Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

60ஆவது குடியரசு தினம் - நாடு முழுவதும் கொண்டாட்டம்

Published on: திங்கள், 26 ஜனவரி, 2009 // , , ,


இந்தியாவின் 60வது குடியரசு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார். ராஜ்பத்தில் கண்கவர் அணிவகுப்பும் நடைபெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில், பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ராஜ்பத்தில் குடியரசு தின விழா தொடங்கியது. கஜக்ஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நசர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் 24 முறை பீரங்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன.

பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்காக வீரமரணம் அடைந்த 11 பேருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹேமந்த் கார்கரேவின் குடும்பத்தினர் உள்பட 11 பேரின் குடும்பத்தினர் இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறையினரின் அணிவகுப்பு, காவல் துறையினரின் அணிவகுப்பு. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டின் முக்கியத் தலைவர்களும் வெளிநாட்டுத் தலைவர் மற்றும் தூதரக அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு 
ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. சுமார் 15000 துப்பாக்கி ஏந்திய காவலர்களும் 5000 துணை இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

தமிழகத் தலைநகர் சென்னையில் மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தமிழக முதல் கருணாநிதியின் உடல் நலக் குறைவால் அவர் இந்நிகழ்வில் பங்கு பெறவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு வீர தீரச் செயல் புரிந்தோருக்கு விருதுகளை வழங்கினார்.

வாசகர்களுக்கு இந்நேரம் குழுமம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்ரேலியப் படையினருக்கு சட்டப் பாதுகாப்பு - ஒல்மர்ட்

சமீபத்தில் காஸா மீது இஸ்ரேல் படையெடுத்து அங்குப் பெருமளவு சேதங்களை விளைவித்தது. இஸ்ரேலியப் படையினர் ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் இருக்கும் குடியிருப்புகளின் மீது சர்வதேசப் போர் நடைமுறைகளை மீறிக் கடும் தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தின.

இதனையடுத்து 'ஹேக்'கில் இருக்கும் பன்னாட்டு நீதிமன்றத்தில் இஸ்ரேலியப் படையினர் மீது போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்போவதாக தொண்டுநிறுவனம் ஒன்று கூறியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் அவ்வாறு வழக்குத்தொடுக்கப்பட்டால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எந்த ஓர் இஸ்ரேலியப் படையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய அரசு அவர்களுக்குரிய சட்டப் பாதுகாப்பை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

சர்வதேசப் போர் நடைமுறைகளின் படி பொதுமக்கள் குடியிருப்புகள் மீது வெண்பாஸ்பரஸ் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸாவில் வெண்பாஸ்பரஸ் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசு, அதனைப் பொதுமக்கள் மீது வீசவில்லை என மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கஞ்சா பயன்படுத்தல் குற்றம் என பிரிட்டன் மீளறிவிப்பு!

கஞ்சா பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றம் என மீண்டும் பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் போதை அளிக்கும் வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பிரிவில் முன்னதாக கஞ்சா B பிரிவு வேதிப்பொருள் என அறிவிக்கப்பட்டிருந்தது. டோனி பிளேய்ர் பிரதமராக இருந்த போது 2004 ஆம் ஆண்டு கஞ்சா C பிரிவில் நகர்த்தப்பட்டது.

பிரிட்டனின் சட்டப்படி C பிரிவு போதை மருந்துகளை வைத்திருப்பவரை சட்டம் ஒழுங்கு காவலர்கள் அறிவுறுத்த மட்டுமே முடியும். அவர்கள்மீது வழக்குத் தொடுக்கவோ தண்டனை பெற்றுத் தரவோ இயலாது.

தற்போது கஞ்சா B பிரிவு வேதிப் பொருள் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கஞ்சாவை வைத்திருப்பதோ பயன்படுத்துதலோ குற்றம் என்ற பிரிவில் அடங்கும். கஞ்சாவின் புழக்கம் பிரிட்டிஷ் சமூகத்தில் பெருமளவு அதிகரித்துவிட்டதால் கார்டன் பிரவுன் இந்த அறிவிப்பை அளிக்கப் பரிந்துரை செய்தார்.

இதன்படி முதல்முறை விதி மீறுவோருக்கு எச்சரிக்கையும், அவரே இரண்டாம் முறை பிடிபட்டால் 80 பவுண்டு அபராதமும், மூன்றாம் முறை பிடிபட்டால் சிறைத் தண்டனையும் அளிக்க்கப்படும்.

ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம்

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியை மீண்டும் அளிக்க முடிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வாட்டிகன் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு உலகளாவிய அளவில் அமெரிக்க அரசு நிதி உதவி செய்து வந்தது. இந்த நிதி உதவிக்கு கடந்த புஷ்ஷின் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டது. ஒபாமா பதவியேற்றதும் கடந்த வெள்ளிக் கிழமையன்று இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.
 
வாழ்க்யையும் மரணத்தையும் தாங்கள் தீர்மாணிக்க முடியும் என்ற எண்ணும் ஆட்சியாளர்களுக்கு வாட்டிகன் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிரான செயல் கருக்கலைப்பு என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

வியட்னாம் படகு விபத்தில் 40 பேர் பலி!

வியட்னாமின் தலைநகர் ஹனோயிலிருந்து தெற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள மத்திய குவாங் பின் பிரதேசத்திலுள்ள கியான் ஆற்றில் நிகழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பொருள்கள் வாங்க அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த படகில் அளவிற்கு அதிகமாக பயணிகள் ஏற்றப் பட்டிருந்தனர். 20 பேர் மட்டுமே பயணம் செய்ய உரிமம் வழங்கப் பட்டிருந்த அப்படகில் 80-ற்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. படகு கரையை நெருங்கியபோது விரைவாக படகிலிருந்து இறங்குவதற்காக பெரும்பாலான பயணிகள் முண்டியத்துச் சென்றபோது எதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்தது.

ஆற்றிலிருந்து இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. அவர்களுள் இரு கர்ப்பிணிகளையும் சேர்த்து 32 பேர் பெண்கள். 36 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். காணாமல் போன மேலும் சிலரைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

விடுதலைப்புலிகளின் வசமிருந்த முக்கியப் பகுதியான முல்லைத் தீவைக் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. தொலைக்காட்சியி்ல் பேசிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முல்லைத்தீவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார். விடுதலைப் புலிகள் இப்போது 15 அல்லது 20 கிலோ மீட்டர் பகுதியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய நிலையி்ல் முல்லைத் தீவை இழந்திருப்பது விடுதலைப்புலிகளுக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் முல்லைத் தீவை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. முல்லைத் தீவு மீட்டுப் பணியில் 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக சனிக்கிழமை இலங்கை இராணுவம் முல்லைத் தீவை நோக்கி வரும்போது கல்மடுக்குளம் அணைக்கட்டைத் தகர்த்தனர். இதில் சுமார் 4000க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் காலரா பரவுகிறது

Published on: ஞாயிறு, 25 ஜனவரி, 2009 // , , ,
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் பல நாடுகளில் பரவி வந்த காலரா தற்போது தென் ஆப்ப்ரிக்க நாட்டையும் தாக்கி உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் முதலில் பரவத் தொடங்கிய காலரா அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் பரவியது.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற குரூகர் தேசியப் பூங்காவில் காலரா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பூங்காவின் சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என அரசு அலுவலர்கள் கூறினாலும், இப்பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்காக வழங்கப்படும் குடிநீரிலும் இக்க்கிருமிகள் தென்பட்டதாக சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

ஒவ்வோராண்டும் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குரூகர் தேசியப் பூங்காவிற்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜிம்பாப்வேயில் கடந்த ஆகஸ்டு முதல் 3000க்கும் அதிகமானோர் காலரா தாக்கி இறந்துள்ளனர் என்பது கவலையளிக்கும் தனித் தகவல்.

சத்யம் நிறுவன தணிக்கையாளர்கள் கைது!

சத்யம் நிறுவனத்தின் தணிக்கையாளர்களான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற பன்னாட்டு தணிக்கை நிறுவனத்தின் இரு மேலாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

சத்யம் நிறுவன கணக்கு வழக்குகளில் 8000 கோடி ரூபாய் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது வெளியானதைத் தொடர்ந்து அதன் நிறுவனர் ராமலிங்க ராஜு இம்மாதத் துவக்கத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் பற்றிய விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்பில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரினிவாஸ் தலுரி ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

"சத்யம் நிறுவனம் தொடர்பான விசாரணகளுக்கு எங்கள் குழு முழுமையாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கைது நடவடிக்கை துரதிருஷ்டவசமானது" என தணிக்கை நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இந்தியா - கஜகஸ்தான் : நான்கு ஒப்பந்தங்கள்

இந்தியா - கஜகஸ்தான் இடையே 4 அரசாங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

மத்திய ஆசியாவில் யுரேனியச் செறிவு மிக்க நாடான கஜகஸ்தான் உலகின் யுரேனிய உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நாட்டுடன் இந்தியா குடிமை அணுசக்தி ஒப்பந்தம், குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி யுரேனியம் சார்பொருட்களை கஜகஸ்தான் இந்தியாவுக்கு வழங்கவும், அணுசக்தி நிலையங்களை இந்தியா கஜகஸ்தானில் நிர்மாணிக்கவும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புது டெல்லியில் இருநாட்டு குடியரசுத்தலைவர்கள் பிரதீபா பாட்டீலும், நூருல் இஸ்லாம் நஸர்பயேவ்வும் இவ்வொப்பந்தங்களை மேற்பார்வையிட்டனர்.
"இவை இருநாட்டுகளிடையேயான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும்" என்று நமது செய்தியாளர்களிடம் நஸர்பயேவ் பின்னர் தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பிலும், உலக வர்த்தக அமைப்பில் கஜகஸ்தானுக்கு இடமளிப்பது குறித்தும் மற்ற இரு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

25 இந்திய கடற்பிரயாணிகள் விடுவிப்பு

Published on: //
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இருமாதங்களாக பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த 25 இந்திய கடற்பயணிகளும், மூன்று வங்கதேசத்தவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வேதிப்பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலான M T பிஸ்காலிகா என்ற லைபீரிய கப்பலிலிருந்து ஏடன் வளைகுடா அருகே கடந்த நவம்பர்28 அன்று இவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

இத்தகவலை தேசிய கடற்பிரயாணிகள் நல ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அப்துல்கனி செராங் தெரிவித்துள்ளார். "அனைவரும் நலமாக உள்ளனர்" என்றார் அவர்.

தொடக்கத்தில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்கள் பிணைத்தொகை கோரியிருந்த கொள்ளையர்கள், பின்னர் அதை 25இலட்சம் டாலர்களாக ஏற்றிக்கேட்டிருந்தனர். எனினும், விடுவிக்கப்படுவதற்கு முன்பாக பிணைத்தொகை வழங்கப்பட்டது பற்றி தெரிய வரவில்லை.

கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட 18 இந்தியர்களுக்குப் பிணைத்தொகையாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இக்கொள்ளையர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹோலோகாஸ்டை மறுத்த பாதிரியார்கள் மீண்டும் கிருஸ்துவ திருச்சபையுடன் இணைப்பு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியதற்காக 1988-ஆம் ஆண்டு 4 பிஷப்கள் வாடிகன் கிருஸ்துவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களை போப் பெனடிக்ட் மீண்டும் திருச்சபையுடன் இணைத்துக் கொண்டார். இது யூதத் தலைவர்களை கோபமடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஹிட்லரின் நாஜிப்படையினரால் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வு 'ஹோலோகாஸ்ட்' என வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இச்சம்பவங்களை உண்மை என ஏற்றுக் கொண்டிருந்தாலும் சிலர் அவற்றைப் பற்றிய சந்தேகங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சந்தேகங்களை எழுப்புவது பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்தை புரிந்ததற்காகவே 4 பிஷப்களும் திருச்சபையிலிருந்து நீக்கப் பட்டிருந்தனர்.


நால்வரில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்சன் ஹோலோகாஸ்ட் பற்றி கூறப்படுபனவற்றை மறுத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சுவீடன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யூதர்களைக் கொல்வதற்காக விஷ வாயு கிடங்குகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றே தாம் நம்புவதாகத் தெரிவித்தார். அச்சம்பவங்களில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 60 லட்சம் என்று சொல்லப்படுவதையும் அவர் மறுத்து, அதன் உண்மையான எண்ணிக்கை 3 லட்சம் மட்டுமே இருக்கும் எனவும் அவர் கூறினார்.

