Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மகாத்மாவின் கொள்கைகளை சங்பரிவார்களிடமே காணமுடியும் - பா.ஜ.க.

Published on: சனி, 7 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
மகாத்மா காந்தியின் கொள்கைகளை சங்பரிவார்களிடமே காண முடியும். காங்கிரஸ் கட்சியினரிடம் காண முடியாது என்று பாரதீய ஜனதா கட்சி இன்று கூறியது.

காங்கிரஸ் கட்சிக்கும் காந்திக்கும் காந்தி என்ற குடும்பப் பெயர் சேர்ப்பதைத் தவிர எந்தவகை தொடர்பும் இல்லை. நாங்கள்தான் காந்தியின் கொள்கைகள் வழி நடந்து அவரது பணிகளைத் தொடர்நது கொண்டுள்ளோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இன்று கூறினார்.

உலகப் பொருளாதார நெருக்கடியில் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள முதலாளித்துவமோ அல்லது ஏற்கனவே தோல்வியுற்றுவிட்டவோ கம்யூனிசமோ இந்தியாவுக்கு ஏற்புடையதன்றும் காந்தியின் பொருளாதார முறையே இந்தியாவுக்கு சரியான பொருளாதார முறை என்று பா.ஜ.க. நேற்று கூறியது.

இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்களுக்குள் காந்தியை சங்பரிவாரங்களில் ஒன்றான ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான் என்பது வரலாறு.

ஏழு சதவிகித இட ஒதுக்கீடு கேட்கிறது பிராமணர் சங்கக் கூட்டமைப்பு

அ தி மு க வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் தென்னக பிராமணர் சங்கக் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை இன்று மாலை சென்னையில் தொடங்க உள்ளார்.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் சுமார் 40 இலட்சம் பிராமணர்கள் இருப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்வதால், அரசு 7 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பாக். அணு விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா எதிர்ப்பு.

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதர்கான் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

"இது துரதிருஷ்டவசமானது" என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, இந்நிகழ்வு கவலையளிப்பதாகவும், இதன் மூலம் வடகொரியா,ஈரான் ஆகியவற்றின் தொடர்புகள் வலுவடையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

மூன்றாண்டுகளில் 10,000 பேருக்கு வேலை - L &T

கட்டுமானப் பொறியியல் துறையில் புகழ்பெற்ற எல் & ட்டீ நிறுவனம் இன்னும் மூன்று ஆண்டுகளில் 10,000 பேருக்கு வேலைத் தரப்படும் என்று அறிவித்துள்ளது.

ஹசீரா என்னுமிடத்தில் ரூ. 4,500 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள உற்பத்தி தொழிற்சாலையில் 5000 பேரை வேலைக்கு எடுக்கவும், மற்ற திட்டங்களான மோனோ ரயில் திட்டம், பவர் ரியாக்டர் போன்றவற்றில் மேலும் 5000 பேரை வேலைக்கமர்த்தவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது

விமானிகள் சம்பளத்தில் ரூ.80,000 குறைத்தது கிங் ஃபிஷர்

மாதம் ரூ. 4.30 இலட்சம் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த தனது விமானிகள் அனைவருக்கும் ரூ.80,000/= குறைவு செய்து கிங்ஃபிஷர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

டெக்கான் ஏர்வேய்ஸ் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்ட கிங்ஃபிஷர் நிறுவனம், டெக்கான் நிறுவன விமானிகள் பெற்ற சம்பள விகிதத்துடன் சமப்படுத்துவதற்காக தனது விமானிகளுக்கும் சம்பளக் குறைப்பு முடிவை எட்டியதாக நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்முடிவு விமானிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், 600 விமானிகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பொன்று நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போலி என்கவுண்டர்: காவல்துறைக்கு எதிராக நீதிமன்றம்!

போலி என்கவுண்டர்கள் நடத்தும் காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என ஆந்திரபிரதேச உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்பாதுகாப்புக்காகவே கொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது எனில், அதற்கான உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான சக்தியைக் காவல்துறையினர் உபயோகிக்கக் கூடாது எனவும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளவர்களுக்கு எவருடைய உயிரையும் எடுப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அமெரிக்க இராணுவ தளம் மூடல் இறுதியானது: கிர்கிஸ்தான்


அமெரிக்க இராணுவ விமான தளம் மூடுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கிர்கிஸ்தான் அரசு மீண்டும் கூறியுள்ளது.

கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்படும் என்று கிர்கிஸ்தான் அதிபர் குர்மன்பக் பகியேவ் செவ்வாய் கிழழை அறிவித்தார். அமெரிக்காவுக்கு இவ்வறிவிப்பு நெருக்கடியை ஏற்படுத்தியது. கிர்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில் கிர்கிஸ்தான் தன்னுடைய முடிவை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

இராணுவ விமான தளத்தை மூடும் முடிவு இறுதி செய்யப் பட்டுவிட்டது என்று கிர்கிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் அய்பக் சுல்தான்காஜியேவ் வெள்ளிக் கிழமையன்று தெரிவித்தார். கிர்கிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதர கிர்கிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இதுகுறித்த கருத்துக்களையே பறிமாறிக் கொண்டிருப்பதாகவும் விமான தளத்தை தொடர்ந்து இயக்குவது குறித்து அவர்கள் பேசிக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கானில் உள்ள அமெரிக்க கூட்டுப்படையினருக்குத் தேவையான இராணுவத் தளவாடங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பாகிஸ்தானின் கைபர் பாதை வழியாகவும் கிர்கிஸ்தான் வழியாகவுமே அனுப்பப் பட்டு வந்தன. ஏற்கனவே கைபர் பாதையில் தாலிபான் ஆதரவாளர்கள் நடத்தும் தாக்குதலால் பொருள்கள் வருவதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் வழியாகப் பொருள்களை அனுப்ப பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தஜிகிஸ்தான் தங்களுடைய நாட்டின் வழியாக இராணுவத் தளவாடங்கள் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். உணவுப் பொருட்கள் கொண்டு செல்லலாம் என்று கூறி உள்ளது.

நானோ கார் மார்ச் 3ல் விற்பனைக்கு?

டாடா நிறுவனத்தின் தயாரிப்பில் உலகத்தின் மிக விலை குறைந்த கார் 'நானோ' மார்ச் 3ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

டாடா நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் நூற்றாண்டு பிறந்த நாள் மார்ச் 3 என்பதால் அந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன எனினும் டாடா நிறுவனம் இச்செய்தியை இதுவரை உறுதி செய்யவில்லை.

சீனா: செல்பேசி வெடித்து வாலிபர் இறப்பு

சீனாவில் செல்பேசி வெடித்ததில் வாலிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குவான்சு மாகாணத்தில் கணினி கடையொன்றில் அவ்வாலிபர் பணிபுரிந்துவந்துள்ளார்.



சீனாவில், கடந்த ஏழாண்டுகளில் இது ஒன்பதாவது சம்பவம் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், லிதியம் என்ற உலோக தனிமத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் மின்கலன்(Batery) அதிக வெப்பம் தாங்காமலும், அதிக மின்னூட்டம் பெற்றாலும் இப்படி வெடித்துவிடுகின்றன என்றனர்.

குஜராத்தி்ல் 1200 கிலோ அமோனியம் நைட்ரேட் பறிமுதல்

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் ஜகாதியா தாலுக்காவிற்குட்பட்ட தேஷ்பூர் எனும் கிராமத்தில் சுமார் 1200 கிலோ எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டை தீவிரவாத எதிரப்பு காவல்துறை கைப் பற்றி உள்ளது.

ஹஸ்முக் பட்டேல் என்பவரது வீட்டிலிருந்து 1200 கிலோ எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டைக் கைப்பற்றி உள்ளோம் என்று தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை (ATS) தலைவர் அஜய் தோமர் கூறியதாக பி.டி.ஐ.செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்காக பட்டேலை தங்கள் காவலில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பொருள்களை வைத்திருக்க அவர் உரிமம் பெற்றிருக்கவில்லை என்றும், இதில் வேறு எவரின் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு வகையான வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு அமோனியம் நைட்ரேட் முக்கிய வேதிப் பொருள் என்பது குறிப்பிடத் தக்கது.

பாக்: அப்துல்காதிர்கான் வீட்டுக்காவலிலிருந்து விடுவிப்பு

அணு ஆயுத இரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக பாகிஸ்தானிய அரசால் குற்றம் சுமத்தப்பட்டு 4 வருடமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த விஞ்ஞானி அப்துல் காதிர்கானை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அவர் சுதந்திரமான மனிதர் என்று கூறியுள்ள நீதிமன்றம், பாகிஸ்தானுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரவும், ஆராய்ச்சிக்கூடத்திற்குச் செல்லவும், நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்கவும் தடையில்லை என்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசுக்கும் அணுவிஞ்ஞானி அப்துல்காதிர்கானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

ஈழப்பிரசினை: லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு

நாட்டில் அரசியல் சமூக தளங்களில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது லயோலா கல்லூரி பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி மக்கள் கருத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஈழப்பிரசினை குறித்தும் கருத்துக்கணிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிராக என்ற போர்வையில் தமிழினத்தையே இலங்கை அரசு அழித்தொழித்து வருவதாக 86 விழுக்காடு தமிழ்நாட்டினர் கருத்து
தெரிவித்துள்ளனர்.

90 விழுக்காடு பொதுமக்கள் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் 68 விழுக்காட்டினர் தனி ஈழமே இப்பிரசினைக்கு தீர்வு என்று தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளால் இப்பிரசினையில் எந்த விளைவினையும் ஏற்படுத்த முடியவில்லை என்று 52 % பேர் அபிப்ராயம் சொல்லியிருக்கிறார்கள்.

தேர்தல் அரசியல் பலனை நோக்காமல் கருணாநிதி தலைமையில் தமிழக அரசியல் கட்சிகள் இப்பிரசினையில் ஒன்றுபட்டு செயலாற்ற 86% பேர் கருத்தளித்துள்ளனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!