Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாகிஸ்தானின் அணு ஆயுதம் ஐ.நா.வின் கட்டுபாட்டில் : பா.ஜ.க. கோரிக்கை

Published on: வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,
பாகிஸ்தானிய அரசு பல்வேறு வகைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் கேந்திரமாகவும் விளங்குகிறது. எனவே பாகிஸ்தானின் அனு ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை உடனே தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தாலிபான், அல்கைதா போன்ற தீவிரவாதிகளின் கைகளில் சென்றுவிட வாய்ப்பு இருப்பதால், பாகிஸ்தானின் அணு ஆயதங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுமைக்குமே அச்சுறுத்தல் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலத்தில் ஷரீயத் சட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பது தாலிபான்களிடம் அரசு சரணடைந்திருப்பதையே காட்டுகிறது என்று கூறிய அவர், பாகிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வாய்ப்புகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சருக்கெதிரான விசாரணையை மேற்கொள்ள குஜராத் நீதிபதி மறுப்பு!

குஜராத் மாநில அமைச்சர் மாயா கொடானி மற்றும் விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெயதீப் பட்டேல் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு தொடர்ந்த வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன். வேறொரு நீதிபதி விசாரிப்பார் என்றும் விசாரணை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதி ஆனந்த் தவே இதற்காக காரணத்தைக் கூறவில்லை.


முன்னதாக மாநகர அமர்வு நீதிமன்ற நீதிபதி அஷ்வனி, மாநில கல்வித்துறை அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத்தலைவருக்கும் முன்ஜாமீன் இந்த மாதம் 5ஆம் தேதி அளித்தார்.

குஜராத் கலவரம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து. இதுகுறித்த விசாரணைக்கு நேரில் வருமாறு மாநில அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத் தலைவருக்கம் சிறப்பு விசாரணைக் குழு பலமுறை அறிவிக்கை அனுப்பியும் இருவரும் ஆஜராகாமல் இருந்தனர். இவர்கள் இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

16 மாத குழந்தையைக் கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!

தன்னுடைய 16 மாத வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு டெல்லி மாநகரநீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

2004ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடந்த இந்த கொடூர செயலைச் செய்த 40 வயதான ஓம் பிரகாஷுக்கு டெல்லி மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அலோக் அகர்வால் ஆயுள் தண்டனையும் ரூ. 2000 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஓம் பிரகாஷ் சாராய பாட்டிலைக் குழந்தையின் தலையில் அடித்துப் பின்னர் குழந்தையைச் சுவற்றின் மீது தூக்கி வீசி கொலை செய்ததாக அவரது மனைவி கீதா புகார் அளித்திருந்தார்.

கீதா கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த அவனது கணவன் கீதாவைக் கண்டித்ததாகவும், பின்னர் இருவருக்கும் சன்டை ஏற்பட்டு இச்சம்பவம் நடந்ததாகக் கூறிய பிரகாஷின் வழக்கறிஞர், அவர் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை என்று வாதிட்டார்.

ஹோலேகாஸ்டை மறுக்கும் பாதிரியார் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற உத்தரவு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பிவரும் பாதிரியார் ரிச்சர்ட் வில்லியம்சன் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற அர்ஜென்டினா அரசு உத்தரவிட்டுள்ளது.

அர்ஜென்டினா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பத்து நாட்களுக்குள் அவர் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக 1988ஆம் ஆண்டு திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இவரையும் மேலும் மூன்று பாதிரியார்களையும் மீண்டும் திருச்சபையுடன் இணைத்து கடந்தமாதம் போப் உத்தரவிட்டிருந்தார். போப்பின் இந்த முடிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து பாதிரியார் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வாட்டிகன் கூறியிருந்தது.

சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியேற்றம்

உயர்நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்ற மோதல் தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அவையிலிருந்து ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து, சென்னை உயர்நீதி மன்ற மோதல் விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், தமிழக சட்டசபையில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது . சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விவாதிக்க வேண்டும் எனவும், அதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் , பா.ம.க., ம.தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சியினர் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. சபாநாயகர் குழப்பம் விளைவிப்பவர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். அமளி காரணமாக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பா.ம.க., கட்சியினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளியில் நின்று தி.மு.க., அரசு கலைக்கப்பட வேண்டும் எனவும், தாக்குதல் சம்பவத்துக்கு அரசு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள். வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வரலாறு காணாத கொடூர சம்பவம் எனவும் கூறினார்கள் .

மாலேகாவ்ன் : ஆர் எஸ் எஸ்ஸுக்கு ஐ எஸ் ஐ பணம் ?

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மாலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் தொண்டர் தயானந்த் பாண்டே என்பவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் பொதுச்செயலர் மோகன் பகவத், ஆர் எஸ் எஸ்ஸின் முஸ்லிம்பிரிவு தலைவர் இந்த்ரேஷ் குமார் ஆகியோர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ இடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், இத்தகவலை ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ஷியாம் ஆப்தே தன்னிடம் தெரிவித்ததாகவும் தயானந்த் பாண்டே வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை துணை ஆணையரிடம் பாண்டே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில்

2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் புனே சென்று ஷியாம் ஆப்தேவை சந்தித்தாகவும் அப்போது இந்த்ரேஷ் குமார் மற்றும் பகவத் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.யிடமிருந்து பணம் வாங்கி விட்டனர் என்று ஆப்தே வருத்தப்பட்டுக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்துக்குத் தெரிய வந்து கேப்டன் ஜோஷி என்பவரிடம், அந்த இரு தலைவர்களையும் கொலை செய்து விடுமாறு உத்தரவிட்டார் புரோஹித். புரோஹித் சொன்னபடி இரு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் கொல்லவில்லை ஜோஷி. இதனால் ஆப்தே கோபமடைந்தார்.

மாலேகான் குண்டுவெடிப்பு சதி முழுவதையும் தீட்டி, திட்டமிட்டது புரோஹித் மற்றும் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் ஆகியோர்தான். நாடு முழுவதும் முஸ்லீம்களால் இந்துக்கள் பாதிக்கப்படுவதற்கு பழி வாங்கும் வகையில் இந்தத் திட்டத்தை அவர்கள் தீட்டினர்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் நாசிக் அருகே உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று புரோஹித்தை சந்தித்தேன். அப்போதுதான் தான் அபினவ் பாரத் அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், இந்துத்வாவை இந்த அமைப்பின் மூலம் காக்கப் போவதாகவும் கூறினார் புரோஹித்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரீதாபாத்தில் நடந்த அபினவ் பாரத் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள சுதாகர் சதுர்வேதி, ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய் ஆகியோரும் வந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் இந்து ராஷ்டிரத்தை அமைப்பது குறித்தும், இந்துக்களின் நலனைக் காக்க தனி அரசியல் சாசனத்தை உருவாக்குவது குறித்தும் புரோஹித் விரிவாகப் பேசினார்.

மேலும், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்குத் தேவையான வெடிபொருட்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட உபாத்யாய், வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் ஆட்களை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், தான் இந்தூருக்குச் சென்று துறவி பிரக்யா சிங் தாக்கூரை சந்தித்ததாகவும் அப்போது, இந்துக்களைக் காக்க வெடிபொருட்களையும், வெடிகுண்டுகளையும் ஏற்பாடு செய்யுமாறு புரோஹித்திடம் கூறுங்கள் என்று தன்னை பிரக்யா சிங் தாக்கூர் கேட்டுக் கொண்டதாகவும் தயானந்த் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்

புரோஹித் தான் சொன்ன சொல்லில் மும்முரமாக இல்லாமல் போனதால் அவருக்கு எடுத்துக் கூறி வெடிகுண்டுகள உடனடியாக தயார் செய்யுமாறு அவரிடம் கூறும்படி தன்னைக் கேட்டுக் கொண்டார் பிரக்யா சிங் என்று கூறியுள்ளார் பாண்டே.

இதுவரை மாலேகான் வழக்கில் பாண்டே மற்றும் ராகேஷ் தாவ்தே ஆகிய இருவர் மட்டுமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சினிமா விமர்சனம் : நான் கடவுள்


நான் கடவுள்





ரஸ்ஸல்

கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா

வசனம்: ஜெயமோகன்

இசை: இளையராஜா

தன் மகனால் சொத்து ,சுகம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்று சொன்ன சோதிடனின் பேச்சை நம்பிப் பதினாலு வருடங்களுக்கு முன், சாஸ்திரம் படிக்க என்று மனைவியிடம் சொல்லிக் காசியில் தொலைத்த மகனைத் தேடித் தன் மகளுடன் காசிக்குத் தந்தை வருவதுடன் கதை துவங்குகிறது.

காசிப்பண்டிட்டின் உதவியுடன்,தலைமைச் சாமியாரைச் சந்தித்து மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தந்தை கெஞ்ச, "நீ அஹம் ப்ரம்மாஸ்மி; கடவுள்; உனக்கு உறவுகள் இருக்கக்கூடாது; ஊருக்குச் சென்று உன் உறவுகளை எரித்துவிட்டு வா" என்ற சாமியாரின் அனுமதியுடன் ஊருக்கு வருகிறார் மகன் ஆர்யா!



ஊருக்கு வரும் ஆர்யாவால் வீட்டில் தங்க இயலவில்லை. பாசத்துடன் நெருங்கும் தாயுடனும் ஒட்ட முடியவில்லை.சாப்பிடச் சொல்லும் தாயிடம் "கஞ்சா கிடைக்குமா?" எனக்கேட்டு, கஞ்சா கிடைக்கும் மலைக்கோவிலில் தங்குகிறார் ஆர்யா!



பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகச் செய்யும் பிச்சைக்கார மாஃபியாக் கும்பல்,கோயிலில் பிச்சை எடுப்பதற்காக ஆள் கடத்தல் செய்வதையும்,ஒரு கும்பலில் இருந்து மற்ற கும்பலுக்கும் பிற மாநிலத்துக்கும் காவல்துறையின் உதவியுடன் ஆள் கடத்துவதையும் கொடுமைப் படுத்துவதையும் விலாவாரியாகக் காட்டுவதே கதை.

ஒரு பிச்சைக்காரக் கும்பலில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் பார்வையிழந்த பிச்சைக்காரியான பூஜா, காவல்துறை உதவியுடன் வலுவான ஒரு கும்பலுக்குக் கடத்தப்படுகிறார். விகாரத் தோற்றமுள்ள மற்றொரு பிச்சைக்கார மாஃபியாத் தலைவனுடன் படுக்கையைப் பகிர கண்பார்வையுள்ள எந்தப் பிச்சைக்காரியும் சம்மதிக்காததால் பூஜாவைப் பத்துலட்சம் ரூபாய்க்கு விற்கிறான் கும்பல் தலைவன். ஆனால் இதை விரும்பாத சக பிச்சைக்காரர்கள் பூஜாவைத் தப்ப வைக்க முயலும்போது ஆர்யா மாஃபியாக் கும்பல் தலைவர்களைக் கொல்கிறார்.

சுமார் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் காசிக் காட்சிகள் மாதக் கணக்கில் படம்பிடிக்கப்பட்டன என்ற சொல்லப்பட்டது. ஆனால் காசிக்காட்சிகள் கொஞ்சமோ கொஞ்சம். படம் மொத்தமும் காசியில்தானோ என எண்ணும்படி ட்ரெய்லர் இருந்தது. படத்தில் ஆர்யா வரும் இடங்கள் /காட்சிகள் சுருக்கமே. எதனாலோ நிறைய காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது புரிகிறது.



இந்துத்துவா ஆள் என அறியப்பட்ட ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் சுருக்.

"ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டா பெத்த பிள்ளைய பதினாலு வருசம் காசியில் விட்டே?" எனக் காசிப் பண்டிட் கேட்கும் இடம்,



மலைமேல் இருக்கும் சாமியாரைத் தேடி வரும் ஒருவன் "சாமீ! சாமீ" எனும்போது, "கண் தெரியாதவனும் சாமி, காது கேட்காதவனும் சாமி, கல்லும் சாமி, மண்ணும் சாமி" " என ஆர்யா உறுமும் இடம்,

ஆர்யாவைத் தேடி வரும் பிச்சைக்காரச் சிறுவன் காவி உடுத்திய ஒருவனிடம்' " சாமியெப்பாக்கணும்"

"ஏன்? எங்களெப்பாத்தா சாமியாத்தெரியலையா?"

