எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளைத் திரும்ப் பெறுவதுடன் அல்கைதாவுக்கு எதிராக உளவுத்துறையை முடுக்கிவிட வேண்டும் என்றும் அது கூறுகிறது.

கூகுள் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சர்ச் இஞ்சின் ஜாம்பவனான கூகுள் தளத்தில் இன்று தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் மூலம் தேடிய சர்ச் ரிஸல்ட் பக்கத்தில் பயனர் எவருக்கும் பயன் இல்லாத வகையில் அனைத்துத் தளங்களும் ஆபத்தானவை என்ற அறிவிப்பை வெளியிட்டது கூகுள். இதனால் எந்த ஒரு பயனரும் தனது தேடுதல் மூலம் தளங்களுக்குச் செல்ல இயலவில்லை. இந்த தொழில் நுட்பக் கோளாறு 40 நிமிடங்கள் வரை நீடித்தது.

இணைய உலகின் மிகப் புகழ் பெற்ற கூகுள் தளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான இந்த தொழில்நுட்பக் கோளாறில் கூகுள்.காம் தளம் கூட ஆபத்தானது என்ற அறிக்கையிலிருந்து தப்பவில்லை. (படம்)

இத் தவறு ஏற்பட்டது எப்படி?

பிரவுஸிங் செய்பவர்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் போன்ற மென்பொருளைக் கொண்டு ஆபத்தினை விளைவிக்கும் தளங்களைக் கண்டறிந்து தகவல் கொடுக்க இது நாள் வரை கூகுள், stopbadware.org என்ற தளத்தின் உதவியை நாடி வந்தது.

அந்த தளம் தந்த தகவலின் அடிப்படையிலேயே இதுநாள் வரை பயனர்களுக்கு இத்தகவலை அளித்து வந்தது.

இன்று காலை இந்தத் தகவல் களஞ்சியத்தை கூகுள் தளத்தில் அப்டேட் செய்கையில் தவறுதலாக உலகின் அனைத்து இணையத் தளங்களும் ஆபத்தானவை என்ற தகவல் பதியப் பட்டு விட்டது.

கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவரான மரிஸா மேயர், இந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு இது மனித உழைப்பில் தகவலை உள்ளீடு செய்வதால் ஏற்பட்டக் கோளாறு என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளை மூட அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளை காலவரையறை இன்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலியினருக்கும் இராணுவத்தினருக்கும் கடுமையான சன்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவித்தமிழர்களும் பலியாகி வருகின்றனர். இலங்கையில் உடனடியாக சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ அரசு மற்றும் அரசியில் கட்சிகள் கோரியும் இதுவரை சன்டை நிறுத்தம் ஏற்படவில்லை. இந்திய அரசு மெளனம் காத்து வருகிறது. 

இதனால் தமிழக மக்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் மத்திய அரசுக்கு எதிராகப் போராடத் துவங்கியுள்ளனர். மூன்று தினங்களுக்கு முன் முத்துகுமார் என்ற ஊடகவியலாளர் தன்னை எரியூட்டிக் கொண்டார். வழக்கறிஞர்கள் சங்கம், வணிகர் சங்கம், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என போராட்டம் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது.

இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் வரும் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மறு தேதி குறிப்பிடும்வரை மூடிவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையரை நீக்க தலைமைத் தேர்தல் ஆணையர் பரிநதுரை

தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர்  கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.

நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அவர் அக்கட்சிக்கு சார்பாக நடந்து கொள்கிறார் என்றும் பாரதீய ஜனதா கட்சி ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரும் இக்கோரிக்கையை வைத்திருப்பதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கோபால் சாமியின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவருக்குப் பின் நவீன் சாவ்லாதான் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பார்.  பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்பரிந்துரையால் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் அரசியல் வெளிப்பட்டுள்ளதாகக் கருத முடிகிறது.

தலைமைத் தேர்தல் அதிகாரியின் இப்பரிந்துரையை ஏற்று நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் டி. ராஜா, இப்பரிந்துரை அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றம் சுமத்தினார்.

நடிகர் நாகேஷ் காலமானார்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

அண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.

தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் பூர்வீகம் மைசூர். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். கர்நாடக மாநிலம் அரிசிக்கரேயில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தவர். தாயார் ருக்மணி அம்மாள். ஆரம்பகாலக்கட்டத்தில் இவர்கள் தமிழகத்தில், தாராபுரத்தில் வசித்து வந்தனர். நாகேஷின் முழுப்பெயர் நாகேஸ்வரன்.

'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆசியாவின் தூய்மை கிராமம் மெளலினாங்


மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மெளலினாங் என்ற கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

"டிஸ்கவரி இந்தியா" எனும் புகழ்பெற்ற சுற்றுலா இதழில் பணிபுரியும் இத்துறை வல்லுநர்களால் இந்த கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அழகிய இந்த கிராமத்து மக்கள் 
தங்கள் கிராமத்தை தூய்மை படுத்துதல், சாலைகளில் செடிகளை வளர்த்து அதனைப் பராமரித்து வருதல் என்று அரசை எதிர்பார்க்காமல் தாங்களாகவே செய்து கொள்கின்றனர். சிறு குழந்தைகள் கூட இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். குழந்தைகள் குப்பைகளை சாலைகளில் போடுவது இல்லை.

மூங்கிலால் பிண்ணப்பட்ட கூடைகளை கிராமத்தின் முக்கிய இடங்களில் வைத்து அதில் மட்டுமே குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.

நமது கிராமத்தையும் அழகிய கிராமமாக ஆக்க முயல்வோம்.

ஹரியானா முன்னாள் முதல்வரின் மனைவி கைது

ஹரியாணா முன்னாள் முதல்வரின் இரண்டாவது மனைவி தன்னுடைய கணவர் கடத்தப்பட்டதாக புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை முன்னாள் முதல்வர் மறுத்ததும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தான் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் சக்திவாய்ந்த தூக்க மாத்திரை உட்கொண்டதால்தான் இந்நிலை ஏற்பட்டதாகவும் கூறிய பிஜா, சாந்து முகம்மது பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார். இல்லையெனில் தன்னைப் பார்க்க மருத்துவமனை வந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

ஹரியாணாவின் முன்னாள் முதல்வர் சந்தர் மோகன் என்ற சாந்து முகம்மது அனுராதா பாலி என்ற பிஜாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காகவே இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் மதத்துக்கு மாறினர் என்பது குறிப்பிட்த் தக்கது.