நான்கு பிஷப்களையும் மீண்டும் திருச்சபையில் இணைக்கும் உத்தரவை போப் வெளியிடுமுன்பாக பல யூதத் தலைவர்கள் போப்பின் இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். பல்லாண்டுகளாக நிலவி வரும் யூத கிருஸ்துவ சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை இது குலைத்து விடும் எனவும் 'ஆழமானதொரு காயத்தை இது மீண்டும் கிளறி விடும்' எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

குவாண்டனாமோ: 2 மலேஷிய கைதிகளை தாய்நாட்டிற்குக் கொண்டுவர பிரதமர் விருப்பம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமா குவாண்டனாமோ சிறையை ஓராண்டிற்குள் மூடும்படி உத்தரவிட்டிருப்பது தெரிந்ததே. அங்கு அடைபட்டிருக்கும் கைதிகளுள் இரு மலேஷிய நாட்டவரும் அடங்குவர். அவர்களை மலேஷியாவிற்கு கொண்டுவர பிரதமர் அப்துல்லா படாவி விருப்பம் தெரிவித்துள்ளார்.

முகமது நாசிர் லெப் மற்றும் முகமது பரிக் அமின் என்ற இரு மலேஷிய நாட்டவரும் 2002-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்புகளை நடத்திய ஜெமா இஸ்லாமியா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

"அதிபர் பாரக் ஒபாமா (குவாண்டனாமோ சிறையை மூடுவது பற்றிய) தமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக மலேஷியா தனது மகிழ்வை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறிய மலேஷிய பிரதமர், அக்கைதிகள் மலேஷியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் எஞ்சிய தண்டணைக் காலத்தை மலேஷிய சிறையில் கழிப்பர் என்றும் தெரிவித்தார்.

குவாண்டனாமோ சிறையில் இன்னும் அடைபட்டிருக்கும் சுமார் 250 பேரில் செப் 11 தாக்குதல் நடக்க உதவி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 நபர்களைச் சேர்த்து சுமார் 20 பேர் மீது மட்டுமே குற்ற வழக்கு பதியப் பட்டிருக்கிறது.

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பலி!

Published on: //
வடக்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதி மீது அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் 3 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒன்றாக பல ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும் ஏவுகணை விழுந்தப் பகுதி முழுவதும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் எனவும் கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

அநேகமாக பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்ற பின்னர், அமெரிக்கப் படைகள் நடத்திய முதல் தாக்குதல் இது எனக் கருதப்படுகிறது.

"தீவிரவாத எதிர்ப்புப் போரின் முக்கிய பகுதிகளாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இருக்கும்" என அதிபர் பராக் ஒபாமா ஸ்டேட் டிபார்ட்மென்ட் கூட்டத்தில் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

சர்மா கைது செய்த காஷ்மீர் தீவிரவாதி விடுதலை!

Published on: // ,
டெல்லி ஜாமிஆ நகர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மோகன்சந்த் சர்மா தீவிரவாதி என குற்றம் சுமத்தி கைது செய்த இக்பால் என்றழைக்கப்படும் அயாஷ் அஹமது ஷா என்ற காஷ்மீர் இளைஞரை நீதிமன்றம் நிரபராதி எனக் கூறி விடுதலை செய்தது.

டெல்லி சாஸ்திரி பார்க்கின் அண்மையிலுள்ள மெட்ரோ ஸ்டேசனில் வைத்து கடந்த 2004 ஜனவரி 22 அன்று அயாஷ் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்யும் பொழுது அவர் வைத்திருந்தப் பையில் வெடிபொருட்களும் மூன்று லட்சம் ரூபாயும் இருந்ததாகவும் அடுத்து வரும் குடியரசு தினத்தில் டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக அவர் அதனை வைத்திருந்தார் எனவும் டில்லி ஸ்பெஷல் செல் வழக்கு பதிவு செய்திருந்தது.

நிதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பொழுது, ஸ்பெஷல் செல்லிலுள்ள எ.எஸ்.ஐ. ரிஷிகேசிற்கு இக்பாலை கைது செய்த இடம் எங்கு என்பதைக் குறித்து விவரிக்க இயலவில்லை. மற்றொரு ஸ்பெஷல் செல் அதிகாரியான ஜெய் கிஷன், காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டவைக்கு எதிராக, மெட்ரோ அதிகாரிகள் அந்த ரெய்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். ரெய்டில் கலந்துக் கொண்ட எஸ்.ஐ. உமேஷ் பாரதியினால் எவ்வளவு நேரம் ரெய்டு நடந்தது என்றக் கேள்விக்குப் பதிலளிக்க இயலவில்லை.

"குற்றம் சுமத்தப்பட்ட பிரதி, நாட்டுக்கு எதிராக போர் பிரகடன் செய்ததையும் நாட்டைத் தகர்க்க சதியாலோசனை நடத்தியதையும் தெளிவிப்பதில் அரசு தரப்பு தோல்வியடைந்ததாக" தீர்ப்பு கூறிய நீதிமன்றம், காவல்துறைக்கு எதிராகக் கடும் விமர்சனமும் கண்டனமும் தெரிவித்தது.

சீனா பொம்மைகள் இறக்குமதிக்கு இந்தியா தடை!

சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே மெலாமின் என்ற விஷ ரசாயனப்பொருள கலந்துள்ளதுக் கண்டுபிடிக்கப்பட்டக் காரணத்தினால் சீனாவிலிருந்து சாக்லேட், பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தற்பொழுது சீன உற்பத்தி பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொம்மைகள் உருவாக்கப்படுத்தப்படும் பொருட்களில் விஷ ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக எழுந்த சந்தேகமும் மிக விலை குறைந்த சீன பொம்மைகளின் அளவுக்கதிகமான இறக்குமதி உள்நாட்டு பொம்மை உற்பத்தியை வெகுவாக பாதித்திருப்பதும் இத்தடைக்குக் காரணமாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் 5 வயது சிறுமி கற்பழிப்பு

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று 5 வயதே ஆன சிறுமி கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறியது.

நேபாளத்தில் இருந்து வேலை தேடி பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே குராலி எனும் கிராமத்தில் அச்சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். பெற்றோர் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டனர். இவர்களது வீட்டருகே வசித்து வரும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த 27 வயதுடைய ராஜேஷ் பாரதி என்பவன் இச்சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, சிறுமியிடம் நயமாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று இக்குற்றத்தை செய்ததாக விசாரணை அதிகாரி லக்விந்தர் சிங் கூறினார்.

மொஹாலியில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது நிகழ்வு இது. இம்மாதம் 7ஆம் தேதி 6 வயது நேபாளச் சிறுமி மொஹாலியின் தொழில்பேட்டை அருகே கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

"தேச துரோகி" வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!

Published on: // ,
சமீபத்தில் வெளியான தேசதுரோகி இந்தி திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிட்டால், குழப்பங்கள் விளையலாம் என்ற மஹாராஷ்டிரா அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்னர், மும்பை உயர்நீதிமன்றமும் இத்திரைப்படம் மஹாராஷ்டிராவில் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு உச்சநிதிமன்றத்தை அணுகியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மற்றப்பாகங்களில் வெளியான இத்திரைப்படத்தை, மஹாராஷ்டிராவில் வெளியிட மட்டும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்திருந்தது.

அதேநேரம், உச்சநிதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னரும் இதுவரை மஹாராஷ்டிராவில் ஒரு திரையரங்கிலும் இத்திரைப்படம் இதுவரை திரையிடப்படவில்லை. திரைப்படம் திரையிட நினைத்திருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க தயாராகாததே இதற்கான காரணமாகும்.

மாலேகான் வழக்கு: சதி திட்டத்தில் ஹிமானி சவார்க்கரும்!

Published on: //
மாலேகாவ் குண்டு வெடிப்பிற்காக சதி திட்டம் தீட்டியவர்களில் வி.ட்டி. சவார்க்கரின் மருமகளும் காந்தியைக் கொன்ற கோட்சேயின் அண்ணன் கோபால் கோட்சேயின் மகளுமான அபினவ் பாரதின் தலைவி ஹிமானி சவார்க்கருக்கும் பங்குண்டு என மாலேகான் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.டி.எஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 அன்று போபாலிலுள்ள ராம ஷேத்திரத்தில் வைத்து நடந்த குண்டு வெடிப்பிற்கான ரகசிய சதியாலோசனை கூட்டத்தில் தானும் ஹிமானி சவார்க்கரும் கலந்துக் கொண்டதாக கடந்த டிசம்பர் 24 அன்று, அபினவ் பாரதின் உறுப்பினருமான வழக்கின் முக்கிய சாட்சி வாக்குமூலம் கொடுத்தார்.

இதனைக் குறித்த கேள்விக்கு, "தான் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வேளையில் தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகளாக இருந்தனர்" என ஹிமானி பதிலளித்துள்ளார்.

ஹிமானியையும் முக்கிய சாட்சியையும் குற்றவாளிகள் பட்டியலில் ஏ.டி.எஸ் சேர்க்கவில்லை. எதனால் இவர்கள் இருவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு, "இதற்கான பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்" என ஏ.டி.எஸ்ஸின் தற்காலிக தலைவர் ரகுவன்ஷி பதிலளித்தார்.

மரம் வெட்டிக்கு தண்டனை

42 மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய ஒருவருக்கு டெல்லி நடுவர் நீதிமன்றம் 210 மரக்கன்றுகளை நடும் விநோத தண்டனையை அளித்துள்ளது.

வாசுதேவா என்ற பெயருடைய அந்த நபர் தனக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே இப்படி செய்துவிட்டதாகக்  கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். 


மரங்களே நகரின் நுரையீரல்கள் எனவும், உலகின் பசுமை குறைந்துவருவது கவலையளிக்கும் விதயம் என்றும் நீதிபதி தேவந்தர் குமார் ஜங்காலா தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமருக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனை(AIIMS)யில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இருதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக  இச்சிகிச்சை என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் P.K. பாண்டா தலைமையில் 11 மருத்துவர்களைக் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது.

76 வயதான மன்மோகன், 18 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை  ஃபைபாஸ் சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார். மேலும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் பெற்றுள்ளார்.

இதனால் சுமார் ஒருமாத காலம் மருத்துவ விடுப்பில் பிரதமர் இருக்க வேண்டியுள்ளதால், எதிர்வரும் குடியரசு தினக் கொண்டாட்டங்களையும், பிரதமருக்கான மற்ற அலுவல்களையும்  மூத்த அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி தலைமையேற்று நடத்துவார் எனத் தெரிகிறது. முன்னர் ப.சிதம்பரம் வசமிருந்த  நிதிஅமைச்சர் பொறுப்பையும் திரு. முகர்ஜியே தற்காலிகமாக கவனிப்பாராம்.

தீவிரவாத வழக்குகள்: பார் கவுன்ஸிலுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்!

Published on: //
தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடும் உரிமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முறையீட்டின் மேல் விளக்கம் கோரி பார் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா மாநில பார் அஸோஸியேசன்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பார் அஸோஸியேசன்களின் நடவடிக்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பொதுநல வழக்கின் மீது வாதம் கேட்கும் பொழுது, தலைமை நிதிபதி கெ.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலுள்ள நீதிபதிகள் குழு பார் கவுன்ஸிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. முஹம்மது ஷிஐப்(லக்னோ), ஸமால் அஹ்மது(ஃபைஸாபாத்), நூர் அஹமது(உஜ்ஜயினி), சுரேந்தர் ஸிகாட்லிங்(மாஹாராஷ்டிரா) ஆகிய வழக்கறிஞர்கள் இணைந்து இந்த பொது நலவழக்கு தொடுத்துள்ளனர்.

"பார் அஸோஸியேசன் சட்ட விரோத தீர்மானம் நிறைவேற்றியுள்ளது" எனவும் "இதன் மூலம் கடந்த ஆண்டு நடந்தத் தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக இருந்ததிலிருந்து விலக வேண்டி வந்ததாகவும்" புகாரில் அவர்கள் கூறினர். "குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராக வந்த வேளையில் மற்ற வழக்கறிஞர்கள் தங்களைத் தக்கியதாகவும்" அவர்கள் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

Published on: வெள்ளி, 23 ஜனவரி, 2009 // , , ,
அமெரிக்க கணிணி நிறுவனமான மைக்ரோஸாப்ட் தமது ஊழியர்களில் 5000 பேரை வேலையிலிருந்து நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. அவர்களில் 1400 பேர் உடனடியாகவும் மற்றவர்கள் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாகவும் நிறுத்தப் படுவர். மெதுவடைந்திருக்கும் பொருளியல் சூழலும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்தில் செலவிடும் தொகை வெகுவாகக் குறைந்து விட்டதுமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை அந்நிறுவனத்தின் நிகர இலாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 விழுக்காடு குறைந்து விட்டதாகத் தெரிவிக்கிறது. செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இந்த ஆட்குறைப்பு செய்யப் படுகிறது.

அந்நிறுவனத்தில் ஆய்வு, சந்தைப் படுத்தல், விற்பனை, நிதி, சட்டம், மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப் படுவர் என்று தெரிகிறது.

குவாண்டனாமோ சிறையை மூட ஒபாமா உத்தரவு!

புதிய அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா தான் வாக்களித்தபடி குவாண்டனாமோ சிறையை முற்றிலும் மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

"பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் அதேவளை, அமெரிக்க விழுமியங்களையும் விட்டுக் கொடுக்கமாட்டோம்" என அவர் கூறியுள்ளார்.

குவாண்டனாமோவில் நடைபெற்றுவரும் அனைத்து இராணுவ விசாரணைகளையும் நிறுத்தி வைக்க முன்னதாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. குவாண்டனாமோவில் தண்ணீரில் மூழ்கடிக்கும் உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற சித்திரவதை விசாரணை முறைக்கு முந்தைய அதிபர் புஷ் ஒப்புதல் அளித்திருந்ததும் பல்வேறு மனிதநேய அமைப்புகள் அம்முறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததும் அறிந்ததே.

ஒபாமாவின் உத்தரவை அடுத்து குவாண்டனாமோ சிறை ஓராண்டுக்குள் முற்றிலும் மூடப்படும் எனத் தெரிகிறது.

11 லாரிகள் தீக்கிரை

Published on: வியாழன், 22 ஜனவரி, 2009 // ,
பீஹாரில் உள்ள ரோஹ்டாஸ் மாவட்டத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 11 வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.

இன்று அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் நடந்த இச்செயலை மாவோ கம்யூனிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த நக்சல்கள்தான் செய்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். 

தங்கள் இயக்கத்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் மாவோ கம்யூனிஸ்டுகள் ஜார்கண்ட், பீஹார், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  முழு அடைப்புக்கிடையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சிமெண்ட் கல்யாண்பூரில் உள்ள சிமெண்ட் ஆலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டவை என்று கூறிய காவல்துறை அதிகாரி, எரியூட்டுவதற்கு முன் ஓட்டுநரையும உதவியாளரை கீழே இறக்கிவிட்டு எரியூட்டியுள்ளனர் என்று கூறினார். முழு அடைப்பு நடக்கும் போது இரவு நேரத்தில் சிமெண்ட் மூட்டைகளை அனுப்ப வேண்டாம் என்று அந்த ஆலைக்கு காவல்துறை ஏற்கனவே கூறியதாகவும் கூறப்படுகிறது.

சினிமா தயாரிப்பாளர் பரத்ஷா கைது

இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் வைர வியாபாரியான பரத்ஷா இன்று கைது செய்யப்பட்டார். சில்வசா நீதிமன்றம் வழங்கிய பிணையில் வெளிவரா இயலாத கைது ஆணையின் படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் மலபார் ஹில் பகுதி காவலர்கள் அந்த ஆணையைப் பெற்று அவரைக் கைது செய்தனர். எந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை காவல்துறையினர் கூற மறுத்துவிட்டனர்.

ஒபாமா ஆரவாரமான துவக்கம்!

Published on: //
அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பதவியேற்றுள்ள ஆப்ரிக்க-அமெரிக்க வம்சத்தில் வந்த பராக் ஹுசைன் ஒபாமா, பதவியேற்பு முடிந்தக் கையோடு அதிபர் பணிகளை ஆரவாரத்துடன் துவங்கியுள்ளார்.

பதவியேற்பு முடிந்து நேரடியாக வெள்ளை மாளிகை சென்ற ஒபாமா, முதல் வேலையாக தனது பதவியேற்பிற்கு முன், முன்னாள் அதிபர் புஷ் தனது பதவி காலத்தின் இறுதியில் கையெழுத்திட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, தனது தேர்தல் பிரச்சார வேளையில் அளித்திருந்த "குவாண்டனமோ சிறைச்சாலையினை மூடும்" வாக்குறுதியினை நிறைவேற்றும் ஆரம்பப்படியாக, உடனடியாக குவாண்டனமோ கைதிகளின் நீதிமன்ற விசாரணைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று நடக்க இருந்த ஒரு வழக்கினை நீதிபதி பாட்ரிக் பாரிஷ் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

அதிபர் பதிவேற்ற ஒபாமாவின் முதல் நாள் நடவடிக்கைகள் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியது

Published on: புதன், 21 ஜனவரி, 2009 // ,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்களுக்கு மேல் தொடர்ந்து தரை, வான் மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தி கடந்த 18ஆம் தேதி நள்ளிவில் தன்னிச்சையாக தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. இராணுவத்தினர் காஸாவிலேயே இருப்பார்கள் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவத்தினரை எதிர்த்து சன்டையிட்டு வந்த ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்களும் சன்டை நிறுத்தத்தை அறிவித்து, ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்திருந்தன.

செவ்வாய்க் கிழமையிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் கூறின. இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலின் அனைத்து இராணுவத்தினரும் காஸாவிலிருந்து வெளியேறிவிட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இதனை தங்களின் வெற்றி என்று கூறுகின்றன. காஸாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெற்றி குறித்து கேட்டபோது, சன்டையில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் எல்லாற்றையும் இழந்துவிட்டோம் என்று கூறினார்.

இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 1340 பேர் கொல்லப்பட்டனர். 5320 பேர் காயமுற்றனர். இதில் குறைந்த 1100 பேர் பொதுமக்கள் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் கொல்லப் பட்டதாகவும் அவர்களில் மூவர் பொதுமக்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் 80 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது - அந்தோணி

Published on: //
இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது என்றும் நம்முடைய பாதுகாப்பு வசதிகளை நவீனப்படுத்த வேண்டும் என்றும் இந்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார். 

இந்திய கடல் பாதுகாப்புக்காக அதிவேக கப்பலான சாம்ராட் என்னும் கப்பலை பணியமர்த்தும் நிகழ்வு இன்று நடந்தது. அப்போது பேசும்போது, நம்மிடம் இருக்கும் வசதிகள் போதுமானது இல்லை. நமக்குத் தேவையானதில் 30 சதவீதம் மட்டுமே நம்மிடம் உள்ளன. இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால் இந்திய கடல் பாதுகாப்பை அரசு நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். நம்முடைய இராணுவம் எந்நேரமும் செயல்படத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இராணுவத் தளவாட உற்பத்தி துறையின் இணை அமைச்சர், இந்திய கப்பல்படை அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஒபாமாவுக்கு மெர்கெல் காட்டமான வரவேற்பு!

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றதைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் வேளையில் ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்கெல் காட்டம் கலந்த தொனியில் வரவேற்பு அளித்துள்ளார்.

ஒபாமா தனது பதவியேற்புக்கு முன்பான உரையின் போது ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவது தான் தனது முதல் முனைப்பாக இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதற்குத் துணையாக இருக்கும் நாடுகளும் அதற்காக உதவவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் முகமாக ஜெர்மனி அதிபர் மெர்கெல், "ஆப்கானிஸ்தானில் எங்கள் (ஜெர்மனியின்) கடமை என்ன என்று எங்களுக்குத் தெரியும்; இது நாள் வரை ஆப்கனில் நாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை மிகச் சரியாகவே செய்து வந்துள்ளோம். இதைச் சொல்ல புதிய அதிபர் தேவையில்லை"என்று காட்டமாகக் கூறினார்.

ஒபாமா அமெரிக்க அதிபரானதற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதே செய்தியிலேயே இதைக் குறிப்பிட்ட அதிபர், "ஜெர்மனியின் வீரர்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிப்பதும் குறைப்பதும் அமெரிக்க அதிபராக யார் வருகிறார் என்பதைப் பொறுத்ததில்லை" என்றும் கூறினார்.

காங்கிரசில் அஸாருத்தீன் ?

Published on: செவ்வாய், 20 ஜனவரி, 2009 // ,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருத்தீன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அஸாருத்தீனிடம் கேட்டபோது "இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றும், நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்குத் தகவல் தருகிறேன்" என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் அஸாருத்தீன் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் போட்டியிடும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவை சந்தித்தபோது, அஸாருத்தீன் அக்கட்சியில் இணைந்ததாக இதுபோன்ற வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6215 ரன்களையும், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9379 ரன்களும் எடுத்திருந்த அஸாருத்தீன் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாகவும் விளங்கினார். 2000 ஆம் ஆண்டு எழுந்த ஊழல் புகாரை அடுத்து இவர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

மும்பையின் தாராவி பகுதி அழகுபடுத்தப்படும்

மும்பையில் உள்ள தராவி என்றழைக்கப்படும் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். ஒழுங்கற்ற வீதிகள், வீதி தோறும் குப்பைகள் என்று சுகாதாரக் கேட்டுடன் உள்ள இப்பகுதி ஆசியாவின் மிகப் பெரும் குடிசைப் பகுதியாகும். இந்தப் பகுதியை அழகுபடுத்தப் போவதாக மகாராஷ்டிர அரசு இன்று அறிவித்துள்ளது.

இதற்காக உலகளாவிய அளவில் டெண்டர் விடப்படும் என்று மாநில வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று அமைச்சர் பிரீத்தம் குமார் தெரிவித்தார். மகாராஷ்டிர அரசு 2009ஆம் ஆண்டை "வீடுகளுக்கான ஆண்டு" என்று அறிவித்துள்ளதாகவும், இந்த ஆண்டில் தனியாருடன் இணைந்து வீட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருவோம் என்றும் அவர் கூறினார். இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க.விலிருந்து கல்யான் சிங் விலகல்

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து உத்திர பிரதேச மாநில முதல்வர் கல்யான் சிங் அந்தக் கட்சியி்ல் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக இன்று அறிவித்தார்.

பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தது தான் செய்த மாபெரும் தவறு என்றும், பா.ஜ.க.வில் தன்னை அவமானப்படுத்தினர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 76 வயதாகும் கல்யான் சிங் தற்போது பா.ஜ.க.வி்ன் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். 1992ஆம் ஆண்டு பாபரி மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல்வராக இருந்தார்.

லோத் எனப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவரான கல்யான் சிங் பா.ஜ.க.விலிருந்து விலகியிருப்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று டெல்லியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை இவர் சந்தித்துப் பேசியதாகவும், முலாயம் இவருக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் தருவதாக வாக்களித்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இந்தியா பாகிஸ்தானை புரிந்து கொள்ள வேண்டும் - ரைஸ்

Published on: திங்கள், 19 ஜனவரி, 2009 // , ,
இன்றுடன் பதவி முடியும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த கான்டலீசா ரைஸ் இந்தியா பாகிஸ்தானை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பதவி முடியும் தறுவாயில் மூன்று தினங்களுக்கு முன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரைஸ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருவதாகவும், எல்லை தாண்டிய பயங்கராவாதத்தை ஒடுக்குவதிலும் அக்கறை காட்டி வருவதாகவும் ரைஸ் அப்போது விவரித்தார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைய ஒப்புக் கொண்ட ரைஸ், இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையாக நடந்து கொண்டால் அது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபாகரன் வெளிநாடு தப்பினார்?

Published on: //
ஸ்ரீலங்காவில் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்தியத் தாக்குதலில் 31 புலிகள் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ரகசிய படகு நிர்மாணசாலையைத் தகர்த்ததாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பகுதியான முல்லை தீவினை நோக்கி இராணுவம் நகரத்துவங்கிய நிலையில், பிரபாகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லை தீவை நோக்கியை இராணுவத்தின் முன்னேற்றம் தற்பொழுது மாங்குளம்-முல்லை தீவு சாலைவரை வந்துள்ளது. மிக விரைவிலேயே முல்லைதீவினுள் இராணுவம் நுழையும் எனக் கருதப்படுகிறது.

புலிகளிடம் தற்பொழுது பயிற்சி பெற்ற வெறும் 1000 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளதாகவும் அவர்களும் முல்லை தீவின் உள் காட்டுப்பகுதியில் ஒளிந்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி சரத் போன்ஸகா கூறினார். புலிகளுக்கெதிரான போராட்டம் மிக விரைவிலேயே முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

மாலேகான் வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி!

Published on: //
11 வயது சிறுமி உட்பட 6 பேர் மரணத்திற்குக் காரணமான மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை கர்நாடகா நோக்கி நகர்கிறது!

வெடிகுண்டு தயாரிப்பில் திறமைசாலியான பிரவீன் முதலிக் எனும் நபரைத் தேடி, வழக்கை விசாரிக்கும் மும்பை தீவிரவாதத் தடுப்புப்படை கர்நாடகா விரைந்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்புக்குத் தேவையான வெடிகுண்டுகளைத் தயாரித்து வழங்கிய ராம்ஜி மற்றும் சந்தீப் டாங்கெயுடன் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதான பிரவீனும் இருந்ததாக ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது. வெடிகுண்டு தயார் செய்வதில் நிபுணனான இந்நபரைக் கைது செய்தால், தலைமறைவாக இருக்கும் மற்றும் இருவரைக் குறித்தத் தகவல்கள் தெரிய வரும் என ஏடிஎஸ் கருதுகிறது.

