Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாஜக வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: ஜெ திட்டவட்டம்

பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்ற செய்திகள் அடிப்படை இல்லாதவை என அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைய அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. எவ்விதக் கூட்டணியும் அமைக்காது என ஜெயலலிதா மறுத்துள்ளார்.

"தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரும் என சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. நாங்கள் 2009 மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்ற செய்திகள் எவ்வித அடிப்படையும் இல்லாதவை. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து நாங்கள் எந்தக் கட்சியுடனும், எந்த பேச்சும் நடத்தவில்லை," என ஜெயலலிதா கூறியுள்ளார்.

"பாபர்மசூதியை இடித்தது நியாயம் தான்" - பாஜக வின் அலிஆசாத்

"பாபர்மசூதியை இடித்தது நியாயம் தான்" - பாஜக வின் அலிஆசாத்

குலாம்நபி ஆசாத்தின் தம்பியும் பாஜக பிரமுகருமான அலி ஆசாத் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.அண்மையில்தான் இவர் பாஜக கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அந்த இடத்தில் அன்றும், இன்றும் ஒரு மசூதி இருந்ததில்லை" என்ற அலி ஆசாத், காங்கிரஸ் கட்சி அத்வானி மீது பழிசுமத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தம்பியின் கருத்து குறித்து காஷ்மீர் முன்னாள்முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் கருத்துத் தெரிவிக்கையில் 'பொருட்படுத்தத் தேவையில்லாத பேச்சு" என்றார். "அவரிடத்தில் எனக்கு சற்றும் தொடர்பு இல்லை" என்றார் குலாம்நபி ஆசாத்.

"அத்வானி, வாஜபேயியை அரபிக்கடலில் எறியுங்கள்" - காங்கிரஸ்

"அத்வானி, வாஜபேயியை அவர்கள் முதலில் அரபிக்கடலில் எறியட்டும்" என்று காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிக்கு பதிலளித்துள்ளது. காங்கிரஸ் முதியவர்களின் கட்சியாகிவிட்டது என்று கிண்டலடித்த நரேந்திர மோடிக்கு பதிலடியாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரிபிரசாத் இவ்வாறு கூறியுள்ளார்.
"காங்கிரஸ்சாரின் முதிய வயது பற்றிய கமெண்ட் அடித்த புண்ணியவான் முதலில் தன் கட்சியில் அதை அமல்படுத்தட்டும்" என்றார் அவர்.

ஒரு மனிதரின், நாட்டின், சமூகத்தின் பண்பாடு என்பது சிறுவர்களையும் முதியவர்களையும் பெண்களையும் அவர்கள் நடத்தும் விதத்தில்தான் இருக்கிறது என்ற ஹரிபிரசாத் மோடியின் வஞ்சகப்பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாகச் சொன்னார்.

மரபையும் பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கடைபிடித்து வருவதாகச் சொன்ன அவர், பிஜேபி குறித்து கூற ஒன்றுமில்லை என்றார். "எப்போதும் அக்கட்சி தேவையில்லாதவற்றையே பிரசினைப்படுத்துகிறது"

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நேற்று தரையிறங்கிய விமானத்தில் ஐந்து பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆம், நேப்பிள்சில் இருந்து கிளம்பிய இரட்டை எந்திர விமானம் ஒன்று தானியங்கி நிலையில் 10,000 அடி தூரத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், விமானிக்கு மரணம் சம்பவித்தது.

இதையடுத்து, பயணிகளில் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொள்ள, ஒற்றை எந்திரம் உரிமம் மட்டுமே பெற்றிருந்த அந்தப் பயணிக்கு தேவையான குறிப்புகளை அளித்து அந்த இரட்டை எந்திர விமானத்தை தென்மேற்கு ஃப்ளோரிடா விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக மாகாண விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தின் மற்ற ஐந்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஹாக்கி: கோப்பையை வென்றது இந்தியா!

Published on: ஞாயிறு, 12 ஏப்ரல், 2009 // , , ,
மலேசியாவின் ஈப்போ நகரில் நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி இறுதிப்போடியில் இந்திய அணி மலேசியாவை வென்று சாதித்துள்ளது.

லீக் போட்டியில் மலேசியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, எகிப்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான போட்டியை "டிரா' செய்தது. இதன்மூலம் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


இதேபோல் பாகிஸ்தான், எகிப்து அணிகளை வீழ்த்திய மலேசிய அணி, நியூசிலாந்து அணியுடனான போட்டியை "டிரா' செய்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த மலேசிய அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு தகுதிபெற்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இதுவரை இத்தொடரில் ஐந்து முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, நான்கு முறை (1985, 1991, 1995, 2009) கோப்பை வென்றுள்ளது.

இதன்மூலம் இத்தொடரில் இந்திய அணி சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்றுள்ளது. தவிர, இத்தொடரில் இந்திய அணி நான்கு முறை (1983, 2000, 2006, 2007) மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அர்ஜென்டினா அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து கோப்பையை பறிகொடுத்தது.

வெற்றி வாகை சூடிய இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் M.S.கில் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உலக நாடுகள் ஆர்வம்!

100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் பயன்படுத்த மலேசியா,சிங்கப்பூர்,மொரீசியஸ்,நமீபியா போன்ற நாடுகள் ஆர்வம் தெரிவித்திருக்கின்றன.

இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்த ஒரு நாட்டிலும் எதுபோன்ற காலநிலையிலும் சிறப்பாக இயங்கக்கூடியவை. அதனை கடினமாகவும் கையாளலாம். வாக்குப் பதிவில் இருந்து வாக்கு எண்ணிக்கை வரை அனைத்துமே துரிதமாக நடைபெற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெரும் உதவியாக உள்ளன. இதுபோன்ற ஏராளமான சிறப்பம்சங்களை இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுள்ளது உலக நாடுகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஏற்கெனவே நேபாளம், பூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நேபாளத்துக்கு கடந்த ஆண்டு தேர்தலில் பயன்படுத்த 200 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டன.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்: ஜெ அதிரடி

திருவள்ளூர் (தனி) மற்றும், பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியல் இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில், திருவள்ளூர் தொகுதியில் ஆர். ராஜனும், பெரம்பலூர் தொகுதியில் ஆர்.பி.மருதை ராஜும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இவ்விரு வேட்பாளர்களும் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் தொகுதியில் ஜி.கே. இன்பராஜ், பெரம்பலூர் தொகுதியில் கே.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுவார்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றத்திற்க்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

பிரதமர் வெளிநாட்டுப் பயணம்; பாதுகாப்புச் செலவு ரூ.234 கோடி

Published on: வெள்ளி, 10 ஏப்ரல், 2009 // , , , , ,
பிரதமர் வெளிநாட்டுப் பயணம்; பாதுகாப்புச் செலவு ரூ.234 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார். அவர் பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட செலவு தொகை எவ்வளவு என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சேத்தன் கோத்தாரி என்பவர் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு, பிரதமர் மன்மோகன்சிங்கின் வெளிநாட்டு பயண செலவு ரூ 233.8 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பிரதமர் வாஜ்பாயின் 1999-2003-ம் காலகட்டத்தில் வெளிநாட்டுப் பயண செலவு ரூ.185.60 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

சுற்றுப் பயணத்தின் போது உடன் சென்ற பிரதமர் குடும்பத்தினருக்கு ரூ.5.3 கோடியும், தகவல் தொலைத் தொடர்பு, பயணப்படி அலவன்ஸ் மற்றும் விடுதி வசதிக்காகவும் ரூ.1.21 கோடியும் செலவானதாக கூறப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதி வேட்பாளர் மாற்றம்

திமுக கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டிருந்தது அறிந்ததே! அக்கட்சி சார்பில் அதன் தமிழ்மாநிலத்தலைவரும் நடப்பு மக்களவை உறுப்பினருமான பேரா.காதர் மொய்தீன் போட்டியிடுவார் என்றும் இம்முறை உதயசூரியன் சின்னத்தில் அல்லாமல் பிரத்யேகமாக ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் முஸ்லிம் லீக் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடவேண்டுமென்று திமுக தலைமையால் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வருத்தமடைந்த பேராசிரியர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒத்துக்கொண்ட அதே வேளை, தனக்குப் பதிலாக அமீரக காயிதேமில்லத் பேரவைத் தலைவர் அப்துர்ரஹ்மான் போட்டியிடுவார் என்று அறிவித்திருக்கிறார். முறைப்படி இவ்வறிவிப்பை முஸ்லீம் லீக் இன்று வெளியிடுமாம்.

இந்தியாவிலேயே பணக்கார வேட்பாளர்: 514 கோடி ரூபாய் சொத்து!

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கிம்ஜி படாடியா தன்னுடைய சொத்து ரூபாய் 514 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் தகவல் தந்துள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக சொத்துடைய வேட்பாளராக இவர் அறியப்பட்டுள்ளார்.

சுரேந்திர நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றை நடத்திவரும் இவர் தன்னுடைய அசையும் சொத்துகளின் மதிப்பு ரூபாய் 255 கோடி என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூபாய் 259 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

41 இலட்சம் மதிப்புடைய மெர்சிடீஸ் பென்ஸ் உள்பட நான்கு கார்கள், சுமார் 50 இலட்சம் மதிப்புள்ள 1.05 கிலோ தங்கம், மகாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் சில இடங்களில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூபாய் 208 கோடி மதிப்பிலான மற்றவகை நிலங்கள் என்று தன்னுடைய அசையும் மற்றம் அசையா சொத்துகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

தன்னுடைய கல்வித்தகுதியாக அவர் எஸ்.எஸ்.சி. (பத்தாம் வகுப்பு) யையே அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மூன்று தொகுதிகளில் ம ம க தனித்துப்போட்டி!