"சடபிடிச்சவனெல்லாம் சாமியா?"எனக்கேட்பது,

கோர்ட்டில் ஆர்யாவை நிறுத்தும்போது, மாஜிஸ்ட்ரேட், " இந்த மாதிரி ஆளுகளெயெல்லாம் ஒங்க சட்டம் ஒண்ணும் செய்யாது. ஒரு பரதேசி முதல் மந்திரியையே தலையை வெட்டுவேன்னு சொன்னானே? அவனெ ஒங்க சட்டம் என்ன செய்தது?" எனக் கேட்கும் இடம்.

தன்னைப் பார்க்க வந்த தாயிடம் ஆர்யா,

" ஐயிரண்டு திங்களாய் அடக்கி வைத்த தூமையே
கையிரண்டு காலிரண்டாய் பிள்ளையாய் ஆனதே

என்ற சித்தர் பாடலைக் கூறிவிட்டு, "தூமைன்னா என்னாண்ணு தெரியுமா உனக்கு? எனக்கேட்கும் இடத்தில் சுருக்....சுருக்..

கஞ்சா அடித்த ஜோரில், மலை மேலிருந்து ஆர்யா சங்கு ஊத, " சாமீ! நீங்க ஊதுற சத்தம் அடிவாரம் வரெ கேக்குது; நாங்க போலீஸுக்கு பயந்து சாமியார் வேசத்துலெ இங்கெ இருக்கிறொம்."எனக் காவி வேட்டிகள் கூறுவது எனப் பல இடங்களைக் கூறலாம்.

நகைச்சுவை நடிகராய் வடிவேலுவுடன் வரும் ஒருவர் இதில் மிக சீரியஸாக நடித்துள்ளார். நகைச்சுவைக்காட்சிகள் தனியாக ஏதுமில்லை. கதையோட்டத்தில் வசனங்களால் ஆங்காங்கே சிரிப்பு வெடிக்கிறது.

ஊனமுற்றவர்களைத் தேவைக்கேற்றபடி வேலை வாங்கி இருப்பதில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

தேர்ந்த நடிகர்களை விட இயல்பாக அனைவரும் நடித்துள்ளனர். வில்லன் தாண்டவனாக வருபவரின் நடிப்பு மிக அருமை. பூஜா விருதை எதிர்பார்த்து நடித்திருக்கலாம். அதற்காகவே சொந்தக் குரலில் டப்பிங்க் கொடுத்துள்ளார் போலும்.

பாலாவின் பிதாமகன் படத்துக்கும் இப்படத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

அதிலும் கஞ்சா; இதிலும் கஞ்சா..

அதிலும் சுடுகாடு; இதிலும் சுடுகாடு..



அதிலும் பழைய பாடல்களின் தொகுப்புப் பாடல் ; இதிலும் டிட்டோ..

நந்தாவில் மகன் தாய்ப்பாசத்துக்கு ஏங்குவான்;

இந்தப்படத்தில் தாய் மகன் பாசத்துக்காக ஏங்குகிறாள்.

இவை யதேச்சையா? அல்லது இதுதான் பாலாவின் ஸ்டைலா?

இந்த விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும்போது, மலையாள சானலான 'அமிர்தா டி.வி.யில், கேரளத்தில் பிச்சை எடுக்க, பிச்சைக்கார மாஃபியாவால் தமிழ்நாட்டிலிருந்து பிச்சைக்காரர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது, பொருத்தமாய் அமைந்தது.

வணிக ரீதியில் இல்லாமல் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக, பாலாவைப் பாராட்டலாம்.

படம் பார்த்தபின் மனதில் ஒரு வெறுமை. ஏனோ?

மொத்தத்தில் எதிர்பார்த்தது கிடைக்காதது ஏமாற்றமே!

ஈழப்பிரசினையில் இன்னுமொருவர் தீக்குளிப்பு

கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த அவர் இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று கூறி வந்தாராம்.

நேற்று மதியம் 2 மணி அளவில் மண்எண்ணெய் கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். அங்கு நடுரோட்டில் நின்று கொண்டு மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீ பற்றிப்பிடித்து எரிந்ததால் வேதனை தாங்க முடியாமல் ஓடிய அவர் ரோட்டோரத்தில் உள்ள டீக்கடை அருகில் கீழே விழுந்தார்.

அவரது உடலில் சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி தெரிந்து காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.

உடல் கருகி உயிருக்கு போராடியபடி கிடந்த தமிழ்வேந்தனை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தமிழ்வேந்தனுக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் யோசனைப்படி கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி நள்ளிரவு 1.30 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

ஜோதி என்ற தமிழ்வேந்தனுக்கு திருமணமாகி ஜான்சி என்ற மனைவியும், சந்தோஷ்(11/2) என்ற மகனும் உள்ளனர்.







முன்னதாக அய்யப்பன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று தமிழ் வேந்தனை பார்த்தனர்.

காங்கிரஸ்ஸில் அஸ்ஹருத்தீன் : இரண்டாவது இன்னிங்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக 90களில் செயற்பட்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஸ்ஹருத்தீன். தனது கிரிக்கெட் வாழ்வை சூதாட்டப் பிரசினையால் முடித்துக்கொண்ட அஸ்ஹருத்தீன் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸாக அரசியல் வாழ்வை தொடங்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைச் சந்தித்து காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக அவர் சேர உள்ளதாக ஒரு செய்தியை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி உறுதி செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே அஸ்ஹருத்தீன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் உள்ள தொகுதிகள் ஒன்றில் அவர் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.

"இலங்கைக்கு ஆயுதம் வழங்கவில்லை" - பிரணாப்

நேற்று நாடாளுமன்ற மேலவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்து பேசுகையில் அதிமுக எம்.பி மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா (உள்ளிட்ட சில உறுப்பினர்கள் "இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குகிறதா? இல்லையா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பிரதமர் பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் பதில் அளிக்கையில் "இலங்கைக்கு இந்தியா ஒரு போதும் ஆயுதங்கள் வழங்கவில்லை இலங்கை தங்களுக்கு தேவையான ஆயுதங்களை வேறு நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள்" என்று கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியாது என்றும் அரசியல் ரீதியில்தான் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

"நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும்"

நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும் என்று நேபாளம் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். அவர், அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தகால், முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசினார்.

"நேபாளத்தில் ஜனநாயக நடைமுறைகள் தொடர்ந்து நீடிப்பதற்கும், அமைதியான சூழ்நிலை ஏற்படுவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்."நேபாள பிரதமருடன் நடத்திய பேச்சில் இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்துடன் தொடர்ந்து நல்ல உறவை வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்" என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்

கடல் வழி அணு ஆயுதக் கடத்தலுக்கு வாய்ப்பு : கப்பற்படைத் தலைவர்

இந்தியாவின் கடல்பகுதி வழியாக அணுஆயுதங்கள் கடத்தப்படும் சாத்தியம் உள்ளதாக கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். "பலவீனமாக உள்ள இந்திய கடல் பகுதிகள் வழியாக ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களை சரக்கு கன்டெய்னர்கள் மூலம் கொண்டுவர முடியும்" என்றார் அவர்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறுகையில் "உலக அளவில் சரக்கு போக்குவரத்தில் 70 முதல் 75 சதவீதம், கன்டெய்னர்கள் மூலமாகவே நடக்கிறது. சட்ட விரோதமாக அணு ஆயுதங்களை கடத்த பயங்கரவாதிகளும் இந்த முறையை பயன்படுத்தலாம். அதனால், இந்த விஷயத்தில் உயரிய பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். முறையான பரிசோதனை மற் றும் ஸ்கேனிங் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். நூறு சதவீத பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாம் செயல்பட வேண்டும்" என்றார்

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படாது : லாலு

இரயில் நிலையங்களுக்குத் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று மத்திய இரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவரது கட்சியைச் சார்ந்த ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) என்ற உறுப்பினரின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் வைக்க ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சகம் தடை விதித்ததாகவும் அந்த உத்தரவு இன்றும் உள்ளதாகவும் அவர் கூறினார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரைக் கூட இரயில் நிலையத்திற்கு வைக்க முடியாது என்று அவர் கூறினார்.

எச்1பி விசா பிரச்சனை : அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க கோரிக்கை

அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வேலைக்கமர்த்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே நிதி உதவி அளிக்கப் படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் கோரியுள்ளது.

இந்த நிபந்தனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்யக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துவோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.

இந்த நிபந்தனைகளால் பிரச்சனை ஏற்படாது என்று அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் கருதினால் அது அவர்களின் அறியாமையையே வெளிப்படுத்தும். உகாண்டா, பிஜி தீவுகள் மற்றும் ஒபாமாவின் பூர்வீக நாடான கென்யா போன்ற நாடுகளில் இருந்த இலட்சக் கணக்கான இந்தியர்கள் எந்தவித கருணையும் இல்லாமல் விரட்டப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் கோரினார். அமெரிக்காவின் இந்த நிபந்தனை தளர்த்தப்படாவிட்டால் இந்தியாவில் உள்ள 14 அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்கக் கோரும் பிரச்சாரத்தைத் தொடங்குவோம் என்றும் அவர் கூறினார்.

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on: புதன், 18 பிப்ரவரி, 2009 // , , ,
மணிப்பூரில் நடந்து வரும் முழு அடைப்பினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. 50க்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

அரசு அதிகாரியும் அவருடன் பணியாற்றி இரு அதிகாரிகளும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மணிப்பூரில் 48 மணி நேர முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு உள்ளூர் அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பில் ஈடுபட்டவர்கள் சகோல்பந்த், கக்வா, யும்னாம் மற்றும் லீகய் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கைளச் சேதப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மணிப்பூர் முழுவதும் கடைகள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களிலும் மிகக் குறைவான அளவிலேயே வருகை இருந்தது. மாநிலத்திற்குள்ளும் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ஓடவில்லை. தலைநகர் இம்பாலில் பல்வேறு சாலைகளிலும் டயர்கள் கொழுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வன்னிப் பகுதியில் 108 பேர் படுகொலை


வன்னி பகுதியில் இன்று அதிகாலை இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் 108க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய ஊர்களைக் கொண்ட பாதுகாப்புப் பகுதி என்று புதிதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடித்த இந்த தாக்குதலின்போது கொத்து குண்டுகள் உபயோகிக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை

தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், அதனை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிகளின் படி வெளியிடப்பட்டுள்ள உத்தரவு மூலம் தேர்தல் ஒரே நாளில் நடந்தால் தேர்தல் முடிந்த 48 மணி நேரம் வரையும், பல கட்டங்களாக நடந்தால் இறுதிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும். அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கருத்துக் கணிப்பு வெளியட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி இருந்தது.

20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும்

11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இவ்வாறு கூறியுள்ளார்.

அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. தீவிவாதிகளின் தாக்குதலை முறியடித்தல் மற்றும் அவசர கால காட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மையங்களில் அந்தந்த மாநில காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஹரியானா முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் - 2வது மனைவி

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார்.

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் சாந்து முகம்மது அவரது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார். அவர் மீது காவல்துறையில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறினார்.

தான் கற்பழிக்கபட்டதாகவும், ஏமாற்றப்பட்டதாகவும், தன்னுடை மத உணர்வு புண்படுத்தப்பட்டதாகவும் பிஜா திங்கள் கிழமையன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சாந்து முகம்மது மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இஸ்லாமிய மதத்திலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராதா பாலி என்ற பிஜா உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசு துணை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனான சாந்து முகம்மது என்ற சந்தர் மோகன் ஹரியானா மாநில துணை முதல்வராக இருந்தவர்.

டென்னிஸ் தரவரிசை: சானியா முன்னேற்றம்

Published on: செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 // , , , , ,
பாட்டயா டென்னிஸ் போட்டி இறுதியாட்டம் வரை வந்த இந்தியாவின் சானியா மிர்ஸா மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இப்போட்டிக்கு முன் தரவரிசையில் 126 ஆவது இடத்தில் இருந்த சானியா, இப்போட்டியில் இறுதியாட்டம் வரை வந்ததால் 39 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 87 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோல் இரட்டையர் பிரிவில் இறுதியாட்டம் வரை சென்ற இந்தியாவின் போபண்ணா இரட்டையர் தரவரிசையில் 78ம் இடத்தைப் பெற்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி முறையே 7 மற்றும் 5 இடங்களில் உள்ளனர்.

இலங்கை: கருணா இயக்கத்தில் பிளவு

இலங்கையில் விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சியின் பிள்ளையான் முதல் அமைச்சராக இருந்து ஆட்சி நடத்தி வருகிறார். கருணா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில், கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கருணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டு கட்சித்தலைமையிலிருந்து அறிவிக்கை அனுப்பிவைக்கப்பட்டதாம். கருணா விளக்கம் தராததால் அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த கருணா தனது ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதிபர் இராஜ பக்சேயின் சுதந்திரா கட்சியில் சேர இருப்பதாக கருணாவும் அவர்ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்

காங்கிரஸ்ஸுடன் பாஜக, கம்யூனிஸ்ட் கூட்டணி: சிக்கிம் விசித்திரம்

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற மாநிலக் கட்சியை எதிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன.

சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற கட்சி சிக்கிம் மாநிலத்தில் வலுவாக உள்ளது. இதன் தலைவர் பவன்குமார் சாம்சிங் நான்கு முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் வரும் மேமாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு கடும்போட்டி ஏற்படுத்த நினைத்த தேசிய கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்கிற விசித்திரக் கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன.மாநில காங்கிரஸ்ஸின் மூத்த தலைவர் உப்ரதி இக்கூட்டணி அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டக்கல்லூரி மோதல்: இது பாண்டிச்சேரி சம்பவம்

புதுவை மாநிலத்தில் காலாப்பட்டில் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ஈழப்பிரச்னையை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வலியுறுத்தி நகரின் மையப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். கடந்த 11ம் தேதியிலிருந்து மூன்று நாள்களாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் கலந்துகொள்ளாமல் வகுப்புகளுக்குச் சென்று வந்தனர்.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு முதலாம் ஆண்டு படிக்கும் வில்லியனூரைச் சேர்ந்த மாணவர் அன்புமணி, பெரம்பலூரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் சுரேஷ் வயிற்றில் திடீரென கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டாராம்.
சம்பவம் குறித்து காலாப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை யடுத்து, மாணவர்கள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறினர். கல்லூரியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

பாண்டிச்சேரி: விமானநிலையம் செயற்பட தாமதமாகலாம்

பாண்டிச்சேரியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையம் எதிர்பார்த்தபடி வரும் மார்ச் மாதம் செயற்படாமல் போகலாம் என்றும் அது செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்றும் தெரிகிறது. இத்தகவலை துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஓடுபாதையையொட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கிங்ஃபிசர் உள்ளிட்ட நிறுவனங்கள் பாண்டிச்சேரியில் சேவை தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவ்ருகிறது.

ராஜ்தாக்கரே தலைமறைவு என நீதிமன்றம் அறிவிக்கை

மகராஷ்டிரா நிர்மான் சேனா தலைவர் தலைமறைவு என ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே பீகார் மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்ததை அடுத்து சுதீர் குமார் பப்பு என்ற வழக்கறிஞர் தாக்கரே மீது 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் வருமாறு நீதிமன்றம் பலமுறை அறிவிக்கை அனுப்பியும் ராஜ் தாக்கரே வரவில்லை.

இதனை அடுத்து ஜாம்ஷெட்பூர் 2வது அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில்குமார் ராஜ்தாக்கரே தலைமறைவாக இருப்பதாக இந்திய குற்றவியல் சட்டத்தின் 82 பிரிவின்படி அறிவித்து அறிவிக்கை அனுப்பினார். இந்த அறிவிக்கைக்கு ராஜ்தாக்கரே பதில் அளிக்காவிட்டால் அவரது சொத்துகள் பிரிவு 83ன் படி பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும்.

முன்னதாக ராஜ் தாக்கரையை பிணையில் வரமுடியாத அளவில் கைது ஆணையை நீதிமன்றம் டிசம்பர் 16ஆம் தேதி பிறப்பித்து, மும்பை காவல்துறை ஆணையர் இந்த ஆணையை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது.

சுப்ரமணிய சுவாமி மீது முட்டை வீசித் தாக்குதல்

சென்னை உயர்நீதிமன்றம் வந்த ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி மீது அழுகிய முட்டைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிபதி முன்னிலையிலேயே இச்சம்பவம் நடந்தேறியது.

சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்ரமணியம் சுவாமி நீதிமன்றம் வந்திருக்கையில் திடீரென நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசுவதால் சுப்பிரமணிய சுவாமி‌யை தாக்குவதாகக் கூறி அவருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பின்னர் உத்தரவிடப்பட்டது.

தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.100கோடிக்கு வரிச்சலுகை

தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபையில் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அரசின் மொத்த வருவாய்: 58,270 கோடிகள்.
நிதிபற்றாக்குறை: 3%
மொத்த விற்பனை அடிப்படையில் மதிப்பு கூட்டு வரி
இரும்பு பெட்டி - முழு வரி விலக்கு
மிளகு சீரகத்திற்கு வரி விலக்கு பருப்பு, பயிறு, பட்டணிக்கு கொள்முதல் வரி ரத்து
நெய், ஊறுகாய் வரி குறைப்பு
உலர்ந்த திராட்சை, ஜவ்வரிசி, ஸ்டார்ச், கிளிப், ரப்பர் பேண்ட் மீதான வரி குறைப்பு
ஐ-பாட், எம்.பி.3, எம்.பி.4 பிளேயர் மீதான வரி குறைப்பு
உற்பத்தி கணக்கின் அடிப்படையில் செங்கல் சூளை மீது வரி
இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வரிச்சலுகைகளால் அரசுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சட்டமன்ற வளாகம் கட்ட ரூ.200கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு 4110 கோடியிலிருந்து 9142 கோடியாக அதிகரிப்பு

சுகாதாரச் செலவினங்களுக்கு 3300 கோடி ரூபாயும், ஆதிதிராவிடர் நலனுக்கு 2615 கோடி ரூபாயும், இரெயில்வே மேம்பாலங்களுக்கு ரூ.400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

கங்குலி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா?

மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியை தங்கள் கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் அவர் போட்டியிட வேண்டுமென அரசியல் கட்சி ஒன்று கேட்டுக் கொண்டதாக கங்குலியின் மனைவி டோனா இன்று கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "கங்குலி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மேற்கு வங்க அரசு விரும்புகிறது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் லக்னோ சென்றிருக்கும்போது யாரோ ஒரு அமைச்சர் கங்குலி உத்திரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட வேண்டும் என்று சொன்னார்" என்று கூறினார். எந்தக் கட்சி அவரை அழைத்தது என்று கேட்டதற்கு தான் அரசியில் இல்லாததால் அரசியல்வாதிகள் பெயர் தனக்கு நினைவில்லை என்றும் அநேகமாக சமாஜ்வாதி கட்சியாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அமர்சிங்கிடம் இதுபற்றிக் கேட்டபோது, எங்கள் கட்சியிலிருந்து இதுவரை எவரும் அதிகாரப்பூர்வமான அனுகவில்லை என்றும், கங்குலி சமாஜ்வாதியில் இணைய விரும்பினால் அதை உடனே பரிசீலிப்போம் என்றும் அவர் கூறினார்.

பஸ் கவிழ்ந்து சபரிமலை பக்தர்கள் 11 பேர் பலி

சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலியானார்கள். 40 பேர் காயமுற்றுள்ளனர். அவர்களில் 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவிலிருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வரும்போது கோட்டயம் அருகே எருமேலி என்னும் இடத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழந்து விழுந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமுற்றவர்களை கோட்டயம் மருத்துவக் கல்லூ மருத்துவமனை மற்றும் காஞ்சிராப்பள்ளி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

ஏமாற்றும் கல்வி நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் யோசனை!

Published on: திங்கள், 16 பிப்ரவரி, 2009 // , , , , ,
பீகாரில் புத்தா மிஷன் பல் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை என்ற நிறுவனமொன்று பல்மருத்துவப் படிப்புக்காக விளம்பரம் செய்தது. அதில் தங்களது கல்லூரி மகத் பல்கலைக்கழக இணைப்பு பெற்றுள்ளதாகவும், இந்திய பல்மருத்துவக் குழுமம் (Indian Dental Council) அக்கல்லூரி படிப்புகளை அங்கிகரித்திருப்பதாகவும் கூறியிருந்தது. அதை நம்பி ஏராளமானவர்கள் அக்கல்லூரியில் சேர்ந்தனர்.

கல்லூரியினர் பொய்யான விளம்பரம் செய்து தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டதாக பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

மாணவர்களை கல்லூரிநிர்வாகம் ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டதால் அக்கல்லூரி நிர்வாகம் தலா இரண்டு இலட்சம் வீதம் 22 இலட்சம் அபராதம் வழங்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாணவர்களை கல்வியின் பெயரால் ஏமாற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் நலவழக்கு தொடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.

நடுக்கடலில் அணுஆயுத நீர்மூழ்கிகள் மோதல்

பிரிட்டன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோதிக் கொண்ட செய்தி வெளியாகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த எச் எம் எஸ் வேன்கார்டு என்ற அணு ஆயுத நீர்மூழ்கியும், பிரான்சைச் சேர்ந்த லா டிரையம்ஃபண்ட் என்ற இன்னொரு அணு ஆயுத நீர்மூழ்கியும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கடியில் இம்மாதத் தொடக்கத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மிகக் கடுமையான அளவில் கடலுக்கடியிலேயே மோதிக் கொண்டதாக இவ்விரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்புகள் தெரிவித்துள்ளன.

கடலுக்கடியிலிருந்து வரும் தாக்குதல்களைச் சமாளிக்க இவை பயன்படுத்தப் படுவதாக அச்செய்திக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இவ்விரு நீர்மூழ்கிகளும் பெருமளவு அணு ஆயுதங்களுடன் நிரப்பட்டிருந்ததாகவும், பெரும் சேதங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் இச்செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

சோனார் போன்ற அதிநவீனப் புலனறியும் கருவிகள் பொருத்தப் பட்டிருந்த போதிலும் இவ்வகை மோதல் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு இரு அரசுகளும் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த மோதலால் அட்லாண்டிக் கடலின் கடும் சுற்றுப்புறச் சீர்கேடு நடந்திருக்கும் என அஞ்சுவதாக அணு ஆயுதங்களுக்கு எதிரான தன்னார்வு நிறுவனம் CND (Campain for Nuclear Disarmament) கவலை தெரிவித்துள்ளது. சேதத்தின் உண்மையான விபரங்களை வெளியிடுமாறு பிரிட்டன், பிரான்சு அரசுகளை அவ்வமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய மாவோ தலைவர் சரண்டர்

தடைசெய்யப்பட்ட மாவோ கம்யூனிஸ்டின் ஆந்திர மாநில முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாம்பசிவடு காவல்துறையிடம் சரணடைந்தார்.

கடந்த ஒரு வருடமாகத் தேடப்பட்டு வந்த அவர் நேற்று ஆந்தி மாநில காவல்துறை தலைமையகத்தில் காவல் துறை உயர் அதிகாரி முன் சரணடைந்ததாகத் தகவல் கூறுகின்றன. இந்த தகவலை ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி உறுதி செய்தார். இதுகுறித்து மேலதிக தகவல் தர அவர் மறுத்துவிட்டார்.

கொனாகுரி அய்லையா என்ற இயற்பெயருடை சாம்பசிவடு, 2003 ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப் பட்டிருந்தது.

தெலுங்கானா பகுதியின் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2006 ஆம் ஆண்டு மாவோ தலைவராக இருந்த மாதவ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அந்த இயக்கதின் முக்கியத் தலைவராய் உயர்ந்தார்.

இந்தியா: நிதிநிலை அறிக்கை - ஒரு பார்வை

2008-09ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ. 9,09,053 கோடி

-பட்ஜெட் மதிப்பீட்டை விட வரிகள் மூலமான வருவாய் ரூ. 60,000 கோடி குறைவு

-மானியங்களுக்கு ரூ. 95,500 கோடி ஒதுக்கீடு

-கிராப்புற சுகாதார திட்டத்துக்கு ரூ. 1,200 கூடுதல் நிதி

-ரூ. 40,000 கோடிக்கு வரிச் சலுகைகள்

-உணவு, உரம், பெட்ரோலியம் மீதான மானியம் அதிகரிப்பு

-குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு ரூ. 8,300 கோடி

- குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 7,400 கோடி

- 2009-10ல் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,41,703 கோடி ஒதுக்கீடு

- விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி

- நிதி பற்றாக்குறை 6 சதவீதமாக இருக்கும்

- ஏற்றுமதியாளர்களுக்கு 2 சதவீத வரி சலுகை

- 2009-10ல் பாரத் நிர்மாண் திட்டத்துக்கு ரூ. 40,900 கோடி

- வருவாய் பற்றாக்குறை 4.4% ஆக இருக்கும்

- குழந்தைகள் நல திட்டங்களுக்கு ரூ. 6,705 கோடி

- ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ. 11,842 கோடி

- மத்திய திட்ட ஒதுக்கீடு ரூ. 2,82,957 கோடி

- 2008ல் சிறுபான்மையினர் நலனுக்கு 15 சிறப்பு திட்டங்கள்

- 2009ல் வரியல்லாத வருவாய் ரூ. 96,208 கோடியாக இருக்கும்

- ஐடிஐகளில் சேர இளம் விதவைகளுக்கு முன்னுரிமை

-கிராப்புற வங்கிகளுக்கு ரூ. 652 கோடி ஒதுக்கீடு

- 2003-2008 இடையே பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ. 10,81,000 கோடியாக உயர்வு. இது 81% வளர்ச்சி.

