Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாட்டயா டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சானியா

Published on: வியாழன், 12 பிப்ரவரி, 2009 // , , , , ,
பாட்டயா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியாமிர்ஸா இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில் அவர் இரஷ்யாவின் விடாலியா டயட்சென்கோவை 6-4, 6-0 என்ற நேர்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதிப்போட்டியில் சானியா தாய்லாந்து வீராங்கனை டமரினைச் சந்திக்கிறார்.

முன்னதாக, இந்தியாவின் சானியா -இத்தாலியின் மாரா சாண்டஞ்சிலோ இணை இரட்டையர் ஆட்டத்தில் அரையிறுதி எட்டியுள்ளது.

இறந்து 5 ஆண்டுகளான ஈ.கே. நாயனாருக்கு கைது வாரண்ட்

இறந்து 5 ஆண்டுகளான ஈ.கே. நாயனாருக்கு கைது வாரண்ட்

திருவனந்தபுரம், பிப். 11: இறந்து 5 ஆண்டுகளான கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே. நாயனாருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

நாயானார் இறந்து விட்டதை நீதிமன்றத்துக்கு போலீஸôர் முறைப்படி தெரிவிக்காததால் இவ்வாறு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.கே. நாயனார் உள்பட 19 பேர் மீது அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டிலும் நாயனாருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இருந்த போதிலும் அவர் இறந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு போலீஸôர் முறைப்படி தெரிவித்து, அவருக்கு எதிரான வழக்கை முடிக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நீதிபதி எஸ். கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது ஈ.கே. நாயனாருக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தற்போதைய எம்.எல்.ஏ. சிவன்குட்டி உள்பட 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 3 முறை கேரள முதல்வராக இருந்து ஈ.கே. நாயனார் கடந்த 2004 மே 19-ம் தேதி காலமானார்.

உலகக் கோப்பை "கிக் பாக்ஸிங்': சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்


உலகக் கோப்பை "கிக் பாக்ஸிங்': சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்

www.muduvaivision.com


ராமநாதபுரம், பிப். 11: சேலத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை -2009-க்கான கிக் பாக்ஸிங் போட்டியில், ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், உலக அளவில் இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, கொரியா, ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில், சப்-ஜூனியர் 10 வயதுக்கான 20 முதல் 25 கிலோ எடைப் பிரிவு கிக் பாக்ஸிங் தொடர் சண்டைப் போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மெட்ரிக். பள்ளி மாணவர் ராகுல் பாபு முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மேலும் அதே போட்டியில், 16 வயதினருக்கான ஜூனியர் 40 முதல் 45 கிலோ எடைப் பிரிவில், ராமநாதபுரம் லூயிஸ் லெவேல் மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி மாணவர் மருதுபாண்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

45 முதல் 50 கிலோ எடைப் பிரிவுக்கான கிக் பாக்ஸிங் தொடர் சண்டைப் போட்டியில், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முஹம்மது பாஸில் 2-வது இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

இப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களை, மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் மன்னர் குமரன் சேதுபதி, செயலர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்டத் தலைமைப் பயிற்சியாளர் குகன் ஆகியோர் பாராட்டினர்.

சிறுவனுக்கு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை

டில்லியில் ஒரு சிறுவனுக்கு மாநில அரசு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க டில்லி உயர்நீதி மன்றம் புதன் கிழமையன்று உத்தரவிட்டது.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திரு என்ற சிறுவன் டில்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள டிமார்பூர் என்ற பகுதியில் அத்தை வீட்டில் தங்கி 7ஆம் வகுப்பு பயின்று வருகிறான். சில நாட்களுக்கு முன் அவன் பள்ளி செல்லும்போது வழியில் கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்தது. கட்டிடத்தின் மேலிருந்து கழிவுகளை முன் அறிவிப்பின்றி கொட்டியதில் சிறுவனின் தலையில் பலத்த அடி பட்டது. அவனது மன நிலையும் பாதிக்கப்பட்டது. சிறுவன் இப்போது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

அமெரிக்க ரஷ்ய செயற்கைக் கோள்கள் மோதல்

அமெரிக்கா மற்றம் ரஷ்யாவின் தகவல் ஒலிபரப்புக்கான செயற்கைக் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்ணில் நடைபெறும் முதல் விபத்து இது ஆகும்.

அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக் கோள் ரஷ்ய செயற்கைக் கோளுடன் மணிக்கு 780 கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாய் கிழமையன்று மோதியதாக நாசா கூறுகிறது.

இதனால் இம்மாத இறுதியல் விண்ணில் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்காவின் செயற்கைக் கோள் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் வெள்ளிக்கிழமைக்குள் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் வேறு செயற்கைக் கோள் ஏவப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது 1997ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதன் எடை 560 கிலோ.

இதனுடன் மோதிய ரஷ்ய செயற்கைக் கோள் 950 கிலோ எடையுள்ளது. இது 1993 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. இந்த விபத்தை ரஷ்ய நிறுவனம் உறுதி செய்துள்ளது.

திருத்தப்பட்ட விடைத்தாளை மாணவர் பார்க்கலாம்

கொல்கத்தாவைச் சேர்ந்த ப்ரிதம் ரூஜ் கொல்கத்தாவின் பிரசிடெண்சி கல்லூரியில் கணிதவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இரண்டாம் ஆண்டு தேர்வில் அவர் ஒரு பாடத்தில் 28 மதிப்பெண் மட்டுமே பெற்று தேர்வில் தவறியதாக முடிவு சொல்லப்பட்டது. இதனால் அவர் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தார். அதன் பிறகு பல்கலைக்கழகம் அவர் 32 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்று விட்டதாக அறிவித்தது.