திமுக கூட்டணியில் இடம்பெறாத நிலையில், அதிமுகவுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக அமையாது போனதால்
பதினைந்தாம் மக்களவைக்காக மே 13ல் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தமுமுக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஜெகதீஷ் டைட்லர் விலகினார்

மக்களவைத் தேர்தலில் டெல்லி வடகிழக்குத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவர் ஜெக்தீஷ் டைட்லர். இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்திற்கு டைட்லரே காரணம் என்று எதிர்கட்சிகள் கூறிவந்தன. ஆயினும் சிபிஐ விசாரணையில் குற்றமற்றவர் என்று அண்மையில் டைட்லர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக, பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது கேள்விகளும் செருப்பும் வீசப்பட்டன.

இந்நிலையில், பிரச்னைகளுக்குத் தான் காரணமாக இருக்கவிரும்பவில்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்குவதாக 65 வயதாகும் ஜெக்தீஷ் டைட்லர் கூறியுள்ளார். தனது முடிவை சோனியாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதே தொகுதியில் இவர் மூன்று முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இறுதி

எதிர்வரும் 15ஆம் மக்களவைத் தேர்தலுக்கான தமிழ்நாடு புதுவை தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் டெல்லி சென்று ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி, மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாத், பிருதிவிராஜ் சவுகான், ஆகியோரும் பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்நாடு புதுவைக்கான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு மேலிடப் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறிப்பாக ப.சிதம்பரம் அதே சிவகங்கைத் தொகுதியிலும், மணிசங்கர ஐயர் மயிலாடுதுறையிலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மூவர் காயம்

இன்று காலை ஏழு மணியளவில் இராஜஸ்தானின் ஜெய்சால்மீர், பாமர் பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டேர் அளவீட்டில் 5.3 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீட்டின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

15 முதல் 20 விநாடிகளே இந்நிலநடுக்கம் இருந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடங்களில் அரசின் கவனம் திருப்பப்பட்டுள்ளது.

தேர்தல் விதி மீறல் பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு

உ.பி.யில் முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான் உள்பட 11 பாஜக தலைவர் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் பிரதான், எம்.எல்.ஏ. வீரேந்திர சிங் சிரோஹி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மஹேந்திர சிங் யாதவ் உள்பட 11 பாஜக தலைவர்கள் மார்ச் 30-ம் தேதி தடையை மீறி போராட்டம் நடத்தி தேர்தல் விதியை மீறினர். இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 11 பேர் அளித்த பதிலும் திருப்தியாக இல்லை. இதனால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என புலந்த்ஷஹர் மாவட்ட ஆட்சியர் சுஷில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அருணாச்சலப் பிரதேச சுற்றுபயணம்: சீனா கண்டனம்!

அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத் தலைநகர் இடாநகருக்குச் சென்ற பிரதிபா பாட்டீல், எல்லைப் பகுதியான தவாங்கைப் பார்வையிட்டார். இது தொடர்பாக சீனா அதிப்ருதி தெரிவித்தது.

சீனாவின் எதிர்ப்பு தேவையற்றது என்றும், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பாகம் என்றும், இந்தியாவின் தலைவர்கள் அங்கு சுற்றுப் பயணம் செய்ய உரிமையுள்ளது எனவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்தபோதும் சீனா கண்டனக் குரல்களை எழுப்பியது இங்கு குறிப்பிடதக்கது.

இத்தாலி பூகம்பம் : பலி எண்ணிக்கை 235ஆக அதிகரிப்பு

Published on: புதன், 8 ஏப்ரல், 2009 // , , , , ,
கடந்த திங்கள் கிழமையன்று இத்தாலியின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. திங்கள் கிழமை நடந்த பூகம்பத்தைத் தொடர்ந்து இதுவரை சுமார் 200 முறை நில அதிர்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நில அதிர்வுகள் பூகம்ப பகுதியில் இருந்து தொலைவில் உள்ள ரோம் போன்ற இடங்களிலும் உணரப்பட்டன.

மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் மற்றும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தன்னார்வளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த பூகம்பத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் அப்ருசோ பகுதியில் 500க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களில் 100 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஒபாமாவின் முதல் இராக் பயணம்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட பின் பராக் ஒபாமா முதன் முறையாக செவ்வாய் கிழமையன்று இராக் பயணம் மேற்கொண்டார்.

இலண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாடு, பிரான்சு மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற நாட்டோ மாநாடு மற்றும் பராகுவேயில் நடைபெற்ற ஐரோப்பிய அமெரிக்க மாநாடுகளை முடித்துக் கொண்டு செவ்வாய் இரவு அவர் இராக் பயணம் மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பயணம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. இராக்கின் தலைநகர் பாக்தாதில் நான்கு மணி நேரம் மட்டுமே தங்கியிருந்த அவர் இராக்கின் அதிபர் ஜலால் தலபானி, பிரதமர் நூரி அல் மாலிகி மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். செவ்வாய் நள்ளிரவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பினார்.

வருணுக்கு எதிரான பேச்சு : லாலு விளக்கம்

Published on: செவ்வாய், 7 ஏப்ரல், 2009 // , , , , , , ,
வருணுக்கு எதிராக லாலு பேசியதாக வெளியான தகவலை அடுத்து தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு லாலு விளக்கம் அளித்துள்ளார்.

தான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்பதைக் கூறவே அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக லாலு விளக்கம் அளித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கர்வா எனும் இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் குரன் ராம் என்பவரை ஆதரித்துப் பேசிய போது இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

அத்வானி ஒருபோதும் பிரதமராக முடியாது என்றும் இந்துத்துவா சக்திகள் பதவிக்கு வருவதைத் தடுக்கவே முலாயம் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் தாம் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று பிகார் மாநிலம் கிஷண்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
பிலிபிட் மக்களவைத் தொகுதி பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்கள் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று பேசியிருக்கிறார் பாஜகவின் சின்னப் பையன் வருண் காந்தி.

பாஜக மூத்த தலைவர்கள் தரும் ஊக்கம் தான் இதற்குக் காரணம். நான் மட்டும் நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருவது வரட்டும் என்று வருண் காந்தியை அப்படியே ரோடு ரோலரை ஏற்றிக் கொன்றிருப்பேன் என்று பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.

சிதம்பரம் மீது காலணி வீசிய பத்திரிகையாளர் விடுவிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது காலணி வீசிய பத்திரிகையளாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்துள்ளனர். விசாரணை விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக டில்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரவாதம் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீக்கிய கலவரம் குறித்த தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜர்னைல் சிங்கின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.


இதனால் கோபமடைந்த நிருபர் ஜர்னைல் சிங் தனது காலணியைக் கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார். ஆனால் காலணி சிதம்பரம் மீது படவில்லை.

விமானத்தை திருடிய விமானி கைது!

கனடாவில் தன்டர் பே எனும் இடத்தில் உள்ள விமான பயிற்சிப் பள்ளியின் செஸ்னா 172 வகை விமானம் ஒன்று திங்கள் கிழமை நன்பகலுக்குப் பின் திருடப்பட்டுவிட்டது என்ற தகவல்கள் வந்ததும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பரபரப்பு நிலவியது. இந்த விமானம் அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றதை ராடார் கருவிகள் மூலம் அறிந்ததாக தன்டர் பே விமான நிலைய அதிகாரிகள் கூறியதை அடுத்து, அமெரிக்காவின் விமானப்படை, அமெரிக்க விமான ஆணையம் போன்றவை இந்த விமானத்தைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் மத்திய விஸ்கோன்சின் மாநிலத்தில் இந்த விமானம் இருப்பதை அறிந்து விமானப்படையினர் எப் 16 விமானம் மூலம் கடத்தப்பட்ட விமானத்தை வழிமறித்து தரையிறங்கச் செய்தனர். மிசெளரி அருகே 60ஆம் சாலையில் அந்த விமானத்தை தரையிறக்கிவிட்டு, கடத்தலில் ஈடுபட்டவர் தப்பியோட முயன்றபோது கைது செய்யப் பட்டார்.

இந்த விமானக் கடத்தல் தீவிரவாதிகளின் செயல் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. யவுஜ் பெர்கே என்ற பெயருடைய 31 வயதுடையவர் இச்செயலில் ஈடுபட்டதாகவும், தான் தற்கொலை செய்வதற்காக விமானத்தை இவர் கடத்தியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான எப்.பி.ஐ. இந்நிகழ்வு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆனால் ஆய்வு குறித்து தாங்கள் எதுவும் சொல்ல முடியாதெனவும் கூறியுள்ளது.

குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி குவைத் பயணம்

குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி இன்று மூன்று நாள் பயணமாக குவைத் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்திய அரசு சார்பில் உயர் தலைவர் ஒருவர் குவைத் வருகைத் தருவது 28 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

கல்வி, தொழிற்நுட்பப் பங்கீடு முதலியவற்றில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் குடியரசு துணைத்தலைவர் முன்னிலையில் கைச்சாத்திடப்படும் என்று தெரிகிறது.

