Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இராக்: அமெரிக்க இராணுவம் திரும்பப் பெறப்படும்.

Published on: செவ்வாய், 3 பிப்ரவரி, 2009 // , , , , , , , ,
கடந்த 2003-ம் ஆண்டு இராக் மீது தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது முதல் அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இப்போது அந்த நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். அங்கு இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கர்கள் உட்பட பல நாட்டினரும் கோரி வந்தனர். இதற்கு முந்தைய ஜனாதிபதி புஷ் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா, மாதம் ஒன்று அல்லது இரண்டு படைப்பிரிவு என்ற அடிப்படையில் 16 மாதத்துக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க இராணுவத்தை திரும்பப் பெறுவோம் என்று உறுதி மொழி கொடுத்திருந்தார்.

என்.பி.சி. டி.வி சேனலுக்கு அளித்த சமீப பேட்டியில், ஒரு ஆண்டு காலத்துக்குள் பெரும் அளவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் ஈராக்கியர்கள் மீது மேலும் அதிகமான பொறுப்புகளை சுமத்தக்கூடிய நிலையில் தாங்கள் இருப்பதாகவும் ஒபாமா கூறி உள்ளார்.

அதே நேரம், ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்திற்கும் அதிகப்படுத்தப்படுத்தலாமா என்று ஒபாமா நிர்வாகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் வாஜபேயி.

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி இன்று இரவு அகில இந்திய விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் இதயக்கோளாறு காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு 10.00 மணிக்கு ஐசியூ என்று சொல்லப்படும் இண்டென்சிவ் கேர் யூனிட்டில் வாஜ்பாய் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக ஏஐஎம்எஸ் கண்காணிப்பாளர் மருத்துவர் D K ஷர்மா தெரிவித்துள்ளார்.

84 வயதாகும் வாஜ்பேயி உடன் அவருடைய பிரத்யேக மருத்துவர் ரந்தீப் குலேரியா மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டுள்ளார்.

பா ஜ க தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அரசியல் வானில்: மனிதநேய மக்கள் கட்சி பிப்.7ல் உதயம்.

தேர்தல் அரசியலில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தன் ஆதரவில் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை பிப்ரவரி 7ம் தேதி துவக்குகிறது. இதற்கான துவக்கவிழா தாம்பரத்தில் நடக்கிறது.

இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா நிருபரிடம் கூறுகையில்,

தமுமுக ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாடு 7ம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்பட இருக்கிறது. துவக்க விழா மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமுமுக சமூக சேவை அமைப்பாக தொடர்ந்து செயல்படும்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.

ராமநாதபுரம், வேலூர், நெல்லை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவற்றில் எதாவது இரண்டு தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்
என்றார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்.

இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன கிளை அலுவலகம் திருச்சி நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் செயற்பட்டு வருகிறது.

நேற்றுமாலைஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்ற 10க்கும் மேற்பட்ட ஆட்கள் இலங்கை அரசுக்கும், ராணுவத்திற்கும் எதிராக கோஷமிட்டபடி தாக்குதலில் இறங்கினர்.

அலுவலக கண்ணாடி கதவுகள், விளம்பர போர்டுகளை தாக்கி சேதப்படுத்தினர். கதவுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அலுவலகத்திற்குள் பணியில் இருந்த இரு ஊழியர்களும் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் சென்று விட்டனர்.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம்: நாளைய முழுஅடைப்புக்கு தடை இல்லை.

நாளை தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த முழுஅடைப்பு என்று கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் சரவணகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நாளை சில அரசியல் கட்சிகள் ஆதரவுடன் `முழுஅடைப்பு' நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை உச்சநீதிமன்றம் சட்ட விரோதம் என அறிவித்து பந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனதுமனுவில் கோரியிருந்தார்.

இன்று பிற்பகல் இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் வேலை நிறுத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.

நீதிபதிகள் அளித்த உத்தரவில், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்.அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை உள்ளதுஎன்று தெரிவித்துள்ளனர்.

இம்மனு மீதான அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடரை இந்தியா கைப்பற்றியது.

இலங்கையுடனான ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் அடங்கிய தொடரில், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது.

முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற உற்சாகத்தில் களம் இறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் கவுதம் கம்பீர் மற்றும் தெண்டுல்கர் இருவரின் முக்கிய விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்து சரிவைச் சந்தித்த போதிலும் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியா 364 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் இணைந்து 214 ரன்கள் குவித்தனர். வீரேந்திர சேவாக் 116 ரன்களும் யுவராஜ் சிங் 117 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணிக்கு எந்த ஒரு கட்டத்திலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை வழங்காமல் இந்தியா ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில் 147 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய ஏற்றுமதித் துறையில் 15 லட்சம் பேர் வேலை இழக்க நேரலாம்!

'இந்தியாவில் ஏற்றுமதி சார்ந்த துறைகளில் பணி புரிவோரில் சுமார் 15 லட்சம் வேலை இழக்க நேரலாம்' என மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குவதால் அந்நாடுகளிலிருந்து வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதித் துறை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த பிள்ளை, இதே நிலை தொடர்ந்தால் மார்ச் மாதத்திற்குள் மேலும் 5 லட்சம் ஊழியர்கள் வேலையை இழக்கக் கூடும் என்றும் கூறினார்.

ஜவுளி மற்றும் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப் படும் என்று அவற்றில் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலும் உருவாகலாம் என்று அவர் அப்பேட்டியில் தெரிவித்தார்.

மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல்


முல்லைத் தீவு அருகே உள்ள புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்றும் இதுவரை மருத்துவ மனையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 12 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 30க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

சுமார் 2,50,000 தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக சேவை நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் அப்பகுதியில் 1,20,000 பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.