- கிராப்புற வங்கிகளுக்கு ரூ. 621 கோடி ஒதுக்கீடு

- 2009-10ல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் 2 புதிய ஐஐடிக்கள்

- கோதுமைக்கான குறைந்தபட்ச விலை ரூ. 1080

- ஊரக வேலைவாய்ப்பு திட்டங்கள் மேலும் விரிவாக்கப்படும்

- விவசாயக் கடன் ரூ. 2,50,000 கோடியாக அதிகரிப்பு

- பொருளாதார தேக்கத்தை சமாளிக்க வரி சீரமைப்புகள்

- ரூ. 65,300 கோடி விவசாய கடன் தள்ளுபடி

- 35 அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி

- வெளிநாட்டு வர்த்தகம் 35.4 % உயர்வு

- அடிப்படை கட்டமைப்பு துறைக்கு கடன் தரும் வங்கிகளுக்கு ஐஐஎப்சிஎல் மூலம் நிதி தரப்படும்

- ஏற்றுமதி 17.1% சரிவு

- அடிப்படை கட்டமைப்பு துறையில் ரூ.70,000 கோடி முதலீடுகள் அனுமதி

- ரேசன் மூலம் 22.7 மி்ல்லியன் டன் கோதுமை வினியோகம்

- 28.5 மில்லியன் டன் அரிசு வினியோகம்

- கடந்தாண்டு முதலீடுகள் 39 % அதிகரிப்பு

- 7-8% பொருளாதார வளர்ச்சி பராமரிக்கப்படும்

- பற்றாக்குறை 2.7% குறைந்துள்ளது

-வரி வருவாய் 12.5 % அதிகரிப்பு

மகளைக் கற்பழித்ததாக இராணுவ வீரர் கைது!

தன்னுடைய சொந்த மகளைக் கற்பழித்ததாக இராணுவ வீரர் ஒருவர் ஞாயிற்றுக் கிழயைன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

தெற்கு டெல்லியில் உள்ள நாராயணா காவல் நிலையத்தில் இராணுவ வீரரின் 15 வயது மகள் சனிக்கிழமையன்று அளித்த புகாரின் அடிப்படையில் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமையன்று இச்சம்பவம் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்ததைச் சேர்ந்த இவர் டெல்லியில் கான்ட் பகுதியில் வசிக்கிறார். இவருடைய மனைவியும் மகனும் சொந்த கிராமத்தில் இருப்பதாகவும் மகளையும் மகளின் இரு தோழிகளையும் இவர் சமீபத்தில் டெல்லி அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கல்யாண விருந்து சாப்பிட்ட 300 பேர் வாந்தி

குஜராத்தில் கல்யாண விருந்து சாப்பிட்ட சுமார் 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜான்கர் எனும் கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணி அளவில் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. சுமார் 1000 பேர் இதில் கலந்து கொண்டனர். விருந்துண்ட 300 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 200 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாம் நகரிலிருந்து இரண்டு மருத்துவக் குழுக்கள் இக்கிராமத்திற்கு விரைந்துள்ளதாக ஜாம் நகர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

புலிகள் ஆயுதங்களைத் துறந்தால் பேச்சுவார்த்தைக்கு இந்தியா வலியுறுத்தும் - ப.சிதம்பரம்

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும், பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ஜெயவர்த்தனேயுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

அந்த ஒப்பந்தம் மட்டும் அமலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும், ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும், தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். 

ஆனால் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல், அதை விடுதலைப் புலிகள் காலில் போட்டு மிதித்ததே, இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். 

அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு. 

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. 

இந்தியாவில் நாகாலாந்து, அசாம், மணிப்பூர், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய குழுக்கள் போராடி வருகின்றன. இந்திய அரசால் அசாமில் ஆயுதம் ஏந்தி போராடும் "உல்பா' தீவிரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் நாம் பேச முடியும். 

இந்தியா மட்டுமல்ல; உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல; நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு. 

எனவே, ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. 

இலங்கையில் உடனடியாக அந்நாட்டு அரசு போரை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என விடுதலைப் புலிகளும் அறிவிக்க வேண்டும். 

அவ்வாறு புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடாத வரை போரை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது. 

இதுதான் இந்திய அரசின் கொள்கை. இந்திய அரசின் இந்தக் கொள்கை புரிந்ததால்தான் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இப்பிரச்னையில் இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. 

இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் விளக்க வேண்டும். இந்திய அரசின் இந்தக் கொள்கைக்குப் பின்னால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் திரண்டால், வெறும் 2 நாளில் இலங்கையில் போரை நிறுத்த நம்மால் முடியும். 

இலங்கையின் 40 லட்சம் தமிழர்களையும் மத்திய அரசின் இத்தகைய கொள்கையாலும், காங்கிரஸ் கட்சியாலும்தான் காப்பாற்ற முடியும். இதை தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலமெங்கும் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்

இடைக்கால நிதிநிலை அறிக்கை: நாளை சமர்ப்பிக்கப்படும்

Published on: ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 // , , , , ,
நடுவண் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (Interim Budget) நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வில் இருப்பதால், நிதியமைச்சக பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார். எதிர்வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் பரவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இன்று ஓய்வில் இருக்கும் பிரதமர் மன்மோகனைச் சந்தித்த பிரணாப், அவரிடம் நிதிநிலை அறிக்கையை காண்பித்து ஒப்புதலும் ஒப்பங்களும் பெற்றார். பிரதமர் பார்வையிட்ட பின்னர், குடியரசுத்தலைவரின் பார்வைக்காக நிதிநிலை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

நிதிநிலைஅறிக்கை மீதான அரசின் உரையையும் மன்மோகன்சிங் மேற்பார்வையிட்டார்.

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கு சற்றுமுன் வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பில் இரவு பத்துமணிக்கு வெடிகுண்டு வெடிக்கும்;முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செய்தியை தினத்தந்தி தெரிவிக்கிறது.

ஜனாதிபதி மாளிகை அருகே வாலிபர் தீக்குளிப்பு

டெல்லியில் விஜய் செளக் என்ற இடத்தில் தான் இந்திய ஜனாதிபதி மாளிகையும் பிரதமர் அலுவலகமும் உள்ளன. நாட்டில் எப்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் பகுதியாகும் இது.

அந்த பலத்த பாதுகாப்பையும் மீறி நேற்று பிற்பகல் 31/2 மணியளவில் ஒருவாலிபர் தன்னுடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் தீயணைப்புத்துறையினர் ஓடிவந்து தீயை அணைத்து அந்த வாலிபரை இராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தீக்குளித்த அந்த வாலிபர் பெயர் அபிசேக் குமார் (32 வயது) என்றும், ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் என்றும், குவைத்தில் பிளம்பராகப் பணிபுரிந்து வந்தவர், பணி இழந்து நாடு திரும்பியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

70 சத தீக்காயத்துடன் காணப்படும் அபிசேக் தீவிர மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாரைச் சந்திப்பதற்காக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப்பகுதி வந்தார் என்று தெரியவில்லை.

தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா: வேலையிழக்கும் 1 இலட்சம் இந்தியர்கள்

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒபாமா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அவற்றுள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஹெச்-1 பி விசாக்களை நிறுத்துவதும் ஒன்றாகும்.

அமெரிக்கா வருடமொன்றுக்கு விநியோகிக்கும் 65,000க்கும் மேற்பட்ட இவ்வகை விசாக்களில் 60% சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பயனடைந்துவந்தனர். இதுவரை இந்த விசாவில் அமெரிக்கா சென்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்துக்கும் மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஒருவருடத்தில் ஹெச்1-பி வகை விசாக்களில் 1,65000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவை இந்தியர்களுக்கானதாகும். அதனால், பணியிழந்த அந்த இந்தியர்கள் நாடு திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானலில் கடல்வாழ் உயிரின நிரந்தர காட்சியகம்

கடல்வாழ் உயிரினங்களின் நிரந்தர காட்சியகம் ஒன்று ரூ.2.50கோடி செலவில் கொடைக்கானலில் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதலாவதாக இது இருக்கும். கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இதில் ஆர்வங்காட்டி வருகிறது.

இதற்காக நகராட்சிக்குச் சொந்தமான ஏரியொன்றின் அருகிலுள்ள கலையரங்கம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ரூ.2.5கோடி செலவில் அமைக்கப்படவிருக்கும் இக்காட்சியகத்தில் 300க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்களும், தாவரங்களும் இடம்பெறும் என்று திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கெடாதவகையில் இது அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாட்டயா டென்னிஸ்: இறுதியாட்டத்தில் சானியா தோல்வி

பாட்டயா டென்னிஸ் இறுதியாட்டத்திற்கு மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா தகுதி பெற்றிருந்தது அறிந்ததே!

இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் இரஷ்யாவின் சுவனரேவாவிடம் 5-7, 1-6 என்ற நேர்கணக்கில் வீழ்ச்சி கண்டார்.

இதன்மூலம் நீண்ட நாள்களுக்குப்பின்னர் சானியா பட்டம் வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது.

காமராஜரின் அமைச்சர் அப்துல் மஜீத் சென்னையில் மரணம்

காமராஜரின் அமைச்சர் அப்துல் மஜீத் சென்னையில் மரணம்
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 15, 2009, 14:36 [IST]

சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றிய அப்துல் மஜீத், சென்னையில் நேற்று இரவு மரணமடைந்தார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். 85 வயதாகும் இவர், காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

பெரியவர் மஜீத், சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அயனாவரத்தில் உள்ள மகன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலை உடல் நலம் மிகவும் பாதிக்கப்படவே உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சென்னையில் வைத்து காலமானார்.

மறைந்த அப்துல் மஜீத்துக்கு பசுலுதீன், சர்பூதீ்ன், ஜியாவுதீன், மைதீன் என்ற 4 மகன்களும், ஷகீனா, பஷீரா என்ற 2 மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மஜீத்தின் மரணச் செய்தியை அறிந்ததும் மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் விரைந்து சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று கடையநல்லூருக்கு அப்துல் மஜீத்தின் உடல் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு கடையநல்லூர் செகன்னா வப்பா(கொத்துவா) பள்ளியில் வைத்து அடக்கம் நடைபெறுகிறது.

மஜீத் மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா கூறுகையில்,

எங்கள் கட்சியில் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பெரியவர் மஜித் ஆலோசனைப்படி இம்மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிபணிகளை செய்து வந்தோம்.

இதுபோன்ற ஆலோசனைகளை கூற பெரியவர் இனி இல்லை. எங்கள் கட்சி சார்பில் தூக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது என்றார்.

முன்னாள் அமைச்சர் மஜீத் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் என பெயரெடுத்தவர் என்று ஊர் மக்கள் மஜீத்துக்கு புகழாரம் சூட்டினர்.

முதல் சிறுபான்மை அமைச்சர்

அப்துல் மஜீத் 1965ம் ஆண்டு முதல் 67 வரை அமைச்சராக இருந்தார். அப்போது அவரது அமைச்சர் பதவியின் பெயர் ஸ்தலத்துறை. அதுதான் பின்னாளில் உள்ளாட்சித் துறை என மாற்றப்பட்டது.

அப்துல் மஜீத், சிறுபான்மைப் பிரிவிலிருந்து அமைச்சரான முதல் பிரமுகர் ஆவார். இதனால் அன்றைய காலகட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் பிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்துல் மஜீத், மஜீத் என இஸ்லாமியர்கள் பெயர் சூட்டியதாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷத்திற்கு எதிராய் பத்வா

பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷத்திற்கு எதிராக பத்வா வெளியிடப் பட்டுள்ளது உத்திரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் கோஷமான "ஜெய் பீம்" என்பதை முஸ்லீம்கள் சொல்லக் கூடாது என்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அராபிக் மத்ரசா ஒன்றில் இன்று பத்வா ஒன்று வெளியிடப்பட்டது. 

வாழ்த்து சொல்வதற்கு மதம் தடையில்லை என்றும் இந்த பத்வா தங்கள் கட்சி உறுப்பினர்களைப் பாதிக்காது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து கூறினார்.

நடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சிக்கு இந்த பத்வா உற்சாகமளித்துள்ளது. பகுஜன் கட்சியின் உறுப்பினர்கள் இந்த கோஷத்தைக் கூறுமாறு கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி கூறினார்.

கொங்கு வேளாள கவுண்டர் பேரவையின் அரசியல் மாநாடு


கருத்தம்பட்டியில் கொங்கு வேளாள கவுண்டர் பேரவையின் அரசியல் மாநாடு தொடங்கியது. கொங்கு வேளாள கவுண்டர்கள் பல்வேறு வகையில் பின்னடைந்துள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்காகவும் கொங்கு வேளாளர் பேரவை அரசியில் நேரடியகாப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையில் கொங்கு இன மக்களின் கடவுளாக தீரன் சின்னமலை அறிவிக்கப்பட்டார். குமாரலிங்கேஸ்வரர் குருக்கள் தலைமையில் தேவாரம், திருவாசம் போன்ற திருமறைகள் பாடப்பட்டு தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக இப்பேரவை முன்னர் அறிவித்திருந்தது.

கஷ்மீரில் பன்னாட்டு விமான நிலையம்


ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் பன்னாட்டு விமான நிலையம் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த முனையத்தில் விமான சேவையைத் துவக்கி வைத்தார். முதல் சேவையாக ஸ்ரீநகரிலிருந்து துபாய்க்கு ஏர் இந்திய விமானம் தனது பயணத்தைத் துவக்கியது.

துபாய்-ஸ்ரீநகர் வி்மானசேவை கஷ்மீர் மக்கள் வணிக மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்று சோனியா காந்தி கூறினார்.

குறைந்த செலவு விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய்க்கு வாரம் ஒரு சேவையை வழங்கும் என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறினார்.

1989க்கும் முன் கஷ்மீர் ஆசியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விங்கியது. தனி நாடு கேட்டு கஷ்மீரி இயக்கங்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. கடந்த ஆண்டு சுமார் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் கஷ்மீர் பள்ளதாக்குக்கு வந்து சென்றதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர்.

ஜார்ஜ் புஷிற்குப் பாரதரத்னா?

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷிற்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வி கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற விவகார அமைச்சருமான வயலார் ரவி, அவரின் கருத்துக்கு எதிராக கடுமையான விமர்சனம் தெரிவித்தார்.

பெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசும் பொழுது, "இந்திய-அமெரிக்க உறவை நெருக்கமாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக புஷிற்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும்" என்று சிங்வி கூறினார்.

"தனிப்பட்ட கருத்தாக இருந்தால் கூட, இது போன்ற கருத்துகள் கூறும் பொழுது காங்கிரஸ் பிரமுகர் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என வயலார் ரவி கூறினார். "இது போன்ற கருத்துகளைக் காங்கிரஸின் எதிரிகள் எதிர்மறையாக திரித்துப் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக"வும் அவர் கூறினார்.

"முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்குப் பாரத ரத்னா வழங்குவதை எதிர்க்கவும் புஷிற்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும் என கோரிக்கை விடவும் செய்வது காங்கிரஸ் எப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக" பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

அதேநேரம், "பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்தோ-அமெரிக்க பாரத்தின் சேர்மன் என்ற நிலையில் தான் தெரிவித்தத் தனிப்பட்டக் கருத்தை விவாதமாக்க முயற்சிகள் நடப்பதாகவும் புஷிற்குப் பாரத ரத்னா வழங்குவதற்காக தான் அதிகாரிகளுக்கு சிபாரிசு எதுவும் செய்யவில்லை" எனவும்சிங்வி ஏ.ஐ.சி.சிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தி: புதிய காமராக்கள் பதிக்க அனுமதி!

அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது இருக்கும் மூன்று குளோஸ்ட் சர்க்யூட் டிவி காமராக்களை அகற்றிவிட்டுப் புதிய காமராக்கள் நிறுவ அலகபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தற்போது காமராக்கள் இருக்கும் அதே இடத்தில் உயர அளவில் கூட எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்ற கட்டளையுடன் பைசாபாத் டிவிசன் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்களிடம் பேசுவதற்காகத் தற்பொழுது அவ்விடத்தில் உள்ள மேடையில் அதிக தூரத்திற்குப் பேச்சுகள் செல்லத்தக்க விதத்தில் உயர்தர ஸ்பீக்கர்கள் நிறுவுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காமராவும் மேடையும் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு தேவைகளுக்கும் மற்ற அவசரகட்டங்களிலும் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காதலர் தினத்திற்கு எதிரானவர்கள் அல்ல - பஜ்ரங்தள்!

இளம் தலைமுறையினர் நாகரீகமான நடவடிக்கைகளைப் பேணும் வரை காதலர் தினத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என பஜ்ரங்தள் அறிவித்துள்ளது. கிருஷணன் மற்றும் ராதாவின் தெய்வீகக் காதலை நாங்கள் என்றும் ஆராதித்தே வந்துள்ளோம் என பஜ்ரங்தள் தேசிய கன்வீனர் பிரகாஷ் சர்மா தெரிவித்தார்.

ஆனால், தலைமையின் நிலைபாடுகளுக்கு எதிராக இன்றைய காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிராகப் பல இடங்களிலும் பஜ்ரங்தள் தொண்டர்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தினர். வாழ்த்து அட்டை விற்பனை அங்காடிகள் மற்றும் காதலர்களுக்கு எதிராகப் பரவலாக தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.

உண்மையான காதலின் பக்தர்கள் பஜ்ரங்தளத்தினர் தான் எனக் கூறிய சர்மா, இளம் தலைமுறையினர் ஒரு நாளுக்குப் பதிலாக ஆண்டில் எல்லா நாட்களையும் காதலர் தினமாகக் கொண்டாட வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். திடீரென இந்த மனம் மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று கேட்டபொழுது, "இளம் தலைமுறையினரின் ஆசைகளுக்கு நாங்கள் எதிரல்ல" எனவும் "நடவடிக்கைகளில் நாகரீகத்தைப் பேண வேண்டும் என்பது மட்டுமே பஜ்ரங்தளத்தின் கோரிக்கை" என்றும் அவர் பதிலளித்தார்."

மது விற்பனை கூடங்களிலும் மக்கள் கூடும் வியாபார அங்காடிகளிலும் காதலர் தினத்தில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்" என பஜ்ரங்தள் டெல்லி மண்டல கன்வீனர் அசோக் குமார் காவல்துறை கமிஷனருக்குக் கோரிக்கை விடுத்ததார். ஸ்ரீராமசேனைக்கும் தங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை எனவும் பஜ்ரங்தள் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

என்றாவது ஒருநாள், பிரதமர் ஆவேன் லாலு சொல்கிறார்

என்றாவது ஒருநாள், பிரதமர் ஆவேன் லாலு சொல்கிறார்


புதுடெல்லி, பிப்.14-

ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ், பிரதமர் பதவி மீதான தனது ஆசையை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். நேற்றும் அவர் பிரதமர் ஆக விருப்பம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த லாலுவிடம், "தேர்தலுக்கு பிறகு நீங்கள் மீண்டும் ரெயில்வே மந்திரி ஆவீர்களா?'' என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு லாலு, "நான் என்ன ஆவேன், என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதெல்லாம் கடவுள் நிர்ணயித்த விதிப்படிதான் நடக்கும். கடவுள் என் நெற்றியில் என்ன எழுதி இருக்கிறோரோ? எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள், நான் பிரதமர் ஆவேன்'' என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை


தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தங்கம் விலை எதிர்பாராத ஏற்றம் கண்டு வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் பாரல் 35/ டாலர் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இதன் காரணமாக, உலகநாடுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வங்காட்டுவதால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு ஏறி வருகிறது.


கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்தியாவில் ரூ.8,784/= க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.10,928/=க்கு விற்கப்பட்டது.

தங்கத்தில் சேமிப்பது அதிகரித்திருக்கிறது. தங்கச் சுரங்கம் ஒன்று ஆப்ரிக்காவில் தன் உற்பத்தியைக் குறைத்துள்ளது. இக்காரணங்களால் தங்கத்தின் விலை உயர்வு காணப்படுவதாக நகைக்கடை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

ஆர் எஸ் எஸ் தயாரிக்கும் மாட்டுச்சிறுநீர் பானம்

பசுவின் சிறுநீரிலிருந்து குளிர்பானம் தயாரித்து விற்பனைச் செய்ய ஆர் எஸ் எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. கெள ஜல் என்று பெயரிடப்பட்டுள் இப்பானம் ஆய்வக பரிசோதனையில் இருப்பதாகவும் விரைவில் சந்தைக்கு வரும் என்று ஆய்வுக்குழு தலைவர் ஓம்பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.

அமெரிக்கக் குளிர்பானங்களுக்கு இது கடும்போட்டியை ஏற்படுத்தும் என்றும் உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிச் செய்யப்படும் என்றும் விலை மலிவாக விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாட்டயா டென்னிஸ் இறுதியாட்டத்தில் சானியா!

பாட்டயா ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் ஆட இந்தியாவின் சானியா மிர்ஸா தகுதி பெற்றுள்ளார்.

தரவரிசையில் மிகவும் பின் தங்கி 126 ஆவது இடத்திலிருக்கும் சானியா அரையிறுதிஆட்டமொன்றில் 51ஆம் தரவரிசை பெற்ற மக்தலீனா ரைபரிக்கோவ் என்னும் ஸ்லோவோக்கியரை 6-4, 5-7, 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.

இறுதியாட்டத்திற்கு தகுதிபெறுவது சானியாவுக்கு நான்காம் முறை என்றாலும் 2005ல் ஹைதராபாத் ஓபன் போட்டியைத் தவிர அவர் வேறு எதிலும் பட்டம் வென்றிருக்கவில்லை. 2007 ல் ஸ்டான்ஃபோர்ட் இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றதே அவருடைய கடந்த கால அதிகபட்ச சாதனை.

அதே சமயம், இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சானியா இத்தாலியின் மாரா சாண்டஞ்சிலோ இணை தோல்விகண்டது.

திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி?

திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இன்று கொல்கத்தாவில் கூடிய மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தக் கூட்டத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி தலைமை தாங்கினார். மேற்கு வங்க காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் மோசினா கித்வாய்  மற்றும் மாநில நிர்வாகிககள் பலரும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் சமீபத்தைய அரசியல் நிலை குறித்து விவாதிக்கப் பட்டது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதீப் பட்டர்ஜி, மேற்கு வங்க மாநில மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் இந்த மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சி என்றும் கூறிய அவர், நிபந்தனைகளின் அடிப்படையில் அக்கடசியுடன் கூட்டணிக்கு முயல்வோம் என்றும் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். ஆனால் கடைசி நேரம் வரை காங்கிரசுக்காகக் காத்திருக்க மாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறியிருந்தார்.

காதலர் தின நிகழ்வுகள் : காவல்துறை உதவி ஆய்வாளர் இடைநீக்கம்

பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகின் பல பகுதிகளிலும் சிலரால் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தியாவில் இந்துத்துவ அமைப்புகள் இந்தக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உஜ்ஜைனிலும் ஹரியாணாவிலும் பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் ஒரு அறையில் ஒன்றாய் இருந்த காதலர்களை காவல் உதவி ஆய்வாளர் மூல ராம் என்பவர் அடித்துத் துன்புறத்தினார் என்ற புகாரை அடுத்து அவர் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணை முடிந்த பின் அவர் மீது மேலும் நடடிவக்கை எடுக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உஜ்ஜைனில் அண்ணனும் தங்கையம் விக்ரம் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் வழியில் பஜ்ரங் தளத்தைச் சார்ந்த நால்வர் அவர்களிடம் பிரச்சனை செய்ததாக கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால் நால்வரும் பஜ்ரங் தளத்தைச் சார்ந்தவர்கள் அல்லர் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.

ஸ்ரீராம் சேனா, சிவ சேனா, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த சுமார் 600 பேர் கர்நாடாகா, மத்தியப் பிரதேசம் மற்றும் டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கைது செய்யப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் அமைச்சர் நியமனம்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சவுதி அரேபியா மன்னர் நீதித்துறை அமைச்சர், செய்தித்துறை அமைச்சர், கல்வி அமைச்சர், புதிய தலைமை நீதிபதி போன்றவர்களை நியமித்து இன்று உத்தரவிட்டார். இதில் கல்வித்துறை துணை அமைச்சராக நூரா அல்பைஜ் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.  இவரது பெயரை தலைமை மதகுரு முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.

சவுதி வரலாற்றில் பெண் ஒருவர் அமைச்சராவது இதுவே முதல் முறையாகும்.

