Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Friday, April 25, 2025

புலிகள் ஆயுதங்களைத் துறந்தால் பேச்சுவார்த்தைக்கு இந்தியா வலியுறுத்தும் - ப.சிதம்பரம்

Published on திங்கள், 16 பிப்ரவரி, 2009 2/16/2009 01:50:00 AM // , , , , , , , , ,

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும், பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ஜெயவர்த்தனேயுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

அந்த ஒப்பந்தம் மட்டும் அமலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும், ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும், தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். 

ஆனால் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல், அதை விடுதலைப் புலிகள் காலில் போட்டு மிதித்ததே, இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். 

அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு. 

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. 

இந்தியாவில் நாகாலாந்து, அசாம், மணிப்பூர், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய குழுக்கள் போராடி வருகின்றன. இந்திய அரசால் அசாமில் ஆயுதம் ஏந்தி போராடும் "உல்பா' தீவிரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் நாம் பேச முடியும். 

இந்தியா மட்டுமல்ல; உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல; நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு. 

எனவே, ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. 

இலங்கையில் உடனடியாக அந்நாட்டு அரசு போரை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என விடுதலைப் புலிகளும் அறிவிக்க வேண்டும். 

அவ்வாறு புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடாத வரை போரை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது. 

இதுதான் இந்திய அரசின் கொள்கை. இந்திய அரசின் இந்தக் கொள்கை புரிந்ததால்தான் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இப்பிரச்னையில் இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. 

இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் விளக்க வேண்டும். இந்திய அரசின் இந்தக் கொள்கைக்குப் பின்னால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் திரண்டால், வெறும் 2 நாளில் இலங்கையில் போரை நிறுத்த நம்மால் முடியும். 

இலங்கையின் 40 லட்சம் தமிழர்களையும் மத்திய அரசின் இத்தகைய கொள்கையாலும், காங்கிரஸ் கட்சியாலும்தான் காப்பாற்ற முடியும். இதை தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலமெங்கும் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!