பா.ஜ.க.வை ஆதரிக்க சிவ சேனை நிபந்தனை

பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலை தெளிவாக அறிவிக்கப் பட்டதால்தான் அத்வாணி பிரமாராக சிவசேனை ஆதரவளிக்கும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் மராட்டியர் அதிகமாக வாழும் பகுதியாகும். நீண்ட நாட்களாகவே கர்நாடகாவுக்கும் மகாரஷ்டிராவுக்கும் இது குறித்து பிரச்சனை இருந்து வருகிறது. பெல்காம் மாவட்டத்தை இழக்க விரும்பாத கர்நாடகா பெல்காமை தனது இரண்டாவது தலைநகரம் என்றறிவித்து அங்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராகத் தங்களது ஆதரவு வேண்டுமேனில் பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனை நிபந்தனை விதித்துள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவர்களில் ஒருவருமான மனோகர் ஜோஷி இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மற்றும் அத்வானி ஆகியோரை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்தாலும் பெல்காம் பகுதியில் உள்ள மராட்டி மொழியினர் மிகவும் கஷ்டப் படுகின்றனர் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் பயணம்: கட்டணங்கள் குறைகின்றன:

Published on: வெள்ளி, 30 ஜனவரி, 2009 // ,
விமான எரிபொருள் விலைகள் சரிந்து வருவதையொட்டி, ஏர் இந்தியா தனது பயணக் கட்டணங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

அபெக்ஸ் -21 (APEX - 21) என்ற திட்டத்தின் கீழ், உள்நாட்டு ப் பயணத்தில் இப்போதும் அடிப்படைக் கட்டணம் ரூ.99/= மட்டுமே என்ற போதிலும், அரசுவரியாக ரூ.225/=ம், எரிபொருள் கூடுதல் கட்டணமாக ரூ.2700/= வசூலிக்கப்படுகிறது.

இந்த விலைக்குறைவு பிப்ரவரி 28 வரை மட்டுமே என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பொருளாதார வீழ்ச்சியையும் மீறி விமான நிறுவனங்களிடையேயான போட்டியும் இவ்விலைக்குறைப்புக்கு காரணம் என்றும், பகரமாக தன் அடிப்படை ச்செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

திரும்பிவிடும் காசோலைகள் குறித்து உயர்நீதிமன்றம்.

வணிக நடவடிக்கைகளில் வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பிவிடும் காசோலைகள் குறித்த வழக்குகளில் மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் "லோக் அதாலத்" களே தீர்ப்பளிக்கலாம் என்றும் அவையே இறுதித் தீர்ப்பாகக் கருதப்படலாம் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றங்களில் காசோலை திரும்பல் வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கி இருப்பதை இம்முடிவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உயர்நீதிமன்றங்களில் இவ்வழக்குகளுக்காக வாதிகள் செலுத்தவேண்டிய கட்டண அளவு, காசோலைத் தொகைக்கேற்ப ரூ.200 லிருந்து ரூ.1.5இலட்சம் வரை வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை: இலங்கை தூதரகம் மீது தாக்குதல் முயற்சி

அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இலங்கை தூதரகம் இருக்கும் டிடிகே சாலையில் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் அவர்கள் பார்த்தசாரதி சாலை சந்திப்பு வழியாக இலங்கை தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை துணை ஆணையர் மவுரியா, உதவி ஆணையர் ரவீந்திரன் ஆகியோர் சேலம் சட்டக்கல்லூரியை சேர்ந்த 36 மாணவர்களை இது தொடர்பாக கைது செய்தனர்.

"போர் நிறுத்த அறிவிப்பை புலிகள் அறிவிக்கட்டும்" - அன்பழகன்.

48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டிருந்தும் இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது குறித்து தமிழ் நாடு நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் வியப்பு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?. இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது.புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை விரும்பவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
இவ்வாறு அன்பழகன் சட்டசபையில் பேசியுள்ளார்.

இந்தியா: தனிநபர் வருமானம் உயர்வு!

கடந்த 2007-2008 ல், பொருளாதார வளர்ச்சி காரணமாக, இந்தியாவின் தனிநபர் வருமான அளவு ரூ. 33,283/= என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாம். 2006-2007ல் இது 29,524/= என்ற அளவில் தான் இருந்தது.

வளர்ச்சி விகிதம் 12.7சதம் என்ற இரட்டை இலக்கத்தில் கடந்த ஆண்டு உயர்ந்துஇருந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில், அதிகபட்சம் 9.7 சதம் என்ற அளவிலேயே வளர்ச்சி விகிதம் இருந்தது. இதே காலக் கட்டத்தில் 1.4% என்ற அளவு மக்கள் தொகைப் பெருக்கம் இருந்தது. அதாவது நிதியாண்டின் இறுதியில் மக்கள் தொகை 1.38 பில்லியன் ஆகும்.

2003-04 காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 60% சத வளர்ச்சியாகும். அவ்வருடத்திலிருந்து வருடந்தோறும் 10% க்கும் அதிகமான வளர்ச்சி இருந்து வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் பொருளாதார சிக்கல்கள் அலைக்கழிக்கும் நடப்பாண்டில் வளர்ச்சி என்பது வீழ்ச்சியாக மாறி 7% என்ற குறியீட்டுக்கு த்தாழ்வு அடையும் என்று கருதப்படுகிறது. இத்தகவலை ரிசர்வ் வங்கியும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுமமும் தெரிவித்துள்ளன.

மலேகான்: ஸ்ரீராமசேனா தலைவனிடம் விசாரணை!

Published on: //
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், கர்நாடகாவிலுள்ள் ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கிடம் மும்பை தீவிரவாத தடுப்புப் படை விசாரணை செய்ய இருக்கிறது. பெண்களைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முத்தலிக்கிடம் விசாரணை நடத்த, ஏடிஎஸ் குழு உடனடியாக மங்கலாப்புரத்திற்குப் புறப்படும் என ஏடிஎஸ் தலைவர் ரகுவன்சி தெரிவித்தார்.

மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சன்னியாசி ப்ரக்யா சிங் தாக்கூரைப் புகழ்ந்து உடுப்பியில் முத்தலிக் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் முத்தலிக்கின் செயல்பாடுகளை, மாலேகான் வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கர்னல் பிரசாத் புரோஹித்வெகுவாக புகழ்ந்ததாகவும் அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் சில பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்தவும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முத்தலிக்கிற்குத் தொடர்பு உண்டா என்பதைக் குறித்து விசாரிக்கவுமே ஏடிஎஸ் கர்நாடகா வர இருக்கிறது.

ஜிம்பாப்வே தன் நாணயத்தைக் கைவிட்டது!

ஜிம்பாப்வே நாட்டில் நிலவிவரும் கடும் பணவீக்கத்தினால் அந்நாடு தனது நாணயமான் ஜிம்பாப்வே டாலரைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடும்பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் தாறுமாறாக விலையேறிவிட்டன.

எகிறிச்செல்லும் பணவீக்கத்தினைக் கையாளவோ, உருப்படியான பண மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவோ இயலாத நிலையில் தற்போது இருக்கும் ஜிம்பாப்வே அரசு, பெரும் மதிப்புள்ள நாணயங்களை அறிமுகப்படுத்தி வந்தது. ஐம்பது மில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டுகள் சர்வ சாதாரணமாக ஜிம்பாப்வே மக்கள் புழக்கத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டை ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அந்நாணயத்திற்கு மதிப்பு சிறிதுமின்றிப் போய்விட்டதால் அந்நாட்டுமக்களே இதனைப் பயன்படுத்தாமல் பிற நாட்டு நாணயங்களைப் புழங்கி வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஜிம்பாப்வே அரசு தன் நாணயப் பரிமாற்றத்தோடு பிறநாட்டு நாணயங்களையும் மக்கள் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இன்றைய மதிப்பில் ஓர் அமெரிக்க டாலருக்கு 1520 ஜிம்பாப்வே டாலர் என்ற மதிப்பில் இந்நாணயம் உள்ளது.

