Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடவில்லை" - கமல்

Published on: செவ்வாய், 31 மார்ச், 2009 // , , , , , , ,
"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிட்டுவிடவில்லை" என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் வந்த அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்

இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.

நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.

எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.

எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.

பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.

'Slum Dog' சிறு நாயகன் வீடு இடிப்பு.

Published on: வியாழன், 5 மார்ச், 2009 // , , , , , ,
ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படத்தில் சிறுவயது சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் அஸ்ஹருத்தீன் முஹம்மத் இஸ்மாயில். பாந்த்ரா கரீப் நகரின் சேரியில் ஒரு குடிசையில் வசித்து வந்தான். அனுமதிபெறாமல் கட்டிய குடிசை என்ற வகையில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பம்பாய் மாநகராட்சி இருவாரங்களுக்கு முன் இடித்துத் தள்ளிய 200 குடிசைகளுள் அஸ்ஹருத்தீன் குடிசையும் ஒன்று.

அதன்பிறகு அவர்கள் தார்ப்பாலினால் தற்காலிக கூடாரம் அடித்து தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், மாநகராட்சியால் அதுவும் விரைவில் அகற்றப்படலாம் என்று தெரிகிறது. பெருநகர குடிநீர்க் குழாய்களை ஒட்டி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்ற உயர்நீதிமன்றம் அண்மையில் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், அப்படத்தில் நடித்த சிறுவர்களுக்கு குடியிருப்பு வழங்குவதாக படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்த செய்தி என்ன ஆனது என்று தெரியவில்லை

ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம்

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் இன்று அறிவித்துள்ளது.

ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இது ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளர் பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இப்பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதாக பல்கலைக் கழக வட்டாரம் தெரிவிக்கிறது.

ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தைகளுக்கு பிளாட்

ஸ்லம் டாக் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருதீன் இஸ்மாயில் மற்றும் ருபினா ரபீக் ஆகிய குழந்தைகளுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ஸ்லம் டாக் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை வாங்கியதை அடுத்து பல்வேறு இடங்களிலிருந்தும் அதில் நடித்த கலைஞர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இத்திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருத்தீன் இஸ்மாயில் சேக் உஸ்மான் மற்றும் ருபினா ரபீக் அஸ்கர் அலி குரேசி ஆகிய இருவருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான் நேற்று இரவு அறிவித்தார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சி மாநில முதல்வரிடம் வைத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்குழந்தை நட்சத்திரங்கள் தற்போது மும்பையின் பந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள சேரிப் பகுதியான கரீப் நகர் பகுதியில் வசித்து வருகின்றன. ருபினாவின் தந்தை ரபீக் தச்சராகப் பணியாற்றி வருகிறார். அசாருதீனின் தந்தை இஸ்மாயில் பழைய மரச்சாமான்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற அவைகளில் பாராட்டு!

Published on: செவ்வாய், 24 பிப்ரவரி, 2009 // , , , , , ,
ஸ்லம் டாக் திரைப்படத்திற்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையிலும், மாநிலங்களவைக் கூட்டம் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலும் இன்று நடைபெற்றது. மூன்று இந்தியர்களுக்குக் கிடைத்த இந்த அகாடமி விருதுகள் இந்தியக் கலைஞர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இது என்றும் கூறப்பட்டது.


மக்களவைக் கூட்டம் தொடங்கிய உடனே அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, ஸ்லம் டாக் மற்றும் ஸ்மைல் பிங்கி திரைப்படங்களுக்காக விருது பெற்றவர்களுக்கும் இத்திரைப்படங்களில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.


ஸ்லம் டாக் திரைப்படம் சிறந்த திரைப்படம் என்ற விருது உட்பட 8 பரிசுகளை வென்றிருப்பது பெருமிதம் அடைய வேண்டிய செய்தி என்றும், ஏ. ஆர். ரஹ்மான், குல்சார், ரசூல் பூக்குட்டி ஆகியோரின் இந்த வரலாற்றுச் சாதனையால் ஒவ்வொரு இந்தியனின் இதயமும் மகிழ்வடைவதாகவும் அவர் கூறினார்.


ஸ்மைல் பிங்கி படம் குறையுடைய உதடுகளைக் கொண்ட இந்தியப் பெண் குறித்த குறும் ஆவணப் படம் என்பது குறிப்பிடத் தக்கது.

