Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஐ.பி.எம். நிறுவனத்தில் இனி தேநீர், காபி இல்லை!

Published on: செவ்வாய், 14 ஏப்ரல், 2009 // , , , , , , , ,
கணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம். நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தங்களது கிளைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு தேநீர், காபி போன்றவை இலவசமாக அளிப்பது நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வருகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் இந்நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கு அவர்களின் இல்லங்களில் நிறுவனத்தின் சார்பில் வழங்கி வந்த இலவச இணைய இணைப்பும் நிறுத்திக் கொள்ளப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஐ.பி.எம் நிறுவனம் 2800 ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்து அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தது. மேலும் இந்நிறுவனத்தின் அமெரிக்கக் கிளைககளில் பணிபுரியும் சுமார் 5000 பேர் வேலை இழக்கக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் கொல்கத்தா-லண்டன் விமான சேவை நிறுத்தம்!

மார்ச் 30 ஆம் தேதி முதல் கொல்கத்தா-லண்டன் விமான சேவையை முற்றிலும் நிறுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

1932 ஆம் ஆண்டு முதல் தனது சேவையைத் துவக்கிய இந்நிறுவனம், இடையில் 1985-ல் தற்காலிகமாக நிறுத்தி பின்னர் 1993 முதல் சேவையை மறுபடியும் துவங்கியது.


வாரம் மூன்று முறை கொல்கத்தா-லண்டன் நேரடி விமான சேவை வழங்கி வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், லாபமின்மைக் காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.


பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தில்லி,மும்பை,சென்னை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து தனது நேரடி சேவையை வழங்கி வருகிறது.

தமிழகம்: நீதிபதி பெயர் கூறி செல்பேசிகள் திருட்டு

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள செல்பேசி விற்பனை கடையில் உதயகிரி என்ற 23 வயடு வாலிபர் விற்பனையாளராகப் பணிபுரிகிறார்.கடந்த 20ம் தேதி 12 மணிக்கு உதயகிரி கடையில் இருந்த போது, வாலிபர் ஒருவர் வந்தார். கடலூர் நீதிபதிக்கு மொபைல் போன் தேவைப்படுகிறது. கடையில் உள்ள ஐந்து மொபைல் போன்களை எடுத்து வந்தால் பார்த்து வாங்கிக் கொள்வார் எனக் கூறியுள்ளார்.

உதயகிரி கடையில் இருந்து 33 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து நோக்கியா மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு அந்த வாலிபருடன் ஆட்டோவில் சென்றார். ஜட்ஜ் பங்களா ரோட்டில் உள்ள நீதிபதி குடியிருப்புப் பகுதிக்குச் சென்று ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார்.மொபைல் போன்களைக் கொடுங்கள் நீதிபதியிடம் காண்பித்துவிட்டு எது தேவை எனக் கேட்டு வருவதாகக் கூறி அருகில் நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றார்.இதுகுறித்து உதயகிரி கொடுத்த புகாரின்படி, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தீயிட்டுக் கொளுத்தப்படும் 170 கோடி ரூபாய்

திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகள் வழியாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள், பழைய 5 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளும் சேகரிக்கப்பட்டன. இவை ரூ.170 கோடி அளவுக்குச் சேர்ந்தது. இந்தக் கிழிந்த நோட்டுகள் கட்டுக்கட்டாக சரக்குப்பெட்டகங்களில் ஏற்றப்பட்டு சரக்கு தொடர்வண்டிகள் மூலமாக சென்னை வந்தடைந்தன.

அதன்பின் அவை சுமையுந்துகளில் பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டபின், காவல்துறை பாதுகாப்புடன் தீயிட்டு எரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்ச ரூபாய் நானோ கார் இன்று முறைப்படி அறிமுகம்!

Published on: திங்கள், 23 மார்ச், 2009 // , , ,
லட்ச ரூபாய் நானோ கார் இன்று முறைப்படி அறிமுகம் ஆகிறது.

