Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

60ஆவது குடியரசு தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்

Published on திங்கள், 26 ஜனவரி, 2009 1/26/2009 12:44:00 PM // , , ,



இந்தியாவின் 60வது குடியரசு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார். ராஜ்பத்தில் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ராஜ்பத்தில் குடியரசு தின விழா தொடங்கியது. கஜக்ஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நசர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் 24 முறை பீரங்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன.

பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்காக வீரமரணம் அடைந்த 11 பேருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரேவின் குடும்பத்தினர் உள்பட 11 பேரின் குடும்பத்தினர் இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையினரின் அணிவகுப்பு, காவல் துறையினரின் அணிவகுப்பு. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் முக்கியத் தலைவர்களும் வெளிநாட்டுத் தலைவர் மற்றும் தூதரக அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு 
ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. சுமார் 15000 துப்பாக்கி ஏந்திய காவலர்களும் 5000 துணை இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

தமிழகத் தலைநகர் சென்னையில் மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தமிழக முதல் கருணாநிதியின் உடல் நலக் குறைவால் அவர் இந்நிகழ்வில் பங்கு பெறவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு வீர தீரச் செயல் புரிந்தோருக்கு விருதுகளை வழங்கினார்.

வாசகர்களுக்கு இந்நேரம் குழுமம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!