Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ரன்வீர் சேனாவுக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டில் இரு பத்திரிகையளார்கள் கைது

Published on: புதன், 4 பிப்ரவரி, 2009 // , , , , ,
இந்து தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக இரு பத்திரிகையாளர்கள் உள்பட நால்வரை கைது செய்துள்ளதாக நேபாள காவல்துறை இன்று அறிவித்தது.

ரிஷி தமலா மற்றும் பிரேந்திர குமார் மகாட்டோ என்ற இந்த பத்திரிகையாளர்கள் ஆயுதம் ஏந்திய இந்து தீவிரவாத அமைப்பான ரன்வீர் சேனாவுக்கு உதவி செய்ததாக காவல்துறை கூறுகிறது. ரிஷி தமலா நேபாள நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். பிரேந்திர குமார் தனியார் வானொலி செய்தியாளர் ஆவார்.

கடந்த ஆண்டு காட்மண்டுவில் நடந்த மூன்று குண்டு வெடிப்புகளுக்கு ரன்வீர் சேனா பொறுப்பேற்றுக் கொண்டது. அதற்கு முன்வரை இத்தகைய அமைப்பு குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்த அமைப்பு கடந்த ஆண்டு திரிபுவன் பன்னாட்டு விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில், காட்மண்டு மால் என்ற வணிக வளாகம் முன் மற்றும் தர்பார் உயர்நிலைப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காவல்துறை உயர் அதிகாரி ரமேஷ் குமார் கூறினார்.

கைது செய்யப்பட்ட மற்ற இருவர் ரன்வீர் சேனாவின் உறுப்பினர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆறு வயது சிறுமியைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்கு.


உத்தரபிரதேசத்திலுள்ள இட்டாவ எனும் இடத்தில் திருடியதாக அழைத்து வரப்பட்ட ஆறு வயது தலித் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கிய இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சப் இன்ஸ்பெக்டர் சியாம்லால் யாதவ் பணி நீக்கம் செய்யபட்டார். மற்றொருவரான சந்திரபான் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிறுமியிடம் எஸ்.பி மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தையில் வைத்து தனது பையிலிருந்து 280 ரூபாயைத் திருடியதாக கோமள் என்ற சிறுமியை அஞ்சு கதாரிய என்ற பெண் ஜஸ்வந்த்பூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்த வேளையில், காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் சிறுமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு: கல்யாண்சிங் மன்னிப்பு கேட்டார்!

பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் வருத்தம் கொள்வதாகவும் செய்து போன தவறுக்காக மன்னிப்பு கோருவதாகவும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் கூறினார்.

பாஜகவிலிருந்து வெளியேறிய கல்யாண்சிங் கடந்தச் சில நாட்களுக்கு முன்னர் முலாயம் சிங்கின் கட்சியில் இணைந்திருந்தார். முலாயம் சிங்குடன் இணைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கல்யாண்சிங்கிடமிருந்து இவ்வறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"பாஜகவை அழிப்பதே இனி எனது இலட்சியம்" எனவும் கல்யாண்சிங் கூறினார். "பாபரி மஸ்ஜித் என்னுடைய ஆட்சி காலத்தில் தகர்க்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களை அகற்றி நிறுத்துவதற்கோ அவர்களை எதிரியாக கருதுவதற்கோ நான் தயாராகவில்லை" என அவர் மேலும் கூறினார். பாஜகவை விட்டு விலகியதை ஆதரித்து அநேக முஸ்லிம் நண்பர்கள் தனக்குக் கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.

முழு அடைப்பு : பஸ், ரெயில் இயக்கப்பட்டன; கடைகள் மூடப்பட்டன

இலங்கையில் போதை நிறுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. வணிகர் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும் மற்ற மாவட்டங்களில் பெருமளவும் கடைகள் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பின் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை. ஒருசில அரசு பஸ்கள் ஓடியன.  3 அரசு பஸ்கள் தாக்கப் பட்டன.

தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திருத்துறைப்பூண்டியில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் உள்பட 50 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் இரண்டு அரசு பஸ்கள் கல் வீசி சேதப் படுத்தப் பட்டன.

நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் ராஜபக்சேவின் உருவபொம்மையையும், இலங்கை தேசியக் கொடியையும் தீயிட்டுக் கொளுத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப் பட்டனர்.

திருமங்கலத்திலும் ராஜபக்சேவின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப் பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. குறைவான என்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப் பட்டன.

கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும்


கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும் என்று கிர்கிஸ்தான் அதிபர் குர்மன்பக் பகியேவ் செவ்வாய் கிழழை அறிவித்தார்.