மூன்று மாடல்களில் வெளியாகும் நானோ கார்களில், டீலர்களுக்கு சப்ளை செய்யப்படும் அடிப்படை மாடலின் விலை ரூ.1 லட்சம். கமிஷன் மற்றும் வரிகள் கூடுதலாக ரூ.20,000 வரை ஆகலாம்.

உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், நானோ காருக்கு வரவேற்பு உள்ளது. எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

நானோ வருகையைத் தொடர்ந்து அதற்குப் போட்டியாக பஜாஜ் நிறுவனம் 2011ல் தனது ரூ.1.25 லட்சம் காரை வெளியிட தயாராகி வருகிறது.

இந்தியா: பணவீக்கம் மிகவும் குறைந்தது.

இந்தியாவின் வணிகச் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு பணவீக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில் அது வெறும் 0.44 சதவீதம் என்று இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒரே வாரத்தில் 1.99 சதவீதம் குறைந்திருக்கிறது.

கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 7.78 சதவீதமாக இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பண வீக்கம் வெகுவாகக் குறைந்து விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது.

உணவுப்பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் சில உற்பத்தி பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதை அடுத்து ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி கருத்தளிக்கையில் விரைவில் பணவீக்கம் 0% என்ற நிலையை அடையும் என்கின்றனர்.

சென்னை: நடுக்கடலில் அமையும் சரக்குப்பெட்டக முனையம்

சென்னை துறைமுகத்தில் தற்போது சரக்குகளை ஏற்றி இறக்குவதில் உள்ள இடப்பற்றாக்குறை சிரமம் உள்ளது. இதனைத் தவிர்க்க, கூடுதலாக மேலும் ஒரு சரக்குப்பெட்டக முனையம் (Container Terminal) அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன்படி, சென்னை துறைமுகத்தில் இரண்டாவது ச.பெ.முனையம் அமைத்து அதன் பணிகள் முடிவு பெற்றுள்ளன. இரண்டொரு மாதங்களில் இந்த முனையம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

இந்நிலையில், மேலும் ஒரு புதிய முனையம் அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் நடுக்கடலில் மாபெரும் முனையம் அமைக்கப்படவுள்ளது. மூன்றாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த முனையம் 22 மீட்டர் ஆழமும், இரண்டு கி.மீ வரை நீளமும் கொண்டதாக இருக்கும். இந்த முனையத்திற்குச் செல்ல கடலுக்குள் இரண்டு கி.மீ தூரம் வரை சாலையும் அமைக்கப்படவுள்ளது.

சீனாவின் புகழ்பெற்ற ஷாங்காய் துறைமுகத்தில் 25 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் அமைந்துள்ள சரக்கு முனையத்துக்கு அடுத்தபடியாக பெரிய கடல் முனையம் சென்னை துறைமுகத்திலேயே அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

'பார்பி'க்கு வயது 50!

Published on: செவ்வாய், 10 மார்ச், 2009 // , , , , , , , ,
சிறு குழந்தைகள் முதல் பதின்ம வயதினர்ர் வரை பெண்குழந்தைகளின் கனவுப் பொம்மையாக இருந்து வரும் பார்பி, 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்தாலும் அதன் செல்வாக்கு உலகின் பல நாடுகளின் குழந்தைகளிடையே மேன்மேலும் பெருகி வருவதாக இந்தப் பொம்மையை உருவாக்கிய மேட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்விடுதலையை வலியுறுத்தும் ஒரு சின்னமாக இந்தப் பொம்மையை இதன் ஆதரவாளர் சிலர் வர்ணித்தாலும் பாலியல் சின்னமாக பெண்களை நிலை நிறுத்தும் கருவியாக இந்தப் பொம்மை இருப்பதாகவும் சாத்தியமில்லாத உடலியல் அம்சங்களைக் கொண்டு தவறான ஓர் எண்ணத்தைக் குழந்தைகளிடம் இது விதைப்பதாகவும் இதன் எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்துள்ளனர்.

