Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இஸ்ரேலுடன் இந்தியா 1.4 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்

Published on: வெள்ளி, 27 மார்ச், 2009 // , , , , , , ,
இஸ்ரேலிடமிருந்து 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமான பாதுகாப்பு சாதனங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட்டது. வணிக நாளிதழான குளோப்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை முறையான தகவலைத் தரவில்லை.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் மீது தொடுக்கப்படும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணைகளை இஸ்ரேல் தயாரித்தளிக்கும். இத்தகைய ஏவுகணைகளை இந்தியா ஏற்கனவே சொந்தமாகவே தயாரித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (DRDO) அண்மையில் உயர்தர விமான ஏவுகணையை (AAD) சோதித்து வெற்றி கண்டது. இஸ்ரேலின் இராணுவ தளவாட விற்பனையில் இந்தியா தற்போது முதலிடம் வகிக்கிறது.

காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இரானுவ வீரர்களை மதவெறியூட்டினர்.

Published on: செவ்வாய், 24 மார்ச், 2009 // , , , , , ,

காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இராணுவ வீரர்களிடம் இது நமது மத சம்பந்தப்பட்ட போர் நமது மதம் அல்லாதவருக்கு எதிரான போர் என்பதை மனதில் நிறுத்தி மிக ஆக்ரோஷமாக போரிடும்படி வெளிப்படையாக ஒவொரு இராணுவ முகாமுக்கும் சென்று பிரச்சாரம் செய்தனர் என்று ஹாரட்ஸ் என்ற இஸ்ரேலிய இடது சாரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் போர் முடிந்து திரும்பிய வீரர்களுக்கான மறு சீரமைப்பு முகாம் ஒன்றில் நடந்த கலந்துரையாடலில் பேசிய வீரர்கள் " இது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட பூமி, இதை ஆக்ரமிக்கும் நமது வழியில் வந்து நிற்கும் யூதர் அல்லாத மற்ற மதத்து மக்களை கடுமையாக போரிட்டு அப்புறப்படுத்துவதில் எல்லா வழிகளையும் கையாள வேண்டும் என்றும் அப்பாவி பொதுமக்களைக் கண்ட இடத்தில் சுடும்படி தங்களுக்கு படைத்தளபதியே உத்தரவிட்டதாகவும்" கூறியது ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் குழுக்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெளியான சில ரகசிய தகவல்களை உறுதிப்படுத்திய இஸ்ரேலிய இராணுவ அகாடமியின் இயக்குநர் கூறுகையில், 22 நாட்களாக நடந்த இராணுவ நடவடிக்கை எங்களது மதக்கடமையை நிறைவேற்றியது போன்று மன அமைதியை நாங்கள் அனுபவிக்க முடிகிறது என்றார்.


அவிவ் என்ற பெயரிட்ட கிவாத் பிரிகேட்டில் படை உறுப்பினராக இருந்த ரம்ஸ் என்பவர் சொல்லும்போது "ஒவ்வொரு வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்று இருப்பவர்கள் யாவரையும் கொன்று குவிக்கும்படி அவரின் தளபதி உத்தரவு பிறப்பித்ததாகவும்" அதன் படி செயலபடுவதில் அனைத்து வீரர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.


இஸ்ரேலிய வீரர்களின் கொடூரங்கள் பற்றி வெளியான செய்திகள் குறித்து கருத்துக்கூறிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பராக் கூறுகையில் "இஸ்ரேலின் இராணுவம் உலகத்திலேயே மிகச்சிறந்த, ஒழுக்கம் மிக்க, மிக நேர்மையான இராணுவம் என்றும் அதற்கு இனையாக உலகத்தில் வேறு நேர்மை மிக்க இராணுவம் கிடையாது" என்றும் கூறினார். வேறு ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதுபற்றி விசாரிப்போம் என்றார்.

மோஷே எனும் வீரரின் கூற்றுப்படி நாங்கள் நடந்து கொள்ளும்முறை பற்றி எங்களிடம் கடுமையான முறையில் விசாரனை ஏதும் செய்யப்படுவதில்லை. இதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளப் போவதுமில்லை. போர்களில் இதெல்லாம் சாதாரணம் என்றார்.

காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

Published on: வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் இன்று வான் வெளித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப் பட்டார். மற்றொருவர் காயமுற்றார்.

காஸா பகுதியிலுள்ள கான்யூனுஸ் என்ற இடத்தின் மீது இத்தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் இந்த தாக்குதலில் பலியானதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினார்கள்.