ஈழ அகதிகள் பேருந்து தாக்கப்பட்டது

போர் நடக்கும் இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை அரசின் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயரும் போது புளியன்குளம் அருகில் பேருந்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமுற்றனர்.

விடுதலைப் புலிகள்தான் இந்த தாக்குதலைத் தொடுத்தனர் என்று இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயகரா தெரிவித்ததாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நடக்கும் பகுதிகளில் தனியார் பத்திரிகைகளுக்குத் தடைவிதித்திருப்பதால் இராணுவத்தின் இந்த அறிவிப்பை உறுதி செய்ய முடியவில்லை.

"அமெரிக்கப் பொருளாதாரம் சீரடைய வருடங்களாகும்" - ஒபாமா

அமெரிக்கப் பொருளாதாரம் சீரடைவதற்கு மாதங்களல்ல; வருடங்கள் தேவைப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நலிவடைந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் 789 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்கப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக, தொழிலதிபர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். "கடும் உழைப்பு தேவைப்படும் காலக்கட்டம் இது, இது தொடக்கக் கட்டம் தான்" என்றும் அவர் தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டில், நிதித்துறையில் கடும் சவால்களைச் சந்திக்க வேண்டி, நல்லதொரு பொருளாதாரத் திட்டத்தை தீட்டவேண்டிய காலக்கட்டாயத்தில் அரசு உள்ளது என்றார் அவர்.

பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்கி 20 பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் பலியானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாலிபான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலமான ஆப்கானிஸ்தானை ஒட்டிய தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினருக்கு எடுத்துச் செல்லப்படும் உணவு மற்றும் ஆயுத விநியோக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதி மீது இன்று அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தங்களது ஆதரவாளர்கள் 25 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று தாலிபான் தரப்பு கூறியதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தப் பகுதி மீது அமெரிக்க 20க்கும் அதிமான வான் தாக்குதலை நடத்தி உள்ளது.

பச்சிளம் குழந்தையை கூவி விற்க முனைந்த பெண்

நான்காவதாகவும் பெண்குழந்தை பிறந்ததால், அப்பெண்குழந்தையை நகரில் கூவி விற்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது பற்றிய செய்தி வருமாறு:

கண்டமங்கலம் அருகே உள்ள துலுக்காநத்தம் காலனியைச்சேர்ந்தவர் வில்வநாதன். கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி லலிதா(வயது 35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாக்கம் கூட்டு ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் லலிதாவுக்கு 4-வதாக அழகான பெண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தை பிறந்தது பற்றி தகவல் தெரியவந்தால் கணவர் திட்டுவாரே என்று பயந்த லலிதா அந்த குழந்தையை விற்க முடிவு செய்தார்.

இதனால் அவர் துணைக்கு ஒரு மகளை அழைத்துக்கொண்டு பச்சிளம் குழந்தையுடன் கடலூருக்கு வந்தார். டவுன்ஹால் எதிரே பாரதிசாலையோரத்தில் பெண்களிடம் கூவி கூவி குழந்தையை விற்க முயன்றார். 20 ஆயிரம் ரூபாய் தந்தால் குழந்தையை தருவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து லலிதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவளிடம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் விசாரணை நடத்தினார். அப்போது 4-வது பெண் குழந்தையாக இருந்ததால் வறுமையின் காரணமாக குழந்தைய விற்க முயன்றதாக கூறினார்.

இதையடுத்து அவளையும், குழந்தையையும் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர்.

வறுமை வாட்டுவதால் இந்தக் குழந்தையை என்னால் வளர்க்க முடியாது. எனவே அரசு இந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் லலிதா கூறினார். உடனே குழந்தையை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சமூகநலத்துறை அதிகாரிகள் ஏற்று கடலூர் புதுப் பாளையத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பெப்சியில் கிடந்த பல்லி: 16,000 இழப்பீடு

கோவை மாவட்டம் பல்லடம் வீரபாண்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திருப்பூரில் ஒரு அங்காடியில் பெப்சி குளிர்பானம் வாங்கித் திறந்த போது, அதில் பல்லி ஒன்று செத்து மிதக்கக் கண்டார். இதையொட்டி, குளிர்பானம் வாங்கியதற்கான அத்தாட்சி பெற்றுக்கொண்ட அவர், கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

நுகர்வோர் மன்ற நீதிபதி ஸ்ரீராமுலு, உறுப்பினர் இரத்தினம் ஆகியோர் தங்களது தீர்ப்பில் செந்தில்குமாருக்கு அங்காடி உரிமையாளர், மொத்த விற்பனையாளர், குளிர்பான நிறுவனம் மூன்றும் சேர்ந்து ரூ.16,000/= இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்

25 ரூபாய் இலஞ்சத்துக்கு 24 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

பீகார் அரசு மருத்துவர் ஒருவர் கடந்த 1985 ஆம் ஆண்டு மருத்துவச்சான்றிதழ் வழங்குவதற்காக கடைநிலை ஊழியர் ஒருவரிடமிருந்து 25 ரூபாய் இலஞ்சமாகப் பெற்ற வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது.

பாலகோவிந்த் என்ற அந்த மருத்துவர் பாட்னா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அப்போது அவர் மருத்துவச் சான்றிதழ் ஒன்றினுக்கு கடைநிலை ஊழியர் ஒருவரிடம் ரூ.25/- இலஞ்சமாகக் கோரியிருந்தார். அந்த கடைநிலை ஊழியர் காவல்துறையில் புகார் தெரிவிக்கவும், இரசாயனப் பொடி தூவிய ரூபாய் தாள்களை வழங்கும்படி காவல்துறை பணித்தது. திட்டமிட்டபடி, கையும் களவுமாக மருத்துவர் பிடிபட்டார்.

இவ்வழக்கில் கடந்த 1992ல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மூன்றுமாத சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர் தன் செல்வாக்கால் மேல்முறையீடு என்ற பெயரில் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில் மூன்றுமாத சிறைத்தண்டனை, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் என்று இப்போது தீர்ப்பு வந்துள்ளது. 75 வயதாகிவிட்ட மருத்துவரை காவல்துறை தேடி வருகிறது.

ஒரிசாவில் புகைவண்டி கவிழ்ந்தது : 10 பேர் பலியானதாக சந்தேகம்

Published on: வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
ஒரிசாவின் ஜஜ்பூர் அருகே புகைவண்டி கவிழ்ந்ததாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவுராவிலிருந்து சென்னை வரும் சோழமண்டல விரைவு வண்டி இன்று இரவு 7.30 மணி அளவில் ஜஜ்பூர் சாலை அருகே இந்த வண்டியின் 12 பெட்டிகள் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

என்ஜினை அடுத்த 2 பெட்டிகள் கடுமையாக சேதமுற்றதாகக் கூறப்படுகிறது.

ஷாரூக் கான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மும்பை பாந்த்ராவிலுள்ள நடிகர் ஷாரூக் கான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர்.

அச்சமயம், ஷாருக்கான் வீட்டில் இல்லை. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ஹிந்தி திரையுலகில் இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வடக்கில் நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் வடக்கில் உள்ள கெர்மடி தீவுக்கு அருகில் ரவோல் தீவை மையங்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை எரிமலைகள் வெடித்துச் சிதறின. ரிக்டர் அளவீட்டில் 6.1 என்ற கணக்கில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. சில விநாடிகளே நீடித்த இந்நில நடுக்கத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறினார்கள்.

எனினும், மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

தமிழகம்: விலை உயரும் மளிகைப் பொருட்கள்

தமிழகத்தில் அண்மைகாலமாக, மளிகைப்பொருட்கள் மிகவும் விலை உயர்வு அடைந்துவருகின்றன.

அரிசி மூட்டை ஒன்றுக்கு ரூ.400 அளவுக்கும், சர்க்கரை(சீனி) அதே அளவுக்கும், மிளகாய் கிலோவுக்கு 40-50 ரூபாய் விலையேற்றமும் கண்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் கிலோ ரூ.50/=க்கு விற்ற மிளகாய் இப்போது ரூ.100 தொடங்கி 120/= ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதல்லாமல் ரவை, கோதுமை, மைதா, வெந்தயம், கடுகு போன்றவையும் விலையேறியுள்ளன.

எனினும், ஆறுதலாக புளி, பூண்டு, எண்ணெய், மல்லி விலைகள் குறைந்தே காணப்படுகின்றன.

காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் இன்று வான் வெளித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப் பட்டார். மற்றொருவர் காயமுற்றார்.

காஸா பகுதியிலுள்ள கான்யூனுஸ் என்ற இடத்தின் மீது இத்தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் இந்த தாக்குதலில் பலியானதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினார்கள்.

இஸ்ரேலுடன் சன்டை நிறுத்த ஒப்பந்தம் சில தினங்களில் ஏற்படக்கூடும் என்று காஸா பகுதியைத் தன் வசம் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம் இன்று கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலியான நபர் இஸ்ரேலைத் தாக்கத் திட்டமிருந்ததாகவும் அதனால்தான் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றதாகவும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கூறியதாக அசோசியேட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இராக்கில் குண்டு வெடித்து 32 பேர் பலி

இராக்கில் தற்கொலைப்படையைச் சார்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 32 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

பாக்தாதின் தெற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இஸ்கந்திரியா என்னும் இடத்தில் நடந்த இச்சம்பவத்தில் 60 பேர் காயமுற்றனர். ஷியா முஸ்லிம்களைக் குறி வைத்து இத்தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.

ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கர்பலாவை நோக்கி இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது இடையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாக்தாத், மோசூல் நகரங்ளை அடுத்து இன்று மூன்றாவது நாளாக ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

10 சோமாலிய கடற்கொள்ளையர் பிடிபட்டனர் : ரஷ்யா

சோமாலிய கடற்கொள்ளையர் பத்துபேரை பிடித்துவிட்டதாக ரஷ்ய கடற்படை கூறியுள்ளது. அவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன.

சோமாலியக் கடற்பரப்பில் கடற்கொள்ளையைத் தடுக்கும் விதமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் என்ற போர்க்கப்பல் இன்று மூன்று படகுகளையும் அதிலிருந்து 10 கடற்கொள்ளையர்களையும் பிடித்ததாக அறிவித்ததது. 10 பேரும் சோமாலியாவைச் சார்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடற்கொள்ளையர் 9 பேரைப் பிடித்ததாக நேற்று அமெரிக்கா கூறியிருந்தது.

சோமாலியக் கடற்பரப்பில் கடற் கொள்ளையர் அந்தப் பகுதியாக வரும் கப்பல்களை வழிமறித்து பிடித்து வைத்துக் கொண்டு கப்பல் உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடும் வழக்கம் தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் பலவற்றின் கப்பல்கள் இவ்வாறு பிடிக்கப் பட்டு அதிக தொகை கொடுத்து மீட்கப் பட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் இந்தியக் கடற்படையினர் தற்போது இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதாரி வழக்கு : இருவருக்கு மரண தண்டனை

நிதாரி கொலை வழக்கில் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரீந்தர் கோலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து மத்திய புலணாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நொய்டாவில் சிறுவர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்பட 19 பேரைக் கொலை செய்ததாக இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்த இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து நடந்த விசாரணையில் 57 சாக்கு மூட்டைகளில் மனித உறுப்புகள் மற்றும் 700 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப் பட்டன.

நாட்டையே உலுக்கிய இந்தக் கொலை விவகாரம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் நாள் மத்திய புலணாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப் பட்டது. புலணாய்வு நிறுவனம் 16 வழக்குகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து விட்டது. மேலும் 3 வழக்குகளில் குற்றப் பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப் படவில்லை.

பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் : அரசு அனுமதி

கூட்டாண்மை நிறுவனங்களின் பொறுப்பு வரையறுக்கப் பட்டதாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்று நிறுவனங்கள் விவகார அமைச்சர் குப்தா நேற்று கூறினார்.

தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், பொறுப்பு வரையறுக்கப்பட் கூட்டாண்மை நிறுவன (Limited Liability Partnership - LLP) சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் முதல் LLP நிறுவனம் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பதிவு செய்யப்படும் என்று கூறினார்.

தற்போதைய கூட்டாண்மை நிறுவனச் சட்டத்தின்படி நிறுவனத்தின் கடன்களுக்கு பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் பொறுப்புதாரிகளாவார்கள். புதிய சட்டத்தின் மூலம் நிறுவனங்களின் கடன்களுக்கு பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டியதில்லை.

