Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர்: 514 கோடி ரூபாய் சொத்து!

Published on: வெள்ளி, 10 ஏப்ரல், 2009 // , , , , ,
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கிம்ஜி படாடியா தன்னுடைய சொத்து ரூபாய் 514 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் தகவல் தந்துள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக சொத்துடைய வேட்பாளராக இவர் அறியப்பட்டுள்ளார்.

சுரேந்திர நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் இவர் தன்னுடைய அசையும் சொத்துகளின் மதிப்பு ரூபாய் 255 கோடி என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூபாய் 259 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

41 இலட்சம் மதிப்புடைய மெர்சிடீஸ் பென்ஸ் உள்பட நான்கு கார்கள், சுமார் 50 இலட்சம் மதிப்புள்ள 1.05 கிலோ தங்கம், மகாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் சில இடங்களில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூபாய் 208 கோடி மதிப்பிலான மற்றவகை நிலங்கள் என்று தன்னுடைய அசையும் மற்றம் அசையா சொத்துகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

தன்னுடைய கல்வித்தகுதியாக அவர் எஸ்.எஸ்.சி. (பத்தாம் வகுப்பு) யையே அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

குஜராத் அமைச்சர் பதவி விலகல் - கைது செய்யப் படக் கூடும்

Published on: வெள்ளி, 27 மார்ச், 2009 // , , , , ,
குஜராத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த அமைச்சர் மாயா பென் கோட்னானி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியதாகவும் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இவர் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு அழைத்தது. இரண்டு முறை அனுப்பப் பட்ட அறிவிக்கைக்கு எவ்வித பதிலும் அளிக்காததைத் தொடர்ந்து, இவர் தலைமறைவாகிவிட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இவர் எந்நேரமும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.

தனக்கு முன்பிணை வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப் பட்டதை அடுத்து, இன்று அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். விரைவில் இவர் கைது செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மோடிக்கு மாற்றமாக குஜராத் காவல்துறை இயக்குநர் கருத்து!

Published on: செவ்வாய், 24 மார்ச், 2009 // , , , , ,
ஐ.பி.எல். போட்டிகளை தேர்தல் நேரத்தில் நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்ய இயலாது என்று கூறி மாற்றுத் தேதிகளில் நடத்த மத்திய அரசு பரிந்துரைத்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்றும், இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடு பாதுகாப்பு தர முடியாதது வெட்கக்கேடு. காமன்வெல்த் போட்டிகளுக்கு மட்டும் பாதுகாப்பு தர முடியுமா? என்றும் நாட்டின் மானத்தை காப்பாற்ற குஜராத் அரசு ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு தர முடிவு செய்துள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் குஜராத் மாநில காவல்துறை இயக்குநர் இதற்கு மாற்றமாகக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் நர்கரி அமீன் என்பவருக்கு அம்மாநில காவல்துறை இயக்குநர் எழுதிய கடிதத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியிலிருந்து மே 3ஆம் தேதிவரை 20-20 போட்டிகளை நடத்த தகுந்த பாதுகாப்பு அளிக்க இயலாத நிலையில் குஜராத் அரசு இருப்தாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ள இந்தப் போட்டிகளை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு முன் அல்லது மே 10ஆம் தேதிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளை நடத்த குஜராத் அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று மோடி கூறியிருந்ததற்கு மாற்றமாக காவல் துறை இயக்குநர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித் பெண் கூட்டுக் கற்பழிப்பு : 6 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சிறை!

குஜராத் மாநிலத்தின் படான் நகரில் 19 வயது தலித் மாணவி கூட்டாகக் கற்பழிக்கப் பட்ட வழக்கில், 6 கல்லூரி ஆசிரியர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்களான மனீஷ் பர்மார், மஹேந்திரா பிரஜாபதி, அஷ்வின் பார்மர், கிரன் படேல், சுரேஷ் படேல் மற்றும் அதுல் படேல் ஆகியோரை கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவஸ்தவா குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டார்.

