Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாகிஸ்தானில் மீண்டும் இராணுவப் புரட்சிக்குத் திட்டம்?

Published on: திங்கள், 9 மார்ச், 2009 // , , , ,
பாகிஸ்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிப் அலி சர்தாரி மீது அந்நாட்டின் இராணுவத் தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கியானி கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டம் ஒழுங்கை மார்ச் 16க்குள் நிலைநாட்டும்படி அதிபருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. மார்ச் 16ல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆதரவாளர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றனர்.

கியானி அண்மையில் அமெரிக்கா சென்று வந்ததும், வந்தவுடன் மற்ற இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையும் அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்படும் என்ற ஐயத்தை மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முஷாரஃப் இந்தியா வருகை: சந்திக்க தலைவர்கள் மறுப்பு

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் திட்டமிட்டிருந்தபடி மன்மோகன்சிங், சோனியாகாந்தி, குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் ஆகியோரைச் சந்திக்க இயலவில்லை. சந்திப்பு குறித்த அவருடைய வேண்டுகோளை இம்மூன்று தலைவர்களும் நிராகரித்துள்ளனர்.

மேலும் டெல்லியில் நான்கு இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்த அவர் அனுமதி கோரியிருந்த போதும் இரண்டு இடங்களில் பேசுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் யாரும் அவரை வரவேற்கச் செல்லாமல் இணை செயலர் தகுதியில் உள்ள அதிகாரி ஒருவரே அவரை விமானநிலையத்தில் வரவேற்றார். இந்திய அரசின் முக்கிய விருந்தினராக அவர் நடத்தப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கும். இஜாஜ் பட் நம்பிக்கை

Published on: ஞாயிறு, 8 மார்ச், 2009 // ,

பாகிஸ்தானில் சமீபத்தில் இலங்கை வீரர்கள் மீது நடந்த தாக்குதலை தொடர்ந்து, அங்கு நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், சர்வதேச போட்டிகள் விரைவில் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். வீரர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டார். எனினும், எப்பொழுது போட்டிகள் ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு, பதிலளிக்கையில், வாரியம், பாதுகாப்புக்கு அரசாங்கத்தையே, முழுமையாக சார்ந்து இருப்பதகவும், பாதுகாப்பு குறித்து, அரசு உத்தரவாதம் தரும் பட்சத்தில், 6 மாதங்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்.

பெங்களூருவில் 39 வெளிநாட்டவர் உள்பட 101 பேர் கைது!

பெங்களூரு அருகே ரமனங்கரா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் உரிமம் இல்லாமல் மது பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தபோது 39 வெளிநாட்டவர் உள்பட 101 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டுப் பெண்கள் உள்பட 22 பெண்களும் அடங்குவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டவரில் ஜெர்மனி, பிரான்சு, சூடான், இரான் மற்றும் எமன் ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரேபள்ளியில் படித்த 10 மாணவர்கள் தற்கொலை?

ஒரே பள்ளியில் படித்த பத்து மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் உ.பி.மாநிலம் நொய்டாவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திரபுரம் டிபிஎஸ் என்ற பள்ளியில் படித்து வந்தவர்கள் என்று வெளியாகியுள்ள செய்தி பள்ளி முதல்வர் மீதாராய் மறுத்துள்ளார். தேர்வு பயம் என்று காரணம் கூறப்பட்டாலும் காவல்துறையினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரிசா : மார்ச் 11ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டதை அடுத்து வரும் புதன்கிழமை (11ஆம் தேதி) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அறிவ்ததுள்ளார்.

தமக்கு 76 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் தமக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் விவரங்களை ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும் கூறிய அவர், தம்முடைய ஆதரவாளர்களையும் அழைத்துச் சென்று ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறினார்.

147 உறுப்பினர்களைக் கொண்ட ஒரிசா சட்ட மன்றத்தில் பிஜு ஜனதா தளம் 59 உறுப்பினர்களையும், பா.ஜ.க. 30, காங்கிரஸ் 38 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆவர்.

காவலர் பயிற்சி மையத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் - 28 பேர் பலி

இராக்கின் தலைநகர் பக்தாதில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் அருகில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 58 பேர் காயமுற்றனர்.

தன்னுடைய உடலில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு மத்திய பாக்தாதில் உள்ள பாலஸ்தீன் சாலையில் கூட்டத்தினுள் புகுந்த சைக்கிளில் வந்த ஒருவர் குண்டுகளை வெடிக்கச் செய்தார் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியான 28 பேரில் காவலர்கள் மற்றும் காவல் பணிக்கு விண்ணப்பித்தோரே அதிகம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

கிரிக்கெட்: இந்தியா நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தியது

கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று இந்தியா நியூசிலாந்து இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியது.

பூவா தலையா போட்டதில் நியூசிலாந்து வென்றாலும் இந்தியாவை மட்டையாடப்பணித்து தான் பந்துவீச்சைத் தொடங்கியது. தொடக்கத்திலேயே சேவாக் ஆட்டமிழந்தாலும், டெண்டுல்கர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 133 பந்துகளில் 163 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு ஒருநாள் ஆட்டத்தில் 43வது சதமாகும். தோனி(68), யுவராஜ்சிங்(87) அவருக்கு உறுதுணையாக விளங்கினர். அபாரமாக ஆடிய இந்தியா 50 சுற்று பந்துவீச்சில் 392 ஓட்டங்கள் குவித்தது.

அதன்பின் ஆடிய நியூசிலாந்து அபாரமாகத் தொடங்கினாலும், பதட்டத்தில் தனது ஆட்டக்காரர்களை பறிகொடுத்து 334 ஓட்டங்கள் பெற்று வீழ்ந்தது. இந்தியா 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜாஹிர்கான், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் தலா இருவரையும், யூசுஃப்பதான், குமார் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.

இதற்கு முன் நடந்த முதலாம் ஒருநாள் ஆட்டத்திலும் இந்தியா வென்றுள்ளது. இரண்டாவது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது. எனினும் 20-20 சுற்று ஆட்டங்கள் இரண்டிலும் நடப்பு வாகையரான இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் காங்கிரஸில் இணைந்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் தற்போதைய ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான சுப்பரெட்டி காங்கிரஸில் இணைந்தார். இது ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்ட அரசியல் நிலவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பரெட்டி, 2004 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் கர்ணூல் மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஒரே தெலுங்கு தேச தலைவராவார். ஐந்து முறை கர்ணூலிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற சுப்பரெட்டி, கர்ணூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமானவராகத் திகழ்ந்தார்.

முன்னர், சுப்பரெட்டியின் மகள் ஷோபாநாகை ரெட்டியும், அவரின் கணவர் பூமாநாகை ரெட்டியும் தெலுங்கு தேசத்திலிருந்து வெளியேறி சிரஞ்சீவியின் தலைமையிலுள்ள பிரஜாராஜ்யம் கட்சியில் இணைந்திருந்தனர்.

சுப்பரெட்டியின் மகன் மோகன் ரெட்டியும், மாவட்ட முன்னாள் செயலாளர் பி. வெங்கடராமுடுவும் தெலுங்கு தேசத்திலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

பிரக்யா சிங் தாக்கூரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - நீதிமன்றம்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூரைத் தேவையெனில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் வழங்கப்பட்டும் உணவை உட்கொண்டதால் பிரக்யா சிங் தாக்கூருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் சமர்ப்பித்த புகாரின் மீது விசாரணை நடத்திய நீதிபதி வை.டி. ஷிண்டா, அவரின் உடல்நிலை கெட்டுள்ளது எனில் அவரை அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க வேண்டும் என சிறைதுறைக்கு உத்தரவிட்டார்.

இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பு! மேற்கிந்திய தீவுகள் பதிலடி கொடுக்குமா?

டிரினிடாட் நகரில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ரன்குவித்து உள்ளனர். அணித் தலைவர்,ஸ்ட்ராஸ், கோலிங்வுட் மற்றும் ப்ரியர் சதம் அடித்தனர். இங்கிலந்து தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 546 ரனகள் எடுத்து டெக்ளேர் செய்தது. பிறகு தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய, மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்ட நேர இறுதியில், ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது.

டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா பாலோ ஆனை தவிர்க்குமா?

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில், தென் ஆப்ரிக்கா 7 விக்கெட்களை இழந்து 138 ஒட்ட்ங்களை எடுத்து இருந்தது. முன்னனி ஆட்டக்காரர்கள் அனைவரும், சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இளம் அதிரடி வீர்ர, டுமின்ய், 73 ரன்களுடன், ஸ்டெய்ன், 8 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, 352 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, 1-0 என்ற முன்னனியில் உள்ளது.

ஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க. கோரிக்கை

ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டுள்ளது. அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியும் பிஜு ஜனதா தளமும் கூட்டணி அமைத்து வந்தன. எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் இவ்விரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படாமல் போனதை அடுத்து தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று ஒரிசா முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டுள்ளது.

கூட்டணி முறிந்துவிட்டது என்று நவீன் பட்நாயக் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம். நவீன் பட்நாயக் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கோருகிறோம் என்று பா.ஜ.க. சட்ட சபைக் கட்சித் தலைவரும் மாநில தொழில் துறை அமைச்சருமான பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் பா.ஜ.க. மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரிசா மக்கள் நவீன் பட்நாயக்கிற்கோ அவரது பிஜு ஜனதா தளத்திற்கோ வாக்களிக்கவில்லை என்றும் தங்களது கூட்டணிக்கே வாக்களித்தனர் என்றும் கூறிய அவர், மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.

இன்று மாநில ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பா.ஜ.க. கடிதம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

147 உறுப்பினர்களைக் கொண்ட ஒரிசா சட்டசபையில் பிஜு ஜனதா தளம் 61 உறுப்பினர்களையும் பா.ஜ.க. 30 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் கூட்டணி முறிவு!

ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று ஒரிசா மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 11 ஆண்டுகளாக பாரதீய ஜனதாவுடன் இருந்த கூட்டணியை பிஜு ஜனதா தளம் முறித்துக் கொண்டுள்ளது.

ஒரிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு மேல் பிஜு ஜனதா தளத்திற்குத் தர பாரதீய ஜனதா கட்சி தயாராகாதததைத் தொடர்ந்து இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பின் பிஜு ஜனதா தளம் தங்களை ஆதரிக்கக் கூடும் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. தவிர பிஜு ஜனதா தளம் மூன்றாவது அணியில் சேரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

92 வயது மூதாட்டி 60 வயது குழந்தையை பெற்றெடுத்தார்

92 வயது மூதாட்டி 60 வயது குழந்தையை பெற்றெடுத்தார் என்று சொல்வது ஆச்சரியமாக இருந்தாலும் இது உண்மை. தெற்கு சீனாவில் வசிக்கும் ஹுவாங் இஜுன் 92, என்பவர் சமீபத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தான் சுமந்து வந்த குழந்தையை பெற்றார்.

ஆனாலும் குழந்தை உயிருடன் இல்லை. அது வெறும் கற்குழந்தையாகவே வெளிவந்தது. குழந்தை கருத்தரித்த பிறகு கரு பாதிக்கப்பட்டால் இவ்வாறு கருவில் உள்ள குழந்தை கால்சியம் அமில உப்புகளால் பாதிக்கப்பட்டு கல்லாக மாறிவிடுவது மிகவும் அரிதானது என்றும் அதற்கு அறிவியலில் lithopedian என்றும் சொல்லப்படுகிறது.

