நவாஸ் ஷரீஃபுக்கு விதித்த தடை உறுதி!
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃபுக்கும் அவரது சகோதரர் ஷாபாசுக்க்கும் பாகிஸ்தான் அரசில் பங்கு வகிக்க நடத்தப்படும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட லாகூர் உயர் நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
நவாஸ் ஷரீஃபின் கட்சியான PML-N மேற்கு பஞ்சாபில் மிகவும் பலம் வாய்ந்ததாகும். நவாஸ் ஷரிஃபின் சகோதரர் ஷாபாஸ் தான் அங்கு முதல்வராக இருக்கிறார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஷாபாசும் பதவி விலக வேண்டி வரும்.
இந்தத் தீர்ப்பை மேல் முறையீடு செய்யவும் இயலாதவாறு மேலும் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் சதி என்று கருதுவதாக நவாஸ் ஷரீஃப் தரப்பினர் கூறியுள்ளனர்.
முந்தைய அதிபர் முஷரஃபை பதவி விலக நெருக்கடி கொடுக்க ஜர்தாரியுடன் ஒன்று சேர்ந்த நவாஸ் ஷரீஃப், முஷரஃப் பதவி விலகியவுடன் ஜர்தாரி அதிபராக உதவி செய்தார். பின்னர் அவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு இருவரும் எதிரெதிராகச் செயல்பட்டு வருகின்றனர். நவாஸ் ஷரீஃப் அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்ற முனைப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை மிரட்டி தடை உத்தரவு தீர்ப்பைத் திணித்துள்ளதாக நம்புவதற்குப் பெரிதும் இடம் இருப்பதாக நவாஸ் ஷரீஃபின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
0 comments