Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்

Published on: புதன், 28 ஜனவரி, 2009 // , , , ,
ஜம்மு கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சன்டைகளில் அல் படர் தலைவர் உள்பட இரு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். ஒரு இராணுவ வீரர் பலியானார்.

நேற்று இரவு அமர்கர் எனும் கிராமத்தில் இராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இருந்த போது ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் இராணுவத்தினரை நோக்கிச் சுட்டனர்.  பின்னர் துப்பாக்கிச் சன்டையை நிறுத்தியிருந்த இராணுவம் அதிகாலையில் மீண்டும் துவக்கிய போது அந்த வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதி கொல்லப்பட்டார். இதில் சோஹன் சிங் என்ற இராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்றொரு வீரர் காயமுற்றார்.

கொல்லப்பட்ட தீவிரவாதி அல்படர் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபூ ஹம்சா ஆவார்.

நேற்று பகிஹாரா என்ற கிராமத்தில் நடந்த மற்றொரு சன்டையில் அடையாளம் தெரியாத தீவிரவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கு கஷ்மீரின் பன்டிபுரா மாவட்டத்திலும் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சன்டை நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி முடிவாகவில்லை - தேர்தல் ஆணையம்

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப் படவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 8 மற்றும் மே 15 ஆகிய நாள்களுக்கு இடையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி கூறியதாக நேற்று தகவல்கள் வந்தன.

லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் நேற்று 'ஜம்மு காஷ்மீர் தேர்தல் 2008' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய தேர்தல் ஆணையர் குரேஷி, தேர்தல் தேதி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப் படவில்லை என்றும், ஏப்ரல் 8 மற்றும் மே 15 ஆகிய தேதிகளுக்குள் நடைபெறும் என்றும் கூறினார்.

14ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

கழிவறையில் தண்ணீரைப் பயன்படுத்திய ஊழியர் பணி நீக்கம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்று தனது ஊழியர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்தியதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

43 வயதான பிலிப்பைனைச் சேர்ந்த அமடார் பெர்னாபே என்பவர் ஆஸ்திரேலியாவில் டவுன்ஸ்வில்லே இன்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் இயந்திர கையாளுராகப் பணியாற்றி வருகிறார். இவர் கழிவறையில் காகிதத்திற்குப் பதில் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ததல் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று உள்ளூர் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டது.

அவர் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்று மறுத்த அந்நிறுவனத்தின் மேலாளர், அவருடைய செயல்கள் சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பல முறை அவரிடம் அவருடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டாகத் தெரிவித்தார். அவருடைய செயல் கழிவறைப் பிரச்சனை மட்டுமல்ல. மற்ற பணியாளர்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது என்றும் மேலாளர் கூறினார்.

ஓரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழப்பு

ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் வேலையிழக்கப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக உலகப் பொருளாதாரம் பலத்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்கள் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றன. திங்கள் கிழமை பல்வேறு நிறுவனங்களும் அறிவித்த ஆட்குறைப்பு உலகப் பொருளதார பாதிப்பை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

கட்டுமான இயந்திர தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான கேட்டர்பில்லர் நிறுவனம் தன்னுடைய பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. பிஜர் என்ற மருந்து நிறுவனம் 26 ஆயிரம் பேரையும், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹோம் டிபோட் என்ற நிறுவனம் 7 ஆயிரம் பணியாளர்களையும், ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் எனும் தொலைத் தொடர்பு நிறுவனம் 8 ஆயிரம் பேரையும் நீக்க முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு அறிவிப்புகளை செய்துள்ளன.

அமெரிக்கர்கள் விரோதிகள் அல்லர் - ஒபாமா

Published on: செவ்வாய், 27 ஜனவரி, 2009 // , , , ,
அமெரிக்காவின் முதல் குடிமகனாக தேர்வு பெற்ற பராக் ஒபாமா தன்னுடைய முதல் தொலைக்காட்சி நேர்காணலை இன்று துபாயிலிருந்து செயற்படும் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளார்.

