வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம்: ஐ.நா. தகவல்
வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம்: ஐ.நா. தகவல்
சென்னை, பிப். 9 : வேலையில்லாத் திண்டாட்டமே சட்டவிரோத குடியேற்றத்துக்கு காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பாக இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறிவர்கள் பற்றி போதை மற்றும் குற்றத் தடுப்புக்கான ஐ.நா. அமைப்பு தயாரித்துள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஜூன் 2006 முதல் ஜுன் 2007 வரை பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்கள் பற்றிய 169 குற்ற ஆவணங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்று திருப்பி அனுப்பப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்க்காரர்கள், முக்கியப் பிரமுகர்கள், குடியுரிமை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. 20-க்கும் அதிகமான ஊர்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. பத்திரிகை செய்திகளும் ஆய்வில் இதில் இடம் பெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் சட்டவிரோதமாக, உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாடுகளுக்கு குடியேற முயற்சிக்கின்றனர். இவ்வாறு செல்பவர்களில் 25 சதவீதத்தினர் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர்.
சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் 90 சதவீதத்தினர் ஆண்கள். பெரும்பாலானவர்கள் கிராமப்புற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 41 சதவீதத்தினர் 21 முதல் 30 வயதுக்குள்பட்டவர்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்று வசதியாக வாழலாம் என்று எண்ணுவதால் தவறான வழியை பின்பற்றுகின்றனர். இப்படி வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இதனை தவறாக கருதாமல் சமூக அந்தஸ்து உயர்வதற்கான வழியாகக் கருதுகின்றனர்.
சுமார் 35 நாடுகளில் குடியேற தமிழக இளைஞர்கள் விரும்புகின்றனர். அதில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
போலி பாஸ்போர்ட் தயாரித்தல், பாஸ்போர்ட்டின் மேல் அட்டையை மாற்றுதல், புகைப்படத்தை மாற்றுதல், போலி விசாக்கள், விமான நிலையங்களில் பயணிகளின் அனுமதி அட்டையை மாற்றுதல், போலி முத்திரைகளை தயாரித்தல் போன்ற போலி ஆவணங்கள் மூலம் ஆட்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு இடைத் தரகர்கள் அனுப்புகின்றனர்.
செல்ல வேண்டிய நாடுகளுக்கு நேராகச் செல்லாமல் வேறு நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து செல்லும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments