Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"பிரதமர் பதவிக்கு மன்மோகனே !"- சோனியா திட்டவட்டம்

பிரதமர் பதவிக்கு மன்மோகனே காங்கிரஸ் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலையில் மூன்றாவது அணியுடன் காங்கிரஸ் சேருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ராகுல்காந்தி கட்சிக்குத் தலைமை தாங்குவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த சோனியா "பொறுத்து பாருங்கள், தேவை ஏற்படும் சூழலில் அது பற்றி பேசலாம்" என்றார்.


இதற்கிடையில் வலிமையற்ற ஒரு பிரதமர் என்ற அத்வானியின் தாக்குதல் பேச்சுக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் " என் வலிமைகளை என் சாதனைகள் சொல்லும். ஆனால், அத்வானி அப்படி என்ன நாட்டுக்கு நல்லது செய்துள்ளார்?" என்று வினா எழுப்பினார். "பாபர்மசூதி இடிப்பதற்கு மும்முரம் காட்டி தேசத்துக்கு பாரிய கெடுதியை விளைத்ததைத் தவிர அத்வானி வேறு என்ன சாதித்துவிட்டார்" என்று கேட்டார் பிரதமர்.

அ தி மு க கூட்டணியில் பா.ம.க - இன்று முடிவு

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக வுடன் தேர்தல் கூட்டணி காண்பதாக தெரிய வந்துள்ளது.
ஏழு மக்களவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் என்ற பேரம் படிந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தங்கள் கூட்டணியில் பாமகவை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகின்றது. மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று காலை மருத்துவர் இராமதாஸைச் சந்தித்து கூட்டணி பற்றி பேசினார். அதன்பின் முதலமைச்சர் கருணாநிதியையும் சந்தித்த தங்கபாலு பாமக கூட்டணி பற்றி அவரிடம் எடுத்துரைத்துள்ளார்.

மத்திய அமைச்சரும், இராமதாஸ் மகனுமான அன்புமணி காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் விருப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் 26ந்தேதி கூடவிருக்கும் மாநில செயற்குழுவில் தங்கள் முடிவு திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்று பாமக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிமுக தருவதாகச் சொல்லியுள்ள 7 மக்களவை+1 மாநிலங்களவை தொகுதிகளை இராமதாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அப்படி அதிமுகவுடன் கூட்டணி உறுதியானால் "அன்புமணி, வேலு ஆகிய மத்திய அமைச்சர்கள் பதவி விலகிவிடுவார்கள் - நேச்சுரலி" என்றார் அவர்.

பெண் கலெக்டரைத் திட்டினாரா முலாயம் சிங்?

உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிப் பிரமுகர்கள் சிலர் வைத்திருந்த துப்பாக்கி உரிமங்களை மணிப்புரி மாவட்ட ஆட்சியர் மணிஸ்தி திலீப் விலக்கம் செய்திருந்தார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிகழ்வால் கோபம் கொண்ட கட்சித்தலைவர் முலாயம் சிங் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை பெண் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.

"நீ ஒரு பெண், நான் எனது கட்டுப்பாட்டை இழந்து விட்டால் நீ பெண்ணாக இருக்கமாட்டாய். நீ மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியது வரும்" என்று ஆபாசம் கலந்த வார்த்தைகளை பயன்படுத்திப் பேசினார் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சு பற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து இதில் தேர்தல் விதி மீறல் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வருகிறது.

வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து பேசிய பாஜகவின் ஃபிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. மட்டுமின்றி, குற்ற வழக்கும் அவருக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது.

பேச்சு குறித்த ஒலிநாடாக்களைக் கோரியுள்ள தேர்தல் ஆணையம், வரும் செவ்வாயன்று இப்பிரசினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

அரசியல் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் "தெளிவாக,இப்பேச்சுகள் சட்ட மீறலாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தான் சமூக வெறுப்புணர்வைத் தூண்டுமாறு பேசவில்லை என்றும், அவை திரிக்கப்பட்டுள்ளதாகவும் வருண்காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு: 59 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார் மாநில தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா. அவர் தெரிவித்த செய்திகள் சில:
வாக்காளர் சரிபார்ப்பு பணியை 100 சதவிகிதம் மேற்கொண்டதில் வாக்காளர் எண்ணிக்கை 2004ன் 4.72 கோடியிலிருந்து 4.13 கோடியாக 2009ல் குறைந்துள்ளது.அதாவது 59 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.(12.5%)


மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை மாற்றவும் 2 அல்லது 3 நாள்களில் அந்தப் பணியை முடிக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சத்தியகோபால் 18ம்தேதி புதன்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.ஆந்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் சிறந்த முறையில் அமல்படுத்தப்படுவதாக மத்திய தேர்தல் ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது. எனவே ஆந்திரத்தில் உள்ளது போல, இங்கும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.


