Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு - சசி தரூருக்கு பிணை

கொச்சி : ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிந்து அரசியல்வாதியாய் மாறியுள்ள சசி தரூர் தேசியக் கொடியை அவமதித்ததாக் கூறி அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை வழங்கப் பட்டது. 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்று இரு நபர்களின் பொறுப்பேற்பு அடிப்படையில் மாவட்ட கூடுதல் தலைமை நீதிபதி கிருஷ்ணன் குட்டி பிணை வழங்கினார். மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப் பட்ட போது சசி தரூர் குறுக்கீடு செய்தார் என்று அவர் மீது மனித உரிமை ஆர்வலர் ஜாய் கைதரத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார்.

வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிக்கை - உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு!

வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வாக்களிக்கும் தகுதியுள்ள அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரனைக்கு வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் சத்வா மாவட்டத்தைச் சார்ந்த அதுல் சரோட் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

மனுதாரர் சார்பில் வாதடிய பிரசன்னா குட்டி, பெரும்பாலானோர் வாக்களிக்காத காரணத்தால் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே பெறக்கூடிய வேட்பாளர்கள் வெற்றி பெறுகின்றனர். அந்தத் தொகுதியின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவளிக்காமலேயே அவர் அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகிவிடுகிறார் என்று கூறினார்.

வேட்பாளர்களில் எவர் 51 சதவீத வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். எவருமே 51 சதவீத வாக்குகளைப் பெறவில்லை எனில் அங்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இணைய தளம் மூலம் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், வாக்கு இயந்திரத்தை உருவாக்கிய தேர்தல் ஆணையம், இணையத்தில் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்வது குறித்து திட்டமிட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சைப்ரஸ், கிரீஸ், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் எகிப்து உள்ளிட்ட 20 நாடுகளில் கட்டாய வாக்குப் பதிவு நடைமுறையில் உள்ளதையும் அவர் கூட்டிக் காட்டினார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சட்டமியற்றி மக்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரமுடியாது என்று கூறினர். வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே வாக்களிப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும் என்று கூறினர்.

கேரளா மற்றும் சில மாநிலங்களில் மக்களிடையே வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு உள்ளதாலேயே வாக்கு வீதம் அதிகமாக உள்ளது, சட்டம் கடுமையாக இருப்பதால் அல்ல என்றும் அவர்கள் கூறினர்.

இந்தியாவில் பல்வேறு தேர்தல்களிலும் 60 சதவீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்படுவதைக் கூறிய அவர்கள் இந்த சதவீதம் திருப்திகரமானது என்றும் கருத்து கூறினர்.

கறுப்புப் பணம் 100 நாட்களில் இந்தியா கொண்டு வரப்படும் - அத்வானி!

தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்டு இந்தியாவிற்குக் கொண்டுவரப்படும் என்று அத்வானி கூறினார்.

இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வாணி, சுவிஸ் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது, அதை எவ்வாறு இந்தியா கொண்டு வருவது என்பதை ஆய்வு செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட அந்த அமைப்பு தன்னுடைய இடைக்கால அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், சுவிஸ் வங்கி மட்டுமின்றி சுமார் 70 நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் உள்ளதாகவும் அவர் கூறினார். இவ்வாறு முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் பணம் சுமார் 6.88 இலட்சம் கோடி ரூபாய் என்றும் அவர் கூறினார்.

நக்சல் நடமாட்டப் பகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு - ஒரு பார்வை

நக்சல் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமுள்ள ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் முடிவுக்கு வந்தது.

மதியம் 1 மணி அளவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீத வாக்குகளே பதிவு செய்யப் பட்டிருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் மதியம் 12 மணி வரை 28.5 சதவீத வாக்குகள் பதிவ செய்யப் பட்டிருந்தன. ஒரிசாவில் மதியம் 1.30 மணி அளவில் 40 சதவீத வாக்குகளும் ஆந்திராவில் 25.67 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

மகாராஷ்டிரா மாநிலம் ராஜனன்ட்காவ்ன் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். ஜாமுஇ மாவட்டத்தில் கன்னி வெடியை வெடிக்கச் செய்தனர்.

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைகளில் 9 பாதுகாப்பு அதிகாரிகள், இரு பொதுமக்கள் உள்பட 16 பேர் கொல்லப் பட்டனர்.

பல்வேறு இடங்களில் கன்னிவெடிகள் வெடிக்கச் செய்யப்பட்டன. லடேகர் மாவட்டத்தில் 4 தேர்தல் அதிகாரிகளை நக்சல்கள் கடத்திச் சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பீகாரில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இரு பெண்கள் உள்பட ஆறுபேர் காயமுற்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கோடாபனூர் மற்றும் நராயண்பூர் ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளில் குண்டுகள் வெடித்தன.

ஒரிசாவில் மல்காங்கிரி மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் எரியூட்டப்பட்டன. வாக்குச் சாவடிகள் மீதும் தாக்குதல் நடைபெற்றன.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் தங்கும் விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

அத்வானி மீது ஷூ வீச்சு!

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி மீது இன்று ஷூ வீசப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது அத்வானியை நோக்கி ஒருவர் ஷூவை வீசினார். காவல் துறையினர் அவரை உடனடியாக கைது செய்து செய்தனர். கட்னி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த பவாஸ் அகர்வால்தான் ஷூ வீசினார் என்று கூறப்படுகிறது. கட்சியில் நிலவிய குழுப்போட்டியின் காரணமாக அவரை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து அண்மையில் பாரதீய ஜனதா கட்சி நீக்கியது. தன்னுடைய எதிர்ப்பைக் காண்பிப்பதற்காக அவர் இச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

அசாம் : தேர்தல் அதிகாரி தற்கொலை முயற்சி!

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள ஹவுராகட் எனும் இடத்தில் வாக்குச்சாவடி அருகே, வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன்னுடை தொண்டையை பிளேடால் அறுத்துக் கொண்டார். அந்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது தற்கொலை முயற்சிக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதே மாவட்டத்தில் மற்றொரு வாக்குச் சாவடி அருகே வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டு, செயலிழக்கச் செய்யப் பட்டது. மேலும் சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப் பட்டு சரி செய்யப்பட்டன.

சிறுசிறு சம்பவங்களைத் தவிர்த்து அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நண்பகல் வரை அசாமில் 40 முதல் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் கூறுகின்றன.

வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் 11பேர் பலி!

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். இவர்களில் 9 பேர் காவல்துறையினர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தின் லேடேஹர் மாவட்டத்தில் கன்னிவெடிகளை வெடிக்கச் செய்தபோது, வாக்குச்சாவடியின் பாதுகாப்புக்காக அவ்வழியே சென்று கொண்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சார்ந்த 7 பேர் கொல்லப் பட்டனர். அவர்கள் சென்ற வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளரும் இதில் கொல்லப் பட்டனர்.

பீகாரில் கயா மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடி மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு காவலர்கள் கொல்லப் பட்டனர்.

ஒரிசாவில் மல்கான்கிரி மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் வாக்கு இயந்திரத்தையும் ஒரு வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் மாற்றம்

Published on: புதன், 15 ஏப்ரல், 2009 // , , , , ,
மத்திய சென்னை நாடாளு மன்ற வேட்பாளராக முகமது அலி ஜின்னா இன்று அறிவிக்கப் பட்டுள்ளார். மத்திய சென்னை வேட்பாளராக ஏற்கனவே நகைச்சுவை நடிகர் எஸ். எஸ். சந்திரன் அறிவிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக முகமது அலி ஜின்னா போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே சில தொகுதிகளின் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.

ஆந்திராவில் வாக்காளர்களைக் கவர கோழி பரிசு!

ஆந்திராவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சாராயம் போன்றவற்றை வேட்பாளர்கள் வழங்குகின்றனர் என்ற புகார்களால் மாநில தேர்தல் ஆணையமும் காவல் துறையும் திண்டாடி வரும் நிலையில் வாக்காளர்களைக் கவர அவர்களுக்கு கோழிகள் இலவசமாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கரீம் நகர் மாவட்டத்தின் நர்சிங்பூர் கிராமத்தில் கோழி பாக்கெட்டுகளை காவல்துறை கைப்பற்றி உள்ளது. 1 கிலோ கோழிகளைக் கொண்ட இப்பாக்கெட்டுகளை ஆளும் கட்சியான காங்கிரஸ் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த இரு வாரங்களில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின் போது 25 கோடி ரூபாய்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. செவ்வாய் கிழமையன்று மட்டும் 1.26 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சாராயம் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டமாகவும் தங்களின் தீவிரக் கண்கானிப்பினால் அவை தவிர்க்கப் பட்டு வருவதாகவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுப்பா ராவ் கூறினார்.

முதல்கட்டத் தேர்தல் நடைபெற இருக்கும் பகுதிகளில் காவல்துறை, வருமான வரித்துறை மற்றும் கலால் வரித்துறையினர் சுமார் 752 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்கானித்து வருகின்றனர்.