இதற்கிடையில் மும்பை ஏடிஎஸ், தங்களைச் சட்டவிரோதமாக கஸ்டடியில் வைத்ததாகவும் ஆகவே ஏடிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மத்திய பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் வழங்கிய புகாரை இன்டோர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாரக் ஏவுகணை விவகாரம்: சி.பி.ஐ இஸ்ரேல் உதவி கோரியது!

Published on: //
இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட 1,150 கோடி ரூபாய்கான பாரக் ஏவுகணை வியாபாரத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் மத்திய புலனாய்வு துறை இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணையில், ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலில் வைத்து நடந்த பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவரங்களை இஸ்ரேல் அரசிடம் சிபிஐ கேட்டுள்ளது.

இவ்வொப்பந்தத்தில் உள்ள முக்கிய சில குளறுபடிகள் இஸ்ரேலில் வைத்து நடந்துள்ளதால் அவை தொடர்பான அனைத்து விவரங்களும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட அனுமதியின் மூலம் இஸ்ரேல் அரசுக்குச் சி.பி.ஐ கோரிக்கை அனுப்பியுள்ளது.

முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃப்ர்னாண்டஸ், இராணுவ முன்னாள் உயரதிகாரி சுஷில் குமார், சமதா கட்சியின் தலைவராக இருந்த ஜெயா ஜெட்லி, ஆயுத வியாபாரி சுரேஷ் நந்தா போன்றவர்களை உட்படுத்தி கடந்த 2006 அக்டோபர் மாதம் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

இஸ்ரேலிடமிருந்து 7 பாரக் ஏவுகணைகள் வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட தொகை 17 மில்லியன் டாலர் எனவும், இத்தொகை 1996 ஆம் ஆண்டு இஸ்ரேல் வாக்களித்த ஒப்பந்தத் தொகையை விட அதிகமானது எனவும் சி.பி.ஐ கண்டுபிடித்தது.

1996 ல் இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் இறக்குமதி செய்வதற்கான அட்மிரல் குமாரின் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய விஞ்ஞான ஆலோசகராகவும் இருந்த விஞ்ஞானி அப்துல் கலாம் எதிர்த்த போதிலும் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தின்படி ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ஃபெர்னாண்டஸ் கட்டளையிட்டிருந்தார்.

2001 ல் தெஹல்கா இதழ் இரகசிய கேமரா மூலம் நடத்திய விசாரணையின் மூலமே இவ்வொப்பந்தத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட ஊழல் வெளியானது.

வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம்

தலைநகர் டில்லி உள்பட இந்தியாவின் வட மாநில மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குறைஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள மாற்றங்களை எதிர்த்து இப்போராட்டம் நடைபெறுகிறது. தலைநகரில் இம்மாதம் வழக்குறைஞர்கள் நடத்தும் மூன்றாவது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இம்மாதம் 7 மற்றும் 14 ஆம் தேதிகளில் ஏற்கனவே வேலை நிறுத்தம் நடைபெற்றது.

வட மாநிலங்களான டில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ஜம்மு கஷ்மீர் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறுவதாக வழக்குறைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.


ஜார்கண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஷிபு சோரன் முதல் அமைச்சராகப் பதவி வகிகத்து வந்தார். பதவியேற்றதிலிருந்து ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தற்காலிக முதல்வராகத் தொடர்கிறார்.

அவருக்குப் பதில் வேறொரு முதல்அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நிலவி வந்தது. இதனையடுத்து மாநில ஆளுநர் சையத் சிப்தி ராஜி ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். மத்திய அமைச்சரவையும் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.

மாநில சட்டமன்றம் கலைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் திருமா

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

நான்காவது நாளான நேற்று திருமாவளவனின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. நேற்று மாலை அவர் மயக்க நிலைக்கு போனார். இதையடுத்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். பல்வேறு கட்சித் தலைவர்களும் திருமாவளவன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரினர்.

பின்னர் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம், உண்ணாவிரதம் நடந்த மேடைக்கு அருகில் கூடியது. அக்கூட்டத்தில் உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிட வேண்டும் என மமுடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மாலை 5 மணியளவில் உண்ணாவிரத மேடைக்கு டாக்டர் ராமதாஸ் வந்தார். அவர் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. எனவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். அப்போராட்டத்தில் பால் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் எந்த ஊர்தியும் ஓடாது.

எனவே உண்ணாநிலை போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

அதனைக் கேட்ட திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவதாகவும், இலங்கைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் கலைஞர் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாகவும் ராமதாஸ் உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

திருமாவளவனின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ராமதாஸ் உறுதியளித்தார். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

தேவாலயத்தின் கூரை விழுந்து ஏழுபேர் பலி

ஞாயிற்றுக் கிழமையன்று பிரேசிலின் மிகப்பெரிய நகரான சாபோலோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் கூரை நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 7 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

தீயனைப்புத் துறையினரும் உதவிக் குழுவினரும் விரைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2000 பேர் ஒரே நேரத்தில் வழிபடக் கூடிய அளவில் உள்ள இந்த தேவாலயத்தில் சம்பவத்தின் போது 400லிருந்து 500 பேர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்று பிரேசிலின் செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது. ஆனால் 60 பேர்தான் இருந்ததாக தேவலாய நிர்வாகம் தெரிவித்தது.

பாலஸ்தீனிய குழுக்கள் சன்டை நிறுத்த அறிவிப்பு

Published on: ஞாயிறு, 18 ஜனவரி, 2009 // , ,
ஹமாஸ் சண்டை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஹமாஸ் போராளிகளும் மற்ற போராளிக் குழுக்களும் இந்த சன்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று ஹமாஸ தலைவர்களில் ஒருவரான அய்மான் தாஹா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களைத் தொடுத்து வந்தது. சுமார் 1300க்கும் அதிகமானோரை பலி வாங்கிய இந்த தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கோரி வந்த நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் நேற்று தன்னிச்சையான சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை பாலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் உள்பட பல அமைப்புகளும் ஏற்க மறுத்து, இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று அறிவித்திருந்தனர்.

இஸ்ரேலிய சன்டை நிறுத்தத்தை அறிவித்திருந்தும் காஸாவின் பல பகுதிகளிலும் இன்றும் சிறிய அளவிளான தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாயின. காஸாவிலிருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் தொடர்ந்தன. இந்நிலையில் ஹமாஸ் இயக்கம் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் சன்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காஸா குறித்து விவாதிப்பதற்காக எகிப்து கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எகிப்தின் ஷரம் அல் ஷைக் எனுமிடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் , அரபு லீக் தலைவர், பிரான்சு, துருக்கி, ஜோர்டான், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

காஸா : தொடரும் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்குப் பணிந்து, ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரம் காலை 2 மணி முதல் தாக்குதலை தன்னிச்சையாக நிறுத்திக் கொள்வது என்று அறிவித்தது. இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதிக்குள் இருப்பதே காஸா மீதான தாக்குதலின் அடையாளம்தான். எனவே காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறும் வரை இராணுவத்துடன் சன்டையிடுவோம் என்று ஹமாஸ் அறிவித்தது. காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசும் கோரியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலிய இராணுவ ஹெலிகாப்டர் காஸா நகரின் மீது வெள்ளை பாஸ்பரஸ் கொண்ட குண்டுகளை வீசியதாக பிரஸ் தொலைக்காட்சி கூறி உள்ளது.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்கதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளன. இன்று மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபலியா மற்றும் பைத் லஹியா என்ற இடங்களில் இடிபாடுகளை அப்புறப்படுத்தும்போது  குழந்தைகள் உள்பட 95 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன.

இதுவரை 1300க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதல்களில் பலியாகி உள்ளனர். 6000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய தரப்பிலான சேதம் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. எனினும் 10 இராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவைத் தகர்க்க எதிரிகள் சதி - பிரணாப் முகர்ஜி!

Published on: //
உலகில் இந்தியாவின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட நாடுகள், இந்தியாவின் உயர்வைத் தகர்ப்பதற்காகவே தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுகின்றன என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கடந்தச் சில மாதங்களாக இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைத் தனிப்பட்ட சம்பவங்களாக காண இயலாது. இந்தியாவின் முக்கிய பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றில் பின்னணில் இந்தியாவைத் தகர்க்கத் திட்டமிடும் சக்திகள் உள்ளன.

தீவிரவாதத்துடன் இஸ்லாமிய சமுதாயத்தைத் தொடர்புபடுத்துவதற்குச் சில சக்திகள் முயற்சிக்கின்றன. இதனை அங்கீகரிக்க இயலாது. உண்மையில் ஒரு மதத்திலும் இது போன்ற செயல்பாடுகளுக்கு இடமில்லை. மதநூல்களைச் சிலர் தங்களின் தீவிரவாத செயல்பாடுகளுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். தீவிரவாதிகள் மனிதகுலத்தின் எதிரிகளாவர்" என அவர் மேலும் கூறினார்.

அரசு திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக நிற்கும் திரிமுணால் காங்கிரஸுக்கு எதிராகவும் அவர் சில கருத்துகளைத் தெரிவித்தார்.

"நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக இங்கு ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயமும் இரயிவே பாதைகளும், சாலைகளும் ஆகாயத்தில் உருவாக்க இயலாது. இன்றைய எதிர்கட்சியே நாளைய ஆளும்கட்சி என்பதைப் புரிந்துக் கொள்ள வேன்டும். ஆட்சியில் வரும் பொழுது, மறந்து போகும் படியிலான வாசகங்களை எவரும் பயன்படுத்தக் கூடாது" என அவர் கூறினார்.

சாலை விபத்தில் ஐவர் பலி

Published on: //
இன்று அதிகாலையில் ஆக்ராவில் சாலையோரக் கடை மீது வேகமாக வந்த சரக்குந்து மோதி அக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 5 பேர் பலியானார்கள். மேலும் மூன்று பேர் படுகாயமுற்றனர். ஆக்ராவின் மகாத்மா காந்தி சாலையில் உள்ள மருத்துவமனை ஒன்றின் எதிரே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு பெற்ற சரக்குந்து அது என்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அஹமதாபாத்தில் 4 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன

குஜராத் மாநிலத் தலைநகர் அஹமதாபாத்தில் வெடிக்காத நிலையில் இருந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அஹமதாபாத்தின் கரன்ஜ் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டன என்று கரன்ஜ் பகுதியின் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கரன்ஜ் பகுதியின் தலைமைத் தபால் அலுவலகம் அருகில் குண்டு உள்ளதாக ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாவும் அவர் கூறினார்.

4ஆவது நாளாக திருமாவளவன் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. அவரது போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் சில பகுதிகளில் அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதுரையில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. இன்று நள்ளிரவில் விழுப்புரத்தில் இரு பேருந்துகள் மீது பெட்ரோல் வீசி எரியூட்டப்பட்டன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதால் பேருந்துகள் காவல்துறை உதவியுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள திருமாவளவனை டாக்டர் இராமதாஸ் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தித்த இராமதாஸ், இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சுமத்தினார். உங்கள் முடிவால் இலங்கை தமிழர்களைக் காப்பற் முடியும். நீங்கள் மத்திய அரசை நம்புவதாகக் கூறுகிறார். நாங்கள் உங்களை நம்புகிறோம் என்று முதல் அமைச்சர் கருணாநிதிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அஹஹமதாபாத் குண்டு வெடிப்பு துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் நாளன்று அஹமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான துணை குற்றப் பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மாநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட 3, 200 பக்கங்களைக் கொண்ட இந்த துணைக் குற்றப்பத்திரிகையில், அமீரா ரஜா கான் என்ற முக்கிய குற்றவாளி உள்பட 44 பேர் மறைந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் 26 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருந்தது. இதில் 19 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது.