இதேநிலை இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஜிம்பாப்வே தன் நாணயத்தை முற்றிலும் கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் கூட்டணி இல்லை - காங்கிரஸ்

Published on: வியாழன், 29 ஜனவரி, 2009 // , , , , ,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் நாடாளு மன்றத் தேர்தல் முயற்சிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று அதன் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியளார்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவேதி, காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் கூட்டணி அமைக்காது என்றும் மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகளுடனும் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார்.

கூட்டணி என்பது எண்ணிக்கையைப் பொறுத்தது என்றும், தேர்தலில் பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை படி தேர்தலுக்குப் பிறகே தெரியவரும் வரும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கிறது உண்மைதான.. ஆனால் அது தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலத் தலைவர்களுடன் கலந்து மாநில அளவில் உடன்பாடுகள் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் துணை முதல்வரின் மனைவி தற்கொலை முயற்சி

ஹரியாணா மாநில முன்னாள் துணை முதல் சாந்து முகம்மதுவின் மனைவி பிஜா (வயது 37) இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மொஹாலியில் உள்ள அவரது வீட்டில் விஷ மாத்திரை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இப்போது மருத்தவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவர்கள் அனுமதிக்குப் பின் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக தன்னுடைய கணவனும் முன்னாள் முதல்வருமான சந்தர் மோகன் என்ற சாந்து முகம்மதுவைக் காணவில்லை என்று நேற்று புகார் அளித்திருந்தார். ஆனால் அந்தப் புகாரை சாந்து முகம்மது மறுத்துள்ளார். காணாமல் போவதற்கு தான் குழந்தை இல்லை என்றும் தானாகவே சென்றதாகவும் அவர் கூறினார்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை - உ.பி. முதலிடம்

நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரப் பிரதேசத்தில்தான் அதிகம் நிகழ்வதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார். உத்திரப் பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் நிகழ்வதாகவும் அவர் கூறினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்து விவாதிப்பதற்காக 5 மாநிலப் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற அமர்வுக்குப் பின் அவர் இதைத் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலமும் தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்த வரிசையே இது என்றும் அவர் கூறினார்.

வன்கொடுமைக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாமல் இருப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் வன்கொடுமைக்கு எதிரான புகார்களில் 39 சதவீதம் அளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. 71 சதவீத புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

நேற்று நடைபெற்ற இந்த அமர்வில் மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், உத்திரப் பிரதேசம், உத்தர்காண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலப் பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.

பிரான்சில் இன்று முழு அடைப்பு

பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர் சங்கங்கள் விடுத்த வேண்டுகோளின்படி இன்று பிரான்சில் முழு அடைப்பு நடைபெறுகிறது. சுமார் 75 சதவீத மக்களும் அனைத்து முக்கிய தொழிற் சங்கங்களும் இந்த முழு அடைப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உலகப் பொருளாதார சீர் குலைவால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். அடுத்த ஆண்டு பிரான்சில் வேலையற்றோர் விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் வேலைக்கும் தாங்கள் பெறும் ஊதியத்திற்கும் உத்தரவாதம் தரக் கோரி பிரான்சில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் முயற்சியாக பல பில்லியன் யூரோ உதவிகளை வங்கிகளுக்கு வழங்கும் பிரெஞ்சு அரசு, தொழிற் கூடங்களுக்கும் மற்ற வணிக நிறுவனங்களுக்கும் மிகக் குறைந்த அளவு உதவி செய்கிறது என்று பிரெஞ்சு அரசு மீது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இன்றைய வேலை நிறுத்தத்தால் போக்குவரத்து, கல்விக் கூடங்கள் மற்றும் சுகாதாரப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஹரியாணா முன்னாள் துணை முதல்வர் கடத்தப்பட்டதாக 2வது மனைவி புகார்

ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான சந்தர் மோகன் (தற்போது சாந்து முகம்மது) நேற்று கடத்தப்பட்டதாக அவரது இரண்டாவது மனைவி கூறினார்.

சாந்து முகம்மதுவை அவரது வீட்டிற்கு சந்திக்கச் சென்ற சிலர் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிச் சென்றுவிட்டனர் எனவும் தன்னால் அவரை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், சாந்து முகம்மதுவை கடத்தியவர்கள் கொலை செய்யக் கூடும் என்று அஞ்சுவதாகவும் கூறிய பிஜா, இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறினார்.

சாந்து முகம்மதுவின் இளைய சகோதரரும் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குல்தீப் பிஷ்னோய் என்பவர்தான் இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தினார்.

ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனான சந்தர் மோகன் கடந்த டிசம்பர் மாதம் பிஜா என்ற இப்பெண்ணை மணம் புரிவதற்காகவே அவரும் இப்பெண்ணும் முஸ்லிமாக மாறினர். இது ஹரியானா அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் அவர் துணை முதல்வர் பதவியையும் இழக்க நேரிட்டது.

தற்போது கல்கா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இவர் இருந்து வருகிறார். நான்காவது முறையாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்நதெடுக்கப் பட்டவர் என்பது குறி்ப்பிடத் தக்கது.

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

Published on: //
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததையடுத்து இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது மீண்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும் டிசல் விலையில் இரண்டு ரூபாயும் சமையல் வாயுவின் விலையில் 25 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை குறைவும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வந்தது.

ஜெர்மனி பெண்ணை கடத்திக் கற்பழித்த ஐவருக்கு வாழ்நாள் சிறை

ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு மாவட்ட நீதி மன்றம் வழ்நாள் சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை ஐந்து நட்சத்திர விடுதியிலிருந்து கடத்திச் சென்று கற்பழித்தனர் என்று இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அம்பாலா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்குள் விசாரித்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராஜ் சேகர் அட்ரி குற்றம் சாட்டப்பட்ட ஐந்துபேரும் குற்றவாளிகள் என்றும் ஐந்து பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை அளிப்பதாகவும் தனது தீர்ப்பை அறிவித்தார்.

பங்கஜ் புனியா, மன்வீர் சிங் ஜோலி, ஹர்பீத் சிங் டல்லி, சுக்வீந்தர் சிங் சுகி மற்றும் சோம்பால் என்று அறியப்படும் ஐந்து குற்றவாளிகளும் அம்பாலா மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்றும் 20 வயதினர் என்றும் தெரிய வருகிறது.

கஷ்மீரில் இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்

Published on: புதன், 28 ஜனவரி, 2009 // , , , ,
ஜம்மு கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சன்டைகளில் அல் படர் தலைவர் உள்பட இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். ஒரு இராணுவ வீரர் பலியானார்.

நேற்று இரவு அமர்கர் எனும் கிராமத்தில் இராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இருந்த போது ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் இராணுவத்தினரை நோக்கிச் சுட்டனர்.  பின்னர் துப்பாக்கிச் சன்டையை நிறுத்தியிருந்த இராணுவம் அதிகாலையில் மீண்டும் துவக்கிய போது அந்த வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதி கொல்லப்பட்டார். இதில் சோஹன் சிங் என்ற இராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்றொரு வீரர் காயமுற்றார்.

கொல்லப்பட்ட தீவிரவாதி அல்படர் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபூ ஹம்சா ஆவார்.

நேற்று பகிஹாரா என்ற கிராமத்தில் நடந்த மற்றொரு சன்டையில் அடையாளம் தெரியாத தீவிரவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கு கஷ்மீரின் பன்டிபுரா மாவட்டத்திலும் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சன்டை நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி முடிவாகவில்லை - தேர்தல் ஆணையம்

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப் படவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 8 மற்றும் மே 15 ஆகிய நாள்களுக்கு இடையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி கூறியதாக நேற்று தகவல்கள் வந்தன.

லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் நேற்று 'ஜம்மு காஷ்மீர் தேர்தல் 2008' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் தேதி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப் படவில்லை என்றும், ஏப்ரல் 8 மற்றும் மே 15 ஆகிய தேதிகளுக்குள் நடைபெறும் என்றும் கூறினார்.

14ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

கழிவறையில் தண்ணீரைப் பயன்படுத்திய ஊழியர் பணி நீக்கம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்று தனது ஊழியர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்தியதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

43 வயதான பிலிப்பைனைச் சேர்ந்த அமடார் பெர்னாபே என்பவர் ஆஸ்திரேலியாவில் டவுன்ஸ்வில்லே இன்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் இயந்திர கையாளுராகப் பணியாற்றி வருகிறார். இவர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ததல் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று உள்ளூர் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டது.

அவர் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று மறுத்த அந்நிறுவனத்தின் மேலாளர், அவருடைய செயல்கள் சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பல முறை அவரிடம் அவருடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டாகத் தெரிவித்தார். அவருடைய செயல் கழிவறைப் பிரச்சனை மட்டுமல்ல. மற்ற பணியாளர்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது என்றும் மேலாளர் கூறினார்.

ஓரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழப்பு

ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழக்கப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக உலகப் பொருளாதாரம் பலத்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்கள் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றன. திங்கள் கிழமை பல்வேறு நிறுவனங்களும் அறிவித்த ஆட்குறைப்பு உலகப் பொருளதார பாதிப்பை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

கட்டுமான இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான கேட்டர்பில்லர் நிறுவனம் தன்னுடைய பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. பிஜர் என்ற மருந்து நிறுவனம் 26 ஆயிரம் பேரையும், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹோம் டிபோட் என்ற நிறுவனம் 7 ஆயிரம் பணியாளர்களையும், ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் எனும் தொலைத் தொடர்பு நிறுவனம் 8 ஆயிரம் பேரையும் நீக்க முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு அறிவிப்புகளை செய்துள்ளன.

அமெரிக்கர்கள் விரோதிகள் அல்லர் - ஒபாமா

Published on: செவ்வாய், 27 ஜனவரி, 2009 // , , , ,
அமெரிக்காவின் முதல் குடிமகனாக தேர்வு பெற்ற பராக் ஒபாமா தன்னுடைய முதல் தொலைக்காட்சி நேர்காணலை இன்று துபாயிலிருந்து செயற்படும் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளார்.

அதில் மிகவும் ஆறுதலளிக்கும் குரலில் " அமெரிக்கர்கள் உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விரோதிகள் அல்லர்" என்று அவர் கூறியுள்ளார். "முஸ்லிம்களிடத்தில் இச்செய்தியை வழங்குவது தமது கடமை" என்றும் குறிப்பிட்டுள்ள அவர் "பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையேயான பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

"நாம் சிலநேரம் தவறு இழைத்து விடுகிறோம்" என்ற ஒபாமா 'அமெரிக்கர்களுக்கும் முஸ்லிம் உலகத்திற்கும் இடையே கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நல்லுறவு மீட்டெடுக்கப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலத்தின் அதிகாரத் தோரணை மாறி புரிந்துணர்வுத் தோழமையை மேற்கொள்ளும் தொனியை ஒபாமாவின் இந்த பேட்டி அளித்ததாக அல் அரேபியா ஆங்கில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஒபாமாவின் சிறப்புத்தூதராக ஜார்ஜ் ஜே.மிட்சல் எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஃபிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் மீது குண்டர் சட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த சனிக்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஸ்ரீராம் சேனை என்ற அமைப்பினர் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் துணைத் தலைவர் பிரசாத் அட்டவார் உள்பட 27 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குண்டர் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வர முடியாது. மேலும் அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே காவல் துறையின் காவலில் 6 மாதத்திற்கு வைத்திருக்க முடியும்.

பிணையில் வர முடியாத எட்டு வழக்குகள் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதிவு செய்துள்ளதாகவும் கர்நாடக மேற்கு சரக டி.ஐ.ஜி கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க இவர்கள் மீது குண்டர் சட்டதத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யூனுஸ்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக யூனுஸ்கான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணிபெற்ற மோசமான தோல்வியைத் தொடர்ந்து எழுந்த கடுமையான விமர்சனத்தின் காரணமாக, தற்போதைய கேப்டன் சுஹைப் மாலிக்கை மாற்றியதாக தெரிகிறது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை - அரசு முயற்சியைத் தொடங்கியது

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பெரும் பணியை மேற்கொள்வதற்காக தனி ஆணையத்தை இந்திய அரசு ஏற்படுத்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 120 கோடி இந்தியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை இந்த ஆணையம் கண்கானிக்கும்.

ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கான தேசிய ஆணையம் (National Authority for Unique Indentify - UID) திட்டக் குழுவுடன் இணைந்து அடையாள எண்களைத் தரும். உள்துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை பதிவளார் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவர் மற்றும் மாநில அதிகாதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த அடையாள எண்கள் வழங்கப்படும். படிப்படியாக வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்கப்படும்.

தவறுகளைக் களைவதற்காக அடையாள அட்டையில் புகைப்படமும், இரத்தப் பிரிவு போன்ற தகவல்களும் இடம்பெறும். புதிதாக பதிவு செய்வதற்கோ அல்லது தகவல்களில் மாற்றம் செய்வதற்காக எளிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் மரணம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இன்று மதியம் டெல்லியில் மரணமடைந்தார்.

இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார கால அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து ஒரு வார காலத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.

வெங்கட்ராமன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், ஆர்.வெங்கட்ராமன் நாட்டு அரசியலிலும் - இந்திய தேசிய அரசியலிலும் தனி வரலாறு படைத்தவர். அவரது மறைவு ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

போதைப் பொருளுடன் காவல்துறை உயர் அதிகாரி கைது

Published on: திங்கள், 26 ஜனவரி, 2009 // , , , , , ,
ஞாயிற்றுக் கிழமை மும்பை தீவிரவாத தடுப்பு காவல் படை (ATS) 12 கிலோ ஹெராயின் வைத்திருந்த ஜம்மு கஷ்மீர் படைப்பிரிவைச் சார்ந்த இந்திய காவல் பணியின்  (IPS) அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளது.

ஷாஜ்ஜி மோகன் என்றறியப்படும் அந்த அதிகாரி திங்கள் கிழமை அதிகாலையில் வடக்கு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்ட்ட ஹெராயினின் மதிப்பு இந்திய சந்தையில் 12 இலட்சம் எனவும் வெளிநாட்டுச் சந்தையில் 1கோடியே 20 இலட்சம் எனவும் தீவிரவாத தடுப்புப் படையின் தலைமை அதிகாரி ரகுவன்ஷி கூறினார்.

