Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இலங்கைத் தமிழர் பிரச்சனை: மேலும் ஒருவர் தீக்குளிப்பு

Published on: ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,

இலங்கையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முயற்சி எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ராஜா என்பவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார். காவலர்கள் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.


சென்னையில் முத்துகுமார், பள்ளப் பட்டி அருகே ரவி, சீர்காழி ரவிச்சந்திரன் இவர்களைத் தொடர்ந்து மலேசியாவில் ராஜா என இதுவரை நான்கு பேர் தங்களைத் தாங்களே எரியூட்டிக் கொண்டு மடிந்துள்ளனர்.

பாகிஸ்தானுடன் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் : பா.ஜ.க.

பாகிஸ்தானுடன் உள்ள அனைத்துவகை உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தேசியய ஆலோசனைக் கூட்டம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் உயர்மட்டத் தலைவர் அருன் ஜெட்லி, கடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்றத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றும் அவர்கள் மீதான வழக்குகள் இந்தியாவில்தான் நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.

பாகிஸ்தானுடன் உள்ள வணிக, கலாச்சார, சுற்றுலா மற்றும் போக்குவரத்து உட்பட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை திரும்ப அழைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். பாகிஸ்தானுடன் காங்கிரஸ் மேற்கொள்ளும் மென்மையான போக்கை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

திருச்செந்தூர்-சென்னைக்கு புதிய விரைவுதொடர்வண்டி

திருச்செந்தூருக்கும் சென்னைக்கும் இடையே புதிய விரைவு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.

இதற்கான தொடக்கவிழா இன்று மாலை திருச்செந்தூரில் நடைபெறுகிறது. நடுவண் தொடர்வண்டித்துறை அமைச்சர் லாலுபிரசாத்யாதவ் கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

விழாவில் நடுவண் உள்துறை இணையமைச்சர் இராதிகா செல்வி, தமிழக அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடிஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர் இராணி வெங்கடேசன், நெல்லை நகர மேயர் ஏ.எல்.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

செந்தூர்விரைவுவண்டி என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடர்வண்டி (எண் 6736) வியாழன் தோறும் இரவு 7.15க்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை சென்னையை அடையும். மறுமார்க்கமாக வெள்ளி பிற்பகல் 03:40க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை திருச்செந்தூரை அடையும் என்று தென்னக இரயில்வே குறிப்பொன்று தெரிவிக்கிறது.

அமெரிக்கா: அதிகரிக்கிறது வேலையில்லாத் திண்டாட்டம்.

அமெரிக்காவில், கடந்த மாதம் வேலை நீக்கம் செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் பேருடன் இதுவரை பொருளாதார மந்தநிலை காரணமாக வேலைஇழந்தவர்களின் எண்ணிக்கை 36 இலட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவாக, வேலையற்றோர் விகிதம் 7.6சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

தகவல் தொழிற்நுட்பம் என்றில்லாமல், பரவலாக எல்லாத் துறைகளிலும் கடந்த மாதம் பணிநீக்கம் நடைபெற்றுள்ளது. இது கவலையளிக்கும் போக்கு என்று அமெரிக்கத் தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, இலங்கைக்கு ஆறுதல் வெற்றிகள்

தோல்விகளைச் சந்தித்து வந்த ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இன்று ஆறுதல் வெற்றியடைந்துள்ளன.

சிட்னியில் நடைபெற்ற ஒருநாள்போட்டி ஒன்றில் ஆஸி. நியூசிலாந்தை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக நடந்த இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்து வென்று தொடரைக் கைப்பற்றியிருந்தது.

(சுருக்கமான ஸ்கோர்: ஆஸி: 301 ஓட்டங்கள்/50 சுற்றுகள். நியூஸி:269ஓட்டங்கள்/50சுற்றுகள்.)

கொழும்புவில் நடைபெற்ற ஆட்டமொன்றில் இலங்கை இந்தியாவை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிக்கண்டது. முன்னதாக நடந்த 4 ஆட்டங்களில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியிருந்தது.

தொடர்ந்து 9ஆட்டங்களில் வெற்றியைச் சுவைத்த இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

(சுருக்கமான ஸ்கோர்: இலங்கை:320ஓட்டங்கள்/50சுற்றுகள்
இந்தியா: 252ஓட்டங்கள்/50சுற்றுகள்.)

முன்னாள் இராணுவ வீரர்கள் அதிருப்தி

ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் அதிருப்தியுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் அரசு தமக்களித்த விருதுகளையும் பதக்கங்களையும் திருப்பித்தர முடிவு செய்துள்ளனர்.

ஆறாவது ஊதியக்குழு இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய கணக்கீட்டை நான்கு கால அளவுகளாகப் பிரித்து பரிந்துரைத்திருந்தது.

அதன்படி 1996க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு அளவீடும், 1996 முதல் 2005 வரை பணிபுரிந்தவர்களுக்கு வேறு, 2006 முதல் 2008 செப்டம்பரில் ஓய்வு பெற்றவர்களுக்கு தனி, அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு பிறிதொரு கணக்கிலும் ஓய்வூதியம் பரிந்துரைக்கப்பட்டது .

1996ல் பணிஓய்வுபெற்ற ஒரு ஹவில்தாரைக் காட்டிலும் 2006ல் ஓய்வு பெற்ற சிப்பாய் கூடுதலாக ஓய்வூதியம் பெறுவதாக இக்கணக்கீடு அமைந்துள்ளதாகக் கூறி, ஆறாவது ஊதியக்குழுவில் தங்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று இராணுவ வீரர்கள் டெல்லியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் தெரிவித்தனர்.