இதுவரையில் இதுபோன்று 290 சம்பவங்கள் மருத்துவத்துறையில் பதியப்பட்டுள்ளது , இதற்கு முன்பாக மேடம் கோலம்பே சாத்ரி என்ற 68 வயது பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு அவர் 1582 ல் இறந்த பின் கல்குழந்தை அவருடைய வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அவர் 28 வருடங்களாக வீங்கிய வயிற்றுடனும் வேதனையுடனும் வாழ்ந்து வந்தார்.

அக்குழந்தை பிரான்ஸ் நாட்டு பணக்காரருக்கு விற்கப்பட்டு பின் பல கைகள் மாறி இறுதியாக டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டு அது அவருடைய மியூசியத்தில் வைக்கப்பட்டு பின் காணாமல் போய்விட்டதாகவோ அல்லது அடக்கம் செய்யப்பட்டதாகவோ கூறப்படுகிறது.

தேர்தலுக்குப்பிறகு சரத்பவார் பிரதமராக சமாஜ்வாதி ஆதரவு

மக்களவை தேர்தலுக்குப் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரை எதிர்க்க மாட்டோம்; துணைநிற்போம் என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

தனியார் தொ.கா ஒன்றுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி பொதுச்செயலாளர் அமர்சிங், அதுபோல சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் பிரதமராகும் சூழல் ஏற்பட்டால் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்."நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி எதுவும் வைத்திருக்கவில்லை. அரசியல் சூழல் மற்றும் நிர்ப்பந்தம் காரணமாகவே அந்தக் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது. மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் நாங்கள் தனிக்குழுவாகச் செயல்படுகிறோம்" என்றார் அமர்சிங்.

தலித் பெண் கூட்டுக் கற்பழிப்பு : 6 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சிறை!

குஜராத் மாநிலத்தின் படான் நகரில் 19 வயது தலித் மாணவி கூட்டாகக் கற்பழிக்கப் பட்ட வழக்கில், 6 கல்லூரி ஆசிரியர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்களான மனீஷ் பர்மார், மஹேந்திரா பிரஜாபதி, அஷ்வின் பார்மர், கிரன் படேல், சுரேஷ் படேல் மற்றும் அதுல் படேல் ஆகியோரை கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவஸ்தவா குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டார்.

மேலும் இக்குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலத்தில் படான் நகரில் மாநில அரசால் நடத்தப்படும் இக்கல்லூரியில் படித்த அந்த தலித் மாணவியை இந்த ஆறு ஆசிரியர்களும் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து கற்பழித்தனர் என்று இப்பெண்ணின் பெற்றோர் கடந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் புகார் தெரிவித்தார்.

தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்தால் மிகக் குறைவான உள் மதிப்பெண்களே வழங்குவோம் என்று இந்த ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய காவல்துறை தேடல்.

கடந்த 1ம் தேதியன்று திருப்பூரில் நடந்‌த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஏளனமாகவும் பேசியதாக அவர் மீது திருப்பூர் வடக்குப் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்டையில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்வதற்காக திருப்பூர் காவல்துறையினர் சென்னை வந்தனர். அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டில் பதுங்கியிருக்கலாம் என்று கருதி, அவரை பிடிப்பதற்காக தெரு முனையில் காத்திருந்தனர். அப்போது, வேலூருக்கு கிளம்பிய வைகோவின் காரில் அவர் ஒளிந்திருக்கலாம் என்று, கார் டிக்கி உட்பட அனைத்து இடங்களையும் தேடினர். ஆனாலும் அவர் சிக்கவில்லை.

ஒருவழியாக அவரை சென்னையில் கைதுசெய்த திருப்பூர் காவல்துறையினர் தாம்பரம் காவல்நிலையத்தில் அவரை முன்னிலைப் படுத்தினர்.

மார்ச் 30 முதல் டெல்லி-பாங்காக் நேரடி விமான சேவை

மார்ச் 30ம் தேதி முதல் புதுடெல்லியில் இருந்து பாங்காக்கிற்கு தினசரி நேரடி விமானசேவை நடத்த இருப்பதாக கதே பசிஃபிக் ஏர்வேஸ் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. கதே பசிஃபிக் நிறுவனம் ஹாங்காங்கை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

டெல்லியில் அதிகாலை 3.30 க்கு புறப்படும் கதே விமானம் பாங்காக்கிற்கு, தாய்லந்து நேரப்படி 8.55 க்கு போய் சேரும். அங்கிருந்து 17.25 க்கு புறப்படும் அந்த விமானம் டெல்லிக்கு, இந்திய நேரப்படி 19.45 க்கு வந்து சேரும்.

பயண நேரம் குறைவாக இருப்பதால் பாங்காக்கிற்கு சுற்றுலா வருபவர்கள் ஒரு பகல் முழுவதையும் ஊர் சுற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்று டெல்லி பிராந்திய கதே பசிஃபிக் மேலாளர் டிம் ரைட் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து பாங்காக் செல்லும் அந்த கதே விமானம், தன் மையமான ஹாங்காக் வழியாகவே செல்லும் என்பதால பயணிகள் எளிதாக அதே விமானத்தில் ஹாங்காங்கும் செல்லலாம். மேலும் ஜப்பான், கொரியா மற்றும் சீனா செல்ல விரும்புபவர்களுக்கும் இது வசதியாக இருக்கும் . கதே பசிஃபிக் விமான நிறுவனம், இந்தியாவில் கடந்த 55 வருடங்களாக விமான சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கள்ளத்தனமான துப்பாக்கித் தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு

ஒன்றல்ல; இரண்டல்ல பத்து துப்பாக்கித் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாகச் செயற்பட்டு வந்ததை பீகார் மாவட்ட காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
முங்கீர் மாவட்டத்தில் உள்ள ஹசரத்கஞ்ச் என்ற இடத்தில் 10 கைத்துப்பாக்கித் தொழிற் சாலைகள் முறைகேடாக செயல்பட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.


அனுமதி பெறாமல் தயாரிக்கப்பட்டிருந்த ஏராளமான கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு லாரிகளில் ஏற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.இந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இதுவரை கைது செய்யப் படவில்லை.

இதன்றி, இப்பகுதியில் செயல்பட்டு வந்த இரண்டு கள்ளச்சாராய தொழிற்சாலைகளில் திடீர் சோதனை நடத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச் சாராயத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்

உயர்நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு கோரி அரசுக்கு கடிதம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி நிகழ்வுற்ற காவல்துறை-வழக்குரைஞர் மோதல் சம்பவத்துக்குப் பின் வழக்குரைஞர்கள் இதுவரை பணிக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக லக்ஷ்மண் கோகலே நாளை மறுநாள் பதவியேற்கவிருக்கிறார்.

புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பை முன்னிட்டும் மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசுக்கு பதிவாளர் மாலா கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்றம், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் விமான விபத்து!

பெங்களூருவின் அருகே சிறிய வகை விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Chopper என்றழைக்கப்படும் சிறியவகை விமானம் பெங்களூரு அருகில் உள்ள சேசகிரி என்னும் இடத்தில் கீழே விழுந்தது என்றும், விமானம் முழுமையாக எரிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இதில் விமானத்தின் உள்ளே இருந்த இருவர் மற்றும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவர் என மொத்தம் மூவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்விடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் விரைந்துள்ளனர் எனவும், விபத்து குறித்து விசாரனைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரசுடனான உறவு முறிந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக அறிவித்ததைத் தொடர்ந்து காங்கிரசுடனான உறவு முறிந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

கடுமையான வார்த்தைகள் எதையும் உபயோகிக்க நான் விரும்பவில்லை. ஆனால் கூட்டணி முறிந்துவிட்டது. காங்கிரஸ் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த அன்றே கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் செய்தியளார்களிடம் கூறினார்.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு அளிக்க சமாஜ்வாதி கட்சி தயாராக இருந்தது. குறைந்தது 25 தொகுதிகளாவது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தது.

எடியூரப்பாவின் மகன் ஷிமோகா தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்

ஷிமோகா மக்களவைத் தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா அறிவிக்கப் பட்டுள்ளார்.

குடும்ப அரசியல் நடத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியையும், கர்நாடக மாநிலததில் தேவகவுடாவையும் எதிர்த்து பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வந்த நிலையில் தற்போது மாநில முதல்வரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் கர்நாடகாவில் பா.ஜ.க.வில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஷிகாரிபூர் நகர்மன்றக் குழு உறுப்பினராக தற்போது ராகவேந்திரா இருந்து வருகிறார். அவரது செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. எனினும் கட்சியில் மூத்த உறுப்பினர்கள் பலர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ராகவேந்திரா மட்டுமின்றி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் உடாசியின் மகன் சிவகுமார் உடாசிக்கும் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்சிகளும்

பாரதீய ஜனதா கட்சியுடன் புதிய கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகள் விரைவாக ஒத்துக் கொள்ளப்படும் அதேவேளை, அதன் பழைய கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு முடிவுறாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.

ஹரியாணாவில் இந்தியா தேசிய லோக் தள் கட்சியுடனும், உத்திரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியுடனும், அசாமில் அசாம் கன பரிஷத் கட்சியுடனும் புதிதாக கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகள் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையின் அதன்  பழைய கூட்டணிக் கட்சிகளான, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஒரிசாவின் பிஜு ஜனதா தளம், மகாராஷ்டிராவின் சிவ சேனா ஆகிய கட்சிகளுடன் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

அசாமில் மொத்தம் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிய 8 இடங்களிலும், அசாம் கன பரிஷத் 6 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அசாம் கன பரிஷத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஆனால் அசாம் கன பரிஷத் தலைவர் சந்திர மோகன், தங்கள் கட்சி என்.டி.ஏ.வில் சேரவில்லை எனவும், பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட விரும்புகிறது. ஒரிசா சட்டபைக்கு மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 100 தொகுதிகள் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படாவிட்டால் தங்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ளது. சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிஜு ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஐ.பி.எல். போட்டி தேதிகளில் மாற்றம் தவிர்க்க முடியாதது - ப.சி.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தேதிகளில் மாற்றம் செய்வது தவிர்க்க முடியாதது என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

தேர்தல் ஆணையம் தேர்தல் நாள்களை அறிவிப்பதற்கு முன்பே ஐ.பி.எல். போட்டித் தேதிகளை அறிவி்த்துவிட்டாலும், தேர்தல் ஆணையம் ஐ.பி.எல். போட்டி தேர்தல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தாம் கோரவில்லை எனவும், அவர்கள் போட்டிகளை நடத்த தாம் ஒத்துழைப்புத் தருவதாகவும் கூறிய அமைச்சர் சிதம்பரம், போட்டிகளின் தேதிகளில் மாற்றம் செய்வது தவிர்க்க முடியாதது என்று கூறினார்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் கூறிய சிதம்பரம், இந்தியா கிரிக்கெட்டுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பாதுகாப்பான நாடு என்றும் கூறினார்.

சென்னை விமானநிலையத்தில் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும் பணி

Published on: வியாழன், 5 மார்ச், 2009 // , , , , , , ,
சென்னை விமான நிலையத்தை 1,808 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகள் கொண்ட புதிய உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனைய விரிவாக்கம், புதிய ஓடுபாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.


