Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

20-20 கிரிக்கெட்: இந்தியா இலங்கையை வென்றது

Published on: செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
இன்று கொழும்புவில் நடைபெற்ற 20-20 சுற்றுகள் மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியா 3 ஆட்டக்காரர்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

முன்னதாக களம் இறங்கிய இலங்கை அபாரமாக ஆடி 20 சுற்று பந்துவீச்சில் 171 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் தில்ஷான் 47 பந்துகளில் 61ஓட்டங்களும், ஜெயசூர்யா 17 பந்துகளில் 33 ஓட்டங்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் யூசுஃப் பதான் இருவரை வீழ்த்த, இர்ஃபான்பதான் ஒருவரையும், இஷாந்த் சர்மா ஒருவரையும் வீழ்த்தினர்.

பிறகு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய ஆட்டக்காரர்களான ஷேவாக், கம்பீரை இழந்தாலும், யுவராஜ் சிங் , ரெய்னா ஆகியோர் பொறுப்பாக ஆடி முறையே 32, 35 ஓட்டங்கள் பெற்றனர். அதன்பிறகு இந்திய ஆட்டக்காரர்கள் விரைவாக ஆட்டமிழக்க, இந்தியா தோற்றுவிடுமோ என்ற நிலையை மாற்றி பதான் சகோதரர்கள் இந்தியாவுக்கு வெற்றித் தேடி தந்தனர்.

யூசுஃப் பதான் 10 பந்துகளில் 22 ஓட்டங்களும், இர்ஃபான் பதான் 16 பந்துகளில் பெற்ற 33 ஓட்டங்களும் இந்திய அணி வெற்றி பெற உதவியது.

புலிகள் 19 பேரைச் சுட்டுக் கொன்றனர்!

பாதுகாப்பான இடம் நோக்கி நகரும் பொதுமக்களுக்கு எதிராக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 76 பேர் படுகாயமுற்றனர்.
புலிகளின் கட்டுப்பாடுகளில் உள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 25000 பேரை இராணுவம் வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்தும் கொடூர தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச சமுதாயத்தில் வலுத்து வரும் வேளையில், பாதுகாப்பான இடம் தேடி நகரும் தமிழர்களுக்கு எதிராக புலிகள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பல்கள் மோதி தீப்பிடித்தது!

Published on: // , , , ,
இரானிலிருந்து 9 மில்லியன் விலையுள்ள 30,000 டன் எண்ணெயுடன் துபை நோக்கி வந்துக் கொண்டிருந்த காஷ்மீர் என்ற பெயர் கொண்ட எண்ணெய் கப்பலும் துபையிலிருந்து சென்று கொண்டிருந்த சீமாபாய் என்ற சரக்கு கப்பலும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக மோதிக் கொண்டதில் வெடித்து தீ பற்றி எரிகிறது.

துபையிலுள்ள ஜபல் அலி தீவிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டருக்கு அப்பால் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.

உயிர் அபாயங்கள் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இரு கப்பல் பணியாளர்கள் இதுவரை கடலிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் பயங்கர ஓசையுடன் வெடி சப்தம் கேட்டதாக சாட்சிகள் கூறுகின்ரனர். இரானின் காஷ்மீர் என்ற எண்ணெய் கப்பல் 1998 ல் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

ஆஸ்திரேலிய காட்டுத்தீ - மரணம் 200 கடந்தது!

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக படர்ந்த காட்டுத்தீயில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 கடந்துள்ளது. தீ படர்ந்த பகுதிகளிலிருந்து மேலும் பல உடல்களைத் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்..

சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ படர்ந்த மாரிஸ் வில்லி, கிங்லேக் பட்டணங்களில் பொதுமக்கள் நுழைவதற்குக் காவல்துறை தடை விதித்துள்ளது. இங்கு இதுவரை 700 வீடுகள் தீக்கு இரையாகியுள்ளதாகக் கணக்குகள் தெரிவிக்கின்றன. விக்டோரியா மாகாணத்தில் 3000 சதுர கிலோமீட்டருக்குக் காட்டுத்தீ படர்ந்துள்ளது.

அவசர உதவிக்கு 70 லட்சம் டாலர்கலை பிரதமர் கெவின்ரட் அனுமதித்துள்ளார். 400 ரெட்க்ராஸ் சேவகர்கள் நிவாரண உதவியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் குறித்து விசாரிப்பதற்காக ராயல் கமிசன் நியமிக்கப்பட்டுள்ளது.

20/20 போராட்டம்!

