Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒரிசாவில் வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலி

Published on: ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
ஒரிசாவில் கல்யாண நிகழ்விற்குச் சென்று கொண்டிருந்த வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலியானார்கள்.

ஒரிசா மாநிலம் பார்கர் நகருக்கு அருகில் ஆளில்லா கிராசிங்கில் இன்று மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் கல்யாண நிகழ்விற்குச் சென்ற மணப்பெண் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட அருகில் இருந்த கிராம மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், அந்த இரயிலை அங்கிருந்து விட மறுத்து நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரிசாவில் அடுத்தடுத்து 10 நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது இரயில் விபத்து இது என்பது குறிப்பிடத் தக்கது.

இரயில்வேயில் 1,70,000 பணியிடங்கள் காலி!

Published on: வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 // , , ,
இந்திய இரயில்வேயில் 1, 70, 000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக வியாழக் கிழமையன்று அரசு அறிவித்துள்ளது.

நாடாளு மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கையில் மத்திய இரயில்வே இணை அமைச்சர் வேலு இதனைத் தெரிவித்தார். இவற்றில் 32,600 பதவிகள் எஸ். சி., எஸ்.டி., மற்றும் பிற்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் என்றும் அவர் கூறினார்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்றும் பொதுவான இடங்களுக்கும் பணி நியமனங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில இடங்களுக்குத் திறமையான நபர்கள் கிடைக்கவில்லை என்றும், மேலும் சில இடங்கள் பணி உயர்வு வழங்கப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படாது : லாலு

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , , ,
இரயில் நிலையங்களுக்குத் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று மத்திய இரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவரது கட்சியைச் சார்ந்த ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) என்ற உறுப்பினரின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் வைக்க ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சகம் தடை விதித்ததாகவும் அந்த உத்தரவு இன்றும் உள்ளதாகவும் அவர் கூறினார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரைக் கூட இரயில் நிலையத்திற்கு வைக்க முடியாது என்று அவர் கூறினார்.

இரயில்வே பட்ஜெட் : தாக்குதல் செய்தார் லாலு

Published on: வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 // , , , , ,
மத்திய இரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதாவ் இடைக்கால இரயில்வே பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 50 ரூபாய்க்கும் அதிகமாக உள்ள அனைத்து வகை பயணக் கட்டணங்களும் 2 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.

சென்னை - பெங்களூர், சென்னை - எர்னாகுளம், டில்லி-பாட்னா உள்ளிட்ட 6 வழித்தடங்களில் புல்ல் இரயில் சேவை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 1100 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரயில் பாதைகள் அமைக்கப்படும்.

2009-2010 ஆம் ஆண்டில் 43 புதிய இரயில்கள் இயக்கப்படும் என்றும் 14 இரயில்களின் வழித்தடம் நீட்டிக்கப்படும் என்றும், 14 இரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டு்ள்ளது.

மெக்கா இரயில்வே பணி : சீன நிறுவனம் அமைக்கிறது

Published on: வியாழன், 12 பிப்ரவரி, 2009 // , , , , , , , , ,
இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லும் இடங்களான மக்கா மற்றும் மதீனா இடையே இரயில்வே சேவையை ஏற்படுத்த சவூதி அரசு முடிவு செய்துள்ளது. இந்த இரயில் பாதையை சீன நிறுவனம் அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தம் சீனா சவூதி அரேபியே அதிகாரிகள் புதன் கிழமையன்று செய்து கொண்டனர்.

புதிதாக உருவாக்கப்படும் இந்த இருப்புப் பாதைகள் மக்காவிலிருந்து மினா, அரபாத் மற்றும் முஸ்தலிபா ஆகிய இடங்களை இணைக்கும். இது மட்டுமின்றி மக்கா மற்றும் மதீனா ஆகிய இடங்களுக்கு 30 நிமிடங்களில் செல்லக் கூடிய அளவில் அதிவேக விரைவு இரயில்களை இணைக்கும் வகையி்ல் புதிய பாதைகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. சாலை வழிப்பயணத்தில் இரு நகரங்களுக்கும் செல்ல 4 முதல் 5 மணி நேரம் தேவைப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

முதல் திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்றும், 2010 ஆம் ஆண்டு ஹஜ் காலகட்டத்தில் ஒரு வழிப்பாதை பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இத்திட்டப் பணிகளை சீன இரயில்வே நிறுவனமும் பிரான்சு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

திருச்செந்தூர்-சென்னைக்கு புதிய விரைவுதொடர்வண்டி

Published on: ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 // , , ,
திருச்செந்தூருக்கும் சென்னைக்கும் இடையே புதிய விரைவு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.

இதற்கான தொடக்கவிழா இன்று மாலை திருச்செந்தூரில் நடைபெறுகிறது. நடுவண் தொடர்வண்டித்துறை அமைச்சர் லாலுபிரசாத்யாதவ் கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

விழாவில் நடுவண் உள்துறை இணையமைச்சர் இராதிகா செல்வி, தமிழக அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடிஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர் இராணி வெங்கடேசன், நெல்லை நகர மேயர் ஏ.எல்.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

செந்தூர்விரைவுவண்டி என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடர்வண்டி (எண் 6736) வியாழன் தோறும் இரவு 7.15க்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை சென்னையை அடையும். மறுமார்க்கமாக வெள்ளி பிற்பகல் 03:40க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை திருச்செந்தூரை அடையும் என்று தென்னக இரயில்வே குறிப்பொன்று தெரிவிக்கிறது.

இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளாக பெண்கள்

Published on: வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 // , , ,
இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப் படுவார்கள் என்று இன்று அறிவிக்கப் பட்டுள்ளது.

சுமார் 100 பெண்களை துணை ஆய்வாளர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளோம். நியமனப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நியமனம் முடிந்ததும் அவர்கள் பயிற்சிக்காக அனுப்பப் பட்டு பின்னர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்று இரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.  மொத்தம் 1000 துணை ஆய்வாளர்களை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர்களில் 10 சதவீதம் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சுமார் 70 ஆயிரம் பேரைக் கொண்ட இரயில்வே பாதுகாப்புப் படையில் 800 பெண்கள் தற்போது பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் போன்ற பொறுப்பிலேயே இருந்து வருகின்றனர். 
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!