இந்த விரிவாக்க திட்டங்களுக்காக தமிழக அரசு இலவசமாக தருவதாக அறிவித்த 1,059 ஏக்கர் நிலத்தில், தற்போது 120 ஏக்கர் நிலம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில், அடையாறு ஆற்றின் மேல் இரண்டாவது ஓடுதளம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆற்றின் மேற்பகுதியில் நவீன தொழில் நுட்பத்துடன் இரண்டாவது ஓடுதளம் அமைகிறது. தற்போது, கெருகம்பாக்கம் பகுதியில் ஓடுதளம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளமான இடங்களில் மண்ணை கொட்டி சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சிறையில் தோண்டத் தோண்ட செல்பேசிகள்

புதுவை மாநிலம் காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் உள்ள 276 கைதிகளில் 5 பேர் பெண்கள். 79 பேர் தண்டனைக் கைதிகளாகவும், மற்றவர்கள் விசாரணைக் கைதிகளாவும் உள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஆய்வில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியொன்றில் கழிவறைத் தொட்டி அருகில் ஒரு வித்தியாசமான பொருள் புதைந்த நிலையில் இருந்தது தெரிய வந்து சோதனை செய்த போது அங்கு செல்பேசியொன்று கைப்பற்றப்பட்டது.


இதையடுத்து அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கழிவறைத் தொட்டி அருகில் தோண்டத் தோண்ட செல்பேசிகளாக வந்தன. ஒன்பது செல்பேசிகள், 18 மின்கலன்கள், மூன்று மின்னிணைப்புக்கருவிகள், ஒரு எண் அட்டை கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு பணிகள், கண்காணிப்பு ஒளிப்படக்கருவி செல்பேசி மின்னணுத்தடைக் கருவி உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளும் திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகரின் மிரட்டலால் தூக்குப்போட்டு தற்கொலை

கேசவ் கிசான் ஜக்தாப் என்பது அவர் பெயர். அவருடைய மகன் குணாலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களுள் ஒருவரான காசிநாத் கோகட்டே என்பவரின் மகளுடன் காதல் தொடர்பு இருந்தது. காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓடிவிட, பாஜக தலைவர் காசிநாத்தின் ஆதரவாளர்கள் கேசவ் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து, பின்விளைவுகள் குறித்து கடுமையாக எச்சரித்ததாகவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பயந்த 45 வயது கேசவ் கிசான் கடந்த ஞாயிறன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் மனைவி சங்கீதா அளித்த புகாரின் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்றாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்துள்ளது.

இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, இந்தியாவை சம்பந்தபடுத்தி வரும் செய்திகளுக்கு, பாக். மறுப்பு

Published on: //
பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவை சம்பந்தபடுத்தி வந்த செய்திகளுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக, உள்துறை அமைச்சின் தலைமை அதிகாரி, ரகுமான் மாலிக் கூறுகையில், இந்தியாவை சம்பந்தபடுத்தி வரும் செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

'Slum Dog' சிறு நாயகன் வீடு இடிப்பு.

ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படத்தில் சிறுவயது சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் அஸ்ஹருத்தீன் முஹம்மத் இஸ்மாயில். பாந்த்ரா கரீப் நகரின் சேரியில் ஒரு குடிசையில் வசித்து வந்தான். அனுமதிபெறாமல் கட்டிய குடிசை என்ற வகையில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பம்பாய் மாநகராட்சி இருவாரங்களுக்கு முன் இடித்துத் தள்ளிய 200 குடிசைகளுள் அஸ்ஹருத்தீன் குடிசையும் ஒன்று.

அதன்பிறகு அவர்கள் தார்ப்பாலினால் தற்காலிக கூடாரம் அடித்து தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், மாநகராட்சியால் அதுவும் விரைவில் அகற்றப்படலாம் என்று தெரிகிறது. பெருநகர குடிநீர்க் குழாய்களை ஒட்டி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்ற உயர்நீதிமன்றம் அண்மையில் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், அப்படத்தில் நடித்த சிறுவர்களுக்கு குடியிருப்பு வழங்குவதாக படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்த செய்தி என்ன ஆனது என்று தெரியவில்லை

புதிய தலைமை தேர்தல் ஆணையர் மீது புதிய வழக்கு

நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நவீன்சாவ்லா ஏப்ரல் 20ம் தேதி பதவியேற்கிறார். இது தொடர்பாக குடியரசுத்தலைவர் அளித்த ஒப்புதல், சட்ட விவகாரங்கள் துறை செயலருக்கு அனுப்பப்படும். அதன்பின், இதை அரசிதழில் வெளியிட சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்யும். இதன் மூலம் நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலிலிருந்து (ஏப்ரல் 20 முதல்) இவர் பொறுப்பேற்பார்.

இதற்கிடையே, நவீன் சாவ்லாவை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்தது துரதிருஷ்டமானது என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. பா ஜ க பொதுச் செயலர் அருண்ஜெட்லி "தான் பாரபட்சமற்ற நபர் என்பதை சாவ்லா நிரூபிக்க வேண்டும். தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, தன் குடும்பத்தினரால் நடத்தப்படும் அரசு சார்பற்ற அமைப்புக்கு காங்கிரஸ் எம்.பி.,க்களிடம் இருந்து நிதியுதவி பெற்றது போன்ற குற்றச்சாட்டுக்கள் சாவ்லா மீது சுமத்தப்பட்டுள்ளன' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணை வரும் 20ம் தேதி நடக்கும் என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்
எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இரண்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவால், தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரையை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளாக பதவி வகித்தவர்களை மட்டுமின்றி, பிரபலமான வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், உச்ச; உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும். அதுபற்றி பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசியல் சட்டத்தின் 324வது பிரிவு மற்றும் துணைப் பிரிவு 5ன்படி, தேர்தல் ஆணையரை நீக்கும்படி, தலைமை தேர்தல் ஆணையர் பரிந்துரை செய்யலாம். அந்த அடிப்படையில்தான் நவீன் சாவ்லாவை நீக்கும்படி கோபாலசாமி பரிந்துரை செய்துள்ளார். எனவே, நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
என்று கோரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வங்கதேசம் சுற்றுப்பயணம் தள்ளிவைப்பு ?

Published on: //
பாகிஸ்தானில் சில தினங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் வங்கதேச சுற்றுப்பயனம் கேள்விகுறியாக உள்ளது. இது குறித்து அரசு செய்தியாளர் கூறுகையில், பாகிஸ்தானின் சுற்றுபயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் முடிந்து விட்ட நிலையில், சுற்றுபயணம் தொடர்வது சம்பந்தமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அனைத்துலக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பாக் மற்றும் இந்தியா நாடுகளில் 2011 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட், பாதுகாப்பு காரணங்களினால் வேறு நாடுகளுக்கு மாற கூடிய சூழ்நிலையில், ஆஸ்திரேலியா, போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழருக்காக உண்ணாவிரதம் -ஜெயலலிதா அறிவிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மார்ச் 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அதிமுக தலைவி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வருகிற 10-ந்தேதி அதிமுக சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டத் தலை நகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அதில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


என்று கூறியுள்ளார்

தங்கம் விலை குறையுமா?

Published on: புதன், 4 மார்ச், 2009 // , , , , ,

வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்துவரும் தங்கத்தின் விலை இவ்வாரத் தொடக்கம் முதல் குறைய ஆரம்பிக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதமே ஒரு பவுன் 10,000 ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியிருந்த தங்கம் தினமும் 200, 300 என்று விலை ஏறி உச்சபட்சமாக நேற்றைக்கு முன்பு 11,464 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆயினும் ஆறுதல் அளிக்கும் விதமாக, நேற்று பவுனுக்கு ரூ.232 குறைந்து ரூ. 11,232 என்ற விலையில் இருந்தது. இன்று மேலும் ரூ.72 குறைந்து பவுன் ரூ.11,160 ஆக சந்தை நிலவரம் இருந்தது. இரண்டுநாட்களில் ரூ.300 என்ற அளவுக்கு குறைவது நல்ல அறிகுறி என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.1395/= என்பதாக உள்ளது.

மேலும், உலக அளவில் தங்கத்தின் இருப்பு அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் மேலும் விலை இறங்கி ஒரு பவுன் ரூ.10,000 என்ற அளவுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பால் குடித்த 61 குழந்தைகள் உடல் நலக்கேடு!

குஜராத்தில் பள்ளி ஒன்றில் பால் குடித்த 61 பள்ளிக் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

குஜராத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மாநில அரசு 200 மில்லி பால் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது. செவ்வாய் கிழமை பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பட்காவாடா என்ற கிராமத்தில் உள்ள பகுதியில் செவ்வாய் கிழமை பள்ளி தொடங்கிய பின் 97 குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

பாலைக் குடித்து சில நேரம் கழித்து குழந்தைகள் பள்ளி வளாகத்திலேயே வாந்தி எடுத்தனர். இதனால் அந்தப் பள்ளியில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து அந்தக் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியில் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர் மருத்துவமனைப் பகுதியில் பெரும் திரளாகக் கூடினர்.

பள்ளிக்குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கு முன் உற்பத்தி தேதிதியை சரிபார்த்த பின்னரே கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.

தரமற்ற பால் எங்களுக்குத் தேவையில்லை. நாளை முதல் இத்தகைய பால் பாக்கெட்டுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மாநில அரசின் பால் வழங்கும் திட்டத்தின் படி இனி எங்கள் குழந்தைகள் பள்ளியில் பால் குடிக்காது என்று அந்தப் பகுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜ.க தனித்துப்போட்டி- இல.கணேசன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க தனித்து போட்டியிடும் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதாவை பொருத்தவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அமைப்பு ரீதியாக தேர்தல் பணியை துவங்கிவிட்டோம்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆய்வு செய்துவிட்டோம்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் போட்டியிடுவதா அல்லது ஓரிரு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதா என்பதை 12ஆம் தேதி நடக்கும் மாநில தேர்தல் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

இம்மாதம் 15ஆம் தேதி வேட்பாளர் விபரங்களை முறைப்படி அறிவிப்போம். தமிழகத்தில் பா.ஜ.க. தனித்து போட்டியிடவே முடிவு செய்துள்ளோம். மேலும் தேர்தலுக்காக இணைதள தொலைக்காட்சியை பா.ஜ.க. தொடங்க உள்ளது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுப்போம் என்றும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பினர்!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த திலான் சமரவீர கொழும்பிவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே வரும் 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகள் பற்றி முடிவு எடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் குழு (ஐ.சி.சி) விரைவில் கூட இருக்கிறது.

கேரளா: தொகுதிப் பங்கீட்டில் இடதுசாரிகளிடையே பிளவு?

கேராளாவில் மக்களவைத் தொகுதிப் பங்கீட்டில் இடது சாரிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2004ஆம் ஆண்டு தேர்தலில் 14 இடங்களில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், 4 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், ஜனதா தளம் (எஸ்), கேரளா காங்கிரஸ் (ஜோசப்) ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

செவ்வாய் கிழமை நடைபெற்ற இடது முன்னணி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இடது முன்னணி தலைவர் வைக்கம் விஸ்வம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (ஜோசப்) ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என்று கூறினார்.

கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகள் குறித்து வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று கூறிய அவர், பொன்னானி தொகுதியில் இடது சாரிகள் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார்.

நீண்ட காலமாக பொன்னானி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டு வருகிறது. "பொன்னானி தொகுதியை நாங்கள் விட்டுக் கொடுத்துவிட்டதாக எவர் சொன்னது? 2004ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் இந்த முறையும் போட்டியிடும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வெலியம் பார்கவன் கூறியுள்ளார்.

இடது முன்னணியில் உள்ள புரட்சிகர சோசலிஸ்டு கட்சி தங்களுக்கு இடம் ஒதுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்கள் கட்சியின் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற இருப்பதாகவும் மாநில அமைச்சரவையிலிருந்து விலகுவது உள்பட அனைத்துவகை வழிமுறைகளும் ஆராயப்படும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ண பிள்ளை செய்தியாளர்களிடம் கூறினார்.

குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் போட்டி

குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சி கூறியுள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சி குஜராத்தை முக்கியமான மாநிலமாகக் கருதுவதால், குஜராத்தின் 26 தொகுதிகளிலுதம் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர். பி. சிங் கூறினார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 182 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

திரிபுரா மக்களவைத் தேர்தல் இடதுசாரி வேட்பாளர்கள் அறிவிப்பு

திரிபுரா மாநிலத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தற்போதைய மக்களவை உறுப்பினர்களே மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திரிபுரா தொகுதியில் காகென் தாஸ் என்பவரும் கிழக்கு திரிபுரா (தனி) தொகுதியில் பஜுபன் ரீங் ஆகியோர் போட்டியிடுவார்கள். இதுவரும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்.

பஜுபன் ரீங் கிழக்கு திரிபுரா தொகுதியில் 1980 முதல் 9 முறை போட்டியிட்டு 7 முறை வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு முடியவில்லை. மேற்கு திரிபுரா தொகுதியில் போட்டியிட அக்கட்சியினர் 7 பேரும், கிழக்கு திரிபுரா தொகுதியில் போட்டியிட 4 பேரும் விண்ணப்பித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி இம்மாநிலத்தின் இரு தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கபட்டுள்ளது. எனினும் வேட்பாளர் தேர்வு முழுமையடையவில்லை.

பஞ்சாப், சண்டிகர் மாநில கல்லூரி ஆசிரியர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தம்

பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்தைச் சார்ந்த அரசு மற்றம் தனியார் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி செவ்வாய் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக் கழக மாணியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி பஞ்சாப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த பந்திற்கு அழைப்பு விடுத்தது. 5 பல்கலைக்க கழகங்கள், 54 அரசுக் கல்லூரிகள மற்றும் 170 தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் பணி புரியும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.

நடத்தைவிதிகள் நடைமுறைப்படுத்தப் பட்டதால் செவ்வாய் கிழமையன்று சில ஆசிரியர்கள் குழப்பமடைந்து பணிக்குச் சென்றனர் எனவும், சுமார் 7000 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாகவும் இன்று முதல் அனைத்து ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் இக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜகவத் சிங் கூறினார்.

உத்திரப் பிரதேம், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பல்கலைக் கழக மாணியக் குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டதாகவும், பொருளாதார வசதியுடைய பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் அகாலிதள கட்சியைப் புறக்கணிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தி.மு.க. வேட்பாளர் தேர்வு நேர்காணல் மார்ச் 25ஆ‌ம் தேதி நடைபெறும் - க.அன்பழகன்

பாராளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பம் 5ஆ‌ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கும். தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மார்ச் 15ஆ‌ம் தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் 25ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி, பொது செயலர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

பாராளுமன்ற வேட்பாளர் பொது தொகுதிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.10 ஆயிரம், தனித்தொகுதி விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகும். விண்ணப்ப படிவங்களை தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் எ‌ன்றும், தோழமைக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படுமானால் அந்த தொகுதிகளுக்கு செலுத்திய விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்களுக்கு வரைவு காசோலை மூலம் திருப்பி வழங்கப்படும் எ‌ன்றும் தி.மு.க. பொது செயலர் க.அன்பழகன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 7ஆம் தேதி முதல் வெளியீடு!

Published on: செவ்வாய், 3 மார்ச், 2009 // , , ,
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் 7ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி காங்கிரஸ் மத்திய தேர்வு கமிட்டியின் கூட்டம் வருகிற 7 மற்றும் 8ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. அப்போது மாநில வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யும் பணிகள் தொடங்கும்.

7ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் தேர்வு கமிட்டி கூட்டத்தில் சில வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிடுகிறது.

சீனா இறக்குமதி தடையை இந்தியா விலக்கியது!

சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்ய முன்னர் விதித்திருந்த தடையை இந்தியா நீக்கம் செய்தது. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதாக சீனா உறுதியளித்ததைத் தொடர்ந்து தடை விலக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்தது.

சீனா பொம்மைகளினால் பொது ஆரோக்கியத்திற்குப் பங்கம் விளையும் எனக் கருதியதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இந்திய அரசு இத்தடையை விதித்திருந்தது. உலக வியாபார கழகத்தில் இந்தியாவின் தடையின் மீது கேல்வி எழுப்புவோம் என சீனா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், முன்னர் விதித்தத் தடை உலக வியாபார கழகத்தின் அனுமதியுடனேயே செயல்படுத்தப்பட்டது என வணிக அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

உலக விளையாட்டுப் பொருட்களில் 70 சதவீதத்தையும் சீனா ஆக்ரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"இந்தியா ஒளிர்கிறது" தவறான பிரச்சாரம் - அத்வானி!

"இந்தியா ஒளிர்கிறது" என்ற தவறான பிரச்சாரமும் அளவுகடந்த தன்னம்பிக்கையுமே 2004 ல் நடந்த மக்களவை தேர்தலில் என்.டி.ஏ தோல்வியடைந்ததற்கான காரணங்கள் என பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறினார்.

அடல் பிகாரி வாஜ்பேய் அவர்களின் தலைமையில் நல்லதொரு ஆட்சி நடத்திக் காட்டியதால் மீண்டும் அரசமைக்க இயலும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தோம் என பாஜக வணிகர்கள் பிரிவு கூட்டத்தில் பேசும் பொழுது அத்வானி நினைவு கூர்ந்தார்.

"நாங்கள் வெற்றி பெறுவோம் என எதிராளிகளோ அல்லது அரசியல் பார்வையாளர்களோ கருதவில்லை. அளவுக்கதிகமான தன்னம்பிக்கையே தோல்விக்கான முதல் காரணமாகும் - இரண்டாவது "இந்தியா ஒளிர்கிறது" என்ற தவறான பிரச்சாரங்களுமாகும்" என அவர் தொடர்ந்து பேசினார்.

"உங்களின் வீடுகள் ஒளிர்கின்றதா என்ற எதிராளிகளின் கேள்விக்கு முன்னால் அனைவருக்கும் பிரச்சனைகளே இருந்தன. வீடுகள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் நாட்டில் இப்பொழுதும் வறுமை நிலைநிற்கின்றது. விவசாயிகளுக்கும் அவர்களுக்கான பல பிரச்சனைகள் இருக்கின்றன. நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2004 ல் அடிதட்டு மக்களின் ஓட்டுகளைக் கொண்டு ஆட்சியினைக் கைப்பற்றிய யு.பிஏ வை இம்முறை மக்கள் கீழே இறக்குவர்" என்றும் அவர் பேசினார்.

ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா நியூசிலாந்தை வென்றது

நேப்பியரில் இன்று நடைப்பெற்ற முதலாம் ஒருநாள் மட்டைப்பந்து ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. மழை குறுக்கிட்டதன் காரணமாக டக்வெர்த்-லூயிஸ் முறைப்படி பந்துவீச்சு சுற்றுகள் வெகுவாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்தியா 38 சுற்றுகளுக்கு 4 ஆட்டக்காரர்களை இழந்து 273 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் தோனி ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களும், துணைத்தலைவர் சேவாக் 77 ஓட்டங்களும், ரெய்னா 66 ஓட்டங்களும், யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

அதன்பின் நியூசிலாந்து ஆடிய 17ஆவது சுற்றில் மீண்டும் மழை குறுக்கிட நியூசிலாந்துக்கான இலக்கு 28 சுற்றுகளில் 215 ஓட்டங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து 9 ஆட்டக்காரர்களை இழந்து 162 ஓட்டங்களையே எடுத்தது.இதனால் இந்தியா 53 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் தரப்பில் ஹர்பஜன்சிங் மூவரையும் பிரவீன் குமார் இருவரையும் ஜாஹிர்கான், யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.

கடந்த 20-20 ஆட்டங்கள் இரண்டிலும் நியூசிலாந்திடம் தோற்றிருந்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு!

பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

லாஹூரில் உள்ள கடாபி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அருகில் இது நடந்துள்ளது. இதில் 8 இலங்கை வீரர்கள் காயமுற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்கர்கரா உள்பட வீரர்கள் காயமுற்றதாக இலங்கை அணியின் மேலாளர் கூறியதாக இணைய தகவல்கள் கூறுகின்றன.

இது இலங்கை அணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என பாகிஸ்தானிய தொலைக்காட்சிகள் கூறுகின்றன. இரு வீரர்களுக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், ஒருவருக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், காவல்துறையின் வாகனத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு குழுக்களுக்கிடையே நடந்த மோதல்களில் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் போன்றதே இத்தாக்குதல் எனவும், அந்தப் பகுதியில் தற்போதும் 12 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் பாகிஸ்தானிய காவல்துறை கூறியுள்ளது.

இலங்கை வீரர்களை அந்தப் பகுதியிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சற்று முன் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

உ.பி. : பா.ஜ.க. - ராஷ்ட்ரீய லோக் தள் தொகுதி உடன்பாடு

உத்திரப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ராஷ்ட்ரீய லோக் தளத்துடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ராஷ்ட்ரீய லோக் தளம் மதுரா, பாக்பட், நகினா, ஹத்ரஸ், அம்ரோஹா, சீதாபூர் மற்றும் முசப்பர் நகர் ஆகிய ஏழு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

மேலும் ஒரு தொகுதி தங்களுக்குக் கிடைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள் எதிர்பார்த்திருக்கிறது. ஆனால் அக்கட்சிக்கு 7 தொகுதிகள்தான் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

2004ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரீய லோக் தளம் 3 தொகுதிகளில் வென்றது. பா.ஜ.க. 10 இடங்களில் வென்றது.

ரெட் கிராஸ் அமைப்பைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் - இந்தியா.

யுத்தப்பகுதியினுள் அகப்பட்ட சாதாரண மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்க்க, ரெட் கிராஸ் போன்ற சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் எனவும் விடுதலை புலிகள் முன்வைத்த யுத்த நிறுத்த வாக்குறுதியை அங்கீகரிக்க இலங்கை அரசு தயாராக வேண்டும் எனவும் இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

கொல்கொத்தாவில், "தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பாதுகாப்பும் சமாதானமும்" என்ற செமினாரில் பேசும் பொழுது வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இக்கோரிக்கை விடுத்தார்.