ஜனவரி 17ஆம் தேதி ஹரியானா காவல்துறையால் 1.500 கிலோ ஹெராயின் கைது செய்யப் பட்ட ராகேஷ் குமார் மற்றும் விக்கி ஓபராய் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மோகன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து போதைப் பொருள் மட்டுமின்றி மடிக்கணினி ஒன்றும் சில சிடிகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஷஜ்ஜி மோகன் சண்டிகரில் போதைப் பொருள் தடுப்புத் துறையில் தொகுதி இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார். இன்று மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக இவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி இவரை இம்மாதம் 30ஆம் தேதிவரி காவல்துறையின் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

60ஆவது குடியரசு தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்



இந்தியாவின் 60வது குடியரசு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார். ராஜ்பத்தில் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ராஜ்பத்தில் குடியரசு தின விழா தொடங்கியது. கஜக்ஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நசர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் 24 முறை பீரங்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன.

பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்காக வீரமரணம் அடைந்த 11 பேருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரேவின் குடும்பத்தினர் உள்பட 11 பேரின் குடும்பத்தினர் இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையினரின் அணிவகுப்பு, காவல் துறையினரின் அணிவகுப்பு. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் முக்கியத் தலைவர்களும் வெளிநாட்டுத் தலைவர் மற்றும் தூதரக அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு 
ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. சுமார் 15000 துப்பாக்கி ஏந்திய காவலர்களும் 5000 துணை இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

தமிழகத் தலைநகர் சென்னையில் மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தமிழக முதல் கருணாநிதியின் உடல் நலக் குறைவால் அவர் இந்நிகழ்வில் பங்கு பெறவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு வீர தீரச் செயல் புரிந்தோருக்கு விருதுகளை வழங்கினார்.

வாசகர்களுக்கு இந்நேரம் குழுமம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்ரேலியப் படையினருக்கு சட்டப் பாதுகாப்பு - ஒல்மர்ட்

சமீபத்தில் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து அங்குப் பெருமளவு சேதங்களை விளைவித்தது. இஸ்ரேலியப் படையினர் ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் இருக்கும் குடியிருப்புகளின் மீது சர்வதேசப் போர் நடைமுறைகளை மீறிக் கடும் தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தின.

இதனையடுத்து 'ஹேக்'கில் இருக்கும் பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியப் படையினர் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்போவதாக தொண்டுநிறுவனம் ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் அவ்வாறு வழக்குத்தொடுக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எந்த ஓர் இஸ்ரேலியப் படையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய அரசு அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

சர்வதேசப் போர் நடைமுறைகளின் படி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸாவில் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசு, அதனைப் பொதுமக்கள் மீது வீசவில்லை என மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கஞ்சா பயன்படுத்தல் குற்றம் என பிரிட்டன் மீளறிவிப்பு!

கஞ்சா பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றம் என மீண்டும் பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் போதை அளிக்கும் வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பிரிவில் முன்னதாக கஞ்சா B பிரிவு வேதிப்பொருள் என அறிவிக்கப்பட்டிருந்தது. டோனி பிளேய்ர் பிரதமராக இருந்த போது 2004 ஆம் ஆண்டு கஞ்சா C பிரிவில் நகர்த்தப்பட்டது.

பிரிட்டனின் சட்டப்படி C பிரிவு போதை மருந்துகளை வைத்திருப்பவரை சட்டம் ஒழுங்கு காவலர்கள் அறிவுறுத்த மட்டுமே முடியும். அவர்கள்மீது வழக்குத் தொடுக்கவோ தண்டனை பெற்றுத் தரவோ இயலாது.

தற்போது கஞ்சா B பிரிவு வேதிப் பொருள் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கஞ்சாவை வைத்திருப்பதோ பயன்படுத்துதலோ குற்றம் என்ற பிரிவில் அடங்கும். கஞ்சாவின் புழக்கம் பிரிட்டிஷ் சமூகத்தில் பெருமளவு அதிகரித்துவிட்டதால் கார்டன் பிரவுன் இந்த அறிவிப்பை அளிக்கப் பரிந்துரை செய்தார்.

இதன்படி முதல்முறை விதி மீறுவோருக்கு எச்சரிக்கையும், அவரே இரண்டாம் முறை பிடிபட்டால் 80 பவுண்டு அபராதமும், மூன்றாம் முறை பிடிபட்டால் சிறைத் தண்டனையும் அளிக்க்கப்படும்.

ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம்

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியை மீண்டும் அளிக்க முடிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு உலகளாவிய அளவில் அமெரிக்க அரசு நிதி உதவி செய்து வந்தது. இந்த நிதி உதவிக்கு கடந்த புஷ்ஷின் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டது. ஒபாமா பதவியேற்றதும் கடந்த வெள்ளிக் கிழமையன்று இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.
 
வாழ்க்யையும் மரணத்தையும் தாங்கள் தீர்மாணிக்க முடியும் என்ற எண்ணும் ஆட்சியாளர்களுக்கு வாட்டிகன் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிரான செயல் கருக்கலைப்பு என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

வியட்னாம் படகு விபத்தில் 40 பேர் பலி!

வியட்னாமின் தலைநகர் ஹனோயிலிருந்து தெற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள மத்திய குவாங் பின் பிரதேசத்திலுள்ள கியான் ஆற்றில் நிகழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பொருள்கள் வாங்க அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த படகில் அளவிற்கு அதிகமாக பயணிகள் ஏற்றப் பட்டிருந்தனர். 20 பேர் மட்டுமே பயணம் செய்ய உரிமம் வழங்கப் பட்டிருந்த அப்படகில் 80-ற்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. படகு கரையை நெருங்கியபோது விரைவாக படகிலிருந்து இறங்குவதற்காக பெரும்பாலான பயணிகள் முண்டியத்துச் சென்றபோது எதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்தது.

ஆற்றிலிருந்து இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. அவர்களுள் இரு கர்ப்பிணிகளையும் சேர்த்து 32 பேர் பெண்கள். 36 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். காணாமல் போன மேலும் சிலரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

விடுதலைப்புலிகளின் வசமிருந்த முக்கியப் பகுதியான முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. தொலைக்காட்சியி்ல் பேசிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முல்லைத்தீவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார். விடுதலைப் புலிகள் இப்போது 15 அல்லது 20 கிலோ மீட்டர் பகுதியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய நிலையி்ல் முல்லைத் தீவை இழந்திருப்பது விடுதலைப்புலிகளுக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் முல்லைத் தீவை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. முல்லைத் தீவு மீட்டுப் பணியில் 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக சனிக்கிழமை இலங்கை இராணுவம் முல்லைத் தீவை நோக்கி வரும்போது கல்மடுக்குளம் அணைக்கட்டைத் தகர்த்தனர். இதில் சுமார் 4000க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் காலரா பரவுகிறது

Published on: ஞாயிறு, 25 ஜனவரி, 2009 // , , ,
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் பல நாடுகளில் பரவி வந்த காலரா தற்போது தென் ஆப்ப்ரிக்க நாட்டையும் தாக்கி உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் முதலில் பரவத் தொடங்கிய காலரா அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் பரவியது.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற குரூகர் தேசியப் பூங்காவில் காலரா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பூங்காவின் சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என அரசு அலுவலர்கள் கூறினாலும், இப்பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்காக வழங்கப்படும் குடிநீரிலும் இக்க்கிருமிகள் தென்பட்டதாக சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

ஒவ்வோராண்டும் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குரூகர் தேசியப் பூங்காவிற்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜிம்பாப்வேயில் கடந்த ஆகஸ்டு முதல் 3000க்கும் அதிகமானோர் காலரா தாக்கி இறந்துள்ளனர் என்பது கவலையளிக்கும் தனித் தகவல்.