சினிமா விமர்சனம் : நான் கடவுள்

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , ,

நான் கடவுள்





ரஸ்ஸல்

கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா

வசனம்: ஜெயமோகன்

இசை: இளையராஜா

தன் மகனால் சொத்து ,சுகம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்று சொன்ன சோதிடனின் பேச்சை நம்பிப் பதினாலு வருடங்களுக்கு முன், சாஸ்திரம் படிக்க என்று மனைவியிடம் சொல்லிக் காசியில் தொலைத்த மகனைத் தேடித் தன் மகளுடன் காசிக்குத் தந்தை வருவதுடன் கதை துவங்குகிறது.

காசிப்பண்டிட்டின் உதவியுடன்,தலைமைச் சாமியாரைச் சந்தித்து மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தந்தை கெஞ்ச, "நீ அஹம் ப்ரம்மாஸ்மி; கடவுள்; உனக்கு உறவுகள் இருக்கக்கூடாது; ஊருக்குச் சென்று உன் உறவுகளை எரித்துவிட்டு வா" என்ற சாமியாரின் அனுமதியுடன் ஊருக்கு வருகிறார் மகன் ஆர்யா!



ஊருக்கு வரும் ஆர்யாவால் வீட்டில் தங்க இயலவில்லை. பாசத்துடன் நெருங்கும் தாயுடனும் ஒட்ட முடியவில்லை.சாப்பிடச் சொல்லும் தாயிடம் "கஞ்சா கிடைக்குமா?" எனக்கேட்டு, கஞ்சா கிடைக்கும் மலைக்கோவிலில் தங்குகிறார் ஆர்யா!



பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகச் செய்யும் பிச்சைக்கார மாஃபியாக் கும்பல்,கோயிலில் பிச்சை எடுப்பதற்காக ஆள் கடத்தல் செய்வதையும்,ஒரு கும்பலில் இருந்து மற்ற கும்பலுக்கும் பிற மாநிலத்துக்கும் காவல்துறையின் உதவியுடன் ஆள் கடத்துவதையும் கொடுமைப் படுத்துவதையும் விலாவாரியாகக் காட்டுவதே கதை.

ஒரு பிச்சைக்காரக் கும்பலில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் பார்வையிழந்த பிச்சைக்காரியான பூஜா, காவல்துறை உதவியுடன் வலுவான ஒரு கும்பலுக்குக் கடத்தப்படுகிறார். விகாரத் தோற்றமுள்ள மற்றொரு பிச்சைக்கார மாஃபியாத் தலைவனுடன் படுக்கையைப் பகிர கண்பார்வையுள்ள எந்தப் பிச்சைக்காரியும் சம்மதிக்காததால் பூஜாவைப் பத்துலட்சம் ரூபாய்க்கு விற்கிறான் கும்பல் தலைவன். ஆனால் இதை விரும்பாத சக பிச்சைக்காரர்கள் பூஜாவைத் தப்ப வைக்க முயலும்போது ஆர்யா மாஃபியாக் கும்பல் தலைவர்களைக் கொல்கிறார்.

சுமார் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் காசிக் காட்சிகள் மாதக் கணக்கில் படம்பிடிக்கப்பட்டன என்ற சொல்லப்பட்டது. ஆனால் காசிக்காட்சிகள் கொஞ்சமோ கொஞ்சம். படம் மொத்தமும் காசியில்தானோ என எண்ணும்படி ட்ரெய்லர் இருந்தது. படத்தில் ஆர்யா வரும் இடங்கள் /காட்சிகள் சுருக்கமே. எதனாலோ நிறைய காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது புரிகிறது.



இந்துத்துவா ஆள் என அறியப்பட்ட ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் சுருக்.

"ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டா பெத்த பிள்ளைய பதினாலு வருசம் காசியில் விட்டே?" எனக் காசிப் பண்டிட் கேட்கும் இடம்,



மலைமேல் இருக்கும் சாமியாரைத் தேடி வரும் ஒருவன் "சாமீ! சாமீ" எனும்போது, "கண் தெரியாதவனும் சாமி, காது கேட்காதவனும் சாமி, கல்லும் சாமி, மண்ணும் சாமி" " என ஆர்யா உறுமும் இடம்,

ஆர்யாவைத் தேடி வரும் பிச்சைக்காரச் சிறுவன் காவி உடுத்திய ஒருவனிடம்' " சாமியெப்பாக்கணும்"

"ஏன்? எங்களெப்பாத்தா சாமியாத்தெரியலையா?"