யுத்தப்பகுதியினுள் அகப்பட்டுள்ள சாதாரண பொது மக்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்படுவதாகவும் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் மீது எவ்வித அனுதாபமும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அதே நேரம், விடுதலை புலிகளின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள கோரிய இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு புறக்கணித்ததாக செய்திகள் கூறுகின்றன. இது குறித்து இந்தியாவிலிருந்து அரசு சார்பாக எவ்வித கோரிக்கையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் புலிகள் ஆயுதத்தைக் கீழே வைத்தால் மட்டுமே பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற தங்களின் நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இலங்கை வெளியுறவு துறை செயலர் பலிதா கொஹானா கூறினார்.

சூடான் கலவரம், 57 பேர் கொல்லப்பட்டனர்!

Published on: திங்கள், 2 மார்ச், 2009 // , , , , ,
தெற்கு சூடானில் இராணுவத்தினருக்கும் பிரிவினை போராளிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் சுமார் 57 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 16 பேர் பிரிவினைவாதிகளும் 18 பேர் இராணுவத்தினருமாவர். காயமடைந்தவர்களில் அதிகமானவர்களும் சாதாரண பொதுமக்களாஅவர்.

நாடாளுமன்றத்தேர்தல் தேதி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும்,என்று தேர்தல் கமிஷனர் என்.கோபால் சாமி அறிவித்துள்ளார்

முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 16-ந் தேதி தொடங்குகிறது.

2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது.

3-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 30-ந்தேதியும்,

4-ம் கட்டத் தேர்தல் மே 7-ந்தேதி,

5-ம் கட்டத் தேர்தல் மே 13-ந்தேதி நடைபெறுகிறது.

கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறும் மே-13ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது.

மே 16-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் கமிஷனர் என்.கோபால் சாமி அறிவித்தார்.

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் 61.7 பில்லியன் டாலர் நட்டம்!

அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் (AIG) 2008 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 61.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய்) நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க காப்பீட்டு நிறுவத்தின் இந்த அறிவிப்பு பங்கு சந்தைகளில் எதிரொலித்தது.

இந்நிறுவனத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசு கூடுதலா 30 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வழங்கிய பொருளாதார உதவியில் அரசிடமிருந்து அதிக உதவி பெற்ற நிறுவனம் இதுவே. இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே 150 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டன.

அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் வீழ்ச்சியடைந்தால் அது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு: +2 தேர்வுகள் இன்று தொடங்கின

தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளி தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 25-ந் தேதியும், மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 18-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ப்ளஸ் டூ எனப்படும் மேல்நிலைப்பள்ளித் தேர்வுகள் இன்று தொடங்கின. 1738 மையங்களில் நடக்கும் தேர்வுகளில் ஆறுஇலட்சத்து எண்பதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வுகளைக் கண்காணிப்பதற்காக 3000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மூத்த ஆசிரியர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள் இப்படைகளில் இடம் பெற்றிருப்பார்கள்.

தேர்வு முடிவுகளை முடிவு வெளியிட்ட உடன் இலவசமாக அறிய பள்ளிக்கல்வி இணையதளத்தில் இப்போதே மாணவர்கள் தங்கள் தேர்வு ரிஜிஸ்டர் எண் மற்றும் தங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை இப்போதே பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"தி மு க கூட்டணியில் தொடர்வோம்": திருமா

திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியை சந்தித்து வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என்றார்.

ஈழப்பிரசினையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும் காங்கிரஸ்ஸுக்கும் கடுமையான கருத்துவேறுபாடும் மோதல்களும் ஏற்பட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விடுதலைச்சிறுத்தைகளை நீக்கவேண்டும் என்று காங்கிரஸ் திமுகவை நெருக்குவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனையில் சந்தித்துவந்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் "விடுதலைச்சிறுத்தைகளை கூட்டணியிலிருந்து நீக்கமாட்டோம்" என்று தாம் காங்கிரஸை நெருக்கப்போவதாக முதல்வர் தெரிவித்தார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் "எங்களுக்கு திமுகவுடன் தான் கூட்டணி, திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணியில் இல்லை" என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரண தண்டனைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்!

மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கோரி வரும் வேளையில், மரண தண்டனைக்கு ஆதரவாக உச்சநீதி மன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பழிவாங்கலுக்காகச் செய்யப்படும் கொலைகளுக்கு வேண்டுமானால் மரண தண்டனை அளிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொலை மற்றும் அப்பாவி மக்களை கொலை செய்தல் போன்றவற்றிற்கு மரண தண்டனை விதிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் முகுந்தம் சர்மா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சார்ந்த 6 பேரைக் கொலை செய்த இருவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் மரண தண்டனையிலிருந்து வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்திருந்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த கருத்து கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கை கருணை செலுத்தத் தகுதியற்றவர்கள் மீது கருணை செலுத்தப்படும்போது பாதிக்கப்படும் என்றும் எனவே குற்றங்களின் தன்மையைப் பொறுத்து அதற்கான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அண்மைய அறிக்கைபடி இந்தியச் சிறைகளில் 400 மரண தண்டனைக் குற்றவாளிகள் இருக்கின்றனர் எனவும் இவர்களில் 120 பேர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் திரினாமுல் காங்கிரஸ் கூட்டணி?

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜியை ஞாயிற்றுக் கிழமை இரவு கொல்கத்தாவில் சந்தித்துப் பேசினார். தெற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசவ் ராவும் உடன் இருந்தார்.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே மம்தா பானர்ஜி போட்டியிட உத்தேசித்துள்ள தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற பிஷ்னுபூர் இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் போட்டியிலிருந்து விலகியது. இதனையடுத்து அத்தொகுதியில் திரினாமுல் வேட்பாளர் மதன் மித்ரா மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் இஸ்கந்தர் ஹொசைனைவிட 30, 395 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.

1977ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆளுகையில் மேற்கு வங்கம் இருந்து வருகிறது.

40 கார்களின் இசைக்கருவிகள் திருட்டு!

டில்லியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 கார்களில் இருந்த இசைக்கருவிகள் திருடப்பட்டுள்ளன. டில்லியின் மயூர் விஹார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 40 கார்களின் கண்ணாடிகளை உடைத்து திருடப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை கூறியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஒரு காரின் டிரைவர் சாவியை உரிமையாளரிடமிருந்து வாங்கி காரின் அருகே சென்று பார்த்தபோது அந்தக் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இசைக் கருவி திருடப்பட்டிருப்பதை அறிந்து காரின் உரிமையாளரிடம் சென்று கூறினார். உரிமையாளர் தன்னுடைய காரைப் பார்த்துவிட்டு அருகிலிருந்த கார்களைப் பார்த்தபோது, அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த 40 கார்களின் கண்ணாடிகளையும் உடைத்து இசைக்கருவிகள் திருடப்பட்டிருந்ததை அடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வங்கதேசம்: இராணுவப்புரட்சிக்கு பாகிஸ்தான் தூண்டல்?

வங்காளதேசத்தில் அண்மையில் துணை இராணுவமான எல்லைப் பாதுகாப்பு படையினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டு ஏராளமான அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக்கொன்றனர். இதில் 200 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைந்து விட்டாலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டதுடன் புரட்சிகாரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். விசாரணையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு புரட்சி செய்து இருப்பதும் பின்னணியில் சலாலுதீன் செளத்ரி என்ற தொழில் அதிபர் இருந்ததும் தெரிய வந்துள்ளது. சலாலுதீன் செளத்ரி சிட்டாகாங் நகரை சேர்ந்த கப்பல் நிறுவன அதிபர்.

முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு நெருக்கமான இவருக்கு பாகிஸ்தான் உளவுப்படையான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆக, சலாலுதீன் சவுத்திரி பாகிஸ்தான் மற்றும் கலீதா ஜியாவின் தூண்டு தலால் இந்த சதி திட்டத்தை நிறைவேற்றி இருப்பதாக கூறப்படுகிறது

துணை இராணுவப்படை மூலம் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொன்று விட்டு ஆட்சியை கைப்பற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டு தொடர்பாக முழுமையான விசாரணை நடந்து வருகிறது.

ஹைதராபாத்: சோனியாகாந்தி கூட்டத்தில் ரகளை

நேற்று ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கலந்து கொண்டார். மாதிகா ரிசர்வேஷன் போராட்ட சமிதி (அருந்ததியர் இட ஒதுக்கீட்டு போராட்டக்குழு) என்ற அமைப்பினர் தங்கள் இனத்தவரை தாழ்த்தப்பட்டோராக வகைப்படுத்தியதில் காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டதாகக் கூறி ரகளையில் ஈடுபட்டனர்.

உடனடியாக காவல்துறை தலையிட்டு அந்த அமைப்பினரை வெளியேற்றினார்கள். இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் மற்றொரு கோஷ்டியினர் மீண்டும் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன.
காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன

தபால் நிலையத்தில் இனி மருந்துகள் வாங்கலாம்!

இந்தியாவின் தபால்தந்தி துறை ஆண்டொன்றுக்கு ரூ.500 கோடி நஷ்டமடைவதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த நஷ்டத்தை சரிகட்டுவதற்காக அத்யாவசிய மருந்துகளையும், பிற பொருட்களையும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வந்தது.

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறை ப்படுத்தப்படலாமென்று தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களிலும் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது.

ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற தலைவலி, காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள், வைட்டமின், தாதுக்கள் மருந்து, பிற பொது மருந்துகள் இவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, சாதாரண பசை போன்ற, எழுதுபொருட்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்களும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட திட்டம் உள்ளது. சாதாரண மக்களும் இணைய தள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் இணைய தள வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர்வாசிகள் குறைந்த கட்டணத்தில், கணினி கல்வி பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பரிட்சார்த்த கட்டமாக தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தபால் நிலையங்களில் வணிக ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

மற்ற கடைகளை விட விலை குறைவாகவும் அதே சமயம், விற்பனையாளர்களுக்கு விற்பனை ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் இத்திட்டம் வெற்றி பெறும் என்று நம்புவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மன்மோகன் மேலும் ஒரு வாரம் ஓய்வில்!

இதய அறுவை சிகிச்சை செய்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

கடந்த 26ம்தேதி நாடாளுமன்றத்தின் இறுதிக்கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் பெரிதும் விரும்பியிருந்தார். எனினும் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறிவிட்டதால்
மேலும் ஒருவார ஓய்வுக்குப்பின் பிரதமர் மன்மோகன் சிங் பணிக்குத் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் தற்போது கடும் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறார்.
என்று பிரதமர் உடல்நிலைக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தியா: தேர்தல் எப்போது?

இந்தியாவின் 12 ஆம் நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும் பொதுதேர்தல் எப்போது என்ற அறிவிப்பை நடுவண் தேர்தல் ஆணையம் இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியிடும் என்று தெரிகிறது.

தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன்சாவ்லா விடுப்பில் உள்ளதால், அவர் பணிக்குத் திரும்பியதும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி ஏப்ரல் 20ம்தேதி ஓய்வு பெற இருப்பதால் தேர்தல் அதற்கு முன்பாகவே இருகட்டங்களாக நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இம்முறை தேர்தலுக்கான செலவு ரூ.15,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையரை நீக்கக்கோரிய மனு நிராகரிப்பு

இந்தியாவின் தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான நவீன்சாவ்லாவை அப்பொறுப்பிலிருந்து விலக்கிவிடும்படி தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் அந்த கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குடியரசுத்தலைவரின் இம்முடிவுக்கு பாரதியஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா மொரீஷியசுக்கு துருவ் ஹெலிகாப்டர் அளிக்கிறது!

