Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வருணுக்கு எதிரான பேச்சு : லாலு விளக்கம்

Published on: செவ்வாய், 7 ஏப்ரல், 2009 // , , , , , , ,
வருணுக்கு எதிராக லாலு பேசியதாக வெளியான தகவலை அடுத்து தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு லாலு விளக்கம் அளித்துள்ளார்.

தான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்பதைக் கூறவே அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக லாலு விளக்கம் அளித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கர்வா எனும் இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் குரன் ராம் என்பவரை ஆதரித்துப் பேசிய போது இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

அத்வானி ஒருபோதும் பிரதமராக முடியாது என்றும் இந்துத்துவா சக்திகள் பதவிக்கு வருவதைத் தடுக்கவே முலாயம் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் தாம் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று பிகார் மாநிலம் கிஷண்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
பிலிபிட் மக்களவைத் தொகுதி பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்கள் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று பேசியிருக்கிறார் பாஜகவின் சின்னப் பையன் வருண் காந்தி.

பாஜக மூத்த தலைவர்கள் தரும் ஊக்கம் தான் இதற்குக் காரணம். நான் மட்டும் நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருவது வரட்டும் என்று வருண் காந்தியை அப்படியே ரோடு ரோலரை ஏற்றிக் கொன்றிருப்பேன் என்று பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.

சீக்கியர்களுக்கு எதிராக வருண் பேசியதாக பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் பிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண் சீக்கியர்களுக்கு எதிராகப் பேசியதாக பஞ்சாப் அரசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சியினரும், சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஆளும் அகாலி தள கட்சி இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தில் பிலிபிட் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சீக்கியர்களுக்கு எதிராகப் பேசிய வருணின் பேச்சுக்கள் அடங்கிய சிடிகளை பஞ்சாப் மாநிலம் முழுவதும் விநியோகிக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அகாலி தளம் கட்சிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

வருண் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர். அகாலி தளம் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது பிரகாஷ் சிங் பாதல் வருணுடன் கூட்டணி அமைத்துள்ளது போன்றதே. சீக்கியர் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வருணின் கீழ்த்தரமான விமர்சனங்களை பாதல் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை அவர் விளக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளவில்லை எனில், வருணின் இந்தப் பேச்சு குறித்து அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைக் கூற வேண்டும் என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

வருணின் இந்தப் பேச்சு குறித்து விவாதிக்க ஷிரோமனி குருத்வாரா பர்பந்தக் குழு என்ற முக்கிய சீக்கிய அமைப்பு வியாழக் கிழமையன்று கூடுகிறது. தள் கல்சா போன்ற சீக்கி அமைப்புகள் வருணின் சீக்கிய எதிர்ப்பு குறித்து அகாலி தளம் மெளனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

வருண் குற்றவாளி : தேர்தல் ஆணையம்

Published on: திங்கள், 23 மார்ச், 2009 // , , , , , , , ,
முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வருண் குற்றவாளி என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக் கிழமை இரவு அறிவித்தது. பாரதீய ஜனதா கட்சி வருணை தேர்தலில் நிறுத்தக் கூடாது என்றும் அது உத்தரவிட்டுள்ளது.

29 வயதான வருண் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து அது தொடர்பாக நேற்று 10 பக்க உத்தரவை வெளியிட்டது. வருணின் பேச்சு மிகவும் இழிவானது என்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக சன்டையை மூட்டிவிடும் ஆபத்தானது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத உணர்வைப் புண்படுத்தியவர் பொதுத்தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப் படாதவரை அவரை தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர் என அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டம் இடம் அளிக்கவில்லை எனவும், பாரதீய ஜனதா கட்சி வரும் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியி இவருக்கு இடம் அளிக்கக் கூடாது என தன்னுடைய எதிர்பார்ப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது

மன்னிப்புக் கேட்கப் போவதில்லை - வருண்!

Published on: புதன், 18 மார்ச், 2009 // , , , , , , ,
முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்களும் வருணின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று வருண் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தான் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறிய அவர், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் தாம் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சமூக அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக இவர் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் செவ்வாய் கிழமை உத்தரவிட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியிடம் இவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு அக்கட்சிக்கும் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

நான் என்னுடைய நம்பிக்கையில் பெருமிதம் அடைகிறேன். இதற்காக எவரிடமும் மன்னிப்புக் கோரப் போவதில்லை. நான் காந்தி, இந்து, இந்தியன். அரசியல் காழ்ப்புணர்வில் நான் பலியாக்கப் பட்டுள்ளேன். நான் பேசியதாக ஒலிபரப்பானவை என் பேச்சுக்கள் அல்ல. அது என் குரலும் அல்ல. சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் நான் எதுவும் பேசவில்லை என்றும் வருண் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மத உணர்வுகளைப் புண்படுத்துவது கட்சியின் கலாச்சாரம் இல்லை - பா.ஜ.க.

Published on: செவ்வாய், 17 மார்ச், 2009 // , , , , , , , ,
மத உணர்வுகளைப் புண்படுத்துவது பாரதீய ஜனதா கட்சியின் கலாச்சாரம் இல்லை என்றும், தங்களது கட்சியின் வேட்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் பேசிய பேச்சின் விளைவால் எழுந்துள்ள விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் வருண், அங்கு நடந்த கூட்டமொன்றில் பேசிய போது, (தமது கையை உயர்த்தி) 'இது "கை" (காங்கிரசின் சின்னம்) இல்லை. தாமரையின் (பா.ஜ.க. சின்னம்) சக்தி. இது முஸ்லிம்களின் தலையை வெட்டும். ஜெய் ஸ்ரீராம்' என்று குறிப்பிட்டார்.

மற்றொரு கூட்டத்தில் பேசிய வருண், "எவரேனும் இந்துக்களுக்கு எதிராக கையை நீட்டினால் அல்லது இந்துக்கள் பலவீனமானவர்கள், தலைமை இல்லாதவர்கள் என்று எவரேனும் எண்ணினால், எவரேனும் இந்துக்களுக்கு எதிராக கையை உயர்த்தினால், பகவத் கீதை மீது ஆணையாக அந்த கையை நான் வெட்டுவேன்" என்றும் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!