சத்யம் நிறுவன தணிக்கையாளர்கள் கைது!

சத்யம் நிறுவனத்தின் தணிக்கையாளர்களான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற பன்னாட்டு தணிக்கை நிறுவனத்தின் இரு மேலாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

சத்யம் நிறுவன கணக்கு வழக்குகளில் 8000 கோடி ரூபாய் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது வெளியானதைத் தொடர்ந்து அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு இம்மாதத் துவக்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் பற்றிய விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்பில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரினிவாஸ் தலுரி ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

"சத்யம் நிறுவனம் தொடர்பான விசாரணகளுக்கு எங்கள் குழு முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைது நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" என தணிக்கை நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இந்தியா - கஜகஸ்தான் : நான்கு ஒப்பந்தங்கள்

இந்தியா - கஜகஸ்தான் இடையே 4 அரசாங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

மத்திய ஆசியாவில் யுரேனியச் செறிவு மிக்க நாடான கஜகஸ்தான் உலகின் யுரேனிய உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நாட்டுடன் இந்தியா குடிமை அணுசக்தி ஒப்பந்தம், குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி யுரேனியம் சார்பொருட்களை கஜகஸ்தான் இந்தியாவுக்கு வழங்கவும், அணுசக்தி நிலையங்களை இந்தியா கஜகஸ்தானில் நிர்மாணிக்கவும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புது டெல்லியில் இருநாட்டு குடியரசுத்தலைவர்கள் பிரதீபா பாட்டீலும், நூருல் இஸ்லாம் நஸர்பயேவ்வும் இவ்வொப்பந்தங்களை மேற்பார்வையிட்டனர்.
"இவை இருநாட்டுகளிடையேயான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும்" என்று நமது செய்தியாளர்களிடம் நஸர்பயேவ் பின்னர் தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பிலும், உலக வர்த்தக அமைப்பில் கஜகஸ்தானுக்கு இடமளிப்பது குறித்தும் மற்ற இரு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

25 இந்திய கடற்பிரயாணிகள் விடுவிப்பு

Published on: //
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இருமாதங்களாக பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 25 இந்திய கடற்பயணிகளும், மூன்று வங்கதேசத்தவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வேதிப்பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலான M T பிஸ்காலிகா என்ற லைபீரிய கப்பலிலிருந்து ஏடன் வளைகுடா அருகே கடந்த நவம்பர்28 அன்று இவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

இத்தகவலை தேசிய கடற்பிரயாணிகள் நல ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அப்துல்கனி செராங் தெரிவித்துள்ளார். "அனைவரும் நலமாக உள்ளனர்" என்றார் அவர்.

தொடக்கத்தில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்கள் பிணைத்தொகை கோரியிருந்த கொள்ளையர்கள், பின்னர் அதை 25இலட்சம் டாலர்களாக ஏற்றிக்கேட்டிருந்தனர். எனினும், விடுவிக்கப்படுவதற்கு முன்பாக பிணைத்தொகை வழங்கப்பட்டது பற்றி தெரிய வரவில்லை.

கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட 18 இந்தியர்களுக்குப் பிணைத்தொகையாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இக்கொள்ளையர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹோலோகாஸ்டை மறுத்த பாதிரியார்கள் மீண்டும் கிருஸ்துவ திருச்சபையுடன் இணைப்பு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியதற்காக 1988-ஆம் ஆண்டு 4 பிஷப்கள் வாடிகன் கிருஸ்துவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களை போப் பெனடிக்ட் மீண்டும் திருச்சபையுடன் இணைத்துக் கொண்டார். இது யூதத் தலைவர்களை கோபமடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஹிட்லரின் நாஜிப்படையினரால் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வு 'ஹோலோகாஸ்ட்' என வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இச்சம்பவங்களை உண்மை என ஏற்றுக் கொண்டிருந்தாலும் சிலர் அவற்றைப் பற்றிய சந்தேகங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சந்தேகங்களை எழுப்புவது பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்தை புரிந்ததற்காகவே 4 பிஷப்களும் திருச்சபையிலிருந்து நீக்கப் பட்டிருந்தனர்.


நால்வரில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்சன் ஹோலோகாஸ்ட் பற்றி கூறப்படுபனவற்றை மறுத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சுவீடன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யூதர்களைக் கொல்வதற்காக விஷ வாயு கிடங்குகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றே தாம் நம்புவதாகத் தெரிவித்தார். அச்சம்பவங்களில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 60 லட்சம் என்று சொல்லப்படுவதையும் அவர் மறுத்து, அதன் உண்மையான எண்ணிக்கை 3 லட்சம் மட்டுமே இருக்கும் எனவும் அவர் கூறினார்.

நான்கு பிஷப்களையும் மீண்டும் திருச்சபையில் இணைக்கும் உத்தரவை போப் வெளியிடுமுன்பாக பல யூதத் தலைவர்கள் போப்பின் இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். பல்லாண்டுகளாக நிலவி வரும் யூத கிருஸ்துவ சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை இது குலைத்து விடும் எனவும் 'ஆழமானதொரு காயத்தை இது மீண்டும் கிளறி விடும்' எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

குவாண்டனாமோ: 2 மலேஷிய கைதிகளை தாய்நாட்டிற்குக் கொண்டுவர பிரதமர் விருப்பம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமா குவாண்டனாமோ சிறையை ஓராண்டிற்குள் மூடும்படி உத்தரவிட்டிருப்பது தெரிந்ததே. அங்கு அடைபட்டிருக்கும் கைதிகளுள் இரு மலேஷிய நாட்டவரும் அடங்குவர். அவர்களை மலேஷியாவிற்கு கொண்டுவர பிரதமர் அப்துல்லா படாவி விருப்பம் தெரிவித்துள்ளார்.

முகமது நாசிர் லெப் மற்றும் முகமது பரிக் அமின் என்ற இரு மலேஷிய நாட்டவரும் 2002-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்புகளை நடத்திய ஜெமா இஸ்லாமியா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

"அதிபர் பாரக் ஒபாமா (குவாண்டனாமோ சிறையை மூடுவது பற்றிய) தமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக மலேஷியா தனது மகிழ்வை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறிய மலேஷிய பிரதமர், அக்கைதிகள் மலேஷியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் எஞ்சிய தண்டணைக் காலத்தை மலேஷிய சிறையில் கழிப்பர் என்றும் தெரிவித்தார்.

குவாண்டனாமோ சிறையில் இன்னும் அடைபட்டிருக்கும் சுமார் 250 பேரில் செப் 11 தாக்குதல் நடக்க உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 நபர்களைச் சேர்த்து சுமார் 20 பேர் மீது மட்டுமே குற்ற வழக்கு பதியப் பட்டிருக்கிறது.

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பலி!

Published on: //
வடக்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதி மீது அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் 3 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக பல ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும் ஏவுகணை விழுந்தப் பகுதி முழுவதும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எனவும் கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

அநேகமாக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்ற பின்னர், அமெரிக்கப் படைகள் நடத்திய முதல் தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.

