இந்தியா - கஜகஸ்தான் : நான்கு
இந்தியா - கஜகஸ்தான் இடையே 4 அரசாங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
மத்திய ஆசியாவில் யுரேனியச் செறிவு மிக்க நாடான கஜகஸ்தான் உலகின் யுரேனிய உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நாட்டுடன் இந்தியா குடிமை அணுசக்தி ஒப்பந்தம், குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்படி யுரேனியம் சார்பொருட்களை கஜகஸ்தான் இந்தியாவுக்கு வழங்கவும், அணுசக்தி நிலையங்களை இந்தியா கஜகஸ்தானில் நிர்மாணிக்கவும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புது டெல்லியில் இருநாட்டு குடியரசுத்தலைவர்கள் பிரதீபா பாட்டீலும், நூருல் இஸ்லாம் நஸர்பயேவ்வும் இவ்வொப்பந்தங்களை மேற்பார்வையிட்டனர்.
"இவை இருநாட்டுகளிடையேயான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும்" என்று நமது செய்தியாளர்களிடம் நஸர்பயேவ் பின்னர் தெரிவித்தார்.
விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பிலும், உலக வர்த்தக அமைப்பில் கஜகஸ்தானுக்கு இடமளிப்பது குறித்தும் மற்ற இரு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.