Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

புதிய தலைமை தேர்தல் ஆணையர் மீது புதிய வழக்கு

நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நவீன்சாவ்லா ஏப்ரல் 20ம் தேதி பதவியேற்கிறார். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் அளித்த ஒப்புதல், சட்ட விவகாரங்கள் துறை செயலருக்கு அனுப்பப்படும். அதன்பின், இதை அரசிதழில் வெளியிட சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்யும். இதன் மூலம் நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலிலிருந்து (ஏப்ரல் 20 முதல்) இவர் பொறுப்பேற்பார்.

இதற்கிடையே, நவீன் சாவ்லாவை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்தது துரதிருஷ்டமானது என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. பா ஜ க பொதுச் செயலர் அருண்ஜெட்லி "தான் பாரபட்சமற்ற நபர் என்பதை சாவ்லா நிரூபிக்க வேண்டும். தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, தன் குடும்பத்தினரால் நடத்தப்படும் அரசு சார்பற்ற அமைப்புக்கு காங்கிரஸ் எம்.பி.,க்களிடம் இருந்து நிதியுதவி பெற்றது போன்ற குற்றச்சாட்டுக்கள் சாவ்லா மீது சுமத்தப்பட்டுள்ளன' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை வரும் 20ம் தேதி நடக்கும் என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்
எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இரண்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவால், தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரையை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளாக பதவி வகித்தவர்களை மட்டுமின்றி, பிரபலமான வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், உச்ச; உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும். அதுபற்றி பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசியல் சட்டத்தின் 324வது பிரிவு மற்றும் துணைப் பிரிவு 5ன்படி, தேர்தல் ஆணையரை நீக்கும்படி, தலைமை தேர்தல் ஆணையர் பரிந்துரை செய்யலாம். அந்த அடிப்படையில்தான் நவீன் சாவ்லாவை நீக்கும்படி கோபாலசாமி பரிந்துரை செய்துள்ளார். எனவே, நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
என்று கோரப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையரை நீக்கக்கோரிய மனு நிராகரிப்பு

இந்தியாவின் தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான நவீன்சாவ்லாவை அப்பொறுப்பிலிருந்து விலக்கிவிடும்படி தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் அந்த கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியரசுத்தலைவரின் இம்முடிவுக்கு பாரதியஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கிளின்டனின் அமைப்புக்கு அமர்சிங் அளித்த நன்கொடை குறித்து விசாரிக்க கோரி மனு

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கிளின்டனின் நல அமைப்புக்கு கருப்புப் பணத்தை ஹவாலா பரிவர்த்தனை மூலம் நன்கொடையாக அளித்தார் என்று தேர்தல் ஆணையத்திடம் இன்று புகார் அளிக்கப் பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் தன்னுடைய நிகர வருமானமாக 37 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ள அமர் சிங், கிளின்டனின் நல அமைப்புக்கு (10 மில்லியன் டாடலர்) 43 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள சதுர்வேதி, இவற்றை எங்கிருந்து அளித்தார்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இந்த தொகையை தன்னுடைய வருமான வரி கணக்கின் போது காட்டினாரா? இத்தகைய வெளிநாட்டு பரிவர்த்தனையின் போது பெற வேண்டிய ரிசர்வ் வங்கியின் அனுமதி எதனையும் அவர் பெற்றாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் புகாரை ஜனவரி 30ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சதுர்வேதி சமர்ப்பித்தார்.  இவர் ராஜ்ய சபா உறுப்பினராக இருப்பதால் ராஜ்ய சபா அலுவலரிடம்தான் இந்தப் புகாரை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதால் புகாரின் நகல்களை இன்று பத்திரிகையாளர்களிடம் அளித்தார்.

விசுவநாத் சதுர்வேதி என்பவர் இன்று அளித்த புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கூறி பொது நலவழக்கு தொடர்ந்தார்.

தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரை நிராகரிப்பு

Published on: திங்கள், 2 பிப்ரவரி, 2009 // , , ,
குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை மத்திய அரசு இன்று நிராகரித்தது.

இந்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரைக் கடிதம் எழுதியிருந்தார். தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு மாதங்களும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதே அளவு நாட்களும் மீதம் உள்ள நிலையில் கோபால்சாமியின் இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இப்பரிந்துரைக் கடிதத்தை அரசு இன்று நிராகரித்துள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக கருத்து கூறிய சட்ட அமைச்சர் பரத்வாஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பாக அரசின் கொள்கை இருப்பதாகவும், அந்த கொள்கை தொடரும் என்றும் கூறினார். இந்த சர்ச்சை துரதிருஷ்டவசமானது என்று கூறிய அவர் சாவ்லாவின் பணியை இது பாதிக்காது என்றும் கூறினார். கோபால் சாமி தேர்தல் ஆணையாளராகப் பணிபுரிய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர் போன்றல்ல என்றும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையராக டி.என் சேஷன் இருந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து ஆணையம் சீரமைக்கப்பட்டது. தேர்தல் ஆணையராக ஒருவர் என்ற நிலை மாறி மூன்று தேர்தல் ஆணையர்களும் அவர்களில் ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையர் என்றும் மாற்றியமைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

தேர்தல் ஆணையரை நீக்க தலைமைத் தேர்தல் ஆணையர் பரிநதுரை

தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர்  கோபால் சாமி குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார்.

நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அவர் அக்கட்சிக்கு சார்பாக நடந்து கொள்கிறார் என்றும் பாரதீய ஜனதா கட்சி ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரும் இக்கோரிக்கையை வைத்திருப்பதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கோபால் சாமியின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவருக்குப் பின் நவீன் சாவ்லாதான் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பார்.  பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இப்பரிந்துரையால் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் அரசியல் வெளிப்பட்டுள்ளதாகக் கருத முடிகிறது.

தலைமைத் தேர்தல் அதிகாரியின் இப்பரிந்துரையை ஏற்று நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் டி. ராஜா, இப்பரிந்துரை அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றம் சுமத்தினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!