இந்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் குறைந்த எடையுள்ள "துருவ்" ஹெலிகாப்டர்களை மொரீஷியசுக்கு விற்பனை செய்ய இந்திய அரசும் மொரிஷீயஸ் அரசும் இன்று ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த வகை ஹெலிகாப்டரில் ராக்கெட்டுகள் மற்றும் 20 mm துப்பாக்கிகளைப் பொருத்த முடியும். வான் தாக்குதலுக்கான ஏவுகணைகளையும் பொருத்த முடியும். இதன் விலை 7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இந்தியாவிலிருந்து ஹெலிகாப்டர்களை வாங்கும் இரண்டாவது நாடு மெரிஷீசியஸ் ஆகும். இதற்கு முன் ஈகுவெடார் இந்தியாவிடமிருந்து இத்தகைய ஹெலிகாப்டர்களை வாங்கியிருக்கிறது. இதுவரை ஈகுவெடாருக்கு 5 ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுவிட்டன. மேலும் இரு ஹெலிகாப்டர்கள் 6 மாதத்திற்குள் அனுப்பப்படும்.

பாராளுமன்ற தேர்தல் செலவு 10 ஆயிரம் கோடி!

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையான ரூ.10 ஆயிரம் கோடி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமானதாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் செய்த செலவுகள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 ஆயிரம் கோடி மட்டுமே.


சமீபத்திய ஆய்வின்படி தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான செலவு ரூ.10 ஆயிரம் கோடி. இதில் ரூ.2,500 கோடி வாக்களிக்கும் மக்களுக்கு அளிப்பதற்காக செலவிடப்படுகிறதாம்.

பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது செலவிடப்பட உள்ள தொகையும் கடந்த தேர்தலை விட இரண்டு மடங்காகும்.


கடந்த லோக்சபா தேர்தலில் செலவிடப்பட்ட ரூ.4500 கோடியே வரலாற்றிலேயே அதிகமானதாக கருதப்படுகிறது.

கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடி

Published on: சனி, 28 பிப்ரவரி, 2009 // , ,
கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடி

பெங்களூர், பிப். 27: கடந்த 9 மாதங்களில் முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக வாடகையாக ரூ. 4.52 கோடியை அரசு செலவு செய்துள்ளது.

மாவட்டங்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும்போது இப்போதெல்லாம் முதல்வர்கள் ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த வகையில் மற்ற முதல்வர்களை விட ஹெலிகாப்டரை முதல்வர் எடியூரப்பா அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மேலவையில் மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர் பசவராஜ் ஹொரட்டியின் கேள்விக்கு அரசு எழுத்து மூலம் பதில் அளித்துள்ளது.

இதில் முதல்வர் எடியூரப்பா 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி பதவி ஏற்றார். அன்று முதல் கடந்த 9 மாதங்களில் அரசு முறைப் பயணத்துக்கு முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் வாடகைப் பணமாக இதுவரை ரூ. 4.59 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு மே மாதம் முதல் 2006-ம் ஆண்டு பிப்ரவரி வரை முதல்வராக இருந்த தரம்சிங் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்கு அரசு ரூ. 3.75 கோடி செலவு செய்துள்ளது.

2006-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2007-ம் ஆண்டு அக்டோபர் வரை முதல்வராக இருந்த குமாரசாமி ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக அரசு ரூ. 4.94 கோடி செலவு செய்துள்ளது.

2004-ம் ஆண்டுமுதல் 2009-ம் ஆண்டு பிப்ரவரி வரை அமைச்சர்கள், அதிகாரிகள் ஹெலிகாப்டரை பயன்படுத்தியற்காக அரசு ரூ. 13.28 கோடி செலவு செய்துள்ளது என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹெலிகாப்டருக்காக குறைந்த காலத்தில் அதிக அளவில் செலவு செய்த முதல்வராக எடியூரப்பா உள்ளார்.

பீகார் வெள்ள நிவாரண உதவி: லாலு ரூ.40கோடி வழங்கினார்.

"கோசி ஆற்று வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பீகார் அரசு, மத்திய அரசு, அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என, ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை துடைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள அந்தப் பணியில் நாங்களும் பங்கேற்றுள்ளோம்" என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், ரூ.40 கோடிக்கான இரண்டு காசோலைகளை பீகார் முதலமைச்சரும் தன் அரசியல் எதிரியுமான நிதீஷ் குமாரிடம் அளித்துள்ளார்.

முதல் காசோலை இரயில்வே ஊழியர்களிடம் இருந்து ஒருநாள் சம்பளமாகத் திரட்டப்பட்ட முப்ப்த்தெட்டு கோடி ரூபாய்க்கானது. மற்றொரு காசோலை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட ரூ.இரண்டு கோடிக்கானது. இதுதவிர வேஷ்டி, சேலைகள், போர்வைகள் மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை வழங்கப்போவதாகவும் லாலு கூறினார்.

அரசியல் ரீதியான பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள இது சரியான நேரம் அல்ல என்று கூறிய லாலு,வெள்ள நிவாரண நிதியாக பீகார் அரசு கேட்ட 14 ஆயிரத்து 800 கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என, முதல்வர் நிதிஷ்குமார் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார். லாலுவுக்கு பீகார் அரசு சார்பாக நிதீஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

இந்தியா: ஹோண்டா புதிய தொழிற்சாலைத் திட்டம் கைவிடல்?

தன் இரண்டாவது இந்தியத் தொழிற்சாலையை ரூ.1000 கோடி முதலீட்டில் தொடங்க இருந்த ஜப்பானின் ஹோண்டா வாகன தயாரிப்பு நிறுவனம் அதை தற்காலம் நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கிறது.பொருளாதார மந்த நிலை காரணமாக கார்களின் விற்பனை பெருமளவில் குறைந்து போனதையடுத்து ஹோண்டா நிறுவனம் இம்முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இந்தியாவில் சீல் குரூப்புடன் சேர்ந்து ஹோண்டா சீல் கார்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஹோண்டாவுக்கு, நொய்டாவில் ஏற்கனவே ஒரு கார் தயாரிப்புத்தொழிற்சாலை இருக்கிறது. ஒரு லட்சம் கார்களை தயாரிக்கக்கூடிய வசதி இருந்தும் கூட, அந்த தொழிற்சாலை 55,000 கார்களை மட்டுமே தயாரிக்கிறது.

மட்டுமின்றி, 1,000 தற்காலிக ஊழியர்களையும் இந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

தமிழகம்: பனிமூட்டத்தால் விமான, பேருந்து சேவைகளில் தடங்கல்

மெல்ல தலைநீட்டிக்கொண்டிருக்கிறது கோடைக்காலம். இருந்தும் அதிகாலை நேரங்களில் தமிழ்நாட்டில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும்பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமான, பேருந்து சேவைகள் தடங்கலும் தாமதமும் அடைகின்றன.

நேற்று கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானமொன்று தரையிறங்குகையில் பனிமூட்டத்தின் காரணமாக பறவையொன்றுடன் மோதியதில் விமான எந்திரத்தில் பறவையின் இறக்கை சிக்கிக்கொண்டது. என்றாலும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

இன்று காலை சென்னையிலும் கடும்பனி காணப்பட்டதால்,வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குவைத்தில் இருந்து வந்த குவைத் ஏர்லைன்ஸ் விமானமும்,கொழும்பில் இருந்து வந்த ஜெட் லைட் விமானமும் பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியவில்லை. அவை பெங்களூருக்குத் திருப்பியனுப்பப்பட்டன. அதுபோல, ஷார்ஜாவிலிருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டன. விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றன.

தூத்துக்குடியில் கடும் பனி மூட்டத்தால் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் நான்கு பெண்கள் காயமடைந்தனர்.

கொல்கத்தாவிலும் இதுபோன்ற பனிப்பொழிவு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாய் ரிக்கார்ட் வீழ்ச்சி!

தொடர்ச்சியான நான்காம் நாளான நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விழ்ச்சியைச் சந்தித்தது. இதுவரை இல்லாத அளவு முதன் முறையாக டாலருக்கு 51 ரூபாய் கடந்தது.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 50.60 ரூபாய் ஆனது. அதற்குப் பின் தற்பொழுது மிக அதிகபட்சமாக 51.60 ஆக ஆகியுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளிலும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலும் டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குழந்தையின் நுரையீரலில் பல்ப்: வெற்றிகரமாக அகற்றப்பட்டது

சுமார் 2 மி.மீ நீளமும், 1 மி.மீ அகலமும் கொண்ட சிறிய பல்ப் ஒன்று சிறுமியின் நுரையீரலிலிருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இச்சம்பவம் மேற்குவங்க மாநிலம் சோனார்பூரில் நடந்துள்ளது.

சோனார்பூரை சேர்ந்த நான்கு வயது சிறுமி பிராதிமா அலிம்ஜார். கடந்த வாரம் சிறிய பல்ப் ஒன்றை தவறுதலாக விழுங்கவிட அந்தச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உணவுக்குழாயில் பல்ப் சிக்கி விட்டதாக நினைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சில மலமிளக்கிகள் கொடுத்து பல்பை வெளியேற்ற முயற்சி செய்துள்ளனர்.

அந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காததால் சிறுமி உடனடியாக கொல்கத்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

அங்கும் சிறுமிக்கு மூச்சு திணறலும், சளித் தொல்லையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பல்ப் நுரையீரலில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல்ப் அகற்றப்பட்டது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அருண்வா சென்குப்தா கூறுகையில்,

பல்ப் குழந்தையின் வலது நுரையீரலில் சிக்கி கொண்டது. அவளது நிலைமை தொடர்ந்து மோசமாகி கொண்டிருந்ததால் தான் அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்தோம். நுரையீரல் மிகவும் மென்மையான பகுதி என்பதால் பல்ப் உடையாமல் எடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம் என்றார்

இலங்கை எந்த நாட்டிற்க்கும் காலனி நாடு அல்ல-இலங்கை பிரதமர்

இலங்கையில் போரை நிறுத்தும்படி சர்வதேச நாடுகள் வற்புறுத்துவது தொடர்பாக இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரம நாயகே கூறியதாவது:-

போரை நிறுத்தும்படி பல நாடுகள் எங்களை வற்புறுத்திவருகின்றன. இதற்காக நாங்கள் வளைந்து கொடுக்க முடியாது. விடுதலைப்புலிகளை முற்றிலும் தோற்கடித்த பின்தான் போரை நிறுத்துவோம். போர் கடைசி கட்டத்தில் இருக்கும் போது எப்படி அதை நிறுத்த முடியும்?

சில நாடுகள் எங்களை போரை நிறுத்துங்கள் என்று தொடர்ந்து சொல்கின்றன. நாங்கள் அவர்களின் காலனி நாடு அல்ல அவர்கள் சொல்லை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

இலங்கை ஜனநாயக நாடு. எனவே மக்கள் சொல்வதை மட்டுமே நாங்கள் கேட்போம்.

விடுதலைப்புலிகள் அரசை எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி சர்வதேச நாடுகளோ, அல்லது அமைப்புகளோ எங்களை வற்புறுத்த கூடாது. எங்களுடைய உணர்வுகளுக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் , என்று கூறினார்.

மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் பிரச்சாரம்

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் 7ஆம் நினைவு நாளான வெள்ளிக் கிழமையன்று, மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

குஜராத் மாநில முதல்வராக குஜராத்திற்கு அவர் செய்த சாதனைகளை மறைத்து, குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனவே கோத்ரா இரயில் எரிப்பு நாளான இன்று இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது என்று மாநில பாரதீய ஜனதா கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறினார்.

"கோத்ரா அவலம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், கோத்ரா கலவரம் தொடர்பான கெட்ட நினைவுகள் வருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சாரம் மூலம் குஜராத் மாநிலத்திற்கு மோடி செய்த சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டப்படுகிறது" என்று பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

ஆனால் இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் கோத்ராவை முன்னிட்டுச் செய்யவில்லை என்றும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் இதுபோன்ற பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும், மக்களவைத் தேர்தல் அண்மித்து வருவதால் இப்பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தகவல் நுட்பப் பிரிவு தலைவர் சசிரஞ்சன் யாதவ் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று சுமார் 2 இலட்சம் மின் அஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹோலோகாஸ்ட் பிஷப்பின் மன்னிப்பை வாட்டிகன் நிராகரித்தது

ஹோலோகாஸ்டை மறுத்து வந்த இங்கிலாந்து பிஷப்பின் மன்னிப்பை வாட்டிகன் ஏற்க மறுத்துவிட்டது. தன்னுடைய கருத்தை அவர் மனப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தன்னுடைய கருத்து மற்றவர்களின் மனதை இந்த அளவு பாதிக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் என் கருத்தை நான் தெரிவித்திருக்க மாட்டேன் என்று இங்கிலாந்தைச் சார்ந்த பிஷப் ரிச்சர்டு வில்லியம்சன் தெரிவித்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் அவ்வாறு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

ஹோலோகாஸ்ட் பொய் என்பதை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதை இந்த பிஷப் தெளிவுபடுத்தவில்லை என்று யூதத்தலைவர்கள் கூறினர். பிஷப் ரிச்சர்டு உண்மையாகவே மன்னிப்புக் கேட்கவில்லை என்றும், பல பொருள்களைத் தரும் வார்த்தைகளை உபயோகித்து தந்திரத்தைக் கையாண்டுள்ளார் என்றும் யூதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

வாட்டிகன் பிஷப் ரிச்சர்டுக்கு விதித்த நிபந்தனைகளை அவர் மதித்தது போல் தோன்றவில்லை என்று வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிகோ லோம்பார்டி கூறினார்.

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் தேதியை அறிவித்தார் ஒபாமா

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக் கிழமையன்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் இராக்கிலிருந்து 16 மாதங்களுக்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பெறுவேன் என்று ஒபாமா வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதிக்கு 3 மாதங்கள் அதிகமாக 19 மாதங்களில் அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இராக்கில் தற்போது 142,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். இவர்களில் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை 2011 ஆம் ஆண்டு வரை இராக்கில் இருப்பார்கள் எனவும், மற்றவர்கள் 2010 ஆகஸ்டு மாத இறுதிக்குள் திரும்பிவிடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புஷ் அரசும் இராக் அரசும் செய்து கொண்டு ஒப்பந்தப்படி 2011 ஆம் ஆண்டு இறுதி வரை அமெரிக்கப் படையினர் இராக்கில் இருக்க வகை செய்யப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

2003ஆம் ஆண்டு முதல் இதுவரை 4,250 அமெரிக்கப் படையினர் இராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

மார்ச் 1 முதல் குறைகிறது தொலைபேசிக் கட்டணங்கள்!

Published on: வெள்ளி, 27 பிப்ரவரி, 2009 // , ,
மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.


இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.


இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதற்கிடையே - 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி, பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ். என்.எல். நிறுவனம் தெரி வித்துள்ளது. தற்போது, இந்த வசதியை வைத்து இருக்கும் சந்தாதாரர்கள் இனி மேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் பேருந்து சேவை நிறுத்தம்

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து, டாக்காவிலிருந்து கொல்கத்தா மற்றும் அகர்தலா இடையே இருந்து வந்த பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகர்தலா - டாக்கா, டாக்கா - கொல்கத்தா பேருந்து சேவை மறு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப் படுவதாக பங்களாதேஷ் சாலைப் போக்குவரத்துக் கழகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பங்களாதேஷ் நிலைமை திரிபுரா மாநிலத்தைக் கவலை கொள்ளச் செய்வதாக அம்மாநில முதல்வர் மானிக் சர்கார் கூறியுள்ளார். ஆனால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பங்களாதேஷ் எல்லையைத் தீவிரமாகக் கண்கானித்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

பங்களாதேஷுடனான வர்த்தக பரிமாற்றங்களும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக இந்திய சுங்கத் துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கோத்ரா கலவர வழக்கு மீண்டும்!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கோத்ரா கலவர வழக்கை குஜராத் காவல்துறை மீண்டும் தொடங்கி உள்ளது.

குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பாரூக் சேக் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டது. மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோத்ரா கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த 1958 வழக்குகளையும் மீண்டும் தொடர மாநில காவல்துறைக்கு உத்தரவிடடதாக அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டது.

1958 வழக்குகளில் 93 வழக்குகள் மீண்டும் தொடங்கப் பட்டுவிட்டதாகவும் மற்றவற்றில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் முழுவதையும் மீண்டும் தொடங்கி சாட்சிகளிடம் புதிய வாக்கு மூலங்களைப் பெறவும், புதிதாக விசாரணையை மேற்கொள்ளவும் 2004ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

லட்ச ரூபாய் கார் மார்ச் 23ம் தேதி முதல் விற்பனை

ஒரு லட்ச ரூபாய் காரான நானோ மார்ச் 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்த கார் டாடா மோட்டார்ஸ் டீலர்களிடம் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

ஏப்ரல் 2ம் வாரம் முதல் நானோ காருக்கான புக்கிங் தொடங்கும் என்று டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்பதிவு மற்றும் இதர நடைமுறைகள் குறித்தும் மேலதிக விவரங்கள் இத்தொடக்க விழாவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.

பாகிஸ்தான் மரியாட் நட்சத்திர விடுதியில் தீ விபத்து!

Published on: வியாழன், 26 பிப்ரவரி, 2009 // , ,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.


தீ விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்தாண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மரியாட் விடுதியின் மீது மோதச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் அயல்நாட்டினர் உட்பட 55 பேர் உயிரிழந்தனர்.


தற்கொலைத் தாக்குதல் காரணமாக கடுமையாகச் சேதமடைந்த மரியாட் நட்சத்திர விடுதி 3 மாதங்களுக்கு பின் மீண்டும் செயல்படத் துவங்கிய நிலையில், தற்போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் கருணாநிதி ராம.கோபாலன் சந்திப்பு

முதல்வர் கருணாநிதியை, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரத முடிவைக் கைவிட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

கலைஞரிடம் நலம் விசாரித்த ராம. கோபாலன், வக்கீல்கள் போலீஸாருக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும். உங்களது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சாலை விபத்துகளில் 22ஆயிரத்துக்கும் அதிகமான மரணம்!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2004 மற்றும் 2006 ஆண்டுகளுக்கிடையில் 22, 841 பேர் மரணமடைந்ததாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப் பட்டது.

கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் முனியப்பா இதனைத் தெரிவித்தார். 2004ஆம் ஆண்டு 6, 438 பேரும், 2005 ஆம் ஆண்டு 8,090 பேரும், 2006 ஆம் ஆண்டு 8,313 பேரும் மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி ஏற்பட்ட சாலை விபத்துகளில் இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 83, 937 பேர் காயமுற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு தேசிய சாலைப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றதென்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு உரிமம் அளிக்கப்படக் கூடாது என்று அப்போது முடிவெடுக்கப் பட்டதாகவும் அவர் கூறினார். அவ்வாறு உரிமம் வழங்கப்படவில்லை என்று உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் போக்குவரத்துச் செயலாளர்களும் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேட்டுக் கொள்ளப் பட்டார்கள் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

யாஹூ நிறுவனம் கைப்பெட்டியை மூடுகிறது!




உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கோப்புகளைச் சேமித்துக் கொள்ளும் சேவையான யாஹூ கைப்பெட்டி (Yahoo! Breifcase) சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இலவசமாகவும் கட்டணம் பெற்றும் இச்சேவையை வழங்கி வந்த யாஹூ நிறுவனம் வரும் மார்ச்சு மாதம் 30ஆம் நாளுடன் இந்தச் சேவையை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாகவும், அதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்கள் கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கோரியும் வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல்களை அனுப்பி உள்ளது.

கட்டணம் செலுத்தி இச்சேவையைப் பெற்றவர்கள் தங்கள் கணக்குகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறும், மிகுதியாகச் செலுத்தப் பட்டிருந்தால் திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளது.

யாஹூ மின் அஞ்சல் சேவை எல்லையற்ற சேமிப்பு வசதியைத் தருவதாலும் Flickr போட்டோ மற்றும் வீடியோ சேமிப்பு வசதிகளைத் தருவதாலும் கைப்பெட்டிச் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

வழக்குரைஞர்கள் காவலர் மோதல் விசாரிக்க உச்சநீதிமன்றக் குழு!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 19ஆம் தேதி காவல்துறையினருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன் இடைக்கால விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் வழங்கவும் கோரியுள்ளது.

காவல்துறையின் அத்துமீறல் குறித்து விசாரிக்கம் வேளை, நீதிமன்றத்திற்குள் காவலர்களை நுழைய உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்து இக்குழு ஆய்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது.

ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, குல்சாருக்கு தங்கப்பதக்கம் கேரள அரசு முடிவு

ஆஸ்கார் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலிக் கலவை நிபுணர் ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆஸ்கார் விருதை வென்ற மூவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

மூவருக்கும் வசதியான ஒரு நாளில் இந்தப் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அச்சுதானந்தன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , ,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி மகேஷ்வரி இந்த தீர்ப்பை அளித்தார். பின்னர் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அளித்ததைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.

150 பக்கங்கள் கொண்டிருந்த இந்த வழக்கின் தீரப்பை வாசித்த நீதிபதி மகேஷ்வரி, ஊழல் என்னும் புற்று நோய் இந்திய சமூகத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்தால் மொத்த சமூக அமைப்பும் கோபமுற்று அரசு திட்டங்கள் பாதிக்கப்படும். எனவே ஊழல் அரசு ஊழியர் சமூகத்திற்கு பெரிதும் அச்சுறுத்தல் என்று கூறினார்.

அரசியல் சமூக அமைப்பில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்றும் அதில் ஊழல் கலப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மாதிரியாகக் கருதப்படும் தலைவர்களே ஊழலில் ஈடுபடும்போது பொதுமக்களிடம் நேர்மையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

1991 முதல் 1996 வரை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வருமானத்திற்கு அதிகமாக 42.5 மில்லியன் சொத்து சேர்த்தது உறுதிப்படுத்தப்பட்டு அந்த தொகையை பறிமுதல் செய்யவும் நீதி மன்றம் உத்தரவிட்டது.