57 பேரை பலிவாங்கிய இந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒவ்வொரு குற்றவாளியும் என்னென்ன செய்தனர், குண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைத்தவர் எவர், எப்போது வைக்கப்பட்டது, எப்படி வைக்கப் பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஸா மீதான தாக்குதல் நிறுத்தம்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 22 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்.  சுமார் 6000க்கும் மேற்பட்டோர் காயமுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 450 குழந்தைகள் மற்றும் 100 பெண்களும் அடக்கம். இஸ்ரேலின் இச்செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சற்று முன் இஸ்ரேலியப் பிரமர் எஹூத் ஓல்மர்ட் தாக்குதல் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். காஸா மீதான தாக்குதல் இஸ்ரேலிய நேரம் அதிகாலை 2 மணி முதல் நிறுத்தப்படும் என்று அறிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதலால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். காஸா மக்கள் இஸ்ரேலுக்கு விரோதிகள் அல்லர் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர்தான் இஸ்ரேலின் விரோதிகள். அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கும் எதிரிகள் என்று அவர் கூறினார். தற்போதைக்கு இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் இருக்கும் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்கினால் திருப்பித் தாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிறுத்த அறிவி்ப்பை ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்துவிட்டது. இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை இராணுவத்திற்கெதிரான தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் சன்டை நிறுத்தம் செய்வதற்கு ஹமாஸ் இயக்கம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. 1. காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், 2. காஸாவை விட்டு இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும், 3. காஸா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கி, பாலஸ்தீனத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு ஏதுவாக எல்லைகளைத் திறந்துவிட வேண்டும். இந்த நிபந்தனைகளைச் செயல்படு்த்தாவிட்டால் சன்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பி்ல்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது.

தாழ்த்தப்பட்ட சாதி அமைச்சர் சென்ற கோயில் சுத்தம் செய்யப்பட்டது?

Published on: வெள்ளி, 16 ஜனவரி, 2009 // ,
ஒரிசாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அமைச்சர் கோயிலுக்குச் சென்றதால் கோயில் சுத்தப்படுத்தப்பட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரிசாவைச் சேர்ந்த அமைச்சர் பிரமிளா மல்லிக் என்ற அமைச்சர் இந்த வாரம் புகழ்பெற்ற கோயிலுக்குச் சென்று வந்த பின்னர், கோயிலின் கதவை மூடிவிட்டு தரைகள் கழுவிவிடப்பட்டன. சாமி சிலையின் துணிகள் மாற்றப்பட்டன. யாகம் நடத்தப்பட்டது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

கோயிலின் கருவறைக்குள் அமைச்சர் நுழைவதற்கு சில சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உபேந்திரா மல்லிக் என்னும் அரசு அதிகாரி கூறியதாக ராய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை தாக்குதல் விசாரணை இந்தியாவில் நடக்க வேண்டும்

மும்பையில் நவம்பர் 26ஆம் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் விசாரணை இந்தியாவில்தான் நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதத்திற்கெதிரான சார்க் அமைப்பின் மாநாட்டில் இப்படித்தான் தீர்மானிக்கப் பட்டுள்ளது. பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்றே கூறுகின்றன என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தங்கள் எதுவும் செய்து கொள்ளவில்லை. என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உலகின் பல்வேறு நாடுகளும் குற்றவாளிகளை ஒப்படைத்துள்ளன. எனவே பாகிஸ்தானும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோருகிறது.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 40 பேரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது.

இஸ்ரேலை ஐ.நா.விலிருந்து விலக்க வேண்டும் - துருக்கி


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத ஒரு நாட்டை ஐ.நா. சபையின் தலைமையத்திற்குள் எவ்வாறு அனுமதிப்பது என்று துருக்கி பிரதமர் எர்தோகான் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பு அவையின் தீர்மானத்தை செயல்படுத்தாத இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஹமாஸ் இயக்கத்தினரைத்தான் குறி வைத்து தாக்குகிறோம் என்ற பெயரில் பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் காஸா மீதான தாக்குதல் குறித்து துருக்கி பிரதமருடன் ஆலோசனை செய்ய உள்ள நிலையில் எர்தோகான் இவ்வாறு கூறியுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் சன்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று மீண்டும் கோரியுள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பராக் ஒபாமா பொறுப்பேற்றவுடன் உடனடியாக பாலஸ்தீனப் பிரச்சனையில் தலையிட்டு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இஸ்ரேலுடன் அதிக உறவு வைத்திருக்கும் நாடு துருக்கி என்பது குறிப்பிடத் தக்கது.

பறவை மோதி அமெரிக்க விமானம் ஆற்றில் கவிழ்ந்தது

Published on: //
அமெரிக்காவின் ஜெட்விமானம் எண் 1549 ஒன்று பறவை மோதி மன்ஹாட்டனின் புகழ்பெற்ற ஹட்சன் நதியில் கவிழ்ந்தது.

நேற்று மதியம் (15-01-2008), லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்தது. 150 க்கும் மேற்பட்ட பயணிகளையும் விமான பணியாளர்களையும், நதியில் இருந்து மீட்டனர்.

வெறும் பறவைகள் ஒரு விமானத்தைக் தகர்க்கும் அளவுக்கு தொழில் நுட்பம் பலவீனமானதாக இருக்கிறதா என்ற ரீதியில் அமெரிக்கா முழுக்க விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

இது தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இங்கே காணலாம்.



இந்திய கிரிக்கெட் அணி இலங்கை பயணம்

Published on: வியாழன், 15 ஜனவரி, 2009 // , , ,
பாகிஸ்தான் செல்லவிருந்த இந்திய கிரிக்கெட் அணி மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் ரத்து செய்யப் பட்டன. அதனைத் தொடர்ந்து இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இன்று அதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.

வரும் 24ஆம் தேதி இந்திய அணி கொழும்பு செல்கிறது.  28 மற்றும் 30 ஆம் தேதி டம்போலாவில் இரு ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. மூன்றாவது போட்டி அடுத்தமாதம் 2ஆம் தேதி நடைபெறும். 4 மற்றும் 5ஆவது போட்டிகள் ஓரிரு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும். அதன் பின்னர் T-20 எனப்படும் 20 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கைப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மும்பை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததையும், தென் ஆப்பிரிக்காவில் முன்பு இருந்த நிற வெறி அரசுக்கெதிராக அந்த அணி சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்ததையும் சுட்டிக் காட்டிய பா.ம.க. தலைவர் இராமதாஸ், தன் நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டிக்கும் விதமாய் இலங்கையுடனான கிரிக்கெட் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக ஸ்ரீனிவாசன், தேர்வுக் குழுத் தலைவராக ஸ்ரீகாந்த் போன்ற தமிழர்கள் பொறுப்பில் இருந்தும் தமிழர்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்திய அணியை இலங்கை அனுப்ப முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்திய அணி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா தலையிட வேண்டும் என்று கோரி தொடர் உண்ணா நிலை மேற்கொண்டு வருகிறார் என்பது நினைவு கூரத்தக்கது.

காஸா - பலி எண்ணிக்கை 1100ஐ தாண்டியது

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 20 நாட்களாக வான், தரை மற்றும் கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காஸா நகரின் உள்ளே பாலஸ்தீன போராளிக் குழுக்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருகி
றது.

இதுவரை 1100க்கும் அதிகமான 
பாலஸ்தீனியர்கள் 
கொல்லப்பட்டுள்ளனர். 4700க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 311 குழந்தைகள் மற்றும் 97 பெண்களும் அடங்குவர்.

இன்று காலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உதவி மையத்தின் தலைமை அலுவலகம் குறி வைத்து தாக்கப் பட்டுள்ளது. சன்டை நிறுத்தம் தொடர்பாக 
பேச்சு வார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவில் சென்றிருக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்செயலுக்கு பான் கி மூன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். 

இன்று காலை காஸா நகரின் அல்குத்ஸ் மருத்துவமனை மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது காஸா நகரின் மைய பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் குழுக்களுக்கும் இடையே கடுமையான சன்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய தரப்பின் சேதம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் நேற்றிலிருந்து இதுவரை சுமார் 33 இராணுவத்தினர் காயமுற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ் இயக்கத்தின் தகவல்படி 34 இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர். 96 பேர் காயமுற்றுள்ளனர்.

காஸாவிலிருந்து அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீதான ராக்கெட் தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.

நீதிபதிகள் சம்பளம் மூன்று மடங்கு உயர்வு

Published on: //
இந்திய நீதிபதிகளின் சம்பளங்களை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு இந்தி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மாதம் இதற்கான சட்ட முன்வரைவை மத்திய சட்ட அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அந்துலே பிரச்சனையால் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வில்லை. பிறகு மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதற்கு ஜனாதிபதி கடந்த வாரம் ஒப்புதல் அளித்ததாக சட்டத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இன்று கூறினார்.

நீதிபதிகளின் உயர்த்தப்பட்ட சம்பள விவரம் வருமாறு: அடைப்புக்குறிக்குள் இருப்பவை பழைய சம்பள விகிதம்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி : ரூ. 1 இலட்சம் (33 ஆயிரம்)
உச்சநீதி மன்ற நீதிபதிகள் : ரூ. 90 ஆயிரம் (30 ஆயிரம்)
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள் : ரூ. 90 ஆயிரம் (30 ஆயிரம்)
உயர் நீதி மன்ற நீதிபதிகள் : ரூ. 80 ஆயிரம் (26 ஆயிரம்)

மும்பை தாக்குதல் விசாரணை - பாகிஸ்தானில் நடத்தலாம்

மும்பையில் நவம்பர் 26ஆம் தேதியன்று நடத்தப்பட் தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையை பாகிஸ்தானில் நடத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. 

மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தானிய அரசு மறுத்து வருகிறது. இந்திய அரசு அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பாகிஸ்தானிய அரசுக்கும் தீவிரவாதிகளின் பாகிஸ்தானிய தொடர்பு குறித்த ஆதாரங்களை அளித்தது. இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இவை வெறும் தகவல்கள் மட்டுமே என்றும் பாகிஸ்தான் கூறி வருகிறது.

மும்பை தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த அமெரிக்க தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியது. பின்னர் இது குறித்த விசாரணை பாகிஸ்தானில் நடத்தலாம் என்று கருத்து கூறியது. ஆனால் விசாரணை இந்தியாவில்தான் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா கூறி வந்தது.

"இந்தியாவில் நடந்த குற்றங்கள் குறித்து இந்தியாவில்தான் நீதி விசாரணை நடத்த வேண்டும். சில காரணங்களால் இது முடியாமல் போனால் பாகிஸ்தானில் முறையான விசாரணை நடத்த முடியும் என்றால் பாகிஸ்தானில் நடத்தலாம்" என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியா அளித்த ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

துபாயில் கொண்டாட்டம் நிறுத்தம்.

துபாயில் ஆண்டுதோறும் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடக்கும். இதன் வண்ண மயமான துவக்க விழா ஆட்சியாளர்களால் மிகக் கோலாகலமாக நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஷாப்பிங் திருவிழா இன்று துவங்குகிறது. ஆனால் இஸ்ரேல் நடத்தும் கொலைவெறித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர் களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய துவக்கவிழா கொண்டாட்டங்களை ரத்துச் செய்து துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகங்களின் பிரதமரும் துணை ஜனாதிபதியுமான ஷெய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுளார்.

இதே காரணத்துக்காகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் துபாயில் ரத்துச் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

15 ரூபாய்க்காக தாயைக் கொன்ற மகன்

Published on: புதன், 14 ஜனவரி, 2009 //
குடிப்பழக்கம் உள்ள பக்குராம் தன்னிடம் குடிப்பதற்குப் பணம் இல்லாததால் தாயிடம் 15 ரூபாய் கேட்டான். மகன் குடிப்பதை விரும்பாத தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டாள். இதனால் கோபமடைந்த மகன் 58 வயதான ஹிர்மத் பாய் என்ற தன்னைப் பெற்ற தாயையே கொலை செய்துவிட்டான்.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தின் கயா எனும் கிராமத்தில் கடந்த திங்கள் கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பக்குராம் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், கொலை செய்யும்போது குடித்திருந்ததாகவும் கூறியதாக உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் 17 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக லெபனானின் எல்லையிலிருந்து 4 ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லையில் வந்து வீழ்ந்ததாகவும் அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலைத் தொடுத்தது எனவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது கடந்த 19 நாட்களாக இஸ்ரேல் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில் நடக்கும் இரண்டாவது முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக கடந்த 8ஆம் தேதியன்று இதுபோன்று தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. இந்த தாக்குதல்களை தாங்கள் மேற்கொள்ளவில்லை என லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏற்கனவே கூறியிருந்தன.

கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனான் மீதும், ஹிஸ்புல்லாஹ்வின் தொலைக்காட்சி நிலையம், அதன் தலைமையகம் உள்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து வான் தாக்குதல்களைத் தொடுத்தது. ஐ.நா. தலையீட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தெற்கு லெபானனின் இஸ்ரேலிய எல்லைப் பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இராணுவம் கண்கானித்து வருவது குறிப்பிடத் தக்கது.