மேலும், கடலோரப் பாதுகாப்பு, தீவிரவாதத் தடுப்புவழிகள், எண்ணெய்வளம் குறித்தும் ஹமீத் அன்சாரி குவைத் அரசுடன் பேச்சுகள் நடத்துவார் என்று அவர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இத்தாலியில் பூகம்பம் - 50க்கும் மேற்பட்டோர் பலி

Published on: // ,
இத்தாலியின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான லா அகிலா-வில் பூகம்பம் ஏற்பட்டு சுமார் 69பேர் பலியாயினர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக ஏஜன்ஸி செய்திகள் கூறுகின்றன. இதனிடேயே ரஷ்ய சுற்றுபயணம் மேற்கொள்ளவிருந்த பிரதமர், பெர்லொஸ்கொனி, தனது சுற்றுபயணத்தை ரத்து செய்துவிட்டு, பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட செல்வதாக, பிரதமர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவும், துருக்கியும் உலகின் முன்மாதிரி நாடுகள் - அதிபர் ஒபாமா பெருமிதம்

Published on: // ,
தனது ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று துருக்கி சென்ற அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்காவும், துருக்கியும் உலகிற்கு முன் மாதிரி நாடுகளாக விளங்குகின்றன என்று குறிப்பிட்டார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, முஸ்லிம்கள் நாடான துருக்கி நாட்டிற்கு அதிகாரப்பூர்வ சுற்றுபயணம் மேற்கொண்ட அவர், துருக்கியும், அமெரிக்காவும் பரஸ்பர ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு ஆட்சி புரிவதன் மூலம் கலாச்சாரங்களுக்கிடையேயான பதற்றத்தை வெகுவாக தணிக்கமுடியும் என்று கூறினார். அமெரிக்கா, கிருத்துவ நாடோ, யூத நாடோ, முஸ்லிம் நாடோ இல்லை என்றும், ஆனால் அமெரிக்க நாட்டு குடிமக்கள் அடிப்படையில் சில நல்ல பண்புகளுக்கு கட்டுபடுவதாக மேலும் கூறினார்.

வெற்றியை நோக்கி இந்தியா - நியூசிலாந்தில் சாதனை படைக்குமா?

நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில், நியூசிலாந்து 4 விக்கெட்களை இழந்து 167 ரன்கள் எடுத்து இருந்தது. டைலர் 69 ரன்களுடனும், பிராங்ளின் 26 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். முன்னதாக, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 434 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடத் துவங்கிய, நியூசிலாந்து, இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் முன்னனி மட்டை வீரர்களை இழந்தது. ஏற்கனவே 1-0 என்ற முன்னிலையில் உள்ள இந்தியா, 2-0 என்ற கணக்கில் இத்தொடரை வெல்லுமா என்பது நாளை தெரியும்.

அசாமில் குண்டு வெடித்து நால்வர் பலி!

கவுஹாத்தியில் இன்று குண்டு வெடித்து நான்கு பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் காயமுற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இதற்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இது உல்பா இயக்ததைச் சார்ந்தவர்களின் வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மதுரையில் அழகிரி போட்டி- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Published on: ஞாயிறு, 5 ஏப்ரல், 2009 // ,
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது. திமுகவின் தென் மண்டல செயலாளரும், கருனாநிதியின் மகனுமான அழகிரி மதுரையில் போட்டியிடுகிறார். இதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி உறுதியானது. மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறன், நீலகிரியில், ராசா, ஸ்ரீபெரும்புத்தூரில் டி,ஆர், பாலு, பெரம்பலூரில் நடிகர் நெப்போலியன் ஆகியோர் மற்ற பிரபலங்கள்.

காம்பீர் அதிரடி ஆட்டம் - வலுவான நிலையில் இந்தியா

நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் காம்பீரின் அதிரடியான ஆட்டம் மூலம் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. காம்பீர் சற்று முன் வரை 159 ரனகளுடனும், VVS. லஷ்மன் 38 ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகின்றனர். சமீப காலமாக, டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டியில் ஜமாய்த்து வரும், காம்பீர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்தியா தோல்வியை தவிர்க்க துணை புரிந்தார். இந்நிலையில் மூன்றாம் நாளிலேயே 469 ஒட்டங்கள் முன்னிலை எடுத்துள்ள இந்தியாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

ஆப்கனில் பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கை தொடரும் - ஒபாமா

Published on: சனி, 4 ஏப்ரல், 2009 // ,
ஆப்கனில் பயங்கரவாததிற்க்கு எதிரான அமெரிக்க மற்றும் நேடோ நாடுகளின் ராணுவ நடவடிக்கை தொடரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். நேடோ நாடுகளின் உச்சநிலை மாநாட்டிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், ராணுவ வீரர்களின் அதிக அளவில் அனுப்ப நேடோ நாடுகளிடையே சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

தாமரை சின்னத்தில் நடிகர் சரத் குமார் போட்டி?

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சரத் குமார் நெல்லை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாடார் இனத்தை சார்ந்த சரத், நெல்லை தொகுதியில் போட்டியிடுவது உறுதியானால், நாடார் இன மக்களின் ஓட்டுகளை கனிசமாக பிரித்துவிடுவார் என்றும், இதனால் தி.மு.கவின் வெற்றி பாதிக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். இதனிடையே, திமுக மற்றும் அதிமுக கூட்டனிகளில் சேரமுடியாத பாஜக, சிறு, சிறு கட்சிகளை தனது கூட்டணிக்கு கொண்டு வர முயல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா அபார பந்துவீச்சு, நியூலிலாந்து 197 ரன்களில் சுருண்டது

நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் நியூலிலாந்து முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர், ஜாகிர்கான், அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்பஜன் 3 வீக்கெட்டுகளை வீழ்த்தினார். முனாப் மற்றும் இஷாந்த் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா, ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்து இருந்தது. ஒருதின போட்டியில் தனது அதிரடியான ஆட்டம் மூலம் நியூலிலாந்தை சிதறடித்த, சேவாக், டெஸ்ட் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனதா தளத்திலிருந்து ஜார்ஜ் பெர்ணான்டஸ் நீக்கம்!

Published on: வெள்ளி, 3 ஏப்ரல், 2009 // , , , , , , ,
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசை ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கிவிட்டதாக அக்கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ் குமார் இன்று தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஜப்பர்பூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட பெர்ணான்டஸ் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

தேர்தலில் பெர்ணான்டஸ் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து அவர் ஜனதா தளத்தில் இல்லை. கட்சியின் முடிவுக்கு எதிராக எவரேனும் போட்டியிட்டால் அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெர்ணான்டசின் உடல்நிலையைக் காரணமாகக் கூறி அவர் போட்டியிட மறுக்கப் பட்டது. ஆனால் தான் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாகக் கூறிய அவர் கடந்த புதன் கிழமையன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நியூயார்க்கில் துப்பாக்கியால் சுட்டு நால்வர் பலி!

இன்று நியூயார்கில் உள்ள பிரிங்ஹாம்டன் எனும் இடத்தில் ஒரு கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானதாகவும் 12 பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்தக் கட்டிடத்தில் அமெரிக்க குடியுரிமை வழங்கல் அலுவலகம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்திற்குள் புகுந்த ஒருவன் இன்று காலை (உள்ளூர் நேரம்) 10.30 மணிக்கு துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமுற்றுள்ளனர். மேலும் அந்தக் கட்டிடத்தில் இருந்த 41 பேரை பிணைக் கைதிகளாக அவன் பிடித்து வைத்துள்ளான்.

அந்தப் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் எப்.பி.ஐ. இறங்கியுள்ளது. அவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

நடத்தை விதிகளை மீறியதாக அசாருதீனுக்கு அறிவிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கை அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மார்ச் 31ஆம் தேதி மொராதாபத்தில் நடந்த தேர்தல் பேரணியின் போது அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக வாகனங்கள் பேரணியில் சென்றது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ம.ம.க. கூட்டணி முடிவு நாளை அறிவிக்கிறது

மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழு நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய நிலைபாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப் பட்டுவிட்டதாகவும், இதனை நாளை சென்னையில் நடக்க இருக்கும் கட்சியின் செயற்குழுவில் அறிவிக்கும் என்றும் இன்று அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்த அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் ம.ம.க.வின் முடிவு தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என்று கூறினார்.

தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி தர முன் வந்தததால் கூட்டணியில் சிக்கல் நிலவியது. பின்னர் தி.மு.க. இரு தொகுதிகளை ஒதுக்கித் தர முன்வந்துள்ளதாகவும், ஆனால் ம.ம.க. வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை ம.ம.க. ஏற்கவில்லை எனவும், மத்திய சென்னை, வேலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் ம.ம.க. தனித்துப் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்களுக்கு கிலோ 2 ரூபாய் வீதம் மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படும்.
  • தீவிரவாதத்துக்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
  • வருமான வரி கட்ட உச்ச வரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும்.
  • நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
  • வயது முதியோர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
  • விவசாய கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
  • ராமர் பாலத்தை பாதுகாக்க வேறு பாதையில் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.
  • ஏழைகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.
  • வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்படும்.
  • பாதுகாப்பு படையினருக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
  • கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும்.
  • ராமர் கோயில் கட்டும் பணியில் பாஜக முனைப்புடன் செயல்படும்.
  • இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை தரப்படும்.
  • வறுகை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும்.
போன்ற முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார சரிவை சீர்படுத்த ரூ.55 லட்சம் கோடி, G-20 நாடுகள் முடிவு


G-20 நாடுகளின் மாநாடு லண்டனில் நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் மெத்வதேவ், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சீர்செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பொருளாதாரத்தை சரிசெய்ய ரூ.55 லட்சம் கோடி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இவற்றை சர்வதேச நிதி அமைப்பு (IMF) மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

பயங்கரவாத மிரட்டல் எதிரொலி: ப.சிதம்பரம் - அத்வானி சந்திப்பு

எதிர்வரும் 15ஆவது மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிக்ள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை தெரிவித்திருந்தது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ் முகமது, ஹூஜி ஆகிய தீவிரவாத இயக்கங்களின் தகவல் தொடர்புகளை இடை மறித்து கேட்டபோது இந்த சதி
முக்கிய தலைவர்களை கொன்று அதன் மூலம் தேர்தலை சீர் குலைக்க அவர்கள் திட்டம் தீட்டி இருந்தது உளவுத்துறைக்கு தெரியவந்தது.

பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, மத்தியஅமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராகுல், லல்லு பிரசாத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான்,ஜெயலலிதா உள்ளிட்ட 40 அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் குறிவைத்து இருந்தது தெரியவந்தது.

இந்த 40 தலைவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். காவல்துறைக்கும் துணை இராணுவத்துக்கும் பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

இது தொடர்பாக, மேலும் விளக்கமறிய அத்வானி விரும்பியதால், ப.சிதம்பரம் அவரைச் சந்தித்து அதுபற்றி விளக்கினார். அத்வானிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அவர் விளக்கியதுடன் என்னமாதிரி பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

"பயங்கரவாதத்தை ஒழிக்க மதவாதத்தை ஒழிக்கவேண்டும்"- ப.சிதம்பரம்

"பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டுமானால், முதலில் மதவாதத்தை ஒழிக்கவேண்டும்" என்று நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு ஒற்றுமையாக இருந்தால் தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியம் ஆனால் பாரதிய ஜனதா போன்ற மதவாத கட்சிகள் நாட்டைத் துண்டாட நினைக்கின்றன. மதவாதத்தை ஒழிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்க இயலாது. மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சி மட்டும் தான் மத்தியில் ஆட்சியமைக்க தகுதியுடையது. அதனால் மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளிக்க ‌வேண்டும். தேர்தலை அமைதியாக நடத்த போதிய படை பலத்தை தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்‌ளோம்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

சமாஜ்வாடி பொதுச்செயலாளரானார் சஞ்சய்தத்!

நடிகர் சஞ்சய்தத் அண்மையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுருந்தார். ஆனால் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற அவர் தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்தது.


இந்நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தன்னை மிரட்டியதாக சஞ்சய்தத் பரபரப்புப் புகார் தெரிவித்திருந்தார்.

தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சஞ்சய்தத்துக்கு உயர்ந்த பதவியான பொதுச்செயலாளர் பதவியை சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் வழங்கியுள்ளார்.

சினிமா

மலேசியப் பிரதமர் பதவி விலகினார்!


மலேசியப் பிரதமர் பதவி விலகினார்!

மலேசியப் பிரதமர் அப்துல்லா அஹமது பதாவி இன்று திடீரென தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். மலேசிய மன்னரிடம் இன்று அவர் தனது விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
ஆளும் கட்சியில் அவருக்கு செல்வாக்கில் கடும் சரிவு ஏற்பட்டதாலும், முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் அவர் இம்முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து துணை பிரதமர் நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. நஜீப் முன்னாள் பிரதமர் அப்துர் ரஸாக்கின் மகனார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்சில் ஏழு பேருடன் சென்ற விமானத்தைக் காணவில்லை!

மணிலா : இன்று வடக்கு பிலிப்பைன்சில் இருந்து 5 பயணிகள் மற்றும் இரு பணியாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று புறப்பட்ட சில நேரத்தில் காணவில்லை என்று பிலிப்பைன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறினார்கள்.

ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட RP-C764 வகை விமானம் காகயான் மாகாணத்தில் உள்ள டுகேகராவ் விமான நிலையத்திலிருந்து இன்று காலை (உள்ளூர் நேரம்) 8.55 மணிக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து 30 நிமிட பயண தூரத்தில் இசபெலா மாகாணத்தின் மகனகான் விமான நிலையத்தை அடைய வேண்டிய இவ்விமானம் இதுவரை எந்த விமான நிலையத்தையும் சென்றடையவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் இராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுகவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு "வெற்றி நமதே" என்று பெயரிடப் பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய விசயங்கள் வருமாறு:

  • இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
  • இலங்கை போர் நிறுத்தம் ஏற்பட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
  • நெல் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அரசை திமுக வலியுறுத்தும்
  • மாநில நதிகளின் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்குமாறு திமுக கோரிக்கை விடுக்கும்.
  • தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • சேது கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட கோரிக்கை
  • அருந்ததியினருக்கு அனைத்து மாநிலத்திலும் இடஒதுக்கீடு தர கோரிக்கை
  • ஊரக வேலைவாய்ப்பு 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.
  • எஸ்.சி. எஸ்டிக்கு இலவச கல்வி
  • அரவாணிகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்க திமுக வலியுறுத்தும்
  • அகில இந்திய அளவில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம்
  • பொருளாதார சரிவில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி அளிப்பது.
போன்ற திட்டங்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

ஜி 20 மாநாடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : வங்கிகள் தாக்கப் பட்டன, ஒருவர் பலி

லண்டனில் நடைபெற்று வரும் ஜ 20 மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வங்கிகளைத் தாக்கினர். காவல்துறையினரிடம் சன்டையிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4000 பேர் கலந்து கொண்டு, "வங்கி அதிகாரிகளை தூக்கில் இடுங்கள்", "வங்கிகளை அகற்றுங்கள்" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. இங்கிலாந்து வங்கி அருகே நடந்த ஆர்ப்பாட்டம் பின்னர் ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் லண்டன் தலைமையகம் அருகில் வன்முறையாய் மாறியது. அந்த வங்கியை அவர்கள் தாக்கினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் காவலர்களுக்கும் சன்டை ஏற்பட்டது. இதில் பல அதிகாரிகள் காயமுற்றதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராயல் ஸ்காட்லாந்து வங்கி பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வங்கியின் நட்டம் 40 பில்லியன் டாலர்கள் என்ற செய்தி வந்ததிலிருந்து, பொதுமக்களின் கோபம் இந்த வங்கி மீது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கியதில் ரூ.900கோடி ஊழல்?

இந்திய இராணுவத்துக்காக இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் புதியதிட்டம் பற்றிய செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இந்திய ராணுவத்துக்காக ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரூ. 600 கோடி முதல் ரூ. 900 கோடி வரை ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ்நந்தா முன்னாள் இந்திய கடற்படை தளபதி எஸ்.எம்.நந்தாவின் மகன் ஆவார். இவர் 1971-ல் நடந்த போரில் கடற்படை தளபதியாக இருந்தார். ஆயுத முகவர்களாக செயற்பட்டு வருகிற கதிர்சவுத்ரி, சுரேஷ்நந்தா ஆகியோரிடம் ம.பு.து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இன்னொரு முகவர் கதிர், அவரது சகோதரர் அசில் ஆகியோர் இந்தியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுத விநியோகிகளாக உள்ளனர். இவர்கள் உருஷியா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆயுத நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். முகவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கும், அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. விரைவில் இந்த ஊழல் தொடர்பாக முக்கிய தலைவர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

சிதம்பரம்: திருமாவுக்கு எதிராக பா.ம.க நடப்பு எம்.பி

சிதம்பரம்: திருமாவுக்கு எதிராக பா.ம.க நடப்பு எம்.பி


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம்(தனி), விழுப்புரம்(தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழர்பாதுகாப்பு இயக்கம் என்று அவர்களுடன் தேர்தலுக்கு முன்புவரை தோழமை காட்டிவந்த பா.ம.க. எதிரணியான அதிமுகவில் இடம்பெற்றுவிட இவ்விரு கட்சிகளும் சிதம்பரத்தில் மோதிக்கொள்ளுமா என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே பா.ம.க-வுக்கு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் சிதம்பரம்(தனி)யும் இடம்பெற்றது. இதை அறிந்த திருமா பாமகவுடன் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு கடலூர் தொகுதியை மாற்றிக்கேட்டிருந்தார். வேண்டுகோளை மீறி, இறுதியில் அவருக்கு சிதம்பரம்(தனி) தொகுதியே ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் சிதம்பரம்(தனி) தொகுதியிலேயே போட்டியிட வேண்டிய நிலையில், அவரை எதிர்த்து பா.ம.க தரப்பில் நடப்பு எம்.பியான பொன்னுசாமியே நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இதே தொகுதியில் களம் காண்பது இது மூன்றாவது முறையாகும்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் ஜஸ்வந்த்சிங், வீடியோ!

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜஸ்வந்த்சிங் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் காட்சி இதோ:-


பா.ஜ.க. பிரிவினைவாதஅரசியலை விதைக்கிறது : ராகுல் காந்தி

பாரதீய ஜனதா கட்சி பிரிவிணைவாத அரசியலை விதைக்கிறது என்று அக்கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். மும்பை தாக்குதல் சம்பவத்தை பா.ஜ.க. தேர்தல் பிரச்சனையாக ஆக்குவதை எதிர்த்து இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த நாடு முழுவதையும் நாங்கள் (காங்கிரஸ்) ஒரே நாடாகக் கருதுகிறோம். இந்த நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் எங்கள் எதிர்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலை விதைக்கின்றனர்" என்று ராகுல் காந்தி கூறினார்.

"சில கட்சிகள் மத அரசியல் செய்கின்றன. சில கட்சிகள் ஜாதி அரசியல் செய்கின்றன. மேலும் எங்களுக்கும் மற்ற எதிர்கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் நாங்கள் இந்தியாவை பொதுமக்களின் பார்வை வழியாகப் பார்க்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

அவர்கள் இப்போது தீவிரவாதம் குறித்து பேசுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இது குறித்து எதுவும் பேசவில்லை. நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த போது, ஒரு அமைச்சர் காந்தகார் சென்று தீவிரவாதி ஒருவரை விடுவித்து விட்டு வந்தார் என்று ராகுல் கூறினார்.

மன்மோகன் சிங்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் : சமாஜ்வாதி கட்சி

தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங்தான் என்று சமாஜ்வாதி கட்சி கூறி உள்ளது. டெல்லியின் செய்தியாளர்களுடன் பேசிய சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் காங்கிரசுடன் தங்கள் கட்சிக்கு தகராறு எதுவும் இல்லை எனவும், மன்மோகன் சிங்கையே மீண்டும் பிரதமராக்க விரும்புகிறோம் என்றும் கூறினார்.

உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அங்கும் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் சமாஜ்வாதி கட்சி தற்போது கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

வாக்காளர்களுக்கு பா.ஜ.க. தலைவர் பணம் கொடுத்தார்?

வாக்காளர்களுக்கு பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர் பணம் கொடுப்பது போன்ற காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கின் மகன் பார்மர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபின் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதனை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங்குடன் பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் கைலாஷ் மேக்வால் என்பவரும் இதில் இடம் பெற்றுள்ளார். தேர்தல் பேரணி்யில் கலந்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடன் வந்தவரிடம் பணம் கொடுப்பது போன்று காட்சி அமைந்துள்ளது.

இது குறித்து தாசில்தார் அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் நடிகர் கோவிந்தா ஆகியோர் மீதும் ஏற்கனவே இத்தகைய புகார்கள் எழுந்துள்ளன.

படகு கவிழ்ந்து 300 பேர் பலியானதாக சந்தேகம்!

Published on: செவ்வாய், 31 மார்ச், 2009 // , , , , , , ,
லிபியாவின் கடல்பகுதியில் படகு கவிழ்ந்து 300 க்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் மரணமடைந்ததாக சந்தேகம். ஐரோப்பாவில் குடியேற சிறிய படகுகளில் சட்டவிரோதமாக புறப்பட்ட ஆப்ரிக்க குழுக்களின் படகுகள், மோசமான காலநிலையில் தகர்ந்ததாக அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படகுகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்திருப்பர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 23 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் 6 இந்தியர்கள் பலி!

அமெரிக்காவில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் இந்தியர் ஒருவர். பொருளாதார மந்தநிலையினைத் தொடர்ந்து குடும்ப செலவுக்குப் போதிய வருமானமில்லாததால் ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

கேரளாவிலுள்ள வயநாடு அய்யன்கொல்லியிலுள்ள செரியேரியைச் சேர்ந்தவர் அப்பு மாஸ்டர். இவரின் அஸோக். அப்பு மாஸ்டரின் மகளான அபயாவின் கணவர் தேவராஜன். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் சிலிக்கன்வேலி ஸாண்டாக்ளாராவில் பணிபுரிகின்றனர்.

சம்பவத்தினத்தன்று, குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தேவராஜன் குடும்பத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் அசோகன், மனைவி சுஜிதா, மக்களான அலகா, அகில், மேகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். தேவ ராஜனின் மனைவி மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியப்பின் தேவராஜனும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் பல உயிர்களையும் பலிவாங்குவது தொடர்கதையாகி வருகிறது.

சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை!

மக்களவை தேர்தலில் போட்டியிட சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், தன் மீதான தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி சமர்ப்பித்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தேர்தல் சட்டம் தடை விதிக்கிறது. இதனை மனதில் வைத்தே, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க சஞ்சய் தத் மனு அளித்திருந்தார்.

மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "இது தவறான முன்னுதாரணத்திற்கு அடிகோலி விடும்" என கூறியது.

முன்னதாக, சஞ்சய் தத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் தேர்தல் களம் கிரிமினல்களின் கூடாரமாகி விடும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.

தற்போதைய மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர்களில் சுமார் 57 பேர் கிரிமினல் குற்றபின்னணி கொண்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிக அதிகபட்சமாக 27 பேர் பாஜக சார்பாக களமிறங்குபவர்களாவர்.

பஞ்சாபில் சாலை விபத்து, 20 புனித யாத்திரிகர் மரணம்!

பஞ்சாப் மாநிலம், அனந்தபூருக்கு அருகில் புனித யாத்திரிகர்கள் பிரயாணம் செய்திருந்த ட்ரக் மறிந்து 20 யாத்திரிகர்கள் மரணமடைந்தனர். 65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள நைனா தேவி கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடி விட்டூ ஊர் திரும்பிக் கொண்டிருந்த யாத்திரிகளின் ட்ரக் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபிலுள்ள லூதியானாவிற்கு அருகில் மச்சிவாரா கிராமத்தில் உள்ளவர்கள் ஆவர்.

தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ் மக்கள்

தேர்தல், வேட்பாளர்கள், சின்னங்கள் அறியாத தளிஞ்சி மலைவாழ் மக்கள்


உடுமலை, மார்ச் 30: உடுமலை அருகே உள்ள தளிஞ்சி, தளிஞ்சி வயல் பகுதி மழைவாழ் மக்கள், தேர்தல் குறித்த விவரங்களே அறியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் எந்தத் தொகுதியை சேர்ந்தவர்கள், நடைபெற இருக்கும் தேர்தல் மத்திய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா அல்லது மாநில அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா என்ற விவரமே தெரியாமல் உள்ளனர்.

வேட்பாளர்கள், சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் இம்மக்களுக்கு விருப்பம் இல்லை.

"தேர்தல் நாளில் ஓட்டுப்போட யாராவது வந்து அழைத்தால் ஓட்டுப் போடுவோம்; அழைக்காவிட்டால் ஓட்டுப் போடமாட்டோம்.

யார் வெற்றி பெற்றால் என்ன பயன்' என்கின்றனர் இக்கிராம மக்கள்.

தாடியும் பர்தாவும் தாலிபானிசம் - உச்சநீதிமன்றம் அதிரடி!

தாடி வளர்த்துவதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டும் என கோரி மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு கான்வெண்டில் பயிலும் மாணவன் சமர்ப்பித்த வழக்கில், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிச மயமாக்குதலின் பாகம்" என கருத்து கூறிய உச்சநீதி மன்றம், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

மதசார்பற்ற நிலைபாட்டை விசாலமாக்கி இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது எனவும் நீதிமன்றம் கருத்து கூறியது. "நாளை ஒரு பெண் வந்து பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கலாம். நமக்கு அனுமதிக்க முடியுமா?" என நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பினார்.

தான் ஒரு மதசார்பற்றவன் எனவும் இருப்பினும் மத நம்பிக்கைகளை அடிப்படை உரிமைகளிலிருந்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறினார்.

மத்தியபிரதேசத்திலுள்ள நிர்மலா கான்வெண்டில் மேல் நிலை பிரிவில் பயிலும் முஹம்மது ஸாலிம், "முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளி சட்டத்திட்டத்தினைக் கேள்விக்குட்படுத்தி சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாடி வளர்ப்பது தன்னுடைய மத உரிமை என்றும் மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக்கூடாது எனவும் எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கதல் செய்திருந்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30 ஆம் பிரிவு படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்குவதற்கு அனுமதியுள்ளது என நீதிமன்றம் விளக்கமளித்தது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸாலிம் பயில்வதற்கு வேறு பள்ளியினைத் தேர்வு செய்தூ கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்தவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும் போது, தன்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி அதிகாரிகளின் தெளிவான இரட்டை நிலைபாடு என ஸாலிம் வாதித்த போதிலும் நீதிமன்றம் ஸாலிமின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை

ம ம க கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை!

திமுக கூட்டணி அறிவிப்பு தொகுதி பங்கீட்டுச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தவித தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திமுக மமக கூறிவந்தன. இந்நிலையில், ம ம க, 2 மக்களவை+1 மாநிலங்களவை என்று கோரிக்கை வைப்பதாகவும், திமுக 1 மக்களவைத் தொகுதிக்கே ஒத்துக்கொண்டுள்ளதால், கூட்டணி மாறுவது பற்றி ம ம க யோசித்து வருகிறது.

இதற்கிடையே,
மனித நேய மக்கள் கட்சியை தங்கள் கூட்டணியில் நீடிக்கவைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத்தின் சார்பில் அவரது பிரதிநிதிகள் ஜே.எம்.ஆருண் எம்.பி.யும், தொழிலதிபர் பிரசிடென்ட் அபு ஆகியோர் மமக கட்சி நிர்வாகிகளுடன் பேசி

திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். 2 தொகுதியும், ஒரு மேல்- சபை சீட்டும் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடத்தில் இது பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத்தும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்தும் மனித நேய மக்கள் கட்சியை தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மனித நேய மக்கள் கட்சி தனது நிலைகுறித்து இன்று இரவு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நால்வரைக் கொலை செய்த வழக்கில் 46 பேருக்கு வாழ் நாள் சிறை!

மேற்கு வங்கத்தில் நான்கு பேரை கொலை செய்த வழக்கில் 46 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


1987ஆம் ஆண்டு பீர்பூம் மாவட்டத்தில் லெனினிய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மூவர் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த 43 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீபக் சாஹா ராய் இந்த தீர்ப்பை அளித்தார்.

1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீர்பூம் மாவட்டத்தில் போல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முலுக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.

மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள் -

மதுவுக்கு 'நோ' சொல்லும் கார்கள்.


கோவையைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் சேர்ந்து 'ஆல்கஹால்' வாடைஇருப்பின் வாகனமே செயலிழந்துபோகும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் .


மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது வாகன ஓட்டுனருக்கு மட்டுமின்றி, எதிரே வரும் வாகனத்தில் அமர்ந்திருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. கோவை நகரில் விபத்தை தடுக்க, காவல்துறை வகுக்கும் வியூகங்கள் எல்லாம் தவிடு பொடியாகிப் போகின்றன. இச்சூழலில், கோவை வழியாம்பாளையத்திலுள்ள எஸ். என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி மாணவர் கீர்த்திவாசன், கோவை அவினாசி ரோட்டிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், ஹரி பிரசாத் ஆகியோர், மதுபானம் அருந்தி, வாகனம் ஓட்டுவதைத் தடுக்க, புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் அனைவரும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பிகரோ 880 ' என்ற நுண்ணுணர்வி (சென்ஸார்), மது நெடியை உணரக்கூடியது. இந்த சென்சாரைக் கொண்டு புதிய சர்க்யூட்டை மூன்று மாணவர்களும் உருவாக்கியுள்ளனர். இந்த சர்க்யூட் காரின் ஸ்டீயரிங்கில் பொருத்தப் படும். சென்ஸார் மட்டும் வெளியில் தெரியும். சாவியைப் போட்டு திருகும் போது இரு இக்னேஷியன்கள் இணைவதால், கார் ஸ்டார்ட் ஆகிறது. இந்த இக்னேஷியனுக்கு நடுவில், "ரிலே' பொருத்தப்படும்.