இந்தியாவின் தூண்களாகக் கருதப்படும் இராணுவ வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கடற்படை முன்னாள் தலைவர் அட்மிரல் சுஷீல்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

"பா ஜ க நாட்டுக்குப் பங்கம்" - சோனியா

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா பேசுகையில்,

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் மதசார்பின்மைக்கும்,
ஒற்றுமைக்கும், பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவித்து
வருகிறது.அவர்கள் நாட்டை பிளவுப்படுத்த பார்க்கிறார்கள். நமது நாடு சமூக
நீதிக்கும், மத ஒற்றுமைக்கும் பாடுபடும் நாடு. நாட்டின் இறையாண்மை, வளர்ச்சி
மற்றும் பாதுகாப்பு ஆகியவையே காங்கிரசின் முக்கிய நோக்கம்.
என்றார். மேலும் அவர், பொருளாதார நெருக்கடி உலகம் முழுதும் சிக்கி வரும் நிலையில் இந்தியா அதை நன்றாக சமாளித்து வருகிறது என்றார்.

உறுதியான நிலையில் இலங்கை அணி!

5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இலங்கை சுற்றுப்பயணத் தொடரின் 5ஆவதும் இறுதியானதுமான இன்றையப் போட்டியில் நிச்சயிக்கப்பட்ட 50 ஓவர்களின் இறுதியில் 320 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.

மதிய உணவுக்குப் பின் ஆட்டத்தைத் துவக்கிய இந்திய அணி, ஆரம்பத்திலேயே தெண்டுல்கர், கவுதம் கம்பீர், ஷேவாக் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து போராடிக் கொண்டிருக்கிறது.

10.5 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்துள்ள இந்திய அணிக்காக யுவராஜ் சிங் மற்றும் சர்மா ஆகியோர் தற்போது பேட்டிங் செய்து வருகின்றனர்.

இரண்டரை வயது குழந்தைக்கு எதிராக வெறிச்செயல்!

பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த நாடோடி கூட்டத்திலுள்ள இரண்டரை வயது குழந்தை மான பங்கம் செய்யப்பட்ட கொடூரம் கேரளாவில் நடந்துள்ளது.

கோழிக்கோடு மெடிக்கல் காலேஜின் அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த நாடோடி கூட்டத்திலிருந்து இரண்டரை வயதான குழந்தை மானபங்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது.

உடல் முழுவதும் பலத்தக்காயத்துடன் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையை இன்னும் கடக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கொடூரத்தைச் செய்தவர்களைக் காவல்துறை வலைவீசி தேடிவருகிறது.

நாடோடி கூட்டம், வேலை தேடிச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உலக நம்பர் ஒன் ஆகுமா?

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொன்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையுடனான 5 ஆவதும் இறுதியானதுமான ஒருநாள் போட்டியை இன்று கொழும்புவில் ஆடுகிறது.

ஏற்கெனவே முந்தைய நான்கு ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று போட்டித் தொடரைக் கைப்பற்றி விட்ட இந்தியா, இந்தப் போட்டியிலும் வென்றால் உலக தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும்.
இலங்கை இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறாததால், அவமானத்தைத் தவிர்க்க இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.

சுமார் 16 ஆண்டு காலமாக உலக கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, முதன் முறையாக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, தற்பொழுது முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் இரண்டாம் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. இன்றைய இலங்கையுடனான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுமானால் முதல் இடத்துக்கு இந்தியா முன்னேறும்.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய நேரம் 10 மணிக்கு ஆட்டம் துவங்கியுள்ளது.

ஜெயசூரியா மற்றும் தில்சன் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இதுவரை 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலங்கை 3 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவோம் : பா.ஜ.க.

பாரதீய ஜனதா ஆட்சியமைத்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக நாக்பூரில் இரண்டு நாள்களாக தேசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அயோத்தியில் மிகப் பெரிய அளவில் ராமர் கோவில் கட்டுவதில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது என்று கூறினார். அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறோம். பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்தால் இதற்கென சட்டமியற்றப் படும் என்று கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிள் இராமர் கோயில் கட்டுவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தில் உள்ளது இல்லை என்று கூறி உள்ளன.

பாபர் மசூதியை அரசுதான் இடித்தது : ஆர். எஸ். எஸ். தலைவர்

பாபர் மசூதியை சங்பரிவாரம் இடிக்கவில்லை, அரசுதான் இடித்தது என்று ஆர். எஸ். எஸ் தலைவர் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷஜாபூர் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஆர். எஸ் எஸ் தலைவர் சுதர்ஸன், பாபர் மசூதி அரசு ஆட்களால்தான் இடிக்கப்பட்டது. கரசேவகர்கள் பாபர் மசூதியை இடிக்கவில்லை என்று கூறினார்.

மாநிலத்தில் ஆட்சியிலிருந்து பாரதீய ஜனதாவின் பெயரையோ அல்லது மத்திய அரசு அமைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் பெயரையோ குறிப்பிடாத அவர், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று தான் அயோத்தியாவில் இருந்ததாகவும், பிரச்சனைக்கு அப்பாற்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட முனைந்ததாகவும் ஆனால் அரசின் ஆட்கள் பாபர் மசூதியை இடித்ததால் அங்கு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!