வழக்கறிஞர்கள் மற்றும் கணக்காயர் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலோர் கூட்டாண்மை நிறுவனம் என்ற அடிப்படையிலேயே இதுவரை தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். LLP சட்டம் நிறைறேவற்ற வேண்டும் என்று நீண்டநாட்களாக இவர்கள் கோரிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருக்கலைப்புச் சட்டம் : மத்தியர அரசுக்கு உச்சநீதி மன்றம் அறிவிக்கை

கருக்கலைப்புச் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கை அனுப்பியுள்ளது. மும்பை உயர்நீதி மன்றத்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து, உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமயிலான அமர்வு இந்த அறிவிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

ஹரீஷ் மேத்தா மற்றும் நிகிதா தம்பதியினருடன் மருத்துவர் நிகில் டாடர் இந்த வழக்கைத் தொடர்ந்தார். முன்னதாக கடந்த ஆண்டு, நிகிதாவின் முதல் கருத்தரிப்பின் போது கருவில் இருந்த 24 வாரக் காருவின் இதயத்தில் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.  இதனைக் கலைக்கக் கோரப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.

அமெரிக்காவில் விமான விபத்து

அமெரிக்காவில் விமானம் ஒன்று நெறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 49 பேர் பலியாகி உள்ளனர்.

74 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 44 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. நியூஜெர்சியிலிருந்து பப்பாலோ நகருக்கு இந்த விமானம் சென்றது எனவும் பனிமூட்டமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பப்பாலோ நகருக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்ததாகவும் இதில் விமானத்தில் பயணம் செய்த 48 பேரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரயில்வே பட்ஜெட் : தாக்குதல் செய்தார் லாலு

மத்திய இரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதாவ் இடைக்கால இரயில்வே பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 50 ரூபாய்க்கும் அதிகமாக உள்ள அனைத்து வகை பயணக் கட்டணங்களும் 2 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.

சென்னை - பெங்களூர், சென்னை - எர்னாகுளம், டில்லி-பாட்னா உள்ளிட்ட 6 வழித்தடங்களில் புல்ல் இரயில் சேவை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 1100 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரயில் பாதைகள் அமைக்கப்படும்.

2009-2010 ஆம் ஆண்டில் 43 புதிய இரயில்கள் இயக்கப்படும் என்றும் 14 இரயில்களின் வழித்தடம் நீட்டிக்கப்படும் என்றும், 14 இரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டு்ள்ளது.

திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கோவை, பிப். 11: கோவையில் திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

இச் சோதனையில், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூரை சேர்ந்தவர் மணி. விடியோ கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் இருந்து புதுப்பட சிடிக்களை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான திருட்டு விடியோ தடுப்பு போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

அவரின் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு போலீஸôர் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸôருக்கு மணி தகவல் அளித்தார். போலீஸôரின் திட்டப்படி தலைமைக் காவலர்கள் செல்வராஜ் மற்றும் முகமதுகானிடம், மணி லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய போலீஸôர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். திருட்டு விடியோ தடுப்பு அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸôர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இச் சம்பவத்தில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி, தலைமைக் காவலர்கள் செல்வராஜ், முகமதுகான், ஆறுமுகம் ஆகியோர் தலைமறைவாகினர்.

அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைமறைவான 4 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, சுண்டக்காமுத்தூர் மெயின்ரோடு, கோவைப்புதூரில் உள்ள இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உன்னிகிருஷ்ணன், கருணாகரன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் சோதனை நடத்தினர்.

இதில், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பாட்டயா டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சானியா

Published on: வியாழன், 12 பிப்ரவரி, 2009 // , , , , ,
பாட்டயா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியாமிர்ஸா இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில் அவர் இரஷ்யாவின் விடாலியா டயட்சென்கோவை 6-4, 6-0 என்ற நேர்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதிப்போட்டியில் சானியா தாய்லாந்து வீராங்கனை டமரினைச் சந்திக்கிறார்.

முன்னதாக, இந்தியாவின் சானியா -இத்தாலியின் மாரா சாண்டஞ்சிலோ இணை இரட்டையர் ஆட்டத்தில் அரையிறுதி எட்டியுள்ளது.

இறந்து 5 ஆண்டுகளான ஈ.கே. நாயனாருக்கு கைது வாரண்ட்

இறந்து 5 ஆண்டுகளான ஈ.கே. நாயனாருக்கு கைது வாரண்ட்

திருவனந்தபுரம், பிப். 11: இறந்து 5 ஆண்டுகளான கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே. நாயனாருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

நாயானார் இறந்து விட்டதை நீதிமன்றத்துக்கு போலீஸôர் முறைப்படி தெரிவிக்காததால் இவ்வாறு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.கே. நாயனார் உள்பட 19 பேர் மீது அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டிலும் நாயனாருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இருந்த போதிலும் அவர் இறந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு போலீஸôர் முறைப்படி தெரிவித்து, அவருக்கு எதிரான வழக்கை முடிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நீதிபதி எஸ். கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது ஈ.கே. நாயனாருக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தற்போதைய எம்.எல்.ஏ. சிவன்குட்டி உள்பட 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 3 முறை கேரள முதல்வராக இருந்து ஈ.கே. நாயனார் கடந்த 2004 மே 19-ம் தேதி காலமானார்.

உலகக் கோப்பை "கிக் பாக்ஸிங்': சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்


உலகக் கோப்பை "கிக் பாக்ஸிங்': சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்

www.muduvaivision.com


ராமநாதபுரம், பிப். 11: சேலத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை -2009-க்கான கிக் பாக்ஸிங் போட்டியில், ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், உலக அளவில் இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, கொரியா, ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில், சப்-ஜூனியர் 10 வயதுக்கான 20 முதல் 25 கிலோ எடைப் பிரிவு கிக் பாக்ஸிங் தொடர் சண்டைப் போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மெட்ரிக். பள்ளி மாணவர் ராகுல் பாபு முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மேலும் அதே போட்டியில், 16 வயதினருக்கான ஜூனியர் 40 முதல் 45 கிலோ எடைப் பிரிவில், ராமநாதபுரம் லூயிஸ் லெவேல் மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி மாணவர் மருதுபாண்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

45 முதல் 50 கிலோ எடைப் பிரிவுக்கான கிக் பாக்ஸிங் தொடர் சண்டைப் போட்டியில், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முஹம்மது பாஸில் 2-வது இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

இப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களை, மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் மன்னர் குமரன் சேதுபதி, செயலர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்டத் தலைமைப் பயிற்சியாளர் குகன் ஆகியோர் பாராட்டினர்.

சிறுவனுக்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை

டில்லியில் ஒரு சிறுவனுக்கு மாநில அரசு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க டில்லி உயர்நீதி மன்றம் புதன் கிழமையன்று உத்தரவிட்டது.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திரு என்ற சிறுவன் டில்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள டிமார்பூர் என்ற பகுதியில் அத்தை வீட்டில் தங்கி 7ஆம் வகுப்பு பயின்று வருகிறான். சில நாட்களுக்கு முன் அவன் பள்ளி செல்லும்போது வழியில் கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்தது. கட்டிடத்தின் மேலிருந்து கழிவுகளை முன் அறிவிப்பின்றி கொட்டியதில் சிறுவனின் தலையில் பலத்த அடி பட்டது. அவனது மன நிலையும் பாதிக்கப்பட்டது. சிறுவன் இப்போது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

அமெரிக்க ரஷ்ய செயற்கைக் கோள்கள் மோதல்

அமெரிக்கா மற்றம் ரஷ்யாவின் தகவல் ஒலிபரப்புக்கான செயற்கைக் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்ணில் நடைபெறும் முதல் விபத்து இது ஆகும்.

அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக் கோள் ரஷ்ய செயற்கைக் கோளுடன் மணிக்கு 780 கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாய் கிழமையன்று மோதியதாக நாசா கூறுகிறது.

இதனால் இம்மாத இறுதியல் விண்ணில் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்காவின் செயற்கைக் கோள் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் வெள்ளிக்கிழமைக்குள் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் வேறு செயற்கைக் கோள் ஏவப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது 1997ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 560 கிலோ.

இதனுடன் மோதிய ரஷ்ய செயற்கைக் கோள் 950 கிலோ எடையுள்ளது. இது 1993 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. இந்த விபத்தை ரஷ்ய நிறுவனம் உறுதி செய்துள்ளது.

திருத்தப்பட்ட விடைத்தாளை மாணவர் பார்க்கலாம்

கொல்கத்தாவைச் சேர்ந்த ப்ரிதம் ரூஜ் கொல்கத்தாவின் பிரசிடெண்சி கல்லூரியில் கணிதவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இரண்டாம் ஆண்டு தேர்வில் அவர் ஒரு பாடத்தில் 28 மதிப்பெண் மட்டுமே பெற்று தேர்வில் தவறியதாக முடிவு சொல்லப்பட்டது. இதனால் அவர் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தார். அதன் பிறகு பல்கலைக்கழகம் அவர் 32 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்று விட்டதாக அறிவித்தது.

இதில் திருப்தி அடையாத அந்த மாணவர், விடைத்தாளை தான் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இம்மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் " மாணவர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்காக திருத்தப்பட்ட விடைத்தாளை பார்ப்பதில் தவறில்லை" என்றும் இதற்காக, குறிப்பிட்ட காலம் ஒதுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.

இடமாற்றத்துக்கு கையூட்டு இரண்டு கோடி!

அண்மையில் மும்பையின் சூதாட்ட விடுதி ஒன்றில் பயங்கரவாத தடுப்புக் காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 12 கிலோ ஹெராயின் எனப்படும் போதைப்பொருள் சிக்கியது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட விக்கி ஓபராய் என்பவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் இதன் பின்னணியில் போதைத் தடுப்பு பிரிவு இயக்குநராக சண்டீகரில் பணியாற்றிய ஷாஜி மோகன் என்பவர் இருப்பது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த டிசம்பர் 31ம்தேதி கொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

ஷாஜி மோகன் என்ற அந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு இயக்குநரிடன் விசாரணை நடத்தியபோது, சொந்த மாநிலத்துக்கு பணி இடமாற்றம் பெறுவதற்காக தான் கடன்பட்டு இரண்டு கோடி இலஞ்சம் தந்ததாகவும் அந்தக் கடனை அடைக்கவே போதைபொருள் கடத்தியதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார்.
அவரிடம் மேலும் 70 கிலோ ஹெராயின் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

"மோடிக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பா?" - ப.சிதம்பரம் கேள்வி!

மும்பை 26/11 தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் கருத்தையே பிரதிபலித்துள்ள மோடிக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் 180க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலைக்குக் காரணமான தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த குஜராத் முதலமைச்சர் மோடி "இங்குள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய பெரியதாக்குதலை வெளி தீவிரவாதிகள் செய்திருக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

டெல்லியில் நிருபர்களிடம் ப.சிதம்பரம் கூறுகையில் " ஒரேமாதிரியான கருத்துகளை பாகிஸ்தானும் மோடியும் தெரிவித்திருக்கின்றனர். இருவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார். அல்-கைதாவின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்த அமைச்சர் "எப்படிப்பட்ட சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்" என்று பதிலளித்தார்.

கோவை: 4 காவல் உயரதிகாரிகள் இடமாற்றம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து, ஒரே இடத்தில் மூன்று வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் இம்மாதம் 22ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. அதன் எதிரொலியாக கோவையின் நான்கு உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கிழக்குப்பகுதி குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராஜேந்திரன், கோவை மத்திய பகுதி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.பேரூர் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் குமாரசாமி, கோவை மேற்கு சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராகவும், அங்கிருந்த சுந்தரவடிவேல் கன்னியா குமரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.கோவை மத்திய பகுதி சட்டம் ஒழுங்கில் பணியாற்றிய சுந்தரசேனன், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல கோவை மண்டலத்தில் மேலும் 13 ஆய்வாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கப்படும்: ப.சிதம்பரம்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு அரசே பெரும் தொகை கொடுத்து உதவுவதற்கு அமெரிக்கா முடிவெடுத்துள்ளது அறிந்ததே!

அதே போல, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ பேங்க்., விஜயா பேங்க் ஆகிய வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.3,800 கோடி மத்திய அரசு வழங்கும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்ட உதவியாக யூகோ பாங்க் - 450 கோடி, சென்ட்ரல் பேங்க்- 700 கோடி, விஜயா பேங்க் - 500 கோடி, நடப்பு நிதியாண்டிலும் அடுத்தகட்டமாக மீதத்தொகை 2009-10 ம் ஆண்டிலும் இவ்வுதவிகள் வழங்கப்படும் என்றார் அவர். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு அதிகரிக்கும்.