ஐ.நா. செயலாளர் எகிப்து வருகை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுவிட்டதாகவும், 4500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சன்டையை நிறுத்த வேண்டும் என்று இரு தரப்பினரையும் வலியுறுத்தினார். இஸ்ரேல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் 19ஆவது நாளாகத் தாக்குதலை தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சற்று முன் வந்து சேர்ந்தார். இங்கு எகிப்து அதிபர் முபாரக்குடன் பேச்சு வார்ததை நடத்துகிறார். அதன் பின்னர் இஸ்ரேல், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களை அவர் சந்திக்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

மும்பை சம்பவம் - பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பில்லை : பிரிட்டன்

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை உதவியுடன் நடத்தப்பட்டது என்று இந்திய அரசு கூறி வரும் நிலையில் அதனை பிரிட்டன் மறுத்துள்ளது.

"மும்பை தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசால் நடத்தப்பட்டதல்ல என்று உறுதியாக நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தேன். அதனை மீண்டும் கூறுவது அவசியமானது என்று நான் நம்புகிறேன்" என்று பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் நேற்று கூறினார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உபயோகித்த சாட்டிலைட் போன் தகவல்கள் மற்றும் உயிருடன் பிடிபட்டுள்ள கசாப்பின் வாக்கு மூலம் ஆகியவற்றை இந்தியா பாகிஸ்தான் அரசிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தது.

இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும், இவை வெறும் தகவல்கள்தான் எனவும் பாகிஸ்தானின் பிரதமர் கூறியுள்ளார்.

போலி விமான விபத்து

அமெரிக்காவைச் சேர்ந்த மார்கஸ் ஷ்ரன்கர் (வயது 38) என்ற விமான ஓட்டி பல்வேறு நிதி மோசடி வழக்குகளில் சிக்குண்டு காவலர்களால் தேடப்பட்டு வந்தார். இந்த வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக இவர் போலியாக விமான விபத்து சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை இன்டியானா மாநிலம் ஆன்டர்சன் நகரிலிருந்து ப்ளோரிடாவுக்கு விமானத்தில் பறந்தார். அலபாமா மாநில எல்லையில் இருக்கும் போது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு போலியாக அவசர அழைப்பு விடுத்து தனது விமானத்தின் இறக்கைகள் சேதமடைந்துள்ளதாக தகவல் தந்தார். பி்ன்பு விமானம் தானாகவே இயங்கும் வகையில் ஏற்பாடு செய்தார். பின்பு பாராசூட்டைக் கட்டிக் கொண்டு விமானத்திலிருந்து குதித்துவிட்டார். விமானம் ப்ளோரிடா மாநிலம் மில்டன் நகர் அருகே தரையில் விழுந்தது.

இப்படி அவர் செய்யக் காரணம் தான் இறந்துவிட்டதாகப் பதியப்பட்டு விட்டால் நிதி மோசடி வழக்குகளிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்காக. ஆனால் அவர் போலியாக விடுத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து அவரது விமானத்திற்கு உதவி செய்ய இராணுவ விமானம் ஒன்று விரைந்து வந்தது. அவர்கள் அந்த விமானத்தின் அருகி்ல் வந்து பார்த்தபோது விமானத்தின் கதவு திறந்த நிலையில் இருப்பதை அறிந்தனர். எனினும் விபத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் அலபாமா நகரில் ஒருவர் கால் முட்டியில் காயத்துடன் தனது ஓட்டுநர் உரிமத்தைக் காண்பித்து தனக்கு உதவி தேவை என்று காவலர்களிடம் கோரினார். ஓட்டுநர் உரிமத்தி்ல் ஷ்ரன்கர் என்று அவர் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. தான் ஒரு விபத்தில் அடிபட்டதாகக் கூறிய அவரை காவலர்கள் ஒரு விடுதியில் தங்க வைத்தனர். சற்று நேரத்திற்குள் அலபாமா காவலர்களுக்கு போலி விமான விபத்து தகவல் வந்து சேர்ந்தது. விடுதிக்கு வந்து ஷ்ரன்கரைத் தேடியபோது அவர் தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது.

வட இந்தியாவில் குளிருக்கு 100 பேர் பலி

Published on: //
இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. குளிரின் காரணமாக இதுவரை சுமார் 100 பேர் இறந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குளிர் மட்டுமல்லாது கடும் பனியும் பொழிவதால் சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. பல இரயில்கள் தாமதமாக புறப்பட்டன.

ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிர்தசரசில் 3.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. நேற்று காலையில் டில்லியில் கடும் குளிராக இருந்தது. டில்லியின் வெப்ப நிலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது. வழக்கமான சராசரி அளவை விட இது குறைவாகும்.

உத்திரப் பிரதேசத்தில் குளிரின் காரணமாக நேற்று 4 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இம்மாநிலத்தின் முஜப்பர்நகர் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 பேர் குளிரின் காரணமாக இறந்துள்ளனர்.

இந்தியா ஆதாரங்கள் வழங்கவில்லை - பாகிஸ்தான்!

Published on: //
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் குறித்த ஆதாரங்களை இந்தியா வழங்கவில்லை என பாகிஸ்தான் அதிபர் கிலானி தெரிவித்துள்ளார்.

"இந்தியா வழங்கியவை ஆதாரங்கள் அல்ல எனவும் ஆதாரங்கள் என்ற பெயரில் சில விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளனர் எனவும்" கிலானி தெரிவித்தார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் - முக்கிய சாட்சி மாயம்!

Published on: //
கடந்த நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்தத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை நேரடியாக கண்ணால் கண்ட 47 வயதுடைய அனிதா ராஜேந்திர உதயா என்ற முக்கிய சாட்சியைக் காணவில்லை. இவர் எங்கு சென்றார் என்பதைக் குறித்து குடும்பத்தினருக்கோ காவல்துறைக்கோ எவ்விதத் தகவலும் தெரியவில்லை.

தாக்குதல் நடந்த நாளில் மீன்பிடி படகில் அமர்ந்திருந்த இவர், கப் பரேடிலுள்ள பத்வர் பார்க்கில் படகில் வந்திறங்கிய 6 தீவிரவாதிகளைப் பார்ந்திருந்தார். தாக்குதலுக்குப் பின்னர் ஜெ.ஜெ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இந்த 6 பேரின் உடல்களை இவர் அடையாளம் கண்டிருந்தார்.

இதற்குப் பின்னர் அனிதாவிற்கு மிகுந்த பயம் இருந்ததாக மகள் சீமா கேதல் ஜோஷி கூறினார். சீமா தெரிவித்தப் புகாரின் அடிப்படையில் கப் பரேட் காவல்துறை விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

விப்ரோ நிறுவனத்திற்கு உலக வங்கி தடை

Published on: திங்கள், 12 ஜனவரி, 2009 // ,
இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ நிறுவனத்துடன் உலக வங்கி வணிகத் தொடர்பு கொள்வதற்கு நான்கு ஆண்டுகால தடை விதித்துள்ளது. உலக வங்கி வணிகத் தடை விதிக்கும் மூன்றாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் விப்ரோ என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு முன் சத்யம் மற்றம் மெகா சாப்ட் ஆகிய நிறுவனங்களுக்குத் தடை விதித்திருந்தது.

உலக வங்கியின் ஊழியர்களுக்கு இந்த நிறுவனங்கள் இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி இந்த தடை விதிதக்கப் பட்டுள்ளது. இவையன்றி நெஸ்டார் பார்மாசூட்டிகல், கேப் இன்டர்நேஷனல், சுரேந்திர சிங் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கும் இந்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

சரக்குந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

Published on: //
எட்டு நாட்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த சரக்குந்து வாகனங்கள் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கும் சரக்குந்து உரிமையாளர் சம்மேளனத்திற்கும் இடையே இன்று மதியம் நடைபெற்ற பேச்சு வார்த்தை சுமுகமாக அமைந்ததைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கூறினார். எந்த வகையான உடன்பாடுகள் அரசுக்கும் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

கேம்பிரிட்ஜ் பல்கலை: இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டய கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பெயரால் இந்த உதவித் தொகை அறியப்படும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அலிசன் ரிச்சர்ட் கூறினார்.

உதவித் தொகை தேவைப்படும் மாணவர்களுக்கு அவர்கள் எந்தப் பிரிவு பாடம் படித்தாலும் கல்விக் கட்டணம் உள்பட மற்ற செலவுகளுக்கு இந்த உதவித தொகை வழங்கப்படும். இதற்காக 1.5 மில்லியன் பவுண்ட் நிதி வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த தொகையை எரன்டா அறக்கட்டளையும், பார்தி அறக்கட்டளையும் அன்பளிப்பாக அளித்துள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர்நிலைப் பட்டயக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மன்மோகன் சிங் பெயரால் ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர் என்பதும் பொருளாதாரப் பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார் என்பதும் குறிப்பிடத்த்ககது.

திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. வெற்றி

Published on: //
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.  வேட்பாளர் லதா அதியமான் 39, 266 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முத்துராமலிங்கம் 40, 156 வாக்குள் பெற்றார். வாக்கு விவரம் வருமாறு:

மொத்த வாக்குகள் : 1, 55, 647
பதிவானவை : 1, 38, 191

தி.மு.க. : 79, 422
அ.தி.மு.க. : 40, 156
தே.மு. தி.க. : 13, 136
ச.ம.க. : 831

ஆதாரங்களுக்கு பதில் தராத பாகிஸ்தான்!

Published on: ஞாயிறு, 11 ஜனவரி, 2009 // ,

இந்தியா சமர்ப்பித்துள்ள ஆதாரங்களுக்கு இதுவரை ஏதும் பதில் தரவில்லை பாகிஸ்தான்.

மும்பை பயங்கரவாதம் தொடர்பான ஆதாரங்களைப் பாகிஸ்தானிடம் சமர்ப்பித்தது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சரான ஆனந்த் ஷர்மா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மும்பையின் இப் பயங்கரவாதச் செயலில் தொடர்புடைய தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் அவை மீதான அரசின் நடவடிக்கை பற்றியும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஷர்மா.

மேலும், பாகிஸ்தான் இச்செயலைச் செய்தது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்றை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்றார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இனை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பிக்கப் பட வேண்டும் என்று பிஜேபியின் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று பாஜக நேற்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on: //
சென்னையிலுள்ள பாம்குரோ நட்சத்திர ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் இல்லையேல் ஹோட்டலை குண்டு வைத்துத் தகர்ப்போம் எனவும் மும்பையிலிருந்து அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

மிரட்டலைக் குறித்து ஹோட்டல் உரிமையாளர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை ஹோட்டலைச் சுற்றிப் பலத்தப் பாதுகாப்பு போட்டுள்ளது. மின்னஞ்சலை அனுப்பியவரைக் குறித்த விசாரணையும் துரிதபடுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் சமீபத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் நினைவு மறையும் முன், மற்றொரு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய்பாபா கோயில் சுவர் தங்க அலங்காரம் செய்யப்படுகிறது

Published on: //
ஷீரடியில் ஸ்ரீ சாய்பாபா சிலையைச் சுற்றி உள்ள நான்கு சுவர்களும் தங்கத் தகடுகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக 50 கிலோ தங்கம், 50 கிலோ வெண்கலம், 250 கிலோ தாமிரம் ஆகியவை உபயோகிக்கப் படுகின்றன. இந்தப் பொருள்களை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆதிநாராயண ரெட்டி என்ற வணிகர் சாய் சனாதன் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக அளித்ததாகக் கூறப்படுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த ராஜா அழகர் என்பவர் இதனை வடிவமைத்தார். இவர் ஏற்கனவே திருப்பதி  பாலாஜி போன்ற கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு இவரது மனைவி சாய்பாபாவிற்கு தங்க சிம்மாசனம் வழங்குவதாக கனவு கண்டு அதனை சாய்பாபாவிடம் கூற அதைச் செய்து தரும்படி சாய்பாபா கூறினார்.  சுமார் 100 கிலோ தங்கத்தில் 90 கோடி ரூபாய் செலவில் அழகரின் வடிவமைப்பில் செய்து சாய்பாபாவுக்கு காணிக்கையாக அளித்தார்.

இந்தியாவிலேயே சாய்பாபா கோயில் திருப்பதிக்கு அடுத்து செல்லவமிக்கதாகும். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 81 கோடி ரூபாய், 120 கிலோ தங்கம் மற்றும் 440 கிலோ வெள்ளி ஆகியவை சாய்பாபா கோயிலுக்கு காணிக்கையாகக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

காஸா நகரை நெருங்குகிறது இஸ்ரேலிய இராணுவம்

Published on: //


கடந்த 16 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 860க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  3500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். 

இஸ்ரேலிய இராணுவம் காஸா நகரை வேகமாக நெருங்கி வருவதாக செய்திகள் கூறுகின்றன. காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற பாலஸ்தீனிய குழுக்கள் 
இஸ்ரேலிய இராணுவத்துடன் கடுமையாக சன்டையிட்டு வருகின்றன.

