அத்வானியின் நெருங்கிய உதவியாளருக்கு எதிராக கிரிமினல் வழக்கு!
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் பொழுது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் அளித்ததாகக் கூறி பாஜக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் கோடி ரூபாய்களைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக பாஜகவின் பிரதமர் வேட்பாளரான அத்வானியின் மிக நெருங்கிய உதவியாளரான சுதீந்திரா குல்கர்ணிக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் படி டில்லி காவல்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி நடந்தது தொடர்பாக சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி பாராளுமன்ற சமிதியை நியமித்திருந்தார். இச்சமிதி வழங்கிய அறிக்கையினை டில்லி காவல்துறைக்கு வழங்கிய மத்திய அரசு, குல்கர்ணி உட்பட மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தர்விட்டது. மேலும், கடந்த கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாளில் பாஜக தலைமையகத்தில் இருந்து திருட்டுப் போன இரண்டு கோடி ரூபாய்க்கும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் கொண்டுவந்த பணத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பதைக் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பாஜக அலுவலகத்தில் பணம் திருட்டுப் போன அறையைப் பரிசோதிக்க அனுமதி தர வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் டில்லி காவல்துறை ஆணையர் அனுமதி கோரியுள்ளார். இத்திருட்டு சம்பவம் தொடர்பாக பாஜக காவல்துறையில் புகார் எதுவும் அளிக்காதது குறிப்பிடத் தக்கது.
0 comments