எதிர்ப்புகள் பல இருப்பினும், போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல பொம்மைகள் இருந்தாலும் 50 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள பார்பி, மேட்டல் நிறுவனத்தைப் பொறுத்தவரை நல்ல லாபம் ஈட்டித் தந்துள்ளது. இப்பொம்மையின் சராசரி விலை கிட்டத்தட்ட 30 அமெரிக்க டாலராக இருக்கிறது. மிக உயர்ந்த விலையாக 8000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொம்மையும் சந்தையில் விற்பனையில் உள்ளது.

சந்தையில் புதுசு: 'ஆடி' நிறுவனத்தின் Q5 கார்

Published on: திங்கள், 9 மார்ச், 2009 // , , , , , ,


ஜெர்மானிய சொகுசு கார் தயாரிப்பாளர்களான 'ஆடி' நிறுவனம் Q5 என்கிற புதிய மாடல் காரை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்தியச்சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இப்போது இந்திய சந்தையில் கிடைத்துக்கொண்டிருக்கும் ஆடியின் ஒரே ஸ்போர்ட்ஸ் மாடல் கார் Q7 தான். மக்கள் அதைவிட சிறிய ஸ்போர்ட்ஸ் மாடல் கார் வேண்டும் என்று விரும்பியதால், Q5 மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் 30,000 முதல் 50,000 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ.19,50,000 முதல் ரூ.32,50,000 வரையுள்ள விலையில் இக்கார்கள் கிடைக்கின்றன. அங்கு நான்கு மாடல்களில் இக்கார்கள் விற்பனையில் உள்ளன. இந்தியாவில் விற்பனைக்கு இப்போதைக்கு இரண்டு மாடல் Q5 களே அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

ஜெர்மனியில் இங்கல்ஸ்டாட்டில் இருக்கும் 'ஆடி'தொழிற்சாலையில் முற்றிலுமாக தயாரிக்கப்பட்டே இக்கார்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்கம் விலை குறையுமா?

Published on: புதன், 4 மார்ச், 2009 // , , , , ,

வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்துவரும் தங்கத்தின் விலை இவ்வாரத் தொடக்கம் முதல் குறைய ஆரம்பிக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதமே ஒரு பவுன் 10,000 ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியிருந்த தங்கம் தினமும் 200, 300 என்று விலை ஏறி உச்சபட்சமாக நேற்றைக்கு முன்பு 11,464 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆயினும் ஆறுதல் அளிக்கும் விதமாக, நேற்று பவுனுக்கு ரூ.232 குறைந்து ரூ. 11,232 என்ற விலையில் இருந்தது. இன்று மேலும் ரூ.72 குறைந்து பவுன் ரூ.11,160 ஆக சந்தை நிலவரம் இருந்தது. இரண்டுநாட்களில் ரூ.300 என்ற அளவுக்கு குறைவது நல்ல அறிகுறி என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.1395/= என்பதாக உள்ளது.

மேலும், உலக அளவில் தங்கத்தின் இருப்பு அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் மேலும் விலை இறங்கி ஒரு பவுன் ரூ.10,000 என்ற அளவுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா இறக்குமதி தடையை இந்தியா விலக்கியது!

Published on: செவ்வாய், 3 மார்ச், 2009 // , , , , , ,
சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்ய முன்னர் விதித்திருந்த தடையை இந்தியா நீக்கம் செய்தது. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதாக சீனா உறுதியளித்ததைத் தொடர்ந்து தடை விலக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்தது.