பாலஸ்தீனிய குழுக்கள் இஸ்ரேலிய நகரைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 80க்கும் மேற்பட் இஸ்ரேலிய இராணுவத்தினர் காயமுற்றதாகவும் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 2 இராணுவ வீரர்கள் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய குழுக்கள் கூறி உள்ளன.

LAW எனப்படும் டாங்கர் எதிர்ப்பு ஆயுதம் மற்றும் சில ஆயுதங்களையும் பாலஸ்தீனிய குழுக்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிதம்பரம் அமெரிக்கப் பயணம் ரத்து

Published on: //
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அமெரிக்கா செல்ல இருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியாகி இருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கான்டலீசா ரைசைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் உள்துறை அமைச்சர் தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி அமெரிக்க செல்ல இருக்கும் நிலையில் இந்திய உள்துறை அமைச்சரின் பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தலைவர்களில் ஜர்தாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிதம்பரம் வருகை குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் கேட்டபோது, சிதம்பரம் அவர்களை எந்நேரமும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போது காஸா பிரச்சனையில் தனது கவனத்தைச் செலுத்தியிருப்பதால் கான்டலீசா ரைசுக்கு நேரம் இல்லை என்று கூறினார்.

கற்பழிப்புக்குப் பழி மூன்றுபேர் கொலை

Published on: //
தன்னுடைய ஐந்து வயது மகளைக் கற்பழித்த ஒருவனின் குடும்பத்தினர் மூன்று பேரைக் கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டார் அச்சிறுமியின் தந்தை. உத்திரப் பிரதேச மாநிலம் சீத்தாபூர் அருகில் உள்ள லெஹர்பூர் எனும் கிராமத்தில் நேற்று இந்நிகழ்வு நடந்தது. சிறுமியைக் கற்பழித்ததாய் பிரமோத் என்பவர் மீது இம்மாதம் 2ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சீத்தாபூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப் பட்ட சிறுமியின் தந்தை தனது உறவினர்களுடன் சென்று பிரமோதின் தந்தை மற்றும் இரு சகோதரர்களைச் சுட்டுக் கொன்றார். இது பழிவாங்கல் நடவடிக்கை என்று மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை கொலை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

முஸ்லிம் லீக் காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டும் - பிரகாஷ் கரத்

Published on: சனி, 10 ஜனவரி, 2009 //
ஃபலஸ்தீனில் இனப்படுகொலை நடத்தி வரும் தீவிரவாத நாடான இஸ்ரேலுடன் உறவு வைத்துள்ள மத்திய அரசிலிருந்து முஸ்லிம் லீக் வெளியேற வேண்டும் என சி.பி.எம் பொது செயலாளர் பிரகாஷ் காராட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

"இஸ்ரேலுடனான மத்திய அரசின் தொடர்பில் எவ்வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில், ஃபலஸ்தீன் விவகாரத்தில் முஸ்லிம் லீக்கிற்கு மனப்பூர்வமான நிலைபாடு தான் உள்ளது எனில் வெளியுறவு துறை இணையமைச்சர் பதவியிலிருந்து இ.அஹமது ராஜினாமா செய்து வெளியேற வேண்டும். இஸ்ரேலுடனான மத்திய அரசின் உறவை முறிக்க வேண்டும் என்ற லீக்கின் தீர்மானம் வரவேற்புக்குரியது. வெறும் தீர்மானத்தோடு நின்று விடாமல், மத்திய அரசிலிருந்து இராஜினாமா செய்து வெளியேறினால், லீக்கின் நிலைபாட்டைக் கேரள மக்கள் வரவேற்பர்" என கேரளத்தில் நடக்கும் சி.பி.எம் மத்திய கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காராட்டு தெரிவித்தார்.

"இந்திய மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமெனில் காங்கிரஸ் தலைமையிலுள்ள அரசை வெளியேற்ற வேண்டும். காங்கிரஸை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை வரவிருக்கும் தேர்தலில் சி.பி.எம் எடுக்கும். ஆனால், எவ்வகையிலும் பாஜக ஆட்சிக்கு வருவதை சி.பி.எம் அனுமதிக்காது. காங்கிரஸ் தவிர்த்த மற்ற மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன."

"சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா, இஸ்ரேலின் தீவிரவாதத்திற்கு முழு உதவியும் செய்து வருகிறது. உலகில் நடக்கும் அனைத்து தீவிரவாதச் செயல்பாடுகளுக்கும் பின்னணீயில் அமெரிக்காவும் இஸ்ரேலுமே செயல்படுகின்றன. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்காமல் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இயலாது" எனவும் அவர் கூறினார்.

பங்காரப்பா மீண்டும் காங்கிரசில் இணைகிறார்?

Published on: வெள்ளி, 9 ஜனவரி, 2009 //
கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் பங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்று பங்காரப்பா கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று கூறி காங்கிரசில் இருந்து வெளியேறிய பங்காரப்பா, "சோனியா காந்தி பிரதமர் பதவியை தியாகம் செய்தவர். காங்கிரஸ் கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். இந்திய அரசியலை நன்கறிந்தவர்" என்று செய்தியாளர்களிடம் கூறினார். கர்நாடக மாநிலம் ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் கட்சி அனுமதியளித்தால் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் கர்நாடக மாநில செயலாளராக இருக்கும் இவரை மீண்டும் காங்கிரஸில் சேர்த்துக் கொள்ள, காங்கிரசின் தற்போதைய கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பங்காரப்பா ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் பா.ஜ.க.விலிருந்தும் வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு ஷிமோகாவில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஷிகாரிபுரா எனும் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

நந்திகிராம் இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி

Published on: //
மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு பெரும் கலவரம் நடைபெற்ற நந்திகிராம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெரோஸா பீவி கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பரமானந்தா பாரதியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கம்யூனிஸ்டு கட்சியின் முஹம்மது இல்யாஸ் மீது ஊழல் புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

வெற்றி பெற்ற பெரோஸா பீவி நந்திகிராமில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னின்று போராட்டம் நடத்தியவர். தன்னுடைய வெற்றியை இப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.

சரக்குந்து உரிமையாளர் சம்மேளன செயலாளர் கைது

Published on: //
கடந்த ஐந்து நாட்களாக இந்தியா முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் டீசல் விலை குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் மற்றும் சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்கள் அண்மித்து வரும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. வேலை நிறுத்தத்தைக் கைவிடாவிட்டால் சரக்குந்து உரிமையாளர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் மேலாண்மைச் சட்டத்தின் (ESMA)படியும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படியும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.

மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சரக்குந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ரமேஷ் குலாட்டி டில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது அத்தியாவசியப் பொருட்கள் மேலாண்மை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

டில்லி, உத்திரப் பிரதேசம்,  ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் எஸ்மா சட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற மாநிலங்களும் விரைவில் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் சுமார் 60 இலட்சம் சரக்குந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக ஓடாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் நடத்திய வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

மூன்றாவது அணி குறித்து ஆலோசிக்கும் சிபிஐ!

Published on: //
சிபிஎம் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் கொச்சியில் ஆரம்பித்தது. இக்கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும். முதல் நாள் இறுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக மூன்றாம் அரசியல் முன்னணி குறித்து எவ்வித முடிவும் பெறப்படாமல் கூட்டம் முடிவு பெற்றது.

"காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றான மூன்றாம் முன்னணி, அரசியல் சூழல்களை அவதானித்து முடிவு செய்வோம்" என சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறினார்.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அதற்கான சலனங்கள் கிடைக்கத்துவங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

பணவீக்கம் மீண்டும் குறைந்தது!

Published on: //
இந்தியாவின் பணவீக்க மதிப்பு மீண்டும் குறைந்தது. ஒரு நேரத்தில் 12 மேல் சென்ற பணவீக்க மதிப்பு கடந்தச் சில வாரங்களாக வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த டிசம்பர் 27 அன்றைய கணக்குபடி அதற்கு முந்தைய வாரக்கணக்கான 6.38 லிருந்து மீண்டும் குறைந்து 5.91 ஆனது. 10 மாதங்களுக்கு இடைப்பட்ட காலயளவில் உள்ள மிகவும் முறைந்த மதிப்பாகும் இது.

உலக அளவில் பொருளாதார மந்தநிலை தொடரும் வேளையில், இந்திய பணவீக்க மதிப்பு குறைந்து வருவது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஸா : 14ஆவது நாளாகத் தொடரும் தாக்குதல்கள்

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது "ஆபரேஷன் கேஸ்ட் லீட்" என்ற பெயரில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 781 பேர் பலியானதாகவும், 3100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் உடனடியான சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்கவில்லை. மீதம் உள்ள 14 உறுப்பு நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்நிலையி்ல் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்றிரவு நடைபெற்ற தாக்குதலில் பாலஸ்தீன ஜனநாயக விடுதலை முன்னணி என்ற இடதுசாரி அமைப்பின் தலைவர் காயமுற்றதாகவும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வியாழன் அன்று ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் நிறைவேற்றிய பின் நடைபெற்ற தாக்குதலில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

5வது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்

Published on: //
கடந்த திங்கள் கிழமை அதிகாலை முதல் நாடு முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. டீசல் விலையில் 10 ரூபாய் வரை குறைப்பு, சேவை வரி விலக்கு, நாடு முழுவதும் ஒரே பெர்மிட் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவுற்றதால் வேலை நிறுத்தம் தொடரும் என்று இந்திய சரக்குந்து வாகன உரிமையாளர்கள் பேராயம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் அண்மித்து வரும் நிலையில் நாடு முழுவதும் இந்த வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருள்களின் விலைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது அத்தியாவசிய பணிகள் மேலாண்மை சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

குஜராத், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநில அரசுகள் இந்த சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கூறியுள்ளன.

சினிமா விமர்சனம்: அபியும் நானும்

Published on: //

அபியும் நானும்


ரஸ்ஸல்


தமிழ் சினிமா என்றால் இப்போதெல்லாம் குடும்பத்துடன் பார்க்கும்படியாக அமைவதில்லை.
வெட்டு, குத்து, அரிவாள், ரத்தம் எனக் "கவிச்சி நெடி" அல்லது குளோஸப்பில் தொப்புழ், பெரிதுபெரிதாகக் குலுங்கும் மார்பகம் எனக் "கவர்ச்சி நெடி".
இதிலிருந்து வித்தியாசமாக, அருவருத்து முகம் சுளிக்காமல் பார்க்கும்படி அமைந்த ஒரு திரைப்படம் "அபியும்நானும்".
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் ப்ரகாஷ்ராஜ் , தமிழில் பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கினாலும் ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களையே தருவதாகக் கூறுகிறார். அவ்வகையில் 'மொழி'க்கு அடுத்து அவர் தந்துள்ளது "அபியும்நானும்" திரைப்படம்.
அபியாக த்ரிஷா, அப்பாவாகப் ப்ரகாஷ்ராஜ், அம்மாவாக ஐஸ்வர்யா (ராய் இல்லை)
காலையில் நடப்பதற்கு வந்த ப்ரகாஷ்ராஜ் வழியில் தம் மகளுடன் இருக்கும் ப்ருத்விராஜிடம் உரையாடுவதாகத் தொடங்கும் கதை.
ஒரே பெண் குழந்தையான அபி ப்ரீகேஜி வகுப்பில் சேர்வது முதல்,திருமணமாகிக் கணவனுடன் போவது வரை ஒரு பாசக்காரத் தந்தையின் எதிர்பார்ப்புகளையும் எதிரொலிகளையும் விவரிக்கிறது படம்.
எனினும் சில காட்சிகள் ரொம்ப ஓவர் - பூ சுற்றும் ரகம்.
ப்ரீகேஜிக்கு மகளைச் சேர்க்க இண்டர்வ்யூவுக்குத் தயாராகும் காட்சிகள், அவளை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பும்போது காட்டும் உணர்ச்சிகள் போன்றவை மிகை ரகம்.
அதுபோல திட்டக்கமிஷனில் ஒரு உறுப்பினராக மட்டுமே இருக்கும் அபியின் காதலனை, அவளது வீட்டு லேண்ட் லைனில் பிரதமரே அழைத்துப் பேசும் காட்சி "பூ"ரகம்.
காலில் வெந்நீர் கொட்டியதாக அலறும் மகளைக் கண்டவுடன் என்ன ஏது என விசாரிக்காமல் மனைவியின் கன்னத்தில் அறைந்துவிட்டு மகளைத் தூக்கிக் கொண்டு ஓரும் பிரகாஷ்ராஜ், உண்மையில் வெந்நீர் கொட்டியது மனைவியின் காலில் என்று அறிந்த பின் காட்டும் பாவமும் ஐஸ்வர்யா கூறும் அறிவுரையும் யதார்த்தம் ரகம்.
"குழந்தைகளுக்கு நாம் எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்; ஆனால் குழந்தைகள் ஈஸியாக நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்" என்பன போன்ற சிறப்பான வசனங்கள் சில இடங்களில் மின்னி மறைகின்றன.
மகளின் ஆசைக்காக ஒரு பிச்சைக்காரனை வீட்டில் தங்க வைப்பதில் என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் எனத் தோன்றும் கேள்விக்கு, மகள் ஒரு சீக்கியனைத் தன் வருங்கால வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் ப்ரகாஷ்ராஜிடம் அதே பிச்சைக்காரன் கூறும் விளக்கத்தில் விடைசொல்கிறார்.
நகைச்சுவைக்கெனத் தனியாகக் காமெடி ட்ராக் வைத்து, கோடுபோட்ட அண்டர்வியர் தெரியும்படி வேட்டியை மடித்துக் கட்டி, அடியும் உதையும் வாங்கும் சீப்பான காட்சிகளை வைக்காததற்குஇயக்குநர்க்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்.
ப்ரகாஷ்ராஜிடம் இயக்குநர் மனோபாலா குறுக்கிட்டுக் கேட்கும் கேள்விகளும் ப்ரகாஷ்ராஜின் பதில்களும்தான் நகைச்சுவை. ப்ருத்வியிடம் ப்ரகாஷ்ராஜ் பேசிக்கொண்டிருக்கும்போது, "என்னசார் ஃப்ரெண்டா?" என மனோபாலா கேட்க, " இல்ல; என்னெ கொல பண்ண வந்திருக்கார் ரேட் பேசிட்டிருக்கேன்" என்று ப்ரகாஷ் ராஜ் அளிக்கும் பதில் இயல்பான நகைச்சுவை.
காதல் பறவையாக டூயட் பாடிப் படங்களில் உலாவரும் த்ரிஷா இப்படத்தில் அதிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார். ஐஸ்வர்யாவின் நடிப்பு கச்சிதம்.
பாடல்கள் எளிமையான ராகத்தில்..
"வா வா தேவதையே"," ஒரே ஒரு ஊரிலே" போன்ற பாடல்கள் ம்யூஸிக் சானல்களில் பிரபலமாகின்றன.
சீக்கியக் கதாபாத்திரங்கள் ஹிந்தியிலேயே உரையாடுவது ப்ள்ஸ்பாய்ண்ட்.
படம் பார்த்து முடிந்தபின்தான் தெரிகிறது இப்படம் சொல்லும் சேதி என்னவென்று.
" அன்பை விதையுங்கள்; அன்பால் வெல்லுங்கள்"
இதையே காட்சிகளாகவும் வசனங்களாகவும் காட்டியுளார் இயக்குநர் ராதாமோகன்.

சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்

Published on: வியாழன், 8 ஜனவரி, 2009 //
.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கட்சியின் தலைவர் சிபுசோரன் தேர்தலில் தோல்வியுற்றார்.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி, முதலமைச்சராகப் பதவியேற்ற இவர் தேர்தல் ஆணைய விதிகளின்படி, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.இதற்காக அவர் கடந்த 3 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலலில் போட்டியிட்டார்.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சிபுசோரன் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து ஜார்கண்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண பதார் வெற்றிபெற்றுள்ளார். இடைத்தேர்தல் முடிவு சிபுசோரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சிபுசோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக சஞ்சய் தத் அறிவிக்கப்பட்டார்

Published on: //
மும்பை குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இரு முறை சிறை சென்று பிணையில் வந்துள்ள நடிகர் சஞ்சய் தத் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியின் தற்போதைய உறுப்பினர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத் தக்கது.

சஞ்சய் தத் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சிறப்புச் சலுகை பெறப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மட்டைப் பந்து வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்து இத்தகைய அனுமதி பெற்றே தேர்தலில் போட்டியிட்டார்.

சஞ்சய் தத்தின் சகோதரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதால் காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்காது என்று கூறப்படுகிறது.

அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு: குற்றம்சாட்டப்பட்டவர் கொலை

Published on: //
அஸ்ஸாம் மாநிலத்தியில் கடந்த முதல் தேதியன்று நடைபெற்ற தொடர் கொண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியாக காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்ட பிரன்ஜோல் தேகா என்பவர் காவல் துறையினரால் இன்று சுட்டுக் கொல்லப் பட்டார். பிஜு சரனியா மற்றும்  பம்பால் என்ற பெயர்களாலும் அறியப் பட்டு வந்த 20 வயதே ஆன இவர் உல்பா இயக்கத்தின் முக்கியத் தலைவர் என காவல் துறை தகவல்கள் கூறுகின்றன.

அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மற்றும் நல்பாரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஹலிகுச்சி என்னும் கிராமத்தில் இவர் மறைந்திருந்த தகவல் அறிந்த காவல் துறையினர் இவரைச் சுட்டுக் கொன்றனர்.

புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

மாணவியின் கண்ணைக் குருடாக்கிய ஆசிரியை

Published on: //
சட்டீஸ்கர் மாநிலம் ரய்ப்பூரில் உள்ள 6 வயதே ஆன பள்ளி மாணவி ஆசிரியையின் கேள்விக்குப் பதில் அளிக்காததால் கோபமடைந்த அந்த ஆசிரியை மாணவியின் வலது கண்ணைக் குருடாக்கிவிட்டார்.

கடந்த நவம்பவர் மாதம் இச்சம்பவம் நடந்ததாகவும் புதன் கிழமைதான் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறிய காவல் துறை அதிகாரி, அந்த ஆசிரியை குண்டூசி கொண்டு மாணவியின் வலது கண்ணைக் குருடாக்கியதாகக் கூறினார். இச்சிறுமியின் கண் குருடாகிவிட்டதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்தபின் அந்த ஆசிரியை தலைமறைவாகி விட்டதாகவும் அவள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

சிறுமியின் கண்ணைக் குணப்படுத்த ஆகும் மருத்துவ செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

Published on: //
கடந்த 13 நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதில் 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தெற்கு லெபானான் பகுதி மீது இஸ்ரேல் 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக இன்று காலை தெற்கு லெபானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாவே லெபனான் மீதான ஏவுகணை தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் என்ற அமைப்பு தங்களுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது. லெபனானில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள்தான் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசியிருக்க வேண்டும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. ஹமாஸ் இயக்கத்தினர் இதில் ஈடுபடவில்லை எனவும், மற்ற பாலஸ்தீனிய குழுக்கள் செய்தனவா என தங்களுக்குத் தெரியாது எனவும் ஹமாஸ் கூறியுள்ளது. ஹமாஸ் தனது தாக்குதல்களை பாலஸ்தீனத்தின் எல்லையிலிருந்துதான் தொடரும் எனவும் இதற்காக மற்ற அரபு நாடுகளைப் பயன்படுத்தாது எனவும் ஹமாஸ் கூறியுள்ளது.

ஒதுக்கீடு கேட்கும் கப்பல் உரிமையாளர்கள்

Published on: புதன், 7 ஜனவரி, 2009 //
பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் அனுப்பும் சரக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமான கப்பல்களில்தான் அனுப்ப வேண்டும் என்று அரசுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கோரிக்கை மடல் அனுப்பியுள்ளது.

1980களில் இந்திய கப்பல்கள் 40 சதவீத சரக்குகளைக் கையாண்டதாகவும் தற்போது 12 முதல் 13 சதவீத சரக்குகளையே கையாள்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய கப்பல் நிறுவனங்கள் அதிக விலை கேட்பதாக எழும் புகார் குறித்து விசாரித்த போது, இந்திய நிறுவனங்கள் கப்பல்களைப் புதிதாக வாங்குவதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல்களைப் பயன்படுத்துவதாகவும் இதனால் அவர்கள் குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும் இந்திய கப்பல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் குல்கர்னி கூறினார்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதத்தில் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள் 391.8 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது எனவும் கடந்த ஆண்டு இது 378.8 டன்னாக இருந்தது எனவும் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

காஸா : தொடரும் தாக்குதல்கள்

Published on: //
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுள்ளது. இதுவரை சுமார் 670பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் 3000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் இராணுவப் பிரிவு மட்டுமின்றி இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பும் இஸ்ரேலிய இராணுவத்தினருடன் கடும் சன்டையில் ஈடுபட்டு வருவதாகவும் சுமார் 40க்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய இராணுவ சேதம் குறித்த உறுதிப்படுத்தப்படதாக தகவல்களே கிடைக்கின்றன. இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்ததப்பட்டதாகவும், 7 டாங்கர்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மொரிட்டீனியா, வெனிசுலா, எகிப்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதர்களை வெளியேற்றி உள்ளன.  டென்மார்க் தனது நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இஸ்ரேல் தன்னுடைய நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுவதைக் குறித்து கவலைப்படவில்லை என்று இஸ்ரேலிய ஜனாதிபதி சைமன் பெரஸ் கூறினார். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து இறங்கி உள்ளது. இதற்கான திட்டம் ஒன்றை நேற்று எகிப்து அதிபர் முபாரக் அறிவித்தார். இந்த திட்டம் குறித்து பரிசீலிப்பதற்காக இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் தற்போது கூடி விவாதித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சற்றுமுன் கிடைத்த தகவல்படி காஸாவின் கான் யூனுஸ் என்ற நகரிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறி இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

லாலு ஜப்பான் செல்கிறார்

Published on: //
சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை திட்டத்திற்கு ஜப்பானின் கடன் உதவி பெறுவதற்காக இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பான் செல்கிறார். சுமார் 1 வார பயணத்தில் அவருடன் இரயில்வே இணை அமைச்சர் வேலு, இரயில்வே போர்டின் தலைவர் ஜீனா மற்றும் இரயில்வேன் மூன்று உயர் அதிகாரிகளும் இம்மாதம் 11ஆம் தேதி ஜப்பான் செல்கின்றனர்.

ஜப்பான் பன்னாட்டு கூட்டறவு முகமை (Japan International Cooperation Agency)யிடம் 450 பில்லியன் யென் (சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய்) கடன் ஒப்பந்தம் ஏற்படும் என்று தெரியவருகிறது. இந்தத் தொகை இந்தியாவின் மேற்குப் பகுதியில் சரக்குப் போக்குவரத்திற்கென தனி இருப்புப் பாதை அமைக்க பயன்படுத்தப்படும். இந்தப் பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட வேண்டும் என்ற ஜப்பானின் கோரிக்கையை இரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டதுடன், ஜப்பானிடமிருந்து அதிக சக்தியுள்ள என்ஜின்களை வாங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

160 என்ஜின்கள் வாங்கப்படும் என்றும் கடன் தொகையில் சுமார் 30 சதவீதம் இதற்கென பயன்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தியர் நியமனம்

Published on: //
அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தி வம்சாவளியைச் சார்ந்த சஞ்சய் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சி.என்.என். தொலைக்காட்சியில் மருத்துவ செய்தியாளரகப் பணியாற்றி வருகிறார். 40 வயதாகும் குப்தா அமெரிக்காவின்  மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா இராக்கைக் கைப்பறிய போது அமெரிக்காவின் கடற்படை பிரிவில் பணியாற்றிய இவர் இராக் சென்றார். அங்கு அமெரிக்க இராணுவத்தினருக்கு மட்டுமின்றி இராக்கியர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்தார்.

அரசுத்துறை மருத்துவமனைகளின் தலைவர் என்ற முறையில் சுகாதாரம் குறித்த அரசின் நிலையை மக்களுக்குத் தெரிவிப்பது இவரது பணியாகும்.

இஸ்ரேலியத் தூதரை வெளியேற்றிய வெனிசுலா

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழியாக கடும் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் உலகெங்கும் உள்ள அரசுகள் இஸ்ரேலின் இச்செயலைக் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் வெனிசுலாவில் உள்ள இஸ்ரேலியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலரையும் வெனிசுலாவை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக செவ்வாயன்று தொலைக்காட்சியில் உரையாற்றி வெனிசுலா அதிபர் சாவேஸ், வெனிசுலாவில் உள்ள யூதர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று கூறிய தனது உரையைத் தொடங்கினார். இஸ்ரேலியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை 215 குழந்தைகள் மற்றும் 98 பெண்கள் உள்பட 660 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3ஆவது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்

Published on: //
சரக்குந்து உரிமையாளர்களும் மத்திய அரசும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து, சரக்குந்து வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்திற்கு இரயில்வே துறையின் உதவியை நாடியுள்ள போதிலும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

எங்களுக்கு ஒவ்வொரு நாளும் நட்டம் ஏற்படுகிறது. எங்களால் தொடர்ந்து இந்த தொழில் செய்ய இயலவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அகில இந்திய போக்குவரத்துப் பேராயத் தலைவர் சரன்சிங் லோஹரா கூறினார். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் கூறினர்.

சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்று அத்தியாவசியப் பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வேலை நிறுத்தத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!