இது, சென்ஸாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நபர், மதுபானம் அருந்தி கார் சாவியை திருகி ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் போது, சென்ஸார், ஆல்ஹகால் நெடியை உணர்ந்து, ரிலேவை செயல்பட வைக்கும். இதையடுத்து கார் சாவியை எத்தனை முறை திருகினாலும், இக்னேஷியன்கள் இணையவே இணையாது. முற்றிலும் ஆல்ஹகால் நெடி இல்லாமலிருந்தால் மட்டுமே கார் ஸ்டார்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாணவர்களும் இரு ஆய்வுகளையும் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல நகரங்களில் நள்ளிரவு நடக்கும் விபத்துகளுக்கு மது அருந்தி வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்.

மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து, புதிய கார் தயாரிக்கும் போது பயன்படுத்தினால், நிச்சயம் மது அருந்தி கார் ஓட்டுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையக்கூடும்.

மாணவர் கீர்த்திவாசனின் நண்பர், சமீபத்தில் தனது காரில் பாலக்காடு நோக்கி சென்ற போது கார் விபத்துக்குள்ளானதில் பலியானார். எதிரே வந்த வாகனத்தின் விளக்கு வெளிச்சத்தில் தடுமாறியதால், கார் கட்டுப் பாடு இழந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து எதிரே வரும் வாகனத்தின் வெளிச்சத்துக்கு ஏற்ப, காரை ஓட்டும் வகையில் ஒளி விளக்கு செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் எனக்கருதிய மூன்று மாணவர்களும், சென்சாரை பயன்படுத்தி "ஆட்டோ டிப்பர்' என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.


இவர்கள் கண்டுபிடித்த சர்க்யூட் போர்டை, ஒரு காரின் முகப்பு விளக்கு அருகே பொருத்திவிட் டால் போதும். எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கில் இருந்து வெளிவரும் ஒளி அதிகமாக உமிழப்பட்டு (ஹை பீம்), காரின் முகப்பு விளக்கில் படும் போது தானாகவே காரின் விளக் கில் இருந்து ஒளி உமிழ்வது குறைவாக்கப்படும் (லோ பீம்).

எதிரே வரும் வாகனம் கடந்து சென்ற பின், தானாகவே ஹை பீம் முறைக்கு காரின் விளக்கு மாறிக் கொள்ளும். இப்புதிய தொழில்நுட்ப முறையை பல தொழில்நுட்ப கண்காட்சியில் இடம்பெறச் செய்து, மூன்று மாணவர்களும் பரிசுகள் பல பெற்றுள்ளனர்.

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிடவில்லை" - கமல்

"மர்மயோகி, மருதநாயகம் படங்களை கைவிட்டுவிடவில்லை" என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் வந்த அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்

இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.

நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.

எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.

எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.

பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.


இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறினார்.

பயணிகள் மீதான சந்தேகத்தால் விமானம் தரையிறக்கம்.

இன்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கல்கத்தா நோக்கி ஏர் இந்தியா விமானம் 104 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த 3 பயணிகளின் நடவடிக்கையில் விமான பணிப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால்
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மீண்டும் விமானத்தைத் தரை இறக்க விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வானில் பறந்த விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய அந்த 3 நபர்களிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதும், இம்பால் புறப்பட்டு சென்றதும் தெரிய வந்தது. எனவே, அவர்களை தொடர்ந்து பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது

லாஹூர் போலீஸ் மையம் மீதான தாக்குதலில் தாலிபான்

லாஹூரில் காவலர் பயிற்சி மையம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் தாலிபான் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதல் 8 மணி நேரம் நீடித்திருந்தது. 800 காவலர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இதில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 27 காவலரும், 8 தீவிரவாதிகளும் மொத்தம் 35 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

6 தீவிரவாதிகளும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். 6 தீவிரவாதிகளில் 2 பேர் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பாக்திகா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை மூலம் லாகூர் காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்த தெற்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு மலைவாழ் பகுதியில் சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் அவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். எனவே இந்த தாக்குதல் பின்னணியில் தாலிபான் இயக்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் லாகூரில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று தஹ்ரீக் -யே-தாலிபான் இயக்கத் தலைவர் பைத்துல்லா மக்சூத் பொறுப்பேற்றதுடன் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தாலிபான் இயக்கத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து தாலிபான்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

தீவிரவாதி கசாப்பின் வக்கீல் அஞ்சலி விலகல்!

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாட மராட்டிய மாநில இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து பெறப்பட்ட 17 வக்கீல்களின் பட்டியலில் இருந்து புனேயைச் சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் அஞ்சலி வாக்மாரே என்பவரையும், அவருக்கு உதவியாக ஜுனியர் வக்கீல் ஒருவரையும் நியமனம் செய்து, செசன்சு நீதிபதி தகில்யானி நேற்று உத்தரவிட்டிருந்தார்.

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் அஞ்சலி வாக்மாரே வீடு முன்பு சிவசேனா தொண்டர்கள் கோஷம் எழுப்பி, அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கசாப்பிற்க்காக வாதிடுவதிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் அஞ்சலி வாக்மாரே தெரிவித்துள்ளார்.

மேற்கு மும்பை தொகுதியில் நடிகை நக்மா போட்டி?

காங்கிரஸ் எம்.பி யும் நடிகருமான கோவிந்தா வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தன் விருப்பமின்மையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகை நக்மாவை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

நடிகர் கோவிந்தா, கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பிஜேபி யின் ராம் நாயக்கை 48,271 வாக்கு வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் தேர்தலில் உட்கட்சி பிரச்னை காரணமாக தான் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் கோவிந்தா கடந்த வாரம் கூறியிருந்தார்.


இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே ஆண்டனி கட்சி மேலிடத்திடம் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அ.தி.மு.கவில் இருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.க. வில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தே.மு.தி.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார்.

ஊழல் குற்றம் சாட்டப்பட்வரை பா.ஜ.க.வில் சேர்ப்பதா?

உத்திரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த நீரா யாதவை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்துக் கொண்டதற்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களிடையே எதிர்ப்பு வலுப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவிலேயே ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவியை இழந்த ஒரே தலைமைச் செயலர் நீரா யாதவ் ஆவார். இத்தகைய ஊழல் மிகுந்த முன்னாள் அதிகாரியை ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களே வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜ்நாத் சிங் போட்டியிட இருக்கும் காஜியாபாத் தொகுதியில் தியாகி இனத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அந்த இனத்தைச் சார்ந்த இவரை கட்சியில் இணைத்துள்ளதாக மற்றொரு மாநில முன்னாள் தலைவர் கூறி இருக்கிறார்.

கசாபுக்கு அரசு வழக்குரைஞர் - ஏப்ரல் 6 முதல் விசாரணை துவக்கம்

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது கைது செய்யப் பட்ட பாகிஸ்தானைச் சார்ந்த அஜ்மல் அமீர் கசாபுக்கு நீதிமன்றம் அரசு வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது.

மகராஷ்டிரா சட்ட உதவிக் குழுவில் உள்ள வழக்குரைஞர் அஞ்சலி வக்மரேவை இந்த வழக்கின் போது கசாபின் சார்பில் வாதிட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகில்யானி நியமனம் செய்து இன்று அறிவித்தார்.

மேலும் லஷ்கரே தொய்பாவைச் சார்ந்த பஹீம் அன்சாரி மற்றும் சகாபுதீன் முகமது ஆகியோர் தங்களுடைய வழக்குரைஞர் குறித்து உடன் முடிவெடுக்குமாறும் நீதிபதி வலியுறுத்தினார்.

வருண் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்!

சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய வருண் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்ச முதல்வர் மாயாவதி முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தோம்.

அதன்படி நேற்றிரவு வருண் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

முன்னதாக போடப்பட்ட 3 வழக்குகளில் பிணை கோரியிருந்த அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வருண் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, பாரதிய ஜனதா தொண்டர்கள் காவல்துறையினருடன் மோதியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 65 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிகழ்வே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரை கைது செய்ய முதல்வர் மாயாவதியைத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது

மனித நேய மக்கள் கட்சி அதிமுக பக்கம்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தும், இதுவரை தமக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தையே இழுத்துக்கொண்டிருப்பதால் மனிதநேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்குத் தாவுவது பற்றி யோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுகவில் கோரியுள்ள படியே 2 மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவைத் தொகுதி என்ற கோரிக்கைக்கு இணங்கும் நிலையில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க மனிதநேய மக்கள் கட்சி முயற்சி செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ம ம க தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

அதிமுகவும் இக்கோரிக்கைக்கு இணங்கும் எனில், அக்கூட்டணி பலம் பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆயினும், திமுக கூட்டணியின் முஸ்லிம்லீக் போட்டியிடும் வேலூரில் முஸ்லிம்லீக்கை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட நேரலாம்.

நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் சமனில் முடிந்தது!

நேப்பியரில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 476 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 152 ரன்கள் முன்னிலை வகித்தது. நியூசிலாந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆடாமலேயே ஆட்டம் முடித்துக் கொள்ளப் பட்டது.

இன்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் லஷ்மன் ஆட்டமிழக்காமல் 124 ரன்களுடனும் யுவராஜ் சிங் 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தானில் காவல் பயிற்சி மையம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!

