இஸ்ரேலியப் படையினருக்கு சட்டப் பாதுகாப்பு - ஒல்மர்ட்
சமீபத்தில் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து அங்குப் பெருமளவு சேதங்களை விளைவித்தது. இஸ்ரேலியப் படையினர் ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் இருக்கும் குடியிருப்புகளின் மீது சர்வதேசப் போர் நடைமுறைகளை மீறிக் கடும் தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தின.
இதனையடுத்து 'ஹேக்'கில் இருக்கும் பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியப் படையினர் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்போவதாக தொண்டுநிறுவனம் ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் அவ்வாறு வழக்குத்தொடுக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எந்த ஓர் இஸ்ரேலியப் படையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய அரசு அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை அளிக்கும் எனத் தெரிவித்தார்.
சர்வதேசப் போர் நடைமுறைகளின் படி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸாவில் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசு, அதனைப் பொதுமக்கள் மீது வீசவில்லை என மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
0 comments