"தீவிரவாத எதிர்ப்புப் போரின் முக்கிய பகுதிகளாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இருக்கும்" என அதிபர் பராக் ஒபாமா ஸ்டேட் டிபார்ட்மென்ட் கூட்டத்தில் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

சர்மா கைது செய்த காஷ்மீர் தீவிரவாதி விடுதலை!

Published on: // ,
டெல்லி ஜாமிஆ நகர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மோகன்சந்த் சர்மா தீவிரவாதி என குற்றம் சுமத்தி கைது செய்த இக்பால் என்றழைக்கப்படும் அயாஷ் அஹமது ஷா என்ற காஷ்மீர் இளைஞரை நீதிமன்றம் நிரபராதி எனக் கூறி விடுதலை செய்தது.

டெல்லி சாஸ்திரி பார்க்கின் அண்மையிலுள்ள மெட்ரோ ஸ்டேசனில் வைத்து கடந்த 2004 ஜனவரி 22 அன்று அயாஷ் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்யும் பொழுது அவர் வைத்திருந்தப் பையில் வெடிபொருட்களும் மூன்று லட்சம் ரூபாயும் இருந்ததாகவும் அடுத்து வரும் குடியரசு தினத்தில் டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக அவர் அதனை வைத்திருந்தார் எனவும் டில்லி ஸ்பெஷல் செல் வழக்கு பதிவு செய்திருந்தது.

நிதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பொழுது, ஸ்பெஷல் செல்லிலுள்ள எ.எஸ்.ஐ. ரிஷிகேசிற்கு இக்பாலை கைது செய்த இடம் எங்கு என்பதைக் குறித்து விவரிக்க இயலவில்லை. மற்றொரு ஸ்பெஷல் செல் அதிகாரியான ஜெய் கிஷன், காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டவைக்கு எதிராக, மெட்ரோ அதிகாரிகள் அந்த ரெய்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். ரெய்டில் கலந்துக் கொண்ட எஸ்.ஐ. உமேஷ் பாரதியினால் எவ்வளவு நேரம் ரெய்டு நடந்தது என்றக் கேள்விக்குப் பதிலளிக்க இயலவில்லை.

"குற்றம் சுமத்தப்பட்ட பிரதி, நாட்டுக்கு எதிராக போர் பிரகடன் செய்ததையும் நாட்டைத் தகர்க்க சதியாலோசனை நடத்தியதையும் தெளிவிப்பதில் அரசு தரப்பு தோல்வியடைந்ததாக" தீர்ப்பு கூறிய நீதிமன்றம், காவல்துறைக்கு எதிராகக் கடும் விமர்சனமும் கண்டனமும் தெரிவித்தது.

சீனா பொம்மைகள் இறக்குமதிக்கு இந்தியா தடை!

சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே மெலாமின் என்ற விஷ ரசாயனப்பொருள கலந்துள்ளதுக் கண்டுபிடிக்கப்பட்டக் காரணத்தினால் சீனாவிலிருந்து சாக்லேட், பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தற்பொழுது சீன உற்பத்தி பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொம்மைகள் உருவாக்கப்படுத்தப்படும் பொருட்களில் விஷ ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக எழுந்த சந்தேகமும் மிக விலை குறைந்த சீன பொம்மைகளின் அளவுக்கதிகமான இறக்குமதி உள்நாட்டு பொம்மை உற்பத்தியை வெகுவாக பாதித்திருப்பதும் இத்தடைக்குக் காரணமாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் 5 வயது சிறுமி கற்பழிப்பு

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று 5 வயதே ஆன சிறுமி கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறியது.

நேபாளத்தில் இருந்து வேலை தேடி பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே குராலி எனும் கிராமத்தில் அச்சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். பெற்றோர் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டனர். இவர்களது வீட்டருகே வசித்து வரும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த 27 வயதுடைய ராஜேஷ் பாரதி என்பவன் இச்சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, சிறுமியிடம் நயமாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று இக்குற்றத்தை செய்ததாக விசாரணை அதிகாரி லக்விந்தர் சிங் கூறினார்.

மொஹாலியில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது நிகழ்வு இது. இம்மாதம் 7ஆம் தேதி 6 வயது நேபாளச் சிறுமி மொஹாலியின் தொழில்பேட்டை அருகே கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

"தேச துரோகி" வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!

Published on: // ,
சமீபத்தில் வெளியான தேசதுரோகி இந்தி திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட்டால், குழப்பங்கள் விளையலாம் என்ற மஹாராஷ்டிரா அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்னர், மும்பை உயர்நீதிமன்றமும் இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு உச்சநிதிமன்றத்தை அணுகியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மற்றப்பாகங்களில் வெளியான இத்திரைப்படத்தை, மஹாராஷ்டிராவில் வெளியிட மட்டும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்தது.

அதேநேரம், உச்சநிதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரும் இதுவரை மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கிலும் இத்திரைப்படம் இதுவரை திரையிடப்படவில்லை. திரைப்படம் திரையிட நினைத்திருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க தயாராகாததே இதற்கான காரணமாகும்.

மாலேகான் வழக்கு: சதி திட்டத்தில் ஹிமானி சவார்க்கரும்!

Published on: //
மாலேகாவ் குண்டு வெடிப்பிற்காக சதி திட்டம் தீட்டியவர்களில் வி.ட்டி. சவார்க்கரின் மருமகளும் காந்தியைக் கொன்ற கோட்சேயின் அண்ணன் கோபால் கோட்சேயின் மகளுமான அபினவ் பாரதின் தலைவி ஹிமானி சவார்க்கருக்கும் பங்குண்டு என மாலேகான் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.டி.எஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 அன்று போபாலிலுள்ள ராம ஷேத்திரத்தில் வைத்து நடந்த குண்டு வெடிப்பிற்கான ரகசிய சதியாலோசனை கூட்டத்தில் தானும் ஹிமானி சவார்க்கரும் கலந்துக் கொண்டதாக கடந்த டிசம்பர் 24 அன்று, அபினவ் பாரதின் உறுப்பினருமான வழக்கின் முக்கிய சாட்சி வாக்குமூலம் கொடுத்தார்.

இதனைக் குறித்த கேள்விக்கு, "தான் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வேளையில் தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகளாக இருந்தனர்" என ஹிமானி பதிலளித்துள்ளார்.

ஹிமானியையும் முக்கிய சாட்சியையும் குற்றவாளிகள் பட்டியலில் ஏ.டி.எஸ் சேர்க்கவில்லை. எதனால் இவர்கள் இருவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு, "இதற்கான பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்" என ஏ.டி.எஸ்ஸின் தற்காலிக தலைவர் ரகுவன்ஷி பதிலளித்தார்.

மரம் வெட்டிக்கு தண்டனை

42 மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய ஒருவருக்கு டெல்லி நடுவர் நீதிமன்றம் 210 மரக்கன்றுகளை நடும் விநோத தண்டனையை அளித்துள்ளது.

வாசுதேவா என்ற பெயருடைய அந்த நபர் தனக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே இப்படி செய்துவிட்டதாகக்  கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். 


மரங்களே நகரின் நுரையீரல்கள் எனவும், உலகின் பசுமை குறைந்துவருவது கவலையளிக்கும் விதயம் என்றும் நீதிபதி தேவந்தர் குமார் ஜங்காலா தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமருக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனை(AIIMS)யில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இருதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக  இச்சிகிச்சை என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் P.K. பாண்டா தலைமையில் 11 மருத்துவர்களைக் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.