அதில் மிகவும் ஆறுதலளிக்கும் குரலில் " அமெரிக்கர்கள் உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விரோதிகள் அல்லர்" என்று அவர் கூறியுள்ளார். "முஸ்லிம்களிடத்தில் இச்செய்தியை வழங்குவது தமது கடமை" என்றும் குறிப்பிட்டுள்ள அவர் "பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையேயான பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

"நாம் சிலநேரம் தவறு இழைத்து விடுகிறோம்" என்ற ஒபாமா 'அமெரிக்கர்களுக்கும் முஸ்லிம் உலகத்திற்கும் இடையே கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நல்லுறவு மீட்டெடுக்கப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலத்தின் அதிகாரத் தோரணை மாறி புரிந்துணர்வுத் தோழமையை மேற்கொள்ளும் தொனியை ஒபாமாவின் இந்த பேட்டி அளித்ததாக அல் அரேபியா ஆங்கில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஒபாமாவின் சிறப்புத்தூதராக ஜார்ஜ் ஜே.மிட்சல் எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஃபிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் மீது குண்டர் சட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த சனிக்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஸ்ரீராம் சேனை என்ற அமைப்பினர் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் துணைத் தலைவர் பிரசாத் அட்டவார் உள்பட 27 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குண்டர் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வர முடியாது. மேலும் அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே காவல் துறையின் காவலில் 6 மாதத்திற்கு வைத்திருக்க முடியும்.

பிணையில் வர முடியாத எட்டு வழக்குகள் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதிவு செய்துள்ளதாகவும் கர்நாடக மேற்கு சரக டி.ஐ.ஜி கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க இவர்கள் மீது குண்டர் சட்டதத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யூனுஸ்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக யூனுஸ்கான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணிபெற்ற மோசமான தோல்வியைத் தொடர்ந்து எழுந்த கடுமையான விமர்சனத்தின் காரணமாக, தற்போதைய கேப்டன் சுஹைப் மாலிக்கை மாற்றியதாக தெரிகிறது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை - அரசு முயற்சியைத் தொடங்கியது

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பெரும் பணியை மேற்கொள்வதற்காக தனி ஆணையத்தை இந்திய அரசு ஏற்படுத்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 120 கோடி இந்தியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை இந்த ஆணையம் கண்கானிக்கும்.

ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கான தேசிய ஆணையம் (National Authority for Unique Indentify - UID) திட்டக் குழுவுடன் இணைந்து அடையாள எண்களைத் தரும். உள்துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை பதிவளார் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவர் மற்றும் மாநில அதிகாதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த அடையாள எண்கள் வழங்கப்படும். படிப்படியாக வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்கப்படும்.

தவறுகளைக் களைவதற்காக அடையாள அட்டையில் புகைப்படமும், இரத்தப் பிரிவு போன்ற தகவல்களும் இடம்பெறும். புதிதாக பதிவு செய்வதற்கோ அல்லது தகவல்களில் மாற்றம் செய்வதற்காக எளிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் மரணம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இன்று மதியம் டெல்லியில் மரணமடைந்தார்.

இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார கால அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து ஒரு வார காலத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.

வெங்கட்ராமன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், ஆர்.வெங்கட்ராமன் நாட்டு அரசியலிலும் - இந்திய தேசிய அரசியலிலும் தனி வரலாறு படைத்தவர். அவரது மறைவு ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

போதைப் பொருளுடன் காவல்துறை உயர் அதிகாரி கைது

Published on: திங்கள், 26 ஜனவரி, 2009 // , , , , , ,
ஞாயிற்றுக் கிழமை மும்பை தீவிரவாத தடுப்பு காவல் படை (ATS) 12 கிலோ ஹெராயின் வைத்திருந்த ஜம்மு கஷ்மீர் படைப்பிரிவைச் சார்ந்த இந்திய காவல் பணியின்  (IPS) அதிகாரி ஒருவரைக் கைது செய்துள்ளது.