சீனா பொம்மைகளினால் பொது ஆரோக்கியத்திற்குப் பங்கம் விளையும் எனக் கருதியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இந்திய அரசு இத்தடையை விதித்திருந்தது. உலக வியாபார கழகத்தில் இந்தியாவின் தடையின் மீது கேல்வி எழுப்புவோம் என சீனா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், முன்னர் விதித்தத் தடை உலக வியாபார கழகத்தின் அனுமதியுடனேயே செயல்படுத்தப்பட்டது என வணிக அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

உலக விளையாட்டுப் பொருட்களில் 70 சதவீதத்தையும் சீனா ஆக்ரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் 61.7 பில்லியன் டாலர் நட்டம்!

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் (AIG) 2008 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 61.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய்) நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க காப்பீட்டு நிறுவத்தின் இந்த அறிவிப்பு பங்கு சந்தைகளில் எதிரொலித்தது.

இந்நிறுவனத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசு கூடுதலா 30 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கிய பொருளாதார உதவியில் அரசிடமிருந்து அதிக உதவி பெற்ற நிறுவனம் இதுவே. இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே 150 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன.

அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் வீழ்ச்சியடைந்தால் அது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தபால் நிலையத்தில் இனி மருந்துகள் வாங்கலாம்!

இந்தியாவின் தபால்தந்தி துறை ஆண்டொன்றுக்கு ரூ.500 கோடி நஷ்டமடைவதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த நஷ்டத்தை சரிகட்டுவதற்காக அத்யாவசிய மருந்துகளையும், பிற பொருட்களையும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வந்தது.

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறை ப்படுத்தப்படலாமென்று தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது.

ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற தலைவலி, காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள், வைட்டமின், தாதுக்கள் மருந்து, பிற பொது மருந்துகள் இவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, சாதாரண பசை போன்ற, எழுதுபொருட்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்களும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட திட்டம் உள்ளது. சாதாரண மக்களும் இணைய தள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் இணைய தள வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர்வாசிகள் குறைந்த கட்டணத்தில், கணினி கல்வி பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பரிட்சார்த்த கட்டமாக தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தபால் நிலையங்களில் வணிக ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

மற்ற கடைகளை விட விலை குறைவாகவும் அதே சமயம், விற்பனையாளர்களுக்கு விற்பனை ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் இத்திட்டம் வெற்றி பெறும் என்று நம்புவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா: ஹோண்டா புதிய தொழிற்சாலைத் திட்டம் கைவிடல்?

தன் இரண்டாவது இந்தியத் தொழிற்சாலையை ரூ.1000 கோடி முதலீட்டில் தொடங்க இருந்த ஜப்பானின் ஹோண்டா வாகன தயாரிப்பு நிறுவனம் அதை தற்காலம் நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கிறது.பொருளாதார மந்த நிலை காரணமாக கார்களின் விற்பனை பெருமளவில் குறைந்து போனதையடுத்து ஹோண்டா நிறுவனம் இம்முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இந்தியாவில் சீல் குரூப்புடன் சேர்ந்து ஹோண்டா சீல் கார்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஹோண்டாவுக்கு, நொய்டாவில் ஏற்கனவே ஒரு கார் தயாரிப்புத்தொழிற்சாலை இருக்கிறது. ஒரு லட்சம் கார்களை தயாரிக்கக்கூடிய வசதி இருந்தும் கூட, அந்த தொழிற்சாலை 55,000 கார்களை மட்டுமே தயாரிக்கிறது.

மட்டுமின்றி, 1,000 தற்காலிக ஊழியர்களையும் இந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

இந்திய ரூபாய் ரிக்கார்ட் வீழ்ச்சி!