முதல் கட்ட வாக்குப் பதிவு: பீகாரில் கண்டதும் சுட உத்தரவு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடக்க இருக்கிறது. பீகார் மாநிலத்தின் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மற்ற மாநில எல்லைகள் மற்றும் நேபாள எல்லை மூடப்பட்டுள்ளது.

மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.க.வின் ராஜீவ் பிரதாப் ரூடி, மத்திய அமைச்சார் மீரா குமார் போன்ற முக்கியப் பிரமுகர்களின் தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்க இருக்கிறது. சுமார் 1.75 கோடி வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதிகளில் 21 பெண்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கலவர சூழல் ஏற்பட்ட அதனைக் காவலர்களால் கட்டுப்படுத்த இயலாது என்ற நிலை உருவானால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்று பீகார் மாநில உள்துறைச் செயலாளர் அப்சல் அமானுல்லா கூறினார்.

அத்வானி ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிமை - சோனியா

பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, பிரதமர் மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்துவருகிறார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பிதாரில் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்., தலைவர் சோனியாஆர்.எஸ்.எஸ்., க்கு கட்டுப்பட்டுதான் மதவாத தலைவரான அத்வானி எந்த ஒரு முடிவையும் எடுப்பார். மன்‌மோகன் பலவீனமானவர் என்றும் சொந்தமாக மு‌டிவெடுக்கும் திறன் இல்லாதவர் என்றும் கூறி வரும் அத்வானி என்றைக்காவது ஆர்.எஸ்.எஸ்., தலையீடு இல்லாமல் முடிவு எடுத்திருக்காரா என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் என்பவர் கட்சி எல்லைகளை கடந்தவர் என்பதையும் அவர் இந்தியாவின் அடையாளம் என்பதையும் அத்வானி புரிந்து கொள்ள வேண்டும். பிரதமரை இழிவு படுத்துவது ஒட்டு மொத்த இந்தியாவையும் இழிவு படுத்துவது என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிய கூட்டணி : சமூக ஜனநாயக முன்னணி

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத்இனாயத்துல்லா ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக சமூக ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த 1 மாதமாக பேசி இன்று இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. எங்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.

இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதியில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லா, மத்திய சென்னையில் ஹைதர்அலி, பொள்ளாச்சியில் உமர், ராமநாதபுரத்தில் சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம்.

புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இந்த அணியில் விரைவில் இன்னும் பலர் சேருவார்கள் என்றனர்.

மேலும் பேசிய அவர்கள், 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். நாளையே தேர்தல் பிரசாத்தை தொடங்க உள்ளோம் என்றனர். அப்போது பேசிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி,

இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டு விட்டது. இலங்கைப் பிரச்சினையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்படவி்ல்லை என்றார்.

எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம் என்றார்.

காந்தமால் பா.ஜ.க. வேட்பாளர் கைது!

Published on: செவ்வாய், 14 ஏப்ரல், 2009 // , , , , , , , ,
ஒரிசா மாநிலம் காந்தமால் நாடாளுமன்றத் தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அஷோக் சாகு இன்று கைது செய்யப் பட்டார். இம்மாதத் தொடக்கத்தில் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வண்ணம் பேசியதாக அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தது. காவலர்களிடம் பிடிபடாமல் நீதிமன்றத்தில் பிணை கேட்டு அவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டதை அடுத்து அவர் கைது செய்யப் பட்டு நீதி மன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 125 (A) ஆகிய சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.

பாஜக வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: ஜெ திட்டவட்டம்

பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்ற செய்திகள் அடிப்படை இல்லாதவை என அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைய அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. எவ்விதக் கூட்டணியும் அமைக்காது என ஜெயலலிதா மறுத்துள்ளார்.

"தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரும் என சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. நாங்கள் 2009 மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்ற செய்திகள் எவ்வித அடிப்படையும் இல்லாதவை. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து நாங்கள் எந்தக் கட்சியுடனும், எந்த பேச்சும் நடத்தவில்லை," என ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உலக நாடுகள் ஆர்வம்!

100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் பயன்படுத்த மலேசியா,சிங்கப்பூர்,மொரீசியஸ்,நமீபியா போன்ற நாடுகள் ஆர்வம் தெரிவித்திருக்கின்றன.

இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்த ஒரு நாட்டிலும் எதுபோன்ற காலநிலையிலும் சிறப்பாக இயங்கக்கூடியவை. அதனை கடினமாகவும் கையாளலாம். வாக்குப் பதிவில் இருந்து வாக்கு எண்ணிக்கை வரை அனைத்துமே துரிதமாக நடைபெற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெரும் உதவியாக உள்ளன. இதுபோன்ற ஏராளமான சிறப்பம்சங்களை இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுள்ளது உலக நாடுகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஏற்கெனவே நேபாளம், பூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நேபாளத்துக்கு கடந்த ஆண்டு தேர்தலில் பயன்படுத்த 200 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டன.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: ஜெ அதிரடி

திருவள்ளூர் (தனி) மற்றும், பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியல் இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில், திருவள்ளூர் தொகுதியில் ஆர். ராஜனும், பெரம்பலூர் தொகுதியில் ஆர்.பி.மருதை ராஜும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இவ்விரு வேட்பாளர்களும் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் தொகுதியில் ஜி.கே. இன்பராஜ், பெரம்பலூர் தொகுதியில் கே.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுவார்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றத்திற்க்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர்: 514 கோடி ரூபாய் சொத்து!

Published on: வெள்ளி, 10 ஏப்ரல், 2009 // , , , , ,
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கிம்ஜி படாடியா தன்னுடைய சொத்து ரூபாய் 514 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் தகவல் தந்துள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக சொத்துடைய வேட்பாளராக இவர் அறியப்பட்டுள்ளார்.

சுரேந்திர நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் இவர் தன்னுடைய அசையும் சொத்துகளின் மதிப்பு ரூபாய் 255 கோடி என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூபாய் 259 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

41 இலட்சம் மதிப்புடைய மெர்சிடீஸ் பென்ஸ் உள்பட நான்கு கார்கள், சுமார் 50 இலட்சம் மதிப்புள்ள 1.05 கிலோ தங்கம், மகாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் சில இடங்களில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூபாய் 208 கோடி மதிப்பிலான மற்றவகை நிலங்கள் என்று தன்னுடைய அசையும் மற்றம் அசையா சொத்துகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

தன்னுடைய கல்வித்தகுதியாக அவர் எஸ்.எஸ்.சி. (பத்தாம் வகுப்பு) யையே அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

வருணுக்கு எதிரான பேச்சு : லாலு விளக்கம்

Published on: செவ்வாய், 7 ஏப்ரல், 2009 // , , , , , , ,
வருணுக்கு எதிராக லாலு பேசியதாக வெளியான தகவலை அடுத்து தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு லாலு விளக்கம் அளித்துள்ளார்.

தான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்பதைக் கூறவே அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக லாலு விளக்கம் அளித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கர்வா எனும் இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் குரன் ராம் என்பவரை ஆதரித்துப் பேசிய போது இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

அத்வானி ஒருபோதும் பிரதமராக முடியாது என்றும் இந்துத்துவா சக்திகள் பதவிக்கு வருவதைத் தடுக்கவே முலாயம் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் தாம் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று பிகார் மாநிலம் கிஷண்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
பிலிபிட் மக்களவைத் தொகுதி பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்கள் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று பேசியிருக்கிறார் பாஜகவின் சின்னப் பையன் வருண் காந்தி.

பாஜக மூத்த தலைவர்கள் தரும் ஊக்கம் தான் இதற்குக் காரணம். நான் மட்டும் நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருவது வரட்டும் என்று வருண் காந்தியை அப்படியே ரோடு ரோலரை ஏற்றிக் கொன்றிருப்பேன் என்று பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.

மதுரையில் அழகிரி போட்டி- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Published on: ஞாயிறு, 5 ஏப்ரல், 2009 // ,
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது. திமுகவின் தென் மண்டல செயலாளரும், கருனாநிதியின் மகனுமான அழகிரி மதுரையில் போட்டியிடுகிறார். இதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி உறுதியானது. மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறன், நீலகிரியில், ராசா, ஸ்ரீபெரும்புத்தூரில் டி,ஆர், பாலு, பெரம்பலூரில் நடிகர் நெப்போலியன் ஆகியோர் மற்ற பிரபலங்கள்.

தாமரை சின்னத்தில் நடிகர் சரத் குமார் போட்டி?

Published on: சனி, 4 ஏப்ரல், 2009 // ,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சரத் குமார் நெல்லை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாடார் இனத்தை சார்ந்த சரத், நெல்லை தொகுதியில் போட்டியிடுவது உறுதியானால், நாடார் இன மக்களின் ஓட்டுகளை கனிசமாக பிரித்துவிடுவார் என்றும், இதனால் தி.மு.கவின் வெற்றி பாதிக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். இதனிடையே, திமுக மற்றும் அதிமுக கூட்டனிகளில் சேரமுடியாத பாஜக, சிறு, சிறு கட்சிகளை தனது கூட்டணிக்கு கொண்டு வர முயல்வதாகவும் கூறப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!