ஷாஜ்ஜி மோகன் என்றறியப்படும் அந்த அதிகாரி திங்கள் கிழமை அதிகாலையில் வடக்கு மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்ட்ட ஹெராயினின் மதிப்பு இந்திய சந்தையில் 12 இலட்சம் எனவும் வெளிநாட்டுச் சந்தையில் 1கோடியே 20 இலட்சம் எனவும் தீவிரவாத தடுப்புப் படையின் தலைமை அதிகாரி ரகுவன்ஷி கூறினார்.

ஜனவரி 17ஆம் தேதி ஹரியானா காவல்துறையால் 1.500 கிலோ ஹெராயின் கைது செய்யப் பட்ட ராகேஷ் குமார் மற்றும் விக்கி ஓபராய் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மோகன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து போதைப் பொருள் மட்டுமின்றி மடிக்கணினி ஒன்றும் சில சிடிகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஷஜ்ஜி மோகன் சண்டிகரில் போதைப் பொருள் தடுப்புத் துறையில் தொகுதி இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார். இன்று மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக இவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி இவரை இம்மாதம் 30ஆம் தேதிவரி காவல்துறையின் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

60ஆவது குடியரசு தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்



இந்தியாவின் 60வது குடியரசு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார். ராஜ்பத்தில் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ராஜ்பத்தில் குடியரசு தின விழா தொடங்கியது. கஜக்ஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நசர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் 24 முறை பீரங்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன.

பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்காக வீரமரணம் அடைந்த 11 பேருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரேவின் குடும்பத்தினர் உள்பட 11 பேரின் குடும்பத்தினர் இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையினரின் அணிவகுப்பு, காவல் துறையினரின் அணிவகுப்பு. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் முக்கியத் தலைவர்களும் வெளிநாட்டுத் தலைவர் மற்றும் தூதரக அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு 
ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. சுமார் 15000 துப்பாக்கி ஏந்திய காவலர்களும் 5000 துணை இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

தமிழகத் தலைநகர் சென்னையில் மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தமிழக முதல் கருணாநிதியின் உடல் நலக் குறைவால் அவர் இந்நிகழ்வில் பங்கு பெறவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு வீர தீரச் செயல் புரிந்தோருக்கு விருதுகளை வழங்கினார்.

வாசகர்களுக்கு இந்நேரம் குழுமம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்ரேலியப் படையினருக்கு சட்டப் பாதுகாப்பு - ஒல்மர்ட்

சமீபத்தில் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து அங்குப் பெருமளவு சேதங்களை விளைவித்தது. இஸ்ரேலியப் படையினர் ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் இருக்கும் குடியிருப்புகளின் மீது சர்வதேசப் போர் நடைமுறைகளை மீறிக் கடும் தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தின.

இதனையடுத்து 'ஹேக்'கில் இருக்கும் பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியப் படையினர் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்போவதாக தொண்டுநிறுவனம் ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் அவ்வாறு வழக்குத்தொடுக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எந்த ஓர் இஸ்ரேலியப் படையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய அரசு அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

சர்வதேசப் போர் நடைமுறைகளின் படி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸாவில் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசு, அதனைப் பொதுமக்கள் மீது வீசவில்லை என மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கஞ்சா பயன்படுத்தல் குற்றம் என பிரிட்டன் மீளறிவிப்பு!

கஞ்சா பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றம் என மீண்டும் பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் போதை அளிக்கும் வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பிரிவில் முன்னதாக கஞ்சா B பிரிவு வேதிப்பொருள் என அறிவிக்கப்பட்டிருந்தது. டோனி பிளேய்ர் பிரதமராக இருந்த போது 2004 ஆம் ஆண்டு கஞ்சா C பிரிவில் நகர்த்தப்பட்டது.