தொடர்ச்சியான நான்காம் நாளான நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விழ்ச்சியைச் சந்தித்தது. இதுவரை இல்லாத அளவு முதன் முறையாக டாலருக்கு 51 ரூபாய் கடந்தது.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 50.60 ரூபாய் ஆனது. அதற்குப் பின் தற்பொழுது மிக அதிகபட்சமாக 51.60 ஆக ஆகியுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளிலும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலும் டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

லட்ச ரூபாய் கார் மார்ச் 23ம் தேதி முதல் விற்பனை

Published on: வெள்ளி, 27 பிப்ரவரி, 2009 // , ,
ஒரு லட்ச ரூபாய் காரான நானோ மார்ச் 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்த கார் டாடா மோட்டார்ஸ் டீலர்களிடம் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

ஏப்ரல் 2ம் வாரம் முதல் நானோ காருக்கான புக்கிங் தொடங்கும் என்று டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்பதிவு மற்றும் இதர நடைமுறைகள் குறித்தும் மேலதிக விவரங்கள் இத்தொடக்க விழாவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்தியா: டீசல் விலை மேலும் ரூ.2 குறைகிறது?

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , , ,
டீசல் விலையை இரண்டு கட்டமாக ரூ.4/= குறைக்க மத்திய அரசு கடந்த டிசம்பரில் முடிவு செய்திருந்தது. அதன்படி மத்திய அமைச்சரவை கூடி முதற்கட்டமாக ரூ.2/= குறைக்க முடிவெட்டியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளையே மத்திய அமைச்சரவை கூட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டீசல் விலையை குறைத்தால் பணவீக்கம் குறையும். வாகன போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் விலை குறையும் என்பதாக அரசு எதிர்பார்க்கிறது.

ஆயினும், பெட்ரோல் விலை இப்போதைக்கு குறைக்கப்பட மாட்டாது என்றும் ரூ.10 விலை, இரண்டு கட்டமாக குறைக்கப்பட்டு விட்டது என்றும் அரசுத்தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியா கோல்டன் 50: 50 பைசாவில் தொலைபேசலாம்

Published on: திங்கள், 23 பிப்ரவரி, 2009 // , , , ,
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. இதன்படி இந்தியாவின் எந்த பகுதிக்கும் 50 காசுகளில் பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ கால்' மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர்.

இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன் இண்டியா' திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 'இண்டியா கோல்டன் 50' என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல். வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப்பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள்.
என்று முதலமைச்சர் பேசினார்

கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல் மூலம் வழங் கப்பட்டுள்ளன. இந்த '3 ஜி' சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என்.எல் மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '3 ஜி' சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் பேசுகையில்
சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த '3 ஜி' சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிவழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் '3 ஜி' இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


'3 ஜி' சேவைக்கு தனி 'சிம் கார்டு' என்றும் அவர் தெரிவித்தார்

இந்திய தபால் துறை ஆண்டுக்கு ரூ.500 கோடி நஷ்டத்தில்!

இந்திய தபால் தந்தி துறை ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மக்களுக்கு 26 விதமான சேவைகளை வழங்கிவரும் இத்துறையில் 20 சேவைகள் அரசின் மானிய உதவியாலே வழங்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2005-06ம் ஆண்டு 1,200 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், 2007-08ம் ஆண்டு 1,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தனியார் கூரியர் நிறுவனங்கள் பற்றியும் அவைகளின் வருமானம் பற்றிய தகவல்கள் தன்னிடம் இல்லையென்றும், தபால் துறையின் வருவாயை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை

Published on: சனி, 14 பிப்ரவரி, 2009 // , , , ,

தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தங்கம் விலை எதிர்பாராத ஏற்றம் கண்டு வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் பாரல் 35/ டாலர் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இதன் காரணமாக, உலகநாடுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வங்காட்டுவதால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு ஏறி வருகிறது.


கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்தியாவில் ரூ.8,784/= க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.10,928/=க்கு விற்கப்பட்டது.

தங்கத்தில் சேமிப்பது அதிகரித்திருக்கிறது. தங்கச் சுரங்கம் ஒன்று ஆப்ரிக்காவில் தன் உற்பத்தியைக் குறைத்துள்ளது. இக்காரணங்களால் தங்கத்தின் விலை உயர்வு காணப்படுவதாக நகைக்கடை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!