Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ம.ம.க. கூட்டணி முடிவு நாளை அறிவிக்கிறது

Published on: வெள்ளி, 3 ஏப்ரல், 2009 // , , , , , , ,
மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழு நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய நிலைபாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப் பட்டுவிட்டதாகவும், இதனை நாளை சென்னையில் நடக்க இருக்கும் கட்சியின் செயற்குழுவில் அறிவிக்கும் என்றும் இன்று அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்த அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் ம.ம.க.வின் முடிவு தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என்று கூறினார்.

தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி தர முன் வந்தததால் கூட்டணியில் சிக்கல் நிலவியது. பின்னர் தி.மு.க. இரு தொகுதிகளை ஒதுக்கித் தர முன்வந்துள்ளதாகவும், ஆனால் ம.ம.க. வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை ம.ம.க. ஏற்கவில்லை எனவும், மத்திய சென்னை, வேலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் ம.ம.க. தனித்துப் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Published on: வியாழன், 2 ஏப்ரல், 2009 // , , , , ,
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுகவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு "வெற்றி நமதே" என்று பெயரிடப் பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய விசயங்கள் வருமாறு:

  • இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
  • இலங்கை போர் நிறுத்தம் ஏற்பட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
  • நெல் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அரசை திமுக வலியுறுத்தும்
  • மாநில நதிகளின் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்குமாறு திமுக கோரிக்கை விடுக்கும்.
  • தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • சேது கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட கோரிக்கை
  • அருந்ததியினருக்கு அனைத்து மாநிலத்திலும் இடஒதுக்கீடு தர கோரிக்கை
  • ஊரக வேலைவாய்ப்பு 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.
  • எஸ்.சி. எஸ்டிக்கு இலவச கல்வி
  • அரவாணிகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்க திமுக வலியுறுத்தும்
  • அகில இந்திய அளவில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம்
  • பொருளாதார சரிவில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி அளிப்பது.
போன்ற திட்டங்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

உதய சூரியன் சின்னத்தை நீக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை நீக்க வேண்டும் என்று கோரிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமையன்று தள்ளுபடி செய்தது.

சூரியன் இந்துக்களின் கடவுள் என்றும் எனவே அது தேர்தல் சின்னமாக இருக்கக் கூடாது என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து இளைஞர் அமைப்பு என்ற இயக்கம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தி.மு.க.விற்கு உதய சூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்ததில் எந்தவித சட்ட முரணும் இல்லை என்று கூறி இந்த வழக்கை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.

ஏற்கனவே இத்தகைய மனு ஒன்று தேர்தல் ஆணையத்திடமும் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் அதனை நிராகரித்தது குறிப்பிடத் தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!