இன்று காலை பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள காவல் பயிற்சி மையத்தின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில்ல 9 பேர் பலியானார்கள். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

850 பயிற்சி பெற்று வரும் இப்பள்ளியில் தாக்குதல் நடந்த போது சுமார் 400 பேர் இந்த மையத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 குண்டுகள் வெடித்ததாகவும், துப்பாக்கிச் சூடும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினரைப் போல் உடையணிந்து வந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய தீவிரவாதத் தாக்குதல் இந்நேரம் வரை தொடர்ந்து வருகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் கொல்கத்தா-லண்டன் விமான சேவை நிறுத்தம்!

மார்ச் 30 ஆம் தேதி முதல் கொல்கத்தா-லண்டன் விமான சேவையை முற்றிலும் நிறுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

1932 ஆம் ஆண்டு முதல் தனது சேவையைத் துவக்கிய இந்நிறுவனம், இடையில் 1985-ல் தற்காலிகமாக நிறுத்தி பின்னர் 1993 முதல் சேவையை மறுபடியும் துவங்கியது.


வாரம் மூன்று முறை கொல்கத்தா-லண்டன் நேரடி விமான சேவை வழங்கி வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், லாபமின்மைக் காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.


பிரிட்டிஷ் ஏர்வேஸ் தற்போது தில்லி,மும்பை,சென்னை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து தனது நேரடி சேவையை வழங்கி வருகிறது.

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்

இலங்கையில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

சிட்னியில் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கன்பெர்ரா ஆகிய பகுதிகளிலிருந்து தமிழர்கள் 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சிட்னியின் மார்ட்டின் ப்ளேஸ் பகுதியில் புறப்பட்ட பேரணி டவுன் ஹால் வரை சென்றது.

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

மேம்படுத்தப் பட்ட பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று காலை 11.15 மணி அளவில் ஏவப்பட்ட ஏவுகணை 150 விநாடிகளில் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவ உயர் அதிகாரிகளான லெஃப்டினன்ட் ஷேகான், லெஃப்டினன்ட் ராவ், மேஜர் திவாரி, பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை மற்றும் இராணுவ தளவாட ஆராய்ச்சிக் கழக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் இச்சோதனையின் போது அங்கிருந்தனர்.

இந்த சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஏற்கனவே இது இராணுவத்தின் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஒரிசாவில் குண்டு வெடித்து 4 பேர் பலி!

ஒரிசாவில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து 4 பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் காயமுற்றனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பெர்ஹாம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புருஷோத்தம்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் இன்று காலை 2 மணி அளவில் இந்த குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.

திமுகவில் ஜெகத்ரட்சகன்!

ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

திமுக கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டதாகவும், அவரை கட்சியில் சேருமாறு திமுக தலைமை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரும், ஜனநாயக முன்னேற்றகழக நிர்வாகிகளும் இன்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.


திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், "இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் ஜனநாயக முன்னேற்ற கழக தலைமை நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளோம். ஜனநாயக முன்னேற்ற கழகம், வீரவன்னியர் பேரவை போன்றவை சமுதாய அமைப்புகளாக தொடர்ந்து செயல்படும்", என்று கூறினார்

வருண்காந்தி மீது தேசியபாதுகாப்புச்சட்டம் - மாயாவதி ஆலோசனை

தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கடும் வெறுப்பை உமிழ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிலிஃபிட் தொகுதி வேட்பாளர் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாயாவதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வருண்காந்தி தானே முன்வந்து பிலிஃபிட் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.ஆனால், காவல்துறை முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தது

வருண்காந்தி பிணையில் விடுதலையாக மனுதாக்கலும் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

வருண்காந்தி நேற்று நீதிமன்றம் வந்தபோது ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். . வருண்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் காவலர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் காவல்துறை தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.

வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி கடும்கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக அரசு சார்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாயாவதி கூறியுள்ளார்

கடலூரில் களம் காண்கிறார் திருமா?

மக்களவைத் தேர்தலில் தி மு க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிந்ததே! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால், எதிரணியான அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் நட்புக் கட்சியான பாமக வுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விபரம் அறிந்து, போட்டியைத் தவிர்க்க, திருமாவளவன் இப்போது கடலூர் தொகுதியைக் கேட்பதாகத் தெரிகிறது.

அதுபோல, மற்றொரு தொகுதியாக விழுப்புரத்தையும் கேட்டுள்ளாராம்.

மகளை வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக தந்தை கைது!

கொலாம்பியாவில் தன்னுடைய மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக எழுந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கொலாம்பியாவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ள இக்குற்றச் சாட்டிற்கு ஆளான 58 வயது மனிதர் தான் நீதிமன்றத்திற்கு வரும்போது காவல் துறை மற்று இராணுவ பாதுகாப்பு வேண்டும் என்று கோரியுள்ளார்.

தற்போது 30 வயதாகும் அந்தப் பெண் தான் 10 வயதை அடையும் முன்பிருந்தே தன்னுடைய தந்தை தன்னை வன்புணர்ந்து வந்ததாகக் குற்றம் சுமத்தினார்.

தாங்கள் ஒருவரையொருவர் விரும்புவதால் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண் தன்னுடைய சொந்த மகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப் பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.

தான் அவரை தந்தையைப் போன்றே மதிப்பதாகவும், அவர் தன்னுடைய தந்தைதான் எனவும் அந்தப் பெண் கூறினார். தன்னை தன்னுடைய தந்தை வன்புணர்ந்ததன் மூலம் 11 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் மூன்று குழந்தைகள் இறந்ததாகவும் அவர் கூறினார்.

மஹாதிர் மீண்டும் UMNO கட்சியில் சேருகிறார்

Published on: // ,
மலேசியாவின் முன்னாள் பிரதமர், டாக்டர் மஹாதீர் முஹம்மது மீண்டும் UMNO கட்சியில் சேருவதாக அறிவித்துள்ளார்.
நேற்று நடந்து முடிந்த அக்கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், விரைவில் கட்சியில் இனைவதாக உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலிக்கிடையே அறிவித்தார். கடந்த ஆண்டு, இப்போதைய பிரதமர், அப்துல்லாவின் செயல்கள் மற்றும் அரசின் கொள்கைகளால் அதிருப்தி அடைந்து இருந்த டாக்டர் மஹாதீர், UMNO கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அறிவித்து இருந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து, அரசினை வெளிப்படையாக விமரிசித்து அப்துல்லா அரசிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது குறிபிடத்தக்கது.

உ.பி., ஆசிரமத்தில் இளம்பெண் மர்மச்சாவு!


முன்னாள் எம்.பி யும் உ.பி மாநில அளவிலான ஒரு கட்சியின் தலைவருமான சட்சிதானந்த் ஹரி சாக்ஷி மஹராஜின் ஆசிரமத்தில் உள்ளூர் பள்ளி ஆசிரியை லட்சுமி (24) மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.


இறந்த அப்பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் காணப்படுகின்றன என்றும், அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஓடிப்போன ஆசிரமத்தின் பாதுகாவலரைத் தேடி வருவதாகவும் ஷியாம் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.


பாஜக விலிருந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய சச்சிதானந்த், சமாஜ்வாதி கட்சிக்குத் தாவி, பின்னர் கல்யான்சிங் துவக்கிய ராஷ்டிரிய கிராந்தி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைவராக உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக சட்சிதானந்த் கூறியிருந்தார். இவ்வேளையில் இந்த கொலை நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியுலிலாந்துக்கெதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி - தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

நியுசிலாந்தின் நேப்பியர் நகரில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சற்றுமுன் வரை, தனது இரண்டாவது இன்னனிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து இருந்தது. அதிரடி வீரர் சேவாக் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, காம்பீரும், டெண்டுல்கரும் நிதானமாக ஆடி வருகின்றனர். காம்பீர் 84 ரன்களும், டெண்டுல்கர் 37 ரன்களும் எடுத்து தொடர்நது விளையாடி வருகின்றனர். முன்னதாக டிராவிட் பொறுமையாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். காம்பீர் விரைவாக 2000 ரன்கள் எடுத்த மூன்றாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

தேர்தல் கமிஷன் விளம்பர மாடலாகும் கிரிக்கெட் வீரர் தோனி


'இளைஞர்கள் தங்களின் ஓட்டுரிமையை பதிவு செய்ய வேண்டும். ஓட்டளிப்பதை தவிர்க்கக் கூடாது' என, பிரசாரம் செய்வதற்காக பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை, தங்களின் விளம்பர மாடலாகப் பயன்படுத்த தேர்தல் கமிஷன் பரிசீலித்து வந்தது.


ஓட்டளிப்பதை தங்களின் உரிமை மற்றும் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இதை உணர வேண்டும்.


அவர்கள் தங்களின் ஓட்டுரிமையை பதிவு செய்யும்படி தூண்டுவதற்காக, அரசியல் பின்னணி இல்லாத பிரபல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை கொண்டு விளம்பரப் படம் தயாரித்து, அது பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.


இதற்கான விளம்பர மாடலாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனி உட்பட சிலரை தேர்வு செய்வது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலித்து வந்தது.


இன்றைய இளைஞர்களின் நட்சத்திர நாயகனாக விளங்கும் தோனியும் சம்மதம் தெரிவித்ததால், இவ்விளம்பரம் மக்கள் மத்தியில் பிரபலம் அடையும் என்று தேர்தல் கமிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


காங்கிரசுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரச்சாரம்

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

வரும் ஞாயிற்கு கிழமை முதல் அவர் உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அனு டான்டன் கூறினார்.

இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் பல்வேறு விழாக்களிலும் அவர் பங்கு கொள்வார் என்று கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார்கள் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத் தக்கது.