மக்கள் பாதுகாப்பான பகுதிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான பகுதி என்று எதுவும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தியாளர் கர்லா ஹத்தாத் தெரிவித்தார்.

சொந்த தயாரிப்பில் இரான் செயற்கை கோள் அனுப்பியது

இரான் முதன் முறையாக தன்னுடைய நாட்டில் தயாரான செயற்கைக் கோளை இன்று காலை விண்ணில் ஏவியது. ஒமிட் (நம்பிக்கை) என்று பெயரிடப் பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் சபீர் 2 என்ற உள்நாட்டில் தயாரான ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இரானில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.

2005ஆம் ஆண்டு இரானின் செயற்கைக் கோளை ரஷ்யா விண்ணில் ஏவியது. பின்னர் சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து 2008 ஆம் ஆண்டு செயற்கைக் கோளை ஏவியிருக்கிறது.

500 ரூபாய்க்கு மடிக்கணினி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் மடிக்கணினி இன்று திருப்பதியில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதன் விலை 10 அமெரிக்க டாலர்கள் (சுமார் 500 ரூபாய்) என்று கூறப்படுகிறது.

கணினியைப் பயன்படுத்துவதில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் களைவதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றாய் இக்கணினி அமையும்.

VIT (Vellore Institute of Technology), சென்னை ஐ.ஐ.டி. ஆகிய நிறுவனங்கள் இணைந்து இக்கணினியை வடிவமைத்துள்ளன. கணினியின் வடிவமைப்பு குறித்து விரிவான தகவல்கள் இல்லை எனினும் 2 ஜி.பி மெமோரி, வைஃபி, ஈதர்நெட் போன்ற வசதிகளுடன் இக்கணினி அமையும் என்று கூறப்படுகிறது.

எடியூரப்பா மனைவி மரணம் குறித்து மறு விசாரணை!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் மனைவி மைத்ரா தேவி கடந்த 2004-ம் ஆண்டு ஷிமோகா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் தண்ணீர் தொட்டி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி அப்போது காவல்துறையினர் விசாரணை செய்து வழக்கையும் மூடி விட்டனர்.

ஷிமோகாவைச் சேர்ந்த ஆர் சேஷாத்ரி என்ற வழக்குரைஞர், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மறு விசாரணை செய்யும்படி நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்குரைஞர் சேஷாத்ரி, இந்த மரணம் ஒரு கொலை என்றும் உண்மைகள் மறைக்கப்பட்டு சாட்சியங்கள் திரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறார். எடியூரப்பா, அவரது மகள், இரண்டு மகன்கள், பணியாளர்கள் அனைவரும் காவல் துறையினருக்குத் தவறான தகவல்களைத் தந்து திசை திருப்பி விட்டனர் என்றும் தெரிவிக்கிறார்.

முதல்வர் எடியூரப்பா இது பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

குஜராத் அமைச்சர் தலைமறைவு?

குஜராத்தில் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவரும் மற்றும் ஒரு மருத்துவரும் தலைமறைவாக இருப்பதாக கோத்ரா கலவரம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலணாய்வுக் குழு அறிவித்துள்ளது.

மாயாபின் கோட்னானி என்ற அந்த அமைச்சர் குஜராத் மாநில பெண்கள் முன்னேற்றம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். ஜெய்தீப் பட்டேல் என்பவர் விசுவ இந்து பரிசத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த இருவருக்கும் சிறப்பு புலணாய்வுக் குழு விசாரணைக்கு வருமாறு அறிவிக்கை அனுப்பியது. அந்த அறிவிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் இருவரும் கைது செய்யப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மாயாபின்னுக்கு ஜனவரி 29 மற்றும் 31 ஆம் தேதி அறிவிக்கை அனுப்பினோம். அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே அவர் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கிறோம். அவர் கைது செய்யப்படக் கூடும் என்று சிறப்புப் புலணாய்வுக் குழு உறுப்பினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி விமானக் கடத்தல் முயற்சி!

சென்ற ஞாயிறு மாலை கோவாவிலிருந்து புதுடில்லி வந்துக் கொண்டிருந்த விமானத்தை ஒரு கும்பல் கடத்த முயல்வதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து டில்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

5.29 மணியளவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டு ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. விமானத்தைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தி வைக்கப் பட்டனர். பிறகு பயணிகளை பத்திரமாக வெளியேற்ற முடிவு செய்யப் பட்டது. 8:30 மணியளவில் கமாண்டோக்களின் பாதுகாப்போடு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜிதேந்திரா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமீர், ஹர்ப்ரீத் என்ற மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப் பட்டனர்.

பிரிட்டனில் சீன அதிபர் மீது காலணி வீசப்பட்டது!

சீன அதிபர் வென் ஜியாபோவின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் ஒரு அங்கமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது பார்வையாளர்களுள் ஒருவர் அதிபரை நோக்கி தம் காலணியை கழற்றி வீசினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

சீன அதிபர் உலகமயமாதலில் சீனாவின் பங்கு பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தபோது இச்சமபவம் நிகழ்ந்தது. ஐரோப்பியரைப் போல தோற்றம் கொண்ட ஒரு நபர் எழுந்து, 'இந்தச் சர்வாதிகாரி சொல்லும் பொய்களை உங்களால் எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடிகிறது? இதை நீங்கள் எதிர்த்துக் கேட்க வேண்டாமா?' என பார்வையாளர்களை நோக்கி கூச்சலிட்ட வண்ணம் தனது காலணியைக் கழற்றி அதிபரை நோக்கி வீசினார். அது குறி தவறி மேடையில் அதிபரின் ஒரு கஜ தூரத்தில் விழுந்தது.

கேம்பிரிட்ஜ் நகர காவல்துறையினர் 27 வயதான அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!