இதில் திருப்தி அடையாத அந்த மாணவர், விடைத்தாளை தான் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இம்மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் " மாணவர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்காக திருத்தப்பட்ட விடைத்தாளை பார்ப்பதில் தவறில்லை" என்றும் இதற்காக, குறிப்பிட்ட காலம் ஒதுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.

இடமாற்றத்துக்கு கையூட்டு இரண்டு கோடி!

அண்மையில் மும்பையின் சூதாட்ட விடுதி ஒன்றில் பயங்கரவாத தடுப்புக் காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 12 கிலோ ஹெராயின் எனப்படும் போதைப்பொருள் சிக்கியது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட விக்கி ஓபராய் என்பவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் இதன் பின்னணியில் போதைத் தடுப்பு பிரிவு இயக்குநராக சண்டீகரில் பணியாற்றிய ஷாஜி மோகன் என்பவர் இருப்பது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த டிசம்பர் 31ம்தேதி கொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

ஷாஜி மோகன் என்ற அந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு இயக்குநரிடன் விசாரணை நடத்தியபோது, சொந்த மாநிலத்துக்கு பணி இடமாற்றம் பெறுவதற்காக தான் கடன்பட்டு இரண்டு கோடி இலஞ்சம் தந்ததாகவும் அந்தக் கடனை அடைக்கவே போதைபொருள் கடத்தியதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார்.
அவரிடம் மேலும் 70 கிலோ ஹெராயின் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

"மோடிக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பா?" - ப.சிதம்பரம் கேள்வி!

மும்பை 26/11 தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் கருத்தையே பிரதிபலித்துள்ள மோடிக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் 180க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலைக்குக் காரணமான தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த குஜராத் முதலமைச்சர் மோடி "இங்குள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய பெரியதாக்குதலை வெளி தீவிரவாதிகள் செய்திருக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

டெல்லியில் நிருபர்களிடம் ப.சிதம்பரம் கூறுகையில் " ஒரேமாதிரியான கருத்துகளை பாகிஸ்தானும் மோடியும் தெரிவித்திருக்கின்றனர். இருவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார். அல்-கைதாவின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்த அமைச்சர் "எப்படிப்பட்ட சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்" என்று பதிலளித்தார்.

கோவை: 4 காவல் உயரதிகாரிகள் இடமாற்றம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து, ஒரே இடத்தில் மூன்று வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் இம்மாதம் 22ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. அதன் எதிரொலியாக கோவையின் நான்கு உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கிழக்குப்பகுதி குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராஜேந்திரன், கோவை மத்திய பகுதி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.பேரூர் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் குமாரசாமி, கோவை மேற்கு சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராகவும், அங்கிருந்த சுந்தரவடிவேல் கன்னியா குமரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.கோவை மத்திய பகுதி சட்டம் ஒழுங்கில் பணியாற்றிய சுந்தரசேனன், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல கோவை மண்டலத்தில் மேலும் 13 ஆய்வாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கப்படும்: ப.சிதம்பரம்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு அரசே பெரும் தொகை கொடுத்து உதவுவதற்கு அமெரிக்கா முடிவெடுத்துள்ளது அறிந்ததே!

அதே போல, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ பேங்க்., விஜயா பேங்க் ஆகிய வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.3,800 கோடி மத்திய அரசு வழங்கும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்ட உதவியாக யூகோ பாங்க் - 450 கோடி, சென்ட்ரல் பேங்க்- 700 கோடி, விஜயா பேங்க் - 500 கோடி, நடப்பு நிதியாண்டிலும் அடுத்தகட்டமாக மீதத்தொகை 2009-10 ம் ஆண்டிலும் இவ்வுதவிகள் வழங்கப்படும் என்றார் அவர். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு அதிகரிக்கும்.

மெக்கா இரயில்வே பணி : சீன நிறுவனம் அமைக்கிறது

இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லும் இடங்களான மக்கா மற்றும் மதீனா இடையே இரயில்வே சேவையை ஏற்படுத்த சவூதி அரசு முடிவு செய்துள்ளது. இந்த இரயில் பாதையை சீன நிறுவனம் அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தம் சீனா சவூதி அரேபியே அதிகாரிகள் புதன் கிழமையன்று செய்து கொண்டனர்.

புதிதாக உருவாக்கப்படும் இந்த இருப்புப் பாதைகள் மக்காவிலிருந்து மினா, அரபாத் மற்றும் முஸ்தலிபா ஆகிய இடங்களை இணைக்கும். இது மட்டுமின்றி மக்கா மற்றும் மதீனா ஆகிய இடங்களுக்கு 30 நிமிடங்களில் செல்லக் கூடிய அளவில் அதிவேக விரைவு இரயில்களை இணைக்கும் வகையி்ல் புதிய பாதைகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. சாலை வழிப்பயணத்தில் இரு நகரங்களுக்கும் செல்ல 4 முதல் 5 மணி நேரம் தேவைப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

முதல் திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்றும், 2010 ஆம் ஆண்டு ஹஜ் காலகட்டத்தில் ஒரு வழிப்பாதை பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இத்திட்டப் பணிகளை சீன இரயில்வே நிறுவனமும் பிரான்சு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் - 27 பேர் பலி

ஆப்பானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு அலுவலகங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

சிறைத்துறை அலுவலகத்தில் இருவர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.  நீதி அமைச்சகம் மீது 5 பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். மற்றொருவர் கல்வி அமைச்சகம் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல்களைத் தாங்கள்தான் நடத்தியதாக தாலிபான் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் 35 பேர் காயமுற்றதாக உள்துறை அமைச்சகம் கூறியது.

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் காபூல் வர இருக்கும் நிலையில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!