இஸ்ரேலுடன் சன்டை நிறுத்த ஒப்பந்தம் சில தினங்களில் ஏற்படக்கூடும் என்று காஸா பகுதியைத் தன் வசம் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம் இன்று கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலியான நபர் இஸ்ரேலைத் தாக்கத் திட்டமிருந்ததாகவும் அதனால்தான் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றதாகவும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கூறியதாக அசோசியேட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலியத் தூதுவர் மீது காலணி வீசி தாக்குதல்

Published on: புதன், 11 பிப்ரவரி, 2009 // , , , , ,
சுவீடனுக்கான இஸ்ரேலிய தூதுவர் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுவீடனிலுள்ள ஸ்டொக்ஹொல்ம் பல்கலைக்கழகத்தில் தூதுவர் பென்னி டகன் விரிவுரையாற்றுகையில், அவரை நோக்கி காலணிகளும் புத்தகங்களும் வீசப்பட்டன.

சுமார் 50 பேர் வரை கூடியிருந்த கூட்டத்தில் அவர், நடைபெறவுள்ள இஸ்ரேலிய தேர்தல் குறித்து விபரிக்கையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தையடுத்து இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலஸ்தீன காஸா பகுதி தொடர்பான இஸ்ரேலிய கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.

இதற்கு முன் கடந்த டிசம்பரில் ஈராக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மீது ஊடகவியலாளர் ஒருவரால் காலணி வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சீன பிரதமர் வென் ஜியாபாவோவின் பிரித்தானிய விஜயத்தின் போது, அவர் மீது காலணி வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: எம்.ரிஷான் ஷெரீப்

இஸ்ரேலியத் தேர்தல் முடிவுகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் 120 தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் காடிமா கட்சிக்கு 28 தொகுதிகளும், லிகுட் கட்சிக்கு 27 தொகுதிகளும் கிடைத்துள்ளன. இரு கட்சிகளுமே தங்களுக்கே வெற்றி என்றும் தங்கள் கட்சியின் தலைமையில்தான் ஆட்சியமைப்போம் என்றும் கூறியிருக்கின்றன.

தேர்தல் நாளான நேற்று பகல் 12 மணிவரை, வாக்குச்சீட்டுகள் போதுமானவையாக இல்லை, வாக்குச் சீட்டுகள் கிழிக்கப் பட்டன என்பன போன்ற 68 குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப் பட்டிருந்தன.

இஸ்ரேலில் உள்ள அரபுகள் மற்றும் ஜியோனிச எதிர்ப்பாளர்கள் இந்த தேர்தலைப் புறக்கணித்தனர். குதிரைப் பேரத்திற்கு வழி வகுத்துள்ள இத்தேர்தலில் கட்சிகள் பெற்றுள்ள இடங்கள் வருமாறு : (அடைப்புக்குறிக்குள் 2006ஆம் ஆண்டின் நிலை)

காடிமா 28 (29)
லிகுட் 27 (12)
இஸ்ரேல் பைடீனு 15 (11)
தொழிலாளர் 13 (19)
ஷாஸ் 11 (12)
ஐக்கிய அரபு கட்சி 11 (10)
தேசிய ஒன்றியம் 7 (6)
மெரிட்ஜ் 3 (5)

இஸ்ரேலியப் படையினருக்கு சட்டப் பாதுகாப்பு - ஒல்மர்ட்

Published on: திங்கள், 26 ஜனவரி, 2009 // , , , , ,
சமீபத்தில் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து அங்குப் பெருமளவு சேதங்களை விளைவித்தது. இஸ்ரேலியப் படையினர் ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் இருக்கும் குடியிருப்புகளின் மீது சர்வதேசப் போர் நடைமுறைகளை மீறிக் கடும் தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தின.

இதனையடுத்து 'ஹேக்'கில் இருக்கும் பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியப் படையினர் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்போவதாக தொண்டுநிறுவனம் ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் அவ்வாறு வழக்குத்தொடுக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எந்த ஓர் இஸ்ரேலியப் படையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய அரசு அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

சர்வதேசப் போர் நடைமுறைகளின் படி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸாவில் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசு, அதனைப் பொதுமக்கள் மீது வீசவில்லை என மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியது

Published on: புதன், 21 ஜனவரி, 2009 // ,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்களுக்கு மேல் தொடர்ந்து தரை, வான் மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தி கடந்த 18ஆம் தேதி நள்ளிவில் தன்னிச்சையாக தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. இராணுவத்தினர் காஸாவிலேயே இருப்பார்கள் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவத்தினரை எதிர்த்து சன்டையிட்டு வந்த ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்களும் சன்டை நிறுத்தத்தை அறிவித்து, ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்திருந்தன.

செவ்வாய்க் கிழமையிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் கூறின. இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலின் அனைத்து இராணுவத்தினரும் காஸாவிலிருந்து வெளியேறிவிட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இதனை தங்களின் வெற்றி என்று கூறுகின்றன. காஸாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெற்றி குறித்து கேட்டபோது, சன்டையில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் எல்லாற்றையும் இழந்துவிட்டோம் என்று கூறினார்.

இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 1340 பேர் கொல்லப்பட்டனர். 5320 பேர் காயமுற்றனர். இதில் குறைந்த 1100 பேர் பொதுமக்கள் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் கொல்லப் பட்டதாகவும் அவர்களில் மூவர் பொதுமக்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் 80 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

பாலஸ்தீனிய குழுக்கள் சன்டை நிறுத்த அறிவிப்பு

Published on: ஞாயிறு, 18 ஜனவரி, 2009 // , ,
ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஹமாஸ் போராளிகளும் மற்ற போராளிக் குழுக்களும் இந்த சன்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று ஹமாஸ தலைவர்களில் ஒருவரான அய்மான் தாஹா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களைத் தொடுத்து வந்தது. சுமார் 1300க்கும் அதிகமானோரை பலி வாங்கிய இந்த தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கோரி வந்த நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் நேற்று தன்னிச்சையான சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை பாலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் உள்பட பல அமைப்புகளும் ஏற்க மறுத்து, இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று அறிவித்திருந்தனர்.

இஸ்ரேலிய சன்டை நிறுத்தத்தை அறிவித்திருந்தும் காஸாவின் பல பகுதிகளிலும் இன்றும் சிறிய அளவிளான தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாயின. காஸாவிலிருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் தொடர்ந்தன. இந்நிலையில் ஹமாஸ் இயக்கம் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காஸா குறித்து விவாதிப்பதற்காக எகிப்து கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எகிப்தின் ஷரம் அல் ஷைக் எனுமிடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் , அரபு லீக் தலைவர், பிரான்சு, துருக்கி, ஜோர்டான், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

காஸா : தொடரும் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்குப் பணிந்து, ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரம் காலை 2 மணி முதல் தாக்குதலை தன்னிச்சையாக நிறுத்திக் கொள்வது என்று அறிவித்தது. இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதிக்குள் இருப்பதே காஸா மீதான தாக்குதலின் அடையாளம்தான். எனவே காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறும் வரை இராணுவத்துடன் சன்டையிடுவோம் என்று ஹமாஸ் அறிவித்தது. காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசும் கோரியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலிய இராணுவ ஹெலிகாப்டர் காஸா நகரின் மீது வெள்ளை பாஸ்பரஸ் கொண்ட குண்டுகளை வீசியதாக பிரஸ் தொலைக்காட்சி கூறி உள்ளது.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்கதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளன. இன்று மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபலியா மற்றும் பைத் லஹியா என்ற இடங்களில் இடிபாடுகளை அப்புறப்படுத்தும்போது  குழந்தைகள் உள்பட 95 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன.

இதுவரை 1300க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதல்களில் பலியாகி உள்ளனர். 6000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய தரப்பிலான சேதம் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. எனினும் 10 இராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

காஸா மீதான தாக்குதல் நிறுத்தம்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 22 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்.  சுமார் 6000க்கும் மேற்பட்டோர் காயமுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 450 குழந்தைகள் மற்றும் 100 பெண்களும் அடக்கம். இஸ்ரேலின் இச்செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சற்று முன் இஸ்ரேலியப் பிரமர் எஹூத் ஓல்மர்ட் தாக்குதல் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். காஸா மீதான தாக்குதல் இஸ்ரேலிய நேரம் அதிகாலை 2 மணி முதல் நிறுத்தப்படும் என்று அறிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதலால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். காஸா மக்கள் இஸ்ரேலுக்கு விரோதிகள் அல்லர் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர்தான் இஸ்ரேலின் விரோதிகள். அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கும் எதிரிகள் என்று அவர் கூறினார். தற்போதைக்கு இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் இருக்கும் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்கினால் திருப்பித் தாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிறுத்த அறிவி்ப்பை ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்துவிட்டது. இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை இராணுவத்திற்கெதிரான தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் சன்டை நிறுத்தம் செய்வதற்கு ஹமாஸ் இயக்கம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. 1. காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், 2. காஸாவை விட்டு இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும், 3. காஸா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கி, பாலஸ்தீனத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு ஏதுவாக எல்லைகளைத் திறந்துவிட வேண்டும். இந்த நிபந்தனைகளைச் செயல்படு்த்தாவிட்டால் சன்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பி்ல்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது.

இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து விலக்க வேண்டும் - துருக்கி

Published on: வெள்ளி, 16 ஜனவரி, 2009 // , ,

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத ஒரு நாட்டை ஐ.நா. சபையின் தலைமையத்திற்குள் எவ்வாறு அனுமதிப்பது என்று துருக்கி பிரதமர் எர்தோகான் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஹமாஸ் இயக்கத்தினரைத்தான் குறி வைத்து தாக்குகிறோம் என்ற பெயரில் பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் காஸா மீதான தாக்குதல் குறித்து துருக்கி பிரதமருடன் ஆலோசனை செய்ய உள்ள நிலையில் எர்தோகான் இவ்வாறு கூறியுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் சன்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று மீண்டும் கோரியுள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பராக் ஒபாமா பொறுப்பேற்றவுடன் உடனடியாக பாலஸ்தீனப் பிரச்சனையில் தலையிட்டு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இஸ்ரேலுடன் அதிக உறவு வைத்திருக்கும் நாடு துருக்கி என்பது குறிப்பிடத் தக்கது.

காஸா - பலி எண்ணிக்கை 1100ஐ தாண்டியது

Published on: வியாழன், 15 ஜனவரி, 2009 // , ,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 20 நாட்களாக வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காஸா நகரின் உள்ளே பாலஸ்தீன போராளிக் குழுக்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருகி
றது.

இதுவரை 1100க்கும் அதிகமான 
பாலஸ்தீனியர்கள் 
கொல்லப்பட்டுள்ளனர். 4700க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 311 குழந்தைகள் மற்றும் 97 பெண்களும் அடங்குவர்.

இன்று காலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உதவி மையத்தின் தலைமை அலுவலகம் குறி வைத்து தாக்கப் பட்டுள்ளது. சன்டை நிறுத்தம் தொடர்பாக 
பேச்சு வார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவில் சென்றிருக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்செயலுக்கு பான் கி மூன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். 

இன்று காலை காஸா நகரின் அல்குத்ஸ் மருத்துவமனை மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது காஸா நகரின் மைய பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் குழுக்களுக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய தரப்பின் சேதம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் நேற்றிலிருந்து இதுவரை சுமார் 33 இராணுவத்தினர் காயமுற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ் இயக்கத்தின் தகவல்படி 34 இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர். 96 பேர் காயமுற்றுள்ளனர்.

காஸாவிலிருந்து அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீதான ராக்கெட் தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

Published on: புதன், 14 ஜனவரி, 2009 // , ,
லெபனான் மீது இஸ்ரேல் 17 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக லெபனானின் எல்லையிலிருந்து 4 ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லையில் வந்து வீழ்ந்ததாகவும் அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலைத் தொடுத்தது எனவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது கடந்த 19 நாட்களாக இஸ்ரேல் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில் நடக்கும் இரண்டாவது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக கடந்த 8ஆம் தேதியன்று இதுபோன்று தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. இந்த தாக்குதல்களை தாங்கள் மேற்கொள்ளவில்லை என லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏற்கனவே கூறியிருந்தன.

கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனான் மீதும், ஹிஸ்புல்லாஹ்வின் தொலைக்காட்சி நிலையம், அதன் தலைமையகம் உள்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து வான் தாக்குதல்களைத் தொடுத்தது. ஐ.நா. தலையீட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தெற்கு லெபானனின் இஸ்ரேலிய எல்லைப் பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இராணுவம் கண்கானித்து வருவது குறிப்பிடத் தக்கது.

ஐ.நா. செயலாளர் எகிப்து வருகை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுவிட்டதாகவும், 4500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சன்டையை நிறுத்த வேண்டும் என்று இரு தரப்பினரையும் வலியுறுத்தினார். இஸ்ரேல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் 19ஆவது நாளாகத் தாக்குதலை தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சற்று முன் வந்து சேர்ந்தார். இங்கு எகிப்து அதிபர் முபாரக்குடன் பேச்சு வார்ததை நடத்துகிறார். அதன் பின்னர் இஸ்ரேல், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களை அவர் சந்திக்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!