"சடபிடிச்சவனெல்லாம் சாமியா?"எனக்கேட்பது,

கோர்ட்டில் ஆர்யாவை நிறுத்தும்போது, மாஜிஸ்ட்ரேட், " இந்த மாதிரி ஆளுகளெயெல்லாம் ஒங்க சட்டம் ஒண்ணும் செய்யாது. ஒரு பரதேசி முதல் மந்திரியையே தலையை வெட்டுவேன்னு சொன்னானே? அவனெ ஒங்க சட்டம் என்ன செய்தது?" எனக் கேட்கும் இடம்.

தன்னைப் பார்க்க வந்த தாயிடம் ஆர்யா,

" ஐயிரண்டு திங்களாய் அடக்கி வைத்த தூமையே
கையிரண்டு காலிரண்டாய் பிள்ளையாய் ஆனதே

என்ற சித்தர் பாடலைக் கூறிவிட்டு, "தூமைன்னா என்னாண்ணு தெரியுமா உனக்கு? எனக்கேட்கும் இடத்தில் சுருக்....சுருக்..

கஞ்சா அடித்த ஜோரில், மலை மேலிருந்து ஆர்யா சங்கு ஊத, " சாமீ! நீங்க ஊதுற சத்தம் அடிவாரம் வரெ கேக்குது; நாங்க போலீஸுக்கு பயந்து சாமியார் வேசத்துலெ இங்கெ இருக்கிறொம்."எனக் காவி வேட்டிகள் கூறுவது எனப் பல இடங்களைக் கூறலாம்.

நகைச்சுவை நடிகராய் வடிவேலுவுடன் வரும் ஒருவர் இதில் மிக சீரியஸாக நடித்துள்ளார். நகைச்சுவைக்காட்சிகள் தனியாக ஏதுமில்லை. கதையோட்டத்தில் வசனங்களால் ஆங்காங்கே சிரிப்பு வெடிக்கிறது.

ஊனமுற்றவர்களைத் தேவைக்கேற்றபடி வேலை வாங்கி இருப்பதில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

தேர்ந்த நடிகர்களை விட இயல்பாக அனைவரும் நடித்துள்ளனர். வில்லன் தாண்டவனாக வருபவரின் நடிப்பு மிக அருமை. பூஜா விருதை எதிர்பார்த்து நடித்திருக்கலாம். அதற்காகவே சொந்தக் குரலில் டப்பிங்க் கொடுத்துள்ளார் போலும்.

பாலாவின் பிதாமகன் படத்துக்கும் இப்படத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

அதிலும் கஞ்சா; இதிலும் கஞ்சா..

அதிலும் சுடுகாடு; இதிலும் சுடுகாடு..



அதிலும் பழைய பாடல்களின் தொகுப்புப் பாடல் ; இதிலும் டிட்டோ..

நந்தாவில் மகன் தாய்ப்பாசத்துக்கு ஏங்குவான்;

இந்தப்படத்தில் தாய் மகன் பாசத்துக்காக ஏங்குகிறாள்.

இவை யதேச்சையா? அல்லது இதுதான் பாலாவின் ஸ்டைலா?

இந்த விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும்போது, மலையாள சானலான 'அமிர்தா டி.வி.யில், கேரளத்தில் பிச்சை எடுக்க, பிச்சைக்கார மாஃபியாவால் தமிழ்நாட்டிலிருந்து பிச்சைக்காரர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது, பொருத்தமாய் அமைந்தது.

வணிக ரீதியில் இல்லாமல் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக, பாலாவைப் பாராட்டலாம்.

படம் பார்த்தபின் மனதில் ஒரு வெறுமை. ஏனோ?

மொத்தத்தில் எதிர்பார்த்தது கிடைக்காதது ஏமாற்றமே!

நடிகர் நாகேஷ் காலமானார்.

Published on: சனி, 31 ஜனவரி, 2009 // , , ,

தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

அண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.

தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் பூர்வீகம் மைசூர். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். கர்நாடக மாநிலம் அரிசிக்கரேயில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தவர். தாயார் ருக்மணி அம்மாள். ஆரம்பகாலக்கட்டத்தில் இவர்கள் தமிழகத்தில், தாராபுரத்தில் வசித்து வந்தனர். நாகேஷின் முழுப்பெயர் நாகேஸ்வரன்.

'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!