76 வயதான மன்மோகன், 18 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை  ஃபைபாஸ் சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார். மேலும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் பெற்றுள்ளார்.

இதனால் சுமார் ஒருமாத காலம் மருத்துவ விடுப்பில் பிரதமர் இருக்க வேண்டியுள்ளதால், எதிர்வரும் குடியரசு தினக் கொண்டாட்டங்களையும், பிரதமருக்கான மற்ற அலுவல்களையும்  மூத்த அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி தலைமையேற்று நடத்துவார் எனத் தெரிகிறது. முன்னர் ப.சிதம்பரம் வசமிருந்த  நிதிஅமைச்சர் பொறுப்பையும் திரு. முகர்ஜியே தற்காலிகமாக கவனிப்பாராம்.

தீவிரவாத வழக்குகள்: பார் கவுன்ஸிலுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்!

Published on: //
தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடும் உரிமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முறையீட்டின் மேல் விளக்கம் கோரி பார் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மாநில பார் அஸோஸியேசன்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பார் அஸோஸியேசன்களின் நடவடிக்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பொதுநல வழக்கின் மீது வாதம் கேட்கும் பொழுது, தலைமை நிதிபதி கெ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலுள்ள நீதிபதிகள் குழு பார் கவுன்ஸிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. முஹம்மது ஷிஐப்(லக்னோ), ஸமால் அஹ்மது(ஃபைஸாபாத்), நூர் அஹமது(உஜ்ஜயினி), சுரேந்தர் ஸிகாட்லிங்(மாஹாராஷ்டிரா) ஆகிய வழக்கறிஞர்கள் இணைந்து இந்த பொது நலவழக்கு தொடுத்துள்ளனர்.

"பார் அஸோஸியேசன் சட்ட விரோத தீர்மானம் நிறைவேற்றியுள்ளது" எனவும் "இதன் மூலம் கடந்த ஆண்டு நடந்தத் தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக இருந்ததிலிருந்து விலக வேண்டி வந்ததாகவும்" புகாரில் அவர்கள் கூறினர். "குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக வந்த வேளையில் மற்ற வழக்கறிஞர்கள் தங்களைத் தக்கியதாகவும்" அவர்கள் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

Published on: வெள்ளி, 23 ஜனவரி, 2009 // , , ,
அமெரிக்க கணிணி நிறுவனமான மைக்ரோஸாப்ட் தமது ஊழியர்களில் 5000 பேரை வேலையிலிருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அவர்களில் 1400 பேர் உடனடியாகவும் மற்றவர்கள் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாகவும் நிறுத்தப் படுவர். மெதுவடைந்திருக்கும் பொருளியல் சூழலும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்தில் செலவிடும் தொகை வெகுவாகக் குறைந்து விட்டதுமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை அந்நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு குறைந்து விட்டதாகத் தெரிவிக்கிறது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இந்த ஆட்குறைப்பு செய்யப் படுகிறது.

அந்நிறுவனத்தில் ஆய்வு, சந்தைப் படுத்தல், விற்பனை, நிதி, சட்டம், மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப் படுவர் என்று தெரிகிறது.

குவாண்டனாமோ சிறையை மூட ஒபாமா உத்தரவு!

புதிய அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா தான் வாக்களித்தபடி குவாண்டனாமோ சிறையை முற்றிலும் மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

"பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் அதேவளை, அமெரிக்க விழுமியங்களையும் விட்டுக் கொடுக்கமாட்டோம்" என அவர் கூறியுள்ளார்.

குவாண்டனாமோவில் நடைபெற்றுவரும் அனைத்து இராணுவ விசாரணைகளையும் நிறுத்தி வைக்க முன்னதாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. குவாண்டனாமோவில் தண்ணீரில் மூழ்கடிக்கும் உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற சித்திரவதை விசாரணை முறைக்கு முந்தைய அதிபர் புஷ் ஒப்புதல் அளித்திருந்ததும் பல்வேறு மனிதநேய அமைப்புகள் அம்முறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததும் அறிந்ததே.

ஒபாமாவின் உத்தரவை அடுத்து குவாண்டனாமோ சிறை ஓராண்டுக்குள் முற்றிலும் மூடப்படும் எனத் தெரிகிறது.

11 லாரிகள் தீக்கிரை

Published on: வியாழன், 22 ஜனவரி, 2009 // ,
பீஹாரில் உள்ள ரோஹ்டாஸ் மாவட்டத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 11 வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.

இன்று அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் நடந்த இச்செயலை மாவோ கம்யூனிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த நக்சல்கள்தான் செய்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். 

தங்கள் இயக்கத்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் மாவோ கம்யூனிஸ்டுகள் ஜார்கண்ட், பீஹார், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  முழு அடைப்புக்கிடையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சிமெண்ட் கல்யாண்பூரில் உள்ள சிமெண்ட் ஆலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டவை என்று கூறிய காவல்துறை அதிகாரி, எரியூட்டுவதற்கு முன் ஓட்டுநரையும உதவியாளரை கீழே இறக்கிவிட்டு எரியூட்டியுள்ளனர் என்று கூறினார். முழு அடைப்பு நடக்கும் போது இரவு நேரத்தில் சிமெண்ட் மூட்டைகளை அனுப்ப வேண்டாம் என்று அந்த ஆலைக்கு காவல்துறை ஏற்கனவே கூறியதாகவும் கூறப்படுகிறது.

சினிமா தயாரிப்பாளர் பரத்ஷா கைது

இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் வைர வியாபாரியான பரத்ஷா இன்று கைது செய்யப்பட்டார். சில்வசா நீதிமன்றம் வழங்கிய பிணையில் வெளிவரா இயலாத கைது ஆணையின் படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் மலபார் ஹில் பகுதி காவலர்கள் அந்த ஆணையைப் பெற்று அவரைக் கைது செய்தனர். எந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை காவல்துறையினர் கூற மறுத்துவிட்டனர்.

ஒபாமா ஆரவாரமான துவக்கம்!

Published on: //
அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பதவியேற்றுள்ள ஆப்ரிக்க-அமெரிக்க வம்சத்தில் வந்த பராக் ஹுசைன் ஒபாமா, பதவியேற்பு முடிந்தக் கையோடு அதிபர் பணிகளை ஆரவாரத்துடன் துவங்கியுள்ளார்.

பதவியேற்பு முடிந்து நேரடியாக வெள்ளை மாளிகை சென்ற ஒபாமா, முதல் வேலையாக தனது பதவியேற்பிற்கு முன், முன்னாள் அதிபர் புஷ் தனது பதவி காலத்தின் இறுதியில் கையெழுத்திட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, தனது தேர்தல் பிரச்சார வேளையில் அளித்திருந்த "குவாண்டனமோ சிறைச்சாலையினை மூடும்" வாக்குறுதியினை நிறைவேற்றும் ஆரம்பப்படியாக, உடனடியாக குவாண்டனமோ கைதிகளின் நீதிமன்ற விசாரணைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று நடக்க இருந்த ஒரு வழக்கினை நீதிபதி பாட்ரிக் பாரிஷ் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

அதிபர் பதிவேற்ற ஒபாமாவின் முதல் நாள் நடவடிக்கைகள் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!