செவ்வாய் கிழமை பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் கைபர் வழியில் உள்ள பாலத்தை தாலிபான் ஆதரவாளர்கள் வெடிவைத்து தகர்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பை கிர்கிஸ்தான் அதிபர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அறிவித்திருப்பதால் ரஷ்யாவின் தூண்டுதலினாலேயே இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கிர்கிஸ்தான் ரஷ்யாவிடம் பெற்றிருந்த  180 மில்லியன் டாலர் கடன் தொகையை ரத்து செய்துவிட்டதாகவும், மேலும் 150 மில்லியன் டாலர் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்யா கிர்கிஸ்தானுக்கு கடனாக வழங்க சம்மதித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 30 ஆயிரம் படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஒபமாவிற்கு ரஷ்யா கொடுத்திருக்கும் முதல் நெருக்கடி என்று சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவ தளமான மனஸ் என்ற இந்த தளத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரான்சைச் சேர்ந்த சுமார் 1000 இராணுவத்தினர் பணியில் உள்ளனர்.

புலிகள் சரணடைய வேண்டும் என சர்வதேச குழு வலியுறுத்தல்!

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள வேளையில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் குழு புலிகளை சரணடையும்படி வலியுறுத்தியுள்ளது. இந்தக் குழுவில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

புலிகளுக்கு மிகக்குறைவான கால அவகாசமே இருக்கிறது என்பதால் இரு தரப்பிலும் ஏற்படும் வீணான உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்காக புலிகள் சரணடைவதே சிறந்தது என அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கை அரசாங்கத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை புலிகள் தரப்பு விரைவில் தொடங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இந்த அறிக்கைக்கு புலிகள் தரப்பிலிருந்து இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

அஹமதாபாத் தொடர்குண்டு வெடிப்பு: மேலும் 5 குற்றப் பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு 57 பேரை பலிவாங்கிய அஹமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 5 குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்தது.

சர்கேஜ், மணிநகர் (2 வழக்குகள்), கலுப்பூர், வாத்வா ஆகிய பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக குற்றப் பிரிவு காவல்துறை இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கடந்த ஆண்டு ஜூலை 26 அன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் 21 குண்டுகள் வெடித்தன. குற்றப் பிரிவு ஒவ்வொரு குண்டு வெடிப்பையும் தனி வழக்குகளாகப் பதிவு செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறினர்.

சர்கேஜ் குண்டு வெடிப்பில் 54 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 47 பேர் தலைமறைவாக உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மணி நகர் குண்டு வெடிப்பில் 44 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 48 பேர் தலைமறைவாக உள்ளனர். வாத்வா மற்றும் கலுப்பூர் குண்டு வெடிப்புகளில் 43 பேர் குற்றவாளிகள் எனவும் 45 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட இக்குற்றப் பத்திரிகை ஒவ்வொன்றும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் சிமி அமைப்பினர்தான் தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கூறுகிறது.

அத்வானியின் நெருங்கிய உதவியாளருக்கு எதிராக கிரிமினல் வழக்கு!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் பொழுது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் அளித்ததாகக் கூறி பாஜக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் கோடி ரூபாய்களைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக பாஜகவின் பிரதமர் வேட்பாளரான அத்வானியின் மிக நெருங்கிய உதவியாளரான சுதீந்திரா குல்கர்ணிக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் படி டில்லி காவல்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி நடந்தது தொடர்பாக சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி பாராளுமன்ற சமிதியை நியமித்திருந்தார். இச்சமிதி வழங்கிய அறிக்கையினை டில்லி காவல்துறைக்கு வழங்கிய மத்திய அரசு, குல்கர்ணி உட்பட மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தர்விட்டது. மேலும், கடந்த கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாளில் பாஜக தலைமையகத்தில் இருந்து திருட்டுப் போன இரண்டு கோடி ரூபாய்க்கும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் கொண்டுவந்த பணத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பதைக் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பாஜக அலுவலகத்தில் பணம் திருட்டுப் போன அறையைப் பரிசோதிக்க அனுமதி தர வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் டில்லி காவல்துறை ஆணையர் அனுமதி கோரியுள்ளார். இத்திருட்டு சம்பவம் தொடர்பாக பாஜக காவல்துறையில் புகார் எதுவும் அளிக்காதது குறிப்பிடத் தக்கது.

பெங்களூரூவில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட தீவிரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்று கர்நாடக மாநிலத்தலைநகர் பெங்களூரூவில் அரண்மனை மைதானத்தில் நடந்தேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜமியியத் யே உலமாயே ஹிந்த் என்ற முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஹிந்து, இஸ்லாமிய அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

தீவிரவாதம் அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்க்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் மக்களிடம் பெறப்பட்டது.

ஜம்யியத்துல் உலமா யே ஹிந்த் தலைவர் சையத் முஹம்மத் உஸ்மான், பாராளுமன்ற உறுப்பினர் மெளலானா மஹ்மூது மதனி, ஆரிய சமாஜின் சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், ஹிந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ்பட் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சார்பற்று செயல்படுவதற்கும், அண்மைக்காலத்தில் புதிதாக அறிய வந்துள்ள தீவிரவாதங்களின் கைவரிசைகள் குறித்த நேர்மையான விசாரிப்புக்கும் இம்மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!