மெக்கா இரயில்வே பணி : சீன நிறுவனம் அமைக்கிறது

இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லும் இடங்களான மக்கா மற்றும் மதீனா இடையே இரயில்வே சேவையை ஏற்படுத்த சவூதி அரசு முடிவு செய்துள்ளது. இந்த இரயில் பாதையை சீன நிறுவனம் அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தம் சீனா சவூதி அரேபியே அதிகாரிகள் புதன் கிழமையன்று செய்து கொண்டனர்.

புதிதாக உருவாக்கப்படும் இந்த இருப்புப் பாதைகள் மக்காவிலிருந்து மினா, அரபாத் மற்றும் முஸ்தலிபா ஆகிய இடங்களை இணைக்கும். இது மட்டுமின்றி மக்கா மற்றும் மதீனா ஆகிய இடங்களுக்கு 30 நிமிடங்களில் செல்லக் கூடிய அளவில் அதிவேக விரைவு இரயில்களை இணைக்கும் வகையி்ல் புதிய பாதைகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. சாலை வழிப்பயணத்தில் இரு நகரங்களுக்கும் செல்ல 4 முதல் 5 மணி நேரம் தேவைப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

முதல் திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்றும், 2010 ஆம் ஆண்டு ஹஜ் காலகட்டத்தில் ஒரு வழிப்பாதை பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இத்திட்டப் பணிகளை சீன இரயில்வே நிறுவனமும் பிரான்சு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் - 27 பேர் பலி

ஆப்பானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு அலுவலகங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

சிறைத்துறை அலுவலகத்தில் இருவர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.  நீதி அமைச்சகம் மீது 5 பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். மற்றொருவர் கல்வி அமைச்சகம் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல்களைத் தாங்கள்தான் நடத்தியதாக தாலிபான் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் 35 பேர் காயமுற்றதாக உள்துறை அமைச்சகம் கூறியது.

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் காபூல் வர இருக்கும் நிலையில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மாதா, பிதா, குருவை மதிக்க வேண்டும்: விஞ்ஞானி அண்ணாதுரை

Published on: புதன், 11 பிப்ரவரி, 2009 // ,
மாதா, பிதா, குருவை மதிக்க வேண்டும்: விஞ்ஞானி அண்ணாதுரை

கோவை, பிப். 10: மாதா, பிதா, குருவை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று "சந்திரயான்-1' திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில் தான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பேசியது:

மாதா, பிதா, குரு மூவரையும் மதிக்க மாணவ சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும். இதை மனதில் நிறுத்தி செயல்பட்டால் 2020-ல் இந்தியா வளமாக மாறும் என்றார். மயில்சாமி அண்ணாதுரை தந்தை மயில்சாமி, கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் என்.போஸ், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சி.செல்லம்மாள், எஸ்.கோவிந்தசாமி, கல்விக்குழுத் தலைவர் தாமரைதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த மரக்கன்றுகளை மயில்சாமி அண்ணாதுரை நட்டார். செங்குட்டாம்பாளையம் பள்ளித் தலைமை ஆசிரியர் மா.அங்குசாமி நன்றி கூறினார்.

கஸபிற்கு எதிராக பாகிஸ்தான் வழக்கு பதிவு செய்தது!

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையில் அகப்பட்ட முகம்மது அஜ்மல் அமிர் கஸபிற்கு எதிராக பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை தாக்குதல் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஏஜன்ஸி வழங்கிய அறிக்கையினை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜியோ நியூஸ் தொலைகாட்சி கூறியது.

ஒரே குடும்பத்தில் 8 பேர் படுகொலை!

பீகார் மாநிலம் பகல்பூரில் ஒரே குடும்பத்தில் 8 நபர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பணக்கார குடும்பத்திலுள்ள பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளைஞனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர்.

21 வயது ரத்தன் சிங், 18 வயது காஞ்சன் குமாரியைக் காதலித்து வந்தார். இரு குடும்பங்களிலும் ஆண்டுகணக்கில் பரம்பரை பகை இருந்து வந்துள்ளது. குடும்பத்தாரின் சம்மதம் கிடைக்காது என்பதை உணர்ந்த இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர்.

சமாதானம் பேசலாம் என ரத்தன் சிங்கின் குடும்பத்தினரை அழைத்துக் கொடூரமாக கொலை செய்தனர் காஞ்சன் குமாரியின் வீட்டினர். இது தொடர்பாக 15 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர் கைது!

கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று கைது செய்யப் பட்டனர்.

குறிப்பிட்ட ஒரு மதத்தினர் நம்பிக்கைகளைத் தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.

முகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் கொல்கத்தா மாநகர தலைமை மாஜிஸ்ட்ரேட் ஆனந்து முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரூ. 5000 பிணைத் தொகையின் பேரில் அவர்கள் இருவரும் பிணையில் விடப்பட்டனர்.

ஜம்மு கஷ்மீர் அரசு ஊழியர் 2 நாள் வேலை நிறுத்தம்

6வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், ஓய்வு வயதை 58 லிருந்து 60ஆக மாற்றக் கோரியும் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கையைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்கிறது. உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில நிதியமைச்சர் அப்துல் ரகீம் ரேத்தரின் வேண்டுகோளைப் புறக்கணித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் நிதிச்சுமையைக் களைய வழிவகைகளை அரசு ஆராய்ந்து வருவதாக் கூறிய நிதியமைச்சர், இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடம் மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜம்மு கஷ்மீர் அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அருணாச்சல பிரதேசத்தில் எஸ்மா சட்டம் அமுல்

அருணாச்சலப் பிரதேச மாநில அரசு அத்தியாவசியப் பணிகள் மேலாண்மை சட்டத்தை (ESMA) இன்று நடைமுறைப் படுத்தியுள்ளது.

6ஆவது சம்பளக் கமிஷன் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்த ஊதியங்களைப் போன்று தங்களுக்கும் முன் தேதியிட்டு நடைமுறைப் படுத்தி வழங்கக் கோரி இம்மாநில அரசு அலுவலர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒடுக்கும் முகமாக இன்றுமுதல் எஸ்மா சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிகிறது.

எஸ்மா சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதே வேளை அலுவலர்களுக்கு ஜனவரி 2009 முதல் ஊதிய உயர்வையும் அறிவித்துள்ளது. ஆனால் அரசு அலுவலர்கள் ஊதிய உயர்வை ஜனவரி 2006 தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாரதீய ஜனதா கட்சி அரசு அலுவலர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நடப்பு நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. இதில் பத்து அமர்வுகள் இருக்கும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் இத்தொடரில் தீவிரப் பங்காற்றும் என்று தெரிகிறது.

பொதுவாக, ரயில்வே மற்றும் பொது நிதிநிலை அறிக்கைகளுக்கான சிறப்பு கூட்டத்தொடராகக் கருதப்பட்டாலும், இவ்வாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கும் என்று தெரிகிறது.

தீவிரவாதம், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் குறித்த பிரசினைகளை எதிர்கட்சிகள் எழுப்ப இருக்கின்றன. மேலும் ஒரு தேர்தல் ஆணையருக்கு எதிராக தலைமை ஆணையர் விடுத்த பதவிநீக்க கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும்
மும்பை 26/11 குறித்த நீதிவிசாரணைக்கு பா ஜ க கோரிக்கை விடுக்க இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரயில்வே யின் இடைக்கால நிதிநிலை அறிக்கை வெள்ளியன்றும் பொது நிதிநிலை அறிக்கை திங்களன்றும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

கொலை வழக்கில் மத்திய அமைச்சர்

நடுவண் அரசின் சிறுதொழிற் துறை அமைச்சராக உள்ளவர் மஹாவீர் பிரசாத்.
கோரக்பூரில் சொத்து பிரசினை ஒன்றில் இவரது ஆதரவாளர்கள் இருவர் மற்றொருவரைக் கொன்று விட, அவர்களை காப்பாற்றும் பொருட்டு, கொலையை விபத்து என்று காவல்துறையில் மாற்றி பதிவு செய்ய தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினாராம்.

இது பற்றி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட, நீதிமன்ற உத்தரவின் பேரில் கோரக்பூர் காவல்துறை அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடி: அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு உதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவியாக அரசின் பொருளாதார உதவி செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தது தெரிந்ததே

முதற்கட்டமாக 829 மில்லியன் டாலர்கள் நிதியுதவிக்கு செனட் ஒப்புதல் பெற முடிவு செய்து விவாதத்திற்குட்படுத்தப்பட்டது. அதில் இத்திட்டத்திற்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் கிடைத்துள்ளன.

முதலமைச்சருக்கு அறுவைசிகிச்சை வெற்றி

முதலமைச்சர் கருணாநிதிக்கு முதுகு தண்டுவடத்தில் இன்று காலை 6மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 14 மருத்துவர்கள் நான்கு மணிநேரத்துக்கும் மேலாக இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.

சிகிச்சைக்குப் பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலியத் தூதுவர் மீது காலணி வீசி தாக்குதல்

சுவீடனுக்கான இஸ்ரேலிய தூதுவர் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுவீடனிலுள்ள ஸ்டொக்ஹொல்ம் பல்கலைக்கழகத்தில் தூதுவர் பென்னி டகன் விரிவுரையாற்றுகையில், அவரை நோக்கி காலணிகளும் புத்தகங்களும் வீசப்பட்டன.

சுமார் 50 பேர் வரை கூடியிருந்த கூட்டத்தில் அவர், நடைபெறவுள்ள இஸ்ரேலிய தேர்தல் குறித்து விபரிக்கையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தையடுத்து இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலஸ்தீன காஸா பகுதி தொடர்பான இஸ்ரேலிய கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என நம்பப்படுகிறது.

இதற்கு முன் கடந்த டிசம்பரில் ஈராக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மீது ஊடகவியலாளர் ஒருவரால் காலணி வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சீன பிரதமர் வென் ஜியாபாவோவின் பிரித்தானிய விஜயத்தின் போது, அவர் மீது காலணி வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: எம்.ரிஷான் ஷெரீப்

ஈழத்தில் காயமுற்ற தமிழர்கள் படகு மூலம் மீட்பு

முல்லைத் தீவு பகுதியில் காயமுற்றுள்ள நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள் அந்தப் பகுதிகளில் போதுமானதாக இல்லாத நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நோயாளிகளைப் படகுகள் மூலம் திரிகோணமலையில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது. இதுவரை 240 பேர் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் இருக்கும் வசதிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக மருத்துவமனையைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப் படுகிறது. திங்கள் கிழமை புதுமாத்தளன் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பவுல் காஸ்டெல்லா கூறினார். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக இலங்கை இராணுவ செய்தியாளர் உதய நானயக்கரா கூறினார். 1000 பேர் கொண்ட குழு இப்படி வரும்போது புலிகள் அவர்களைத் தாக்கியதாகவும் அதில் 17 பேர் கொல்லப் பட்டதாகவும், 69 பேர் காயமுற்றிருந்தாகவும் கூறினார்.

ஆனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் பகுதி என்றறிவிக்கப் பட்ட பகுதிகள் மீதும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதால் தமிழர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்தாக அந்த தளம் கூறுகிறது.

இஸ்ரேலியத் தேர்தல் முடிவுகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் 120 தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் காடிமா கட்சிக்கு 28 தொகுதிகளும், லிகுட் கட்சிக்கு 27 தொகுதிகளும் கிடைத்துள்ளன. இரு கட்சிகளுமே தங்களுக்கே வெற்றி என்றும் தங்கள் கட்சியின் தலைமையில்தான் ஆட்சியமைப்போம் என்றும் கூறியிருக்கின்றன.

தேர்தல் நாளான நேற்று பகல் 12 மணிவரை, வாக்குச்சீட்டுகள் போதுமானவையாக இல்லை, வாக்குச் சீட்டுகள் கிழிக்கப் பட்டன என்பன போன்ற 68 குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப் பட்டிருந்தன.

இஸ்ரேலில் உள்ள அரபுகள் மற்றும் ஜியோனிச எதிர்ப்பாளர்கள் இந்த தேர்தலைப் புறக்கணித்தனர். குதிரைப் பேரத்திற்கு வழி வகுத்துள்ள இத்தேர்தலில் கட்சிகள் பெற்றுள்ள இடங்கள் வருமாறு : (அடைப்புக்குறிக்குள் 2006ஆம் ஆண்டின் நிலை)

காடிமா 28 (29)
லிகுட் 27 (12)
இஸ்ரேல் பைடீனு 15 (11)
தொழிலாளர் 13 (19)
ஷாஸ் 11 (12)
ஐக்கிய அரபு கட்சி 11 (10)
தேசிய ஒன்றியம் 7 (6)
மெரிட்ஜ் 3 (5)
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!