Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நேற்று தரையிறங்கிய விமானத்தில் ஐந்து பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆம், நேப்பிள்சில் இருந்து கிளம்பிய இரட்டை எந்திர விமானம் ஒன்று தானியங்கி நிலையில் 10,000 அடி தூரத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், விமானிக்கு மரணம் சம்பவித்தது.

இதையடுத்து, பயணிகளில் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொள்ள, ஒற்றை எந்திரம் உரிமம் மட்டுமே பெற்றிருந்த அந்தப் பயணிக்கு தேவையான குறிப்புகளை அளித்து அந்த இரட்டை எந்திர விமானத்தை தென்மேற்கு ஃப்ளோரிடா விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக மாகாண விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தின் மற்ற ஐந்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அமெரிக்காவில் 6 இந்தியர்கள் பலி!

அமெரிக்காவில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் இந்தியர் ஒருவர். பொருளாதார மந்தநிலையினைத் தொடர்ந்து குடும்ப செலவுக்குப் போதிய வருமானமில்லாததால் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

கேரளாவிலுள்ள வயநாடு அய்யன்கொல்லியிலுள்ள செரியேரியைச் சேர்ந்தவர் அப்பு மாஸ்டர். இவரின் அஸோக். அப்பு மாஸ்டரின் மகளான அபயாவின் கணவர் தேவராஜன். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் சிலிக்கன்வேலி ஸாண்டாக்ளாராவில் பணிபுரிகின்றனர்.

சம்பவத்தினத்தன்று, குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தேவராஜன் குடும்பத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் அசோகன், மனைவி சுஜிதா, மக்களான அலகா, அகில், மேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். தேவ ராஜனின் மனைவி மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியப்பின் தேவராஜனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் பல உயிர்களையும் பலிவாங்குவது தொடர்கதையாகி வருகிறது.

அல்காயிதா அமைப்பை துடைத்தொழிப்போம் - ஒபாமா சூளுரை

அல்காயிதா அமைப்பு பாகிஸ்தானில் பாதுகாப்பான இடங்களில் இருந்துக் கொண்டு இன்னும் செயல்பட்டு வருவதாகவும், மேலும் புதிய தாக்குதல்களை நடத்த அது திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அல்காயிதா அமைப்பினர் செயல்படும் பாகிஸ்தானின் எல்லைப்புறப் பகுதிகள், 'அமெரிக்கர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான பிரதேசங்கள்' என்றும் அவர் வர்ணித்தார்.

செப்-11 தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி அமைத்திருந்த தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அங்கு போர் முடிவுக்கு வரவில்லை என்பதையும், கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.

அல்காயிதா பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதைப் பற்றி பல உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த பின்னரும் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் ஒபாமா எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக மேலும் 21,000 பேர் கொண்ட படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். இதோடு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 65,000 ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அமெரிக்காவில் விமான விபத்து 16 பேர் பலி!

Published on: திங்கள், 23 மார்ச், 2009 // , , , , ,
அமெரிக்காவின் வடமாநிலமான மோன்டானாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 16 பயணிகள் கொல்லப் பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

பட்டே விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கும் போது அருகில் இருந்த கல்லறைத் தோட்டத்தில் விமானம் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆகாய சுற்றுலா சென்ற விமானமாக இது இருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

கத்தோலிக்க மதகுருக்களுக்கு எதிரான செக்ஸ் குற்றச்சாட்டு அதிகரிப்பு

அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க மத குருக்களுக்கு எதிராகக் கூறப்படும் செக்ஸ் குற்றச் சாட்டுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக கத்தோலிக்கத் திருச்சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

2008ஆம் ஆண்டு கூறப்பட்ட இத்தகைய குற்றச் சாட்டுகள் தொடர்பாக கத்தோலிக்கத் திருச்சபை 436 மில்லியன் அமெரிக்க டலார்கள் செலவு செய்யப்பட்டதாகவும், இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப் பட்டவர்களில் ஐந்தில் ஒருவர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 200 தேவாலய நிர்வாகப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின்போது தெரிய வந்துள்ளது.

2008ஆம் ஆண்டு சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்தாலும் நஷ்ட ஈடாக வழங்கப்பட்ட தொகை 2007ஆம் ஆண்டை விட 29 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 2007ஆம் ஆண்டு சுமார் 500 பேருக்கு 660 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக வழங்கப் பட்டதெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் 61.7 பில்லியன் டாலர் நட்டம்!

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் (AIG) 2008 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 61.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய்) நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க காப்பீட்டு நிறுவத்தின் இந்த அறிவிப்பு பங்கு சந்தைகளில் எதிரொலித்தது.

இந்நிறுவனத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசு கூடுதலா 30 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கிய பொருளாதார உதவியில் அரசிடமிருந்து அதிக உதவி பெற்ற நிறுவனம் இதுவே. இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே 150 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன.

அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் வீழ்ச்சியடைந்தால் அது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரூபாய் ரிக்கார்ட் வீழ்ச்சி!