மேலும் இக்குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலத்தில் படான் நகரில் மாநில அரசால் நடத்தப்படும் இக்கல்லூரியில் படித்த அந்த தலித் மாணவியை இந்த ஆறு ஆசிரியர்களும் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து கற்பழித்தனர் என்று இப்பெண்ணின் பெற்றோர் கடந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் புகார் தெரிவித்தார்.

தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்தால் மிகக் குறைவான உள் மதிப்பெண்களே வழங்குவோம் என்று இந்த ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

பள்ளியில் பால் குடித்த 61 குழந்தைகள் உடல் நலக்கேடு!

Published on: புதன், 4 மார்ச், 2009 // , , , , ,
குஜராத்தில் பள்ளி ஒன்றில் பால் குடித்த 61 பள்ளிக் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

குஜராத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மாநில அரசு 200 மில்லி பால் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது. செவ்வாய் கிழமை பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பட்காவாடா என்ற கிராமத்தில் உள்ள பகுதியில் செவ்வாய் கிழமை பள்ளி தொடங்கிய பின் 97 குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

பாலைக் குடித்து சில நேரம் கழித்து குழந்தைகள் பள்ளி வளாகத்திலேயே வாந்தி எடுத்தனர். இதனால் அந்தப் பள்ளியில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து அந்தக் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியில் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர் மருத்துவமனைப் பகுதியில் பெரும் திரளாகக் கூடினர்.

பள்ளிக்குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கு முன் உற்பத்தி தேதிதியை சரிபார்த்த பின்னரே கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.

தரமற்ற பால் எங்களுக்குத் தேவையில்லை. நாளை முதல் இத்தகைய பால் பாக்கெட்டுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மாநில அரசின் பால் வழங்கும் திட்டத்தின் படி இனி எங்கள் குழந்தைகள் பள்ளியில் பால் குடிக்காது என்று அந்தப் பகுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் போட்டி

குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சி கூறியுள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சி குஜராத்தை முக்கியமான மாநிலமாகக் கருதுவதால், குஜராத்தின் 26 தொகுதிகளிலுதம் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர். பி. சிங் கூறினார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 182 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் பிரச்சாரம்

Published on: சனி, 28 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் 7ஆம் நினைவு நாளான வெள்ளிக் கிழமையன்று, மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

குஜராத் மாநில முதல்வராக குஜராத்திற்கு அவர் செய்த சாதனைகளை மறைத்து, குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனவே கோத்ரா இரயில் எரிப்பு நாளான இன்று இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது என்று மாநில பாரதீய ஜனதா கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறினார்.

"கோத்ரா அவலம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், கோத்ரா கலவரம் தொடர்பான கெட்ட நினைவுகள் வருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சாரம் மூலம் குஜராத் மாநிலத்திற்கு மோடி செய்த சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டப்படுகிறது" என்று பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

ஆனால் இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் கோத்ராவை முன்னிட்டுச் செய்யவில்லை என்றும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் இதுபோன்ற பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும், மக்களவைத் தேர்தல் அண்மித்து வருவதால் இப்பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தகவல் நுட்பப் பிரிவு தலைவர் சசிரஞ்சன் யாதவ் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று சுமார் 2 இலட்சம் மின் அஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

கோத்ரா கலவர வழக்கு மீண்டும்!

Published on: வெள்ளி, 27 பிப்ரவரி, 2009 // , , , , ,
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கோத்ரா கலவர வழக்கை குஜராத் காவல்துறை மீண்டும் தொடங்கி உள்ளது.

குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பாரூக் சேக் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டது. மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோத்ரா கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த 1958 வழக்குகளையும் மீண்டும் தொடர மாநில காவல்துறைக்கு உத்தரவிடடதாக அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டது.

1958 வழக்குகளில் 93 வழக்குகள் மீண்டும் தொடங்கப் பட்டுவிட்டதாகவும் மற்றவற்றில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் முழுவதையும் மீண்டும் தொடங்கி சாட்சிகளிடம் புதிய வாக்கு மூலங்களைப் பெறவும், புதிதாக விசாரணையை மேற்கொள்ளவும் 2004ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

அமைச்சருக்கெதிரான விசாரணையை மேற்கொள்ள குஜராத் நீதிபதி மறுப்பு!

Published on: வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 // , , , , ,
குஜராத் மாநில அமைச்சர் மாயா கொடானி மற்றும் விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெயதீப் பட்டேல் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு தொடர்ந்த வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன். வேறொரு நீதிபதி விசாரிப்பார் என்றும் விசாரணை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதி ஆனந்த் தவே இதற்காக காரணத்தைக் கூறவில்லை.


முன்னதாக மாநகர அமர்வு நீதிமன்ற நீதிபதி அஷ்வனி, மாநில கல்வித்துறை அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத்தலைவருக்கும் முன்ஜாமீன் இந்த மாதம் 5ஆம் தேதி அளித்தார்.

குஜராத் கலவரம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து. இதுகுறித்த விசாரணைக்கு நேரில் வருமாறு மாநில அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத் தலைவருக்கம் சிறப்பு விசாரணைக் குழு பலமுறை அறிவிக்கை அனுப்பியும் இருவரும் ஆஜராகாமல் இருந்தனர். இவர்கள் இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

கல்யாண விருந்து சாப்பிட்ட 300 பேர் வாந்தி

Published on: திங்கள், 16 பிப்ரவரி, 2009 // , , ,

குஜராத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட சுமார் 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜான்கர் எனும் கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணி அளவில் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. சுமார் 1000 பேர் இதில் கலந்து கொண்டனர். விருந்துண்ட 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 200 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாம் நகரிலிருந்து இரண்டு மருத்துவக் குழுக்கள் இக்கிராமத்திற்கு விரைந்துள்ளதாக ஜாம் நகர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

கோத்ரா வழக்கு: 5 நாட்கள் சிறப்பு விசாரணைக்குழு கட்டுப்பாட்டில் டி.எஸ்.பி.

Published on: திங்கள், 9 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
2002 ஆம் ஆண்டு கோத்ராவில் நடைபெற்ற கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட வல்சாத் காவல்துறை துணை கண்கானிப்பாளர் கே.ஜி. எர்தாவிடம் விசாரணை செய்வதற்காக 5 நாட்கள் சிறப்பு விசாரணைக் குழுவின் (SIT) கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிறப்பு விசாரணைக் குழு தாங்கள் இதுவரை திரட்டிய தகவல்களை மாநாகர நீதிபதி சி.பி. பட்டேலிடம் அளித்து எர்தாவை விசாரணைக்காக ஒப்படைக்கோரினர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த அனுமதியை அளித்துள்ளார்.

இந்த கலவரம் நடைபெறம்போது அவர் மெகாநிகர் பகுதியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் கடமையிலிருந்து தவறியதாகவும் ஆதாரங்களை அழித்ததாகவும் இவர் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

குஜராத் கலவர வழக்கு தொடர்பாக டி.எஸ்.பி கைது!

2002 ல் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் மாநில உயர் போலீஸ் அதிகாரியான டி.எஸ்.பி கெ.ஜி. எர்தாவை எஸ்.ஐ.டி கைது செய்தது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைபடி விசாரணையை ஏற்று நடத்திய எஸ்.ஐ.டி, நேற்று டி.எஸ்.பி எர்தாவைக் கைது செய்ததாக தெரிகிறது.

குஜராத் கலவரத்திற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இக்ஸான் ஜப்ரி உட்பட 35 பேரைக் கொலை செய்யப்பட்ட குல்பர்கா சொஸைட்டி கொலை வழக்கு தொடர்பாக எர்தா கைது செய்யப்பட்டுள்ளார். கலவர வேளையில் மெஹானி நகர் காவல்நிலையத்தில் எர்தா பணியாற்றியிருந்ததாக எஸ்.ஐ.டி தலைவரும் முன்னாள் சிபிஐ டைரக்டருமான ஆர்.கெ.ராகவன் தெரிவித்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பி எர்தாவே முன்னர் இதே குல்பர்கா வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்தார். இவ்வழக்கு தொடர்பாக இவரைச் சமீபத்தில் எஸ்.ஐ.டி விசாரணை நடத்தியிருந்தது. தற்பொழுது பணியிலிருக்கும் வல்ஸத் மாவட்டத்திலிருந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குல்பர்கா வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 2000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எஸ்.ஐ.டி தாக்கல் செய்துள்ளது. 21 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். மேலும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி துவங்கிய சங்கபரிவார அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 14 பேரைக் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். முன்னாள் முனிஸிப்பல் கவுன்ஸிலர் சுனிலால் பிரஜாபதி, தற்போதைய கவுன்ஸிலர் பிபின் பட்டேல் போன்றவர்களும் தலைமறைவானவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்களாவர். குற்றப்பத்திரிக்கையில் 567 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தி்ல் 1200 கிலோ அமோனியம் நைட்ரேட் பறிமுதல்