தேர்தலை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிப்பதில்தான் நான் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் முதல்வர் என் மீது கூறியுள்ள புகார்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
என்றும் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

சினிமா விமர்சனம் : நான் கடவுள்

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , ,

நான் கடவுள்





ரஸ்ஸல்

கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா

வசனம்: ஜெயமோகன்

இசை: இளையராஜா

தன் மகனால் சொத்து ,சுகம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்று சொன்ன சோதிடனின் பேச்சை நம்பிப் பதினாலு வருடங்களுக்கு முன், சாஸ்திரம் படிக்க என்று மனைவியிடம் சொல்லிக் காசியில் தொலைத்த மகனைத் தேடித் தன் மகளுடன் காசிக்குத் தந்தை வருவதுடன் கதை துவங்குகிறது.

காசிப்பண்டிட்டின் உதவியுடன்,தலைமைச் சாமியாரைச் சந்தித்து மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தந்தை கெஞ்ச, "நீ அஹம் ப்ரம்மாஸ்மி; கடவுள்; உனக்கு உறவுகள் இருக்கக்கூடாது; ஊருக்குச் சென்று உன் உறவுகளை எரித்துவிட்டு வா" என்ற சாமியாரின் அனுமதியுடன் ஊருக்கு வருகிறார் மகன் ஆர்யா!



ஊருக்கு வரும் ஆர்யாவால் வீட்டில் தங்க இயலவில்லை. பாசத்துடன் நெருங்கும் தாயுடனும் ஒட்ட முடியவில்லை.சாப்பிடச் சொல்லும் தாயிடம் "கஞ்சா கிடைக்குமா?" எனக்கேட்டு, கஞ்சா கிடைக்கும் மலைக்கோவிலில் தங்குகிறார் ஆர்யா!



பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகச் செய்யும் பிச்சைக்கார மாஃபியாக் கும்பல்,கோயிலில் பிச்சை எடுப்பதற்காக ஆள் கடத்தல் செய்வதையும்,ஒரு கும்பலில் இருந்து மற்ற கும்பலுக்கும் பிற மாநிலத்துக்கும் காவல்துறையின் உதவியுடன் ஆள் கடத்துவதையும் கொடுமைப் படுத்துவதையும் விலாவாரியாகக் காட்டுவதே கதை.

ஒரு பிச்சைக்காரக் கும்பலில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் பார்வையிழந்த பிச்சைக்காரியான பூஜா, காவல்துறை உதவியுடன் வலுவான ஒரு கும்பலுக்குக் கடத்தப்படுகிறார். விகாரத் தோற்றமுள்ள மற்றொரு பிச்சைக்கார மாஃபியாத் தலைவனுடன் படுக்கையைப் பகிர கண்பார்வையுள்ள எந்தப் பிச்சைக்காரியும் சம்மதிக்காததால் பூஜாவைப் பத்துலட்சம் ரூபாய்க்கு விற்கிறான் கும்பல் தலைவன். ஆனால் இதை விரும்பாத சக பிச்சைக்காரர்கள் பூஜாவைத் தப்ப வைக்க முயலும்போது ஆர்யா மாஃபியாக் கும்பல் தலைவர்களைக் கொல்கிறார்.

சுமார் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் காசிக் காட்சிகள் மாதக் கணக்கில் படம்பிடிக்கப்பட்டன என்ற சொல்லப்பட்டது. ஆனால் காசிக்காட்சிகள் கொஞ்சமோ கொஞ்சம். படம் மொத்தமும் காசியில்தானோ என எண்ணும்படி ட்ரெய்லர் இருந்தது. படத்தில் ஆர்யா வரும் இடங்கள் /காட்சிகள் சுருக்கமே. எதனாலோ நிறைய காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது புரிகிறது.



இந்துத்துவா ஆள் என அறியப்பட்ட ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் சுருக்.

"ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டா பெத்த பிள்ளைய பதினாலு வருசம் காசியில் விட்டே?" எனக் காசிப் பண்டிட் கேட்கும் இடம்,



மலைமேல் இருக்கும் சாமியாரைத் தேடி வரும் ஒருவன் "சாமீ! சாமீ" எனும்போது, "கண் தெரியாதவனும் சாமி, காது கேட்காதவனும் சாமி, கல்லும் சாமி, மண்ணும் சாமி" " என ஆர்யா உறுமும் இடம்,

ஆர்யாவைத் தேடி வரும் பிச்சைக்காரச் சிறுவன் காவி உடுத்திய ஒருவனிடம்' " சாமியெப்பாக்கணும்"

"ஏன்? எங்களெப்பாத்தா சாமியாத்தெரியலையா?"

"சடபிடிச்சவனெல்லாம் சாமியா?"எனக்கேட்பது,

கோர்ட்டில் ஆர்யாவை நிறுத்தும்போது, மாஜிஸ்ட்ரேட், " இந்த மாதிரி ஆளுகளெயெல்லாம் ஒங்க சட்டம் ஒண்ணும் செய்யாது. ஒரு பரதேசி முதல் மந்திரியையே தலையை வெட்டுவேன்னு சொன்னானே? அவனெ ஒங்க சட்டம் என்ன செய்தது?" எனக் கேட்கும் இடம்.

தன்னைப் பார்க்க வந்த தாயிடம் ஆர்யா,

" ஐயிரண்டு திங்களாய் அடக்கி வைத்த தூமையே
கையிரண்டு காலிரண்டாய் பிள்ளையாய் ஆனதே

என்ற சித்தர் பாடலைக் கூறிவிட்டு, "தூமைன்னா என்னாண்ணு தெரியுமா உனக்கு? எனக்கேட்கும் இடத்தில் சுருக்....சுருக்..

கஞ்சா அடித்த ஜோரில், மலை மேலிருந்து ஆர்யா சங்கு ஊத, " சாமீ! நீங்க ஊதுற சத்தம் அடிவாரம் வரெ கேக்குது; நாங்க போலீஸுக்கு பயந்து சாமியார் வேசத்துலெ இங்கெ இருக்கிறொம்."எனக் காவி வேட்டிகள் கூறுவது எனப் பல இடங்களைக் கூறலாம்.

நகைச்சுவை நடிகராய் வடிவேலுவுடன் வரும் ஒருவர் இதில் மிக சீரியஸாக நடித்துள்ளார். நகைச்சுவைக்காட்சிகள் தனியாக ஏதுமில்லை. கதையோட்டத்தில் வசனங்களால் ஆங்காங்கே சிரிப்பு வெடிக்கிறது.

ஊனமுற்றவர்களைத் தேவைக்கேற்றபடி வேலை வாங்கி இருப்பதில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

தேர்ந்த நடிகர்களை விட இயல்பாக அனைவரும் நடித்துள்ளனர். வில்லன் தாண்டவனாக வருபவரின் நடிப்பு மிக அருமை. பூஜா விருதை எதிர்பார்த்து நடித்திருக்கலாம். அதற்காகவே சொந்தக் குரலில் டப்பிங்க் கொடுத்துள்ளார் போலும்.

பாலாவின் பிதாமகன் படத்துக்கும் இப்படத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

அதிலும் கஞ்சா; இதிலும் கஞ்சா..

அதிலும் சுடுகாடு; இதிலும் சுடுகாடு..



அதிலும் பழைய பாடல்களின் தொகுப்புப் பாடல் ; இதிலும் டிட்டோ..

நந்தாவில் மகன் தாய்ப்பாசத்துக்கு ஏங்குவான்;

இந்தப்படத்தில் தாய் மகன் பாசத்துக்காக ஏங்குகிறாள்.

இவை யதேச்சையா? அல்லது இதுதான் பாலாவின் ஸ்டைலா?

இந்த விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும்போது, மலையாள சானலான 'அமிர்தா டி.வி.யில், கேரளத்தில் பிச்சை எடுக்க, பிச்சைக்கார மாஃபியாவால் தமிழ்நாட்டிலிருந்து பிச்சைக்காரர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது, பொருத்தமாய் அமைந்தது.

வணிக ரீதியில் இல்லாமல் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக, பாலாவைப் பாராட்டலாம்.

படம் பார்த்தபின் மனதில் ஒரு வெறுமை. ஏனோ?

மொத்தத்தில் எதிர்பார்த்தது கிடைக்காதது ஏமாற்றமே!
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!