ஒபாமாவை சந்திக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக அளவில், வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தலைவர்களின் (G-20) மாநாடு லண்டன் நகரில் தொடங்குகிறது.

பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங் G-20 மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனையும் அவர் சந்திக்கிறார்.

இரு தலைவர்களையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 7 தொகுதிகள்!

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்தார். அவை:-

1. ஸ்ரீபெரும்புதூர்

2. அரக்கோணம்

3. திருவண்ணாமலை

4. கள்ளக்குறிச்சி

5. சிதம்பரம் (தனி)

6. தர்மபுரி

7. புதுச்சேரி.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த துபாய் மறுப்பு?

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பத்து நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் இந்தப் போட்டிகைள நடத்த தயாராக இல்லை என துபாய் விளையாட்டு நகர் அலுவல் ரீதியாக ஆசிய ஹாக்கி அமைப்புக்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

2010 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றாகக் கருதப்படும் இந்தப் போட்டிகளை மலேசியா நடத்த வேண்டும் என ஆசிய ஹாக்கி அமைப்பு கோரியுள்ளது.

அல்காயிதா அமைப்பை துடைத்தொழிப்போம் - ஒபாமா சூளுரை

அல்காயிதா அமைப்பு பாகிஸ்தானில் பாதுகாப்பான இடங்களில் இருந்துக் கொண்டு இன்னும் செயல்பட்டு வருவதாகவும், மேலும் புதிய தாக்குதல்களை நடத்த அது திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். அல்காயிதா அமைப்பினர் செயல்படும் பாகிஸ்தானின் எல்லைப்புறப் பகுதிகள், 'அமெரிக்கர்களுக்கு உலகிலேயே மிக ஆபத்தான பிரதேசங்கள்' என்றும் அவர் வர்ணித்தார்.

செப்-11 தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி அமைத்திருந்த தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அங்கு போர் முடிவுக்கு வரவில்லை என்பதையும், கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.

அல்காயிதா பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதைப் பற்றி பல உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த பின்னரும் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், அமெரிக்கா நேரடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் ஒபாமா எச்சரித்தார்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சியளிப்பதற்காக மேலும் 21,000 பேர் கொண்ட படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். இதோடு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 65,000 ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

4 வயது மாணவியைக் கொன்றதாக திருச்சியில் நர்சரி ஆசிரியை கைது!

திருச்சியில் நான்கு வயது மழலையர் பள்ளி மாணவியைக் கொன்றதாக, மழலையர் பள்ளி ஆசிரியையும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ரோகிணி என்ற இச்சிறுமி தவறு செய்ததாகவும், அவரைக் கண்டிக்க ஆசிரியை அடித்தபோது அது அச்சிறுமியின் நெற்றியில் பட்டு, சிறுமி இறந்ததாகவும் கூறப்படுகிறது. புதன்கிழைமை நடந்த இச்சம்பவத்தை அடுத்து சிறுமியைக் காணாத பெற்றோர் காவல் துறையில் புகார் அளிக்க, வியாழக் கிழமையன்று சிறுமியின் உடலை அருகிலிருந்த கிணற்றிலிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் சிறுமி கொலை செய்யப் பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியை ஜெயாராணி (25), பள்ளி உதவியாளர்கள் ஆரோக்கியராஜ் (27), சகாயராஜ் (26) ஆகியோர் வெள்ளிக் கிழமையன்று கைது செய்யப் பட்டனர்.

நாளை பிரமோஸ் ஏவுகணை சோதனை

இந்தியா மற்றும் ரஷியா இணைந்து தயாரித்த பிரமோஸ் ஏவுகணை சோதனை நாளை (ஞாயிற்றுக் கிழமை) ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் சோதித்துப் பார்க்கப்படுகிறது. அங்கிருந்து அஜாசர் என்ற இடத்தில் நிறுவப்படும் இலக்கை குறிவைத்து தாக்கும். சூப்பர்சானிக் குரூஸ் வகையைச் சார்ந்த இந்த ஏவுகணை தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்லது.

இதற்கு முன் பிரமோஸ் ஏவுகனை கடந்த ஜனவரி 20 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஒப்பந்தம் 2 நாட்களில் - ம.ம.க.

தொகுதி ஒதுக்கீடு குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். ம.ம.க தலைவர்கள் நேற்று தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முதல்வரைச் சந்தித்தோம். ஒரு தொகுதி கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முதல்வரிடம் கூறினோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக அவர் பதிலளித்தார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார்.

ஜவாஹிருல்லாவுடன், ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோரும் முதல்வர் கருணாநிதியை சந்திக்க உடன் சென்றிருந்தனர்.

இஸ்ரேலுடன் இந்தியா 1.4 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்

Published on: வெள்ளி, 27 மார்ச், 2009 // , , , , , , ,
இஸ்ரேலிடமிருந்து 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமான பாதுகாப்பு சாதனங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட்டது. வணிக நாளிதழான குளோப்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை முறையான தகவலைத் தரவில்லை.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் மீது தொடுக்கப்படும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணைகளை இஸ்ரேல் தயாரித்தளிக்கும். இத்தகைய ஏவுகணைகளை இந்தியா ஏற்கனவே சொந்தமாகவே தயாரித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (DRDO) அண்மையில் உயர்தர விமான ஏவுகணையை (AAD) சோதித்து வெற்றி கண்டது. இஸ்ரேலின் இராணுவ தளவாட விற்பனையில் இந்தியா தற்போது முதலிடம் வகிக்கிறது.

அப்துல் கலாமுக்கு ஹோவர் விருது

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு 2008ஆம் ஆண்டுக்காக ஹோவர் விருது வழங்கப்படுகிறது. புகழ் பெற்ற இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் இவர் ஆவார்.

அமெரிக்க எஞ்சினியர்கள் அமைப்பு ஆண்டுதோறும், தன்னலமற்ற சேவை செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருதை வழங்கி வருகிறது.

கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது, மருத்துவர்களுக்கும் நுட்பவியலாளர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தியது, உயர்தர மருத்துவ வசதிகளை தொலைதூர மருத்துவத்தின் மூலம் கிராமங்களையும் எட்டச் செய்தது என்பன போன்ற சேவைகளைச் செய்ததற்காக அவரை இந்த அமைப்புப் பாராட்டியது.

குஜராத் அமைச்சர் பதவி விலகல் - கைது செய்யப் படக் கூடும்

குஜராத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த அமைச்சர் மாயா பென் கோட்னானி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியதாகவும் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இவர் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு அழைத்தது. இரண்டு முறை அனுப்பப் பட்ட அறிவிக்கைக்கு எவ்வித பதிலும் அளிக்காததைத் தொடர்ந்து, இவர் தலைமறைவாகிவிட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இவர் எந்நேரமும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.

தனக்கு முன்பிணை வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப் பட்டதை அடுத்து, இன்று அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். விரைவில் இவர் கைது செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தேமுதிகவுக்கு முரசு சின்னம்

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அக்கட்சி போட்டியிடாத இடங்களில் இச்சின்னத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தே.மு.தி.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கம்பம் ராமகிருஷ்ணன் இன்று திமுகவில் இணைகிறார்

மதிமுகவில் இருந்து விலகிய கம்பம் இராமகிருஷ்ணன் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார்.

மதிமுகவிலிருந்து அண்மையில் விலகிய கண்ணப்பனைத் தொடர்ந்து, இரமாகிருஷ்ணனும் கட்சியிலிருந்து விலகினார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இவர் ராஜிநாமா செய்தார். இன்று காலை அவர் தென்மண்டல திமுக அமைப்பாளர் மு.க. அழகரியைச் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.

அதிமுக வுடன் கூட்டணி அமைக்க பாமக பொதுக்குழுவில் ஆதரவு!

வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதனை முடிவு செய்வதற்காக பா.ம.க பொதுக்குழு கூடியது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது, அதில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்க 2453 பேரும் தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க 117 பேரும் வாக்களித்தனர். 10 பேர் நடுனிலை வகித்தனர். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு.

இப்பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவைத்தொடர்ந்து கூட்டணியை இறுதி செய்வதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பா.ம.க தலைவர்கள் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

உ.பி முராதாபாத்தில் போட்டியுடும் அசாருதீன்!

வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னால் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், உத்திரபிரதேசம் முராதாபாத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

கட்சியின் தலைவி சோனியா காந்தி மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் குறிப்பிடும் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அசார் தெரிவித்தார்.


தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தே.மு.தி.க., சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 9 பேர் கொண்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். அவை:

1.திருநெல்வேலி- மைக்கேல் ராயப்பன்

2. விருதுநகர்-மாஃபா பாண்டியராஜன்

3. கன்னியாகுமரி-ஆஸ்டின்

4. மதுரை-எம்.ஆர்.முத்துலட்சுமி

5. திண்டுக்கல்-முத்துவேல்ராஜ்

6. தேனி-எம்.சி.சந்தானம்

7. திருச்சி-விஜயகுமார்

8. சேலம்-மோகன்ராஜ்

9. நாமக்கல்-மகேஸ்வரன்

தன் மகளையே வன்புணர்ந்ததாக பா.ஜ.க. தலைவர் கைது!

பஞ்சாப் மாநிலம் அஜ்னலா நகர பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அஷோக் தனேஜா தன்னுடைய மகளை கடந்த 7 ஆண்டுகளாக வன்புணர்ந்து வந்தார் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் புதன் கிழமையன்று கைது செய்யப் பட்டார்.

24 வயதுடைய அவரது மகள் அஜ்னலா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். குற்றம் சுமத்திய அந்தப் பெண் தன்னுடைய தாயாருடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கைப் பதிவு செய்த காவல் துறையினர் தனேஜாவை கைது செய்தனர். அவர் தனக்குக் கடுமையாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!