காஸா மீதான தாக்குதல் நிறுத்தம்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த 22 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். சுமார் 6000க்கும் மேற்பட்டோர் காயமுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 450 குழந்தைகள் மற்றும் 100 பெண்களும் அடக்கம். இஸ்ரேலின் இச்செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சற்று முன் இஸ்ரேலியப் பிரமர் எஹூத் ஓல்மர்ட் தாக்குதல் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். காஸா மீதான தாக்குதல் இஸ்ரேலிய நேரம் அதிகாலை 2 மணி முதல் நிறுத்தப்படும் என்று அறிவித்தார்.
இஸ்ரேலிய தாக்குதலால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். காஸா மக்கள் இஸ்ரேலுக்கு விரோதிகள் அல்லர் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர்தான் இஸ்ரேலின் விரோதிகள். அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கும் எதிரிகள் என்று அவர் கூறினார். தற்போதைக்கு இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் இருக்கும் என்றும் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்கினால் திருப்பித் தாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிறுத்த அறிவி்ப்பை ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்துவிட்டது. இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருக்கும் வரை இராணுவத்திற்கெதிரான தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் சன்டை நிறுத்தம் செய்வதற்கு ஹமாஸ் இயக்கம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. 1. காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், 2. காஸாவை விட்டு இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும், 3. காஸா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கி, பாலஸ்தீனத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு ஏதுவாக எல்லைகளைத் திறந்துவிட வேண்டும். இந்த நிபந்தனைகளைச் செயல்படு்த்தாவிட்டால் சன்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பி்ல்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது.
0 comments