1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் சுக்ராமின மகன் உள்பட மொத்தம் 79 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதமர்களான தேவகவுடாவுக்கும் நரசிம்மராவுக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் சன்டையில் அப்பாவியான தனது கட்சிக்காரர் சுக்ராம் பாதிக்கப்பட்டதாக அரவது வழக்கறிஞர் மினோச்சா கூறினார்.

விண்ணில் வெடித்துச் சிதறியது அமெரிக்க விண்கலம்

தாரஸ் எக்ஸ் - எல் என்ற அமெரிக்க விண்கலமொன்று கலிபோர்னிய விண்தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது.

விண்ணில் கார்பன் டை ஆக்சைடின் சதவீதத்தை அறிவதற்காகவும், பூமியில் தட்ப வெப்ப மாற்றங்களை அறிவதற்காகவும் இவ்விண்கோள் செலுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

விண்கலம் ஏந்திச்சென்ற செயற்கைக்கோள் அதிலிருந்து பிரிவடையும் நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து நேரிட்டதாக நாசா கூறி உள்ளது. ரூ.1300 கோடி செலவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாக போய்விடும்-நீதிபதி வேதனை

பார் கவுன்சிலுக்கு தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் வேதனையுடன் கூறினார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தேசிய வழக்காடு போட்டி சென்னையில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் 16 சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ப.சதாசிவம், உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் ஆகியோர் பரிசளித்துப் பாராட்டினர்

நீதிபதி சதாசிவம், இன்றைய சூழ்நிலையில் நீதித்துறைக்கு திறமையான வக்கீல்கள் தேவைப்படுகிறார்கள். வக்கீல்கள் சட்டத்துறையில் ஏற்படும் மாற்றங்களை விரல்நுனியில் வைத்திருக்க வேண்டும். வழக்குகளில் சாதுர்யமாக வாதாடினால் வக்கீல் தொழிலில் புகழ் பெறலாம் என்று கூறினார்.

நீதிபதி ரவிராஜபாண்டியன் பேசும்போது, சட்டக் கல்வியின் வளர்ச்சி குறித்தும், வக்கீல் தொழிலில் ஒழுக்கம் மற்றும் அறநெறி பற்றியும் குறிப்பிட்டார். பார் கவுன்சிலுக்கு இதுபோன்ற சீர்மிகு சட்டக் கல்லூரிகளில் இருந்து தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று வேதனையுடன் கூறினார்.

ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம்

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் இன்று அறிவித்துள்ளது.

ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இது ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளர் பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இப்பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளதாக பல்கலைக் கழக வட்டாரம் தெரிவிக்கிறது.

பட்ஜெட் ப்ளஸ்: 29,000 கோடிக்கு வரிச்சலுகைகள்

இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில நாள்களுக்கு முன் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை ஏதும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், நிதிஅறிக்கை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்தபோது 29,000 கோடிக்கு புதிய வரிச்சலுகைகளை அமைச்சர் அறிவித்தார்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன் பேச்சில் உற்பத்தி வரி மற்றும் சேவை வரிகள் தலா 2 சதவீதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்டுமானத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சிமென்ட் மீதான உற்பத்தி வரி 2 சதவீதம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறிய ரக கார்களுக்கு 8 சதவீதமும், பெரிய கார்களுக்கு 20 சதிவீதமும் இப்போது எக்ஸைஸ் வரி விதிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலும், சிகரெட் போன்ற ஆடம்பரப் பிரிவில் வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் மருந்துகளின் விலைகளிலும் மாற்றமில்லை.

மாநில அரசுகளின் பற்றாக்குறை 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதம் வரை இருக்க் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மாநில அரசுகளுக்கு இதனால் ரூ.91,000 கோடி கூடுதல் நிதி கிடைக்கும், இந்த கூடுதல் நிதி ஆதாரத்தை அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கெனவே உற்பத்தி வரி 14 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதவி விலகல்

நடுவண் மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இன்று அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நிருபர்களிடம் 'தேர்தல், கட்சிப்பணிகளில் ஈடுபடுவதற்காக' அமைச்சர் பதவியை விட்டு நீங்குவதாகத் தெரிவித்தார்

மாநிலங்களவை உறுப்பினராக ஆந்திராவிலிருந்து ஜெய்ராம் ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்தியா: டீசல் விலை மேலும் ரூ.2 குறைகிறது?

டீசல் விலையை இரண்டு கட்டமாக ரூ.4/= குறைக்க மத்திய அரசு கடந்த டிசம்பரில் முடிவு செய்திருந்தது. அதன்படி மத்திய அமைச்சரவை கூடி முதற்கட்டமாக ரூ.2/= குறைக்க முடிவெட்டியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளையே மத்திய அமைச்சரவை கூட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டீசல் விலையை குறைத்தால் பணவீக்கம் குறையும். வாகன போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் விலை குறையும் என்பதாக அரசு எதிர்பார்க்கிறது.

ஆயினும், பெட்ரோல் விலை இப்போதைக்கு குறைக்கப்பட மாட்டாது என்றும் ரூ.10 விலை, இரண்டு கட்டமாக குறைக்கப்பட்டு விட்டது என்றும் அரசுத்தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

துருக்கி விமானம் நொறுங்கி விழுந்தது!

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 20 பேர் காயமுற்றனர்.


134 பயணிகளுடன் இருந்த அந்த விமானம் ஓடுதளத்திற்கு சற்று உயரத்தில் மூன்று துண்டுகளாக நொறுங்கி விழுந்தது என்றும் ஆனால் தீப்பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


இந்த விமானத்தில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 134 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனமும், 143 பேர் பயணம் செய்ததாக துருக்கி போக்குவரத்து அமைச்சரும் கூறியுள்ளனர்.


ஒருவர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாயின. ஆனால் உயிரிழப்புகள் குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை என விமான நிறுவன அதிகாரி கூறினார். உயிர் பலி எதுவும் இல்லை என துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் கூறினார். ஆனால் ஆறுபேர் இச்சம்பவத்தில் பலியானதாக டச்சு வானொலி தெரிவித்தது. விமானத்தின் சிதறிய பாகங்களிலிருந்து சுமார் 20 பேர் எழுந்து சென்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

இவ்விபத்து குறித்த அவசரத் தகவல்களுக்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +90 800 219 8035

நவாஸ் ஷரீஃபுக்கு விதித்த தடை உறுதி!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃபுக்கும் அவரது சகோதரர் ஷாபாசுக்க்கும் பாகிஸ்தான் அரசில் பங்கு வகிக்க நடத்தப்படும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட லாகூர் உயர் நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

நவாஸ் ஷரீஃபின் கட்சியான PML-N மேற்கு பஞ்சாபில் மிகவும் பலம் வாய்ந்ததாகும். நவாஸ் ஷரிஃபின் சகோதரர் ஷாபாஸ் தான் அங்கு முதல்வராக இருக்கிறார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஷாபாசும் பதவி விலக வேண்டி வரும்.

இந்தத் தீர்ப்பை மேல் முறையீடு செய்யவும் இயலாதவாறு மேலும் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் சதி என்று கருதுவதாக நவாஸ் ஷரீஃப் தரப்பினர் கூறியுள்ளனர்.

முந்தைய அதிபர் முஷரஃபை பதவி விலக நெருக்கடி கொடுக்க ஜர்தாரியுடன் ஒன்று சேர்ந்த நவாஸ் ஷரீஃப், முஷரஃப் பதவி விலகியவுடன் ஜர்தாரி அதிபராக உதவி செய்தார். பின்னர் அவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு இருவரும் எதிரெதிராகச் செயல்பட்டு வருகின்றனர். நவாஸ் ஷரீஃப் அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்ற முனைப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை மிரட்டி தடை உத்தரவு தீர்ப்பைத் திணித்துள்ளதாக நம்புவதற்குப் பெரிதும் இடம் இருப்பதாக நவாஸ் ஷரீஃபின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தைகளுக்கு பிளாட்

ஸ்லம் டாக் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருதீன் இஸ்மாயில் மற்றும் ருபினா ரபீக் ஆகிய குழந்தைகளுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

ஸ்லம் டாக் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை வாங்கியதை அடுத்து பல்வேறு இடங்களிலிருந்தும் அதில் நடித்த கலைஞர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இத்திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருத்தீன் இஸ்மாயில் சேக் உஸ்மான் மற்றும் ருபினா ரபீக் அஸ்கர் அலி குரேசி ஆகிய இருவருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான் நேற்று இரவு அறிவித்தார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சி மாநில முதல்வரிடம் வைத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்குழந்தை நட்சத்திரங்கள் தற்போது மும்பையின் பந்த்ரா கிழக்குப் பகுதியில் உள்ள சேரிப் பகுதியான கரீப் நகர் பகுதியில் வசித்து வருகின்றன. ருபினாவின் தந்தை ரபீக் தச்சராகப் பணியாற்றி வருகிறார். அசாருதீனின் தந்தை இஸ்மாயில் பழைய மரச்சாமான்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

காஷ்மீரில் வேலை நிறுத்தம்

கடந்த நான்கு தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்கும் முகமாய் அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவினைவாத இயக்கங்கள் இந்தக் கொலைகளைக் கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை அடுத்து ஸ்ரீநகர் மற்றம் கஷ்மீரின் முக்கிய நகரங்களில் காவல் துறை மற்றும் இராணுவம் ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

முகம்மது அமீன் தன்தாரி மற்றம் ஜாவித் அகமது என்ற இளைஞர்கள் சோபூரில் கடந்த 4 நாட்களுக்கு முன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். பிர்தோஸ் என்ற மற்றொரு இளைஞர் காயமுற்றார். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிறன்னு சோபூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்நதது.

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்பு படையினர் கிளர்ச்சி

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களது தலைமை அலுவலகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கம் துப்பாக்கிச் சன்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்கானிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டாக்கா முழுவதும் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.

இதுவரை இந்த சன்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இராணுவத்தை எந்த வகையிலும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களுடைய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாததையடுத்து இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு அதன் தலைமையகத்தில் வங்கதேசப் பிரதமர் சேக் ஹசீனா நேற்றைய தினம் விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருந்த நிலையில் இக்கிளர்ச்சி நடைபெற்றுள்ளது.

இரு தரப்பும் ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும் வங்க தேச அரசு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்றுக- உச்ச நீதிமன்றம்.


சென்னை வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.


இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. தற்போது முக்கியத்துவம் கருதி இம்மனு 25-ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர் - காவல்துரை மோதல் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடுவர் ஸ்டீவ் பக்னர் ஓய்வு

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஸ்டீவ் பக்னர் வரும் மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். 62 வயதாகும் பக்னர், 126 டெஸ்ட் மற்றும் 179 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 5 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்றதும் அவரது சாதனைகளில் ஒன்று.

62 வயதாகும் தனக்கு மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் நடுவராக செயல்பட இயலும் என்றாலும் ஓய்வு பெறுவதற்க்கு இதுவே சரியான தருனம் என்றும் தெரிவித்தார்.


வரும் மார்ச் மாதம் தென்னாப்பிரிக்க-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்குப்பின் தான் ஓய்வு பெரும் முடிவை ஐ.சி.சி. யிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறினார்.

தனது ஒய்விற்குப்பிறகு மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற விரும்புவதாகவும் ஸ்டீவ் பக்னர் தெரிவித்தார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!