அமெரிக்கர்கள் விரோதிகள் அல்லர் - ஒபாமா
அமெரிக்காவின் முதல் குடிமகனாக தேர்வு பெற்ற பராக் ஒபாமா தன்னுடைய முதல் தொலைக்காட்சி நேர்காணலை இன்று துபாயிலிருந்து செயற்படும் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளார்.
அதில் மிகவும் ஆறுதலளிக்கும் குரலில் " அமெரிக்கர்கள் உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விரோதிகள் அல்லர்" என்று அவர் கூறியுள்ளார். "முஸ்லிம்களிடத்தில் இச்செய்தியை வழங்குவது தமது கடமை" என்றும் குறிப்பிட்டுள்ள அவர் "பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையேயான பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.
"நாம் சிலநேரம் தவறு இழைத்து விடுகிறோம்" என்ற ஒபாமா 'அமெரிக்கர்களுக்கும் முஸ்லிம் உலகத்திற்கும் இடையே கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நல்லுறவு மீட்டெடுக்கப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த காலத்தின் அதிகாரத் தோரணை மாறி புரிந்துணர்வுத் தோழமையை மேற்கொள்ளும் தொனியை ஒபாமாவின் இந்த பேட்டி அளித்ததாக அல் அரேபியா ஆங்கில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஒபாமாவின் சிறப்புத்தூதராக ஜார்ஜ் ஜே.மிட்சல் எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஃபிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments