ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள் ராணுவத்தினர்
ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள் ராணுவத்தினர்
புதுடெல்லி, பிப்.9-
ஆறாவது சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ராணுவத்தினருக்கும் புதிய சம்பளம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி பரிந்துரை செய்தது. அதன்படி, ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன வீரர்களுக்கு குறைவாகவும் அதன் பிறகு உள்ளவர்களுக்கு சற்று அதிகமாகவும் ஓய்வூதியம் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனால், முன்னாள் ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். `ஒரே பதவி, ஒரே சம்பளம்` என்று வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் தொடர் உண்ணாவிரதம் நடத்தினர். எனினும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, பணியில் இருந்தபோது அளிக்கப்பட்ட வீர தீர செயல்களுக்கான விருதுகளை திருப்பி அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கூடி தங்களுடைய விருதுகளை ஒன்றாக சேர்த்தனர். பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அந்த விருதுகளை ஒப்படைத்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது தவிர, 10 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்னாள் ராணுவத்தினர் சங்க துணை தலைவர் சத்பிர் சிங் தெரிவித்தார்.
0 comments