Published on: சனி, 7 பிப்ரவரி, 2009 // , , , , , ,
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் ஜகாதியா தாலுக்காவிற்குட்பட்ட தேஷ்பூர் எனும் கிராமத்தில் சுமார் 1200 கிலோ எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டை தீவிரவாத எதிரப்பு காவல்துறை கைப் பற்றி உள்ளது.

ஹஸ்முக் பட்டேல் என்பவரது வீட்டிலிருந்து 1200 கிலோ எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டைக் கைப்பற்றி உள்ளோம் என்று தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை (ATS) தலைவர் அஜய் தோமர் கூறியதாக பி.டி.ஐ.செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்காக பட்டேலை தங்கள் காவலில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பொருள்களை வைத்திருக்க அவர் உரிமம் பெற்றிருக்கவில்லை என்றும், இதில் வேறு எவரின் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு வகையான வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு அமோனியம் நைட்ரேட் முக்கிய வேதிப் பொருள் என்பது குறிப்பிடத் தக்கது.

அஹமதாபாத் தொடர்குண்டு வெடிப்பு: மேலும் 5 குற்றப் பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு 57 பேரை பலிவாங்கிய அஹமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 5 குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்தது.

சர்கேஜ், மணிநகர் (2 வழக்குகள்), கலுப்பூர், வாத்வா ஆகிய பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக குற்றப் பிரிவு காவல்துறை இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கடந்த ஆண்டு ஜூலை 26 அன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் 21 குண்டுகள் வெடித்தன. குற்றப் பிரிவு ஒவ்வொரு குண்டு வெடிப்பையும் தனி வழக்குகளாகப் பதிவு செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறினர்.

சர்கேஜ் குண்டு வெடிப்பில் 54 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 47 பேர் தலைமறைவாக உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மணி நகர் குண்டு வெடிப்பில் 44 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 48 பேர் தலைமறைவாக உள்ளனர். வாத்வா மற்றும் கலுப்பூர் குண்டு வெடிப்புகளில் 43 பேர் குற்றவாளிகள் எனவும் 45 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இக்குற்றப் பத்திரிகை ஒவ்வொன்றும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் சிமி அமைப்பினர்தான் தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கூறுகிறது.

குஜராத் அமைச்சர் தலைமறைவு?

Published on: செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 // , , , , , ,
குஜராத்தில் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவரும் மற்றும் ஒரு மருத்துவரும் தலைமறைவாக இருப்பதாக கோத்ரா கலவரம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலணாய்வுக் குழு அறிவித்துள்ளது.

மாயாபின் கோட்னானி என்ற அந்த அமைச்சர் குஜராத் மாநில பெண்கள் முன்னேற்றம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். ஜெய்தீப் பட்டேல் என்பவர் விசுவ இந்து பரிசத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த இருவருக்கும் சிறப்பு புலணாய்வுக் குழு விசாரணைக்கு வருமாறு அறிவிக்கை அனுப்பியது. அந்த அறிவிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் இருவரும் கைது செய்யப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மாயாபின்னுக்கு ஜனவரி 29 மற்றும் 31 ஆம் தேதி அறிவிக்கை அனுப்பினோம். அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே அவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கிறோம். அவர் கைது செய்யப்படக் கூடும் என்று சிறப்புப் புலணாய்வுக் குழு உறுப்பினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!