Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒபாமாவின் முதல் இராக் பயணம்

Published on: புதன், 8 ஏப்ரல், 2009 // , , , , , , ,
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட பின் பராக் ஒபாமா முதன் முறையாக செவ்வாய் கிழமையன்று இராக் பயணம் மேற்கொண்டார்.

இலண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாடு, பிரான்சு மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற நாட்டோ மாநாடு மற்றும் பராகுவேயில் நடைபெற்ற ஐரோப்பிய அமெரிக்க மாநாடுகளை முடித்துக் கொண்டு செவ்வாய் இரவு அவர் இராக் பயணம் மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பயணம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. இராக்கின் தலைநகர் பாக்தாதில் நான்கு மணி நேரம் மட்டுமே தங்கியிருந்த அவர் இராக்கின் அதிபர் ஜலால் தலபானி, பிரதமர் நூரி அல் மாலிகி மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். செவ்வாய் நள்ளிரவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பினார்.

விமானத்தை திருடிய விமானி கைது!

Published on: செவ்வாய், 7 ஏப்ரல், 2009 // , , , , , ,
கனடாவில் தன்டர் பே எனும் இடத்தில் உள்ள விமான பயிற்சிப் பள்ளியின் செஸ்னா 172 வகை விமானம் ஒன்று திங்கள் கிழமை நன்பகலுக்குப் பின் திருடப்பட்டுவிட்டது என்ற தகவல்கள் வந்ததும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பரபரப்பு நிலவியது. இந்த விமானம் அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றதை ராடார் கருவிகள் மூலம் அறிந்ததாக தன்டர் பே விமான நிலைய அதிகாரிகள் கூறியதை அடுத்து, அமெரிக்காவின் விமானப்படை, அமெரிக்க விமான ஆணையம் போன்றவை இந்த விமானத்தைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் மத்திய விஸ்கோன்சின் மாநிலத்தில் இந்த விமானம் இருப்பதை அறிந்து விமானப்படையினர் எப் 16 விமானம் மூலம் கடத்தப்பட்ட விமானத்தை வழிமறித்து தரையிறங்கச் செய்தனர். மிசெளரி அருகே 60ஆம் சாலையில் அந்த விமானத்தை தரையிறக்கிவிட்டு, கடத்தலில் ஈடுபட்டவர் தப்பியோட முயன்றபோது கைது செய்யப் பட்டார்.

இந்த விமானக் கடத்தல் தீவிரவாதிகளின் செயல் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. யவுஜ் பெர்கே என்ற பெயருடைய 31 வயதுடையவர் இச்செயலில் ஈடுபட்டதாகவும், தான் தற்கொலை செய்வதற்காக விமானத்தை இவர் கடத்தியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான எப்.பி.ஐ. இந்நிகழ்வு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆனால் ஆய்வு குறித்து தாங்கள் எதுவும் சொல்ல முடியாதெனவும் கூறியுள்ளது.

நியூயார்க்கில் துப்பாக்கியால் சுட்டு நால்வர் பலி!

இன்று நியூயார்கில் உள்ள பிரிங்ஹாம்டன் எனும் இடத்தில் ஒரு கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானதாகவும் 12 பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்தக் கட்டிடத்தில் அமெரிக்க குடியுரிமை வழங்கல் அலுவலகம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்திற்குள் புகுந்த ஒருவன் இன்று காலை (உள்ளூர் நேரம்) 10.30 மணிக்கு துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமுற்றுள்ளனர். மேலும் அந்தக் கட்டிடத்தில் இருந்த 41 பேரை பிணைக் கைதிகளாக அவன் பிடித்து வைத்துள்ளான்.

அந்தப் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் எப்.பி.ஐ. இறங்கியுள்ளது. அவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

'பார்பி'க்கு வயது 50!