இலங்கை சுற்றுபயணத்தில் உள்ள இந்திய அணி, இன்று பிரேமதாசா விளையாட்டு அரங்கில் இலங்கையுடன் 20௨0 ஆட்டம் ஆடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

172 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 16 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களில் தள்ளாடி கொண்டிருக்கின்றது.

தற்பொழுது யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் இருவரும் களத்தில் உள்ளனர்.

கைவசம் 3 விக்கட்டுகள் உள்ள நிலையில், இந்தியா வெற்றிபெற 4 ஓவர்களில் இன்னும் 40 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு

சிவகங்கை பிப்.9
தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் ஏரிவயல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செபஸ்தியம்மாள். இந்த ஊராட்சியில் காஞ்சிரம் முதல் முத்துப்பட்டிணம் வரை தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்தின் மூலம் சாலைப்பணி நடைபெற்று வந்தது. இந்தப்பணியில் 138 பேர் ஈடுபட்டுவருவதாக ரிக்கார்டில் குறிக்கப்பட்டிருந்தது. இப் பணியை கூடுதல் ஊராட்சி இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். அப்போது 101 பேர் மட்டுமே பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஜான் செல்வராஜ் காளையார்கோவில் போலிசில் புகார் செய்ததை தொடர்ந்து போலிசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் செபஸ்தியம்மாள், ஊராட்சி எழுத்தர் குருசாமி, மக்கள் நலப்பணியாளர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கர்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலாடி அருகே பசுமை புரட்சி செயதுவரும் ஆசிரியர் குடிநீர் வசதி செய்துதரகோரிக்கை

கடலாடி அருகே பசுமை புரட்சி செயதுவரும் ஆசிரியர் குடிநீர் வசதி செய்துதரகோரிக்கை

கடலாடி பிப்.10
கடலாடி அருகே பசுமை புரட்சி செய்து வரும் ஆசிரியருக்கு உதவிய மாணவர்கள் குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலாடி அருகே உள்ள பிடாரியேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.இங்கு 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.இரண்டு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு பள்ளியின் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்க ளை வளர்த்து வருகின்றனர்.வறட்சியான குடிஞிர் பிரச்சனை நிறைந்த இப்பகுதியில் அரிய வகை மரங்களை வளர்த்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இங்கு புங்கை,வேம்பு,6 வகையான வாகை,

நெல்லி,முருங்கை,மருது,நவ்வாப்பழம் மரம்,அத்தி உள்ளிட்டவைகள் உள்ளன.பசுமைப் புரட்சி செய்துவரும் இப்பள்ளியைப் போன்று கடலாடி பகுதியில் உள்ள 158 பள்ளிகளிலும்,இப்பகுதியில் உள்ள கிராமங்களிலும் மரங்களை வளர்ப்பதற்கு அரசு சார்பில் மரக்கன்றுகள் உதவியும்,தண்ணீர் பிரச்சனையை சரி செய்வதற்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியின் ஆசிரியர் பண்டாரக்கண்ணன் கூறியதாவது:குடியரசு தலைவர் அப்துல் கலாம் பசுமை புரட்சி ஏற்படுத்தி மாசற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியது போல எங்கள் பள்ளியில் அனைத்து வகையான மரங்களையும் வளர்த்து வருகிறோம்.மாணவர்களுக்கு கல்வியையும்,பசுமை மரங்களை வளர்ப்பது குறித்தும் கூறுகிறோம்.

பள்ளி மாணவர்கள் கூறுகையில்,எங்கள் ஊரில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம்: ஐ.நா. தகவல்

வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம்: ஐ.நா. தகவல்

சென்னை, பிப். 9 : வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பாக இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறிவர்கள் பற்றி போதை மற்றும் குற்றத் தடுப்புக்கான ஐ.நா. அமைப்பு தயாரித்துள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஜூன் 2006 முதல் ஜுன் 2007 வரை பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்கள் பற்றிய 169 குற்ற ஆவணங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்று திருப்பி அனுப்பப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்க்காரர்கள், முக்கியப் பிரமுகர்கள், குடியுரிமை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. 20-க்கும் அதிகமான ஊர்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. பத்திரிகை செய்திகளும் ஆய்வில் இதில் இடம் பெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் சட்டவிரோதமாக, உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாடுகளுக்கு குடியேற முயற்சிக்கின்றனர். இவ்வாறு செல்பவர்களில் 25 சதவீதத்தினர் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் 90 சதவீதத்தினர் ஆண்கள். பெரும்பாலானவர்கள் கிராமப்புற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 41 சதவீதத்தினர் 21 முதல் 30 வயதுக்குள்பட்டவர்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்று வசதியாக வாழலாம் என்று எண்ணுவதால் தவறான வழியை பின்பற்றுகின்றனர். இப்படி வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இதனை தவறாக கருதாமல் சமூக அந்தஸ்து உயர்வதற்கான வழியாகக் கருதுகின்றனர்.

சுமார் 35 நாடுகளில் குடியேற தமிழக இளைஞர்கள் விரும்புகின்றனர். அதில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

போலி பாஸ்போர்ட் தயாரித்தல், பாஸ்போர்ட்டின் மேல் அட்டையை மாற்றுதல், புகைப்படத்தை மாற்றுதல், போலி விசாக்கள், விமான நிலையங்களில் பயணிகளின் அனுமதி அட்டையை மாற்றுதல், போலி முத்திரைகளை தயாரித்தல் போன்ற போலி ஆவணங்கள் மூலம் ஆட்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு இடைத் தரகர்கள் அனுப்புகின்றனர்.

செல்ல வேண்டிய நாடுகளுக்கு நேராகச் செல்லாமல் வேறு நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து செல்லும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள் பாதிப்பு

அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள் பாதிப்பு

பரமக்குடி, பிப். 9: பரமக்குடி அருகே, வேந்தோணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிராமத் தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார்.

வேந்தோணி அங்கன்வாடி மையத்தில் பணியாளர் மற்றும் உதவியாளர் என இருவர் வேலைபார்த்து வந்தனர். இதில், பணியாளர் நாகேஸ்வரி 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். உதவியாளர் குழந்தைகளைக் கவனித்து வந்தார்.

இந் நிலையில், இங்கு பணியாற்றிவந்த உதவியாளரை பரமக்குடி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் காமராஜர் நகர் பகுதிக்கு மாற்றிவிட்டார். இதனால், குழந்தைகளுக்கு தொடர்ந்து சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்க முடியாமல் அங்கன்வாடி மையம் மூடப்பட்டுவிட்டது.

இதனால், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா-இலங்கை முதல் 20-20 போட்டி இன்று!

இந்திய-இலங்கை அணிகள் மோதும் முதல் 20-20 கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் இன்று இரவு ஏழுமணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.

நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய மகிழ்வில் இந்திய அணியும் கடந்த ஒருநாள் போட்டியில் வென்ற தெம்பில் இலங்கையும் களம் இறங்குகின்றன.

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஹிர்கான் இருஆட்டங்களுக்கு ஓய்வு எடுத்துவிட்டு இன்று அணிக்குத் திரும்புகிறார். ஒருநாள் போட்டி முடிந்ததும் சச்சின் நாடு திரும்பிவிட்டார். 20-20 போட்டியில் சிறப்பு பெற்ற சேவாக், தோனி, யுவராஜ், யூசுஃப் பதான், ரெய்னா ஆகியோர் இந்திய அணியை அலங்கரிக்க, இலங்கையிலோ நட்சத்திர ஆட்டக்காரர்களான சங்கக்காரா, கேப்டன் ஜெயவர்த்தனே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மற்றொரு சிறப்பு மட்டையாளரான ஜெயசூர்யா அணியில் உள்ளார்.

அதுபோல, பந்துவீச்சிலும் முரளிதரன், மெண்டிஸ் ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெறாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தையில் புதுசு: பஜாஜ் நிறுவனத்தின் புதிய பைக்


பஜாஜ் நிறுவனம், பஜாஜ் XCD-135 DTS SI என்கிற புதிய மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகுந்த ஸ்டைல் மற்றும் செயல்திறனுடன் இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் டிஸ்க் பிரேக், ஐவேக கியர் பாக்ஸ், ஆட்டோ ச்சோக், இரண்டு பைலட் விளக்குகள் முதலிய அம்சங்கள் உள்ளன.

பஜாஜ் மண்டல மேலாளர் மனோஜ் குமார் நிருபர்களிடம் தெரிவிக்கையில் 'பஜாஜ் நிறுவனத்தின் மதிப்புமிக்க பைக்குகளில் இது முதலிடத்தில் உள்ளது' என்றார். மும்பையில் இதன்விலை ரூ.47,000/- ஆக கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

CBI எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை, மத்திய அரசுக்கும் அதன் சட்ட அமைச்சகத்துக்கும் கீழ்படியாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டன அறிவுறுத்தல் செய்துள்ளது.

உத்திரபிரதேச சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் சொத்துகுவிப்பு குறித்து விஸ்வநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் அல்மாஸ் கபீர், சிரியாக் ஜோசப் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது. "எந்த வழக்கிலும் கடைசி நேரத்தில் வழக்கறிஞர்களை மாற்றும் போக்கை ம.பு.து கைவிடவேண்டும்" என்றனர் நீதிபதிகள்.

முன்னதாக, தன்மீது காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரால் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கு புனையப்பட்டது என்ற முலாயம்சிங் தரப்பு வாதத்தையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சமாஜ்வாதி பொதுச்செயலாளர் அமர்சிங் இது குறித்து கருத்தளிக்கையில் தனக்கு மத்திய புலனாய்வு துறை மீது சற்றும் நம்பிக்கை இல்லை என்றும், அது எப்போதும் நடுவண் அரசின் கைப்பாவையாகவே விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

எஃப்.பி.ஐ பெண் அதிகாரி மீது மானபங்கப்புகார்!

விசாரணை செய்யும் வேளையில் எஃப்.பி.ஐ ஐச் சேர்ந்த பெண் அதிகாரி தன்னை மானபங்கம் செய்து கொடுமைபடுத்தியதாக, மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பகிம் அன்சாரி புகார் கூறியுள்ளார். தனது வழக்கறிஞர் வழியாக மும்பை மெட்ரோ நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, நீதிமன்றம் க்ரைம் பிராஞ்சிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாதம் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளது.

விசாரணைக்கிடையில் தாக்கியதன் காரணமாக உடம்பில் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பகீமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் பகீம் கொடுத்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை செய்த மூன்று எஃப்.பி.ஐ அதிகாரிகளில் பெண் அதிகாரி மானபங்கப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை விசாரணை நடத்த எஃப்.பி.ஐக்கு அனுமதி வழங்கிய மாநகர காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்திய சட்டப்படி, நாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை வெளிநாட்டு ஏஜன்ஸிகள் விசாரணை செய்ய அனுமதி இல்லை, எனவே அவருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் எனவும் பகீமின் வழக்கறிஞர் நக்வி கூறினார்.

பாகிஸ்தான் தாக்கப்பட்டால் இந்தியாவைத் தாக்குவோம் -அல்கைதா.

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் எனில் மும்பையைப் போன்ற தாக்குதல்கள் இந்தியாவில் மேலும் நிகழும் என அல்கைதா மிரட்டல் விடுத்துள்ளது.

பாகிஸ்தானை இந்தியா தாக்கும் எனில் மிகப் பெரிய அழிவை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆப்கானிஸ்தானிலுள்ள அல்கைதா தலைவர் முஸ்தஃபா அபு அல்யாஸி அறிவித்துள்ளார்.

சுமார் 20 நிமிட நேரம் ஓடும் இவரின் பேச்சடங்கிய வீடியோவை பி.பி.ஸி வெளியிட்டுள்ளது.

ஒரிசா காவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தல்

ஒரிசாவில் சுமார் 40 ஆயிரம் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் பொறுப்புகளில் உள்ள காவலர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாய் அச்சுறுத்தி உள்ளனர்.

6ஆவது ஊதியக்குழு ஆணையத்தின் பரிந்துரைப்படி தங்கள் ஊதியங்களை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிவரும் அவர்கள், திங்கள் கிழமை காலை 6 மணி முதல் 6 மணிவரை உணவு எதுவும் உண்ணாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். காவல்துறையின் கீழ்மட்டத்தில் உள்ள இவர்கள் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் சங்கம் என்ற பெயரில் செயல்படும் இவர்கள் தங்கள் சட்டமன்றப் பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் வழக்கம்போல் மேற்கொண்டனர்.

நோய்வாய்ப்பட்டுள்ள தங்கள் குடும்பத்து முதியவர்கள் மற்றும் சிறுகுழந்தைகள் தவிர இந்த காவலர்களின் குடும்பத்தினரும் நேற்று உண்ணா நிலையை மேற்கொண்டதாக சங்கத் தலைவர் பத்மதேவ் பெஹேரா கூறினார்.

தங்கள் கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிட்டால் சங்கப் பிரதிநிதிகள் கூடி வேலை நிறுத்தத்திற்கான நாளை முடிவு செய்து அறிவிப்பார்கள் என்றும் இவர் கூறினார். அரசிடம் பல முறை வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கையை அரசு பரிசிலீக்காததால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

ஒரிசாவில் கான்ஸ்டபிள் நிலையிலுள்ள காவலர் மாதம் ரூ. 3000 மட்டுமே சம்பளமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

முதல்வருக்கு நாளை அறுவை சிகிச்சை

முதல்வர் கருணாநிதி சமீபகாலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை முதுகுவலி குறையாததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

முதல்வர் கருணாநிதி முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி குறையாத காரணத்தினால் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்துள்ளார்கள்.

2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த டாக்டர் ஏ.ஜெய்ஸ்வாலும், மற்ற டாக்டர்களும் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை 11ம் தேதி புதன்கிழமையன்று நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் நலனை கவனிக்க பின்வரும் டாக்டர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம் இக்குழுவுக்குத் தலைமை வகிப்பார். டாக்டர் ஏ.ஜெய்ஸ்வால், டாக்டர் மயில்வாகனன், டாக்டர் கார்த்திக் கைலாஷ், டாக்டர் எஸ்.தணிகாசலம், டாக்டர் ஐ.எஸ்.நாயுடு, டாக்டர் மகேஷ் வகாமுடி, டாக்டர் பாஸ்கர், டாக்டர் பி.எஸ்.சண்முகம், டாக்டர் ராஜ் பி.சிங், டாக்டர் ஏ.வி.சீனிவாசன், டாக்டர் சவுந்தரராசன், டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, முதல்வரின் தனி டாக்டரான டாக்டர் பி.கோபால் ஆகியோரும் குழுவி்ல் இடம் பெற்றுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சிஃபி: பிராந்திய மொழித்தளங்கள் மூடப்பட்டன

சத்யம் ஆன்லைன் தளமாக இருந்து பிராந்திய மொழிகளில் வளர்ச்சி கண்டு சிஃபி டாட் காம் என்று பெயர் பெற்ற இணைய நிறுவனம் தன் பிராந்திய மொழிச்சேவைகளை நிறுத்திக்கொண்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய அனைத்து மொழிச்சேவைகளும் மூடப்பட்டதற்கு 'செலவு குறைப்பு நடவடிக்கை' என்று காரணம் சொல்லப்படுகிறது.

2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்ச்சேவை 9 ஆண்டுகளில் முடிவு கண்டுள்ளது.

தமிழகம்: அரிசி விலை கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
மூட்டைக்கு ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது.
ஓரிரு மாதங்களுக்கு முன் நிஷா புயல் வந்து போனதால் நெல் விளைச்சல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டது. நெற்களஞ்சியங்களான தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத விளைச்சல் குறைவு காணப்படுகிறது.

மேலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பிறமாநிலங்களுக்கு அரிசி அனுப்புவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர அரிசி வரத்தும் முழுவதுமாக நின்று போனது. இவ்விரு மாநிலங்களே தமிழகத்தின் அரிசி தேவையில் பாதியளவு பூர்த்தி செய்து வந்தன.

வட மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படும் நெல்லுக்கும் சரக்குக்கட்டண உயர்வால் அடக்கவிலை அதிகமாகிவிடுகிறது. இந்நிலை நீடித்தால், அடுத்தடுத்த மாதங்களில் அரிசி கிலோ ரூ.50/=க்கு விற்றாலும் ஆச்சர்யமில்லை என்று அரிசிக்கடை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள் ராணுவத்தினர்

ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள் ராணுவத்தினர்

புதுடெல்லி, பிப்.9-

ஆறாவது சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ராணுவத்தினருக்கும் புதிய சம்பளம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி பரிந்துரை செய்தது. அதன்படி, ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன வீரர்களுக்கு குறைவாகவும் அதன் பிறகு உள்ளவர்களுக்கு சற்று அதிகமாகவும் ஓய்வூதியம் பரிந்துரை செய்யப்பட்டது.

இதனால், முன்னாள் ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். `ஒரே பதவி, ஒரே சம்பளம்` என்று வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் தொடர் உண்ணாவிரதம் நடத்தினர். எனினும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, பணியில் இருந்தபோது அளிக்கப்பட்ட வீர தீர செயல்களுக்கான விருதுகளை திருப்பி அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கூடி தங்களுடைய விருதுகளை ஒன்றாக சேர்த்தனர். பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அந்த விருதுகளை ஒப்படைத்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது தவிர, 10 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்னாள் ராணுவத்தினர் சங்க துணை தலைவர் சத்பிர் சிங் தெரிவித்தார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!