Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காந்தமால் பா.ஜ.க. வேட்பாளர் கைது!

Published on: செவ்வாய், 14 ஏப்ரல், 2009 // , , , , , , , ,
ஒரிசா மாநிலம் காந்தமால் நாடாளுமன்றத் தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அஷோக் சாகு இன்று கைது செய்யப் பட்டார். இம்மாதத் தொடக்கத்தில் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வண்ணம் பேசியதாக அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தது. காவலர்களிடம் பிடிபடாமல் நீதிமன்றத்தில் பிணை கேட்டு அவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டதை அடுத்து அவர் கைது செய்யப் பட்டு நீதி மன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 125 (A) ஆகிய சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.

ஒரிசாவில் குண்டு வெடித்து 4 பேர் பலி!

ஒரிசாவில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து 4 பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் காயமுற்றனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பெர்ஹாம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புருஷோத்தம்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் இன்று காலை 2 மணி அளவில் இந்த குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

ஒரிசா : மார்ச் 11ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

Published on: ஞாயிறு, 8 மார்ச், 2009 // , , , , , ,
ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டதை அடுத்து வரும் புதன்கிழமை (11ஆம் தேதி) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அறிவ்ததுள்ளார்.

தமக்கு 76 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் தமக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் விவரங்களை ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும் கூறிய அவர், தம்முடைய ஆதரவாளர்களையும் அழைத்துச் சென்று ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறினார்.

147 உறுப்பினர்களைக் கொண்ட ஒரிசா சட்ட மன்றத்தில் பிஜு ஜனதா தளம் 59 உறுப்பினர்களையும், பா.ஜ.க. 30, காங்கிரஸ் 38 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆவர்.

பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் கூட்டணி முறிவு!

ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று ஒரிசா மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 11 ஆண்டுகளாக பாரதீய ஜனதாவுடன் இருந்த கூட்டணியை பிஜு ஜனதா தளம் முறித்துக் கொண்டுள்ளது.

ஒரிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு மேல் பிஜு ஜனதா தளத்திற்குத் தர பாரதீய ஜனதா கட்சி தயாராகாதததைத் தொடர்ந்து இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பின் பிஜு ஜனதா தளம் தங்களை ஆதரிக்கக் கூடும் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. தவிர பிஜு ஜனதா தளம் மூன்றாவது அணியில் சேரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஒரிசாவில் வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலி

Published on: ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
ஒரிசாவில் கல்யாண நிகழ்விற்குச் சென்று கொண்டிருந்த வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலியானார்கள்.

ஒரிசா மாநிலம் பார்கர் நகருக்கு அருகில் ஆளில்லா கிராசிங்கில் இன்று மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் கல்யாண நிகழ்விற்குச் சென்ற மணப்பெண் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட அருகில் இருந்த கிராம மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், அந்த இரயிலை அங்கிருந்து விட மறுத்து நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரிசாவில் அடுத்தடுத்து 10 நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது இரயில் விபத்து இது என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரிசாவில் புகைவண்டி கவிழ்ந்தது : 10 பேர் பலியானதாக சந்தேகம்

Published on: வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
ஒரிசாவின் ஜஜ்பூர் அருகே புகைவண்டி கவிழ்ந்ததாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவுராவிலிருந்து சென்னை வரும் சோழமண்டல விரைவு வண்டி இன்று இரவு 7.30 மணி அளவில் ஜஜ்பூர் சாலை அருகே இந்த வண்டியின் 12 பெட்டிகள் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

என்ஜினை அடுத்த 2 பெட்டிகள் கடுமையாக சேதமுற்றதாகக் கூறப்படுகிறது.

ஒரிசா காவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தல்

Published on: செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 // , , , , ,
ஒரிசாவில் சுமார் 40 ஆயிரம் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் பொறுப்புகளில் உள்ள காவலர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாய் அச்சுறுத்தி உள்ளனர்.

6ஆவது ஊதியக்குழு ஆணையத்தின் பரிந்துரைப்படி தங்கள் ஊதியங்களை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிவரும் அவர்கள், திங்கள் கிழமை காலை 6 மணி முதல் 6 மணிவரை உணவு எதுவும் உண்ணாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். காவல்துறையின் கீழ்மட்டத்தில் உள்ள இவர்கள் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் சங்கம் என்ற பெயரில் செயல்படும் இவர்கள் தங்கள் சட்டமன்றப் பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் வழக்கம்போல் மேற்கொண்டனர்.

நோய்வாய்ப்பட்டுள்ள தங்கள் குடும்பத்து முதியவர்கள் மற்றும் சிறுகுழந்தைகள் தவிர இந்த காவலர்களின் குடும்பத்தினரும் நேற்று உண்ணா நிலையை மேற்கொண்டதாக சங்கத் தலைவர் பத்மதேவ் பெஹேரா கூறினார்.

தங்கள் கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிட்டால் சங்கப் பிரதிநிதிகள் கூடி வேலை நிறுத்தத்திற்கான நாளை முடிவு செய்து அறிவிப்பார்கள் என்றும் இவர் கூறினார். அரசிடம் பல முறை வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கையை அரசு பரிசிலீக்காததால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

ஒரிசாவில் கான்ஸ்டபிள் நிலையிலுள்ள காவலர் மாதம் ரூ. 3000 மட்டுமே சம்பளமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!