Published on: செவ்வாய், 10 மார்ச், 2009 // , , , , , , , ,
சிறு குழந்தைகள் முதல் பதின்ம வயதினர்ர் வரை பெண்குழந்தைகளின் கனவுப் பொம்மையாக இருந்து வரும் பார்பி, 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்தாலும் அதன் செல்வாக்கு உலகின் பல நாடுகளின் குழந்தைகளிடையே மேன்மேலும் பெருகி வருவதாக இந்தப் பொம்மையை உருவாக்கிய மேட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்விடுதலையை வலியுறுத்தும் ஒரு சின்னமாக இந்தப் பொம்மையை இதன் ஆதரவாளர் சிலர் வர்ணித்தாலும் பாலியல் சின்னமாக பெண்களை நிலை நிறுத்தும் கருவியாக இந்தப் பொம்மை இருப்பதாகவும் சாத்தியமில்லாத உடலியல் அம்சங்களைக் கொண்டு தவறான ஓர் எண்ணத்தைக் குழந்தைகளிடம் இது விதைப்பதாகவும் இதன் எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்துள்ளனர்.

எதிர்ப்புகள் பல இருப்பினும், போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல பொம்மைகள் இருந்தாலும் 50 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள பார்பி, மேட்டல் நிறுவனத்தைப் பொறுத்தவரை நல்ல லாபம் ஈட்டித் தந்துள்ளது. இப்பொம்மையின் சராசரி விலை கிட்டத்தட்ட 30 அமெரிக்க டாலராக இருக்கிறது. மிக உயர்ந்த விலையாக 8000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொம்மையும் சந்தையில் விற்பனையில் உள்ளது.

'அமெரிக்கக் கடற்படைக் கப்பலைச் சீனா அச்சுறுத்தியது' - அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படைக் கப்பல் 'தி இம்பெக்கபிள்' சீனாவின் ஹைனன் தீவுக்கருகே பன்னாட்டுக் கடற்பரப்பில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சீனாவைச் சேர்ந்த ஐந்து கப்பல்கள் அமெரிக்கக் கப்பலுக்கு மிக அருகே சூழ்ந்து கொண்டு அச்சுறுத்தியதாக அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

இது புதிதில்லை என்றும் இதே போல் சீனாவைச் சேர்ந்த கப்பல்கள் அமெரிக்கக் கப்பலை அச்சுறுத்துவது தொடர்கிறது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து சீனா அதிகாரப்பூர்வ பதில் ஏதும் அளிக்காத நிலையில் பெண்டகனில் இருக்கும் சீன ராணுவத் தொடர்பு மையத்திடம் கடும் கண்டனம் கையளித்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பன்னாட்டுக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபடும் கடற்படைக் கப்பல்களை இதுபோல் இன்னொரு நாட்டுக் கப்பல்கள் அச்சுறுத்துவது கவலைக்குரிய நடவடிக்கையில்லை என்றாலும், அமெரிக்காவின் பொறுமையைச் சோதித்து தாக்குதலுக்குச் சீண்டும் வகையில் சீனக் கப்பல்கள் நடந்து கொண்டன என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இராணுவ தளம் அமைக்கவில்லை : அமெரிக்கா

Published on: திங்கள், 9 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
வங்கதேச கடல்பரப்பில் அமெரிக்க இராணுவ தளம் அமைக்கப்படவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

வங்கதேசத்தின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் அதன் கடல் எல்லைப் பாதுகாப்புப் பணியில் வங்கதேசத்திற்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாயின.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வெளியுறவுத் துணைச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் தமது இரண்டு நாள் வங்கதேச சுற்றுப் பயணத்தை முடிவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, வங்கதேசத்தின் கடலோரப் பாதுகாப்புப் பணியை இன்னும் சிறப்பாகச் செய்யலாம். வங்கதேசம் விரும்பினால் நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

அமெரிக்கா வங்கதேசத்தில் இராணுவ தளம் அமைக்கத் திட்டமிடுகிறது என்ற தகவலை அவர் மறுத்தார். வங்கதேசத்தில் நிரந்தரமாக இருக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா பல்வேறு நாடுகளில் பொதுப்பணித்துறை, காவல் துறை மற்றும் இராணுவம் போன்ற துறைகளில் அரசுகளுடனும் தனியார் ஏஜென்சிகளுடன் இணைந்து பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

வங்காள விரிகுடா கடல் எல்லையில் வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி இன்று வங்கதேசப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!