தொடர்ச்சியான நான்காம் நாளான நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விழ்ச்சியைச் சந்தித்தது. இதுவரை இல்லாத அளவு முதன் முறையாக டாலருக்கு 51 ரூபாய் கடந்தது.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 50.60 ரூபாய் ஆனது. அதற்குப் பின் தற்பொழுது மிக அதிகபட்சமாக 51.60 ஆக ஆகியுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளிலும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலும் டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் தேதியை அறிவித்தார் ஒபாமா

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக் கிழமையன்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் இராக்கிலிருந்து 16 மாதங்களுக்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பெறுவேன் என்று ஒபாமா வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதிக்கு 3 மாதங்கள் அதிகமாக 19 மாதங்களில் அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இராக்கில் தற்போது 142,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். இவர்களில் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை 2011 ஆம் ஆண்டு வரை இராக்கில் இருப்பார்கள் எனவும், மற்றவர்கள் 2010 ஆகஸ்டு மாத இறுதிக்குள் திரும்பிவிடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புஷ் அரசும் இராக் அரசும் செய்து கொண்டு ஒப்பந்தப்படி 2011 ஆம் ஆண்டு இறுதி வரை அமெரிக்கப் படையினர் இராக்கில் இருக்க வகை செய்யப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

2003ஆம் ஆண்டு முதல் இதுவரை 4,250 அமெரிக்கப் படையினர் இராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

விண்ணில் வெடித்துச் சிதறியது அமெரிக்க விண்கலம்

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
தாரஸ் எக்ஸ் - எல் என்ற அமெரிக்க விண்கலமொன்று கலிபோர்னிய விண்தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது.

விண்ணில் கார்பன் டை ஆக்சைடின் சதவீதத்தை அறிவதற்காகவும், பூமியில் தட்ப வெப்ப மாற்றங்களை அறிவதற்காகவும் இவ்விண்கோள் செலுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

விண்கலம் ஏந்திச்சென்ற செயற்கைக்கோள் அதிலிருந்து பிரிவடையும் நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து நேரிட்டதாக நாசா கூறி உள்ளது. ரூ.1300 கோடி செலவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இராணுவப் பயிற்சி

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு அமெரிக்க இராணுவத்தார் பயிற்சி அளித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியை அமெரிக்காவே வெளியிட்டுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளை எப்படி ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராணுவம் பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
70 அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் போர் நிபுணர்கள் இந்தப் பயிற்சியை அளித்து வருவதாகவும் 8 மாதத்துக்கு மேலாக இந்தப் பயிற்சி நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.எந்த இடத்தில் பயிற்சி நடக்கிறது என்ற விபரங்களை வெளியிடவில்லை. இரகசிய இடத்தில் பயிற்சி நடக்கிறது.

ஒரு காலத்தில் தாலிபானுக்கும் அமெரிக்காவே பயிற்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒசாமா வாழ்விடம்: அமெரிக்கப் பேராசிரியர்கள் தகவல்

Published on: வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
ஒசாமா பின் லாதன் எங்கு மறைந்திருக்கக் கூடும் என்பதை அமெரிக்க புவியியல் துறை பேராசிரியர்கள் தாமஸ் கில்லெஸ்பி மற்றும் ஜான் அக்னியு ஆகியோர் செயற்கைக் கோள் புகைப்படங்கள், புவியியல் முறைகள் மூலம், தர்க்க ரீதியாக கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் ஆய்வின் படி, பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதியில் உள்ள பராசினார் நகரில் உள்ள மலைகளில், ஒசாமா ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில், 19 கி.மீ., தொலைவில் பராசினார் நகரம் இருக்கிறது. இந்நகரில் மூன்று சுற்றுச்சுவர்கள் கொண்ட வளாகத்தில் ஒசாமா பின் லாடன் தங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இந்த கண்டுபிடிப்பு அறிவியல் பூர்வமானது. ஒசாமா இடம் மாறினால், அமெரிக்க உளவுத்துறையின் புதிய தகவல்களின் அடிப்படையில், மறைவிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிடலாம், என்று இப்பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தனது மறைவிடத்தில் மின்சார வசதி, பாதுகாப்பு, தனிப்பட்ட வாழ்வுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் மிகக் குறைந்த மெய்க்காவலர்களுடன் ஒசாமா இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

எச்1பி விசா பிரச்சனை : அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க கோரிக்கை

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வேலைக்கமர்த்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே நிதி உதவி அளிக்கப் படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் கோரியுள்ளது.

இந்த நிபந்தனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்யக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துவோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.

இந்த நிபந்தனைகளால் பிரச்சனை ஏற்படாது என்று அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் கருதினால் அது அவர்களின் அறியாமையையே வெளிப்படுத்தும். உகாண்டா, பிஜி தீவுகள் மற்றும் ஒபாமாவின் பூர்வீக நாடான கென்யா போன்ற நாடுகளில் இருந்த இலட்சக் கணக்கான இந்தியர்கள் எந்தவித கருணையும் இல்லாமல் விரட்டப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் கோரினார். அமெரிக்காவின் இந்த நிபந்தனை தளர்த்தப்படாவிட்டால் இந்தியாவில் உள்ள 14 அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்கக் கோரும் பிரச்சாரத்தைத் தொடங்குவோம் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா: வேலையிழக்கும் 1 இலட்சம் இந்தியர்கள்

Published on: ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒபாமா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அவற்றுள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஹெச்-1 பி விசாக்களை நிறுத்துவதும் ஒன்றாகும்.

