Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ராம் சேனா தலைவர் மங்களூர் மாவட்டத்திற்குள் நுழையத் தடை!

ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவரான பிரமோத் முதலிக் கர்நாடகாவின் தெற்கு கன்னடா மாவட்டத்திற்குள் ஒரு ஆண்டுக்கு நுழையத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு அவர் வந்தால் சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மங்களூரைத் தலைநகராக் கொண்டுள்ள தெற்கு கன்னடா மாவட்ட நிர்வாக அதிகாரிகள் 15 பக்கங்களைக் கொண்ட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக மாவட்ட அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜனவரி மாதம் கேளிக்கை விடுதிக்குள் சென்று இளம் பெண்களைத் தாக்கியது, கடந்த மாதம் காதலர் தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுகள் உள்பட பல்வேறு காரணங்கள் இந்த தடை உத்தரவுக்கு கூறப்பட்டுள்ளன.

மாவட்ட அமர்வு நீதிபதி பொன்னுராஜ் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

பெங்களூருவில் 39 வெளிநாட்டவர் உள்பட 101 பேர் கைது!

Published on: ஞாயிறு, 8 மார்ச், 2009 // , , , , ,
பெங்களூரு அருகே ரமனங்கரா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் உரிமம் இல்லாமல் மது பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தபோது 39 வெளிநாட்டவர் உள்பட 101 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டுப் பெண்கள் உள்பட 22 பெண்களும் அடங்குவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டவரில் ஜெர்மனி, பிரான்சு, சூடான், இரான் மற்றும் எமன் ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் விமான விபத்து!

பெங்களூருவின் அருகே சிறிய வகை விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Chopper என்றழைக்கப்படும் சிறியவகை விமானம் பெங்களூரு அருகில் உள்ள சேசகிரி என்னும் இடத்தில் கீழே விழுந்தது என்றும், விமானம் முழுமையாக எரிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இதில் விமானத்தின் உள்ளே இருந்த இருவர் மற்றும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவர் என மொத்தம் மூவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்விடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் விரைந்துள்ளனர் எனவும், விபத்து குறித்து விசாரனைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எடியூரப்பாவின் மகன் ஷிமோகா தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்

ஷிமோகா மக்களவைத் தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா அறிவிக்கப் பட்டுள்ளார்.

குடும்ப அரசியல் நடத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியையும், கர்நாடக மாநிலததில் தேவகவுடாவையும் எதிர்த்து பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வந்த நிலையில் தற்போது மாநில முதல்வரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் கர்நாடகாவில் பா.ஜ.க.வில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஷிகாரிபூர் நகர்மன்றக் குழு உறுப்பினராக தற்போது ராகவேந்திரா இருந்து வருகிறார். அவரது செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. எனினும் கட்சியில் மூத்த உறுப்பினர்கள் பலர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ராகவேந்திரா மட்டுமின்றி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் உடாசியின் மகன் சிவகுமார் உடாசிக்கும் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எடியூரப்பா மனைவி மரணம் குறித்து மறு விசாரணை!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் மனைவி மைத்ரா தேவி கடந்த 2004-ம் ஆண்டு ஷிமோகா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் தண்ணீர் தொட்டி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி அப்போது காவல்துறையினர் விசாரணை செய்து வழக்கையும் மூடி விட்டனர்.

ஷிமோகாவைச் சேர்ந்த ஆர் சேஷாத்ரி என்ற வழக்குரைஞர், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மறு விசாரணை செய்யும்படி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்குரைஞர் சேஷாத்ரி, இந்த மரணம் ஒரு கொலை என்றும் உண்மைகள் மறைக்கப்பட்டு சாட்சியங்கள் திரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறார். எடியூரப்பா, அவரது மகள், இரண்டு மகன்கள், பணியாளர்கள் அனைவரும் காவல் துறையினருக்குத் தவறான தகவல்களைத் தந்து திசை திருப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கிறார்.

முதல்வர் எடியூரப்பா இது பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

பா.ஜ.க.வை ஆதரிக்க சிவ சேனை நிபந்தனை

பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலை தெளிவாக அறிவிக்கப் பட்டதால்தான் அத்வாணி பிரமாராக சிவசேனை ஆதரவளிக்கும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் மராட்டியர் அதிகமாக வாழும் பகுதியாகும். நீண்ட நாட்களாகவே கர்நாடகாவுக்கும் மகாரஷ்டிராவுக்கும் இது குறித்து பிரச்சனை இருந்து வருகிறது. பெல்காம் மாவட்டத்தை இழக்க விரும்பாத கர்நாடகா பெல்காமை தனது இரண்டாவது தலைநகரம் என்றறிவித்து அங்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராகத் தங்களது ஆதரவு வேண்டுமேனில் பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனை நிபந்தனை விதித்துள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவர்களில் ஒருவருமான மனோகர் ஜோஷி இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மற்றும் அத்வானி ஆகியோரை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்தாலும் பெல்காம் பகுதியில் உள்ள மராட்டி மொழியினர் மிகவும் கஷ்டப் படுகின்றனர் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!