Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

LTTE இயக்கத் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; எனது நண்பர்-கருணாநிதி

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; அவர் எனது நண்பர்'' என்று முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். இலங்கைப் பிரச்னை தொடர்பாக மேலும் அவர் ,"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியங்கள் உன்னதமானவை. தமிழீழம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தமிழீழம் என்ற லட்சியம் சரியானது; ஆனால், கையாண்ட முறை தவறானது. பிரபாகரன் குற்றமற்றவர்; அவரது குழுக்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். நான் தீவிரவாதி அல்ல; எனவே பிரபாகரன் எனது நல்ல நண்பர். போரில் அவர் இறக்க நேர்ந்தால் வருத்தப்படுவேன்.

தமிழீழம் அமையும் நிலை ஏற்பட்டால், சர்வாதிகார ஆட்சி அமையும் என ஒரு முறை பிரபாகரன் பேட்டி அளித்திருந்தார். அதில் எனக்கு ஒப்புதல் இல்லை என நான் கூறினேன். இந்த விஷயத்தில் எனக்கும் பிரபாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது'' என்று முதல்வர் கருணாநிதி பேட்டியில் கூறினார்.

வீடியோவை காண:-

திமுகவில் ஜெகத்ரட்சகன்!

ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

திமுக கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டதாகவும், அவரை கட்சியில் சேருமாறு திமுக தலைமை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரும், ஜனநாயக முன்னேற்றகழக நிர்வாகிகளும் இன்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.


திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், "இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் ஜனநாயக முன்னேற்ற கழக தலைமை நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளோம். ஜனநாயக முன்னேற்ற கழகம், வீரவன்னியர் பேரவை போன்றவை சமுதாய அமைப்புகளாக தொடர்ந்து செயல்படும்", என்று கூறினார்

முதல்வர் கருணாநிதி ராம.கோபாலன் சந்திப்பு

Published on: வியாழன், 26 பிப்ரவரி, 2009 // , , ,
முதல்வர் கருணாநிதியை, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரத முடிவைக் கைவிட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

கலைஞரிடம் நலம் விசாரித்த ராம. கோபாலன், வக்கீல்கள் போலீஸாருக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும். உங்களது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

"ஒன்றுபடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்" - கருணாநிதி

Published on: திங்கள், 23 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்ட உருக்கமான அறிக்கையில் வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணக்கமாகச் செல்லும்படி உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் துவங்கிய அறவழிக்கிளர்ச்சியில் தாங்களும் ஓரணியில் வந்து நிற்பதாகக் கூறிவிட்டு ஆரம்பத்திலேயே அந்த அணியைச் சிதைக்க, இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள இரண்டு, மூன்று நண்பர்கள் ஈடுபட்டதை தமிழ்நாடு நன்கறியும். திமுக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கு அதில் தொடர்பு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தங்களுக்கென தனிவழி வகுத்துக் கொண்டவர்கள்.


அந்த நண்பர்களுக்கு இப்போது இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. அந்த கோஷத்தை வைத்து தமிழகத்தில் தங்கள் அரசியலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.அதனால் தான், தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணியை உடைப்பதற்கு மக்களிடத்தில் தவறான பிரசாரங்களைச் செய்தும், யார் தமிழகத்தில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக கிளர்ச்சி நடத்தினாலும், அங்கே போய் புகுந்துகொண்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, அதை பூதாகாரமாக ஆக்கி, திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காணுகின்றனர்.
எதிர்பாராத விதமாக திடீரென துருதிர்ஷ்டவசமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் அவர்களுக்குப் பிரதான ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.


அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, இன்னும் தையல் பிரிக்காத நிலையில், தினசரி உடல்நலிவோடு மருத்துவமனையில் இருக்கிற என் மனம் நோகும்படி, என்னென்ன காரியங்களை இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். இதற்கு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் பலியாகிவிடக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள். அவர்கள் தங்களுக்கிடையே இடையே ஏற்பட்டுள்ள கசப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டிக் கொண்டுவருகிறேன். இந்த அரசு அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பது தான்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கு அறிந்தோ, அறியாமலோ பலியாகிவிடக்கூடாது. இரு தரப்பும் இந்த அரசில் சகோதரர்கள் போல ஒன்றுபட்டு நற்பணி புரிய வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், பல நீதிபதிகளும் ஒரு சுமுகமான சூழ்நிலை இந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் போராட தூண்டிக் கொண்டிருக்கும் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


இந்தக் கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றுபடுங்கள்; ஜனநாயக நெறிகளை உயர்வடையச் செய்ய ஒத்துழையுங்கள்; நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க ஆர அமர அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்போம்.அப்படி ஒன்றுபட முடியாவிட்டால், நீங்கள் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையில் இருக்கிற நான் உண்ணாநோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.அந்த முடிவை நான் மேற்கொள்வதா, இல்லையா என்பதை நீங்கள் அளிக்க இருக்கிற விடையின் மூலம் தெளிவு பிறந்து, அதற்கான தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.


முதலமைச்சர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு அறுவைசிகிச்சை வெற்றி

Published on: புதன், 11 பிப்ரவரி, 2009 // , , , , ,
முதலமைச்சர் கருணாநிதிக்கு முதுகு தண்டுவடத்தில் இன்று காலை 6மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 14 மருத்துவர்கள் நான்கு மணிநேரத்துக்கும் மேலாக இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.

சிகிச்சைக்குப் பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வருக்கு நாளை அறுவை சிகிச்சை

Published on: செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 // , , , , ,
முதல்வர் கருணாநிதி சமீபகாலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை முதுகுவலி குறையாததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

முதல்வர் கருணாநிதி முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி குறையாத காரணத்தினால் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்துள்ளார்கள்.

2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த டாக்டர் ஏ.ஜெய்ஸ்வாலும், மற்ற டாக்டர்களும் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை 11ம் தேதி புதன்கிழமையன்று நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் நலனை கவனிக்க பின்வரும் டாக்டர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம் இக்குழுவுக்குத் தலைமை வகிப்பார். டாக்டர் ஏ.ஜெய்ஸ்வால், டாக்டர் மயில்வாகனன், டாக்டர் கார்த்திக் கைலாஷ், டாக்டர் எஸ்.தணிகாசலம், டாக்டர் ஐ.எஸ்.நாயுடு, டாக்டர் மகேஷ் வகாமுடி, டாக்டர் பாஸ்கர், டாக்டர் பி.எஸ்.சண்முகம், டாக்டர் ராஜ் பி.சிங், டாக்டர் ஏ.வி.சீனிவாசன், டாக்டர் சவுந்தரராசன், டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, முதல்வரின் தனி டாக்டரான டாக்டர் பி.கோபால் ஆகியோரும் குழுவி்ல் இடம் பெற்றுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!