பிரிட்டனின் சட்டப்படி C பிரிவு போதை மருந்துகளை வைத்திருப்பவரை சட்டம் ஒழுங்கு காவலர்கள் அறிவுறுத்த மட்டுமே முடியும். அவர்கள்மீது வழக்குத் தொடுக்கவோ தண்டனை பெற்றுத் தரவோ இயலாது.

தற்போது கஞ்சா B பிரிவு வேதிப் பொருள் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கஞ்சாவை வைத்திருப்பதோ பயன்படுத்துதலோ குற்றம் என்ற பிரிவில் அடங்கும். கஞ்சாவின் புழக்கம் பிரிட்டிஷ் சமூகத்தில் பெருமளவு அதிகரித்துவிட்டதால் கார்டன் பிரவுன் இந்த அறிவிப்பை அளிக்கப் பரிந்துரை செய்தார்.

இதன்படி முதல்முறை விதி மீறுவோருக்கு எச்சரிக்கையும், அவரே இரண்டாம் முறை பிடிபட்டால் 80 பவுண்டு அபராதமும், மூன்றாம் முறை பிடிபட்டால் சிறைத் தண்டனையும் அளிக்க்கப்படும்.

ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம்

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியை மீண்டும் அளிக்க முடிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு உலகளாவிய அளவில் அமெரிக்க அரசு நிதி உதவி செய்து வந்தது. இந்த நிதி உதவிக்கு கடந்த புஷ்ஷின் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டது. ஒபாமா பதவியேற்றதும் கடந்த வெள்ளிக் கிழமையன்று இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.
 
வாழ்க்யையும் மரணத்தையும் தாங்கள் தீர்மாணிக்க முடியும் என்ற எண்ணும் ஆட்சியாளர்களுக்கு வாட்டிகன் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிரான செயல் கருக்கலைப்பு என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

வியட்னாம் படகு விபத்தில் 40 பேர் பலி!

வியட்னாமின் தலைநகர் ஹனோயிலிருந்து தெற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள மத்திய குவாங் பின் பிரதேசத்திலுள்ள கியான் ஆற்றில் நிகழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பொருள்கள் வாங்க அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த படகில் அளவிற்கு அதிகமாக பயணிகள் ஏற்றப் பட்டிருந்தனர். 20 பேர் மட்டுமே பயணம் செய்ய உரிமம் வழங்கப் பட்டிருந்த அப்படகில் 80-ற்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. படகு கரையை நெருங்கியபோது விரைவாக படகிலிருந்து இறங்குவதற்காக பெரும்பாலான பயணிகள் முண்டியத்துச் சென்றபோது எதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்தது.

ஆற்றிலிருந்து இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. அவர்களுள் இரு கர்ப்பிணிகளையும் சேர்த்து 32 பேர் பெண்கள். 36 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். காணாமல் போன மேலும் சிலரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

விடுதலைப்புலிகளின் வசமிருந்த முக்கியப் பகுதியான முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. தொலைக்காட்சியி்ல் பேசிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முல்லைத்தீவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார். விடுதலைப் புலிகள் இப்போது 15 அல்லது 20 கிலோ மீட்டர் பகுதியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய நிலையி்ல் முல்லைத் தீவை இழந்திருப்பது விடுதலைப்புலிகளுக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் முல்லைத் தீவை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. முல்லைத் தீவு மீட்டுப் பணியில் 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக சனிக்கிழமை இலங்கை இராணுவம் முல்லைத் தீவை நோக்கி வரும்போது கல்மடுக்குளம் அணைக்கட்டைத் தகர்த்தனர். இதில் சுமார் 4000க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் காலரா பரவுகிறது

Published on: ஞாயிறு, 25 ஜனவரி, 2009 // , , ,
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் பல நாடுகளில் பரவி வந்த காலரா தற்போது தென் ஆப்ப்ரிக்க நாட்டையும் தாக்கி உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் முதலில் பரவத் தொடங்கிய காலரா அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் பரவியது.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற குரூகர் தேசியப் பூங்காவில் காலரா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பூங்காவின் சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என அரசு அலுவலர்கள் கூறினாலும், இப்பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்காக வழங்கப்படும் குடிநீரிலும் இக்க்கிருமிகள் தென்பட்டதாக சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

ஒவ்வோராண்டும் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குரூகர் தேசியப் பூங்காவிற்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜிம்பாப்வேயில் கடந்த ஆகஸ்டு முதல் 3000க்கும் அதிகமானோர் காலரா தாக்கி இறந்துள்ளனர் என்பது கவலையளிக்கும் தனித் தகவல்.

சத்யம் நிறுவன தணிக்கையாளர்கள் கைது!

சத்யம் நிறுவனத்தின் தணிக்கையாளர்களான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற பன்னாட்டு தணிக்கை நிறுவனத்தின் இரு மேலாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

சத்யம் நிறுவன கணக்கு வழக்குகளில் 8000 கோடி ரூபாய் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது வெளியானதைத் தொடர்ந்து அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு இம்மாதத் துவக்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் பற்றிய விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்பில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரினிவாஸ் தலுரி ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

"சத்யம் நிறுவனம் தொடர்பான விசாரணகளுக்கு எங்கள் குழு முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைது நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" என தணிக்கை நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இந்தியா - கஜகஸ்தான் : நான்கு ஒப்பந்தங்கள்

இந்தியா - கஜகஸ்தான் இடையே 4 அரசாங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

மத்திய ஆசியாவில் யுரேனியச் செறிவு மிக்க நாடான கஜகஸ்தான் உலகின் யுரேனிய உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நாட்டுடன் இந்தியா குடிமை அணுசக்தி ஒப்பந்தம், குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி யுரேனியம் சார்பொருட்களை கஜகஸ்தான் இந்தியாவுக்கு வழங்கவும், அணுசக்தி நிலையங்களை இந்தியா கஜகஸ்தானில் நிர்மாணிக்கவும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புது டெல்லியில் இருநாட்டு குடியரசுத்தலைவர்கள் பிரதீபா பாட்டீலும், நூருல் இஸ்லாம் நஸர்பயேவ்வும் இவ்வொப்பந்தங்களை மேற்பார்வையிட்டனர்.
"இவை இருநாட்டுகளிடையேயான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும்" என்று நமது செய்தியாளர்களிடம் நஸர்பயேவ் பின்னர் தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பிலும், உலக வர்த்தக அமைப்பில் கஜகஸ்தானுக்கு இடமளிப்பது குறித்தும் மற்ற இரு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

25 இந்திய கடற்பிரயாணிகள் விடுவிப்பு

Published on: //
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இருமாதங்களாக பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 25 இந்திய கடற்பயணிகளும், மூன்று வங்கதேசத்தவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வேதிப்பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலான M T பிஸ்காலிகா என்ற லைபீரிய கப்பலிலிருந்து ஏடன் வளைகுடா அருகே கடந்த நவம்பர்28 அன்று இவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

இத்தகவலை தேசிய கடற்பிரயாணிகள் நல ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அப்துல்கனி செராங் தெரிவித்துள்ளார். "அனைவரும் நலமாக உள்ளனர்" என்றார் அவர்.

தொடக்கத்தில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்கள் பிணைத்தொகை கோரியிருந்த கொள்ளையர்கள், பின்னர் அதை 25இலட்சம் டாலர்களாக ஏற்றிக்கேட்டிருந்தனர். எனினும், விடுவிக்கப்படுவதற்கு முன்பாக பிணைத்தொகை வழங்கப்பட்டது பற்றி தெரிய வரவில்லை.

கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட 18 இந்தியர்களுக்குப் பிணைத்தொகையாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இக்கொள்ளையர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!