அமெரிக்கா வருடமொன்றுக்கு விநியோகிக்கும் 65,000க்கும் மேற்பட்ட இவ்வகை விசாக்களில் 60% சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பயனடைந்துவந்தனர். இதுவரை இந்த விசாவில் அமெரிக்கா சென்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்துக்கும் மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஒருவருடத்தில் ஹெச்1-பி வகை விசாக்களில் 1,65000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவை இந்தியர்களுக்கானதாகும். அதனால், பணியிழந்த அந்த இந்தியர்கள் நாடு திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"அமெரிக்கப் பொருளாதாரம் சீரடைய வருடங்களாகும்" - ஒபாமா

Published on: சனி, 14 பிப்ரவரி, 2009 // , , , , ,
அமெரிக்கப் பொருளாதாரம் சீரடைவதற்கு மாதங்களல்ல; வருடங்கள் தேவைப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நலிவடைந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் 789 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்கப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக, தொழிலதிபர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். "கடும் உழைப்பு தேவைப்படும் காலக்கட்டம் இது, இது தொடக்கக் கட்டம் தான்" என்றும் அவர் தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டில், நிதித்துறையில் கடும் சவால்களைச் சந்திக்க வேண்டி, நல்லதொரு பொருளாதாரத் திட்டத்தை தீட்டவேண்டிய காலக்கட்டாயத்தில் அரசு உள்ளது என்றார் அவர்.

பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்கி 20 பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் பலியானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாலிபான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலமான ஆப்கானிஸ்தானை ஒட்டிய தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினருக்கு எடுத்துச் செல்லப்படும் உணவு மற்றும் ஆயுத விநியோக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதி மீது இன்று அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தங்களது ஆதரவாளர்கள் 25 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று தாலிபான் தரப்பு கூறியதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தப் பகுதி மீது அமெரிக்க 20க்கும் அதிமான வான் தாக்குதலை நடத்தி உள்ளது.

அமெரிக்காவில் விமான விபத்து

Published on: வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 // , , , , ,
அமெரிக்காவில் விமானம் ஒன்று நெறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 49 பேர் பலியாகி உள்ளனர்.

74 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 44 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. நியூஜெர்சியிலிருந்து பப்பாலோ நகருக்கு இந்த விமானம் சென்றது எனவும் பனிமூட்டமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பப்பாலோ நகருக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்ததாகவும் இதில் விமானத்தில் பயணம் செய்த 48 பேரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க ரஷ்ய செயற்கைக் கோள்கள் மோதல்

அமெரிக்கா மற்றம் ரஷ்யாவின் தகவல் ஒலிபரப்புக்கான செயற்கைக் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்ணில் நடைபெறும் முதல் விபத்து இது ஆகும்.

அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக் கோள் ரஷ்ய செயற்கைக் கோளுடன் மணிக்கு 780 கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாய் கிழமையன்று மோதியதாக நாசா கூறுகிறது.

இதனால் இம்மாத இறுதியல் விண்ணில் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்காவின் செயற்கைக் கோள் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் வெள்ளிக்கிழமைக்குள் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் வேறு செயற்கைக் கோள் ஏவப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது 1997ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 560 கிலோ.

இதனுடன் மோதிய ரஷ்ய செயற்கைக் கோள் 950 கிலோ எடையுள்ளது. இது 1993 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. இந்த விபத்தை ரஷ்ய நிறுவனம் உறுதி செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடி: அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு உதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவியாக அரசின் பொருளாதார உதவி செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தது தெரிந்ததே

முதற்கட்டமாக 829 மில்லியன் டாலர்கள் நிதியுதவிக்கு செனட் ஒப்புதல் பெற முடிவு செய்து விவாதத்திற்குட்படுத்தப்பட்டது. அதில் இத்திட்டத்திற்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அமெரிக்கா: அதிகரிக்கிறது வேலையில்லாத் திண்டாட்டம்.

அமெரிக்காவில், கடந்த மாதம் வேலை நீக்கம் செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் பேருடன் இதுவரை பொருளாதார மந்தநிலை காரணமாக வேலைஇழந்தவர்களின் எண்ணிக்கை 36 இலட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவாக, வேலையற்றோர் விகிதம் 7.6சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

தகவல் தொழிற்நுட்பம் என்றில்லாமல், பரவலாக எல்லாத் துறைகளிலும் கடந்த மாதம் பணிநீக்கம் நடைபெற்றுள்ளது. இது கவலையளிக்கும் போக்கு என்று அமெரிக்கத் தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

பாக். அணு விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா எதிர்ப்பு.

Published on: சனி, 7 பிப்ரவரி, 2009 // , , , , ,
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதர்கான் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

"இது துரதிருஷ்டவசமானது" என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, இந்நிகழ்வு கவலையளிப்பதாகவும், இதன் மூலம் வடகொரியா,ஈரான் ஆகியவற்றின் தொடர்புகள் வலுவடையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!